November 22, 2011

வெ.ஸ்ரீராம் : காலத்தின் மொழி தச்சன்

வெ. ஸ்ரீராமை ஒரு நாள் சாலிக்கிராமத்தில் பார்த்தேன் காலை நேரம் வாக்கிங் போய்க்கொண்டிருந்தார். சட்டென உள்ளுக்குள் ஒரு அதிர்வு. அவசரமாக அவருக்கு பதட்டத்துடன் முகமன் செய்தேன். அவருக்கு என்னை தெரிந்திருக்குமோ தெரியாது. முழுமையான் அறிமுகம் இல்லை.அவரது முகம் உதிர்த்த புன்னகையில் ஆச்சர்யம் யோசனை எதுவும் இல்லை.  என்னடா , இத்தனை காலையில் மெனக்கெட்டு நமக்கு ஒருத்தன் சலாம் போடுகிறனே யார் அவன் என்ன செய்கிறன்…துளி விசாரணை ..ம்ஹூம் ….வெறுமனே கடந்து கொண்டிருந்தார். நானாக இருந்தால் ம்ம்…. இப்ப என்ன செய்யறீங்க என தெரிந்தார் போல எதையாவது கேட்டு என் ஒளிவட்டத்தின் ஆரத்தை கணகெடுத்துவிட்டிருப்பேன் . ஆனால் அவரோ எனக்கு முதுகு காண்பித்தபடி தொலைவில் அமைதியாக சென்று கொண்டிருந்தார். ஒருவேளை என்னை அவருக்கு தெரிந்தும் தெரியாதவர் போல..பேசுவதால் எந்த பலனும் இல்லாதவராக யோசித்து கடந்து போயிருக்கலாம் உண்மைதான் .அவரது படைப்புகளை போல முழுவதும் அகவயமாக எந்த கோரிக்கையும் இல்லாமல் எழுதுவதோடு நம் பணி தீர்ந்தவராக ஸ்ரீராம் பொது வெளியில் சூழலில் இருந்து வருகிறார். . அன்று காலை உடனே வந்து முகநூலில் ஓரு நிலைசெய்தியை போட்டேன்.சிலர் விருப்பமிட்டிருந்தார்கள். அவர்களில் பெரும்பாலோர் நான் எதை போட்டாலும் விருப்பக்குறியை தட்டுபவர்கள்.அதற்கு என்மீதான அன்பும் அக்கறையும் காரணம். ஒருத்தர் அவர் இனிஷியல் பிசி தானே ஏன் இப்படி தவறாக போட்டிருக்கிறீர்கள் என ஆலோசனை சொன்னார். அப்பாடா வெ. ஸ்ரீராமை இன்னமும் பலர் தெரியாமல் இருக்கிறார்கள் .அந்த மட்டுக்கு உலகம் நிதானமாகத்தான் சுற்றுகிறது என்றும் மனம் ஆசுவாசப்பட்டது. ஆனாலும் மனம் அத்தோடு நிலைகொள்ளாமல் சற்று நேரம் அவரைகுறித்து ஆழமாக யோசிக்க வைத்த்து. ஸ்ரீராமின் படைப்புகள் மொழிபெயர்ப்புகள்தான் என்றாலும் அந்த மொழிபெயர்ப்புகள் சமூகத்தில் எந்த தளத்தில் வேலை செய்கின்றன என்பது மிகவும் குறிப்பிடதகுந்தது. அதன் முக்கியத்துவம் எத்தகையது என்பதை அறிய இலக்கியவாதியை விட ஒரு ஒரு சமூகம் மற்றும் மொழியியல் அக்கறையுள்ள மாணவனாக இருந்து பார்க்கும் போது அந்த படைப்புகளின் கனபரிமானத்தை ஓரளவு புரிந்துகொள்ள முடியும். சமூகத்தின் சிந்தனா ஓட்ட்த்தை அதன் பிரக்ஞையை தீர்மானிக்கும் சக்தியாக கருதப்படும் எழுத்துமற்றும் காட்சி ஊடகம் சார்ந்த