Showing posts with label கவிதை என்பது யாதெனில். Show all posts
Showing posts with label கவிதை என்பது யாதெனில். Show all posts

February 21, 2011

கவிதை என்பது யாதெனில்... பாகம் 3


கவிதை என்பது யாதெனில்...
பாகம் 3

அஜயன்பாலா



உவமையும் பொருளும் ஒத்தல் வேண்டும்
1229 ;பொருளதிகாரம் ; தொல்காப்பியம்


”அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்துதணிந்தது காடு –தழல்
வீரத்திற் குஞ்சென்றும் மூப்பென்றுமுண்டோ
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்”

பாரதியின் மேற்சொன்ன வரிகளை எப்படி வகைப்படுத்தலாம் ?
செய்யுளா? அல்லது பாடலா? அல்லது கவிதையா?

எதுவாக இருந்தாலும் ஒரு விஷயம் மட்டும் உண்மை
இதற்குள் கவித்துவம் அபராமாய் உறைந்திருக்கிறது.

அதே சமயம் மரபுக்குட்பட்ட எல்லா செய்யுள்களிலும் அல்லது கவிதையிலும் கவித்துவம் இருக்குமா ?

அதேபோல் கவித்துவம் என்பதற்கான அளவுகோள்கள் என்ன
பாடுபொருளை நேரடியாக சொல்லக்கூடிய கவிதைகளை அல்லது செய்யுட்களை எப்படி வகைப்படுத்துவது என்றெல்லாம் கேள்விகள் நமக்கெல்லாம் எழலாம்

ஆனால் இதற்கான பதிலை அத்தனை திட்டமாக கூறிவிடமுடியாது

காலம்தோறும் கவிதையின் முகம் மாறிக்கொண்டேயிருக்கிறது

ஆனால் எந்த செய்யுள்களில் பாடலில் அல்லது கவிதையில் கவித்துவம்
தொக்கியிருக்கிறதோ அவை காலம் தோறும் மனிதமனத்தை இன்புறசெய்து தன்னையும் தமிழையும் காப்பாற்றிக் கொண்டுவருகின்ற்ன.

இதனை எளிமையாக சொல்வோமானால் பூக்கள் எல்லாவற்றிலும் வாசம் இருப்பதில்லை

ஆனால் வாசம் மிகுந்த பூக்கள் தன்னில் ஒருகவர்ச்சியை தக்கவைத்து மனித உணர்ச்சிகளோடு நெருங்கி அமர்ந்துவிடுகின்றன.

பூக்களின் வாசனை போலத்தான் கவிதையில் கவித்துவம் உறைநிலையில் வார்த்தைகளுக்குள் பொதிந்து வைக்கப்பட்டிருக்கும் கவிதைகள் காலங்கள் கடந்தும் தம் இளமையை தக்கவைத்துக்கொள்கின்றன.


கவித்துவம் என்பதை விளக்க வார்த்தைகளில்லை அது அனுபவம் சார்ந்தது.

மனித உணர்ச்சிகளினூடே இருவேறு அறிவுலகங்களுக்குள் நடக்கும் புணர்ச்சி என அதனை கூறலாம்

ஒருவன் தனக்கு தெரிந்ததை சில வார்த்தைகள் மூலம் கொடுக்கிறான்
இன்னொருவன் அத்னை வாசிப்பதன் மூலம் எடுத்துக்கொள்கிறான்

எடுப்பவனும் கொடுப்பவனும் வேறுகாலத்தில் வேறு வேறு வெளியில் இருக்கின்றனர்

எனவே சொற்கள் மூலம கவிதை அவர்களுக்கிடையில் பாலத்தை அமைத்து உணர்ச்சியையும் அனுபவத்தையும் கருத்தையும் கடத்துகிறது.

இது எவ்வளவுக்கெவ்வளவு ஒரு படைப்பாளனுக்கும் வாசிப்பவனுக்குமிடையில் ஒரு அணுக்கமான அளவில் நடைபெறுகிறதோ அவ்வள்வுக்கவ்வளவு அந்த கவிதை காலங்களை கடந்து செல்லும் தகுதியை பெறுகிறது.

