February 14, 2016

முதல் காதல் - டெய்சி எனும் தேவ மலர்

காதலர் தினத்தை யொட்டி ஒரு வார  இதழுக்காக எழுத ஆரம்பித்த போது மனம் எனும் ஸ்கேனர் தானாய் நினைவு குளத்தில் கண்டெடுத்தவள் அந்த தேவ மலர்
தேவதைகளின் மலர்

பிறக்கும்போதே அன்னைதெரஸாவாய் பிறந்துவிட்டவள்
அவள் முழு பெயர்  டெய்சி தமிழ்ச்செல்வி
நான் எட்டாவது  படிக்கும் போது வகுப்பில் வந்து சேர்ந்தவள்.
துறு துறு கண் , கறுப்பி ஆனாலும் பேச்சிலும் சுபாவத்திலும் அத்தனை  கவர்ச்சி . எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்பவள் .கிறிஸ்தவ பெண்களுக்கே உரிய கீச்கீச்  குரல் .
பின்னாளில் யார் யார் என்னவாகபோகிறீர்கள் என ஒரு நாள் ஆசிரியர் எல்லோரையும் எழுப்பி கேட்க  அவள் தான் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போல சமூக சேவை செய்யப்போவதாக  கூறியபோது பால்ராஜ் வாத்தியார் ஆச்ச்ர்யத்துடன் பாராட்டினார் .அனைவரையும் அவளுக்காக கைதட்டச்சொன்னார். நானும் உற்சாகமாக கைதட்டினேன். அன்று  அவள் அப்பழுக்கில்லாத ஒரு தேவ மலராக காட்சியளித்தாள் .அது முதல் டெய்சியை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு வெட்க புன்னகை தானாய் மலரும் .
ஒரு மழை நாளில் வகுப்பே சோ வென இரைந்து கொண்டிருக்க டீச்சர் அனைவரையும் அமைதிப்படுத்தி டெய்சி யை எழுப்பி ஒரு பாட்டு பாடச்சொல்ல வகுப்பே  அமைதியாகிப்போனது.  ,  ராஜ நாகம் படத்தில் வரும் தேவன் கோவிலில் என்ற பாடலை   அன்று டெய்சி பாட மழையில் சிணுங்கின ஜன்னல் கதவின் கொக்கி அதற்கேற்ற  தாளமாக இசைத்தது.. ஜன்னல் கம்பிக்கப்பால் வெளியே பள்ளியை ஒட்டிய தோட்ட்த்தில் மழை கொட்டிக்கொண்டிருக்க டெய்சியின் குரல்  கருங்கல் தரையில் சர்ப்பம் போல  எனக்குள் நுழைந்து இதயத்துள் சுருண்டது.. அன்று இரவே ஒரு கனவு . யாருமற்ற குளக்கரை படிக்கட்டுகளில் டெய்சி மட்டும் பட்டு சட்டை பாவாடையுடன் பாடிக்கொண்டிருக்க ஈரத்துண்டை இடுப்பில் கட்டியிருக்கும் நான் ஒரு தூண்  மறைவில் ஒதுங்கி நின்று அவளை ரசிக்கிறேன் என்  கையில் சோப்புபெட்டி தேங்காய் நார். ஒரு வேப்பங்குச்சி
மற்றும் முறுக்கி பிழிந்த ஈரத்துணிகள். மறு நாள் காலையிலிருந்தே என்ன வெனத்தெரியாத ஜுரம் .
