Showing posts with label முன்னுரை. Show all posts
Showing posts with label முன்னுரை. Show all posts

February 28, 2017

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள் -தமயந்தியின் ” கொன்றோம் அரசி” சிறுகதைத் தொகுப்பிற்கான முன்னுரை

பூக்கள் வியர்க்கும் உதிரத்துளிகள்



2010-ல் ஹைதரபாத் இலக்கிய விழாவில் கலந்துகொள்ள நேர்ந்தபோதுதான் தெலுங்கு இலக்கிய உலகின் .காத்திரமான பெண்ணிய சிந்தனையாளரும் சிறுகதை எழுத்தாளருமான வோல்காவோடு கொஞ்ச நேரம் பேச சந்தர்ப்பம் கிட்டியது.  பெண்ணின்  முகம், கண், காது, மூக்கு, மார்பு, கூந்தல், யோனி, மற்றும் தொடை என  ஒவ்வொரு பாகத்தின் பெயரிலும் ஒரு கதை எழுதி ஒரு சிறுகதைத் தொகுப்பு வரப்போவதாகc சொன்னார். அப்படி வந்தால் அது உண்டாக்கும் அதிர்வை குறித்து யோசித்தேன்.  ஐந்து வருடமாகிவிட்டது அந்த தொகுப்பு வந்துவிட்டதா இல்லையா தெரியவில்லை. ஆனால் தமயந்தியின் இந்த தொகுப்பை வாசிக்கும்போது அந்த அதிர்வை உணரமுடிகிறது.

மொத்தம் ஏழு வீடுகளைக்கொண்ட தொகுப்பு இது . ஒவ்வொரு வீட்டின் ஜன்னலையும் தன சிறுகதைகளின் வழி  நமக்கு திறந்து காட்டுகிறார் தமயந்தி . வரிகளுக்கப்பால் தெரிவது எல்லாம் வேதனையும் துயரும் கொப்பளிக்கும் கண்கள். உடன்  ஆற்றாமை கோபம் ,காதல் அழுகை காமம்.  என பெண்களின் பல்வேறு உச்ச தருணங்கள்.   ஒவ்வொரு ஜன்னலை கடக்கும் போதும் பெரும் அதிர்விலிருந்து விடுபட முடியாமல் நம்நெஞ்சை பிசைந்துவிடுகிறது. . இந்த ஏழு வீடுகளில் ஏதோ ஒன்று நம்முடையதகாவும் இருக்கிறது என்பது தான் இத்தொகுப்பின்சிறப்பு .

இவை பெண்களின் கதைகள் மட்டும் அல்ல ஆண்களின் கதைகள். ஆண்கள் படித்து உணரவேண்டிய கதைகள் சில கதைகள் ஆண்களின் முகத்தை அறையக்கூடும் முகத்தில் எச்சிலை உமிழக்கூடும்  முன்னர் தாய் தங்கை சகோதரி மனைவி சக தோழிக்கு செய்த துரோகங்களை நினைவுறுத்தகூடும் குற்றவுணர்ச்சியில் ஆழ்த்தக்கூடும் அவ்வகையில் இக்கதைகள் சமூகத்தில் சிறந்த சுத்திகரிப்பை நிகழ்த்துகின்றன .\அது போல பெண்ணியம் என்பது ஆண்களின் மீதான வெறுப்பை கட்டமைப்பது என்பதை கடந்து பெண்ணின் பாடுகளை வலிகளை சொல்லி  தந்தையை காதலனை  கைப்பற்றி அவர்களுக்கு தங்கள் ப்ரசனையை சொல்லி புரியவைப்பதகவும் .சில கதைகள் அமைந்திருப்பது தொகுப்பின் சிறப்பு .


மங்காக்கா கங்கம்மா ,வசந்தி, வத்சலாவின் தோழி  என வெவ்வெறு பாத்திரங்களில் வந்தாலும் எல்லாமே ஒரே முகம்தான். .அவர்களது உள்ளுணர்வும் வெடிச்சிரிப்பும்  வெடுக்கென துள்ளி எழுந்தாடும் ஆங்காரமும் ஒன்றேபோலத்தான். திணற திணற நம் முகத்தில் ரத்தசேற்றை வீசுகிறார்கள்.சக்தியின் பிரம்மாண்ட பிம்பத்தின் முன் ஆணை சிறுபுள்ளியாக உணரவைத்து ஒடுங்கி நிற்க வைக்கிறார்கள்.

அவள் அப்படித்தான் மஞ்சு போல தன்னை அளவெடுக்கும் ஆணின் தந்திரங்களை மன  ஓட்டத்தை குறுக்கு கேள்வியால் அதிரவைக்கும்போதும் (.மிச்சம் ) கட்டிலில் மூத்திரப்பை சுமக்கும் வயதில் காதலை மீட்டெடுத்து கட்டி தழுவும்போதும் (தடயம்). துரோகம் செய்துவிட்டு வந்தது மட்டுமல்லாமல் அம்மாவிடம் வெட்கமில்லாமல் சிக்கன் கேட்டு ஆண்மையை நிரூபிக்கும் தந்தையை புரட்டி எடுக்கும்போதும் (செருப்பு) பாத்திரங்கள்  கதை என்னும் சட்டகத்தை மீறி நம்மை வியக்க வைக்கின்றன.

 எதையாவது சொல்லிவிடவேண்டும் என்ற நிர்பந்தங்களை அதுவாக அறுத்துக்கொள்வது இக்கதைகளின் சிறப்பு.. ஒவ்வொரு கதையிலும் வெளிபூச்சில் உணர்வலசலாக ஒரு கதையும் மையப்ர்சனையாக இன்னொரு கதையும் நமக்குள் இறங்குகின்ற்ன . இரண்டு கதைகளையும் முடிச்சிடும் புள்ளிகளும் இயல்பாக இருப்பதும் தமயந்தியின் விசேஷகுணங்கள். செருப்பு கதையில் செருப்புதான்  மேலோட்டமான கதை நகர்த்தும் பொருளாக இருப்பினும்  அம்மாவையே அடக்கியாளும் மங்காக்காவின் ஆளுமைத்திறனும்  ஆண் எனும் ஒற்றை அதிகாரகட்டுக்குள் உடைந்து நொறுங்கும் பெண் சித்திரங்களடங்கிய குடும்பமும்  இன்னொரு கதை.

