June 29, 2010

"மயக்கும் மாலை பொழுதே நீ போ,போ --விந்தன் : நினைவு தினம் இன்று (ஜூன் 30)
பிறப்பு: 22-09-1916

தமிழ் சிறுகதை உலகில் ஜெயகாந்தனுக்கு முன்னோடி,புதுமைப்பித்தனுக்கு பிறகு எளிய மக்களை கதாபாத்திரங்களாக தன் கதைக்குள் உலவவிட்டவர். எழுத்தாளர் கல்கியால் கண்டெடுக்க பட்டவர். இவரது கதைகளில் வரும் பாத்திரங்கள் படும் சிரமத்துக்கெல்லாம் தானும் ஒரு காரணமோ என கல்கியை தன் கதைகள் மூலம் புலம்ப வைத்தவர். நாவல் நாடகம் திரைப்படம் வாழ்க்கை வரலாறு என எழுத்தின் பல்வேறு பரிணாமங்களில் தன்னை வெளிப்படுத்திக்கொண்டவர்.

விந்தன்

செங்கற்பட்டு மாவட்டம் நாவலூர் எனும் சிற்றூரை சேர்ந்தவர்.தந்தை வேதாசலம்,தாயார் ஜானகியம்மாள்.பெற்றோர் இவருக்கு இட்டபெயர் கோவிந்தன்.எழுத்துக்காக தன் பெயரிலிருந்த கோ வை நீக்கிவிட்டு வெறும் விந்தன் ஆனார்.வறுமை காரணமாக எட்டாம் வகுப்பை தாண்டி படிக்க இயலாத சூழல்.தந்தையோடு கருமான் பட்டறைக்கு சென்றார்.அங்கு சம்மட்டியை துக்கி அடிக்க இவரது பூஞ்சை உடம்பு ஒத்துழைக்கவில்லை.பின் இரவுபள்ளியில் படித்து கல்வி அறிவை பெருக்கிக்கொண்டார்.உடன் ஓவிய கல்லூரியில் பயிலும் எண்ணம் இருந்தாலும் குடும்ப சூழல் இவரது கனவுகளை கலைத்தது.

பின் டி இராஜாபாதர் எனும் நண்பர் மூலம் மாநில அரசின் தமிழரசு அச்சகத்தில் அச்சுகோர்ப்பவராக சேர்ந்தார்.அப்போது அவருடன் அங்கு பணீயாற்றியவர்கள் பிற்காலத்தில் அமைச்சர் என்.வி.என் நடராசன் என்றும்,ம.பொ.சி,என்றும், நாட்டிய கலைஞர் நட்ராஜ் என்றும் அழைக்கப்பட்டனர்.ஆனால் அந்தசமயத்தில் அவர்களோ அல்லது தானோ சமூகத்தின் முக்கிய நபர்களாக மாறபோகிறோம் என்பது விந்தனுக்கு தெரியவில்லை..

பிறகு ஆனந்த போதினி,தாருல் இஸ்லாம், மற்றூம் ஆனந்தவிகடன் ஆகிய பத்திரிக்கைகளில் பணிபுரிந்து வந்தவருக்கு கலகி இதழில் சேர்ந்ததும் வாழ்க்கை சற்று மாற துவங்கியது. அங்கு அவர் சாதாரண அச்சுக்கோர்க்கும் தொழிலாளி. அச்சு கோர்த்தபின் பலமுறை மாற்றி எழுதும் பழக்கமுள்ள கல்கியின் கதைகளை விந்தனும் சலிப்பே இல்லாமல் மீண்டும் மீண்டும் அச்சு கோர்த்து தருவார். ஒவ்வொருமுறையும் சலிக்காமல் தன் எழத்துக்களை அச்சுகோர்க்கும் அந்த இளைஞன் மீது கல்கிக்கு கிட்டதட்ட காதலே வந்தது. யார் அப்படிப்பட்ட ஆர்வம் கொண்ட உழைப்பாளி அவனி நான் பார்க்க வேண்டுமே என நிர்வாகிகளிடம் கூற விந்தன் அழைத்து வரப்பட்டார் கலகி முன் . இனி நீ என்னோடு உதவி ஆசிரியராக இரு என கல்கி கூற அன்றே விந்தன் வாழ்வில் மாறுதல் உண்டானது அதுவரை அச்சு மையால் ஈரமான அவரது விரல்கள் பேனா மையால் நனைய துவங்கியது.