ஒரு நாள் பகல் வேளையில் வகுப்பில் அமர்ந்திருக்க தலையில் இளம் சூடு.உணர கைவைத்து  தடவி திரும்பி மேலே பார்க்க மேற்கூரையின் ஓடுகளின் வழியாக இரண்டு  வெளிச்ச குழல் வகுப்பில் விழுந்துகொண்டிருந்தது.  ஒன்று என் தலை மேல். விழுந்திருக்க இன்னொன்று அவள் தோளில்.. வகுப்பில் அத்த்னை பேர் அமர்ந்திருக்க எங்கள் இருவர் மீது மட்டும் விழுந்த வெளிச்ச குழல்கள் என்னை பரவசப்படுத்தியது. வெளிச்சகுழலினூடெ கைவிரல்களை குறுக்காக நீட்ட மாசு படலங்கள் என் விரல்களில் விளையாடின . யாரிடமாவது இதை சொல்ல மனசு ஏங்கியது. யாரிடம் சொல்ல . .. அவளிடமே சொன்னால் என்ன ?
அன்று அப்போது கணக்கு பாடம் கிருஷ்ணன் வாத்தியார் பலகையில் ஏதோ மும்ம\ரமாக எழுதிக்கொண்டிருக்க நான் டெய்சியை நோக்கி திரும்பினேன்
டெய்சி.. டெய்சி.. குரல் வயிற்ருக்குள்ளேயே
அவள் மும்மரமாய் எழுதிக்கொண்டிருந்தாள்
அவள் எப்போது நிமிர்வாள் என்னை பார்ப்பாள் என காத்திருந்தேன்
அவள்  மீது அதுவரையில் விழுந்த வெளிச்சகுழல் இப்போது மெல்ல அவளை விட்டிறங்கி தரைக்கு விழ துவங்கியது
அவள் நிமிரந்த ஒரு கணத்தில் நான் சைகையால்  கூரையின் வெளிச்சத்தை காண்பிக்க அவளும் நிமிர்ந்து பார்த்தாள் அதே போல் எனக்கருகேயும் வெளிச்சம் வட்டமிட்டிருப்பதை காண்பிப்பதற்குள் அது அருகிலிருந்த கேசவன் தலைக்கு நகர்ந்து விட்டிருந்தது.
அவளிடம் அசடு வழிந்த்தோடு அந்த பகல் இருளை நோக்கி நகர்ந்த்து.
அந்த நாளுக்கு பிறகு கூரையிலிருந்து கசியும் ஒளிக்குழல் எனக்கும் அவளுக்கும் ஒரு சேர விழவே இல்லை
அதன்பிறகு ஒரு நாள் பள்ளி விட்டு வரும் போது வழியிலிருந்த தீர்த்த குளத்தில் மீன் அதிகமிருப்பதாக கூறீய பள்ளி நண்பர்களுடன்  அதை பார்க்க செல்ல யாரோ என்னை முதுகில் கைவைத்து தள்ளிவிட குளத்தில் விழுந்து விட்டேன் . உடல் முழுக்க நனைந்த படி ஈரம் சொட்ட சொட்ட பயத்தில் அழுதபடி கரையில் நான் நிற்க சுற்றியிருந்த நண்பர்கள் கேலி செய்ய அந்த நேரம் பார்த்தா அங்கு டெய்சி வரவேண்டும் ..
டெய்சி என்னருகே வந்து ஏதாவது உதவி செய்யட்டுமா என கூறி வருத்தப்பட  எனக்கு அழுகை அதிகமாகியதே தவிர நிற்கவில்லை
அதன் பிறகு தாழ்வு மனப்பான்மை காரணமாகவோ என்னவோ டெய்சியிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டேன்.
ஆண்டுகள் கடந்தன எட்டாம் வகுப்பிற்கு பின் அந்த பள்ளியை விட்டு அனைவரும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்தோம் பத்தாவதில் அவள் படித்த பெண்கள் பள்ளியில் டெய்சி முதல் மாணவி என்ற செய்தி என்னை பெரிதாக ஆச்சர்யப்படுத்தவில்லை
அவ்வப்போது தியேட்டர் , கடைவீதி மற்றும் பொது இடங்களில் அவள் அப்பாவோடு அல்லது அண்ணனோடு அவளை பார்ப்பது வழக்கம் . பெரிய பெண்ணாக ஆன பிறகும் அவள் யாரோடும் வெடுக்வெடுக்கென பேசுவதை நிறுத்தவில்லை. என்னை பார்க்கும் போதும் அவள் சிரிக்க முயல நான் அவளை ஞாபகமில்லாதவனாக காட்டிக்கொள்ள முயற்சித்து விலகி நடந்தேன்.