அதுபோல மிச்சம் கதையில்  மாத சுழற்சி சரியான நேரத்தில் வராமல் போவதால் ஒரு பெண் எதிர்கொள்ளும் ப்ரசனைகள் பற்றிய கதையில் அலுவலக அரசியலும் பெணணையே பெண்ணுக்கெதிராக பயன்படுத்தும் ஆணிய அரசியலும் நமக்குள் கதையாக ஊடுருவி கடக்கிறது..தமயந்தியின் கதை சொல்லலில் ஒரு அனாயசம் அலட்சியம் ஒற்றை வரி உரையாடல்கள் வழி நகரும் கதைகளில் ஆங்காங்கு நிகழும் மின்னல் அதிர்வுகள் தமயந்தியின் தனித்தன்மை.

”வாழ்க்கையில என்ன நடந்தாலும் முருங்கக்காய் தோலை சவச்சிட்டு சாவணும் என்ன ருசி “ (கொன்றோம் அரசி )
இப்படி ஒரு பேச்ச் நம்ம அந்த ஆண்டவன் பேச வச்சிட்டாரு இல்லை எப்படி ?
.உன் புருஷன் நலமா ?
உன் பொண்டாட்டி எப்படி நீயும் நானும் கேட்கறா மாதிரி (தடயம்)

இப்படியாக ஒவ்வொரு கதையிலும் உரையாடல்கள் அசத்துகின்ற்ன
வெறும் பெண்னியத்தோடு நில்லாமல் தமயந்தியின் கதைகள் தீவிரமான அரசியலையும் பேசுகின்றன. சமூக மறு கட்டமைபில் அம்பெத்காருக்கு பிறகான செயல்பாடுகள் குறித்தும்  விவாதம் எழுப்புகின்றன. காலம் முழுக்க மனித மலம் சுமந்து சமூகத்தின் ஆரோக்கியத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணிப்பவர்களின் மகன்கள்  படித்து பட்டம்பெற்று வேலைக்குவரும்போது எதிர்கொள்ளும் வலிகளும் வேதனைகளும் சொல்லப்படுகின்றன. கொன்றோம் அரசியை சம கால அரசியல் கதை . இக்கதை யார் யாரை மையப்படுத்துகிறது என்பது வெளிப்படை. . கதைக்குள் ஊடாடும் அதி புனைவு ஆசிரியருக்கு அதிக சுதந்திரத்தை கொடுத்திருந்த போதும் திரும்ப திரும்ப மரணத்தை பற்றியே அலைவதை தவிர்த்து இன்னும் பல சுவாரசியமான பக்கங்களுக்குள் நகர்ந்திருக்கலாம் .

தொகுப்பில் இரண்டு கதைகள் ஆணை மையப்படுத்தியவை அல்லது ஆண்களின் அக உலகம் சார்ந்தவை . ஒன்று பி பி ஸ்ரீனிவாசும் ரோஜா மலரே ராஜகுமாரியும் , இன்னொன்று பீப் பிரியாணி ..இரண்டில் பீப் பிரியாணி .குறிப்பிடத்த்ககுந்த சமகால அரசியலை மையப்படுத்திய கதை. .என்னதான் பொதுவெளியில் கட்டிப்பிடித்து காதலிபோல நண்பர்கள் தழுவிக்கொண்டாலும்  குடி அமர்வுகளீல் சாதிய உணர்வு வெளிப்படுவதும் தன் சாதிபெருமையை  ஒரு ஆதிக்க சாதியன்  பேசி ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவன் மேல் வன்முறையை காண்பிப்பதும்  ஆண்களின் உலகில் அடிக்கடி நிகழக்கூடிய ஒன்று. புற உலகில் கவிஞராகவும் எழுத்தாளராகவும் பெயர் பெற்ற பலரும் இது போன்ற குடி அமர்வுகளில் தங்களின் கோரப்பற்களை காட்டுவதை கண்டு பலமுறை அதிர்ச்சியடைந்திருக்கிறேன் . பீப் பிரியாணி கதை இந்த அக உலகை துல்லியமாக சித்தரிக்கிறது.

கவிதை மற்றும் நாவல் களங்களில் அதிகம் செயல்படும் அளவிற்கு பெண் எழுத்தாளர்கள் விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய அளவிலேயே சிறுகதைகளில் புழங்கி வருகின்றனர்  .அதிலும் பெண்களின் வலிகளை அரசியலை பேசும் பெண் சிறுகதை எழுத்தாளர்கள் மிகக்குறைவு
.
எழுத்துத் துறையில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஓய்வில்லாமல் இயங்கி வருவதுடன்  எண்ணிகை அளவில் தரமான பல நல்ல கதைகள் எழுதியவர் என பார்த்தால் சூடாமணி அம்பைக்கு பிறகு தமயந்தி மட்டுமே கண்ணுக்கு தெரிகிறார்.
இது வரை எழுதிய சிறுகதைகளில் தேர்ந்தெடுத்த +கதைகள்  மொத்த தொகுப்பாக தமயந்தி கொண்டு வரவேண்டும் .

இதை நூலாக்கம் செய்வதில் முனைப்பு காட்டி பதிப்பித்து தரும் தமிழின் ஆகச் சிறந்த கவிஞராக அறியப்படும் கவிஞர் குட்டி ரேவதி அவர்களுக்கும் . தற்காலத்தில் நல்ல சிறுக்தையெழுத்தாளனாக வளர்ந்து வரும் அன்பு தம்பி அகரமுதல்வனுக்கும் என் பூங்கொத்தும் வாழ்த்துக்களும்  
                                                      அஜயன் பாலா
04/02/2017


November 4, 2016

மௌனன் யாத்ரீகா வின் கவிதை தொகுப்பு நெல்லில் கசியும் மூதாயின் பால் – முன்னுரை– அஜயன் பாலா.

