டெர்சு உஜாலா
:
பெரு நகரங்களின் காலை நேர பூங்காக்களில் வேக வேகமாக தொப்பை குலுங்க
நடக்கும் மனிதன் எதை தேடுகிறான்,
தொலைத்த
இயற்கையைத்தான்...
இன்றைய
யுகத்தின் அதி முக்கிய பிரச்சனையே இதுதான்.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEj3aKUcuMBgU6gv0leeCPKoS3uLMaXcYbXLIQ0ozWnzQhTohr81NVQXbd0s76_5FKQDSTHs-mG39ca3sYSOlVGLrIP2R-Xsub3vXlUOwRzqF9soA1W8yGodYwvAWcHVCUFyZHs-GEfNEr0/s320/cover_240.jpg)
இல்லாத நோய்கள்
அனைத்தும் அவனை சூழ்ந்துகொள்ள இப்போது
அந்த செயற்கை கூண்டிலிருந்து இயற்கையை
தேடி வெளியேற முயற்சிக்கிறான். இதுதான் இன்றைய மனிதனின் அதி முக்கியமான பிரச்சனை.
இந்த பிரச்சனையை
1975லேயே உலகுக்கு தன் அற்புதமான திரைப்படம் மூலம் உணர்த்தியவர் அகிராகுரசேவா.
டெர்ஜு உஜாலா
இதுதான் அவர் இயக்கிய அந்த அதிமுக்கியமான திரைப்படம்.
ரோஷமான், செவன்
சாமுராய், போன்ற படங்களின் மூலம் உலகின் தலைசிறந்த இயக்குனர் என பெருமதி பெற்றவர் .ஜப்பானை சேர்ந்த
அகிராகுரசேவா. கிழக்கு, மேற்கு, இரு தத்துவங்களும் இணைந்து ஏற்று கொண்ட பிதாமகன் .
1943 ல்
துவங்கி 1999 வரை 57 வருடங்கள் கொண்ட அவருடைய இடைவிடாத கலைப்பயணத்தில் பல உச்சங்களை அவரால் அடைய முடிந்தது.
அப்படிப்பட்டவருக்கும்
ஒரு முறை தடுமாற்றம்
1970ல் அவர்
உருவாக்கிய டோடெச் கா டென் (DODES KA DEN ) எனும் திரைப்படம் வணிக ரீதியாக படு தோல்வியுற்றது. இந்த தோல்வி
அவரை பாதிக்க 30 முறை தன் ரேசரால் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார்.
ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது ஹரகிரி என்ற பெயரால் அங்கீகரிக்கப்பட்ட விஷயம் பிற்பாடு குணமாகி மீண்டு வந்தவர். மீண்டும்
கலையோடான தன் சமரை துவக்க முடிவு செய்தார்.
இம்முறை அவர் இயக்க தேர்ந்தெடுத்த படம் தான் டெர்ஜு உஜாலா . ஒரு ரஷ்ய நிறுவனம் தானாக முன் வந்தது. ருஷ்யாவில்
புகழ்பெற்ற ஒரு ராணுவ வீரனின் அனுபவத்தை மையமாக கொண்ட நாவலை படமாக்க முடிவு செய்து
குரசேவாவை உதவியாளர்கள் மூலமாக அணுகியதன் காரணமாக இப்படத்தை
இயக்க ஒத்துக்கொண்டார்.
என்னதான்
குரசேவா உலக சினிமா இயக்குனராக இருந்தாலும் அவர் தன் சொந்த மண்ணான ஜப்பானின்
நிலப்படைப்பை விட்டு வெளியே சென்றதேயில்லை . துவக்கத்தில் யோசித்த குரசேவா
பிற்பாடு இப்படைப்பை இயக்க ஒத்துக்கொண்டு களமிறங்கினார்.
டெர்ஜு
உஜாலா
கதை:
கேப்டன் அரசீனிவ் எனும் ராணுவ உயர்
அதிகாரிக்கும் காட்டில் வசிக்கும் ஒரு நாடோடிக்குமான உறவுதான் கதை.
