June 20, 2021

அகிரா குரசேவாவின் ஆகச்சிறந்த நான்கு திரைப்படங்கள்

 


உலக சினிமாவில் நீங்கள் எத்தனை படம் வேண்டுமானாலும்  பார்க்கலாம் ஆனால் அத்தனை படங்களும் சொல்ல வருவதை குரசேவாவின் நான்கே படங்கள் மொத்தமாய் உங்களுக்கு கற்றுக்கொடுத்துவிடும்

குரசேவா இயக்கிய அவரது 29 திரைப்படங்களுள் காலத்தால் அழியாத மகத்தான காவியங்களாக ஐந்து  திரைப்படங்களை விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர். மிகச்சிறந்த பத்துபடங்கள் என உலக சினிமாவின் எந்த ரசிகர் பட்டியலிட்டாலும் அவரது இந்த ஐந்து  படங்களில் ஏதவாது ஒன்று திரும்ப திரும்ப இடம்பெறும். அவை ரோஷ்மான் , செவன் சாமுராய் , இகிரு , ரெட் பியர்ட். டெர்ஜு உசாலா

இந்த ஐந்து தனித்தன்மை வாய்ந்த படங்களும் ஒன்றோடு ஒன்று முற்றிலும் மாறுபட்ட வகைப்பாட்டைச் சார்ந்தவை. இவற்றில் ரோஷ்மான், செவன் சாமுராய் இரண்டும் தொழில் நுட்பத்தின் அசாத்திய மேதமைகளை  உள்ளடக்கியவை. ரோஷ்மானின் விரிந்து அகன்ற காமிரா கோணங்களில் ஜப்பானிய நிலவெளிகள் நமக்குள் கற்பனைக் கெட்டாத  அமானுஷ்யத்தை முன்னிறுத்துபவை. மனித மனங்களின் இருண்மையை மட்டும் அவை போதிக்கவில்லை. காலமும் வெளியும் துண்டு துண்டாக சிதைக்கப்படும் போது உண்மையின் விசுவரூபத்தை வேறு வடிவத்தில் அனுபவமாக நம்  கண்முன் நிறுத்துகிறது . இந்த பிரம்மாண்டம் பேரிலக்கியங்களில் கூட காணப்பெறாதது. சினிமாவின் உச்ச பட்ச சாத்தியம் இதுதான். ரோஷமானில் பார்வையாளனும் ஒரு பாத்திரம் அவன்  உடல் இருக்கையில் இருந்தாலும் அவனும் படத்தின் ஒரு பாத்திரமாக  வெவ்வேறு காலத்தில் நுழைந்து உண்மைகளை அவனே  உள்வாங்குகிறான்/. பாத்திரங்கள் உளவியல் அவை பேசும் உண்மை ஒருபுறமிக்க  இயற்கை நம்மோடு பேசும் உண்மை வேறு ஒரு பிரம்மாண்டம் .  மரவெட்டி காட்டில் நடக்கும் போது மரங்களுக்கு நடுவே பயணிக்கும் சூரியனும் முதல் காட்சியிலும் இறுதிக்காட்சியிலும்  பிரம்மாண்ட வாயிலில் கொட்டும் மழையும் சொல்லும் உண்மைபேரிலக்கியங்களை தோற்கச்செய்ய வல்லது . சினிமா எனும் கலை ஏன் அனைத்து கலைகளினும் உயர்ந்தது என்பதற்கு ரோஷமானைவிட   சாட்சி வேறு எதுவும் இல்லை

 அதே போல செவன் சாமுராயில் பல காமிராக்களை கொண்டு படம்பிடிக்கப்பட்ட அதன் இறுதிக்காட்சியின்  படத்தொகுப்பு காலத்தை நம் முன் உறைவைத்து வெறும் கண்கள் முன் முப்பரிமாணத்தை திரையில் நிகழ்த்திக்காட்டுபவை. குதிரைகள் திரையிலிருந்து நம் கண்களை கடந்து மூளைகளுக்கப்பால் தடதடக்கும் பிரமிப்பை உண்டாக்குபவை.