   இயற்கையை கொண்டாடும் கவிதைகள்


மௌனன் யாத்ரீகா வின்   கவிதை தொகுப்பு
நெல்லில் கசியும் மூதாயின் பால்
முன்னுரைஅஜயன் பாலா.

  ” ற்கனவே அறியப்பட்ட கவிதைகளிலிருந்து தப்பிப்பதும், வார்த்தைகளால் தைக்கப்பட்ட புதிய ஆடையை உருவாக்குவதும் கவிஞனின் வேலை.இத்தொகுப்பு அதைச் செம்மையாக செய்துள்ளதாகக் கருதுகிறேன்”
******************************************************************************************
     விதையின் இன்பம் வேறெவற்றோடும் ஒப்பிட முடியாதது. அந்த இன்பத்தை வாசக மனதில் தோற்றுவிப்பது ஒவ்வொரு கவிஞனுக்கும் சவால்.
அது காட்சியிலா, பொருளிலா, மொழியிலா அல்லது மூன்றும் பிரித்தறியா வண்ணம் ஒன்றிலொன்று பின்னியிருக்கும்படியான செய்நுட்பத்திலா என்பதில் கவிதையின் சூட்சுமம் உட்பொதிந்து கிடக்கிறது
இந்த சவாலை கவிதை எழுத வரும் ஒவ்வொரு புதிய கவிஞனும் எதிர்கொள்கிறான்.
இன்பத்தை ஒளித்து வைப்பதின் விளையாட்டு, கவிதையின் தொழில்நுட்பமாகி பின் சாரத்தை அகற்றி உள்ளீடற்ற கவிதைகள் எழுதுவது வரை இன்றைய கவிஞன் எல்லா தந்திரங்களையும் கடந்துகொண்டிருக்கும் சூழலில். வெளியாகிறது இப்புத்தகம்.
மௌனன் யாத்ரீகா இத்தொகுப்பின் மூலம் தன்னைத் துண்டாக வெட்டிக்கொண்டு இன்றைய கவிதைப் போக்குகளிலிருந்து வேறு ஒரு புதிய பாணியை உருவாக்க எத்தனிக்கிறார்
வாசிப்போருக்கு இருபது வருடங்களுக்கு முந்தைய வண்ணதாசன் கவிதைகளின் எதார்த்த அழகியல் பாணி நினைவுக்கு வரலாம். ஆனாலும், இவை புதியவை. மழைக் காலத்து தும்பிபோல, இரவுக் காற்றில் தாயின் சேலைத் தலைப்பின் வாசம்போல எல்லாக் காலத்துக்கும் புதியவையாக இக்கவிதைகள் நம்மை வசீகரிக்கின்றன.
பிறந்த குழந்தையின் மேனியில் பரவிக் கிடக்கும் பனிக்குடத்தின் நீர்போல கவிதை முழுக்க ஓர் ஈரம் சுற்றிப் பரவுவதை வாசிக்கும்போது உணரமுடிகிறது.
முழுக்க ஊடகங்களால் வன்புணர்வுக்காட்பட்ட நம் அறிவுலகக் குப்பைக் கிடங்குகளிலிருந்து நம்மைக் காப்பாற்றும் விதமாக ஒரு ஜம்ப் கட்டில் புத்தகத்தைத் திறந்ததும் அந்த ஈரம் நம்மைப் பற்றிப் படர்வதை உணரமுடியும்
அந்த அளவிற்கு இக்கவிதைகள் நம் சூழலின் தேவையாகவும் மருந்தாகவும் இருப்பதுமே இக்கவிதைகளின் சிறப்பு.
பேருந்து, ரயில் என வெவ்வேறான பயணங்களில் கிளர்ச்சியுறும் இவரது கவிமனம் கண்ணுற்ற இடம்தோறும் கவிதைகளாக மொக்கவிழ்கின்றன.
இச்சை சார்ந்த அழகுணர்ச்சிகளிலிருந்து விலகி இயல்பான வாழ்வின், கண்ணுக்கு தெரிந்த அறிவுணர்ச்சிக்குள் நாம் இதுவரை ஆட்படாத ஓர் அழகினைக் காட்சிப் பொருளாக்கி அதை வார்த்தைளால் நமக்கு கோர்த்து பரவசப்படுத்துகின்றன இவரது கவிதைகள்.
முதல் கவிதையில், பேருந்தில் சக பயணியின் கையிலிருக்கும் குழந்தையின் கண்களை, சின்னத் திராட்சையைப்போல அவை மிதந்தலைந்ததாகக் கூறுவதில் துவங்கி, தொடர்ந்து ஒவ்வொரு கவிதையிலும் தனது தனித்தன்மையை நிறுவிக்கொண்டே வருகிறார்.
விரல்களின் செம்மண் சாயத்தை வைத்து அவன் நேற்று பிடுங்கிய கடலைக் கொடியையும், அவன் நிலத்தையும் ஞாபகப்படுத்தும் இவரது சொல்முறை பெரிதும் சினிமாவின் ரிவர்ஸ் டெக்னிக் எனப்படும் பின்புணரும் காட்சி மொழியைக் கொண்டு உருவாக்கம் கொண்டிருப்பது சிறப்பு.
என்றாலும், கவிதைகளைக் காட்சி ஒன்று, காட்சி இரண்டு என வரிசைப்படுத்துவது இலக்கியத்திற்கான விசேட குணங்களிலிருந்து அன்னியப் படுத்துவதாகவும் இருக்கிறது.
பல இடங்களில் சங்கப் பாடல்களின் வர்ணனையை நமக்கு ஞாபகப்படுத்துகிறார் மௌனன். பச்சைக் கலர் ஜிங்குச்சான் என்னும் கவிதையில் பேருந்துக்குள் நுழைந்து பயணிகளோடு பயணிக்கும் வண்ணத்துப் பூச்சியை விவரிக்கும் தருணத்தில் அது வெளிப்படுகிறது.
அதேபோல கச்சிதமான தேர்ந்த வார்த்தைகளால் கட்டமைக்கப்படும் கவிதைகள் இவரது மொழி ஆளுமைக்குச் சான்று. இப்படி, சில சொற்களில் மனதில் சித்திரத்தை உருவாக்கி அதை வாழ்வனுபவத்தோடு பொருத்துவதில் இவரது தேர்ந்த கவிமொழி தெரிகிறது.
புற உலக வாழ்க்கையின் எந்தப் பிரச்சினையையும் இந்தக் கவிதைகள் பேசமறுக்கின்றன.
இன்றைய சூழலில் கிராமங்களின் அவல நிலை, சாதிய வன்முறைகள், விவசாய தற்கொலைகள் எதையும் இக்கவிதைகள் பேசவில்லை.
ஒருவேளை இன்னும் ஒருமுறை நாம் இந்தக் கவிதைகளை வாசிக்க விரும்புவதற்கு காரணம் இதுவாகக் கூட இருக்கலாம். குழந்தையின் வாயிலிருந்து ஒழுகும் எச்சிலைபோல அவ்வளவு தூய்மையான, உயிரோட்டமான அனுபவத்தை உருவாக்க முயல்வதுதான் இக்கவிதைகளின் சிறப்பே.
முழுக்க முழுக்க மிக அழகான புகைப்படத் தொகுப்புக்குள் நுழைந்துக் கொண்டதுபோல ஓர் அனுபவத்தை இத்தொகுப்பு உருவாக்குவது இதன் தனித்தன்மை.
திரைப்பட இயக்குனர் போல காட்சிகளின் துல்லியத்துக்குள் இவர் விழுகிற தருணங்கள் நமக்குள் மழைத்துளியாய் விழுந்து சிலிர்க்க வைக்கின்றன. தாகூருக்கு வாய்த்தது போல இயற்கையைக் கொண்டாடும் கவிதைகள் யாருக்கும் வாய்க்கவில்லை.
அப்பழுக்கற்ற, தூய்மையான காட்சியனுபவத்தை இயற்கையோடு சங்கமித்து உருவாக்கும்போது அக உலகில் அது உருவாக்கித்தரும் ஆன்மீக தருணங்கள் ஒப்பீடற்றவை. இந்தக் கவிதைகள் அதற்கு முயற்சிக்கின்றன.
மௌனன் யாத்ரீகா தொடர்ந்து இதே பாதையில் பயணிக்க வேண்டும். எல்லோரும் எழுதும் கவிதையாக இது இல்லாமல் இருக்கிறது. அதுவே இதன் தனித்தன்மை, அதுவே இதன் சிறப்பு. இன்னும் இதே பாதையில் பயணிக்கும்போது கண்டறியப்படாத வாழ்வின் அழகியலையும், பல உன்னத தருணங்களையும் உங்களால் மீட்டுத் தரமுடியும் என நம்புகிறேன்.