நபர்களின் ஆதார சக்தியாக விளங்குவது அம்மொழியின் இலக்கியவாதிகளும் அவர்களது படைப்புகளுமே. உள்முகமாக இயங்கும் தீவிரமான சில புத்திளைஞனின் தேடல் அதன் மூலமாக வெளிப்படும் கவிதையின் ஒரு வரி அல்லது கதையினூடாக அவன் முன் வைக்கும் புதிய பார்வை பரவலான ஊடகபிரதிநிதிகளும் இலக்கிய வாசிப்பாளர்களாலும் தூண்டப்பட்டு சமூகத்தின் சிந்தனா ஓட்டமாக ஊடகங்களால் முன்னெடுத்து செல்லப்படுகிறது. அப்படியாக சமூகத்தினது காலத்தின் சக்கரங்களாக சுழலும் ஊடகங்களின் முன்னகர்வுக்கு சமுகத்தின் அதிகம் அறியப்படாத ஒரு நவீன எழுத்துக்காரனின் படைப்புலகம் எரிசக்தியாக இருந்து இயக்கிவருகிறது . இப்படியான நவீன எழுத்துக்காரர்கள், வெகுஜன ஊடகங்களில் அறியப்ப்டாதவர்கள். பெரும்பாலும் இளைஞர்கள் .பெரும் வேட்கையுடனும் கனவுகளுடனும் அலைந்துதிரிபவர்கள். இவர்கள் புழங்கும் வெளியில் மூத்தபடைப்பாளிகளும் அதிகம் ஆனால் அவர்கள் காலத்தால் இறுகிபோனவர்க்ள்.அவர்களது படைப்புகள் பெரும்பாலும் சூழ்லின் பிரதிபலிப்பாக இல்லாமல் அறிவின் பிரதிமைகளாக மட்டுமே வெளிப்படுகின்றன இச்சூழலில் இத்தகைய நவீன் எழுதுக்காரர்களின் கவிஞர்களின் வாசிப்புலகிற்கு பெரும் தீனியாக இருப்பது கவிதைகளை கடந்து மொழிபெயர்ப்பு நூல்கள் தாம். சிறந்த மொழிபெயர்ப்புகள் காலத்தால் பழையதன்மையை ஒரு போதும் அடைவதில்லை.இத்தகைய மொழிபெயர்ப்புகள் அடங்கிய காகிதங்களை வெறும் கழுதையை போல செரிமானித்துக்கொள்ளும் இளைஞன் தனது படைப்புகளில் புதிய வாசனையை தடவுகிறான்.புதிய பார்வையுடன் அரசியலை அணுகுகிறான், வழக்கமான வார்த்தைகளை மாற்றி போட்டு வாசிப்பனுபவத்தில் புதுமையை பாய்ச்சுகிறான் . அந்த புதுமை ஊடக்க்காரனுக்கு கைமாற்று செய்யப்பட அதன்மூலம் அறிவின் மின்சாரம் பாய்ச்சபெறும் ஊடகக்காரன் பெருவாரியன வாசகர்களை நோக்கி தன் அலுவலகத்தில் புதிய பார்வைக்ளையும் வார்த்தைகளையும் எடுத்துசென்று சுவையான செய்திகளினூடே அவற்றை இட்ம் கொண்ட இடத்தில் சேர்த்துக்கொள்கிறான். சதா காலத்தில் புதுமையை எதிர்நோக்கும் சமூகம் கழுதையாக அதனை மென்று புதியவாசனையை செரிமானித்து இன்னுமொரு புதிய காலத்துக்கு தன்னை தயார்படுத்துகிறது. இந்த சுழல் சக்கரத்தில் முதல் பணீயாளனாக செயல்படும் மொழிபெயர்ப்பாளன் பெரிய வெகுமதிகளை அடையாளங்களை பெறுவதில்லை ஆனாலும் அவனது பங்கு மகத்தானது. அப்படிபட்ட மகத்தான் பங்களிப்பை செய்த முதன்மையானவர் வெ. ஸ்ரீராம் அவரை எந்த