Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

November 13, 2022

கும்லானி மலியம் - சிறுகதை ````````````````````````````````````````````````அஜயன்பாலா

கும்லானி மலியம் இருக்கா ..? அவன் கேட்டதும் சிப்பந்தி ஒரு நிமிடம் துணுக்குற்றார் போல அவனையே பார்த்தார் - என்ன கேட்டீங்க ? - கும்லானி மலியம் ..! - அப்படீன்னா …? - என்னது கும்லானி மலியம்னா தெரியாதா ? அந்த சிங்கிதா உணவு விடுதி நகரின் பணக்காரர்கள் குடும்ப மற்றும் தொழில் சார்ந்த நண்பர்களை சந்திக்க தேர்ந்தெடுக்கும் பாரம்பர்ய விடுதியானதால் அனைவரும் தத்தமது இணையர்களுடன் சன்னமாக பேசிக்கொண்டே உணவு அருந்துவதில் கவனமாக இருந்தனர். ஸ்பூன்கள் முட்கரண்டிகள் தட்டில் உரசும் சத்தம் அவர்கள் பேச்சைவிடவும் கூடுதல் சத்தமாக இருந்தது. ஐ வில் ஃபாலோ யூ ரிக்கி நெல்சனின் ஜாஸ் இசை ஸ்பீக்கரில் அந்த காலை நேரத்தை இன்னும் ரம்மியமாக்கிக் கொண்டிருந்தது . உடன் அப் பாடலின் லயத்துக்கு தகுந்தபடி ஒயிலாக உணவுத் தட்டுகளை சுமந்து வரும் சிப்பந்தி அந்த லயம் சிதறாமல் ஒரு மேசையின் மீது உணவுதட்டுக்களை எடுத்து மேசையை நிரவிக்கொண்டிருந்தார் இப்படியான சூழல் காரணமாகவோ என்னவோ அச்சமயம் யாரும் இவர்களது சம்பாஷணையை கவனிக்கவில்லை. சார் எனக்கு புரியவில்லை இன்னும் ஒருமுறை சொல்ல முடியுமா ? என சொல்லிக்கொண்டே காதை அவர் பக்கமாக் திருப்பியபடி அந்த சிப்பந்தி அவர் சொலவதைக் கேட்க வசதியாக தாயராக இன்னும் சற்று குனிய அந்த வாடிக்கையாளருக்கு சுருக்கென கோபம் என்ன சார் எத்தனை தடவை கேக்குறது .. கும்லானி மலியம் ஒருநிமிடம் அந்த சிப்பந்திக்கு எல்லாமே மறந்துவிட்டது . வாழ்நாளில் இதுவரை கேட்டிராத ஒரு உணவுப்பெயரை ஒருவன் தன்னிடம் ஆர்டர் சொல்லும் போது இப்படி விழிப்பது தங்களது விடுதிக்கு அவமனாத்தை உண்டுபண்ணுமோ என்ற அச்சமும் அவனுக்கு வந்து போனது…. பின் தன்னை கடந்து போகும் சக சிப்பந்தியை நிறுத்தி வாடிக்கையாளரை நோக்கி - இதோ இவர்கிட்ட சொல்லுங்க எனக் கேட்க திரும்பவும் அந்த வாடிக்கையாளர் கும்லானி மலியம் கிடைக்குமா ? இல்லையா லேட் ஆனாலும் பராவியில்லை .. பதிலுக்கு அவனும் ஒரு நிமிடம் யோசித்து இது என்ன வகை உணவு சார் .. நார்த்தா சவுத்தா சைனீஸா இத்தாலியா மெடிட்டேரிய்னா மெக்சிகனா? அதுவரை அமர்ந்திருந்த வாடிக்கையாளன் கோபத்துடன் எழுந்து நின்றான். இதை அந்த சிப்பந்திகள் இருவருமே எதிர்பார்க்கவில்லை . அட இப்ப என்ன சார் ஆச்சு அவர்களில் ஒருவன் அவர் கையை பிடித்து உட்காரும்படி அழுத்த அவன் உடனே அவன் கையை உதறிவிட்டு கோவத்துடன் கேஷியரை நோக்கித்திரும்பி . ஹலோ யாரு மேனேஜர் .. அந்த சூழலில் இப்படி சட்டென கோவப்படுவது கொஞ்சம் மிகை தான் . ஆனால் அவன் திட்டமிட்டே செய்வது போல உடலை விறைப்பாக வைத்துக்கொண்டு கலசராயின் இருபககெட்டிலும் கையை மறைத்துக்கொண்டு கோவத்துடன் விடுதி முழுக்க திரும்பிப்பார்த்தான் அனைவரது பார்வைகளும் அவனிடம் திரும்பி நிலைகுத்தின. . மேனேஜர் போல டை அணிந்த ஒருவர் அவனை நோக்கி ஓடி வந்தார். நாந்தான் சார் .. சார் என்ன வேணும் எதுக்கு இப்ப சத்தம் ? கும்லானி மலியம் கிடைக்குமா கிடைக்காதா என அவன் அனைவரும் கேட்கும்படி உரக்கக்கேட்டான் அவர் கிடைக்குங்க நான் ரெடி பண்றேன் எதுக்கு இப்ப கத்தறீங்க எல்லாரும் பாக்கறாங்க .. மொதல்ல உட்காருங்க என அருகே வந்து கொஞ்சம் கனிவும் கோபமும் கண்டிப்புமான குரலில் உட்கார வைக்க முயன்றான் . அவன் ஒரு வழியாக சமாதானமடைந்தவனாக மீண்டும் உட்கார்ந்த்ததும் மேனேஜராக சொல்லிக்கொண்ட நபர் சட்டென திரும்பி அது வரை அங்கு நின்ற இரு சிப்பந்திகளிடமும் கோபமாக முறைத்து பின் காதில் அவரகளிடம் ஏதொ சொல்ல அவர்களும் சட்டென விறைப்பு தட்டி கண்னாடிக் கதவை தள்ளிக் கொண்டு உணவு தயாரிக்கும் பகுதிக்குள் வேகமாக விரைந்த்னர் .. இப்போது அனைவரும் மீண்டும் சகஜமாக தத்தமது மேசையில் கரண்டிகளின் சத்தங்களுடன் பேசக்கொண்டே சாப்பிடுவதை தொடர்ந்தாலும் அவர்கள் அனைவரது உதடுகளும் கும்லானி மலியம் என்ற பெயரை சந்தேகத்துடன் உச்சரிக்கத்துவங்கியது . ஒரு சிலரோ இதர சிப்பந்திளை அழைத்து தங்களுக்கும் அந்த உணவை ஆர்டர் செய்ய சிப்பந்திகள் அச்சமும் கலவரமுமக கிச்சனுக்குள் ஓடத்துவங்கினர் அந்த உணவு விடுதியின் தலைமை உணவு உற்பத்தியாளருக்கு இது பெரும் சவாலாக இருந்தது இது வரை முன்பின் கேட்டிராத ஒரு உணவு பணடத்துக்கு திடீரென கோரிக்கைகள் குவிய என்ன செய்வது எனத் தெரியாமல் தன் உதவியாளர்களுடன் தீவிரமாக ஆலோசனையில் இறங்கினார் இது ஒருபுறமிருக்க விடுதியில் பலரும் கூகுளில் கும்லானி மலியம் என தேடலைத் துவங்கினர் .. சிலர் மனைவியிடம் கேட்டு வாட்ஸப்பில் செய்தி அனுப்பினர். கும்லானி மலியம் ஆரடர் பண்ணியிருக்கேன் இப்பவே எச்சில் ஊறுகிறது என ஓட்டலில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் செல்ஃபி எடுத்து முகநூலில் நிலைத்தகவல் போட கும்லானி மல்லியம் இணையத்தில் பலருக்கும் பரவத்துவங்கியது இப்படியாக ஒரு பத்து நிமிடத்தில் அந்த விடுதியில் துவங்கி பத்து நூறு ஆயிரம் என கிளை பிரிந்து அடுத்த ஐந்து நிமிடங்களில் ஐயாயிரம் பேருக்கு மேல் கும்லானி மலியம் பெயர் அலைவரிசை 5 உபயத்தில் துரிதமாய் பரவத்துவங்கியது . தகவல் சேர்ந்த பல வீடுகளில் சில வற்றின் சமயலறைகளில் கும்லானி மலியம் பரிசோதனை முயற்சிகள் நடக்கவும் துவங்கின அந்த உணவு விடுதியில் முதல் ஆளாக கும்லானி மலியம் கேட்ட அந்த வினொத வாடிக்கையாளன் ஏதோ போன் வந்தது என எழுந்து வெளியில் போனபோது மொத்த விடுதியும் அவனையே பார்க்கத்துவங்கியது . இரண்டு வராம் கழித்து யூடியுப்களில் கும்லானி மலியம் செய்வது குறித்த பல ரிசிப்பிக்கள் வரத்துவங்கின .நம்மூர் கொழுக்கட்டை சீனாவுக்கு போய் மோஸ் ஆனது போல நம் பழைய உணவு கல்கண்டு உப்புமா தான் வெளி நாட்டுக்கு போய் கும்லானி மலியம் ஆகிவிட்டதாக ஒருவர் காணொலி இட அதுவே அனைவராலும் ஏகோபித்த கும்லானி மலியாமக அங்கீகரிக்கபட்டது அனைவரும் கும்லானி மலியம் சபபிடுவதன் மூலம் வரவிருக்கும் புதிய நோயை விரட்டி அடிக்க முடியும் என நாட்டின் அதிபர் அவர்கள் தன் மாதந்திர வானொலி உரையில் குறிப்பிட்டு உடன் அதன் அங்க்கீகரிக்கப்ப்ட செய் வழி முறைமையையும் பொறுமையகா அனைவரும் .கேட்டு எழுதும்வகையில் நேரம் ஒதுக்கி விவரித்தார் ஒரு லிட்டர் பால்.. 500 கிராம் அவல் ,, கல்கண்டு 250 கிராம் என ஒவ்வொன்றையும் சொல்லும் போது நிதானமாக அதன் ஆங்கில பெயரையும் சொல்லி எழுதுவதற்கான் நேர இடைவெளிவிட்டு சொன்னதை பலரும் சிலாகித்தனர். மறுநாள் . பத்ரிக்கை செய்திகளும் அதிபரின் பெருந்தன்மை குறித்து எழுதின இரண்டு வருடம் கழித்து போர்ப்ஸ் இணைய இதழில் இந்தியாவில் கும்லானி மலியம் உணவு விடுதிகள் முன்னூறுக்குமேற்ப்ட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருவதுடன் இன்னும் நூறுகிளைகள இந்த் ஆண்டில் அதிகப்ப்டுத்த்ப்படுத்த இருப்பதாக செய்தி குறிப்பை வெளியிட்டிருந்த்து . அதன் அருகே சிரித்த முகத்துடன் வெளியான இந்திய வர்த்தகப்பிரிவு தலைமை அதிகாரியின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்த அந்த சிங்கிதா உணவு விடுதி மேலாளருக்கு மட்டும் அவர் யாரென நன்கு தெரிந்திருந்தது . UYIR EZUTHTHU .OCTOBER 2022 ------------------------------------------------------------------

June 8, 2021

மலைவீட்டின் பாதை - சிறுகதை

நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்த்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி வளர்ந்திருந்தது. உயரமான மரங்கள் அவனுக்குள் மருட்சியை ஏற்படுத்தின. முக்கி முனகி உறுமும் இன்ஜின் சப்த்ததின் பின்னணியில் இந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பது விநோதமாக இருந்தது.

சாலையோரம் வேகத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். பள்ளிச் சிறுவர்கள் மழைக்குத்தலையில் உரச்சாக்கினைக் கவிழ் ந்திருந்தனர். முகம் முழுக்க பவுடர் அப்பி, நெற்றியில் விபூதி இட்டிருந்தனர். குழந்தைகள் கையசைத்தபோது இவனும் பதிலுக்குக் கையசைக்க விரும்பினான். ஆனால், முடியவில்லை. மனசு மிகவும் பாரமாகிக் கனத்து இருந்தது. மரணம்
 தன்னோடு சக பயணியாக அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தான்.

இதுவரை அவன் குமுளிக்கு வந்ததில்லை. குமுளியில் அவன் தேடிச்செல்லும் சேது, கல்லூரியில் ஜுனியராகப் படித்தவன். ஹாஸ் டலில் ஒரே அறையில் தங்கியிருநதவன். அது கல்லூரித் தலைவனாக ஸ்டீபன் நெஞ்ச நிமிர்த்தி நடந்த காலங்கள். வாழ்க்கை அப்போது ஒரு முரட்டுத்தனத்தையும், துணிச்சலையும் பரிசாகத் தந்திருந்தது. தலைமைப் பண்பும் அலட்சியமும் சக நண்பர்கள் மத்தியில் அவனு க்கென ஒரு விநோதமான வசீகரத்தை உண்டு பண்ணியிருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில்தான் எந்த வேலைக்கும் பொருத்தமற்றவன் என்பதை உணர்ந்து கொண்டான் .