 


அதே போல இகிருவும் ரெட் பியர்டும் உணர்வு ரீதியாக பெரு இலக்கியங்களின் சாதனையை அகத்தே கொண்டவை. ரெட் பியர்டில் பாலியல் தொழிலுக்கு பலியான சிறுமியை இளம் மருத்துவன் மீட்கும் காட்சி உலக சினிமாவின் அழுத்தமான தடம். சினிமா இலக்கியத்தை காட்டிலும் உண்னதமானது என்று சொல்லவைக்கும் தருணம். படத்தில்  உடல்கள் படும் வேதனைகளின் முனகல்கள் மனித இருப்பின் அவலத்தை நம்மிடம் முறையிடுகின்றன. அவற்றுக்கு சிகிச்சை செய்வது என்பது இறைவனை கடந்து செல்வது அல்லது இறைத்தன்மையை கடந்து செல்வது என்பதை மூத்த மருத்துவரான மிபுனே இளைய மருத்துவனுக்கு  விளக்கும் காட்சியில் வாழ்வின் மறுபக்கத்தை நமக்கு குரசேவா உணர்த்திவிடுகிறார். இதே போலத்தான் இகிருவில்   இறப்பதற்கு முன் இந்த உலகத்திற்கு  எதையாவது செய்துவிட வேண்டும் என விரும்பும் Kanji Watanabe பாத்திரமும் வாழ்க்கையில் நாம் செய்ய மறந்த காரியங்களை நமக்கு எச்சரித்து செல்கிறது.

இந்த நான்கு திரைப்படங்களையும் ஒரு சேர பார்க்கும் ஒருவன் இரண்டு விஷயங்களில் ஒரு சேர உயரத்தை அடைய முடியும். ஒன்று வாழ்வின் சகல உண்மைகளையும் அறியும் மேதமை, இரண்டு திரைப்படம் எனும் கலையின் உயர்ந்த கலா தரிசனம்.

இலக்கியம் கலை , தத்துவம் , உறவுகள் , ஆண்மீகம், காதல் என வாழ்க்கையின் அனைத்து பருண்மைகளிலும்  அவரது இந்த நானகு  திரைப்படங்கள் நமக்கு வாழ்வின் அனுபவத்தை உன்னத நிலைக்கு உணர்த்துகின்றன்  


ajayan bala

 

 

June 16, 2021

செம்மொழி சிற்பிகள் - என் எழுத்துல வாழ்வின் பெருமைமிக்க தருணம்

 