அப்படி அணுக்கமாக கவித்துவத்தை கடத்தும் பாடல்களில் ஒன்று பாரதியின் மேற்சொன்ன அக்கினி குஞ்சொன்று பாடல்


ஒரு தேசத்தின் விடுத்லை உணர்ச்சி கொழுந்துவிட்டெரிந்துகொண்டிருந்த காலத்தில் அம் மக்களிடையே தேசப்பற்றையும் போராட்ட உணர்வையும் தட்டி எழுப்ப உருவாக்கப்பட்ட பாடல்

வந்தே மாதரம் சுதந்திர பள்ளு என பாரதி இதுபொன்ற பாடல்கள் பல எழுதியிருப்பினும் இந்த நான்கு வரி பாடல் காலத்தால் மெருகேறிக்கொண்டேவருவதற்கு காரணம் அதனுள் உறைந்து நிற்கும் கவித்துவம்

தான் சொல்லவந்த கருத்தை நேரடியாக கூறாமல் வேறொன்றை கூறி அதன் மூலம் மேலும் ஆழமாக நம் மனதில் அக்கருத்தை பதிய வைப்பதன் பொருட்டு இப்பாடலில் பாரதி பயன்படுத்திய சொல் மற்றும் காட்சி படிமங்கள் ஆகியவை கவித்துவத்தின் சாரத்தை கண்டுணர ஏதுவாக இருக்கின்றன.

இந்த படிபங்களினூடேதான் பாடலின் இறைச்சி பொருளானது வார்த்தைகளுடன் ஒட்டிக்கொண்டிருக்கிறது.


மேற்சொன்ன பாடலில் ஒரு விடுதலைக்கான போரில் இளையோனும் மூப்போனும் வேறில்லை உணர்ச்சியின் வேகம் ஒத்தகையது தான் எனகூற வரும் பாரதி அதற்கு உவமையாக அக்னி துண்டம் ஒன்றை குறிப்பிடுகிறார்.
பொறியாக இருந்தாலும் பெரும் சுவாலையாக இருந்தாலும் அக்னியின் வேகமும் அத்தகையது என கூறுகிறார்.

இது நேரடியான காட்சி உவமை. அத்தோடு நில்லாமல் அக்னி எனும் சொல்லோடு குஞ்சு என்ற பதத்தையும் சேர்க்கிறார் .குஞ்சு என்பது பொதுவாக பறவை குஞ்சுகளை குறிக்கும் சொல்


நெருப்புதுண்டத்தை அக்கினிகுஞ்சொன்று என சொல்வதால் அதற்கு ஒருபறவையின் சித்திரம் மெல்ல நம் மனதில் உருக்கொள்கிறது மேலும் அக்கினி குஞ்சொன்றை ... கண்டேன் எனும்போது நெருப்பின் அஃக்றிணைத் தன்மை முழுவதுமாக விலகி அத்ற்கு உயிர்த்தனமை கூடுகிறது . மேலும் அதை அவர் பொந்தில் வைத்தாக கூறும்போது அந்த அக்கினிக்குள் ஒருபறவையின் இயங்குதனமை முழுமையாக சேர்ந்துவிடுகிறது . பொந்து என்பது பறவைகளின் இருப்பிடம் என்பது ஏற்கனவே நம் அறிவில் பொதிந்த சேதியாதலால் வாசிப்பனுபவத்தில் நாமறியாமல் பறவையின் சிறகடிப்பு அதன் பறக்க தவிக்கும் எத்தனிப்பு இவையும் அந்த நெருப்புதுண்டத்துக்கு சேர வரிகள் மனதில் ஒரு உயிரியக்கத்தை துவக்கிவிடுகின்றன.

இப்படியாக கவிப்பிரவாகத்தினூடே குஞ்சு மற்றும் பொந்து சொற்களின் மூலம் ஒரூ உவமானம் தொடர்ந்து அதன் பொருத்தபாடான இன்னொரு உரிப்பொருளை சில வார்த்தைகள் மூலம் சேர்த்துக்கொண்டு இரண்டும் ஒன்றுடன் ஒன்றாக இறுகி ஒரு கட்டிடக்கலைஞனுக்கான தேர்ந்த நுணுக்கத்துடன் கவிஞனின் தன்னியல்பில் வார்த்தைகூட்டங்களுடன் பீறிட்டுவெளிக்கிளம்பிவரும்போது அவை படிமமாக நமக்குள் தேங்கி உயிரியக்கம் கொள்ள துவங்குகின்றன. .

அடுத்த வரி ”வெந்து தணிந்தது காடு” எனும்போது அந்த பறவையின் இயக்கத்துடன் கூடிய தன்னை அழித்து பெரும்படையை அழிக்கவல்ல ஒரு போராளியின் பிம்பம் நம்முள் நாமறியாமல் இறங்கிவிடுகிறது. ஆனால் மனதின் இத்தனை செயல்பாடும் உணர்ச்சி அளவில் நம்முள் ஆழத்தில் செயல்படுவதால் அதன் தாக்கத்தை மட்டுமே நாம் உணருகிறோமே ஒழிய அறிவின் மேல் தளத்தில் வைத்து இது எதனால் உண்டாகிறது என யோசிப்பதில்லை..