வாழ்க்கைக்கும் கல்லூரிக்குமான இடைவெளியை அவன் மிக வும் தாமதமாக உணர்ந்தான். வேலை அற்றவனின் பகல் பொழுது கள் நீண்டு இருந்தன. அங்கே கை குலுக்கல்கள் இல்லை. உப சரணைகள் இல்லை. சிகரெட் புகை தனக்கு மேல் உயர்ந்து செல்வதை  விரக்தியுடன் வேடிக்கை பார்ப்பதில்  பெரும் பாண்மை யான நேரங்களைக் கழித்தான். அவனது குடும்பம் இரண்டு ஆசிரியப் பெருந்தகைகளைக் கொண்டது.

உடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வேலையிலும் சொந்த தொழிலிலும் தீவிரமாகப் பயணம் பெற்றுவிட, அவனுக்கு அவனது அப்பா சிபாரிசு செய்த வேலைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை சொல்லி நிராகரித்தான். அதற்கான காரணம் ஏதும் அவனிடம் இல்லை. ஊர் ஊராகப் பயணிக்கும் விற்பனை பிரதிநிதி வேலைதான் தனக்கு உருப்படியானது என நம்பினான். அதற்காக இவனும் பலமுறை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்குப் படையெடுத்து தான் மிச்சம். அது போன்ற வேலை கிடைப்பதாகத் தெரியவில்லை. சரளமான ஆங்கிலம் இவனது நாக்குக்குப் பழக்கப் படாதது அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.

                நிராகப்பிலும், தனிமையிலும், கழி விரக்கத்திலுமாகக் கழிந்த பொழுதில், தான் ஒளிந்துகொள்ள, தன்னை முற்றாகப் புதைத்துக் கொள்ள அப்போது அவனுக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. நூலகங்களுக்குச் சென்று, வெகு நேரம் வெறுமையைப் புரட்டிக் கொண்டு இருந்தான். இந்தக் காலகட்டத்தில்தான் நண்பன் ஒருவன் மூலமாக, புதுயுகம்  எனும் இலக்கியச் சிற்றிதழ் கிடைத்தது. அதில் வெளியான (பாதசாரி என்பவர் எழுதியிருந்த) காசி எனும் கதையின் நாயகன் இவனை வசீகரிந்திருந்தான். இவனும் தன்னை ஒரு காசியாக உருவகம் செய்து கொண்டான். ஸ்டீபனிடமிருந்த முரட்டுத் தனம் விலகி, மிகவும் மசமசவென, அதே சமயம் நுண்மையானதாக மாறிக்கொண்டு இருந்தான். நவீன  இலக்கியவாதிகளின் பெயர்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தின.

     இவனது இந்த மனநிலைக்கு நேர் எதிராக, வீடு, உறவுகள் மத்தியில் இவனது நடத்தை ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களின் உலகம் முழுக்க முழுக்க இவனுக்கு எதிரானது மட்டுமல்ல, தலைகீழானது. இதன் காரணமாக, இவனுக்கு வீட்டில் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வன்மம் சுழன்றது. அனைவரையும் வெறுத்தான். தன்னையும் தன் நுட்பமான உலகையும் அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என இவன் திடமாக நம்பினான். இன்றில்லா விட்டாலும் பினினொரு நாளில் மகத்தான காரியங்களைத் தன்னால் ஆற்ற முடியும் என அவன் திடமாக நம்பினான். அதற்காக அவன் வீட்டில் பெரும் அவமானங்களைப் பரிசாகப் பெற நேர்ந்தது. குறிப்பாக, உணவுப் பொழுதின்போது வெளிவரும் வார்த்தைகள் அவனைப் பெரிதும் சமன்குலைத்தன. இந்தச் சமயங்களில் சிகரெட் அவனுக்கு உற்ற நண்பனாக ஆறுதல் அளித்தது.

 புகைப்பதற்கு பல சமயங்களில் மிகுந்த பிரயாசை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் வீட்டின் அருகே இருந்த தேநீர்க் கடையைக் கடந்து போகும் தருணத்தில், அவன் முதுகில் பாரமாகப் படியும் ஒரு குற்ற உணர்ச்சி... அதனை அவன் எப்படி விளக்க முடியும்! எப்போதேனும் அரிதாகச் சொற்ப பணம் கிடைத்து, பாக்கியின் பாதியைக் கொடுக்க முடிகிறபோது அவனுக்குள் ஊற்று போல் பெருகும் உணர்ச்சி இருக்கிறதே, பாருங்க.. நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன். நீங்கள் என்னைக் கணித்திருந்தது போல நான் உங்களை ஏமாற்றுபவன் இல்லை, நேர்மையானவன், நீதிமான்!” என்பது போல ஒரு பரிசுத்தமான உணர்வு உடல்முழுக்க வியாபிக்கும் அளவுக்கு அவமானகரமான சூழலில் பிடிக்கப்பட்டு இருந்தான். 

மாலை நேரங்களில் நீரற்ற ஏரி மைதானத்தின் புல்வெளியில் அமர்வான். சுற்றி இருந்தவர்களெல்லாம் விலகிச் சென்ற பின் மெள்ள இருள் தன் மேல் கவியும் சந்தர்ப்பத்தில், புல் தரையில் படுத்தபடி மேலே உள்ள நட்சத்திரங்களையும் பால் வழி மணடலங்களையும் குறித்து தன்னைப் போல எத்தனை இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி யோசிப்பார்கள் எனவும், மற்றும் தான் கேள்விப்பட்ட ஊர்களின் பெயர்களையும் வாசித்த நாவல்களில் நிலப் பகுதிகளையும கற்பனையில் கொண்டுவந்து அங்கே தானும் சஞ்சாரம் செய்வதாகவும் கற்பனை செய்து பார்ப்பான். இது போன்ற சமயங்களில் சிகரெட் ஒரு காதலியைப் போல மிகவும் இணக்கமாக இருப்பதை உணர்ந்தான்.

ஒரு நாள், மிகுந்த நெருக்கடியின் காரணமாக சமையலறையில் கடுகு டப்பாவில் அவன் கை வைக்கப்போக அது பெரும் பிரச்சனையாகி வெடிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக டைரியில் இவன் எழுதிவைத்திருந்த கவிதைகளை, தங்கை எடுத்து வந்து அப்பாவிடம் காண்பித்தாள். அவன் அம்மாவோ, மகன் மிகக் கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் கூச்சல் இட்டாள். மகன் ஏதோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அதன் பொருட்டே இப்படி எழுதிக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடைநிலை ஆசிரியத் தம்பதியர் கருதினர். உண்மையில், தான் இல்லாதபோது தனது டைரியும் தனது கவிதைகளும் பிறரால் வாசிக்க நேர்ந்ததையே ஸ்டீபனால் தாங்க முடியவில்லை.

 தங்கைக்கு ஒரு அறைவிட்டான். தந்தை தடுக்க வர, அவரைப் பிடித்துத் தள்ளினான். அம்மா ஓடி வந்து இவன் முதுகில் அடிக்க, அடுத்த சில நொடிகளில் மூவரும் சரமாரியாக ஸ்டீபனை ஒரு பைத்தியக்காரனைப் போல அடிக்கத் துவங்கினர். இந்த நெருக்கடியான சூழலில் கூட ஜே.கிருஷணமூர்த்தி இந்த சூழலை என்னவாக எதிர் கொள்வார். ஆதவன் இதனை எப்படி விவரிப்பார் என்றெல்லாம் அவன் மனம் கேள்விகளை எழுப்பியது. அவனது முதுகில் ரயில் தடதடத்து ஓடியது. அவன் தலைகுப்புற ஒரு ஆற்றில் விழுந்தான்.
அவமானத்துடன் அன்று இரவு முழுக்க எங்கெங்கோ அலைந்து திரிந்தான். இதனை ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கூட அந்த இரவில் உதித்தது. உள்ளூர பயத்துடன் மறுநாள் விடியற் காலை வீட்டினுள் நுழைந்து, தனது துணிமணிகளை ஒரு லெதர்பேக்கில் திணித்துக் கொண்டு வெளியேறினான். மதுரை வந்து நண்பனைச் சந்தித்து, பகல் முழுக்க மீனாட்சி கோயில் மற்றும் மலையாளப் படம் எனச் சுற்றித் திரிந்து, இரவில் நண்பனுடன் பீர் குடித்துவிட்டு, பின் அவனது ஏற்றுமதி நிறுவனத்திலேயே தங்கினான். காலையில் வாட்ச்மேனிடம், நண்பனிடம் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு மதுரை பேருந்து நிறுத்தத்துக்கு மழையினூடே நடந்து வந்து, எங்கே போவது எனத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்த போதுதான், குமுளியில் இருந்த சேதுவின் ஞாபகம் வந்தது.  
பேருந்து குமுளியை அடைந்திருந்தது.

ஸ்டீபன் லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு கடைசி ஆளாகப் பேருந்திலிருந்து இறங்கினான். சாலையோரம் பேருந்து சற்றுச் சாய்வாகச் சரிந்திருந்தது. இரண்டு புறமும் அடர்த்தியான செறிவான மரங்கள் நிறைந்த வனம் அது. குமுளி பேருந்து ஒரு செக்போஸ்ட்டுக்கு இந்தப்புறம் நிறுத்தப்பட்டு இருந்தது. தமிழக எல்லை முடிந்த கேரள எல்லை இங்கிருந்து துவங்குகிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தான்.

சற்று முன் மழை பெய்திருந்ததால், அந்தச் சிறிய கடைத்தெரு முழுக்க பகல் பொழுதிலும் ஒருவித மூட்டத்தோடு காட்சியளித்தது. ஒருபுறம் அடர்ந்த கானகத்துடன் கூடிய மலைச்சரிவும், இன்னொருபுறம் வரிசையாக ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள் கொண்ட கடைகளுமாக தார்ச் சாலை நீண்டிருந்தது. சிறிய சிறிய தள்ளுவண்டிகளில் கண்ணாடிப் பெட்டிகளுடன் தேநீர்க் கடைகள் வழி நெடுகக் காணப்பட்டன. தலைப்பாகையும் வாயில் பீடியுமாக, மலையாளிகளுக்கே உரித்தான கலர் கலரான கைலியை மடித்துவிட்டபடி நடமாடிக் கொண்டு இருந்தனர். பழ வியாபாரிகள், கூலிகள், மீன் வாங்கக் கையில் கூடையுடன் முண்டு அணிந்தபடி அலையும் நடுத்தர வயதுப் பெண்கள் என சில பிரத்யேக மலையாள அடையாளங்களுடன் அந்தப் பகுதி ஸ்டீபனை வசீகரித்தது. தமிழ்ப் பையனும் மலையாளப் பெண்ணும் கைகோத்து நிற்பதுபோல பல இடங்களில் கடைகளின் முகப்புப் பலகைகளில் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. சேதுவின் முகவரியைக் காண்பித்து வழி கேட்டபடியே, நீண்டு சென்ற தார்ச் சாலையில் நடந்து சென்றான். வரிசையான கடைகள் கடந்த வலப் பக்கமாகத் திரும்பி நடந்தான். தேயிலைத் தோட்டங்கள் பசேலென விரிந்து கிடந்தன. கறுத்த பாம்பின் தோலாய் நீண்டிருந்த சாலையின் ஓரங்களில் மரங்கள் உயர்ந்து மேகங்களோடு அசைந்தன. குளிச்சியான காற்று உடலைத் தழுவ, மூச்சை இழுத்து வெளியே விட்டவாறு மலைப்பாதையில் நடந்து சென்றான். காலையில் மதுரையிலிருந்து அவன் புறப்படும்போது இருந்த மனோநிலையிலிருந்து இந்தப் புதிய சூழல் அவனை முற்றாகப் பிடுங்கி எறிந்திருந்த்து.

கடந்த இரண்டு நாட்களாக தான் எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறான சம்பவங்கள் குறித்தும், இப்போது தான் புதிதாகச் செல்லவிருக்கும் சேதுவின் வீடு குறித்தும் மனதுக்குள் கேள்விகளை உருவாக்கியபடி நடந்து கொண்டு இருந்தபோது, சேதுவின் வீடு நெருங்கி வந்தது..லைச் சரிவின் ஒருபக்கமாக மண் படிக்கட்டுகள் வழியே ஏறி, சற்று உயரமான தளத்தில் கட்டப்பட்ட அந்த ஓட்டு வீட்டு முன் நின்றான்.இதுதான் சேதுவின் வீடா?

படலைத் திறந்து சேதுவின் வீட்டுக்குள் நுழைந்தான் ஸ்டீபன். எதிரே சற்றுக் கீழே, தார்ச்சாலையில் ஒரு பேருந்து கடந்து சென்றது. அப்பால் சரிவாக பச்சையாக விரிந்துகிடந்த தேயிலைத் தோட்டம், மலை முடிச்சுகள், நீல வானம், நகரும் மேகங்கள் என அந்த இடமே முற்றிலம் வேறொரு உலகத்துக்குள் தான் வந்திருப்பது போன்ற பிரமையை அவனுக்குள் உண்டுபண்ணியது.

ஒலிப்பானை அழுத்தியதும் கிணற்றடியிலிருந்து பின்வாசல் வழியாக ஒரு சிறு பெண்ணின் முகம் வெளிப்பட்டது. கைகளில் சோப்பு நுரையோடு, ஒரு கையால தலைமுடியை ஒதுக்கியபடி எட்டிப்பார்த்தாள். ஹாலில் இருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அது சேதுவின் அம்மாவாக இருக்க வேண்டும், வெளியே வந்தாள். ஸ்டீபன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், சட்டென ஏதோ தவறு செய்துவிட்டவளைப் போன்ற பதற்றத்துடன் கதவைத் திறந்தவளின் முகத்தில் அத்தனை பூரிப்பு. கண்களின் ஒளி ஸ்டீபனுக்கு உடன் சட்டெனக் குளிர்ந்துவிட்டது. இதுவரை அப்படி ஒரு கரிசனத்தை எந்த முகத்திலும் கண்டதில்லை.