2010ஆம் ஆண்டு கோவை செம்மொழி மாநாட்டையொட்டி ஏதாவது புதியதாக செய்யவேண்டும் என அப்போதைய திமுக ஆட்சியின் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சராக இருந்த திரு. பரிதி இளம் வழுதி விரும்பி அவரது தனிச்செயலராக பதவி வகித்த திரு. நாச்சி முத்து அவர்களிடம் கூற திரு நாச்சிமுத்து என்னை தொடர்புகொண்டு ஆலோசித்தார். எங்களுடன் மறைந்த பெரியார் சாக்ரடீஸு அவர்களும் கலந்துகொள்ள நால்வரும் ஆலோசனை செய்து தமிழுக்காக தொண்டாற்றி மறைந்த அறியப்படாத அறிஞர்கள் நூறு பேரை தொகுத்து அதை உயர்தரத்தில் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வெளியிடலாம் என முடிவு செய்தோம். அதன் பேரில் ஆறு மாத கடும் உழைப்பின் பலனாக செம்மொழி சிற்பிகள் நூல் உருவாக்கம் பெற்றது. முதலில் நூறுபேரை தேர்வு செய்வதில் துவங்கி அவர்களை பற்றிய தகவல் திரட்டுவது வரை திரு. நாச்சிமுத்து மற்றும் பெரியார் சாகரடீசு அவர்களின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. அவர்கள் திரட்டிய செய்திகளை படித்து தொகுப்பதுதான் என் வேலை . ஒவ்வொரு அறிஞர் குறித்தும் அனைத்து புத்தகங்களையும் படித்து சாரமாக எடுத்து அதை ஒருபக்க அளவில் எழுதுவது கடுமையான பணி. காரணம் தகவல்கள் மிக்க பழமையான நூல்களில் படிக்கவே முடியாத நிலையில் இருந்தன. ஒவ்வொருவர் பற்றியும் முழுமையாக படித்து எழுதுவது ஒவ்வொரு பாறாங்கல்லாக சுமந்து மலையேற்றி இறக்கி வைக்கும் காரியமானது. இப்படியாக நூறுபேரையும் எழுதிமுடிக்க 6 மாதகாலம் ஆனது. பின் நான் எழுதியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க யாரை பணியமர்த்தலாம் என முயற்சித்த போது ரமேஷ் சக்ரபாணி முன் வந்தார். பின் ஒவ்வொரு அறிஞரையும் ஓவியமாக வரைந்து கட்டுரைகளின் முகப்பிலிடலாம் என முடிவுசெய்தபோது ஓவியர் பச்சை முத்து எங்களுடன் கைகோர்த்தார். ஒருவழியாக பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் புத்தகத்தை விஜயன் அழகான முறையில் வடிவமைத்து கொடுத்தார். புத்தகத்தை அச்சாக்கி முழுமையாக்கும் பணியில் பெரியார் சாக்ரடீசு மற்றும் நாச்சிமுத்து ஆகியோர் பொறுபேற்று சிறப்பான முறையில் வடிவமைத்து கொடுத்தனர் .

செம்மொழி மாநாட்டையொட்டி மேடையில் கலைஞர் கையால் இந்நூலை வெளியிடலாம் என முடிவு செய்தோம். ஆனால் ஏற்கனவே நிகழ்ச்சி நிரல் முழுமையாக திட்டமிட்ட படியால் மேடையில் வெளியிடமுடியாமல் தனிப்பட்ட முறை நிகழ்வில் கலைஞர் கையால் வெளியீடு செய்தோம். புத்தகம் சிறப்பாக உருவாக்கம் பெற்றாலும் இதை சந்தைப்படுத்துவது என்பது சிரமமாக இருந்தது. காரணம் 130 ஜி எஸெம் டிராயிங் பேப்பரில் ஒருகிலோ எடையுள்ள கார்ட் பவுண்டாக மெகாசைசில் புத்தகம் இருந்தபடியால் விற்பனைக்காக அங்காடிகளில் வைப்பதும் வெகு சிரமமாக இருந்தது. மேலும் தொடர்ந்து அதிமுக ஆட்சி காரணமாக எதிர்பார்த்தபடி நூலக ஆர்டரும் இல்லாமல் போக புத்தகம் வெறுமனே குறுகிய வட்டங்களில் புத்தக கண்காட்சிகளில் மட்டுமே விற்பனை செய்ய முடிந்தது. கடந்த எட்டு வருடமாக இப்படியாக இந்த எங்களின் கடுமையான உழைப்பு பயனில்லாமல் முடங்கிக் கிடந்த நிலையில் கடந்த திங்களன்று இந்த நூலுக்கு கிடைத்த முக்கியத்துவம் எங்களை பேரதிர்ச்சியிலும் இன்பத்திலும் ஆழ்த்தியது. திமுக தலைவர் திரு.மு..ஸ்டாலின் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்து அவருக்கு பிறந்தநாள் பரிசாக எதையாவது கொடுக்க விரும்பியபோது அப்போது அவர்கண்ணுக்கு நண்பர்கள் முன் வைத்த புத்தகம் எங்களுடைய செம்மொழி சிற்பிகள். இவ்வளவு அருமையான புத்தகம் எப்படி இத்தனை நாள் எங்களுக்கு தெரியாமல் போனது என திரு. ஸ்டாலின் அவர்கள் நெகிழ்ந்து உடனே எனக்கு மூன்று நூல்கள் வேண்டும் என கட்டளையிட திரு.செந்தில் மூலமாக என்னை தொடர்பு கொண்டனர். நான் அப்போது சென்னையில் இல்லை. மனைவியும் இல்லாத சூழலில் உதவியாளர் மூலமாக அலுவலகத்தில் யாருக்கோ பார்சலில் அனுப்ப காத்திருந்த இரண்டு பிரதிகள் மற்றும் நண்பர் மீரா கதிரவன் கைவசம் வீட்டிலிருந்த புத்தகம் என நூல்களை உதவியாளர் ஜேம்ஸ் மூலம் பெற்று அறிவாலயத்தில் ஒப்படைத்தோம் .