இப்படியாக ஏற்கனவே வாசகனுக்குள் இருக்கும் ஞாபக அடுக்குகளை சில வார்த்தைகளின் மூலம் பயன்படுத்திக்கொள்கிறபோது பிரதிக்குள் கவிதை இன்பம் ஒளிந்திருந்து நம்மை மீண்டும் மீண்டுமாய் வாசிக்க தூண்டிவிடுகிறது


அதேபோல இக்கவிதையில் சொல்லப்பாடத சேதி ஒன்று காட்சி இன்பத்தின் காரணமாக இருக்கிறது .

இக்காட்சி இன்பத்தை பற்றி சுலபமாக விளக்க திரைப்பட தொழில் நுட்பத்தை பயன்படுத்தி விவரிப்பது சற்று சுவாரசியமாகவும் இருக்கும் என நம்புகிறேன்
..
அக்கினிக்குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு.


எனும் முதல் மூன்று வரிகளில் பாரதி நான்கு காட்சிகளை சுட்டுகிறா.
ர்
1.”அக்கினி குஞ்சொன்று கண்டேன்”
முத்லாவது- மிட்ஷாட் -அக்கினி குஞ்சு

2.”அதனை அங்கொரு காட்டிடை”

இரண்டாவது- ஹை –வைட் ஆங்கிள் ஷாட்- பிரம்மாண்டமான காடு

3. ”பொந்தொன்றில் வைத்தேன்”
மூன்றாவது- க்ளோசப் ஷாட்- காட்டில் ஒருமரத்தின் பொந்து .அப்பொந்தில்
அக்கினி குஞ்சை ஒரு கை அங்கு வைக்கிறது

4.”வெந்து தணிந்தது காடு””

நான்காவது –”வெந்து தனிந்தது காடு”

இப்போது காமிராபுகைமூட்டத்தின் நடுவே மெல்ல இடமிருந்துவலமாக நகர்ந்தபடி அசைகிறது அந்தபிரம்மாண்டமான காடு இருந்த இடம் இப்போது
முழுவதும் கருகி சாம்பல் காடாக அணைந்தும் அணையாமலும் புகை மண்டிக் காண்ப்படுகிறது..காமிரா இப்போது உயரஎழுந்து கருகிகிடக்கும் மூழுபரப்பையும் காண்பிக்கிறது.

ஒரு முழு காடும் எரிகிறபோது உண்டாகும் பெரும் காட்டுத்தீயின்
சுவாலை, தீயின் வெம்மை ,அது எரிந்து அணைவதற்கு உண்டாகும் காலம் ஆகிய எத்னையும் ஆசிரியர்விவரிக்க வில்லை .

ஆனால் அந்த அனுபவம் நம்முள் ஒரு ஆழ்ந்த கனபரிமானத்தை தோற்று வித்து கவிதையின் பாடுபொருளான நமக்குள் உறைந்துகிடக்கும் வீரத்தையும் தேசப்பற்றையும் அது இயல்பாகவே விசுவரூபமெடுக்கசெய்வதாக இருக்கிறது.

(தொடரும்

March 18, 2010

கவிதையின் அரசியல் ;கவிதை என்பது யாதெனில் ; பாகம் 2







மொழிதான் மூலம் ;சமூகத்தின் ஆதாரம்
சொற்கள்தான் மொழியின் உடல்
பைபிளின் முதல் வாக்கியமே ஆதியில் சொற்கள் இருந்தது என்பதாகத்தான் இருக்கிறது.
ஆதலால் மனிதனை விட சொற்கள் முக்கியத்துவம் வாய்ந்தது
நம் வாய் தினமும் எத்தனையோ சொற்களை பயன்படுத்துகிறது.
மனமும் சொற்கள் உருவாக்கும் பிரதிமைகளை கொண்டுதான் சிந்திக்கிறது முடிவெடுக்கிறது
இந்த சொற்கள் அனைத்தும் பால்யத்திலிருந்து சூழல் மூலமாக நாம் உள்வாங்கிக்கொண்டவை.

இந்த சொற்கள் எப்படி தோன்றின
எந்த காலத்தில் எப்படியாக அவை நமக்குள் புழங்கிவருகின்றன என்பது குறித்தெல்லாம் நாம் யோசித்திருக்கமாட்டோம்
சரி ஒருநாள் திடீரென சொற்கள் அனைத்தும் இல்லாமல் போய்விட்டதாக ஒரு கற்பனை செய்து பார்ப்போம்
யோசித்துபாருங்கள நாம் எப்படி நமக்குள் உரையாட முடியும்
நம்மை விடுங்கள் ஒரு சமூகம் அத்ன் இதர உறுப்புகளான அரசு பள்ளி மருத்துவம் போன்றவை எப்படி இயங்க முடியும்
இப்போது சொல்லுங்லள் சொற்கள் நம்மை நம் வாழ்வை எப்படியாக தீர்மானிக்கின்றன என்று