பின் கட்டிலிருந்து வெளிப்பட்டவள், தன் கைகளின் ஈரத்தைப் பாவாடையில் துடைத்தபடி, ஸ்டீபனை வரவேற்கும் விதமாக உடலைக் குறுக்கி, நாணத்துடன் தலைகுனிந்தாள். மகளின் பெயரை சிந்து என அறிமுகப்படுத்தினாள் சேதுவின் அம்மா.  +2 முடித்துவிட்டு பி.காம், கரஸில் படித்து வருவதாகக் கூறினாள். சட்டென அப்பெண் மீண்டும் பின்கட்டுப் பக்கம் விரைந்து சென்றாள்.

ஒருவகையான அமைதி அந்த வீட்டில் குடி கொண்டு இருந்த்து. அது தன் வீட்டைப் போல இறுக்கமாக இல்லை. ரசிப்புத்தன்மை மிகுந்த சிறு பெண் அந்த வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. துணியில் சிறு எம்ப்ராய்டரி செய்யப்ட்ட வாயில் தோரணங்கள், பழைய, பெரிய ரேடியோவின் மேல் வைக்கப்பட்டு இருந்த பூ ஜாடி, மற்றும் அதன் மேல் மணியால் கோக்கப்ட்ட பொம்மைகள் என எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தனக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுவதை உணர்ந்தான்.

கொதிக்கக் கொதிக்க சுடுநீரை குளியறையில் ஊற்றிக் கொண்டபோது ” எனக் கூற கதற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகம் இந்த உடம்புக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாகப் பன்றியைவிடக் கேவலமாக உழன்றவன், இந்த குளியல் மூலம் அரசனாக மாறிவிட்டதாக்க் கருதினான்.

குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு, சேதுவின் அம்மா இட்லிகளைப் பரிமாறினாள். படுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறை மிகவும் குறுகலாகவும் அடக்கமாகவும் இருந்தது. ஒரு மெத்தை தரையோடு விரிக்கப் பட்டு இருந்தது. ஆழ்ந்த உறக்கம். கனவில் என்னென்னவோ வந்தது. இடையிடையே வெளியே வராந்தாவில் கொலுசுச் சத்தம் கடந்தது. பகல் நேரத்துத் தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் வசனம் கேட்டது. கனவில் யார் யாரோ அவனது அப்பாவை துக்கம் விசாரித்தார்கள். பேருந்தின் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணி ஸ்டீபனிடம், மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?” என்றாள். தலை நிறையப் பூவுடன் மடியில் சரிந்தாள்.

சட்டென விழிப்பு தட்டிய போது, ஸ்டீபனின் தலைமாட்டில் ரகசியமாக இரண்டு பெண் குரல்கள், சேதுவின் தங்கையான சிந்துவினுடையதும் அவளுடைய தோழியினுடையதும் என்பதை அறிந்து கொண்டான். இவனை எழுப்பிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அவர்களின் பேச்சினூடே தெரிந்தது. புத்தக அலமாரியில் ஏதோ ஒரு நோட்டைத் தேடிக் கொண்டு இருந்தனர். சிந்துவின் பாவாடை விளிம்பு இவனது முழங்கையில் உரசுவதை உணர்ந்தான். உண்மையில் அவனுக்கு அதனால்தான் விழிப்பு தட்டியது.

நோட்டை எடுத்துக் கொண்ட சிந்து தன் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் கூறிக் கொண்டு இருந்தாள் சென்னையிலிருந்து ( அவள் அதனை மதராஸ் என்றாள்) வந்திருப்பதாகவும், அங்கே மிகப்பெரிய ஆள் என்றும் கதை விட்டாள். தோழி, இந்த ஆளை நான் ஒரு உதை விடட்டுமா?” என்று சிரித்துக் கொண்டே கேட்க சிந்து அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். தன் பிறந்த நாளுக்கு ஸ்டீபன் ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசளித்ததாகவும், அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் சிந்து சொன்னாள்.

ஸ்டீபனுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. அப்போது தான் அவனுக்கு அது ஞாபகமும் வந்தது. சேது தன்னுடன் அறியல் தங்கியிருந்த சமயத்தில், அவன் ஒருமுறை ஊருக்குப் புறப்பட, வழியனுப்பச் சென்றபோது நடந்தது அது. ஒரு எதேச்சையான நிகழ்வு. சேது அதனை தன் வீட்டில் நண்பன் பரிசளித்ததாகச் சொல்லிப் பெருமையுடன் நீட்டியிருக்க வேண்டும். ஒருவேளை, அன்று அது அவளுடைய பிறந்த நாளாகவும் இருந்திருக்க்கூடும். பெண்ணின் மனது எத்தனை நுட்பமாகச் செயலாற்றுகிறது என ஸ்டீபன் ஆச்சர்யப்பட்டான்.

கண் விழித்த போது மூன்றரை ஆகியிருந்தது. முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தபோது சேதுவின் அம்மா, சாப்பிடச் சொன்னார்கள். வயிறு சரியில்லை எனச் சொல்லி மறுத்தவன், லுங்கியும் சட்டையும் அணிந்தபடி வெளியே வந்தான். மாலை நேரமாக இருந்த்தால் தொலைவில் தெரிந்த தேயிலை தோட்டங்களில் பனி மூட்டம் இறங்கியிருந்தது. ஈரமான மண் படிக்கட்டுகளில் இறங்கி, தார்ச் சாலைக்கு வந்தான். மனம் போன போக்கில் நடக்கலானான்.

சட்டென சிந்துவின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. எத்தனை கனிவான பெண்! ஒரு வேளை நான் விழித்திருப்பேன் எனத் தெரிந்தே, பரிசுப் பொருளுக்காக நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அதனைத் தன் தோழியிடத்தில் கூறியிருக்கலாம். முற்றிலுமாகச் சிதறுண்டு கிடந்த அவனது இருப்பு, அந்தச் சிறு பெண்ணின் கொலுசுச் சத்தத்தினால்  மீண்டும் தனக்குள் ஒன்று சேர்வதை உணர்ந்தான்.

ஸ்டீபன் வீடு திரும்பியபோது, முற்றத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. சேது இவனைப் பார்த்த்தும் அளவற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டான். ஒரு லெட்டர் போட்டிருந்தால் விடுமுறை எடுத்திருப்பேனே என்று வருத்தப்பட்டான். சில நிமிடத்தில் இருவரும் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்றபோது இருட்டியிருந்தது. பகலில் பார்த்ததை விட இப்போது சந்தடி அதிகரித்திருந்தது. சாலைகளில் தள்ளுவண்டிகள் முளைத்திருந்தன. வண்டிகளின் மேலிருந்த கண்ணாடிப் பெட்டிகளின் வழியாக மஞ்சள் வெளிச்சம்.

     ஏற்கனவெ அங்கெ நாலைந்து நண்பர்கள் இருந்தனர். அனைவரும் வேட்டி  சட்டை அணிந்திருந்தனர். நண்பர்களிடம்  சேது இவனைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் நண்பனொருவன் காதல் கைகூடியது குறித்தும், சினிமா நடிகர்கள் பற்றியும் பேசிக் கொண்டனர். ஒருவரிடமும் தீவிரத் தன்மை இல்லாதது இவனுக்கு வருத்தமாக இருந்தது. இவன் பெரும்பாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். சேது அவர்களுடன் பேசுவதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அடிக்கொரு முறை இவனிடம் போரடிக்கிறதா எனக் கேட்டுக் கொண்டான்.

     ஒன்பது மணிக்கு மேல் அருகில் இருந்த சந்தில் பீர் குடித்தனர். மீன் வறுவலை இன்னொரு நண்பன் ஒரு இலையில் வைத்துக் கொண்டு வந்தான். இவனுக்கு வீடு திரும்புவது சங்கடமாக இருந்தது. சேதுவின் அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ.. உள்ளூர ஒரு பயம். அதுபற்றி வீட்டில் கவலையில்லை எனக் கூறினான் சேது. ஆச்சர்யமாக இருந்தது.

அவன் சொன்னது போலவே வீட்டில் இவர்கள் சென்றபோது அனைவரும் உறங்கியிருந்தார்கள். சேதுவின் தந்தைதான் கதவைத் திறந்தார். அவர் இவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போய் படுத்துக் கொள்ள, இருவரும் தங்களாகவெ சாப்பாடு எடுத்துக் போட்டுச் சாப்பிட்டு, படுக்கையை ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டனர். சேது உடனே உறங்கிவிட்டிருந்தான். மேலே ஃபேன் காற்று சுழன்றது.

     சற்று நிமிடத்தில் சடசடவென மழை பெய்யும் சத்தம். ஸ்டீபன் கண்களை மூடிக் கொண்டான். மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு எங்கே  போவது என யோசித்தான். வீட்டுக்கு உடனே திரும்பி செல்ல முடியாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்த்து. மழை கனத்துப் பெய்யத் துவங்கியது.

     மறுநாள் காலை, சேதுவின் வீடு சுறுசுறுப்பாக இருந்தது. அனைவரும் இவன் எழுவதற்கு முன் குளித்துவிட்டு எங்கோ புறப்பட்டனர். இவன் ஊருக்குப் புறப்படும் தகவலைச் சொன்னதும், சேது மறுத்தான். அனைவரும் அருகில் ஒரு கோயிலுக்கு உறவினர் திருமணத்துக்குச் செல்வதாகவும் கண்டிப்பாக உடன் வந்தே தீர வேண்டும், திங்கள்கிழமை காலை புறப்படும் பயத்திலிருந்து தப்பிக்க முடிந்த சந்தோஷத்தை சேதுவுக்கு அது உள்ளுர உருவாக்கித் தந்தது.
அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பேருந்து நிறத்தத்துக்கு வந்தனர். சிந்து மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். தலை குளித்து, நேர் வகிடெடுத்து காதோர முடிகளை எடுத்துப் பின்னால் முடிச்சிட்டிருந்தாள். பாவாடை, சட்டைதான் என்றாலும், அவளுடைய தோற்றம் பளிச்சென்று இருந்தது. அருகில் நிறுத்தத்துக்கு வந்து நின்ற சுடிதார் பெண்ணைப் பார்த்ததும் இவள் சந்தோஷத்துடன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். பள்ளித் தோழியாக இருக்காலாம். பேருந்தில் ஏறியதும் சிந்துதான் முதல் ஆளாக ஏறி ஸ்டீபனுக்கு முன் ஸீட்டில் இடம் பிடித்து தந்தாள். பின் ஸீட்டில்  தன் தோழியுடன் அவள் அமர்ந்து கொண்டாள். பயணத்தின் போது ஒரு நறுமண வாசனை, அது சிந்துவிடமிருந்தா அல்லது தோழியிடமிருந்தா. தெரியவில்லை. முகத்தில் காற்று சடசடத்து, உடல் முழுக்க ஊடுருவியது. தன் தலைக்கு மேல் வாழ்க்கை சில புக்களை விழச் செய்து தன்னைச் சாந்தப்படுத்தி இருப்பதாக எண்ணிக்கொண்டான்.

அத்தனை எளிமையான திருமணத்தை அவன் பார்த்தில்லை. மலையை ஒட்டிய ஒரு சமதளத்தில் மூன்று சிறிய கட்டடங்களாக கோயில பிரிந்து கிடந்தது. மூலஸ்தானத்துக்கு எதிரே ஒரு சிறிய மரத்தாலான கொடிக்கம்பம். கோயில் புறத்தில் தாழம்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த்து தவிர, கல்யாணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. மொத்தமாக 30 பேர்தான் இருப்பார்கள். நேற்று பார்த்த சேதுவின் நண்பர்கள் சிலரும் அங்கு வந்திருந்தனர். அதில் ஒருவன் சிந்துவை அடிக்கடி வம்புகிழுத்தான். சிந்துவும் பதிலுக்கு அவனைக் கிண்டலடித்தாள். பின் அனைவருக்கும் அவளே எலுமிச்சம் சாறு நிரப்பபட்ட எவர்சில்வர் டம்ளர்களைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

உணவு சற்று மோசமாகத்தான் இருந்தது. ஆனால், அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியே வெற்றிலைப் பாக்கு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சிகரெட்டுகளும் இருந்தன. நண்பர்களுடன் மறைவிடம் சென்று, கோயில் சுவரில் அமர்ந்தபடி சிகரெட் பிடித்தான். சட்டென அங்கே ஓடி வந்து சிந்து, ஸ்டீபனின் விரலிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கித் தூர எறிந்தாள். அருகிலிருந்த நண்பன் ஒருவனிடம் மலையாளத்தில் கோபித்துக் கொண்டாள். சேதுவின் நண்பர்களைக் காண்பித்து, இவர்களுடன் சேர வேண்டாம் என விளையாட்டாக்க் கூறுவதைப் போல போலியான கோபத்துடன் கூறி ஓடி மறைந்தாள். நண்பர்கள் மற்றொரு சிகரெட்டை இவனிடம் நீட்டிய போது, ஸ்டீபன் ஏனோ அதனை மறுத்தான். அந்தத் திருமணம் பல விஷயங்களில் ஸ்டீபனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. 