அப்போதுகூட நான் எதிர்பார்க்கவில்லை.மறுநாள் தினத்தந்தி நாளிதழில் முதல் பக்க கொட்டை எழுத்து செய்தியாக திரு. ஸ்டாலின் அவர்கள் சோனியா காந்தியை சந்தித்து கைகுலுக்கிய செய்தியுடன் எங்கள் புத்தகம் பரிசளித்த செய்தியும் இடம்பெற்றதை அறிந்தபோதுதான் மகிழ்ச்சி கடலில் திளைத்தேன். எட்டு ஆண்டுகளுக்கு முன் கடுமையாக உழைத்த உழைப்பு இன்று முக்கியத்தும் பெற்ற சம்பவம் ஒரு தேசிய விருது கிடைக்கப் பெற்றதற்கு ஈடான மகிழ்ச்சியை எனக்கும் எங்கள் குழுவுக்கும் உண்டாக்கியது.

உண்மையான உழைப்பு என்றும் வீணாகாது, ஒருநாள் அது மாலை சூடும் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு என்பதற்காக இதை பதிவு செய்கிறேன்.

இந்த புத்தக உருவாக்கதில் என்னோடு பங்களித்த திரு. நாச்சிமுத்து அவர்களுக்கு நன்றி. மேலும் இப்புத்தகம் உருவாக மூல காரணமான முன்னாள் அமைச்சர். திரு.பரிதி இளம்வழுதி மற்றும் புத்தகப் பணியில் கடுமையாக உழைத்த பெரியார் சாக்ரடீஸ் ஆகியோர் இன்று நம்மிடம் இல்லை. அவர்களை கண்ணீர் மல்க நன்றியுடன் நினைத்துக்கொள்கிறேன். மேலும் எனது எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த Chakrapani Ramesh மற்றும் ஓவியங்கள் வரைந்து தந்த Thillaikkannu Pachaimuthu ஆகியோருக்கும் வடிவமைத்த Vijayan Masilamani ஆகியோருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.


அஜயன் பாலா

இந்த படைப்பை உங்கள் வலைதளத்தில் காண்பிக்க

 

June 14, 2021

இவான் துரகனேவின் காதலி - த்ஸ்தாயெவெஸ்கி 200

  


ருஷ்ய இலக்கிய படைப்பாளிகளில்  மத்தளம் போல இரண்டு பக்கமும் அடி வாங்கியவர் இவான் துரகனேவ்.  இடதுசாரிகள் அவரை வலதுசாரி என்றும் வலதுசாரிகள் அவரை இடதுசாரி என்றும் கடுமையாக விமர்சித்தனர்

 ஆஸ்யா , முதல் காதல்  வசந்தகால வெள்ளம் போன்ற குறுநாவ்ல்களு,ம்   தந்தையும் தனயனும் போன்ற ஒப்பற்ற நாவலையும் எழுதி ருஷ்ய இலக்கியத்தில் தனக்கென தனி இடம் பிடித்தவர் துரகனேவ்  . குறிப்பாக அவரது மூமு சிறுகதை உலகப் பிரசித்தம். ஸ்பானிஷ் நாவலான  செர்வான்ஈடிஸ் எழுதிய டான்க்விக்ஸாடை  ருஷ்யாவில் மொழிபெயர்த்   ததும் அவருடைய இலக்கிய  சாதனைகளுள் ஒன்றாக கருதப்படுகிறது .  உலகப் புகழ் பெற்ற அமெரிக்க எழுத்தாளர்  ஹென்றி ஜேம்ஸ்   தன் இலக்கிய ஆசானாக டால்ஸ்டாயையோ தஸ்தாவெஸ்கியையோ குறிப்பிடவில்லை மாறாக   இவான் துரகனேவைத்தான் கொண்டாடுகிறார்.  இத்தனைக்கும் இருவரும் சமகால எழுத்தாளர்கள். என்ற போதும் துரகனேவ் இறந்த போது அவருக்கு எழுதிய அஞ்சலிக் குறிப்பில்  ,. துர்கனேவ் எழுதிய   மூமூ  சிறுகதை ருஷ்ய இலக்கிய உலகில்  படைப்பின் உச்சம் என வியக்கிறார் .