ஓவ்வொரு காலத்திலும் மக்களின் வாழ்க்கை முறை கலாச்சாரம் ஆகியவை மாறிக்கொண்டேவரும்போது மொழியானது தடுமாறுகிறது மக்களின் பயன்பாட்டினூடே முன்னும்பின்னுமான நகர்தலில் சில சொற்கள் அழிந்தும் தேய்ந்தும் மறைந்தும் போகின்றன.
அதேசமயம் வேறு மொழி அதிகாரப்படுத்தும்போதும் அல்லது இயல்பான் கலப்பின் போதும் எந்த மொழியில் சொற்கள் வலுவாக உள்ளதோ அந்த மொழி நிலைத்தும் இதரமொழிகள் அழிந்தும் போகின்றன .
அச்சுக்கலையும் பதிப்புக்கலையும் மட்டும் தோன்றியிருக்காவிட்டால் சமஸ்கிருதம் ஆங்கிலம் உருதுவார்த்தைகளைத்தான் நாம் தமிழ் வார்த்தைகளாக நினைத்து இன்னமும் பேசிக்கொண்டிருப்போம் .

இப்படியாக சொற்களின் வளமைக்கும் அது சார்ந்த மொழிமற்றும் இனத்தின் வளர்ச்சிக்கும் நெருங்கிய தொடர்பிருக்கிறது

இன்னும் சொல்லப்போனால் சொற்களின் மூல்மாக மொழிதான் ஒருசமூகத்தை இயக்கிக்கொண்டிருக்கிறது


வெறும் சொற்களை வைத்துக்கொண்டு ஒருவன் எதையும் கட்டியமைக்க முடியாது

பத்துசொற்கள் ஓரிடத்தில் சேகரிக்க அதன் பின்புலனாக அர்த்தம் என்பது மிக அவசியமானது

வாரா நன்றும் பிறர் தீதும் தர

இப்படியாக தனித்தனியாக இருக்கும் போது வெறும் சொற்களாக இருக்கும் இவை நான்கும் சற்றுவரிசைமாற்றி

தீதும் நன்றும் பிறர் தர வாரா என ஒரு கவிஞன் தன் மனஎழுச்சிக்கு இசைவாக கோர்க்கும்போது அதன் பின்னணியில் உண்டாகும் அர்த்தம்தான் அந்த சொற்களுக்கு உயிரை தருகின்றன
அந்த இணைப்பு சொற்கள்மூல்மாக காலத்துக்கும் நிற்கும் அர்த்தம் மொழிக்கு ஒருபயன் என்றாலும் அதே சமயம் இரு நூறு ஆண்டுகள் அந்த சொற்கள் ஒருதேர்ந்த கவி மூலம் தன் உயிர்த்த்னமையை தக்கவைத்துக்கொள்கின்றன.
பாதுகாக்கப்படுகின்றன எனபதும் குறிப்பிடத்தகுந்த விடயமாகிறது.

இப்படியான அரசியல் முக்கியத்துவம் மிகுந்த சொற்களை உருவாக்குவதும் புத்துயிர்ப்பு செய்வதும் வளப்படுத்துவதுமான பணிகளை மேற்கொள்ளும் முக்கியமான சூத்திரதாரிதான் கவிஞன்

சமூகத்தின் மேற்பரப்பில் அரசியல்வாதிகள் சினிமாக்காரர்கள் பத்திரிக்கையாளர்கள் மருத்துவர்கள் வழக்கறிஞர்கள் இதர அலுவலர்கள்
செயல்படும் வேளையில் இவன் மட்டும் ஒரு ஆழ்த்தில் இருட்டில் அமர்ந்தபடி சோப்பு நீரால் சங்கிலியை கழுவும் கொல்லனை ப்போல மொழியை புதுப்பிக்கும் வேளையில் ஈடுபடுகிறான்.ஒரு தச்சனை போல மொழியை த்ன் படைப்பினூடக செதுக்கிக்கொண்டிருக்கிறான் .
சுருக்கமாக சொல்வதானால் கவிஞர்கள் மொழி எனும் கடிவாளத்தின் மூலம் சமூகத்தை இயக்கும் மாய சக்ரவர்த்திகள்

ஆனால் பொருள்சார்ந்து இயங்கும் மனிதவாழ்க்கையானது கவிஞனின்ன் முக்கியத்துவத்தை ஒரு போதும் அறிவதில்லை .