இரவு வீடு திரும்பிய பின்பு, சேது தன் எதிர்கால வாழ்க்கை குறித்தும், தான் திருமணம் செய்யப்போகும் உறவுக்காரப் பெண் குறித்தும் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தான். இவனால் அவற்றை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அன்று இரவு முழுக்க இவனுக்கு உறக்கம் வரவில்லை. மறுநாள்  காலை புறப்பட்டாக வேண்டும். ஏதோ ஒருவித பயம் அவன் மனதைக் கவ்வியது.

மறுநாள் காலை, சேது வழக்கம் போல புறப்படும் அவசரத்தில் அவன் அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, ஸ்டீபனிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தான். ஸ்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அது அவனுக்கு அவசியமாக இருந்தது. ஆனால், சேது ஏன் நம்மை இன்னும் இரண்டு நாட்கள் தங்கச் சொல்லவில்லை. ஒருவேளை அது குறித்து அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். மேலும் தான் எந்த சூழலில் புறப்பட்டு வந்துள்ளோம் என்றும் அவனுக்குத் தெரியாதே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.

காலையில் தேநீர் அருந்தும்போது தான் சேதுவின் அப்பா இவனிடம் பேசினார். அதிகமில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள். எந்த ஊர், என்ன வேலை என்பது மாதிரி. இவன் பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மதுரைக்கு ஒரு வேலை நிமித்தம் வந்ததாகவும், அப்படியெ நண்பனைப் பார்த்துப் போக வந்ததாகவும், அப்படியே நண்பனைப் பார்த்துப் போக வந்த்தாகவும் பொய் சொல்லியிருந்தான். சேதுவிடம் கூட உண்மையை வெளிப்படுத்த விரும்ப வில்லை. ஆனால் எப்படியோ அதை சேது ஊகித்திருந்தான். தன் முகம், காட்டிக் கொடுத்திருக்கக்கூடும் என்று நினைத்தான் ஸ்டீபன்.
புறப்படும்போது, எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக்கு வரும்படியும் பணியிடத்தில் நிறைய வேலை இருப்பதால் உடனடியாக தான் போயாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சொன்னான் சேது. அடுத்த முறை வரும்போது மூணாறு செல்லலாம் என்றவன், ஸ்டீபனை பேருந்தில் ஏற்ற வர முடியாமை குறித்து வருத்தப்பட்டான்.
ஸ்டீபன் குளித்து முடித்து, பத்து மணிவாக்கில் புறப்படத் தயாரானான். டிபன் சாப்பிடும்போதுதான், அது உறுத்தியது. சிந்துவைப் பார்வைகளால் தேடினான். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ஒலித்த கொலுசுச் சத்தம் இல்லாமல் வீடு ஒருவிதமான மௌனத்துடன் இருந்த்து. அம்மாவிடம் கேட்கலாமா என நினைத்து, அப்படியே தள்ளிப் போட்டான். அவளிடம் சொல்லாமல் போவது என்னவோ போலருந்த்து ஸ்டீபனுக்கு. அவள் கிணற்றடியில் இருக்கிறாள் என்பதை மட்டும் அறிந்து  கொண்டான். ஒருவித பாரம் மனதை அழுத்தியது. இந்த இரண்டு நாட்க்கிளல் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான்  சிந்துவிடம் பேசியிருப்பான். என்றாலும், அந்தச் சிறு பெண்ணிடம் சொல்லாமல் போவதை ஒரு பெரிய இழப்பாக தனக்குள் அழுத்துவதை ஸ்டீபன் உணர முடிந்த்து. கால்கள் கனத்தன. மீண்டும் ஒரு முறை பின்கட்டு நோக்கிப் பார்த்தான். வெறிச்சோடிக்கிடந்த்து. அம்மாவிடம் சொல்லிக் கண்டு புறப்பட்டான்.

உண்மையில் அவனுக்கு அழ வேண்டும் போலிருந்த்து. வாழ்நாளில் அதுவரை அவன் மோசமாக நடந்து கொண்ட அத்தனை தருணங்களும் அந்தக் கணத்தில் அவன் மணக்கண்ணில் நிழலாடின வலதர் பேக்குடன் சாலையில் நடந்தான். தொலைவில் மலைகளின் நடுவே பேருந்து நிலையம் தெரிந்தது. அவனுக்கு ஏனோ உள்ளூர ஒரு பயத்தை அது உருவாக்கியது. இனி என்ன செய்வது, எங்கெ செல்வது என எந்தத் திட்டமும் இல்லாமல் நடந்தான்.

     சிந்து ஏன் வெளியே வரவில்லை? ஒருவேளை வேண்டுமென்றே, செயற்கையாக ஒரு மௌனத்தை ஏற்படுத்த அப்படிச் செய்திருப்பாளா? அப்படியானால் அதன் மூலம் அவள் பெறப்போவது என்ன ? தன் கொலுசுச் சத்தத்துக்கு இத்தனை வலிமை இருக்கிறது என்பதை அவள் எப்படி முன்கூட்டி அறிந்தாள்?

அப்போதுதான் சட்டென ஸ்டீபனுக்குப் பொறி தட்டியது. புறப்படும்போது மேஜையின் மேல் துருப்பிடித்த கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்த்து. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸாக இருக்க வேண்டும். எதற்காக அவள் அதை மேஜை மேல் வைக்க வேண்டும்? அது ஒருவிதமான நன்றி உணர்ச்சியாக்க் கூட இருக்கலாம்.

இரண்டு நாட்களாக, தனக்கு உயிரூட்டம் தந்த ஒளியானது அணைந்துவிட்டதைப் போன்ற வெறுமையை உணர்ந்தான். எதைக்கொண்டு இதனை ஈடேற்றுவது?  எப்போதேனும் வரும் மின்மனிப்புச்சி போன்ற உறவுகள் கூட, தன் மனதில் ஏன் இத்தனை வலுவாக இடம்பிடித்து விடுகின்றன? கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. எத்தனையோ பிரயத்தனப்பட்டும் தன்னைச் சுற்றிச் சுழலும் கழிவிரக்கத்தை அவனால் விரட்ட முடியவில்லை. கண்களில் நீர் கட்டியது.

அருகே கால்வாயில் மழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்த்தைப் பார்த்து அருகில் சென்றான்.  நொடிப் பொழுதுதான் தோளிலிருந்த லெதர் பேக்கைக் கழற்றி ஓடும் நீரில் வீசி எறிந்தான். அதுவரை தன்னை அழுத்திக் கொண்டு இருந்த பாரம் விலகி மனசு லேசாவதை  உணர்ந்தான். தொலைவில் , நீரில் அவனது லெதர் பேக் மிதந்து ஓடிக் கொண்டு இருந்தது!

- நன்றி ஆனந்த விகடன் 2007
.. இரண்டு வார கதையாக வெளியானது 

April 25, 2016

ஜீன்ஸ் அணிந்த பறவைகள் - சிறுகதை

நினைவில் தொலைந்த ஞாபகமொன்று பறவையாகி வானத்தினூடே சிறகசைக்காமல் தாழ்ந்து வந்து தெருக்கோடி மரத்திலமர்ந்து மெல்ல தரையிறங்கி தத்தித் தத்திச் சட்டென ஒரு பெண்ணாக மாறி ஜீன்ஸ் பேண்ட் ஷர்ட் சகிதம், தன்னை நோக்கி நடந்துவருவதாக அவளை அந்தக் கூட்டத்தினூடே நடைபாதையில் கண்டமாத்திரம் அறிந்துணர்ந்தான்.

ஞாபகங்களை சிறகிடுக்களில் ஒளித்து வைத்தவாறு வெளியினூடாக காலங்களை கடந்துவரும் தன்மை பறவைகளுக்கு மட்டுமே உண்டு என் எண்ணம் கொண்டிருப்பவன்.

பிரபஞ்சத்தின் தொலைந்துபோன அனைத்து ஞாபங்களும் ஒரு பறவையின் அசைவற்றுக் கிடக்கும் அதன் கருவிழியில் உறைந்து கிடப்பதாகவும் தேவை கிளைக்கிறபோது தனக்கிஷ்டப்பட்ட காலங்களில் இஷ்டப்பட்ட ரூபம் தரித்து மனிதர்களை சஞ்சலமுறச் செய்கின்றன. என்பதாகவும் தனக்குத்தானே கற்பனை செய்து கொள்வான். இல்லாவிடடால் ஒரு அதிசயம் போல திடுமென அவளை அங்கே காணநேர்ந்த நிகழ்வு சாத்தியமற்றதென்பதே அவன் தீர்மானம்.

ஒருவேளை தான் கனவில் கண்டபடி (இரவுகளில்) தன் பூர்த்தியடையாத கவிதைகளை பொறுக்கி எடுத்துச் செல்லும் பெண் இவளாக இருப்பாளோ; தன்னை தேடியும் விதமாகத்தான் இங்கே வந்து பின் தன்னை இவன்தான் என அடையாளம் காண முடியாமல் தத்தளிக்கிறாளோ! சட்டென தன்னுள் ஒரு பதட்டம் கூட சற்றுமுன் கடந்து சென்ற அவளின் திசைநோக்கி திரும்பினான்.

கூட்டத்தினூடே அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளைக் கூக்குரலிட்டு அழைத்து பேச முடிவுசெய்து வேகமாக பின் சென்றவன் வழக்கமாக தன்னை பார்க்கும் அந்த போலீசார் இருவரையும் எதிர்கண்டதும் தன் முடிவை மாற்றிக்கொண்டபடி மீண்டும் தன் பழைய இடத்தில் வந்து நின்று கிரில் கம்பிகளில் சாய்ந்து கொண்டான்.

அது ஒரு கடற்கரைச் சாலையின் நடைபாதை தினமும் சாயங்காலங்களில் கவிதை எழுதும் நிமித்தமாக அவன் அங்கே வருவது வழக்கம்.

மரபும் நுட்பமும் மிகைந்த பிரம்மாண்டமான பிரிட்டிஷ் கட்டிடங்களைக் கொண்ட அந்த கடற்கரைச் சாலையின் கட்டிடங்களுக்குக் கீழே நடைபாதையின் பாதுகாப்பு கிரில் கம்பிகளில் சாய்ந்தபடி, மாலைநேர கடற்கரை வாசிகளைக் காணவும் பர்முடாஸ் செய்து கொள்ளவும், குழந்தைகளை சந்தோஷப்படுத்தும் பலூன் வியாபாரிகளின் முகச் சுருக்கங்களையும், உடன் அவர்களது இடுங்கிய கண்களுக்கப்பால் தெரியும் போர்வை போர்த்தியபடி மறையும் கடவுளரின் நிழலுருவம் குறித்தும் தானறிந்த ஒரே காரியமான கவிதையின் மூலமாக ஆய்வு செய்யும் பொருட்டாக மாலை நேரங்களில் தினமும் அவன் இங்கே வருவது வழக்கம்.

நடைபாதை வியாபாரிகளின் கூச்சல்களுக்கும் கடலலைகளின் பேரிரைச்சல்களுக்குமிடையே அவன் அங்கே கவிதை எழுத முயற்சி செய்வதுண்டு. இதுவரை அவன் எழுதியதனைத்தும் பூர்த்தியடையாத கவிதைகள். அவன் அங்கே கசக்கி எறியும் அந்தக் கவிதைத் துண்டுகளை யாரோ எடுத்துச் செல்வதாக நினைத்துக் கொள்வான். அந்தப் பெண் சிண்ட்ரல்லாபோல் தன் கொடுமைக்கார சித்திக்கு பயந்து ட்ரங்கு பெட்டியில் இவனது கசங்கிய அந்தக் கவிதைத் துண்டுகளை ஒளித்து வைத்திருப்பதாக ஒரு நாள் கனவில் கண்டான்.

அப்படிப்பட்ட பெண்ணை தான் எப்போதேனும் நேரில் சந்திக்க வாய்ப்பு நேருமானன் தான் மிக மோசமானவனாக தன்னை அவளுக்கு அடையாளம் காட்டிக் கொள்ள நேரிடும் என் தன்னைக் குறித்து மிக நன்கு அறிந்தவனாக தனக்குள்ளே பெருமிதமும் பூரிப்பும் பொங்க சித்துக் கொண்டான்.

இப்படியாக அவன் ஒரு மாலை வேளையில் ஆவிடத்தே வழக்கம் போல் நின்று கொண்டிருந்ததுபோது ஒரு முறை இரண்டு போலீசார் அவனருகே வந்தனர். அங்கிருக்கும் சில வியாபாரிகளின் வேலையாகத் தானிருக்கும் என்பதை ஊகித்தறிந்து கொண்டான்.

ஒரு வியாபாரியாக அல்லாமல் தினசரி அவன் இந்த இடத்தில் நடைபாதையை ஆக்கிரமித்துக் கொள்வதில் ஒரு சிலருக்கு இவன் மேல் கோபமிருந்தது. சிறிய டப்பிகளில் ஆண்மைக்குறைவு லேகியம் விற்கும் வயதான கிழவரொருவர் எப்போதும் மாலைவேளைகளில் காலதாமதமாக வந்து, இவன் இங்கே நிற்பதால் முகம் சுணக்கமுற்று சக வியாபாரிகளிடம் குறைபட்டுக் கொள்வதுண்டு.