துரகனேவ்  இறந்த போது  அவரது மூளையை கணக்கிட்ட மருத்துவர்கள் அதன் எடையை பார்த்து ஆச்சர்யப்ட்டனர்  வழக்கமாக மனித  மூளையின்  சராசரி எடை 1336 கிராம்தான் . ஆனால் துரக்கனேவின் மூளை 2012 கிராம் இருந்ததாக வியக்கின்றனர்.

இப்படியான  எடைகூடுதல் மூளை காரணமாகாவோ என்னவோ அவர் தனிப்ப்ட்ட வாழ்க்கையில் உணர்ச்சிக் கொந்தளிப்புகள் அதிகமாக  இருந்துள்ளது. உலகிற்கே அன்பையும் அஹிம்சையையும்  போதித்த டால்ஸ்டாய்க்கே கோப,ம் உண்டக்கிய பெருமை  துர்க்கனேவுக்கு  உண்டு . ஒரு முறை  டால்ஸ்டாயின் படைப்பை மோசமாக விமர்சிக்கப்போக  உடனே  கோபத்தின் உச்சிக்கே சென்ற டால்ஸ்டாய் துரக்னேவை டூயல் எனும் ஒத்தைக்கு ஒத்தை  வீரம் காட்டும் பார்ம்பர்ய  போட்டிக்கு சவால் விட்டு  விட்டார் . பிற்பாடு நண்பர்கள் செய்த சமாதானத்தின் விளைவாக இந்த டூயல் ரத்து செய்யப்ப்ட்டாலும் இதன் பின் பதினெட்டு வருடகாலம்  இருவரும் பேசிக்கொள்ளாமலேயே இருந்தார்கள்    

டால்ஸ்டாய்க்கே கோபம்  இப்படி உண்டாக்கினாரென்றால் தஸ்தாயெவெஸ்கியை  மட்டும் விட்டாவைத்திருப்பார்.  அவரது படைப்புகளை ருஷ்ய  இலக்கியத்தின் மூக்கில் ஒட்டியிருக்கும் தேவையற்ற பரு என  துரகனேவ்  விமர்சித்தார்.

இத்தனைக்கும் தஸ்தாயெவெஸ்கி ஐந்து வருட சைபீரிய சிறைவிட்டு வெளியே வந்தவுடன் வாசித்த முதல்  புத்தகம் துரகனேவுடைய  ஸ்போர்ட்ஸ்மேன் ஸ்கெட்ச்சஸ் எனும் சிறுகதை தொகுப்புதான் .இதுதான் துரகனேவின் முதல் புத்தகமும் கூட ,அதை படித்துவிட்டு துரகனேவ் மீது மிகுந்த மரியாதை  கொண்டிருந்தார் .டால்ஸ்டாக்கும் துரகனேவின் மிகச்சிறந்த இலக்கியப்பங்களிப்பாக இந்த முதல் தொகுப்பைத்தான் கொண்டாடுகிறார். இந்த் ஸ்போர்ட்ஸ் மேன் ஸ்கெடசஸ் சிறுகதையைத்தான் பிற்பாடு புகழ்பெற்ற ருஷய் இயக்குனர் ஐஸன்ஸ்டைன் BEZIN MEDOW 1939 என்ற திரைப்படமாக எடுத்தார்.