கூட்டத்திலும் பிரசங்கிக்க கேட்டதில்லை. எப்போதாவது அலையன்ஸ் பிரான்செ நடததும் பிரெஞ்சு திரைப்பட காட்சிகள் அல்லது நாடகம் மற்றும் இலக்கிய கூட்டங்களில் அறிமுகமாக சில எளிய உரைகளை அவர் நிகழ்த்த கேட்டதோடு சரி. சம்பளத்துக்கு உண்மையாக இருக்கும் ஒரு வாத்தியாரின்.... கல்லூரி பேராசிரியரின் தன்மை அதில் வெளிப்படும். சற்று கூன் விழுந்த தோற்றம்,மெதுவான குரல் பெண்மை கலந்த சுபாவம் என பல விதங்களில் சுஜாதாவை நினைபடுத்தும் ஸ்ரீராம் எப்போதும் சட்டையை இன் பண்ணி இறுக்கமான பெல்ட்டையும் அணிந்திருப்பார். அவர் அணிந்திருக்கும் பெரும்பாலான சட்டைகள் கோடுபோட்ட்வை. கோடு பொட்ட சட்டைகள் அணிபவர்கள் பெரும்பாலும் அறத்தின் பிரதிநிதிகளாகவும் கட்டம் போட்ட சட்டை அணீபவர்கள் எதிர் கலாச்சாரம் அல்லது புதுமை விரும்பிகளாக இருப்பதாகவும் நானாக ஒரு ஆய்வு செய்து கண்டுபிடித்து வைத்திருக்கிறேன் . எனது ஆய்வின் படி ஸ்ரீரம் ஒரு அறம் சார்ந்த் பண்பினர். தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை தவிர வேறெதையும் செய்ய துணீயாதவர்.அவரது மொழி பெயர்ப்பு நூல்கள் கூட ஏதோ ப்ராஜக்ட் வொர்க்தானோ என எண்ணுமளவிற்கு மதிப்பீட்டை உருவக்குபவர் .ஆனாலும் அவரது நூல்களை கடந்து வரும் ஒருவன் அந்த நூல்களின் தனிசிறப்புக்கும் வெற்றிக்கும் அவரது இந்த பொறுபுணர்ச்சியும் உழைப்பும் செயல்மீதான் அளவற்ற காதலும்தான் காரணம் என்பதை உணராமல் இருக்க முடியாது . . ஆல்பர்ட் கம்யூவின் அந்நியன் தான் அவர் மொழிபெயர்ப்பில் வெளியான முதல் நூல் . 1980ல் வெளியான் இந்நூலை நான் பதினன்கு வருடங்களுக்குபிறகு 1994ல் தான் படிக்க நேர்ந்தது.அக்காலத்தில்தன் என் தலைக்குமேல் சூரியன் வெளிச்சமிட துவங்கினான் . நினைப்புக்கும் நம் செயல்களுக்குமிடையில் கடந்து போகும் எத்த்னையோ மன ஓட்டங்களை நாம் பொருட்படுத்துவதில்லை. பெரும்பாலும் நமது அகசிந்த்னைகள் நமக்குள்ளாகவே முடங்கிவிடுகின்றன . பொதுவெளிக்கு அந்நியமாக தெரியும் நமது எண்ண்ங்களை நம் செயல்படுத்துகிறபோது அவை அபத்தங்களாக அறியப்படுகின்றன, பொது வெளியின் அர்த்தங்களுகேற்ப நம் நடத்தைகளை ஒழுங்கு செய்வதில் மட்டுமே நாம் கவனம் கொள்வதால் பெரும் பாலும் நாம் நம் எண்ணங்களுக்கு துரோகமிழைப்பவர்களாகவே நடந்து கொள்கிறோம். அதிகாரமும் நெருக்கடியும் நிறைந்த ஒரு சமூகத்தில் இவை மனிதனை மிகவும் செயற்கைதன்மை மிக்கவனாகவும் அதிகாரத்தின் அடிவருடிகளாகவுமே