இவனது தோரணைகளை விபரீதமாக கண்டதாலோ அல்லது மிகையான பாவனைகளின் காரணமாகவோ யாரும் இவனிடம் பேச நெருங்கியதில்லை. தங்களிடமிருந்த இவன் மீதான வன்மத்தைத் தீர்க்க நெடுநாளாக காத்திருந்த வியாபாரிகளிதான் கடைசியாக போலிசாரை அணுகியிருக்கின்றனர் என்பதையும் புரிந்து கொண்டான்.

நல்லவேளையாக சிறுவயதிலிருந்தே இவன் பள்ளிக்கூடக் காலங்களில் சைக்கிளில் எதிர்ப்படும் போலீசாருக்கு முகமன் கூறுவதை வழ்க்கமாக்கிக் கொண்டிருந்தான். அந்த பழக்கத்தின் காரணமாக இந்தப் போலீசார் இருவரையும் தேனீர் கடையில் முன்னெப்போதோ பார்த்தபோது முகமன் கூறியிருந்தான். அது இப்போது வசதியாக இருந்தது. இவனைக் கண்டதுமே அவர்களது முகத்தில் தெரிந்த ஒருவித ஏமாற்றத்தை வைத்தி இவன் இதனை ஊகித்தறிந்து கொண்டான்.

தினசரி இங்கே நீ என்ன செய்கிறாய்? எதற்காக வருகிறாய்?
கவிதை எழுதுகிறேன் அல்லது எழுதுவதற்காக முயற்சி செய்கிறேன்.

இந்த பதிலைக் கேட்டதுமே தங்களது தொப்பிகளில் காற்றில் பறந்து செல்வதை போல அவர்கள் திடுக்கிட்டனர். ஒரு கவிதை எழுதுபவன் முன் தாங்கள் எப்படியான தோரணையை மேற்கொள்வதெனத் தெரியாமல் ஒரு நிமிடம் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர். பின் மீண்டும் தங்களை போலீசாக்கிக் கொண்ட அவர்கள் அவன் கையில் வைத்திருந்த கவிதைத் தாள்களைப் பிடுங்கி அதனை திருப்பித் திருப்பி பார்த்தவாறே ஜேப்பியில் நுழைத்துக்கொண்டு, இனி இங்க வந்து கவிதை எழுதாதே இது வியாபாரிகளுக்கு மிகவும் தொந்தரவளிக்கிறது என எச்சரித்தனர். தெரிந்த முகமாக இருப்பதால் உன்னை எச்சரிப்பதோடு நிற்கிறோம் என்று கூறிய போலிசாரிடம் இவன். கவிதை எழுதாமல் வெறுமனே நான் வந்துபோக அனுமதியுண்டா எனக் கேட்க, அதற்கு ஒருவரும் தடைசொல்ல முடியாது. ஆனால் கவிதையை நீ எங்கு சென்று எழுதினாலும் நாங்கள் அங்கு வருவோம் என்று கையில் கொண்டு வந்திருந்த இரும்பு விலங்கைக் காட்டி எச்சரித்து கவிதைகள் வியாபாரிகளையும் அரசு உத்தியோகஸ்தர்களையும் மிகவும் தொந்தரவு செய்கின்றன எனக் கூறி அங்கிருந்து நகர்ந்தனர். மெய்மையற்றுப் போன அவர்களது இருப்புதான் இதற்கு காரணம், சுதந்திரமான மனவெளியில் சங்குபோல கவிதை தானே முகிழ்வதையாராலும் தடுத்து நிறுத்த முடியாது என் அவர்களிடம் சொல்ல நினைத்து பின் தனக்குத்தானே அவன் தலையசைத்துக் கொண்டான். அதன் பிறகும் மாலைநேரங்களில் தொடர்ந்து வரும் இவன் போலீசாரை ஏமாற்றும் விதமாக எவருக்கும் தெரியாமல் தன் மனதுள் கவிதைகளை இயற்றி இருவரும் பாராத சமயங்களில் அதனை ஒரு பேப்பரில் கிறுக்கி கீழே எறிந்துவிடுவன். அவன் கீழே எறியும் அவனது பூர்த்தியடையாத கவிதைத் துண்டுகளை ஒரு போதும் அவன் மறுநாள் பார்த்ததில்லை.   

இப்படியாக அவன் கவிதைகளை அன்றும் ரகசியமாக மனதுள் தைத்துக்கொண்டிருந்த சமயத்தில்தான் திடுமென அவளின் முகத்தைக் கண்டு பேரதிசயம் கண்ணுற்றவனாக தடுமாறிப் போனான்.

இரவில் சரியும் எரிநட்சத்திரத்தின் வேகத்தோடும் வாழ்ந்து கெட்ட குடும்பத்தின் இளம்பெண் வீதிக்கு வரும்போது காணப்படும் பதட்டத்தோடும் அவசரமாக அவள் வந்து கொண்டிருந்தாள். சட்டென அவனால் அவள் குறித்த ஞாபங்களை தன்னுள் மீட்டெடுக்க முடியவில்லை. பதட்டதில் அவளது பெயர்கூட தொலைந்து போனதை எண்ணி வேதனை மிகுந்தாலும் தன்னைக் கண்டதும் உயிர்ப்புறும் அவளது கருவிழியில் ஒளிமிகுந்து தன்னை அவளோடு பழகிய காலவெளிகளுக்கு மீண்டுமொருமுறை அழைத்துச் செல்லும் என்றும் தானும் அவளிடம் மறந்து போய் விட்டதை வெளிக்காட்டாமல் பாவனைகள் செய்து அந்தச்சுவடுகளை மீட்டுகொள்லாமல் என்றும் தன் அதிமேதாவித் தனமான கர்வத்தோடு காத்திருந்தவனுக்கு அவள் கண்டும் காணாதவளைப் போல் நகர்ந்து சென்றது பெரும் அதிர்ச்சியைத் தந்தது. உதாசீனம் கொடியது, விஷத்தைக் காட்டிலும் பன்மடங்கு வேலை செய்யக்கூடியது, நிலநடுக்கத்தைப் போல பேரழிவுகளை உள்ளடக்கியது என்பதை அவன் அந்த நொடிப்பொழுதில் உணர்ந்து கொண்டான். யார் அவள், எதற்காக இங்கு அவள் வரவேண்டும் எதன் பொருட்டு அவள் தன்னை உதாசீனப்படுத்த வேண்டும் அவளைக் கண்டதும் சரம் சரமாக தன் உயிரில் எதனால் தீப்பற்றி எரிய வேண்டும் என பலவிதமாக தன்னுள் கேள்விகளை எழுப்பிக் கொண்டவன் தன்னுள்ளிருந்த அவளது பெயரைக்கூட அகழ்ந்தெடுக்கயியலாத தன் நிலைக்காக மிகவும் விசனம் கொண்டான்.

நான்கு பரிச்சயமான அவளது கருவிழிகளும் விசித்திரமான அவளது கூந்தலின் நறுமனம் சட்டென தன்னுள் வெகுநாட்களாக பழகியிருந்த அவளது உணர்வின் மிச்சமாக தங்களை அடையாளம் கண்டுகொண்டதுதான் அவனுக்கு மிகுந்த ஆச்சரியமாக இன்னமும் அதிர்வலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. ஒளிரும் அவளது விழிகளுக்கப்பால் ஈசல் ஓராயிரம் படபடக்கும் ஈரமான ரகசியஸ்தலங்களில் தனது இருப்பை கண்டுகொண்டவன் அந்த நினைவு அணுக்களின் மூலக்கூறுகளில் ஏதோ ஒரு புள்ளி இப்போது முழுவதுமாக தன் வசத்தில் சுண்டி இழுப்பதை உணர்ந்தான். அதன் வெளிப்பாடுதான் அவனுள் ஏற்படும் இதனை பதட்டமும் படபடப்பும்.

ஆடைகளைப் படபடக்கச் செய்யும் கடற்கரையின் மாலைக்காற்றும், கார் ஜன்னல்கள் வழியே வேகமாய் உதறிச் செல்லும் சிந்தஸைஸரின் மிச்சங்களும், சற்று முன்னரே பூத்துவிட்ட கடற்கரை சாலையின் வரிசையான மஞ்சள் விளக்குகளும், சிறுவர்களின் காரணமற்ற கூக்குரக்களுக்கு பின்புலமாய் செயல்பட்டுக் கொண்டிருந்தன.

இவை எதுவுமே நிகழாதவாறு இவன் மட்டும் இன்னமும் அங்கேயே நின்று கொண்டிருந்தான். வெகுநேரமாகுயும் அவள் வராத காரணத்தால் மீண்டும் பறவையாகி பறந்து சென்றிருப்பாளோ என எண்ணிக்கொண்டான். வேவு பார்த்துக்கொண்டிருந்த போலீசார் இருவரும் தேனீர் அருந்தச் சென்றிருந்ததால் இவன் மெல்ல அவள் சென்ற திசை நோக்கி வீதியின் முடிவு வரை நடந்து சென்றன். அவன் எதிர்பார்த்தது போல அங்கே சில பறவைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தன். என்ன ஆச்சரியம் இவன் அவற்றினூடாக நடந்து சென்றபோது ஒரு பறவையும் அசையவில்லை. நினைவில் மறைந்த பிறகு எல்லா பெண்களும் பறவைகளாகத்தான் மாறிவிடுகின்றனர். திடீரென தியேட்டர் வாசலில் முற்றிலும் அந்நியமானதொரு நபருடன் எதிர்ப்படுகின்றனர். அல்லது தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பாளராகத் தோன்றி உலக நியதிகள் குறித்து விசனம் கொள்கின்றனர்.

இவன் அந்த பறவைகளின் அருகே நின்று ஒரு நிமிடம் எல்லா பறவைகளையும் கூர்ந்து கவனித்தான். இவற்றில் ஏதோ ஒன்றாகத்தான் அவளிருக்க வேண்டும். அவள் பெயர் ஞாபகத்திலிருந்தால் இங்கே அழைத்து பறவைகளினூடே அடையாளம் கண்டு பிடிக்கலம்.

சோர்வுற்றவனாக அவன் மீண்டும் தன் பழைய இடம் நோக்கி திரும்ப எத்தனித்தபோது சூழல் இருட்டிலிருந்தது. சற்று மறைவாக காணப்பட்ட இடமொன்றில் வேசிகளும் பிச்சைகாரர்களும் ஒன்றாகக் கூடி எதையோ தீவிரமாக கலந்தாலோசித்துக் கொண்டிருந்தனர். (யாரோ ஒரு உயர்ந்த நபரிடம் தங்களுக்கான கட்டளைகளைச் செவி மடுத்துக்கொண்டிருந்த அந்தக் கூட்டத்தில் திருடர்களும் ஒருவரும் அறியாதவாறு தங்களை முக்காடிட்டு மறைத்தபடி உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தனர்) சற்று விலகி நின்று கொண்டிருந்த ஒரு தடிமனான வேசியிடம் ஒரு குடும்பத்துப் பெண்மணி தன் குறைகளைக் கூறி அழுது கொண்டிருந்தாள். வாயில் வெற்றிலை மென்றுகொண்டிருந்த வேசி அவ்வழியாக சென்ற இவனை அழைத்து பால்யத்தில் நீ தவறவிட்ட காதலன் இவனா பார்த்து சொல் என அந்த குடும்பப் பெண்மணியிடம் கேட்க, அவள் கலங்கிய விழிகளுடன் இவனைப் பார்த்து பின் மறுதலித்தவளாக மீண்டும் வேசி முன் தலைகுனிந்தாள். வழியில் ஒருவன் இவனிடம் அந்த இடத்தின் பெயரை கேட்க அப்போது தான் அவனுக்கு தனக்கே அந்த இடத்தின் பெயர் மறந்துபோனது தெரியவந்தது. ஒரு கதைக்காக தான் அடையாளங்களற்று படைக்கப்படிருப்பது ஒரு மின்னலைப் போல அவனுக்குள் பளிச்சிட்டு மறைந்தது. அதில் தீவிர கவனம் குவிப்பது பவம் என்பது போல அதிலிருந்து விடுபட்டவனாக வெறுமனே அந்த இடத்தின் பெயரைக் குறித்து யோசித்தான் எதுவுமில்லாமல் தனியாக வரும் ஒருவரிடம் பேசுவதன் மூலம் இந்த இடம்குறித்த தனது ஞாபகங்களை மீட்டுக்கொள்ளலாம். என்று நம்பியவன் அந்தத் தனியாளுக்காகக் காத்திருந்தான். நடைபாதையில் கண்ணாடிகளை சுவர்களாகக் கொண்ட ஒரு கேக் கடைமுன் தனது பிம்பங்களோடு கேக்குகளையும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த சிறுவன் இவன் எதிர்பார்த்த தன்மையுடன் காணப்படவே அவனிடம் சென்று நட்புறவு கொண்டவனாக இந்த இடம்குறித்து ஞாபகங்களைச் சேகரிக்க முயல, அவனோ தனக்கே வாங்கி தருமாறு கேட்டுக்கொண்டான். இரண்டு நாட்களாக பசியோடிருப்பதாகவும் வீடு திரும்ப முடியாத தன் சோகத்தையும் சொன்ன அவன் கேக்குகள் உள்ளே போனதும் இவனுக்குத் தேவையான ஞாபங்களனைத்தும் தானாக வெளிப்படும் என உறுதியளித்தான். ஆனால் அதற்கு அவசியமற்றுப் போனது இருவரும் கேக்குகளை பிய்த்து உண்டவாறு கடையிலிருந்து வெளிப்பட்ட போது அவன் எதிர்பார்த்தது போல அவள் திரும்பி வருவதை இவன் பார்த்துவிட்டான்.