மொழிக்கும் கவிஞனுக்கும் சமூகத்துக்குமிடையிலான் இந்த செயல்பாடுகளுக்கு சரியான ஒரு உதாரணம்
புரட்சி எனும் சொல்

ருஷ்ய போரட்டத்தையும் அத்ன் விடுத்லைபற்றியும் எழுதப்போன பாரதி
அத்னை ஆஹாவென எழுந்ததுபார் ஒரு யுகப்புரட்சி என எழுதினான்
புரட்சி எனும் சொல்லே அத்ற்குமுன் இல்லை என தமிழ் ஆய்வாளர்கள் கூறுகின்ற்னர்

புரட்டு புரள் , தலைகீழாக மாற்றுதல், யுகத்தை தலைகீழாக மாற்றுதல்
யுகத்தை புரட்டுதல் என்பதுதான் பாரதியின் கவிதாவேசம் அகத்தூண்டலுடன் புரட்சி எனும் வார்த்தையை தன்னியல்பில் உருவாக்கிதந்திருக்கிறது

1925க்குமுன் அவர் வாழ்ந்த அக்காலத்தில் யாரும் இது புதியவார்த்தைஎன்றோ அல்லது இந்தவார்த்தையை கொண்டாடவேண்டுமென்றோ அறிந்திருக்கவில்லை . அன்றைய உலகம் அவரை கிட்டடதட்ட பைத்தியக்கராராகவே பார்த்தது.

பிற்பாடு வா.ரா போன்றவர்களின் கட்டுரைகள் மூலமாக பாரதி வெளியுலகிற்கு
தெரிய வந்தபோது அவர்து படிப்புகள் சமூகத்தின் மேல்தளத்துகுள் எட்டிபார்க்க துவங்கின.

ஆனால் இன்று அந்த புரட்சி எனும் வார்த்தை சமூகத்தில் படும் பாட்டை நாம் கண்கொண்டு பார்த்துக்கொண்டுதான் வருகிறோம்

இடைபட்ட காலத்தில் அந்த சொல் எப்படியெல்லம் நகர்ந்து இன்று இங்கு வந்திருக்கிறது என்பதை சமூக ஆய்வு நோக்கில் பார்க்கிற போது கவிஞனின் படைப்பு மனோ நிலைக்கும் அவனது மொழி சார்ந்த அரசியல்களுக்குமிடையிலான ஒருசம்ன்பாட்டை நம்மால் தெள்ளத்தெளிவாக உணரமுடியும்.

இது சொற்கள் எனுமளவில் மட்டுமல்லாமல் அவன் உருவாக்கும் கருத்துக்களுக்கும் இத்தகையதொரு முக்கியத்துவம் காலத்தால்
உருவாக்கப்பட்டு சமூகமாறுதல்களுகு வித்திடுவதை நாம் கடந்த இருப்பதந்து வருட இலக்கியம் மற்றும் அரசியல் செயல்பாடுகளை வைத்து கண்க்கிட முடியும்


கடந்த இதழ் கட்டுரையின் இறுதியில் கவிதையின் இறைச்சி பொருள் குறித்து எழுதியிருந்தேன். அதைப்படித்த நண்பரொருவர் இறைச்சி இறைச்சி என்கிறீர்களே அது என்ன என கேட்டார்.
அவருக்கு எப்படி இத்னை விளக்குவது என யோசித்தேன்
ஒரு கனியின் சதைப்பற்றான பாகம் போல எனலாமா?
என யோசித்தேன் ஆனால் அது முழுமையான அர்த்த்தை தருமா என்பது ஐயமே


ஆங்கிலத்தில் சப் டெக்ஸ்ட் என்பார்கள்

படைப்பில் வார்த்தைகளால் நேரடியாக சொல்லப்படாத ஒன்று
அதன் உள்ளூறை மறைந்து அந்த படைப்பை வாசிக்கும் போது நமக்குள் இன்பத்தை விளைவிக்க கூடியதாக இருக்கிறது.

இந்த திட்டமற்ற அருவமான அந்த அனுபவத்தைத்தான் இறைச்சி என்கிறார்கள்

சுலபமாக சொல்வதானால் இலக்கணங்களில் உவமம் எனக்கூறுகிறார்கள்

ஆனால் அதுவும் கூட சரியில்லை
உள்ளூறை உவமம் என வேண்டுமானால் கூறலாம்

சரி அப்படியானால் இத்னை இறைச்சி என ஏன் கூறவேண்டும்

அதுவும் நல்ல கேள்விதான் ..ஒரு வேளை இப்படியிருக்கலாம்

அசைவ உணவில் ஒரு குழல் போன்ற சிறு எலும்புத்துண்டத்தை வாயில்வைத்து உறிஞ்சுகிறபோது அத்னுள் ஒளிந்திருக்கும் சதைப்பற்றானது எப்படி நம் தொண்டைக்குள் பாய்கிறதோ அது போல கவிதை எனும் சொற்களால் ஆன குழலுக்குள் ஒளிந்திருக்கும் அனுபவம் எனும் இறைச்சியானது அத்னை வாசிக்கும் போது நம் மூளைக்குள் பாய்ந்து பெரும் இன்பத்தை தோற்றுவிக்கிறது

