February 28, 2017

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள் -தமயந்தியின் ” கொன்றோம் அரசி” சிறுகதைத் தொகுப்பிற்கான முன்னுரை

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள்



2010-ல் ஹைதரபாத் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள நேர்ந்தபோதுதான் தெலுங்கு இலக்கிய உலகின் .காத்திரமான பெண்ணிய சிந்தனையாளரும் சிறுகதை எழுத்தாளருமான வோல்காவோடு கொஞ்ச நேரம் பேச சந்தர்ப்பம் கிட்டியது.  பெண்ணின்  முகம், கண், காது, மூக்கு, மார்பு, கூந்தல், யோனி, மற்றும் தொடை என  ஒவ்வொரு பாகத்தின் பெயரிலும் ஒரு கதை எழுதி ஒரு சிறுகதைத் தொகுப்பு வரப்போவதாகc சொன்னார். அப்படி வந்தால் அது உண்டாக்கும் அதிர்வை குறித்து யோசித்தேன்.  ஐந்து வருடமாகிவிட்டது அந்த தொகுப்பு வந்துவிட்டதா இல்லையா தெரியவில்லை. ஆனால் தமயந்தியின் இந்த தொகுப்பை வாசிக்கும்போது அந்த அதிர்வை உணரமுடிகிறது.

மொத்தம் ஏழு வீடுகளைக்கொண்ட தொகுப்பு இது . ஒவ்வொரு வீட்டின் ஜன்னலையும் தன சிறுகதைகளின் வழி  நமக்கு திறந்து காட்டுகிறார் தமயந்தி . வரிகளுக்கப்பால் தெரிவது எல்லாம் வேதனையும் துயரும் கொப்பளிக்கும் கண்கள். உடன்  ஆற்றாமை கோபம் ,காதல் அழுகை காமம்.  என பெண்களின் பல்வேறு உச்ச தருணங்கள்.   ஒவ்வொரு ஜன்னலை கடக்கும் போதும் பெரும் அதிர்விலிருந்து விடுபட முடியாமல் நம்நெஞ்சை பிசைந்துவிடுகிறது. . இந்த ஏழு வீடுகளில் ஏதோ ஒன்று நம்முடையதகாவும் இருக்கிறது என்பது தான் இத்தொகுப்பின்சிறப்பு .

இவை பெண்களின் கதைகள் மட்டும் அல்ல ஆண்களின் கதைகள். ஆண்கள் படித்து உணரவேண்டிய கதைகள் சில கதைகள் ஆண்களின் முகத்தை அறையக்கூடும் முகத்தில் எச்சிலை உமிழக்கூடும்  முன்னர் தாய் தங்கை சகோதரி மனைவி சக தோழிக்கு செய்த துரோகங்களை நினைவுறுத்தகூடும் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தக்கூடும் அவ்வகையில் இக்கதைகள் சமூகத்தில் சிறந்த சுத்திகரிப்பை நிகழ்த்துகின்றன .\அது போல பெண்ணியம் என்பது ஆண்களின் மீதான வெறுப்பை கட்டமைப்பது என்பதை கடந்து பெண்ணின் பாடுகளை வலிகளை சொல்லி  தந்தையை காதலனை  கைப்பற்றி அவர்களுக்கு தங்கள் ப்ரசனையை சொல்லி புரியவைப்பதகவும் .சில கதைகள் அமைந்திருப்பது தொகுப்பின் சிறப்பு .


மங்காக்கா கங்கம்மா ,வசந்தி, வத்சலாவின் தோழி  என வெவ்வெறு பாத்திரங்களில் வந்தாலும் எல்லாமே ஒரே முகம்தான். .அவர்களது உள்ளுணர்வும் வெடிச்சிரிப்பும்  வெடுக்கென துள்ளி எழுந்தாடும் ஆங்காரமும் ஒன்றேபோலத்தான். திணற திணற நம் முகத்தில் ரத்தசேற்றை வீசுகிறார்கள்.சக்தியின் பிரம்மாண்ட பிம்பத்தின் முன் ஆணை சிறுபுள்ளியாக உணரவைத்து ஒடுங்கி நிற்க வைக்கிறார்கள்.

அவள் அப்படித்தான் மஞ்சு போல தன்னை அளவெடுக்கும் ஆணின் தந்திரங்களை மன  ஓட்டத்தை குறுக்கு கேள்வியால் அதிரவைக்கும்போதும் (.மிச்சம் ) கட்டிலில் மூத்திரப்பை சுமக்கும் வயதில் காதலை மீட்டெடுத்து கட்டி தழுவும்போதும் (தடயம்). துரோகம் செய்துவிட்டு வந்தது மட்டுமல்லாமல் அம்மாவிடம் வெட்கமில்லாமல் சிக்கன் கேட்டு ஆண்மையை நிரூபிக்கும் தந்தையை புரட்டி எடுக்கும்போதும் (செருப்பு) பாத்திரங்கள்  கதை என்னும் சட்டகத்தை மீறி நம்மை வியக்க வைக்கின்றன.

 எதையாவது சொல்லிவிடவேண்டும் என்ற நிர்பந்தங்களை அதுவாக அறுத்துக்கொள்வது இக்கதைகளின் சிறப்பு.. ஒவ்வொரு கதையிலும் வெளிபூச்சில் உணர்வலசலாக ஒரு கதையும் மையப்ர்சனையாக இன்னொரு கதையும் நமக்குள் இறங்குகின்ற்ன . இரண்டு கதைகளையும் முடிச்சிடும் புள்ளிகளும் இயல்பாக இருப்பதும் தமயந்தியின் விசேஷகுணங்கள். செருப்பு கதையில் செருப்புதான்  மேலோட்டமான கதை நகர்த்தும் பொருளாக இருப்பினும்  அம்மாவையே அடக்கியாளும் மங்காக்காவின் ஆளுமைத்திறனும்  ஆண் எனும் ஒற்றை அதிகாரகட்டுக்குள் உடைந்து நொறுங்கும் பெண் சித்திரங்களடங்கிய குடும்பமும்  இன்னொரு கதை.