அப்படி அந்த முதல் தொகுப்பை  வியந்த தஸ்தாயெவெஸ்கியோடு  காலப்போக்கில்  இவாந்துரகனேவ் கடுமையான் இலக்கிய விமரசனங்களை வைக்க இருவருக்கும் முட்டல் அதிகம் வரத்துவங்கியது . . ருஷ்ய தேசியத்தின் மீது அளவற்ற மதிப்பு கொண்டிருந்த தஸ்தயெவெஸ்கிக்கு பிற்பாடு துரகனேவ் எழுத்துக்கள் போலித்த்ன்மையாக தெரியத்துவங்கின  ஒருமுறை துர்கனேவின் ஸ்மோக நாவலுக்கான் விமரசனத்தின் போது  தஸ்தாயவெஸ்கி  நான் உனக்கு ஒரு டெலஸ்கோப் வாங்கித்தருகிரேன் ருஷ்யாவின்  வேதனையை பார்த்து எழுத உனக்கு  வசதியாக  இருக்கும் என கிண்டலாக எழுதினாராம் .

 தஸ்தாயேவெஸ்கி  அப்படிக் கூறக் காரணம் துர்கனேவ் அப்போது பிரான்சில் ஒரு காதலியின் வீட்டில்  ராஜ வாழ்க்கை வாழ்ந்துகொண்டே ருஷ்ய குடியானமக்களின் வாழ்க்கையை ஸ்மோக் நாவலில் எழுதியிருந்தார்..   இதை இடித்துரைக்கும் விதமாகத்தான்   தஸ்தாயேவெஸ்கி அப்படிக்கூறினார்

பவ்லின் வெர்தத்


துர்கனேவ் பிரான்சில் தங்கியிருக்க காரணமான  அந்த காதலி  மிகப்பெரிய செல்வச் சீமாட்டி.  பெயர் பவ்லின் வெர்தத்.  பேரழகி மிகச்சிறந்த ஓபரா பாடகி மற்றும் இசை தயாரிப்பளர் .. பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்   இவருடைய புகழுக்கு காரணம்  அழகா திறமையா என பட்டிமன்றமே வைக்கும் அளவுக்கு பேசப்பட்டவர் . .ஆனாலும் தன்னை விட 20 வயது மூத்த லூயிஸ் வெர்தாத்  என்ற பணக்காரனை திருமணம செய்துகொண்டார். அவரும் ஒரு பொறுப்புள்ள நிர்வாகியாக அவளுடைய குடும்பம் குழந்தை மற்றும் தொழில் அனைத்தையும் பார்த்துக்கொண்டு தொடர்ந்து அவளுடைய கச்சேரிகளை ஒழுங்கு செய்து அவள் புகழுக்கு வெளிச்சம் கூட்டும் பணியை ஒரு கடமையாக செய்துவந்தார்

பவ்லின்  குரல் வளம் பற்றி சொல்லும் போது  C3 முதல் F6  வரை என மேற்கத்திய இசை அளவு சொல்கிறார்கள் ,  குரல் வளத்துக்கு நம்மூரில் கட்டை  கணக்கு போல மேற்கத்திய இசையில்  ஒரு அளவு கோல் அது . . , இந்த அபார குரல்வளம்  ப்ளஸ்  பேரெழில் தோற்றம் இந்த  இரண்டும் பவ்லின் வெர்தாத்துக்கு  உலகம் முழுக்க ரசிகர்களை கொண்டு வந்து சேர்த்தது.  லண்டன் ஸ்பெயின்  ஜெர்மணி என ஐரோப்ப முழுக்க சுற்றுப் பயணம் செய்தார். எங்கு போனாலும்  அந்த தேசத்து  இசை மேதைகள் செல்வச் சீமான்கள்  அனைவருமெ அவருடன் நெருங்கிய  நடபு வைத்துக் கொள்ள  தவம் கிடந்தனர்  . ஆனால் இவர்களுகெல்லாம் கிடைக்காத பேறு ருஷ்ய பயணத்தின் போது துர்கனேவுக்கு கிட்டியது .