- அஜயன் பாலா
சென்னை -93
2016 - மார்ச் மாத பகல் பொழுது.

Top of Form

Bottom of Form


May 14, 2016

திரைக்கதைகளின் காட்பாதர்


                     
தமிழில்  மொழிபெயர்க்கப்பட்ட காட்பாதர் (பாகம் 1) திரைக்கதை நூலுக்கான முன்னுரை 
- அஜயன்பாலா



                                   

நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலத்தான் நன்மையும் தீமையும்
தங்களுக்கு சாதகமாக இருப்பற்றை  நன்மை என்றும்  எதிரானவற்றை தீமை என்றும் அதிகார வர்க்கங்கள் காலம் காலமாக வகைப்படுத்தி வந்துள்ளன.. 
சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்பவர்கள் .. தங்களை வாழ்வித்துக்கொள்ள  தங்களது நியாயங்களை மீட்டெடுக்க அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான மாற்று சக்திகளை உருவாக்க முயல்கிறபோது  வன்முறையும் களவும் தவிர்க்கமுடியாத காரியாங்களாகிப்போகிறது.
பிற்பாடு அவர்கள் கொலைகாரர்களாகவும் கொள்ளைகாரர்களாகவும் திருடர்களாகவும் இயங்கி கடைசி வரை நிழல் உலக வாழ்க்கையை வாழ்ந்து மடிந்து போகின்ற்னர். இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் இறுதிவரை நிம்மதியிழந்து வாழ்வின் ஜீவ சாரத்தை முழுமையாக அனுபவிக்க  முடியாமல்  காவல் நிலையம் சிறை நீதிமன்றம் எனற வட்டத்துக்குள் சிக்கி குற்றவுணர்ச்சியை பரிசாக பெற்று வாழ்வை முடித்துக்கொள்கின்றனர்.
உலகில் இவர்களுக்கான அறத்தை பேசி அதை தத்துவமாக்கியவர் நீட்ஷே கடவுள் இறந்துவிட்டார் எனும் அவருடைய கூற்று புகழ்மிக்கதாக இருந்தது. அதிகார வர்க்கம் எப்போதும் கடவுளையும் அதன் வழி புனிதத்தையும் மையமாக கொண்டே கட்டமைக்கப்படுவதால் நீட்ஷே கடவுளை சாகடிக்க வேண்டிய கட்டாயம் தேவையாகிப்போனது.
நீட்ஷே வுக்கு பிறகு ஜெனெ இலக்கியரீதியாக் இந்த கருத்தாக்கத்துக்கு மதிப்புகூட்டினாலும்  காட்பாதருக்கு பிறகுதான் கெட்டவர்களுக்கான அறம் சமூகத்தில் ஒரு மதிப்பீட்டை  பெற்றது. நாயகன் கெட்டவனாக இருக்கும் படங்கள் அங்கீகாரம் பெற்றன .
அமிதாப்பும் ரஜினியும் இவர்களது பிரதிநிதிகளாக உருவெடுத்தார்கள்.ஏழ்மைதான் இவர்களை இப்படி ஆக்குகிறது என்பதை மக்களும் இதன்பிறகுதான் புரிந்து கொள்ளத்துவங்கினர் .
காட்பாதர் செய்த மகத்தான சாதனை இது தான் . தத்துவார்த்த ரீதியாக சமூகத்தில் தீமையின் பிறப்பிடத்தை பற்றிய நியாயத்தை பேசி அதற்கு கலைக்கான அந்தஸ்தை உலகம் முழுக்க  உருவாக்கியதும் அடையாளப்படுத்தியது  இத்வே  காட்பாதர் திரைக்கதையின் கலாபூர்வ வெற்றிக்கு அடிப்படை .
மரியாபூசோ இதனை முதன் முதலில் நாவலாக எழுதியபோது சாதாரண த்ரில்லராகத்தான் இருந்தது. ஆனால் அது இலக்கியமானது பிரான்சிஸ் போர்ட் கொப்பல்லோ வின் திரைக்கதை மூலமாகத்தான்.
இன்றும் உலகின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் குரசேவா பெலினி கோதார்ட் பெர்க்மன் படங்களைபோல  கமர்ஷியல் படமான காட்பாதருக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அதற்கான முழு முதல் காரணம் மேற் சொன்னவைகள்தான்
அத்தகைய திரைக்கதையை தமிழில் நாதன் பதிப்பகம் மூலமாக் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெகுநாளாக நான் முயற்சித்து நேரமின்மை காரணமாக முடியாது போன காரியத்தை நண்பர் ராஜ்மோகன் மிக குறைந்த அவகாசத்தில் திறமையாகவும் முழுமையாகவும் நிறை வேற்றியிருக்கிறார்.