அதுபோல மிச்சம் கதையில்  மாத சுழற்சி சரியான நேரத்தில் வராமல் போவதால் ஒரு பெண் எதிர்கொள்ளும் ப்ரசனைகள் பற்றிய கதையில் அலுவலக அரசியலும் பெணணையே பெண்ணுக்கெதிராக பயன்படுத்தும் ஆணிய அரசியலும் நமக்குள் கதையாக ஊடுருவி கடக்கிறது..தமயந்தியின் கதை சொல்லலில் ஒரு அனாயசம் அலட்சியம் ஒற்றை வரி உரையாடல்கள் வழி நகரும் கதைகளில் ஆங்காங்கு நிகழும் மின்னல் அதிர்வுகள் தமயந்தியின் தனித்தன்மை.

”வாழ்க்கையில என்ன நடந்தாலும் முருங்கக்காய் தோலை சவச்சிட்டு சாவணும் என்ன ருசி “ (கொன்றோம் அரசி )
இப்படி ஒரு பேச்ச் நம்ம அந்த ஆண்டவன் பேச வச்சிட்டாரு இல்லை எப்படி ?
.உன் புருஷன் நலமா ?
உன் பொண்டாட்டி எப்படி நீயும் நானும் கேட்கறா மாதிரி (தடயம்)

இப்படியாக ஒவ்வொரு கதையிலும் உரையாடல்கள் அசத்துகின்ற்ன
வெறும் பெண்னியத்தோடு நில்லாமல் தமயந்தியின் கதைகள் தீவிரமான அரசியலையும் பேசுகின்றன. சமூக மறு கட்டமைபில் அம்பெத்காருக்கு பிறகான செயல்பாடுகள் குறித்தும்  விவாதம் எழுப்புகின்றன. காலம் முழுக்க மனித மலம் சுமந்து சமூகத்தின் ஆரோக்கியத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களின் மகன்கள்  படித்து பட்டம்பெற்று வேலைக்குவரும்போது எதிர்கொள்ளும் வலிகளும் வேதனைகளும் சொல்லப்படுகின்றன. கொன்றோம் அரசியை சம கால அரசியல் கதை . இக்கதை யார் யாரை மையப்படுத்துகிறது என்பது வெளிப்படை. . கதைக்குள் ஊடாடும் அதி புனைவு ஆசிரியருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்திருந்த போதும் திரும்ப திரும்ப மரணத்தை பற்றியே அலைவதை தவிர்த்து இன்னும் பல சுவாரசியமான பக்கங்களுக்குள் நகர்ந்திருக்கலாம் .

தொகுப்பில் இரண்டு கதைகள் ஆணை மையப்படுத்தியவை அல்லது ஆண்களின் அக உலகம் சார்ந்தவை . ஒன்று பி பி ஸ்ரீனிவாசும் ரோஜா மலரே ராஜகுமாரியும் , இன்னொன்று பீப் பிரியாணி ..இரண்டில் பீப் பிரியாணி .குறிப்பிடத்த்ககுந்த சமகால அரசியலை மையப்படுத்திய கதை. .என்னதான் பொதுவெளியில் கட்டிப்பிடித்து காதலிபோல நண்பர்கள் தழுவிக்கொண்டாலும்  குடி அமர்வுகளீல் சாதிய உணர்வு வெளிப்படுவதும் தன் சாதிபெருமையை  ஒரு ஆதிக்க சாதியன்  பேசி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் மேல் வன்முறையை காண்பிப்பதும்  ஆண்களின் உலகில் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று. புற உலகில் கவிஞராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்ற பலரும் இது போன்ற குடி அமர்வுகளில் தங்களின் கோரப்பற்களை காட்டுவதை கண்டு பலமுறை அதிர்ச்சியடைந்திருக்கிறேன் . பீப் பிரியாணி கதை இந்த அக உலகை துல்லியமாக சித்தரிக்கிறது.

கவிதை மற்றும் நாவல் களங்களில் அதிகம் செயல்படும் அளவிற்கு பெண் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதைகளில் புழங்கி வருகின்றனர்  .அதிலும் பெண்களின் வலிகளை அரசியலை பேசும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் மிகக்குறைவு
.
எழுத்துத் துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஓய்வில்லாமல் இயங்கி வருவதுடன்  எண்ணிகை அளவில் தரமான பல நல்ல கதைகள் எழுதியவர் என பார்த்தால் சூடாமணி அம்பைக்கு பிறகு தமயந்தி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்.
இது வரை எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த +கதைகள்  மொத்த தொகுப்பாக தமயந்தி கொண்டு வரவேண்டும் .

இதை நூலாக்கம் செய்வதில் முனைப்பு காட்டி பதிப்பித்து தரும் தமிழின் ஆகச் சிறந்த கவிஞராக அறியப்படும் கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கும் . தற்காலத்தில் நல்ல சிறுக்தையெழுத்தாளனாக வளர்ந்து வரும் அன்பு தம்பி அகரமுதல்வனுக்கும் என் பூங்கொத்தும் வாழ்த்துக்களும்  
                                                      அஜயன் பாலா
04/02/2017


February 15, 2017

செம்மொழி சிற்பிகள் -எல்லீஸ்

எல்லீஸ் 


பிறப்பு: 1796

திருக்குறளுக்கு முதன் முதலில் ஆங்கிலத்தில் உரை எழுதியவர்.  வெளிநாட்டவர். கால்டுவெல் பாதிரிக்கு முன்பாக திராவிடமொழிக்குடும்பத்தின் தாய்மொழி தமிழ் என்பது குறித்து ஆய்வு குறிப்புகளை தந்துள்ளவர்.