இப்படியாக வார்த்தைகளுக்கு பின் மறைந்திருக்கும் அந்த சதைப்பற்றான பாகத்தைத்தான் நாம் இறைச்சி என்கிறோம்

இதுதான் கவிதையின் மீதான வசீகரத்தை நமக்கு தருகிறது
அத்தகைய இறைச்சி மனதுக்குள் விளைவிக்கும் இன்பம் உலகின் வேறெந்த அனுபவத்தாலும் கிடைக்கபெறாமல் கவிதையினால் மட்டுமே சாத்தியம் பெறுவதால்தான் .அனைவரும் கால்ம்தோறும் கவிதை இன்பத்தை தீண்டி இன்புறுகின்றனர்

தொல்காப்பியரும் இந்த உள்ளூறை இறச்சியைத்தான் தன் இலக்கிய கொள்கையாக கூறுகிறார்.

இந்த உள்ளுறை உவமம் குறித்த அவரது பாடல் ஒன்று

உள்ளுறுத்த இதனொடு ஒத்த பொருள் முடிகென
உள்ளுறுத்த இறுவதை உள்ளுறை உவமம் –

எனும் அவருடைய அக்த்திணை பாடல் ஒன்றில் உள்ளுறை உவமம் கவிதையில் எப்படி கையாளப்படவேண்டும் எடுத்துரைக்கிறார்.

அவர் சொன்ன இலக்கணத்துகுட்பட்ட
நமக்கு நன்கு தெரிந்த பாரதியின் பாடல் வரிகளுக்குள் காண்ப்படும்
இறைச்சி பொருளைகாண்போம்
.
”அக்கினி குஞ்சொன்றை கண்டேன்
அதில் ஆங்கோர் காட்டிடை பொந்தொன்றில் வைத்தேன்
வெந்து தனிந்தது காடு ”

மேற்சொன்ன கவிதையில் சிறப்புக்கு காரணம் அதில் வெளிப்படுத்தப்படாத அதேச்மயம் உள்ளுறையாக்கிடக்கும் இறைச்சி

அந்த இறைச்சி எது எப்படியாக ஒளிந்திருக்கிறது என்பதை அடுத்த இஅதழில் விளக்குகிறேன்

February 15, 2010

கவிதை என்பது யாதெனில் ....கவிதை குறித்த புதிய தொடர்


கட்டுரை,படம்: அஜயன்பாலா



1. காலம்..கவிதை கவிஞன்

கவிதை பற்றியும் கவிதைகள் எழுதுவது பற்றியும் அதன் நோக்கம் செயல்பாடு ஆகியவை குறித்தும் காலம் தோறும் பல்வேறு கருத்துருவாக்கங்கள் உருவாகி வருகின்றன.

தமிழில் எப்படி தொல்காப்பியர் காலம் தொட்டே கவிதையின் அரசியல் மற்றும் அறிவியல்கள் பேசப்பட்டு வந்திருக்கிறதோ அது போல மேற்கிலும் கிரேக்க ,மொழியில் அரிஸ்டாட்டில் காலம் தொட்டே கவிதை குறித்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

ஒவ்வொருகாலத்திற்கும் கவிதையின் முகம் குரல் அவ்வப்போதான கலாச்சாரம் பண்பாடு பொருளதாரம் சமூக நிலைகளுக்கேற்றவாரு தன்னை உருமாற்றிக்கொண்டே வருகிறது.

இப்படியாக மாறிவருவது எல்லாம் அதன் வடிவமே தவிர
மனதின் நுகர்ச்சி இன்பம் தான் எல்லாகாலத்திலும் கவிதைக்கு ஆதார பின்புலனாக இருந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

புலன்களின் வழியிலான துய்ப்பை கடந்து மனித மனம் அறிதலின் மூலமாக துய்க்கும் இன்பம் பெரும்பாலும் கவிதையில் மட்டுமே ஆதாரமாக்கிடைக்கிறது.

மொழி வளத்திற்கும் மனிதனுக்குமிடையிலான முக்கியமான தொடர்பு புள்ளி இதுதான்.

இதுதான் மனிதனை அவனது பொருள்சார்ந்த உடல்சார்ந்த வாழ்விலிருந்து வேறுபடுத்தி மற்றவரைக்காட்டிலும் மேன்மையுள்ளவனாக மாறுவதற்கான இச்சையை அவன் மனதுள் நிகழ்த்துகிறது.

இப்படியான மேன்மையானவர்களுக்கான போட்டியில் இலக்கியம் ஒவ்வொருநாளும் பல்வேறுவிதங்களில் வளர்ந்து மொழியையும் அதுசார்ந்த சமூகத்தையும் வளப்படுத்தி வரலாற்றையும் பண்பாட்டையும் கலாச்சார அடையாளங்களையும் காலம் காலமாக காப்பாற்றி வருகிறது.

கவிதை ஏன்?