இந்த நூலை வாசிப்பது மக்கத்தான் இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்பட நூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனித வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நமக்கு வாய்ப்புள்ளது.
திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளின்  முழுமையான் அர்த்தம் இந்நூலை வாசிக்கும்போது நமக்கு விளங்கும்
மேலும் சிலர் இப்படத்தை நூறுமுறை பார்த்திருக்கக்கூடும் .ஆனால் அப்போதும் புலப்படாத படத்தின் சில முக்கிய அம்சங்கள் இந்நூலை வாசிக்கும் போது புலப்படக்கூடும்
தமிழ் திரைப்பட சூழலுக்கும், திரைக்கதை பயில்பவர்களுக்கும் ,உலக சினிமா ரசிகர்களுக்கும் ,இலக்கியவாதிகளுக்கும் நாதன் பதிப்பகத்தின் மகத்தான் பரிசு இந்நூல்
ராஜ் மோகன் கடும் உழைப்பாளி, இலக்கிய ஆர்வமும் திரைப்படத்தின் மீதான் காதலும் கொண்டவர். எதற்குமே மறுப்பு சொல்லாமல் முடியும் முடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் பேசுபவர். அதுபோலவே முடிக்கவும் கூடியவர் .
அவரிடம் இவ்விஷயம் குறித்து நான் சொன்னதுமே உடனடியாக ஒப்புக்கொண்டு துரிதமாக காரியத்தை செம்மையாக நிறைவேற்றி தந்துள்ளார்
அவருக்கு இது முதல் நூல். அவருக்கு இந்நூல் பெருமை சேர்க்கும்
என் அன்பான வாழ்த்துக்கள் 

அஜயன் பாலா
எழுத்தாளர் & பதிப்பாசிரியர்
நாதன் பதிப்பகம்





February 1, 2016

பை சைக்கிள்தீவ்ஸ் தமிழ் திரைக்கதை நூலின் மூன்றாம் பதிப்பின் முகவுரை


இன்று இந்த புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டியுள்ளது .
ஒரு புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டுவது ஒன்றும் அத்தனை பெரிய சாதனை அல்ல. ஆனால் எனக்கு இது அளப்பரிய மகிழ்ச்சி

காரணம் இது என்  முதல் புத்தகம் .முதல் குழந்தை போல அத்தனை பரவசத்தை இப்புத்த்கத்தின் முதல் பதிப்பின் முதல் பிரதியை கையில்  வாங்கியபோது உணர்ந்தேன்.

அடிப்படையில் நான் எழுத்தாளனாக  இருந்தாலும் சினிமா  இயக்குனர் எனும் கனவே என்னில் அப்போது முதல் நிலையீல் இருந்தது.  . இலக்கியத்தின் மீதான  தீவிர அவா என்னுள் அப்போது கொழுந்துவிட்டு என்னை எரித்துக்கொண்டிருந்தாலும் சில கதைகள் எழுதியதோடு நிறுத்திக்கொண்டு தீவிரமாக திரைத்துறையில் களமிறங்கினேன்