பிரான்சிஸ் ஒயிட் எல்லீஸ்


இங்கிலாந்து நாட்டைசேர்ந்த எல்லீஸ் அவர்கள் சென்னை நிலவரி வாரியத்தின் செயலராக பணிபுரிய சென்னை வந்தவர் எட்டு ஆண்டுகள் அவர் அக்காரியத்தில் சிறப்பினை அடைந்தபைன் சென்னைகலக்டாராக பத்வி உயர்த்தப்பட்டு பத்தாண்டுகள் பணிபுரிந்துள்ளார்.

இக்காலங்களில் தமிழ் மொழியின் செம்மை அவரைகவர்ந்த காரணத்தால் சாமிநாதபிள்ளை, இராமச்சந்திர கவிராயர் ஆகியோரிடம் ஏட்டு சுவடிகளில் தமிழினை கற்றார். தொடர்ந்து அவருக்குள் ஊறிய ஆர்வம் காரணமாக  பழந்தமிழ் இலக்கண நூல்களையும் இலக்கியங்களையும் தேடிப்பிடித்து கற்க துவங்கினார். தொடர்ந்து தன்னைப்போல வெளிநாட்டவர் பலரும்  தமிழ் கற்கவேண்டும் என அவாவுற்று அதற்கான கல்விச் சங்கம் ஒன்றை உருவாக்க முனைப்புடன் செயல்பட்டார். தனக்கு முன் இப்பணியில் ஈடுபட்ட வெளிநாட்டவரான வீராமாமுனிவரது தமிழ்ப்பற்றையும் தமிழ்பணிகளை பற்றியும்ம் கேள்வியுற்று அவர்மேல் பெரும் அனபுகொண்டார்.அவரது வாழ்க்கை வரலாற்ரை எழுத வந்த முத்துசாமி பிள்ளைக்கு வேண்டிய உதவிகள் செய்து ஊக்குவித்தார் 

திருக்குறளின் முதல் பதிமூன்று அதிகாரங்களுக்கு பண்டைத்தமிழ் நூல்களை மேற்கோள்காட்டி ஆங்கிலத்தில் அரிய உரை ஒன்றை எழுதியுள்ளார். மட்டுமல்லாமல் அவ்வுரைகளுக்கு பழந்தமிழ் இல்லக்கியத்திலிருந்தே அவர் மேற்கோள்காட்டியிருந்தவிதம் இவரது தமிழ்பற்றுக்கு சான்றாக விளங்குகிறது . தமிழை பாடமாக கல்லூரிகளில் வைக்கவேண்டும் என ஆட்சியாளர்களிடம் போராடினார். 1818-ல் சென்னையில் பெரும் தண்ணீர்ப் பஞ்சம் வந்தபோது சென்னையில் 27 கிணறுகள் வெட்டி வைத்தார். அவற்றுள் ஒன்று சென்னை இராயப்பேட்டையில் பெரியபாளையத்தம்மன் கோயிலில் உள்ளது. அக்கிணற்றில் எல்லீஸ் திருப்பணிபற்றி அருமையான நீண்ட பாடல் கல்வெட்டு ஒன்று உள்ளது. திருக்குறள் படித்ததன் பயனாகத்தான் 27கிணறுகள் வெட்டியதாகக் கூறுவது மிகவும் அரிய செய்தியாகும். கல்வெட்டு மெய்க்கீர்த்திபோல் அப்பாடல் கல்வெட்டு உள்ளது.இவர் தமிழ்செய்யுளும் இயற்றியுள்ளார்.அவற்றுள் நமச்சிவாயபாட்டு ஒன்றே நமக்கு கிடைத்துள்ளது.

பின் சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பற்றி கேள்விப்பட்டு
அந்நகரைக்காணசென்றார். தமிழுக்கு தொண்டுசெய்ட்ய்ஹ அவ்வீதிகளை நெஞ்சுருக வலம் வந்தார். பின் இராமாநாதபுரம் எனும் மூதூரைகாணசென்றார். அங்கு தாயுமானவர் சாமாதியில் கண்ணீர்மலகிநின்றார். அன்று நண்பகலில் தன் இருப்பிடம் வந்த அவர் உணவில் இருந்த நஞ்சுகாரணமாக மருத்துவர் அருகிலில்லாமல் துடித்து இறந்தார்.

சென்னையில் அவரது உடமைகள் அனைத்தும் ஏலமிடப்பட்டன. அனைத்து பொருட்களையும் வாங்க் ஆள்வந்த்னர். ஆனால் அவர் எழுதிய தமிழ் செய்யுள்கள் மற்றும் குறிப்புகளை வாங்க எவரும் வரவில்லை. நெடுநாட்கள் அவைகுப்பையாக அங்கேயே ஒருமூலையில் கிடந்ததாக பிற்பாடு தெரியவந்துள்ளன
                                                                   மறைவு: 1879




.