 முதல் முறையாக  துர்கனேவ் மாஸ்கோவில் பவ்லின் வெர்தாத்தின் இசை  நிகழ்ச்சிக்கு சென்றார். அந்த முதல் நீகழ்விலேயே அவளது தீவிர ரசிகனாக மாறினார். பின் அவர் தங்கியிருந்த விடுதிக்குச்சென்று   நேரிடையாக  சந்தித்து பேசப்போக இருவருக்குள்ளும் எப்படியோ காதல் பற்றிக்கொண்டது . இப்படி ஒரு அழகி பணக்காரி திறமையானவள் எப்படி  ஒரு எழுத்தாளனிடம் அதுவும் எப்போதும் கடுகடுவென்ற முகத்துடன் இருப்பவனுக்கு   காதலியாக மாறினாள்  என்பது அக்காலத்தில் மாஸ்கோ அரச குடும்பங்கள் பலரையும் இம்சித்த வரலாற்று புதிர்?

இவர்களின் இந்த காதல் கதை பற்றி ஆரயச்சி செய்து அன் அபீசியல் மேரேஜ்   (UNNDFFICIAL MARRIAGE ) என்ற நாவலை  ஜோயி டேவிடோ என்பர் எழுதியிருக்கிறார் . அது அமோசான் கிண்டிலில் இப்பவும்  கிடைக்கிறது

ருஷ்யப் பயணம் முடிந்து ஓபரா அழகி ஊருக்கு திரும்ப துர்கனேவ் சிறிது காலத்தில்  பிரான்சுக்கு காதலியைத் தேடிச்சென்றார் . பிரான்சில் பேடன் பேடன் எனப்படும் அந்த இடத்திலிருந்த அரண்மனையில் அவள் கணவன் குழந்தையோடு வசித்து வந்தாள் . திருமணமே செய்து கொள்ளாத துர்கனேவ் தன் வாழ்க்கையின் ஏழு வருடங்களை  அந்த அழகியின் அருகிலேயே வசிப்பத்ற்கும் அவரது  குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்கும் செலவிட்டு வந்தார் . இத்தனைக்கும் அன்று துரகனேவ் ருஷ்யாவில் நாடறிந்த  எழுத்தாளர் ஆனாலும்  தான் இப்படி ஒரு  பாய்பெஸ்டியாக பிரெஞ்சு பேரெழகிக்கு  வாழ்க்கைப் பட்டதைப்ப ற்றி   அவருக்கு வாழ்நாள் முழுக்க எந்த குற்றணர்ச்ச்சியும் இல்லை . உண்மையான காதலனாக வாழ்ந்த திருப்தியே அவருக்கு இருந்துள்ளது

மிதமான  தட்பவெட்ம, இயறகை எழில் சூழ்ந்த நிலப்பரப்பு , மற்றும் ரூலெட்  சூதாட்டம் ஆகியவை காரணமாக  டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி  ஆண்டன் செகாவ் ஆகியோர் வேறுவேறு காலகட்டங்களில் பேடன் பேடன் சுற்றுப்பயணம் செல்வது வாடிக்கை

டால்ஸ்டாய் தஸ்தாயெவெஸ்கி இருவருமே ரூலெட்  எனும் சூதாட்டப்பிரியர்.  டால்ஸ்டாய் பெரும் பணக்காரர் ஆனாலும் விடாப்பிடியாகக இழந்த பணத்தை திறமையாக ஆடி மீட்டுவிடுவார்

ஆனால் தஸ்தாயெவெஸ்கிக்கொ பையில் கைப் பணமும் குறைவு .அதே சமாயம் கையிலிருக்கும் சொற்ப பணத்தையும்  அடிக்கடி கோட்டை விடவும் செய்வார்