நான் பணி புரிந்த லவ் டுடே எனும் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  திரையுலகில் இயக்குனராக போராடினேன்.  இருபதுகளை கடப்பதற்கு முன்பாக இயக்குனராகிவிட வேண்டும் என்ற வெறி காரணமாக தீவிரமான முனைப்புடன் இருந்தேன் .இத்தனைக்கும் அது எனக்கு இரண்டாவது படம் . உண்மையில் நான் அவ்வளவு அவசரப்பட்டிருக்க கூடாதோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது . ஆனால் அப்போது ஒரு வேகம் . மூர்க்கம் . கையில் சுமக்க முடியாத பெரும் வாளை உயர்த்தி பிடித்தபடி கடன் பட்ட டீக்கடைகளுக்கு டைவர்ஷன் போட்டு நிமிர்ந்து கடந்தேன். ஆனால் நான் எதிர்கொண்டதோ தொடர் தோல்வி. கதை நல்லா இருக்கு பூஜை தேதி என்னைக்கு வச்சுக்கலாம் என முதல் நாள் கைகுலுக்கியவர்கள் அடுத்த நாள் கொஞ்சம் பைனான்ஸ் பிரச்னை நாளைக்கு சொல்றனே  என பதில் சொல்வர். இதற்குள் அவசரப்பட்டு நானும் நண்பர்களிடம் சொல்லிவிடுவேன். மறுநாள் நண்பர்கள் எப்போ பூஜை ஹீரோ யார் என கேட்க  நானும் அடுத்த மாசம் என உண்மை மறைத்து சமாளித்து அடுத்த தயாரிப்பாளரிடம் ஓடினேன். ஏமாற்றம் தோல்வி  தொடர் கதையாக தொடர்ந்து  பல முறை என் கனவு பாதையில் விழுந்து எழுந்தேன் . கடைசியாக  ஒரே ஒரு தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார். தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேசி முடிவானது. பூஜைக்கான தேதிகளை குறித்தார். நம்பிக்கை வார்த்தைகள் பேசினார் . அட்வான்ஸ் கொடுக்க காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரச்சொன்னார். அட்வான்ஸ் பணம் பத்திரமாக கொண்டுவர ஒரு ஜிப் வைத்த பையுடன் சென்றிருந்தேன் என்னுடன் அன்று அவதாரம் படத்தின் கலை இயக்குனர்  தாமு உடன் வந்திருந்தார். கோவில் மண்டபத்தில் த்யாரிப்பாளர் எனக்காக காத்திருந்தார். பணம் கொடுப்பார் என கையை நீட்டினேன்

அவரோ என் கையை பிடித்தார். ஒரு மாதம் காத்திருங்கள் என்றார். தன் எதிர் பாராத பண நெருக்கடியை சொல்லி மனம் கலங்கினார். எனக்கு இது புதியதல்ல .ஆனாலும்  நான் வாங்கிக்கொண்டு போன பை என்னை கேலி செய்தது. தாமுவுக்கோ த்யாரிப்பாளர் மீது கடும் கோபம். வரும் வழி முழுக்க திட்டிதீர்த்தார்.  நான் மவுனமாக கேடுக்கொண்டேன் . பேருந்திலிருந்து   ரோகினி தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினோம். அவர் வருகிறேன் என சொல்லி தோளைத் தொட்டார். பிரிந்தோம். எனக்கு  மன அழுத்தம் அதிகமாக இருந்தது உலகம் சட்டென விரிந்துகொண்டே இருந்தது.  பிரம்மண்டமான உலகில் நான் மட்டும் ஒரு புள்ளியில் தனியாக இருப்பதை உணர்ந்தேன்.

கடல் நீர் என் கண்வழியாக பூமியை நனைக்க துவங்கியது.
அறைக்கு வந்து யாருடனும் பேசாமல் கவிழ்ந்து படுத்தேன். ம்னம் வெறுமையில் தத்தளித்தது. ஒரு வித காரணமற்ற அச்சம் இருளாக நெஞ்சில் குடிகொண்டது . இரண்டுநாட்களாக சாப்பிடக்கூட மனமில்லாமல் அறையில் சுருங்கிகிடந்தேன்.  மூன்றாம் நால் எதையாவது செய்தே தீரவேண்டிய மன் அவசம் உந்தி தள்ளியது. பரணில்  எதையோ தேடிய போது இந்த மொழிபெயர்ப்பை தாங்கிய நோட்டு கையில் அகப்பட்டது . பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை என எழுதி சுமார் முப்பது பக்கங்களுக்கு கிறுக்கியிருந்தேன்.  நான்கு வருடங்களுக்கு முன்  எழுதியது.  தூசு தட்டி வெளியில் எடுத்தேன்.  பிலிம் சேம்பரில் சென்னை பிலிம் சொசைட்டி மூலமாக முதன் முறையாகஇந்த  படத்தை பார்த்து நெகிழ்ந்து  கோடம்பாக்கம் வரை நடந்தே  அறைக்கு  திரும்பி அடுத்த சில நாட்களில்  போக் ரோடிலிருக்கும் ஏலூரு லெண்டிங் லைப்ரரியில் இதன் திரைக்கதை புத்த்கம் கிடைத்த வுடன் ஆர்வம் மிகுதியில் உடனடியாக அந்த புத்த்கத்தை ஜெராக்ஸ் எடுத்து க்கொண்டு எழுத ஆரம்பித்திருந்தேன். காரணம் ஏலூருவில் பத்து நாளுக்கு புத்த்கத்தின் விலையில் பத்து சதவீதம் வாடகை.. புத்தகம் 500 ரூபாயாக இருந்தால் 50 ரூபாய் .. ஒருநாள் அதிகமானால் 5 ரூபாய் கணக்கில் வாட்கை வசூலித்தார்கள் . அப்போது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாத சூழல் ஆகவேதான் ஜெராக்ஸ் எ4னும் அற்புதம் மூலம் அந்த புத்தகத்தை நிரந்தரமாக்கிக்கொண்டேன். அதை வைத்துக்கொண்டு ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து பின் நாம் எழுதுவது சரியா தவறா என்ற குழப்பத்தில் பாதியில் அதை மூடி அப்படியே பெட்டியில் பூட்டியிருந்தேன்.இடையில் அறை மாற்ரும் போதெல்லாம் அதுவும் என்னுடன் சில புத்தகங்களை போல அல்லோகலப்பட்டது .

இந்த நிலையில்தான் அது மீண்டும் என் கண்ணில் ப்ட தூசு தட்டி எடுத்து வாசித்தேன்.அப்போது நான் தங்கியிருந்த  மேற்கு மாம்பலம் பால் சுகந்தி மேன்ஷன் அறை எண் 53க்கு  கவிஞர் யூமா வாசுகி ,இயக்குனர் கற்றது தமிழ் ராம் உள்ளிட்ட பல நண்பர்கள் விஜயம் செய்வர் . ராம் எனக்கு நா. முத்துக்குமார் மூலமாக பரிச்சயம்.