முன்னுரை எனும்போதும் உனக்கு நன்றி விஷால் ராஜா சிறுகதைகள்

எனும்போதும்  உனக்கு நன்றி  விஷால் ராஜா சிறுகதைகள் 

இலக்கியம் என்பது கதையல்ல , மொழி மட்டுமே கூட அல்ல . மொழியின் துணையோடு காலத்தின் தேடல் மற்றும் பதிவு.  . காலத்தின் பிரதிநிதிகளாக மொழிக்கு  ஒரு சிறுகதையாளன் தேவைப்படுகிறான்  அதற்கு ஒப்புக்கொடுப்பவனே இலக்கியவாதியாக அறியப்படுவான். விஷால் ராஜாவின் கதைகள் சிறுகதை எனும் எல்லையை கடந்தவை. வாழ்க்கையின் வினோதங்களும் புதிர்களும் அவரது கதைகள் எங்கும் விரவிக்கிடக்கின்றன. அதிகாரத்தால் நசுக்குண்ட இதயம் அவருடையது. இந்த இதயம் பிரபஞ்சம் எனும் கூண்டுக்குள் சிக்கி தப்பிக்க அங்குமிங்கும் வழி தேடி கதைகள் முழுக்க அலைகிறது.   நெருக்கடிகளிலிருந்து தப்பிக்க காதலிடமும் காதலிடமிருந்து தப்பிக்க நெருக்கடிகளிடமும் சிக்கிக்கொள்வதால் இந்த கதைகளின் வழியாக அவர் கரையேறிக்கொள்கிறார்.
2010 க்கு பிறகு சிறுகதை எழுத வந்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம் அதில் முதல் ஐந்துக்குள் வந்து விடக்கூடிய தகுதி வாய்ந்த  தொகுப்பு இது .
விஷால் ராஜாவுக்கு கச்சிதமான மொழி கைகொடுக்கிறது அவரது நுண்ணிய மனம் கதையின் சட்டகத்திலிருந்து தப்பிக்க உதவுகிறது. இப்படியான தருணங்களின் மூலம் இக்கதைகள் படைப்பிலக்கியமாக எந்த பரிந்துரையும் அவசியப்படாமல்  அதுவாகவே தன் பீடத்தில் அமரவும் செய்கிறது.
இச் சிறுகதைகளை புத்தகமாக்க முயற்சி எடுத்து வரும் கார்த்திக் புகழேந்திக்கும் அவரது பதிப்பகத்தாருக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்

அஜயன் பாலா,

ajayanbala@gmail.com

February 11, 2017

ஆர்.கே.சண்முகம் செட்டியார் செம்மொழி சிற்பிகள்

ஆர்.கே.சண்முகம் செட்டியார்
செம்மொழி சிற்பிகள்


பிறப்பு: 17-10-1892

தமிழிசை வளர்த்த செம்மல் என அறிஞர்களால் பாரட்டப்படுபவர். தமிழிசைக்காக முதன் முதலில் சங்கம் தோற்றுவித்தவரும் இவரே.அரசாங்கம் தமிழில் நடக்கவேண்டும் , சட்டசபையில் நாம் தமிழில் பேசவேண்டும்,பொருளாதாரத்தை தமிழில் ஆராயவேண்டும், விஞ்ஞானத்தை தமிழில் கற்கவேண்டும்  என வாழ்நாள் இறுதிவரை தமிழுக்காக குரல் கொடுத்தவர்.

இராமசாமி கந்தசாமி சண்முகம் செட்டியார்.

கோயம்பத்தூரில் பிறந்தவர். தந்தை கந்தசாமிசெட்டியார். தாயார் ரெங்கம்மாள் . கோவை லண்டன் மிஷன் உயர்நிலைப்பள்ளியில் உயர்நிலைக்கல்விகற்ற சண்முகம் அவர்கள் பின் சென்னை கிருத்துவக்கல்லூரியில் பட்டபடிப்புடன்  சட்டமும் பயின்றார். வழக்கறிஞராக சிலகாலம் பயிற்சி எடுத்துக்கொண்ட சண்முகம் அவர்கல் பின் கோவைக்கு வந்து துணி வியாபாரத்தில் கவனம் செலுத்த துவங்கினார்.

கோவை நகராண்மைக் கழக உறுப்பினராக பதவிவகித்த சண்முகம் அவர்கள் பின் நகராண்மை  துணைத்தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின் சட்டசபையிலும் போட்டியிட்டு உறுப்பினராக  வென்றார். 1923ல் இந்திய சட்டசபையின் உறுப்பினாராக உயர்நிலை எய்திய சண்முகம் அவர்களின்  பொருளாதார அறிவைக்கண்டு வியந்து  இந்திய அரசு இவரை  பல்வேறு நாடுகளுக்கு அனுப்பி வைத்தது.. கொச்சி திவானாக சிலகாலம் இவர் பணியமர்த்தப்பட்டபோது இவரது பணியைகண்டு அங்குள்ள ஒரு சாலைக்கு இவரது பெயரையே அம் மக்கள் சூட்டிமகிழ்ந்தனர். பின் ஜவகர்லால் நேரு பிரதமராக பதவியேற்ற போது சண்முகம் அவர்களை நிதிஅமைச்சராக நேரு பதவியேற்க வைத்தார். பிற்பாடு அண்ணாமலை பல்கலைகழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றி அப்பபதவிக்கு பெருமை  உண்டாக்கினார்.

இவ்வளவு உயர் பதவிகளை அடைந்த சண்முகத்திற்கு தமிழுணர்வை தூண்டியது யார் தெரியுமா? .. ஒரு அந்நியர். ஜி,யூ .போப் அவர்கள்.

 ஒருபயணத்தின்போது போப் அவர்கள் எழுதிய திருவாசக உரையைக்கண்டு வியந்து  கண்ணீருகி சண்முகம் அவர்கள் அதன் பின்னே தமிழின் பால் ஆர்வம் உந்தப்பெற்று ஒரு ஆசிரியர் துணையுடன் தமிழ் இலக்கிய இலக்கணங்களை முழுமையாக  கற்கத் துவங்கினார். சிக நாட்களிலேயே தமிழில் புலமையும் பெற்று சிலப்பதிகாரம் மற்றும் குறிஞ்சிப்பாட்டுஆகியவற்றுக்கு உரை எழுதி பதிப்பித்தார்.

தொடர்ந்து தமிழிசை மேல் ஆர்வம் மேலிட தமிழிசைக்கா சங்கம் ஒன்றையும் துவக்கினார். தமிழின் பண் குறித்து ஆய்வை மேற்கொண்டு அதற்காக தனிப்பட்ட குழு ஒன்றையும் உருவாக்கினார்.

                                                       மறைவு: 5-5-1953






November 4, 2016

மௌனன் யாத்ரீகா வின் கவிதை தொகுப்பு நெல்லில் கசியும் மூதாயின் பால் – முன்னுரை– அஜயன் பாலா.

   இயற்கையை கொண்டாடும் கவிதைகள்


மௌனன் யாத்ரீகா வின்   கவிதை தொகுப்பு
நெல்லில் கசியும் மூதாயின் பால்
முன்னுரைஅஜயன் பாலா.