மூன்று வருடங்களுக்கு முன் இறந்த நண்பனின் உடல்
எரிக்கப்பட்ட இடத்தை, சைபீரிய காட்டில் கேப்டன் ஆர்சினிவ் தேடுவதிலிருந்து
துவங்கும் கதை.... அப்படியே ப்ளாஷ் பேக்கில் முதன் முறையாக அந்த நண்பனை சந்தித்த
காலக்கட்டத்தினுள் விரிகிறது.
நகரநிர்மாணத்திற்காக
காட்டை அழிக்கும் முனைப்பிலிருக்கும் அரசாங்கம், அதற்காக ராணுவ அதிகாரியான ஆர்சினிவ்வுடன் ஒரு படையை
காட்டுக்குள் அனுப்புகிறது . மர்மங்களும் புதிர்களும் நிறைந்த காட்டில் ராணுவ வீரர்கள்
திக்கு தெரியாமல் சிக்கிக்கொண்டு பரிதவிக்கின்றனர் . அச்சமயம் அந்த வழியாக வருபவன்
காட்டுவாசியான டெர்ஜு உஜாலா ..வழி தவறி
குழம்பிக்கிடந்த படையினருக்கு டெர்ஜு ஒரு வழிகாட்டியாக உதவிசெய்கிறான். அவனுடைய அழுக்கான
தோற்றம்,கொச்சையான பேச்சு எதுவும் அந்த குழுவினருக்கு பிடிக்கவில்லை. ஆனாலும்
அவர்களுக்கு வேறு வழியில்லை. துவக்கத்தில் கேப்டன் ஆர்சனிவுக்கும் டெர்சுவின்
தோற்றமும் பேச்சும் அப்படியாகத்தானிருந்தது. ஆனால் காடு அவனுக்கு அத்துபடியாக
இருந்தது, காட்டின் ஒவ்வொரு அசைவிலும் ஆயிரம் அர்த்தங்களை அவன் கண்டுபிடித்து வைத்திருந்தான். பறவைகளின் ஒலிக்குறிப்புகள் மிருகங்களின்
காலடித்தடங்கள் இவற்றிற்க்கெல்லாம் வினோத
சங்கேதங்களை அவன் அறிந்து வைத்திருந்தான்.
அவனது உள்ளுணர்வின் அதிசயத்தன்மை கண்டு படை வீரர்கள் பிரமிக்கின்றனர்.
வழியில் பாழ்பட்ட ஒரு குடிசையை சரிசெய்து அதில் உணவுக்கு தேவையான பொருட்களையும்
வைத்துவிட்டு செல்கிறான், காரணம் தங்களுக்கு பின்னால் காட்டில் வரும்
வழிபோக்கர்கள் இளைப்பாறுவதற்கும் பசியாற்றவும் அது உதவும் என அவன் கூறுமளவிற்கு
அவனுடைய நுண்ணுணர்வும் மனித நேயமும் இருப்பதைக்கண்டு வீரர்கள் பிரமிக்கின்றனர்.
ஒருமுறை கேப்டன்
ஆர்சினிவ்,டெர்ஜு உஜாலா இருவரும் ஆபத்தான பெரும் பனிப்புயலில் சிக்கிக்கொள்ள
டெர்ஜு சடுதில் கையில் கிடைத்த கோரைகளை வைத்து
சிறு அரண் உருவாக்கி போராடுகிறான். புயலின் கடுமை உக்கிரமாக ஒரு கட்டத்தில், கேப்டன் உறைகுளிரில் சாவை நெருங்கிச்செல்ல டெர்ஜு போராடி அவரை காப்பற்றி
விடுகிறான். மறுநாள் அவர்களை தேடும் வீரர்கள் மயங்கிய நிலையில் இருக்கும்
இருவரையும் காப்பாற்றி உயிர்ப்பிழைக்க வைக்கின்றனர். அதன்பிறகு ஒரு நானி பழங்குடி
வீட்டில் தங்கி தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள,இப்போது டெர்ஜு கேப்டனிடம் அடுத்து எந்த திசையில் நாம் பயணிக்கபோகிறோம்,
என கேட்க மவுனமாக இருக்கும் கேப்டன்
குரலில் உயிர் பயம் தொனிக்க, நகரத்திற்கு திரும்புகிறோம் என கூறுகிறான்.