மாற்றிவிடுகின்றன. இவற்றிலிருந்து தப்பிக்க விழைபவனே முழுமையான மனிதனாக இருக்கிறான் . அறியப்பட்ட விதிகளுக்கு புறம்பாக அவன் நிகழ்த்தும் ஒவ்வொரு காரியங்களும் இதர மனிதர்களுக்கு அபத்தமாக தெரிந்தாலும் அவன் முழு சுதந்திரமுடையவனாகவே தன்னை உணர்கிறான் . அந்நியனில் வரும் மெர்சோ இப்படியாகத்தன் நடந்துகொள்கிறான் . தன் அம்மா இறந்தால் அழாமல் இருக்கும் ஒருவனை பார்த்து இந்த சமூகம் பெரும் வியப்புடன் பார்க்கிறது. ஆனால் அவனால் அழமுடியவில்லை . அதற்கான் காரணமும் அவனிடமில்லை.இந்த நாவலை படிக்கும் போது இச்சந்தர்பத்தில் சமூகம் நம்மீது அழுத்தியுள்ள போலியான் பாவனைகள் நம்மிடமிருந்து தானாக உதிர்வதையும் மேலும் உயிருள்ளவனாக.. எண்ணங்களில் மிகபெரிய சுதந்திரம் கொண்டவனாகவும் நம்மை உணர முடியும் . காம்யூவின் வெற்றி இதுதான் என்றாலும் இந்த உணர்வையும் தத்துவத்தையும் முழுமையாக அறிந்துகொள்ளாத ஒருவரால் இந்த நூல் மொழிபெயர்க்கப்பட்டிருக்குமானால் வெறும் சாரமற்ற சக்கையான ஒரு பதிப்பாகவே வெளியாகியிருக்கும் இன்று நம்மிடம் உள்ள பல மொழி பெயர்ப்புகள் அப்படியாகத்தான் உள்ளன.இதுவரையிலான மொழிபெயர்ப்புகள் அனைத்திலும் அந்நியன் சிறந்த மொழிபெயர்ப்பு நூலாக பரிணாமம் பெறுவதற்கான காரணங்களும் இதுதான் . இதுமட்டுமல்லமல் தமிழ் சூழலில் தீவிரமான அறிவுத்தேடல் கொண்ட ஒருவன் கடைசியாக சென்றடையக் கூடிய இடமாகத்தான் அவரது இதர நூல்களும் அறிவுத்தளத்தில் மிக முக்கிய பங்களிப்பை செய்து வருகின்றன மதன கல்யாணி என்பவருடன் இணைந்து அவர் மொழிபெயர்த்த 81ல் வெளியான அந்த்வாந்த் எக்சுபரியின் குட்டி இளவரசன் எனும் சிறு நூல் அவரது மிகசிறந்தபங்களிப்பு. தமிழ் தலையணை நாவல்களை பகடிசெய்யவேண்டுமானால் அவற்றை இச்சிறுநூலின் அரூகில் வைத்து பார்த்தாலே போதுமானது. அந்த நூல் அந்த தடிமனான நாவல்களின் வண்டி வண்டியான வார்த்தைகளை மிக சுலபமாக ஓடையில் ஜம்ப் செய்வது போல ஒரு எட்டில் தாண்டிவிடுகிறது. மனிதனின் அகங்காரங்களை எல்லாம் எள்ளி நகையாடும் இந்நூல் அற்ப விடயங்களின் ரகசியத்தையும் பொருள் தேடும் மனித வாழ்வின் அர்த்தமற்ற தேடல்களையும் நம் கண்முன் நிறுத்தி குட்டி இளவரசனாக நாம் மாறிவிட பெரும் ஏக்கத்தை உண்டாக்கிவிடுகிறது. தஸ்தாயேவெஸ்கியின் வெண்ணீற இரவுகளுக்குபிறகு மிகவும் போற்றி பாதுகாக்க கூடிய நூல் இது. பலமுறை நான் குட்டி இளவரசனை வாங்குவதும் .. நண்பர்கள் என் அலமாரியிலிருந்து