  ” ற்கனவே அறியப்பட்ட கவிதைகளிலிருந்து தப்பிப்பதும், வார்த்தைகளால் தைக்கப்பட்ட புதிய ஆடையை உருவாக்குவதும் கவிஞனின் வேலை.இத்தொகுப்பு அதைச் செம்மையாக செய்துள்ளதாகக் கருதுகிறேன்”
******************************************************************************************
     விதையின் இன்பம் வேறெவற்றோடும் ஒப்பிட முடியாதது. அந்த இன்பத்தை வாசக மனதில் தோற்றுவிப்பது ஒவ்வொரு கவிஞனுக்கும் சவால்.
அது காட்சியிலா, பொருளிலா, மொழியிலா அல்லது மூன்றும் பிரித்தறியா வண்ணம் ஒன்றிலொன்று பின்னியிருக்கும்படியான செய்நுட்பத்திலா என்பதில் கவிதையின் சூட்சுமம் உட்பொதிந்து கிடக்கிறது
இந்த சவாலை கவிதை எழுத வரும் ஒவ்வொரு புதிய கவிஞனும் எதிர்கொள்கிறான்.
இன்பத்தை ஒளித்து வைப்பதின் விளையாட்டு, கவிதையின் தொழில்நுட்பமாகி பின் சாரத்தை அகற்றி உள்ளீடற்ற கவிதைகள் எழுதுவது வரை இன்றைய கவிஞன் எல்லா தந்திரங்களையும் கடந்துகொண்டிருக்கும் சூழலில். வெளியாகிறது இப்புத்தகம்.
மௌனன் யாத்ரீகா இத்தொகுப்பின் மூலம் தன்னைத் துண்டாக வெட்டிக்கொண்டு இன்றைய கவிதைப் போக்குகளிலிருந்து வேறு ஒரு புதிய பாணியை உருவாக்க எத்தனிக்கிறார்
வாசிப்போருக்கு இருபது வருடங்களுக்கு முந்தைய வண்ணதாசன் கவிதைகளின் எதார்த்த அழகியல் பாணி நினைவுக்கு வரலாம். ஆனாலும், இவை புதியவை. மழைக் காலத்து தும்பிபோல, இரவுக் காற்றில் தாயின் சேலைத் தலைப்பின் வாசம்போல எல்லாக் காலத்துக்கும் புதியவையாக இக்கவிதைகள் நம்மை வசீகரிக்கின்றன.
பிறந்த குழந்தையின் மேனியில் பரவிக் கிடக்கும் பனிக்குடத்தின் நீர்போல கவிதை முழுக்க ஓர் ஈரம் சுற்றிப் பரவுவதை வாசிக்கும்போது உணரமுடிகிறது.
முழுக்க ஊடகங்களால் வன்புணர்வுக்காட்பட்ட நம் அறிவுலகக் குப்பைக் கிடங்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் விதமாக ஒரு ஜம்ப் கட்டில் புத்தகத்தைத் திறந்ததும் அந்த ஈரம் நம்மைப் பற்றிப் படர்வதை உணரமுடியும்
அந்த அளவிற்கு இக்கவிதைகள் நம் சூழலின் தேவையாகவும் மருந்தாகவும் இருப்பதுமே இக்கவிதைகளின் சிறப்பு.
பேருந்து, ரயில் என வெவ்வேறான பயணங்களில் கிளர்ச்சியுறும் இவரது கவிமனம் கண்ணுற்ற இடம்தோறும் கவிதைகளாக மொக்கவிழ்கின்றன.
இச்சை சார்ந்த அழகுணர்ச்சிகளிலிருந்து விலகி இயல்பான வாழ்வின், கண்ணுக்கு தெரிந்த அறிவுணர்ச்சிக்குள் நாம் இதுவரை ஆட்படாத ஓர் அழகினைக் காட்சிப் பொருளாக்கி அதை வார்த்தைளால் நமக்கு கோர்த்து பரவசப்படுத்துகின்றன இவரது கவிதைகள்.
முதல் கவிதையில், பேருந்தில் சக பயணியின் கையிலிருக்கும் குழந்தையின் கண்களை, சின்னத் திராட்சையைப்போல அவை மிதந்தலைந்ததாகக் கூறுவதில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு கவிதையிலும் தனது தனித்தன்மையை நிறுவிக்கொண்டே வருகிறார்.
விரல்களின் செம்மண் சாயத்தை வைத்து அவன் நேற்று பிடுங்கிய கடலைக் கொடியையும், அவன் நிலத்தையும் ஞாபகப்படுத்தும் இவரது சொல்முறை பெரிதும் சினிமாவின் ரிவர்ஸ் டெக்னிக் எனப்படும் பின்புணரும் காட்சி மொழியைக் கொண்டு உருவாக்கம் கொண்டிருப்பது சிறப்பு.
என்றாலும், கவிதைகளைக் காட்சி ஒன்று, காட்சி இரண்டு என வரிசைப்படுத்துவது இலக்கியத்திற்கான விசேட குணங்களிலிருந்து அன்னியப் படுத்துவதாகவும் இருக்கிறது.
பல இடங்களில் சங்கப் பாடல்களின் வர்ணனையை நமக்கு ஞாபகப்படுத்துகிறார் மௌனன். பச்சைக் கலர் ஜிங்குச்சான் என்னும் கவிதையில் பேருந்துக்குள் நுழைந்து பயணிகளோடு பயணிக்கும் வண்ணத்துப் பூச்சியை விவரிக்கும் தருணத்தில் அது வெளிப்படுகிறது.
அதேபோல கச்சிதமான தேர்ந்த வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் கவிதைகள் இவரது மொழி ஆளுமைக்குச் சான்று. இப்படி, சில சொற்களில் மனதில் சித்திரத்தை உருவாக்கி அதை வாழ்வனுபவத்தோடு பொருத்துவதில் இவரது தேர்ந்த கவிமொழி தெரிகிறது.
புற உலக வாழ்க்கையின் எந்தப் பிரச்சினையையும் இந்தக் கவிதைகள் பேசமறுக்கின்றன.
இன்றைய சூழலில் கிராமங்களின் அவல நிலை, சாதிய வன்முறைகள், விவசாய தற்கொலைகள் எதையும் இக்கவிதைகள் பேசவில்லை.
ஒருவேளை இன்னும் ஒருமுறை நாம் இந்தக் கவிதைகளை வாசிக்க விரும்புவதற்கு காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் எச்சிலைபோல அவ்வளவு தூய்மையான, உயிரோட்டமான அனுபவத்தை உருவாக்க முயல்வதுதான் இக்கவிதைகளின் சிறப்பே.
முழுக்க முழுக்க மிக அழகான புகைப்படத் தொகுப்புக்குள் நுழைந்துக் கொண்டதுபோல ஓர் அனுபவத்தை இத்தொகுப்பு உருவாக்குவது இதன் தனித்தன்மை.
திரைப்பட இயக்குனர் போல காட்சிகளின் துல்லியத்துக்குள் இவர் விழுகிற தருணங்கள் நமக்குள் மழைத்துளியாய் விழுந்து சிலிர்க்க வைக்கின்றன. தாகூருக்கு வாய்த்தது போல இயற்கையைக் கொண்டாடும் கவிதைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.
அப்பழுக்கற்ற, தூய்மையான காட்சியனுபவத்தை இயற்கையோடு சங்கமித்து உருவாக்கும்போது அக உலகில் அது உருவாக்கித்தரும் ஆன்மீக தருணங்கள் ஒப்பீடற்றவை. இந்தக் கவிதைகள் அதற்கு முயற்சிக்கின்றன.
மௌனன் யாத்ரீகா தொடர்ந்து இதே பாதையில் பயணிக்க வேண்டும். எல்லோரும் எழுதும் கவிதையாக இது இல்லாமல் இருக்கிறது. அதுவே இதன் தனித்தன்மை, அதுவே இதன் சிறப்பு. இன்னும் இதே பாதையில் பயணிக்கும்போது கண்டறியப்படாத வாழ்வின் அழகியலையும், பல உன்னத தருணங்களையும் உங்களால் மீட்டுத் தரமுடியும் என நம்புகிறேன்.