ஒரு கவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

கவிதை நாம் எழுதாவிட்டால் மொழி என்ன குடியாமுழுகிவிடும் .
அல்லது சமூகத்துக்கு அதனால் என்ன பயன்?

இது போன்ற கேள்விகளை பின் தொடர்ந்து பதிலை நாம் தேடிச்செல்கிற போதுதான் கவிதைக்கும் ஒருசாதாரண மனிதனுக்குமான தொடர்பை அது அவன் வாழ்வோடு எத்த்னை பிணைக்கப்ப்ட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் ஒருகவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

இதற்கான பதிலை ஒருவரியில் சொல்லிவிட முடியாது
அதன் பயன்பாடு பலதரப்பட்டது.

இந்த உலகம் ஒரு சினிமாநடிகனுக்கும் அரசியல்வாதிக்கும்
வங்கி ஊழியனுக்கும் , சாதாரண புடவை விற்பவருக்கும் கொடுக்கும் மரியாதையில் நூற்றில் ஒருவருக்குகூட கவிதை எழுதுபவருக்கு கொடுப்பதில்லை.

நான் பங்கெற்ற ஒருசினிமா கதை விவாதத்தின் போது அப்படத்தின் நாயகனுடைய கதாபத்திரம் குறித்து தீவிரமாக அலசப்பட்டது

அப்போது நான் ஒரு பேச்சுக்காக நாயகன் கவிதை எழுதுபனாக என சொல்லத்துவங்கியதுமே பலருடைய முகமும் மெல்ல தன் ஒளியை இழந்து சுணங்க துவங்கியது

காரணம் அவனுக்கு எந்த பொருளாதார மதிப்பீடும் இல்லை

ஒரு அரசியல்வாதி, திருடர்,இடைத்தரகர், உழைப்பை சுரண்டும் முதலாளி, ரிக்‌ஷா ஓட்டுனர், கண்டக்டர், தோட்டி ,கூலிதொழிலாளி, பால்காரர்

இப்படி ஒரு நாயகன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்த்னைக்கும் ஒரு ஓவியனாக கூட இருக்கலாம் .ஆனால் கவிஞனாக இருக்க மட்டும் நம் சினிமாக்கள் அனுமதிக்க மறுக்கின்றன

இத்தனைக்கும் சிலபடங்களில் ஒரு பண்க்கார நாயகன் கவிதை எழுதுபவராகவும் கதநாயகிக்கு அதனை படித்துக்காட்டுபவராகவும் காண்பிக்கிறார்கள் ஆனால்

கவிதையையே முழுநேர தொழிலாக செய்யும் ஒருவனை நாயகனாக காட்ட
நம் சினிமாக்கள் அச்சப்படுகின்றன

இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கவிஞனுக்கு ஸ்தூலமான திட்டமான ஒரு பொருளாதார பிம்பம் இல்லை

கோடீஸ்வரன் , முத்லாளி, குமாஸ்தா உழைப்பாளி எனும் இந்த நாலுவகைப்பட்டுக்குள் நாயகன் அடக்கப்படுகிறான்

ஓவியனுக்கு கூட பரிதாப்படக்கூடிய வறுமையாளன் அல்லது பொருள் பற்றி அக்கறை இல்லாதவன் என்ற பிம்பம் பொருந்திவிடுகிறது.அதன் மூலமாக உண்டாகும் சோகம் நாயகன் மீதான் இரக்கத்திற்கு உதவிசெய்கிறது

ஆனால் மொழிக்காக அதன் சக்க்ரங்களில் சிக்கி கவிதை எழுதுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் ஒருவனுக்கு இந்த சமூகம் தரும் மதிப்பீடு என்ன தெரியுமா?.......
பூஜ்யம்தான் .


அப்படியே அவசியம் வைக்க வேண்டுமானால் சினிமாவுக்கு பாடல் எழுதுபவனாக மட்டும் சேர்த்துக்கொள்கிறார்கள்

ஏனென்றால் அங்கு வருமானம் சேர்ந்துவிடுகிறது

கவிதயின் மூலமாக சாத்தியாமாகும் ஒரே தொழில் இது ஒன்றுதான்

ஆனால் இதன் இன்னொருபக்கம் பிரம்மாண்டமானது கற்பனைகெட்டா அதிசயங்கள் நிரம்பியது. வேடிக்கையானது

சொல்லப்போனால் கவிஞர்களும் மொழி சார்ந்த செயல்பாடுகளும் இல்லாவிட்டால் சமூக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

கவிதை வெளி

ஒரு சமூகத்தில் கவிதையின் பயன்பாடு என்ன என்பதை கவனிப்பதற்குமுன்
இதர கலைகளிலிருந்து கவிதை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பார்க்க்லாம்

எல்லா கலைகளுக்கும் இடமும் காலமும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற்ன. ஆடல் பாடல் சிற்பம் ஓவியம் இசை என எந்த கலைகளை எடுத்தாலும் அவற்றின் காலம் குறுகிய அளவினது மட்டுமே.