திருடிச்செல்வதும் , நான் வேறு நண்பர்களிடமிருந்து எடுத்துவருவதும் சில சமயங்களில் தொலைப்பதுமாக எனக்கும் இளவரசனுக்குமான உறவு இப்பவும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது . இப்போது என் அலமாரியில் இந்த கட்டுரைக்காக தேடியபோது கூட அந்நூல் காணக்கிடைக்கவில்லை. மேற்சொன்ன இரண்டு நூல்களையும் விட தமிழ் சூழலுக்குள் மிக அதிகமான பாதிப்பை உண்டக்கியது வெ ஸ்ரீராமின் சிறு மொழிபெயர்ப்பு நூல். ழாக் பெரவரின் சொற்கள் எனும் அந்த மொழி பெயர்ப்பு கவிதை நூல் இன்றைய தமிழ் கவிதை சூழல் அடைந்திருக்கும் பெருமாற்றத்திற்கு மிக முக்கிய பங்களிப்பை செய்திருக்கின்றன . இதை நான் மட்டும் சொல்லவில்லை . தமிழ் சூழலின் பல முன்னணி கவிஞர்களே என்னிடம் பலமுறை இதை குறிப்பிட்டுள்ளனர். பின் நவீனத்தின் அழுத்தமான பாதிப்பில் இருந்த 2000க்குமுன்பான தமிழ் கவிதைகள் பெரும்பாலும் இருண்மையையும் அவநம்பிக்கையையும்,இருப்பின் மீதான் கேள்விகளையும்மட்டுமே உள்ளடக்கியதாக இருந்தன. ரமேஷ் பிரேம், மனுஷ்ய புத்திரன் யுவன் சந்திரசேகர் யூமா வாசுகி ,போன்றோர் மட்டுமே அதிகமாய் எழுதிவந்த காலம் அது. 2000க்குபிறகு தமிழ் சூழலில் நிகழ்ந்த பொருளாதரா மற்றங்கள் காரணமாக நகர வாழ்க்கை பெரும் பாய்ச்சலை சந்தித்துகொண்டிருந்த காலத்தில் நகரம் புதிய் ஆடைகளை அணியதுவங்கியது. உடன் இலக்கிய சூழலிலும் நகரவாழ்க்கை சம்பந்தப்பட்ட பல கவிஞர்கள் உருவாக துவங்கினர். அப்படிப்பட்டவர்களுக்கு மேலும் சுதந்திரத்தை தந்து அவர்களுக்குள் கற்பனையின் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய பெருமை சொற்கள் தொகுப்புக்கு கணீசமாக உண்டு. வானத்திற்கு கீழ் உள்ள அனைத்தையும் கவிதையாக்கும் அவர்களது திறன் தமிழ் சூழலுக்குள் பெரும் பய்ச்சலை உண்டக்கியது . இப்படியாக வெ ஸ்ரீராமின் படைப்புகள் ஒவ்வொன்றும் காலத்திற்கு தக்கன பல மறுதல்களை தமிழ் சூழலில் உருவாக்கிகியுள்ளதையும் பல படைப்புகளுக்கு உந்து சக்தியாக அது இருந்திருப்பதையும் காலத்தின் சாட்சியாளணாக என்னால் துல்லியமாக உணரமுடிகிறது இத்தனைக்கும் காரணமாக இருப்பது அவர் மூல படைப்பின் மீது கொண்டிருக்கும் கற்பு சார்ந்த மதிப்பும் ,மொழியின் மீதான ஆளுமையும். படைப்பு தொழிலின் மீதான நேர்மையும் நம்பிக்கையும் மட்டுமே ஆகும் . நன்றி : நேர் காணல் இலக்கிய இதழ்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...