அன்று அறைக்கு வந்த ராம சுப்பு (ராம்) என் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு பாலா அருமையாக இருக்கிறது இதை முழுவதுமாக எழுதி முடிக்கலாமே என்றார். துளி நம்பிக்கை வந்தது. அடுத்து வந்த யூமா வாசுகியும் அதை படித்துவிட்டு பாலாஜி ( என் ஒரிஜினல் பெயர்) இதை முதலில் கையோடு முடித்துவிடு என்றார். இருவரும் கொடுத்த  உற்சாகம் என் மன நெருக்கடிக்கு மருந்தானது . பாதியில் நான் நிறுத்தி வைத்த இந்த நூலை மீண்டும் தொடர்ந்து  எழுதத்தூண்டியது. அன்று  முதல் இரண்டு மாதங்கள் முழுவதும் அறையை  விட்டு வெளியேறாமல் எழுதத்துவங்கினேன்  என் உதவியாளரான ரவிச்சந்தர் அதை கையோடு பிரதியெடுத்து உதவி செய்தார் .

வெட்டி எழுதி வாக்கியம் சமைக்கும் போது உண்டகும் பரவசம் எனக்குள் படைப்பு சம்பந்தமான பல ரகசிய அறைகளை திறந்துவிட்டன .புதிய பறவைகள் என் மனதுள் பிரவேசித்தன முழுமையாக எழுதி முடித்தபின் யூமாவாசுகி  தமிழினி வசந்த குமாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.  நான் ஆர்வக்கோளாறு  காரணமாக புத்த்கம் இன்னும் எத்தனை நாளில் ரெடியாகும் அட்டை  அவுட் எல்லாம் என் ரசனையின் படி வரவேண்டும் என்பது போல எதையோ  உளறினேன். அது வசந்த குமாருக்கு  கொஞ்சம் எரிச்சலூட்டிவிட்டது. தம்பி உங்களுக்கு இது முதல் புத்தகம்.  நான் என் இஷ்ட்த்துக்கு எப்ப கொண்டுவர முடியுமோ அப்போதான் கொண்டுவருவேன் என திட்டமாக கூறி கையோடு ஸ்க்ரிப்டை கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டார். மொக்கை வாங்கிய விரக்தியுடன் அறைக்கு திரும்பினேன் .

அப்போது  என் பிலிம் சொசைட்டி நண்பர்கள் ஜார்ஜ்( தற்போது தொலைகாட்சி தொடர்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.) மற்றும் ரியாஸ் (தற்போது கோவையில் பிசினஸ் எய்துகொண்டிருக்கிறார்) இருவரும் என் உற்ற தோழர்கள்.  இருவரும் என் அறைக்கு வந்து இதனை படித்துபார்த்துவிட்டு நிழல் திருநாவுக்கரசுவிடம் கொண்டுசென்றனர். அடுத்த சில நாட்களில் என் வாழ்வின் முதல் புத்தகமும் அச்சாகியது.  அது விதிப்படி மீண்டும் தமிழனி வசந்தகுமார் அவர்களின் மேற்பார்வையில் தன் கொண்டுவ்ரப்பட்டது.  முதல் புத்த்கம் கையில் வாங்கிய கையோடு வெளியே வந்த போது அப்போது வழியில் எஸ் ராம்கிருஷ்ணன் எதிர்பட்டார் . அவர் கையில் முதல் புத்தகத்தை கொடுத்தேன் . நண்பர் இசக்கியப்பன் அப்போது என்னுடனிருந்தார். அவருக்கு இரண்டாவது புத்தகம்

அடுத்த சில நாளில் நண்பர்கள் அருண்மொழி ,ஆந்திரா வங்கி பாலசுப்ரமணீயன் ஆகியோரது முன்னெடுப்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. ஏற்பாடானது, வெளியீட்டுக்காக  யாரை அழைக்கலாம் என யோசித்த போது நண்பர்கள் ராஜா மற்றும் நா முத்துக்குமார் உதவியுடன் இயக்குனர்  பாலுமகேந்திராவை சந்தித்து நூலை கொடுத்தேன். அவரோடான என் முதல் சந்திப்பு அது.  பாலுமகேந்திரா வெளியிட  தங்கர் பச்சான் அதை பெற்றுக்கொள்வதாக முடிவானது . உடன் நிகழ்வில் இயக்குனர்கள் அம்ஷன் குமார், ஹரிஹரன் வாழ்த்துரை வழங்கவும் பேசி முடிவானது. நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் அப்போதிருந்த ஜெர்மன் மொழிக்கான  முகமை பகுதியான  மாக்ஸ் முல்லர் பவனில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம். அப்போது அங்கு பணியாற்றி வந்த பிரசன்னா ராமஸ்வாமி அதற்கு உதவி செய்தார்
 
நான் ஒழுங்கு செய்த முதல் கூட்டம் அதுதான்.
விழா நாளன்று மிகுந்த பதட்டத்துடன் எத்தனை பேர் வருவார்களோ என காத்திருந்தேன் . வழக்கமாக அப்போது மாக்ஸ் முல்லர் பவன் நிகழ்வுகளுக்கு இருபது பேருக்கு மேல் வந்தாலே அதிசயம் . ஆனால் நிகழ்வில் பை சைக்கிள் தீவ்ஸ் ப்டம் திரையிடுவதாக் அறிவிப்பு செய்திருந்த  காரணத்தால் கூட்டம் எக்கச்சக்காமாக் எதிர் பாராமல் குவிந்து விட்டிருந்தது.  
நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த கூடம் தாண்டி அதனையொட்டிய சிறிய அறை மற்றும் படிக்கட்டிலும் வாசலிலும் வராந்தாவிலும்  நண்பர்கள் வழிந்து நிறைந்திருந்தனர். முதல் முறையாக அந்த கட்டிடம் வரலாறுகாணாத கூட்டத்தை கண்டிருப்பதாக மாக்ஸ் முல்லர் பவனை நிர்வகித்த பெண்மணி தன் ஆங்கில பேச்சில் கூறினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் என்னை தங்களது வார்த்தைகளால் என் எழுத்து பாதைக்கு ஞான ஸ்னானம் செய்த்னர். குறிப்பாக பாலு மகேந்திரா தமிழின் வெளி வந்திருக்கும் அற்புதமான சினிமா பற்றிய முதல் நூல் என கூறினார். தங்கர்பச்சான் ஒரு சம்ஸ்கிருத வார்த்தை கூட இல்லாமல் எழுதப்ப்ட்டிருப்பதை வியந்து பாராட்டினார் . நான்கு மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் மனம் குமைந்து கண்ணீர் சொறிந்த காட்சி மன்க்கண்ணில் நிழலாட ஏற்புரை நிகழ்த்த மைக் முன் வந்து நின்றேன் .
 