தன்
உயிரைக்காப்பாற்றிய டெர்ஜுவையும் கேப்டன் தங்களுடன் வருமாறு நகரத்திற்கு அழைக்க,
டெர்ஜு மறுக்கிறான். தன்னுடைய வழக்காமன பயணத்தை காட்டில் தொடரப்போவதாக கூறி
மறுநாள் ரயில்வே ட்ராக்கினூடே தனியாக காட்டுக்குள் மறைகிறான்.
இது நிகழ்ந்து
ஐந்து வருடங்களுக்கு பிறகு கேப்டன் ஆர்சினிவுக்கு அரசாங்கம் மீண்டும் காட்டில்,
வேறு ஒரு திட்ட கள ஆய்வுக்காக படையினருடன் அனுப்பி வைக்கிறது. இது வேறு
காட்டுபகுதியானாலும் கேப்டனுக்கு டெர்ஜுவின் ஞாபகம் வராமலில்லை . அந்த மனிதம் நிறைந்த
நாடோடி காட்டுவாசி தன் கண்ணில் தென்பட மாட்டானா என ஏக்கம்கொள்கிறார். ஒரு வீரன்
தான் அப்படிப்பட்ட ஒருவனை பார்த்ததாக கூற
கேப்டனுக்கு நம்பிக்கையில்லை . அவன் பார்த்ததாக சொன்ன இடத்துக்கு விரைந்து
தேடலை துவக்குகிறார்.சட்டென அவர் கண்ணில் டெர்ஜு . உணர்ச்சி வசப்பட்டவராய் அவனை
அழைக்க அவனும் திரும்ப இருவரும் அன்பு மிகுதியால் கட்டிபிடித்து
உணர்ச்சிவயப்படுகின்றனர்.
கேப்டனின்
வேண்டுகோளுக்கிணங்க இம்முறையும் மீண்டும் டெர்ஜூ அவர்களை காட்டில் வழி நடத்தும்
பணியை ஏற்கிறான். ஒரு ஆற்றை கடக்க வேண்டிய சூழல் நிர்பந்திக்க மற்றவர்களை
குதிரையில் அனுப்பிவிட்டு சிறிதளவு வீரர்களை, சிறிய தெப்பத்தில் ஏற்றிக்கொண்டு டெர்ஜுவும்
கேப்டனும் பயணிக்கின்றனர் .
திடுமென
ஆற்றில் வெள்ளம் கரைபுரள ஒரு பாறையில்
மோதி தெப்பம் உடைய சடுதியில் பெரும் அருவி வேறு சமீபிக்க ஒருவர் மட்டுமே பிழைக்க
முடிந்த நெருக்கடியில், மீண்டும் கேப்டனை காப்பற்றி ஆபத்தான சூழலில் தானும்
பிழைத்துக்கொள்கிறார். தொடர்ந்த பயணத்தில் டெர்ஜுவின் வயதான தன்மைகாரணமாக
கண்பார்வை மங்கிவிட்டதை உணர்ந்த கேப்டன் இம்முறை பயணம் முடிந்ததும் வலுக்கட்டாயமாக
தன்னோடு நகரத்துக்கு அழைத்துச்செல்கிறார்.
டெர்ஜுவுக்கு
அதில் இஷ்டமில்லை என்றாலும் கேப்டன் தன் மீது வைத்திருக்கும் அளவற்ற அன்பு அவரை
நெகிழ்த்துகிறது.
காட்டுச்செடியாக
அழுக்கு உடையுடன் திரிந்த டெர்ஜுவால் கான்க்ரீட் நகரத்துக்குள் வாழமுடியவில்லை .