பெரிய பெண்ணாக மாறிய பிறகு அவள் முன்னை விட மிகவும் அழகாக மாறிவிட்டிருந்ததும் ..நம்மைவிட பல மடங்கு அழகான ஒருவனை அவள் இந்நேரம் தேர்ந்தெடுத்து விட்டிருக்ககூடும் என்ற தாழ்மையுணர்வும்தான் அதற்கு காரணம் 
ப்ளஸ் டூ படிக்கும்போதே நான் நினைத்தது போலவே  அவளுக்கு காதல் கல்யாணம் என்ற செய்தியும் வந்தது.
அந்த துக்க செய்தியை வகுப்பு தோழன் சொல்லியதிலிருந்து அவள் மேல் ஏனோ ஒருவித கோபமும் வெறுப்பும் தான் அதிகமாய் வந்தது..
படிக்கும்போதே காதல்.. சே என்ன பெண் .. நல்ல வேளை தப்பிச்சோம் என சமாதான்ங்கள் சொல்லி ஆற்றாமையை தீர்க்க முயன்றேன்
ஒரு நாள் மாலைக்காட்சிக்கு தியேட்டருக்கு போனவனுக்கு அதிர்ச்சி
தியேட்டர் வாசலில் டெய்சி பூரிப்புடன் புதுப்பெண்னாய் நின்று கொண்டிருந்தாள்
சே இவளை போய் பார்க்க நேர்ந்துவிட்டதே என உள்ளுக்குள் குமைந்தபடி திரும்பியபோதுதான் அவள் கணவனை பார்த்தேன் .ஒரு கால் ஊனமான நிலையில் கால் தாங்கி கால்தாங்கி நடந்து வந்தான் .
எனக்கோ அதிர்ச்சி . அவள் மீதான் காதல் மீண்டும் துளிர்க்க துவங்கியது
அவள் உண்மையில் ஒரு தேவ மலர்தான் என நெஞ்சு உரக்க கூவியது
என்னுடன் வந்த வகுப்புத்தோழன் டெய்சியின் பக்கத்துவீட்டு வங்கியில் வேலை செய்பவன் .அவன் என்றும் வங்கி வேலை ஊனத்தை மறைத்து காதலை உண்டாக்கி விட்டது என்றும் இகழ்வாக கூறியபடி தியேட்டருக்குள் என்னை அழைத்து சென்றான்.
டெய்சி தமிழ்ச்செல்வி ஒரு கையால் கணவனைத்தாங்கி தியேட்டருக்குள்  அழைத்துசென்றபடி என்னையும் பார்த்து வழக்கம் போல சிரித்தாள்

இம்முறை வெட்கமில்லாமல் மேலும் காதல் பொங்க அவளை பார்த்து பதிலுக்கு சிரித்தேன்

February 10, 2016

நான் உருவான கதை இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஒரு நேர்காணல் : அஜயன் பாலா

 எந்த ஒரு படைப்பாளியும் தானாக உருவாகி விடுவதில்லை. சமூகம் அரசியல் பொருளாதார சூழல்களின் நெருக்கடியில் இருந்துதான் திறமைகள் கூடிய ஒரு மனிதன் படைப்பாளியாக மன வெளிப்படுகிறான்.  என்னதான்படிப்புகள் அவன் தன்பெயருக்கும் புகழுக்காகவும் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தின் காரணமாக உருவாகிறது. அந்தந்த படைப்புகளில் அவன் வளர்ந்த உலகம் அரசியல் பொருளாதார சமூக சூழல் நேரடியாகவோ   மறைமுகமாகவோ  பொதிந்திருக்கும்.  தங்கர்பச்சானின் படைப்புலகம் ஊடகம் இல்லாமல் நம்மோடு பேசுபவை.  தமிழ் சமூகத்தின் நாவீன யுககூட்டுமனநிலை யால் 2000க்கு முன் நிகழ்ந்த விசயங்கள் எல்லாம் அருவெறுப்பாக கருதப்பட்டு படைப்பாளிகளால் நிராகரிக்கப்பட்டதோடு அவற்றை எல்லாம் தன் படங்களில் எடுத்து திணித்து அவற்றின் மீது மதிப்பீட்டை உருவாக்கித்தந்ததில் முக்கிய பங்குஉண்டு. குறிப்பாக பொது இடங்களில் கூழ்குடிப்பது (சொல்லமறந்த கதை) இலக்கிய சிந்தனைகளை திறையில் காண்பிப்பது ( காதல் கோட்டை) பனம் பழம் சாப்பிடுவது. செம்பட்டைகேசட்டுடன் காண்பிப்பது அசலான கிராமத்து மனிதர்களை திரையில், உலவ விடுவது(அழகி)