அதன் பிறகு சமுதாயத்தின் அடித்தட்டு மக்கள், நகர்ப்புறத் தொழிலாளர்கள், கிராமப்புற மக்கள் ஆகியோரின் வாழ்க்கை நிலைகள், அவர்கள் படும் சிரமங்கள் துயரங்கள் விந்தனின் பேனாவுக்குள் இறங்கி அவை நல்ல சிறுகதைகளாக மாற்றம் கொண்டன.தொடர்ந்து விந்தனின் இருப்பத்தைந்து கதைகள் 'முல்லைக்கொடியாள்'' எனும் தலைப்பில் முதல் நூலாக வெளியாகியது.

இந்த "முல்லைக்கொடியாள்" தொகுப்பிற்கு தமிழ்வளர்ச்சிக்கழகம் முதல் பரிசு கொடுத்தது. விந்தனின் முதல் நாவல், "பாலும் பாவையும்". இந்நாவல் கல்கியில் தொடராக வந்தபோது பெரும் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து கண் திறக்குமா,அன்பு அலறுகிறது ,காதலும் கல்யாணமும்,மனிதன் மாறவில்லை,சுயம் வரம் போன்ற நாவல்களை எழுதினார்.மட்டுமல்லாமல் எம்.கே.டி பாகவதர்,எம்.ஆர் ராதா ஆகியோரது வாழ்க்கை வரலாற்றை பின்னாளில் தினமணீயில் தொடராக எழுதினார்.

இக்காலங்களில் அவரது நெருங்கிய சகாக்களாக கவிஞர் தமிழ் ஒளியும் ,எழுத்தாளர் ஜெயகாந்தனும் இருந்த்னர். பொழுது போகாத நேரங்களில் மூவரும் சென்னை நகர வீதிகளில் உலகை வெல்லும் கனவுகளுடன் இலக்கியம் பேசிதிரிந்தனர்.மூவருக்குள்ளும் கடும் பகையும் கடும் நேசமும் ஒன்றுடன் ஒன்றாக பிரிக்க முடியாமல் பின்னிக்கிடந்த்ன

கல்கி வேலைக்கு பிறகு விந்தன் பத்தாண்டுகள் திரைப்படத்துறையிலும் பங்கேற்றார்.

மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும்,நடிகர் திலகம் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த ஒரே திரைப்படமான "கூண்டுக்கிளி"க்கு திரைக்கதை-வசனம் எழுதியவர் விந்தனே . இதைத்தவிர, "அன்பு", "குழந்தைகள் கண்ட குடியரசு" மணமாலை,பார்த்திபன் கனவு போன்ற படங்களிலும் கதை திரைக்கதை வசனம் என பலவாறாக பங்களித்துள்ளார். . "மயக்கும் மாலை பொழுதே நீ போ,போ -- இனிக்கும் இன்ப இரவே நீ வா,வா" மற்றும் "இதயவானில் உதய நிலவே! எங்கே போகிறாய் -- நீ, எங்கே போகிறாய்?" போன்ற காலத்தால் மறக்க முடியாத பாடல்கள் விந்தன் எழுதியவை.

இறப்பு:30-06-1975

குறிப்பு:
ஆப்ரா மீடியா நெட்வொர்க்ஸ் மூலம் அண்மையில் தமிழ் ஆங்கிலம் என இருமொழி நூலில் வெளியான எனது செம்மொழிசிற்பிகள் எனும் நூற்று பதினைந்து தமிழ் அறிஞர்கள் பற்றிய தொகுப்பு ஆவணத்திலிருந்து இக்கட்டுரை எடுத்தாளப்ப்ட்டுள்ளது

இந்திய சினிமாவின் அரசியல் முகம் - ஒரு வரலாற்றுப் பருந்தின் பார்வை

                                                                                            1896- ல் மும்பையில் முதன்முறையாக சினி...