- அஜயன் பாலா
சென்னை -93
2016 - மார்ச் மாத பகல் பொழுது.

Top of Form

Bottom of Form


November 3, 2016

டெர்ஜு உஜாலா : இயற்கை Vs செயற்கை

டெர்சு உஜாலா :





         பெரு நகரங்களின் காலை நேர  பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க நடக்கும் மனிதன் எதை தேடுகிறான்,
தொலைத்த இயற்கையைத்தான்...
இன்றைய யுகத்தின் அதி முக்கிய பிரச்சனையே இதுதான்.
நவீன மனிதன் துவக்கத்தில் இயற்கையை தன் எதிரியாக நினைத்தான் . இயற்கையான காற்று, இயற்கையான நீர், இயற்கையான உணவு, எல்லாவற்றையும் வெறுத்து செயற்கை எனும் மாய வலையை அவனே பின்னிக்கொண்டான்.
இல்லாத நோய்கள் அனைத்தும் அவனை சூழ்ந்துகொள்ள  இப்போது அந்த செயற்கை கூண்டிலிருந்து  இயற்கையை தேடி வெளியேற முயற்சிக்கிறான். இதுதான் இன்றைய  மனிதனின் அதி முக்கியமான பிரச்சனை.
இந்த பிரச்சனையை 1975லேயே உலகுக்கு தன் அற்புதமான திரைப்படம் மூலம் உணர்த்தியவர் அகிராகுரசேவா.
டெர்ஜு உஜாலா இதுதான் அவர் இயக்கிய அந்த அதிமுக்கியமான திரைப்படம்.
ரோஷமான், செவன் சாமுராய், போன்ற படங்களின் மூலம் உலகின் தலைசிறந்த இயக்குனர் என  பெருமதி பெற்றவர் .ஜப்பானை சேர்ந்த அகிராகுரசேவா. கிழக்கு, மேற்கு, இரு தத்துவங்களும்  இணைந்து ஏற்று கொண்ட பிதாமகன் .  
1943 ல் துவங்கி 1999 வரை 57 வருடங்கள் கொண்ட அவருடைய  இடைவிடாத கலைப்பயணத்தில்  பல உச்சங்களை அவரால் அடைய  முடிந்தது.
அப்படிப்பட்டவருக்கும் ஒரு முறை தடுமாற்றம்