நொடிப்பொழுதும் தாமதிக்காமல் சட்டென அவள் முன் ஓடிச்சென்று இவன் குறுக்காக நிற்க, அவளோ எதிர்பாராத இந்த நிகழ்வினால் அதிச்சியுற்றவளாக திகைத்து நின்றாள். இவன் சாய்ந்து கொண்டிருந்த அதே காரில் கம்பிகளில் இப்போது அந்த சிறுவன் சாய்ந்து கொண்டிருக்க இவன் அவனிடம் சற்றுமுன் அவள் தன்னை கடந்து சென்றபோது தன்னுள் நிகழ்ந்த பதட்டங்களையும் தொடர்ந்த நிகழ்வுகளைக் கூறி அவளிடம் மிச்சமிருக்கும் தனது ஞாபகங்களைத் தந்து தன் மனப்பிரயாசையைத் தீர்த்து வைக்குமாறு கேட்டு நின்றன்.

ஒரு நிமிடம் நிதானமாக அவனது விழிகளை உற்று நோக்கிய அவள் பின் தலைகுனிந்தவாறு இவன் கூறியதைப்போல இரவுகளில் வந்து இவனது கவிதைகளை பொறுக்கிச் செல்பவள் தான்தான் என்றும், பூர்வஜென்மத்தில் தொலைத்த தன் காதலன் தனக்கு அனுப்பும் ரகசிய செய்திகளாக அவற்றைச் சேகரித்து வருவதாகவும் கூறிய அவள் தனது ஜீன்ஸ் பேண்டிலிருந்து இரண்டொரு கவிதைத் துண்டுகளை வெளியில் எடுத்தாள். கடைசியில், இது தான் எதிர்பார்த்தது தான் என்றெண்ணியவன் உற்சாகமிகுதியால் கூக்குரலிட்டான். சிண்ட்ரல்லா போல நீ ஒரு ஏழைச்சிறுமி என்றல்லவா கற்பனை செய்திருந்தேன் என அவளிடம் அவன் உரக்கக் கூறிய போது அவனது குரலின் கர்வம் சர்ப்பத்தின் வாலைப் போலச் சுழன்றது. 
அவள் அதுகுறித்து சற்றும் கவலைப்படாதவளாக கவிஞர்களின் இயல்பு குறித்து முன்பே அறிந்தவளாய் இந்தக் கவிதைகள் எழுதுகிரவனை தான் முகவும் நேசிப்பதாகவும் ஆனால் அது இவன்தான் என்பதற்கு ஆதாரமாக தன்முன் ஒரே ஒரு கவிதை எழிதினால் போதும் என்று கூர, உடனே இவன் சற்று தூரத்தில் கேக்கை சாப்பிட்டபடி நின்ற சிறுவனிடம் நன்றி தெரிவிக்கும் விதமாக கையசைத்தபடி, தான் எப்போதும் தயாராக வைத்திருக்கும் காகிதத் துண்டுகளை எடுத்து கவிதை எழுதத் துவங்க, சற்று தூரத்தில் இதற்கெனவே நின்றிருந்தாற்போல் அந்த இரண்டு போலீசாரும் இவனை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவன் அவர்களையும் அவர்களது கையில் கனமாக தொங்கும் இரும்புக் கைவிலங்களையும் பார்த்து அதைப்பற்றி சிறிதும் சட்டை செய்யாதவனாக தன் கவிதைக்கான கடைசி வரியை எதிரே நிற்கும் இவளது விழிகளில் வாசித்தபடி நின்று கொண்டிருந்தான். பின் அவளுக்காக வெகுநேரம் காத்திருந்த பறவைகளை அங்கிருந்த வியாபாரிகளின் விரட்டிக் கொண்டிருந்தனர்.

நன்றி  குமுதம் தீராநதி 

December 18, 2015

மலைவீட்டின் பாதை

மலைவீட்டின் பாதை

நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்த்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி வளர்ந்திருந்தது. உயரமான மரங்கள் அவனுக்குள் மருட்சியை ஏற்படுத்தின. முக்கி முனகி உறுமும் இன்ஜின் சப்த்ததின் பின்னணியில் இந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பது விநோதமாக இருந்தது.

சாலையோரம் வேகத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். பள்ளிச் சிறுவர்கள் மழைக்குத் தலையில் உரச் சாக்கினைக் கவிழ்ந்திருந்தனர். முகம் முழுக்க பவுடர் அப்பி, நெற்றியில் விபூதி இட்டிருந்தனர். குழந்தைகள் கையசைத்தபோது இவனும் பதிலுக்குக் கையசைக்க விரும்பினான். ஆனால், முடியவில்லை. மனசு மிகவும் பாரமாகிக் கனத்து இருந்தது. மரணம்
தன்னோடு சக பயணியாக அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தான்.

இதுவரை அவன் குமுளிக்கு வந்ததில்லை. குமுளியில் அவன் தேடிச் செல்லும் சேது, கல்லூரியில் ஜுனியராகப் படித்தவன். ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கியிருநதவன். அது கல்லூரித் தலைவனாக ஸ்டீபன் நெஞ்ச நிமிர்த்தி நடந்த காலங்கள். வாழ்க்கை அப்போது ஒரு முரட்டுத்தனத்தையும், துணிச்சலையும் பரிசாகத் தந்திருந்தது. தலைமைப் பண்பும் அலட்சியமும் சக நண்பர்கள் மத்தியில் அவனுக்கென ஒரு விநோதமான வசீகரத்தை உண்டு பண்ணியிருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில்தான் எந்த வேலைக்கும் பொருத்தமற்றவன் என்பதை உணர்ந்து கொண்டான்.
வாழ்க்கைக்கும் கல்லூரிக்குமான இடைவெளியை அவன் மிகவும் தாமதமாக உணர்ந்தான். வேலை அற்றவனின் பகல் பொழுதுகள் நீண்டு இருந்தன. அங்கே கை குலுக்கல்கள் இல்லை. உபசரணைகள் இல்லை. சிகரெட் புகை தனக்கு மேல் உயர்ந்து செல்வதை  விரக்தியுடன் வேடிக்கை பார்ப்பதில்  பெரும்பாண்மையான நேரங்களைக் கழித்தான். அவனது குடும்பம் இரண்டு ஆசிரியப் பெருந்தகைகளைக் கொண்டது.
உடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வேலையிலும் சொந்த தொழிலிலும் தீவிரமாகப் பயணம் பெற்றுவிட, அவனுக்கு அவனது அப்பா சிபாரிசு செய்த வேலைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை சொல்லி நிராகரித்தான். அதற்கான காரணம் ஏதும் அவனிடம் இல்லை. ஊர் ஊராகப் பயணிக்கும் விற்பனை பிரதிநிதி வேலைதான் தனக்கு உருப்படியானது என நம்பினான். அதற்காக இவனும் பலமுறை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்குப் படையெடுத்து தான் மிச்சம். அது போன்ற வேலை கிடைப்பதாகத் தெரியவில்லை. சரளமான ஆங்கிலம் இவனது நாக்குக்குப் பழக்கப் படாதது அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
                நிராகப்பிலும், தனிமையிலும், கழி விரக்கத்திலுமாகக் கழிந்த பொழுதில், தான் ஒளிந்துகொள்ள, தன்னை முற்றாகப் புதைத்துக் கொள்ள அப்போது அவனுக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. நூலகங்களுக்குச் சென்று, வெகு நேரம் வெறுமையைப் புரட்டிக் கொண்டு இருந்தான். இந்தக் காலகட்டத்தில்தான் நண்பன் ஒருவன் மூலமாக, புதுயுகம்  எனும் இலக்கியச் சிற்றிதழ் கிடைத்தது. அதில் வெளியான (பாதசாரி என்பவர் எழுதியிருந்த) காசி எனும் கதையின் நாயகன் இவனை வசீகரிந்திருந்தான். இவனும் தன்னை ஒரு காசியாக உருவகம் செய்து கொண்டான். ஸ்டீபனிடமிருந்த முரட்டுத்தனம் விலகி, மிகவும் மசமசவென, அதே சமயம் நுண்மையானதாக மாறிக்கொண்டு இருந்தான். நவீன  இலக்கியவாதிகளின் பெயர்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தின.
     இவனது இந்த மனநிலைக்கு நேர் எதிராக, வீடு, உறவுகள் மத்தியில் இவனது நடத்தை ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களின் உலகம் முழுக்க முழுக்க இவனுக்கு எதிரானது மட்டுமல்ல, தலைகீழானது. இதன் காரணமாக, இவனுக்கு வீட்டில் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வன்மம் சுழன்றது. அனைவரையும் வெறுத்தான். தன்னையும் தன் நுட்பமான உலகையும் அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என இவன் திடமாக நம்பினான். இன்றில்லா விட்டாலும் பினினொரு நாளில் மகத்தான காரியங்களைத் தன்னால் ஆற்ற முடியும் என அவன் திடமாக நம்பினான். அதற்காக அவன் வீட்டில் பெரும் அவமானங்களைப் பரிசாகப் பெற நேர்ந்தது. குறிப்பாக, உணவுப் பொழுதின்போது வெளிவரும் வார்த்தைகள் அவனைப் பெரிதும் சமன்குலைத்தன. இந்தச் சமயங்களில் சிகரெட் அவனுக்கு உற்ற நண்பனாக ஆறுதல் அளித்தது. புகைப்பதற்கு பல சமயங்களில் மிகுந்த பிரயாசை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் வீட்டின் அருகே இருந்த தேநீர்க் கடையைக் கடந்து போகும் தருணத்தில், அவன் முதுகில் பாரமாகப் படியும் ஒரு குற்ற உணர்ச்சி... அதனை அவன் எப்படி விளக்க முடியும்! எப்போதேனும் அரிதாகச் சொற்ப பணம் கிடைத்து, பாக்கியின் பாதியைக் கொடுக்க முடிகிறபோது அவனுக்குள் ஊற்று போல் பெருகும் உணர்ச்சி இருக்கிறதே, பாருங்க.. நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன். நீங்கள் என்னைக் கணித்திருந்தது போல நான் உங்களை ஏமாற்றுபவன் இல்லை, நேர்மையானவன், நீதிமான்!என்பது போல ஒரு பரிசுத்தமான உணர்வு உடல்முழுக்க வியாபிக்கும் அளவுக்கு அவமானகரமான சூழலில் பிடிக்கப்பட்டு இருந்தான். மாலை நேரங்களில் நீரற்ற ஏரி மைதானத்தின் புல்வெளியில் அமர்வான். சுற்றி இருந்தவர்களெல்லாம் விலகிச் சென்ற பின் மெள்ள இருள் தன் மேல் கவியும் சந்தர்ப்பத்தில், புல் தரையில் படுத்தபடி மேலே உள்ள நட்சத்திரங்களையும் பால் வழி மணடலங்களையும் குறித்து தன்னைப் போல எத்தனை இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி யோசிப்பார்கள் எனவும், மற்றும் தான் கேள்விப்பட்ட ஊர்களின் பெயர்களையும் வாசித்த நாவல்களில் நிலப் பகுதிகளையும கற்பனையில் கொண்டுவந்து அங்கே தானும் சஞ்சாரம் செய்வதாகவும் கற்பனை செய்து பார்ப்பான். இது போன்ற சமயங்களில் சிகரெட் ஒரு காதலியைப் போல மிகவும் இணக்கமாக இருப்பதை உணர்ந்தான்.