அதுவும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல்மாற்றங்களின் காரணமாக ஊடகங்களில் உண்டான வளர்ச்சி காரணமாக மட்டுமே இதில் சிலமாறுதல்கள்

ஆனால் இலக்கியத்தின் காலமோ எல்லைகளற்றது

யோசித்துபாருங்கள்

நமக்கு முன்னும்பின்னுமாக அது அனந்தகோடி வருடங்களை அதன் தகுதிக்கேற்றார் போல் ஒருகவிதை அல்லது இலக்கிய படைப்பு தக்கவைத்துக்கொள்கிறது.

எத்தனையோகோடிமனிதர்கள் இம்மண்ணில் அரசனாகவும் ஆண்டியாகவும் பிறந்தும் இறந்தும் போய்விட்டார்கள்

ஆனால் இன்றும் நம் மனதில் நிலைத்திருப்பது யார்

எத்த்னையோ ஆயிரம் மன்னர்கள் நம் சூழல் கண்டிருக்கலாம்

எத்தனையோ பேரழகிகள், செல்வந்தர்கள் அதிகாரம் படைத்தவர்கள் வாழும்போது பெரும் கர்வத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களை
இந்த மொழியும் சமூகமும் கண்டிருக்கலாம்

ஆனால் அவர்களில் எத்தனை பேரை நம் மொழியின் ஞாபகம் தக்க வைத்திருக்கிறது.

வள்ளுவர் காலத்தில் ஆண்ட மன்னனின் பெயர் என்ன

தொல்காப்பியர் காலத்தில் பேரும் புகழும் பெருமையுமாக வாழ்ந்தவர்கள் யார்யார்


கம்பரின் காலத்தில் வாழ்ந்த பேரழகன் யார்

ஆண்டாளைகாட்டிலும் அக்காலத்தில் வனப்புமிகுந்த பேரழகிகள் எத்தனை பேர்

பாரதியின் காலத்தில் அவரோடு வாழ்ந்தவர் எத்தனை கோடி


அத்த்னை பேரில் யாருடைய பெயரையாவது புத்தகங்கள் போற்றுகிறதா

காலம் எழுதும் கலவெட்டில் யார் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியங்களின் வெற்றி இதுதான் அது மனிதர்களையும் அவர்களது காலத்தையும் கடந்தது.

ஒருமொழி தன்னை நேசித்தவனை தன் காலத்தில் வஞ்சிக்ககூடும்

ஆனால் அவர்வர் நேசிப்புக்கும் படைப்பாக்கும் திறனுக்குமேற்ப வாழ்தலின் காலத்தை நீட்டி அவர்களையும் அவர்களது படைப்பையும் வரலாற்றின் தூண்களாக நிறுத்துகிறது.

அப்படித்தான் தொல்காப்பியனையும் ,வள்ளுவரையும் ,ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கமபனையும் , இளங்கோவடிகளையும் காளிதாசனையும் பாரதியையும் காலங்களை கடந்தும் தலைமுறைகளை கடந்தும் நூற்றாண்டுகளை கடந்தும் சரித்திரம் இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்க்கிறது.

இன்னும் இந்த த்லைமுறை கடந்தாலும் அடுத்ததலைமுறைகளில்லும் அவர்களே நிற்பார்கள் நாமெல்லாம் வெறும் புள்ளிவிவரப்பட்டியல்களில் மட்டுமே இடம்பெறுவோம் .

உயர்ந்த இலக்கியத்தின் காரணமாக நம்மில் சிலர் அடையும் இந்தபிரம்மாண்டம்தான் நம்மில் இன்னமும் அது தழைக்கவும் அதன் செயல்பாடு வழித்தடம் ஆகியவற்றை தீர்மானிக்கவும் காரணமாக இயங்கிவருகிறது.

ஒரு ஷேக்ஸ்பியர் ஒரு கம்பன் ஒரு வள்ளுவன் மற்றும் ஒரு பாரதி எழுதியதை போல இன்றும் நாம் அப்படியே எழுதினால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால் அவர்கள் அனைவருக்குள்ளும் உள்ள பொதுமையான பண்புதான் காலம்காலமாக எல்லா இலக்கியத்துக்கும் அடிப்படை

அந்த ரகசியத்தை அதன் மையத்தை கவிதையின் ஆதாரமான இறைச்சியை இக்காலகவிதைகளின் வழி ஊடுருவிபார்ப்பதுதான் இத்தொடரின் விருப்பமும் அவாவும் .

(தொடரும்)
நன்றி :”தாமரை” பிப்ரவரி இதழ்

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...