1970ல் அவர் உருவாக்கிய டோடெச் கா டென் (DODES KA DEN )  எனும் திரைப்படம்  வணிக ரீதியாக படு தோல்வியுற்றது. இந்த தோல்வி அவரை பாதிக்க 30 முறை தன் ரேசரால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது ஹரகிரி என்ற பெயரால் அங்கீகரிக்கப்பட்ட விஷயம்  பிற்பாடு குணமாகி மீண்டு வந்தவர். மீண்டும் கலையோடான தன் சமரை துவக்க முடிவு செய்தார்.  இம்முறை அவர் இயக்க தேர்ந்தெடுத்த படம் தான் டெர்ஜு உஜாலா .  ஒரு ரஷ்ய நிறுவனம் தானாக முன் வந்தது. ருஷ்யாவில் புகழ்பெற்ற ஒரு ராணுவ வீரனின் அனுபவத்தை மையமாக கொண்ட நாவலை படமாக்க முடிவு செய்து குரசேவாவை உதவியாளர்கள் மூலமாக அணுகியதன் காரணமாக   இப்படத்தை இயக்க ஒத்துக்கொண்டார்.
என்னதான் குரசேவா உலக சினிமா இயக்குனராக இருந்தாலும் அவர் தன் சொந்த மண்ணான ஜப்பானின் நிலப்படைப்பை விட்டு வெளியே சென்றதேயில்லை . துவக்கத்தில் யோசித்த குரசேவா பிற்பாடு இப்படைப்பை இயக்க ஒத்துக்கொண்டு களமிறங்கினார்.
டெர்ஜு உஜாலா
கதை:
 கேப்டன் அரசீனிவ் எனும் ராணுவ உயர் அதிகாரிக்கும் காட்டில் வசிக்கும் ஒரு நாடோடிக்குமான உறவுதான் கதை.
 மூன்று வருடங்களுக்கு முன் இறந்த நண்பனின் உடல் எரிக்கப்பட்ட இடத்தை, சைபீரிய காட்டில் கேப்டன் ஆர்சினிவ் தேடுவதிலிருந்து துவங்கும் கதை.... அப்படியே ப்ளாஷ் பேக்கில் முதன் முறையாக அந்த நண்பனை சந்தித்த காலக்கட்டத்தினுள் விரிகிறது.
நகரநிர்மாணத்திற்காக காட்டை அழிக்கும் முனைப்பிலிருக்கும் அரசாங்கம், அதற்காக ராணுவ  அதிகாரியான ஆர்சினிவ்வுடன் ஒரு படையை காட்டுக்குள் அனுப்புகிறது . மர்மங்களும் புதிர்களும் நிறைந்த காட்டில் ராணுவ வீரர்கள் திக்கு தெரியாமல் சிக்கிக்கொண்டு பரிதவிக்கின்றனர் . அச்சமயம் அந்த வழியாக வருபவன்  காட்டுவாசியான டெர்ஜு உஜாலா ..வழி தவறி குழம்பிக்கிடந்த படையினருக்கு டெர்ஜு ஒரு வழிகாட்டியாக உதவிசெய்கிறான். அவனுடைய அழுக்கான தோற்றம்,கொச்சையான பேச்சு எதுவும் அந்த குழுவினருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் அவர்களுக்கு வேறு வழியில்லை. துவக்கத்தில் கேப்டன் ஆர்சனிவுக்கும் டெர்சுவின் தோற்றமும் பேச்சும் அப்படியாகத்தானிருந்தது. ஆனால் காடு அவனுக்கு அத்துபடியாக இருந்தது, காட்டின் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரம் அர்த்தங்களை அவன் கண்டுபிடித்து  வைத்திருந்தான்.  பறவைகளின் ஒலிக்குறிப்புகள் மிருகங்களின் காலடித்தடங்கள் இவற்றிற்க்கெல்லாம்  வினோத சங்கேதங்களை அவன் அறிந்து வைத்திருந்தான்.  அவனது உள்ளுணர்வின் அதிசயத்தன்மை கண்டு படை வீரர்கள் பிரமிக்கின்றனர். வழியில் பாழ்பட்ட ஒரு குடிசையை சரிசெய்து அதில் உணவுக்கு தேவையான பொருட்களையும் வைத்துவிட்டு செல்கிறான், காரணம் தங்களுக்கு பின்னால் காட்டில் வரும் வழிபோக்கர்கள் இளைப்பாறுவதற்கும் பசியாற்றவும் அது உதவும் என அவன் கூறுமளவிற்கு அவனுடைய நுண்ணுணர்வும் மனித நேயமும் இருப்பதைக்கண்டு வீரர்கள் பிரமிக்கின்றனர்.
ஒருமுறை கேப்டன் ஆர்சினிவ்,டெர்ஜு உஜாலா இருவரும் ஆபத்தான பெரும் பனிப்புயலில் சிக்கிக்கொள்ள டெர்ஜு சடுதில் கையில் கிடைத்த கோரைகளை வைத்து  சிறு அரண் உருவாக்கி போராடுகிறான். புயலின் கடுமை உக்கிரமாக  ஒரு கட்டத்தில், கேப்டன்  உறைகுளிரில்  சாவை நெருங்கிச்செல்ல டெர்ஜு போராடி அவரை காப்பற்றி விடுகிறான். மறுநாள் அவர்களை தேடும் வீரர்கள் மயங்கிய நிலையில் இருக்கும் இருவரையும் காப்பாற்றி உயிர்ப்பிழைக்க வைக்கின்றனர். அதன்பிறகு ஒரு நானி பழங்குடி வீட்டில் தங்கி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள,இப்போது டெர்ஜு கேப்டனிடம்  அடுத்து எந்த திசையில் நாம் பயணிக்கபோகிறோம், என கேட்க  மவுனமாக இருக்கும் கேப்டன் குரலில் உயிர் பயம் தொனிக்க, நகரத்திற்கு திரும்புகிறோம் என கூறுகிறான்.
தன் உயிரைக்காப்பாற்றிய  டெர்ஜுவையும்  கேப்டன் தங்களுடன் வருமாறு நகரத்திற்கு அழைக்க, டெர்ஜு மறுக்கிறான். தன்னுடைய வழக்காமன பயணத்தை காட்டில் தொடரப்போவதாக கூறி மறுநாள் ரயில்வே ட்ராக்கினூடே தனியாக காட்டுக்குள் மறைகிறான்.