ஒரு நாள், மிகுந்த நெருக்கடியின் காரணமாக சமையலறையில் கடுகு டப்பாவில் அவன் கை வைக்கப்போக அது பெரும் பிரச்சனையாகி வெடிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக டைரியில் இவன் எழுதிவைத்திருந்த கவிதைகளை, தங்கை எடுத்து வந்து அப்பாவிடம் காண்பித்தாள். அவன் அம்மாவோ, மகன் மிகக் கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் கூச்சல் இட்டாள். மகன் ஏதோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அதன் பொருட்டே இப்படி எழுதிக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடைநிலை ஆசிரியத் தம்பதியர் கருதினர். உண்மையில், தான் இல்லாதபோது தனது டைரியும் தனது கவிதைகளும் பிறரால் வாசிக்க நேர்ந்ததையே ஸ்டீபனால் தாங்க முடியவில்லை. தங்கைக்கு ஒரு அறைவிட்டான். தந்தை தடுக்க வர, அவரைப் பிடித்துத் தள்ளினான். அம்மா ஓடி வந்து இவன் முதுகில் அடிக்க, அடுத்த சில நொடிகளில் மூவரும் சரமாரியாக ஸ்டீபனை ஒரு பைத்தியக்காரனைப் போல அடிக்கத் துவங்கினர். இந்த நெருக்கடியான சூழலில் கூட ஜே.கிருஷணமூர்த்தி இந்த சூழலை என்னவாக எதிர் கொள்வார். ஆதவன் இதனை எப்படி விவரிப்பார் என்றெல்லாம் அவன் மனம் கேள்விகளை எழுப்பியது. அவனது முதுகில் ரயில் தடதடத்து ஓடியது. அவன் தலைகுப்புற ஒரு ஆற்றில் விழுந்தான்.
அவமானத்துடன் அன்று இரவு முழுக்க எங்கெங்கோ அலைந்து திரிந்தான். இதனை ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கூட அந்த இரவில் உதித்தது. உள்ளூர பயத்துடன் மறுநாள் விடியற் காலை வீட்டினுள் நுழைந்து, தனது துணிமணிகளை ஒரு லெதர்பேக்கில் திணித்துக் கொண்டு வெளியேறினான். மதுரை வந்து நண்பனைச் சந்தித்து, பகல் முழுக்க மீனாட்சி கோயில் மற்றும் மலையாளப் படம் எனச் சுற்றித் திரிந்து, இரவில் நண்பனுடன் பீர் குடித்துவிட்டு, பின் அவனது ஏற்றுமதி நிறுவனத்திலேயே தங்கினான். காலையில் வாட்ச்மேனிடம், நண்பனிடம் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு மதுரை பேருந்து நிறுத்தத்துக்கு மழையினூடே நடந்து வந்து, எங்கே போவது எனத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்த போதுதான், குமுளியில் இருந்த சேதுவின் ஞாபகம் வந்தது.  
பேருந்து குமுளியை அடைந்திருந்தது.
ஸ்டீபன் லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு கடைசி ஆளாகப் பேருந்திலிருந்து இறங்கினான். சாலையோரம் பேருந்து சற்றுச் சாய்வாகச் சரிந்திருந்தது. இரண்டு புறமும் அடர்த்தியான செறிவான மரங்கள் நிறைந்த வனம் அது. குமுளி பேருந்து ஒரு செக்போஸ்ட்டுக்கு இந்தப்புறம் நிறுத்தப்பட்டு இருந்தது. தமிழக எல்லை முடிந்த கேரள எல்லை இங்கிருந்து துவங்குகிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தான்.
சற்று முன் மழை பெய்திருந்ததால், அந்தச் சிறிய கடைத்தெரு முழுக்க பகல் பொழுதிலும் ஒருவித மூட்டத்தோடு காட்சியளித்தது. ஒருபுறம் அடர்ந்த கானகத்துடன் கூடிய மலைச்சரிவும், இன்னொருபுறம் வரிசையாக ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள் கொண்ட கடைகளுமாக தார்ச் சாலை நீண்டிருந்தது. சிறிய சிறிய தள்ளுவண்டிகளில் கண்ணாடிப் பெட்டிகளுடன் தேநீர்க் கடைகள் வழி நெடுகக் காணப்பட்டன. தலைப்பாகையும் வாயில் பீடியுமாக, மலையாளிகளுக்கே உரித்தான கலர் கலரான கைலியை மடித்துவிட்டபடி நடமாடிக் கொண்டு இருந்தனர். பழ வியாபாரிகள், கூலிகள், மீன் வாங்கக் கையில் கூடையுடன் முண்டு அணிந்தபடி அலையும் நடுத்தர வயதுப் பெண்கள் என சில பிரத்யேக மலையாள அடையாளங்களுடன் அந்தப் பகுதி ஸ்டீபனை வசீகரித்தது. தமிழ்ப் பையனும் மலையாளப் பெண்ணும் கைகோத்து நிற்பதுபோல பல இடங்களில் கடைகளின் முகப்புப் பலகைகளில் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. சேதுவின் முகவரியைக் காண்பித்து வழி கேட்டபடியே, நீண்டு சென்ற தார்ச் சாலையில் நடந்து சென்றான். வரிசையான கடைகள் கடந்த வலப் பக்கமாகத் திரும்பி நடந்தான். தேயிலைத் தோட்டங்கள் பசேலென விரிந்து கிடந்தன. கறுத்த பாம்பின் தோலாய் நீண்டிருந்த சாலையின் ஓரங்களில் மரங்கள் உயர்ந்து மேகங்களோடு அசைந்தன. குளிச்சியான காற்று உடலைத் தழுவ, மூச்சை இழுத்து வெளியே விட்டவாறு மலைப்பாதையில் நடந்து சென்றான். காலையில் மதுரையிலிருந்து அவன் புறப்படும்போது இருந்த மனோநிலையிலிருந்து இந்தப் புதிய சூழல் அவனை முற்றாகப் பிடுங்கி எறிந்திருந்த்து.
கடந்த இரண்டு நாட்களாக தான் எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறான சம்பவங்கள் குறித்தும், இப்போது தான் புதிதாகச் செல்லவிருக்கும் சேதுவின் வீடு குறித்தும் மனதுக்குள் கேள்விகளை உருவாக்கியபடி நடந்து கொண்டு இருந்தபோது, சேதுவின் வீடு நெருங்கி வந்தது.
மலைச் சரிவின் ஒருபக்கமாக மண் படிக்கட்டுகள் வழியே ஏறி, சற்று உயரமான தளத்தில் கட்டப்பட்ட அந்த ஓட்டு வீட்டு முன் நின்றான்.
இதுதான் சேதுவின் வீடா?

படலைத் திறந்து சேதுவின் வீட்டுக்குள் நுழைந்தான் ஸ்டீபன். எதிரே சற்றுக் கீழே, தார்ச்சாலையில் ஒரு பேருந்து கடந்து சென்றது. அப்பால் சரிவாக பச்சையாக விரிந்துகிடந்த தேயிலைத் தோட்டம், மலை முடிச்சுகள், நீல வானம், நகரும் மேகங்கள் என அந்த இடமே முற்றிலம் வேறொரு உலகத்துக்குள் தான் வந்திருப்பது போன்ற பிரமையை அவனுக்குள் உண்டுபண்ணியது.
ஒலிப்பானை அழுத்தியதும் கிணற்றடியிலிருந்து பின்வாசல் வழியாக ஒரு சிறு பெண்ணின் முகம் வெளிப்பட்டது. கைகளில் சோப்பு நுரையோடு, ஒரு கையால தலைமுடியை ஒதுக்கியபடி எட்டிப்பார்த்தாள். ஹாலில் இருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அது சேதுவின் அம்மாவாக இருக்க வேண்டும், வெளியே வந்தாள். ஸ்டீபன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், சட்டென ஏதோ தவறு செய்துவிட்டவளைப் போன்ற பதற்றத்துடன் கதவைத் திறந்தவளின் முகத்தில் அத்தனை பூரிப்பு. கண்களின் ஒளி ஸ்டீபனுக்கு உடன் சட்டெனக் குளிர்ந்துவிட்டது. இதுவரை அப்படி ஒரு கரிசனத்தை எந்த முகத்திலும் கண்டதில்லை.
பின் கட்டிலிருந்து வெளிப்பட்டவள், தன் கைகளின் ஈரத்தைப் பாவாடையில் துடைத்தபடி, ஸ்டீபனை வரவேற்கும் விதமாக உடலைக் குறுக்கி, நாணத்துடன் தலைகுனிந்தாள். மகளின் பெயரை சிந்து என அறிமுகப்படுத்தினாள் சேதுவின் அம்மா.  +2 முடித்துவிட்டு பி.காம், கரஸில் படித்து வருவதாகக் கூறினாள். சட்டென அப்பெண் மீண்டும் பின்கட்டுப் பக்கம் விரைந்து சென்றாள்.
ஒருவகையான அமைதி அந்த வீட்டில் குடி கொண்டு இருந்த்து. அது தன் வீட்டைப் போல இறுக்கமாக இல்லை. ரசிப்புத்தன்மை மிகுந்த சிறு பெண் அந்த வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. துணியில் சிறு எம்ப்ராய்டரி செய்யப்ட்ட வாயில் தோரணங்கள், பழைய, பெரிய ரேடியோவின் மேல் வைக்கப்பட்டு இருந்த பூ ஜாடி, மற்றும் அதன் மேல் மணியால் கோக்கப்ட்ட பொம்மைகள் என எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தனக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுவதை உணர்ந்தான்.
கொதிக்கக் கொதிக்க சுடுநீரை குளியறையில் ஊற்றிக் கொண்டபோது எனக் கூற கதற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகம் இந்த உடம்புக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாகப் பன்றியைவிடக் கேவலமாக உழன்றவன், இந்த குளியல் மூலம் அரசனாக மாறிவிட்டதாக்க் கருதினான்.
குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு, சேதுவின் அம்மா இட்லிகளைப் பரிமாறினாள். படுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறை மிகவும் குறுகலாகவும் அடக்கமாகவும் இருந்தது. ஒரு மெத்தை தரையோடு விரிக்கப் பட்டு இருந்தது. ஆழ்ந்த உறக்கம். கனவில் என்னென்னவோ வந்தது. இடையிடையே வெளியே வராந்தாவில் கொலுசுச் சத்தம் கடந்தது. பகல் நேரத்துத் தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் வசனம் கேட்டது. கனவில் யார் யாரோ அவனது அப்பாவை துக்கம் விசாரித்தார்கள். பேருந்தின் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணி ஸ்டீபனிடம், மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?என்றாள். தலை நிறையப் பூவுடன் மடியில் சரிந்தாள்.
சட்டென விழிப்பு தட்டிய போது, ஸ்டீபனின் தலைமாட்டில் ரகசியமாக இரண்டு பெண் குரல்கள், சேதுவின் தங்கையான சிந்துவினுடையதும் அவளுடைய தோழியினுடையதும் என்பதை அறிந்து கொண்டான். இவனை எழுப்பிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அவர்களின் பேச்சினூடே தெரிந்தது. புத்தக அலமாரியில் ஏதோ ஒரு நோட்டைத் தேடிக் கொண்டு இருந்தனர். சிந்துவின் பாவாடை விளிம்பு இவனது முழங்கையில் உரசுவதை உணர்ந்தான். உண்மையில் அவனுக்கு அதனால்தான் விழிப்பு தட்டியது.