சூதாடி நாவல் எழுதிய கையோடு  புதிதாய் மணம் செய்த காதல் மனைவி அன்னா ஸ்ரினிகவுடன்  பேடன் பேடன் வந்தவர் பல்வேறு கேளிக்கை விடுதிகளில் உழன்று  சூதாட்டத்தில் மொத்தமாக  இழந்து விட்டார். மனைவியின் கம்மல் கோட்டுப்பொத்தான் எதையும் விட்டு வைக்கவில்லை . அனைத்தையும் அடகு வைத்து அதையும் இழந்துவிட்டார் . ஒரு கட்டத்தில்   மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்ட நிலையில் அவருக்கு அப்போது நினைவில் வந்த பெயர் .இவான்  துர்கனேவ் . நண்பரும் சக எழுத்தாளனுமான  துரகனேவ் அதே நகரில்  காதலியின் அரண்மனை வீட்டில்  வசித்து வருகிறாரே ஒருமுறை போய் பணம் கேட்கலாமே என அன்னாவுடன் சென்றிருக்கிறார்.

ஏற்கனவே  பணமில்லை என்பதால் இருவரது தோற்றமும் எப்படி இருந்திருக்கும் என்பதை சொல்ல வேண்டியதில்லை  இப்படி ஒரு மோசமான  நிலையில் துரகனேவ் வீட்டு வாசலில் பணம் கேட்டுசென்ற போது அவரது இந்த வறுமை கோலம் காரணமாகவே அரண்மனைக்குள் அனுமதிக்கப்படாம;ல் வெளியே நிற்க வைக்கப்பட்டது மட்டுமலலமல் கடைசி வரை வெளியே வரமால் துரகனேவ் தஸ்தயெவெஸ்கியை அவமானபப்டுத்தியதாக தனது summer in baden baden   நூலில் leyonid Cypkin   எனும் ருஷ்ய எழுத்தாளர் எழுதியிருபதாக அந்நூலைபற்றிய இணைய தகவல்கள் குறிப்பிடுகின்ற்ன

 பிறகு தஸ்தாயெவெஸ்கி ருஷ்யா திரு,ம்பியதும் இனி சூதாடுவதில்லை என மனைவிக்கு சத்தியம் செய்து கொடுத்து சாகும்  வரை அந்த சத்தியத்தை மீற வில்லை என்று அன்னா தன் கணவரைப்பற்றிய நினைவுக்குறிப்புகளில் குறிப்பிடுகிறார்

இதே சமயம் துரகனேவ்  பவ்லின் வெர்தாத் ஆகியோரது ஏழு வருட தேனிலவு  வாழ்க்கையும் 1870 -71 ஆம் ஆண்டு  பிரான்ஸ் பிரஷ்யா போரை முன்னிட்டு முடிவுக்கு வந்தது. அவரும் பிரான்சை விட்டு வெளியேறி லண்டன் சுவிட்சர்லாந்து போன்ற  ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துவிட்டு  மீண்டும் தாய் மண்ணுக்கு திரும்பினார்

இறுதியாக இந்த இரு எழுத்தாளர்களின் பகையும்  ருஷ்யாவில் 1880ம் ஆண்டு மாஸ்கோவில் நடந்த புஷகின் சிலை திறப்பு விழாவில் தஸ்தாயெவெஸ்கி ஆற்றிய மகத்தான உரைக்கு பின் முடிவுக்கு வந்தது . அந்த அரங்கில் முழு உரையையும் கேட்ட இவான் துரகனேவ் தஸ்தாயெவெஸ்கியை கட்டிபிடித்து ருஷ்யாவுக்கு கிடைத்த மகாத்தான எழுத்தாளனய்யா நீர் என கண்ணீர் மல்க சொன்னதுடன் அவர்கள் பகை முடிவுக்கு வந்தது. 

-அஜயன் பாலா

15/06/2021

 

அகிரா குரசேவாவின் ஆகச்சிறந்த நான்கு திரைப்படங்கள்

  உலக சினிமாவில் நீங்கள் எத்தனை படம் வேண்டுமானாலும்   பார்க்கலாம் ஆனால் அத்தனை படங்களும் சொல்ல வருவதை குரசேவாவின் நான்கே படங்கள் மொத்தமாய் உ...