என் முன் என் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இருந்தனர் . திருக்கழுக்குன்றத்திலிருந்து என் பால்ய  நண்பன் விமல் வந்திருந்தான். என் கல்லூரி நண்பர்கள் வெங்கட்ட பெருமாள் ஸ்ரீராம் .. பழவந்தாங்கல் சிவக்குமார்  யூமா வாசுகி செம்பூர் ஜெய்ராஜ் , ராஜன் அரவிந்தன்  மற்றும்  ஷங்கர் ,தளவாய் பாஸ்கர் சக்தி, தமிழ் மகன், காயத்ரி  கிருஷ்ணா டாவின்சி  என் முன்னாள் அறை நண்பர்கள் முத்துராமலிங்கம் , செல்வம் மற்றும் என் தங்கை உமா அவளது கணவர் சுரேஷ் என் அம்மா என அப்போது என் வாழ்க்கைக்கு நெருக்கமான பலரும் என் கண்முன் வரிசையாக அமர்ந்திருந்தனர்.  ..நான் கனவு கண்ட என் முதல் நூல் வெளியாகிவிட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. மகிழ்ச்சியில்  கண்ணீர் துளிர்த்தது . அந்த கண்ணீர் என் உடல் தொடர்பானது அல்ல . என் சென்னை வாழ்க்கை அது உண்டாக்கிய அழுக்கு மன இருட்டு தொடர்பானது நெஞ்சு நிறைந்து கண்ணீரை கட்டுபடுத்தியபடி  ஒரு ராஜ க்ரீடம் சூடிய அரசனாக உணர்வதாக கூறி நெகிழ்ந்தேன் .

இன்று நான் எழுத்தாளனாக அடையாளம் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடிப்படை காரணமாக இருந்த என் முதல் நூல் இது
இப்படியாக இப்புத்தகம் என்னளவில் ஒரு மகத்தான சாதனையை உள்ளடக்கியதாக இருந்தாலும் இதன் புற சாதனைகளும் அத்தனை  எளிதானதல்ல


2000க்கு முன் 90 கலீன் இறுதி காலங்களில்  தமிழ் சினிமா எப்படியிருந்ததோ ஆனால் கோடம்பாக்கம் வட்டாரத்தில்  உலகசினிமா என்ற வார்த்தையே பலரையும் அச்சுறுத்தக்கூடிய சொல்லாக இருந்தது .குரசேவா த்ரூபோ என  பெச்செடுத்தாலே பலரும் குழப்பவாதி என்பது போல என்மேல் சந்தேக பார்வைகள் வீசினர். மேலும் அக்காலத்தில்  பல நூல்கள் உலகசினிமா பற்றி வந்திருந்தாலும் அவை பெரும்பலும் அறிவுஜீவி வட்டத்துக்காக அதற்கான இறுக்கமான மொழி நடையுடன் மட்டுமே வெளிவந்தன.

ஆனால் இப்புத்த்கம் வெளியான பின் பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்கள் இலக்கிய வாசகர்களின் கரங்கள் என் வலக்கையை பற்றி குலுக்கினர்.  . முதல் முறையாக கோடம்பாகத்தின் தீப்பெட்டி அளவு அறைகளின் அலமாரிகளில் இப்புத்த்கம் ஒரு மதிப்புமிக்க இடத்தை பிடித்ததுதான் இந்நூலின்  சாதனை. அது வரை தலைதெறிக்க ஓடிய கோடம்பாக்கம் நண்பர்கள் கூட இந்நூலை வாசித்தபின்   பிலிம் சொசைட்டி திரையிடல்களுக்கு மெல்ல தங்கள் பாதங்களை திசை திருப்பினர்..அந்த உதவி இயக்குனர்கள்தான் பிற்பாடான தமிழ் சூழலின் மாற்றத்துக்கும் அடிகோலியவர்கள் . இந்த நூலுக்கு கிடைத்த வரவேற்பை யொட்டி பல உலக  சினிமாக்களின் திரைக்கதைகள் வெளிவரத்துவங்கின .வெற்றி பெற்ற தமிழ் சினிமாவின் திரைக்கதைகளை அச்சிட்டு வெளியிடும் புதிய வழக்கமும் பதிப்பு சூழலில் வருவதற்கு இப்புத்தகமே காரணமாக இருந்தது.

இந்த மூன்றாம் பதிப்புக்கு காரணமாக  விளங்கும் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும்  புத்தகம் பேசுது ஆசிரியர் தோழர் நாகராஜன் அவர்களுக்கும் ,நண்பனும் இப்புத்தகத்தின் மெய்ப்பு திருத்தரும் சக  எழுத்தாளருமான கீரணூர் ஜாகிர் ராஜாவுக்கும்  இந்த புத்தகத்தை சிறந்த முறையில் வடிவமைத்து அச்சிட்டு  வெளியிடவிருக்கும் புத்தகம் பேசுது ,பாரதி புத்தகாலயம் குழுவினருக்கும் என் நினைவார்ந்த நன்றிகள்


அஜயன்பாலா

19-07-2011

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...