நோட்டை எடுத்துக் கொண்ட சிந்து தன் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் கூறிக் கொண்டு இருந்தாள் சென்னையிலிருந்து ( அவள் அதனை மதராஸ் என்றாள்) வந்திருப்பதாகவும், அங்கே மிகப்பெரிய ஆள் என்றும் கதை விட்டாள். தோழி, இந்த ஆளை நான் ஒரு உதை விடட்டுமா?என்று சிரித்துக் கொண்டே கேட்க சிந்து அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். தன் பிறந்த நாளுக்கு ஸ்டீபன் ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசளித்ததாகவும், அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் சிந்து சொன்னாள்.
ஸ்டீபனுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. அப்போது தான் அவனுக்கு அது ஞாபகமும் வந்தது. சேது தன்னுடன் அறியல் தங்கியிருந்த சமயத்தில், அவன் ஒருமுறை ஊருக்குப் புறப்பட, வழியனுப்பச் சென்றபோது நடந்தது அது. ஒரு எதேச்சையான நிகழ்வு. சேது அதனை தன் வீட்டில் நண்பன் பரிசளித்ததாகச் சொல்லிப் பெருமையுடன் நீட்டியிருக்க வேண்டும். ஒருவேளை, அன்று அது அவளுடைய பிறந்த நாளாகவும் இருந்திருக்க்கூடும். பெண்ணின் மனது எத்தனை நுட்பமாகச் செயலாற்றுகிறது என ஸ்டீபன் ஆச்சர்யப்பட்டான்.
கண் விழித்த போது மூன்றரை ஆகியிருந்தது. முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தபோது சேதுவின் அம்மா, சாப்பிடச் சொன்னார்கள். வயிறு சரியில்லை எனச் சொல்லி மறுத்தவன், லுங்கியும் சட்டையும் அணிந்தபடி வெளியே வந்தான். மாலை நேரமாக இருந்த்தால் தொலைவில் தெரிந்த தேயிலை தோட்டங்களில் பனி மூட்டம் இறங்கியிருந்தது. ஈரமான மண் படிக்கட்டுகளில் இறங்கி, தார்ச் சாலைக்கு வந்தான். மனம் போன போக்கில் நடக்கலானான்.
சட்டென சிந்துவின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. எத்தனை கனிவான பெண்! ஒரு வேளை நான் விழித்திருப்பேன் எனத் தெரிந்தே, பரிசுப் பொருளுக்காக நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அதனைத் தன் தோழியிடத்தில் கூறியிருக்கலாம். முற்றிலுமாகச் சிதறுண்டு கிடந்த அவனது இருப்பு, அந்தச் சிறு பெண்ணின் கொலுசுச் சத்தத்தினால்  மீண்டும் தனக்குள் ஒன்று சேர்வதை உணர்ந்தான்.
ஸ்டீபன் வீடு திரும்பியபோது, முற்றத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. சேது இவனைப் பார்த்த்தும் அளவற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டான். ஒரு லெட்டர் போட்டிருந்தால் விடுமுறை எடுத்திருப்பேனே என்று வருத்தப்பட்டான். சில நிமிடத்தில் இருவரும் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்றபோது இருட்டியிருந்தது. பகலில் பார்த்ததை விட இப்போது சந்தடி அதிகரித்திருந்தது. சாலைகளில் தள்ளுவண்டிகள் முளைத்திருந்தன. வண்டிகளின் மேலிருந்த கண்ணாடிப் பெட்டிகளின் வழியாக மஞ்சள் வெளிச்சம்.
     ஏற்கனவெ அங்கெ நாலைந்து நண்பர்கள் இருந்தனர். அனைவரும் வேட்டி சட்டை அணிந்திருந்தனர். நண்பர்களிடம்  சேது இவனைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் நண்பனொருவன் காதல் கைகூடியது குறித்தும், சினிமா நடிகர்கள் பற்றியும் பேசிக் கொண்டனர். ஒருவரிடமும் தீவிரத் தன்மை இல்லாதது இவனுக்கு வருத்தமாக இருந்தது. இவன் பெரும்பாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். சேது அவர்களுடன் பேசுவதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அடிக்கொரு முறை இவனிடம் போரடிக்கிறதா எனக் கேட்டுக் கொண்டான்.
     ஒன்பது மணிக்கு மேல் அருகில் இருந்த சந்தில் பீர் குடித்தனர். மீன் வறுவலை இன்னொரு நண்பன் ஒரு இலையில் வைத்துக் கொண்டு வந்தான். இவனுக்கு வீடு திரும்புவது சங்கடமாக இருந்தது. சேதுவின் அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ.. உள்ளூர ஒரு பயம். அதுபற்றி வீட்டில் கவலையில்லை எனக் கூறினான் சேது. ஆச்சர்யமாக இருந்தது.
அவன் சொன்னது போலவே வீட்டில் இவர்கள் சென்றபோது அனைவரும் உறங்கியிருந்தார்கள். சேதுவின் தந்தைதான் கதவைத் திறந்தார். அவர் இவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போய் படுத்துக் கொள்ள, இருவரும் தங்களாகவெ சாப்பாடு எடுத்துக் போட்டுச் சாப்பிட்டு, படுக்கையை ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டனர். சேது உடனே உறங்கிவிட்டிருந்தான். மேலே ஃபேன் காற்று சுழன்றது.
     சற்று நிமிடத்தில் சடசடவென மழை பெய்யும் சத்தம். ஸ்டீபன் கண்களை மூடிக் கொண்டான். மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு எங்கே  போவது என யோசித்தான். வீட்டுக்கு உடனே திரும்பி செல்ல முடியாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்த்து. மழை கனத்துப் பெய்யத் துவங்கியது.
     மறுநாள் காலை, சேதுவின் வீடு சுறுசுறுப்பாக இருந்தது. அனைவரும் இவன் எழுவதற்கு முன் குளித்துவிட்டு எங்கோ புறப்பட்டனர். இவன் ஊருக்குப் புறப்படும் தகவலைச் சொன்னதும், சேது மறுத்தான். அனைவரும் அருகில் ஒரு கோயிலுக்கு உறவினர் திருமணத்துக்குச் செல்வதாகவும் கண்டிப்பாக உடன் வந்தே தீர வேண்டும், திங்கள்கிழமை காலை புறப்படும் பயத்திலிருந்து தப்பிக்க முடிந்த சந்தோஷத்தை சேதுவுக்கு அது உள்ளுர உருவாக்கித் தந்தது.
அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பேருந்து நிறத்தத்துக்கு வந்தனர். சிந்து மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். தலை குளித்து, நேர் வகிடெடுத்து காதோர முடிகளை எடுத்துப் பின்னால் முடிச்சிட்டிருந்தாள். பாவாடை, சட்டைதான் என்றாலும், அவளுடைய தோற்றம் பளிச்சென்று இருந்தது. அருகில் நிறுத்தத்துக்கு வந்து நின்ற சுடிதார் பெண்ணைப் பார்த்ததும் இவள் சந்தோஷத்துடன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். பள்ளித் தோழியாக இருக்காலாம். பேருந்தில் ஏறியதும் சிந்துதான் முதல் ஆளாக ஏறி ஸ்டீபனுக்கு முன் ஸீட்டில் இடம் பிடித்து தந்தாள். பின் ஸீட்டில்  தன் தோழியுடன் அவள் அமர்ந்து கொண்டாள். பயணத்தின் போது ஒரு நறுமண வாசனை, அது சிந்துவிடமிருந்தா அல்லது தோழியிடமிருந்தா. தெரியவில்லை. முகத்தில் காற்று சடசடத்து, உடல் முழுக்க ஊடுருவியது. தன் தலைக்கு மேல் வாழ்க்கை சில புக்களை விழச் செய்து தன்னைச் சாந்தப்படுத்தி இருப்பதாக எண்ணிக்கொண்டான்.
அத்தனை எளிமையான திருமணத்தை அவன் பார்த்தில்லை. மலையை ஒட்டிய ஒரு சமதளத்தில் மூன்று சிறிய கட்டடங்களாக கோயில பிரிந்து கிடந்தது. மூலஸ்தானத்துக்கு எதிரே ஒரு சிறிய மரத்தாலான கொடிக்கம்பம். கோயில் புறத்தில் தாழம்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த்து தவிர, கல்யாணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. மொத்தமாக 30 பேர்தான் இருப்பார்கள். நேற்று பார்த்த சேதுவின் நண்பர்கள் சிலரும் அங்கு வந்திருந்தனர். அதில் ஒருவன் சிந்துவை அடிக்கடி வம்புகிழுத்தான். சிந்துவும் பதிலுக்கு அவனைக் கிண்டலடித்தாள். பின் அனைவருக்கும் அவளே எலுமிச்சம் சாறு நிரப்பபட்ட எவர்சில்வர் டம்ளர்களைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

உணவு சற்று மோசமாகத்தான் இருந்தது. ஆனால், அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியே வெற்றிலைப் பாக்கு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சிகரெட்டுகளும் இருந்தன. நண்பர்களுடன் மறைவிடம் சென்று, கோயில் சுவரில் அமர்ந்தபடி சிகரெட் பிடித்தான். சட்டென அங்கே ஓடி வந்து சிந்து, ஸ்டீபனின் விரலிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கித் தூர எறிந்தாள். அருகிலிருந்த நண்பன் ஒருவனிடம் மலையாளத்தில் கோபித்துக் கொண்டாள். சேதுவின் நண்பர்களைக் காண்பித்து, இவர்களுடன் சேர வேண்டாம் என விளையாட்டாக்க் கூறுவதைப் போல போலியான கோபத்துடன் கூறி ஓடி மறைந்தாள். நண்பர்கள் மற்றொரு சிகரெட்டை இவனிடம் நீட்டிய போது, ஸ்டீபன் ஏனோ அதனை மறுத்தான். அந்தத் திருமணம் பல விஷயங்களில் ஸ்டீபனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. 
இரவு வீடு திரும்பிய பின்பு, சேது தன் எதிர்கால வாழ்க்கை குறித்தும், தான் திருமணம் செய்யப்போகும் உறவுக்காரப் பெண் குறித்தும் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தான். இவனால் அவற்றை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அன்று இரவு முழுக்க இவனுக்கு உறக்கம் வரவில்லை. மறுநாள்  காலை புறப்பட்டாக வேண்டும். ஏதோ ஒருவித பயம் அவன் மனதைக் கவ்வியது.
மறுநாள் காலை, சேது வழக்கம் போல புறப்படும் அவசரத்தில் அவன் அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, ஸ்டீபனிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தான். ஸ்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அது அவனுக்கு அவசியமாக இருந்தது. ஆனால், சேது ஏன் நம்மை இன்னும் இரண்டு நாட்கள் தங்கச் சொல்லவில்லை. ஒருவேளை அது குறித்து அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். மேலும் தான் எந்த சூழலில் புறப்பட்டு வந்துள்ளோம் என்றும் அவனுக்குத் தெரியாதே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
காலையில் தேநீர் அருந்தும்போது தான் சேதுவின் அப்பா இவனிடம் பேசினார். அதிகமில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள். எந்த ஊர், என்ன வேலை என்பது மாதிரி. இவன் பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மதுரைக்கு ஒரு வேலை நிமித்தம் வந்ததாகவும், அப்படியெ நண்பனைப் பார்த்துப் போக வந்ததாகவும், அப்படியே நண்பனைப் பார்த்துப் போக வந்த்தாகவும் பொய் சொல்லியிருந்தான். சேதுவிடம் கூட உண்மையை வெளிப்படுத்த விரும்ப வில்லை. ஆனால் எப்படியோ அதை சேது ஊகித்திருந்தான். தன் முகம், காட்டிக் கொடுத்திருக்கக்கூடும் என்று நினைத்தான் ஸ்டீபன்.
புறப்படும்போது, எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக்கு வரும்படியும் பணியிடத்தில் நிறைய வேலை இருப்பதால் உடனடியாக தான் போயாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சொன்னான் சேது. அடுத்த முறை வரும்போது மூணாறு செல்லலாம் என்றவன், ஸ்டீபனை பேருந்தில் ஏற்ற வர முடியாமை குறித்து வருத்தப்பட்டான்.
ஸ்டீபன் குளித்து முடித்து, பத்து மணிவாக்கில் புறப்படத் தயாரானான். டிபன் சாப்பிடும்போதுதான், அது உறுத்தியது. சிந்துவைப் பார்வைகளால் தேடினான். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ஒலித்த கொலுசுச் சத்தம் இல்லாமல் வீடு ஒருவிதமான மௌனத்துடன் இருந்த்து. அம்மாவிடம் கேட்கலாமா என நினைத்து, அப்படியே தள்ளிப் போட்டான். அவளிடம் சொல்லாமல் போவது என்னவோ போலருந்த்து ஸ்டீபனுக்கு. அவள் கிணற்றடியில் இருக்கிறாள் என்பதை மட்டும் அறிந்து  கொண்டான். ஒருவித பாரம் மனதை அழுத்தியது. இந்த இரண்டு நாட்க்கிளல் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான்  சிந்துவிடம் பேசியிருப்பான். என்றாலும், அந்தச் சிறு பெண்ணிடம் சொல்லாமல் போவதை ஒரு பெரிய இழப்பாக தனக்குள் அழுத்துவதை ஸ்டீபன் உணர முடிந்த்து. கால்கள் கனத்தன. மீண்டும் ஒரு முறை பின்கட்டு நோக்கிப் பார்த்தான். வெறிச்சோடிக்கிடந்த்து. அம்மாவிடம் சொல்லிக் கண்டு புறப்பட்டான்.
உண்மையில் அவனுக்கு அழ வேண்டும் போலிருந்த்து. வாழ்நாளில் அதுவரை அவன் மோசமாக நடந்து கொண்ட அத்தனை தருணங்களும் அந்தக் கணத்தில் அவன் மணக்கண்ணில் நிழலாடின வலதர் பேக்குடன் சாலையில் நடந்தான். தொலைவில் மலைகளின் நடுவே பேருந்து நிலையம் தெரிந்தது. அவனுக்கு ஏனோ உள்ளூர ஒரு பயத்தை அது உருவாக்கியது. இனி என்ன செய்வது, எங்கெ செல்வது என எந்தத் திட்டமும் இல்லாமல் நடந்தான்.
     சிந்து ஏன் வெளியே வரவில்லை? ஒருவேளை வேண்டுமென்றே, செயற்கையாக ஒரு மௌனத்தை ஏற்படுத்த அப்படிச் செய்திருப்பாளா? அப்படியானால் அதன் மூலம் அவள் பெறப்போவது என்ன ? தன் கொலுசுச் சத்தத்துக்கு இத்தனை வலிமை இருக்கிறது என்பதை அவள் எப்படி முன்கூட்டி அறிந்தாள்?
அப்போதுதான் சட்டென ஸ்டீபனுக்குப் பொறி தட்டியது. புறப்படும்போது மேஜையின் மேல் துருப்பிடித்த கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்த்து. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸாக இருக்க வேண்டும். எதற்காக அவள் அதை மேஜை மேல் வைக்க வேண்டும்? அது ஒருவிதமான நன்றி உணர்ச்சியாக்க் கூட இருக்கலாம்.
இரண்டு நாட்களாக, தனக்கு உயிரூட்டம் தந்த ஒளியானது அணைந்துவிட்டதைப் போன்ற வெறுமையை உணர்ந்தான். எதைக்கொண்டு இதனை ஈடேற்றுவது?  எப்போதேனும் வரும் மின்மனிப்புச்சி போன்ற உறவுகள் கூட, தன் மனதில் ஏன் இத்தனை வலுவாக இடம்பிடித்து விடுகின்றன? கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. எத்தனையோ பிரயத்தனப்பட்டும் தன்னைச் சுற்றிச் சுழலும் கழிவிரக்கத்தை அவனால் விரட்ட முடியவில்லை. கண்களில் நீர் கட்டியது.
அருகே கால்வாயில் மழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்த்தைப் பார்த்து அருகில் சென்றான்.  நொடிப் பொழுதுதான் தோளிலிருந்த லெதர் பேக்கைக் கழற்றி ஓடும் நீரில் வீசி எறிந்தான். அதுவரை தன்னை அழுத்திக் கொண்டு இருந்த பாரம் விலகி மனசு லேசாவதை  உணர்ந்தான். தொலைவில் , நீரில் அவனது லெதர் பேக் மிதந்து ஓடிக் கொண்டு இருந்தது!

May 14, 2011

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்
எழுதியவர்- உமாசக்தி

ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.

நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.

'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்கச் செய்து நம்மைப் பித்தாக்கிவிடுவார். அஜயன் பாலா இவை எல்லாவற்றின் கலவையாக இக்கதையின் வாயிலாக நம் கண்முன் நிற்கிறார்.

அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.

'மருதா' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசிரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்களகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.

'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது.

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 )

ஷியாம் பெனகல் Shyam Benegal (1934 -2024 ) மிருணாள்சென்னுக்கு அடுத்தப்படியாக, பேரலல் சினிமாவின் உயிர்நாடியாகக் கருதப்படுபவர் இயக்குனர் ஷி...