நேரடியாக தலித்துகளையும் அவர்களது வாழ்நிலைகளையும் சாதிய சடங்குகளையும் குறித்து பாடாலாக வெளிப்படுத்தியது (தென்றல்)போன்றவற்றை சினிமாவில் துணிச்சலுடன்  திறையில் காட்சிபடுத்தியது அவர்க்கிருக்கும் சிறப்புகள். இதேநிலைக்கு சமமான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மேல் மற்றவர் தொடுக்க வாய்ப்பில்லை என்றாலும் இன்றைய ஐ.டி உலகத்தில் தெரிந்த கிராமத்தையும் விமர்சிக்க முறையாகக்கொண்டால் ஒரே இயக்குநர் என்ற முறையில் தங்கர் பச்சான் காலத்தின் தவிர்க்க முடியாத நாம் முன்னிறுத்த வேண்டிய படைபாளியாகிறார். தனது படைப்புகளின் நதிமூலம் குறித்து தாமரை இதழுக்கு பிரத்யேகமாக அவர் அளித்த நேர்கானல் இது.
                                                   -    அஜயன் பாலா  

 நான் உண்மையான ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்.  அதனால்தான் அதை திரும்பவும் உருவாக்க முடியுது. சும்மா ஒரு பார்வையாளனா மட்டும் இது இருந்தால் சாத்தியமல்ல. இப்போ சின்ன வயசுல உடல் முழுக்க சிரங்கு வந்திருக்கும் உடம்பு முழுக்க கம்பங்கூழ் தடவி காத்துல படுக்கப்போட்டு வெச்சிருந்து கடைசியா தூக்கிக்கிட்டுபோய் ஓடையில போட்டிருவாங்க. எழுந்து வராலாம்னு நினைச்சா முடியாது. திரும்ப திரும்ப புடிச்சி தள்ளிவிடுவாங்க. மீன் எல்லாம் உடம்பை கொத்தி சுத்தப்படுத்தும்.கல்ல முள்ளுகுத்தும், கல்லுவெட்டும் கண்ணாடிகுத்தும் இப்படி எல்லாத்தையும் பார்த்திருக்கோம்.இதுக்கெல்லாம் இன்னைக்கு இருக்கிற எந்த வைத்தியமும் அன்னைக்கு கிராமத்தை கூட எட்டி பார்த்ததில்ல.  இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா....ஐய்யோ இந்தவாழ்க்கையை தான் பின்னாடி படமாஎடுக்கனும் அப்டின்னுஎல்லாம் எனக்கு தோணல.  முழுசா அனுபவிச்சு வாழ்ந்தேன். அதனாலதான் இந்தநகரத்து வாழ்க்கையிலும்என்னால முழு கிராமத்து மனுசனா வாழ முடிஞ்சிச்சு. உண்மையில நாமவாழ்ந்து முடிச்சவாழ்க்கையில எவ்வளவோ பெரிய வலிகளும் திரும்ப திரும்ப நினைச்சு பார்க்க வேண்டிய அத்தியாவிசயங்களும்  இருக்கு. அது மட்டுமில்லாமல் எனக்கு அந்த சின்ன வயசுலஒருசினிமான்னா ஒருடைரக்டர்இருக்கிறார்,ஒருகேமராமேன் இருக்கிறார், என்றெல்லாம் தெரியாது. சினிமான்னா பாட்டு, நடிகர்கள், இவங்கதான் எனக்கு தெரியும். சென்னைக்கு வந்ததற்க்கு அப்புறமாதான் பத்திரிக்கை கதை எல்லாம் புரியுது. அதிகாலையும் இந்த பால குமாரன், சுஜாத்தா இப்படி பட்டவங்கதான் முதல்லதெரிஞ்சது. உண்மையான தீவிர இலக்கியங்கள் எழுதுறவங்க  இருக்கிறதே தெரியாது.      