நகரத்தில் அவருடைய தோற்றம் வேடிக்கை பொருளாக, வாழ தகுதியற்றதாக கருதப்படுகிறது.
கேப்டனின் வீடு அவருக்கு சிறையாக மாறுகிறது. காட்டில் தன்னிச்சையாக வளரும் மரத்தை
போன்சாயாக வீட்டில் சுருக்கிவைத்திருக்கும் மனித மனம் அவருக்கு பதட்டத்தை
உருவாக்கி விடுகிறது. என்னதான் கேப்டன்
தன்னோடு அன்பாக பழகினாலும் அவர் வீட்டாரால் டெர்ஜுவை முழுமையாக புரிந்துகொள்ள
முடியவில்லை.
ஒரு நாள் வீடு
திரும்பும் கேப்டன் தன் அன்புக்குரிய காட்டுவாசி டெர்ஜூவை காணாமல் தேடுகிறார் .
நகரத்து மனிதர்களின் செயற்கையான வாழ்க்கை பிடிக்காமல், டெர்ஜு காட்டுக்கே
திரும்பிவிட்டதை அறிகிறார்.
சில காலம்
கழித்து காட்டில் கண்டெடுக்கப்பட்ட பனி சடலம்
பற்றிய தகவல் கேப்டனுக்கு வருகிறது.
சடலத்தில் கேப்டனின் அழைப்பு அட்டை அதில் இருந்ததாக கூறப்படுகிறது . கேப்டன் அங்கு
வந்து பார்த்தபின்தான் அது கொலை என
அறிகிறார். டெர்ஜுவை யாரோ தான் பரிசாக அவருக்கு வழங்கிய துப்பாக்கிக்காக,
கொலைசெய்திருக்கக்கூடும் என தெரிகிறபோது
அவரை கொன்றது தான் மட்டுமல்ல, செயற்கையான நகரமும்தான் என்பதாக உணர்கிறார்.
1971ல்
தயாரிப்பு வேலைகள் துவக்கப்பட்டு 1975ல் ஐந்து வருட தயாரிப்புக்கு பின்னரே
வெளியானது. குரசேவாவின் தயாரிப்பில் அதிக நாளை எடுத்துக்கொண்ட படம் இது . படப்பிடிப்பில்
ஒரு கட்டத்தில் பனிக்காலம் காரணமாக தொடரமுடியாமல்
போய் மீண்டும் வந்த போது புற்கள் அவ்வளவாய் வளராமல் இருக்க, மீண்டும் ஆளுயரத்திற்கு
கோரை புற்கள் வளர்வதற்க்காக ஒருவருடம் அவர் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தார்.
பலரும் அதைபோல புற்கள் நன்கு வளர்ந்த வேறு
இடத்தில் அல்லது செட் போட்டு படப்பிடிப்பை நடத்தலாம் எனக்கூற குரசேவா
மறுத்துவிட்டார். ஒரு வருடத்திற்குப் பின் மீண்டும் அதே போல புற்கள் வளர்ந்த
பின்தான் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது.
1975ல் வெளியான
இத்திரைப்படம் சிறந்த வெளிநாட்டு படங்களுக்கான ஆஸ்காரை வென்றது.
தோல்வியிலிருந்து
எப்படி மீள்வது என்பதற்கு அகிராவின் இந்த படம் ஒவ்வொரு இயக்குனருக்கும் பாடம் .
கலையின் மீதும்
மனிதத்தின் மீதும் தீராத காதல் கொண்டவர்களை
காலம் மேலும் மேலுமான உயரத்திற்கு அழைத்து செல்லும் என்பதற்கு, அகிராவின்
வாழ்க்கையும் டெர்ஜு உஜாலாவும் சிறந்த பாடம்.
ஆனால் அவருக்கோ
மகத்தான படைப்பு, மனம் அடங்கா நெருப்பாய் தகித்துக்கொண்டிருக்கும் நிலை.
- நன்றி : பல் சுவை காவியம் நவம்பர் 22016
No comments:
Post a Comment