இது நிகழ்ந்து ஐந்து வருடங்களுக்கு பிறகு கேப்டன் ஆர்சினிவுக்கு அரசாங்கம் மீண்டும் காட்டில், வேறு ஒரு திட்ட கள ஆய்வுக்காக படையினருடன் அனுப்பி வைக்கிறது. இது வேறு காட்டுபகுதியானாலும் கேப்டனுக்கு டெர்ஜுவின் ஞாபகம் வராமலில்லை . அந்த மனிதம் நிறைந்த நாடோடி காட்டுவாசி தன் கண்ணில் தென்பட மாட்டானா என ஏக்கம்கொள்கிறார். ஒரு வீரன் தான் அப்படிப்பட்ட ஒருவனை பார்த்ததாக கூற  கேப்டனுக்கு நம்பிக்கையில்லை . அவன் பார்த்ததாக சொன்ன இடத்துக்கு விரைந்து தேடலை துவக்குகிறார்.சட்டென அவர் கண்ணில் டெர்ஜு . உணர்ச்சி வசப்பட்டவராய் அவனை அழைக்க அவனும் திரும்ப இருவரும் அன்பு மிகுதியால் கட்டிபிடித்து உணர்ச்சிவயப்படுகின்றனர்.
கேப்டனின் வேண்டுகோளுக்கிணங்க இம்முறையும் மீண்டும் டெர்ஜூ அவர்களை காட்டில் வழி நடத்தும் பணியை ஏற்கிறான். ஒரு ஆற்றை கடக்க வேண்டிய சூழல் நிர்பந்திக்க மற்றவர்களை குதிரையில் அனுப்பிவிட்டு  சிறிதளவு வீரர்களை,  சிறிய தெப்பத்தில் ஏற்றிக்கொண்டு டெர்ஜுவும் கேப்டனும் பயணிக்கின்றனர் .
திடுமென ஆற்றில் வெள்ளம் கரைபுரள  ஒரு பாறையில் மோதி தெப்பம் உடைய சடுதியில் பெரும் அருவி வேறு சமீபிக்க ஒருவர் மட்டுமே பிழைக்க முடிந்த நெருக்கடியில், மீண்டும் கேப்டனை காப்பற்றி ஆபத்தான சூழலில் தானும் பிழைத்துக்கொள்கிறார். தொடர்ந்த பயணத்தில் டெர்ஜுவின் வயதான தன்மைகாரணமாக கண்பார்வை மங்கிவிட்டதை உணர்ந்த கேப்டன் இம்முறை பயணம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக தன்னோடு நகரத்துக்கு அழைத்துச்செல்கிறார்.
டெர்ஜுவுக்கு அதில் இஷ்டமில்லை என்றாலும் கேப்டன் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பு அவரை நெகிழ்த்துகிறது.
காட்டுச்செடியாக அழுக்கு உடையுடன் திரிந்த டெர்ஜுவால் கான்க்ரீட் நகரத்துக்குள் வாழமுடியவில்லை . நகரத்தில் அவருடைய தோற்றம் வேடிக்கை பொருளாக, வாழ தகுதியற்றதாக கருதப்படுகிறது. கேப்டனின் வீடு அவருக்கு சிறையாக மாறுகிறது. காட்டில் தன்னிச்சையாக வளரும் மரத்தை போன்சாயாக வீட்டில் சுருக்கிவைத்திருக்கும் மனித மனம் அவருக்கு பதட்டத்தை உருவாக்கி விடுகிறது.  என்னதான் கேப்டன் தன்னோடு அன்பாக பழகினாலும் அவர் வீட்டாரால் டெர்ஜுவை முழுமையாக புரிந்துகொள்ள முடியவில்லை.
ஒரு நாள் வீடு திரும்பும் கேப்டன் தன் அன்புக்குரிய காட்டுவாசி டெர்ஜூவை காணாமல் தேடுகிறார் . நகரத்து மனிதர்களின் செயற்கையான வாழ்க்கை பிடிக்காமல், டெர்ஜு காட்டுக்கே திரும்பிவிட்டதை அறிகிறார்.
சில காலம் கழித்து காட்டில் கண்டெடுக்கப்பட்ட பனி சடலம்  பற்றிய தகவல் கேப்டனுக்கு  வருகிறது. சடலத்தில் கேப்டனின் அழைப்பு அட்டை அதில் இருந்ததாக கூறப்படுகிறது . கேப்டன் அங்கு வந்து பார்த்தபின்தான்  அது கொலை என அறிகிறார். டெர்ஜுவை யாரோ தான் பரிசாக அவருக்கு வழங்கிய துப்பாக்கிக்காக, கொலைசெய்திருக்கக்கூடும் என  தெரிகிறபோது அவரை கொன்றது தான் மட்டுமல்ல, செயற்கையான நகரமும்தான்  என்பதாக உணர்கிறார்.
1971ல் தயாரிப்பு வேலைகள் துவக்கப்பட்டு 1975ல் ஐந்து வருட தயாரிப்புக்கு பின்னரே வெளியானது. குரசேவாவின் தயாரிப்பில் அதிக நாளை எடுத்துக்கொண்ட படம் இது . படப்பிடிப்பில் ஒரு கட்டத்தில் பனிக்காலம் காரணமாக தொடரமுடியாமல்  போய் மீண்டும் வந்த போது புற்கள் அவ்வளவாய் வளராமல் இருக்க, மீண்டும் ஆளுயரத்திற்கு கோரை புற்கள் வளர்வதற்க்காக ஒருவருடம் அவர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார். பலரும் அதைபோல புற்கள் நன்கு வளர்ந்த  வேறு இடத்தில் அல்லது செட் போட்டு படப்பிடிப்பை நடத்தலாம் எனக்கூற குரசேவா மறுத்துவிட்டார். ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் அதே போல புற்கள் வளர்ந்த பின்தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.
1975ல் வெளியான இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்காரை வென்றது.
தோல்வியிலிருந்து எப்படி மீள்வது என்பதற்கு அகிராவின் இந்த படம் ஒவ்வொரு இயக்குனருக்கும் பாடம்  .
கலையின் மீதும் மனிதத்தின் மீதும் தீராத காதல் கொண்டவர்களை  காலம் மேலும் மேலுமான உயரத்திற்கு அழைத்து செல்லும் என்பதற்கு, அகிராவின் வாழ்க்கையும் டெர்ஜு உஜாலாவும் சிறந்த பாடம்.
ஆனால் அவருக்கோ மகத்தான படைப்பு, மனம் அடங்கா நெருப்பாய் தகித்துக்கொண்டிருக்கும் நிலை.
                                                                          - நன்றி : பல் சுவை காவியம்  நவம்பர்  22016

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...