3 வயசு இருக்கும்போதே என்ன பள்ளிகூடத்தில சேத்திட்டதால ஏழு வயசுல  நான் 4  ம் வகுப்பு படிக்கிறேன். எங்களோட தொடக்க பள்ளிக்கு பக்கத்திலேயே உயர் நிலைப்பள்ளியும் இருக்கு. ஒருநாள் அங்கிருந்து ஒருத்தன் வந்தான். வாத்தியார் உன்ன கூட்டிட்டு வரச்சொன்னார்ன்னா,  எனக்கு ஒன்னும் புரியல. போனேன் பெரிய பள்ளிக்கூடம்.  ஆறேழுபடி ஏறித்தான் வகுப்புக்கு போனேன். ஏதோ திருத்தணி மலையேற்றமாதிரி இருந்துச்சு. உள்ளப்போனால் தமிழ் வாத்தியார் தான் இருந்தார். அந்த வகுப்பு 11ம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் என்னையே பார்க்கிறாங்க. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலாங்கற பாட்டு எந்த படத்துலன்னு கேட்டார். அங்கிருந்த மத்த பசங்களுக்கு உடனே பதில் தெரியல. ஒருத்தன் பிரகலாதாங்கிறான், இன்னொருவன் கடாச்சமங்கிறான், நான் கண்டசாலாபாடுனது, மஞ்சள் மகிமை படத்துலன்னேன், அதுக்கு தாண்டா உன்னை கூப்பிட்டேன்னு அனுப்பிட்டார்.  அப்பவே நிறைய பாட்டுகேட்பேன் படம்பார்ப்பேன். அதனால் பள்ளிக்கூடத்தில் என் பேரு நிறைய பிரபலம் ஆச்சி. 

          திரும்பவும் 5 வதுபடிக்கும்போது என்ன ஒருநாள் குமாரசாமி  ஹெட்மாஸ்டர் கூப்பிட்டா ருனு, என்ன கூப்பிட்டு போனாங்க. இந்த முறையும் என்ன பாட்டுத்தான் கேக்கப்போராங்கனு நினைச்சுப் போனேன்.  ஆனால் இந்த முறை வேற ஒரு கேள்வி இங்கிலீஸ் கேள்வி. அட்டாக் இதுக்கு தமிழ்அர்த்தம் என்னனு கேட்டார். நான் தாக்குவதுன்னு சொன்னேன். அவருக்கு ரொம்பசந்தோசம். மற்றபசங்களைபார்த்து இவன் மூத்திரத்தைகுடிங்கடா உங்களுக்கு அறிவுவரும்ன்னு சொன்னார். ஏன் சொல்லுறேன்னா எனக்கு அப்ப படிக்கிறதிலும் ஆர்வம் இருந்திச்சி. கலையிலும் ஆர்வம் இருந்திச்சி. அப்ப தெருக்கூத்து பாவக்கூத்தி ன்னா ஓடிப்போய் முதல் ஆளா நிப்பேன். அப்புறம் மலேசியா கோலாலம்பூர் ரேடியோ சிங்கள வானொலி இப்படி எதையும் விட்டு வைக்கமாட்டேன். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன். என் பேரு எப்ப வரும்னு ரேடியோ முன்னாடி தவம் கிடப்பேன்.   நம்ம பேரை அப்ப கேட்கிறப்போ அப்படி ஒருசந்தோஷம். அந்த சந்தோஷம்தான் என்னபின்னாடியிலிருந்து துரத்திருக்குனு இப்ப தோணுது.              ஆரம்பத்தில் யாரும் இல்லை. எல்லோரும் திட்டுனாங்க நீ உருப்புடமாட்ட விளங்கமாட்டபொறுக்கி யாகத்தான் போவ இப்படி. அப்புறம் ஒரு அண்ணன் புரிஞ்சிக்கிட்டாரு. அவரு எப்பவுமே வானொலியும் கேமராவுமாதான் இருப்பாரு. அவருக்கு டார்க்ரூமே தானிய குதிருதான். அழகி படத்துலகூட ஒளியிலே பிறந்தது பாட்டுல காண்பிச்சிருப்பேன். நல்ல உசரமா நெல்லு போட்டு வைக்கிற குதிரு. அதுலதான்  அவருக்கு பிராசசிங்லாம் நடக்கும். நான் அப்ப கெமிக்கல்சை பிடிச்சிக்கிட்டு இருப்பேன். எல்லாம் முடிஞ்சு வந்து நெகடிவ்வ காய போட்டால் எங்கப்பா எல்லாத்தையும் தூக்கிட்டுபோய் தொழு வத்தில் வீசிடுவார். பெரிய பிரச்சனையே நடக்கும். எல்லாருக்கும் அண்ணன் தான் சயின்டிஸ்ட்.அப்போவெல்லாம் எனக்கு வீட்டிலேயும மதிப்புஇருக்காது. நண்பர்க்கிட்டேயும் மரியாதை இருக்காது .ரொம்ப கேவலமா திட்டுவாங்க. பொதுவாவே நான் பேசினா இவன் ரொம்ப பேசுரான் இவனுக்கு ஒரு பியூன் வேலைக்கூட கிடைக்காது, இப்படித்தான் சொல்லுவாங்க எதுக்கு அரசாங்க வேலைக்கு போகனும். மாசக்கடைசியிலகோவில்வாசாலில  உக்காந்திருக்கிற பிச்சைகாரங்களுக்கு  போடுற மாதிரி 2ஆயிரமோ 3ஆயிரமோ தூக்கிபோடுவாங்க அதை வச்சிகிட்டு அவன் வாழ்வானான்னு நினைப்பேன். எங்கிட்ட அப்ப ஐந்து காசுகூட இருக்காது ஆனா இப்படி தான் ஒரு சிந்தனை ஓடிக்கிட்டே இருக்கும். வாழ்க்கை எங்கிறது சுதந்திரமா வாழ்றது நம்மநினைச்சபடி செயல்படுறது. நம்ம நினைச்சபடி உருவாகுறது இந்த எண்ணம் எனக்கு அப்பவே வந்துடுச்சி. அப்பல்லாம் சினிமா எக்ஸ்பிரஸ் டெய்லி பத்திரிக்கை மாதிரிவரும். அதை அண்ணன் ஒரு நாள் வாங்கிட்டு வந்தாரு. அதோட பின்பக்க அட்டையிலதான் முதல் முறையா திரைபடகல்லூரி விளம்பரத்தை பார்த்தேன். 

          சினிமாவுக்கு இப்படியொரு படிப்பு இருக்கு அதுல சேர்ந்து படிக்கிறாங்கங்கிறதே அப்போதான் தெரியும். சரின்னு நானும் விண்ணப்பம் போட்டேன்.சீட்டு கிடைக்கில நான் அழ ஆரம்பிச்சிட்டேன்.எங்கப்பா அடிக்கவறாரு. அம்பத்தூர் எஸ்டேட்ல தினக்கூலிக்கு போய் வேலை செய்யுனும்னு சொன்னாரு. அப்புறம் அதேமாதிரிதான் ஆச்சு. அம்பத்தூர்லதான் டைப்ரைட்டிங் படிச்சுகிட்டே ஒரு வருஷம் வேலை செஞ்சான்.
ஒருதலைராகம் போன்ற படங்கெல்லாம் ஒருவருஷம் ஒடிச்சி சரி இந்த வருஷமாவது முயற்சி பண்ண லாமேன்னு, திரும்பவும் திரைப்பட கல்லூரிப்பக்கம் போறேன். எனக்கு இங்கதான் வாழ்க்கை இருக்குன்னு உள்மனசு உறுதியா சொல்லிடுச்சு. புடிச்ச இத படிச்சிடுரதுனு முடிவு பண்ணிட்டேன். ஆபாவாணன், ராசி மேனன், யூகிசேது இவங்கஎல்லாம் என்கூட படிச்சவங்கதான். சுகாசினி படிச்சிருந்தாங்க.அப்போ  முதல் வருஷ பசங்க எல்லோருக்கும் ராகிங் நடக்கும். மீசையை எடுத்திடுவாங்க. மீசையை வைத்துதான் யாரு எந்த வருஷம்னு அடையாளம் கண்டு பிடிக்கனும்.ரொம்ப தொந்தரவு கொடுத்தவன் இப்ப கேமராமேனா இருக்கிற அப்துல்ரகுமான்தான். கட்டியால அடிச்சி மிரட்டி என்னன்னவோ பண்ணுவான். பாத்தேன் அடிடா பார்க்கலாம்னு ஒரு நாள் எதிர்த்தும் நின்னேன்.  ஆனாலும் முதல் வருஷம்னா அந்த ராகிங்கிறது தவிர்க்க முடியல. 

திரைப்பட கல்லூரிக்கு போனதும் முதல் முறையா பதேர் பாஞ்சாலிபடம் போடுறாங்க நாங்கள் ஓடிப்போய் தியேட்டர்ல உக்காந்ததுக்கு அப்புறம்தான் கவனிக்கிறோம். சீனியர் பக்கத்துல உக்காந்திட்ட நூம்ன்னு. இருட்டுல ஒன்னும் தெரியல நில்லுங்கடா தலைகீழன்னு நிக்கவெச்சிட்டாங்க காவாசி படம் தலைகீழாதான் பாத்தேன் அப்படி பாத்த படம்தான் அதுவரைக்கும்பாத்த எல்லாத்தையும் மறக்கடிச்சது. திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது கிராமத்து ஆளா இருந்துதான் எனக்கு பெரிய விஷயமாஇருந்தது. அந்த மனநிலைக்கு நான் தள்ளப்படுகிற நிலைக்கு அப்படி அங்க சூழல் இருந்தது. நாலஞ்சுசட்டதான் இருக்கும்.திரும்ப திரும்ப அதையே  போட்டுகிட்டு போவேன் எவ்வளவுதான் நான் வியர்வை படாத போட்டாகூட கிராமத்து ஆளாதான் தெரியும்.  எல்லோரும் ஸ்பூன்ல சாப்பிட்டா நான் கையாலதான் சாப்பிடுவேன். ஆனா அந்த அவமானத்த நான் வெளியே காட்டிக்காம ரொம்ப பேசுவேன். எல்லோரும் என்னை அதிசயமா பார்ப்பாங்க என்னடா இவன் என்னென்னமோ பேசுரானே இதெல்லாம் எந்த உலகத்துல நடக்குதுங்கிறமாதிரி அந்தப்பார்வை இருக்கும். அதுல ஆச்சர்யம் கேலிகிண்டல் மிரட்சி அந்த பார்வை பல விதமா இருக்கும். திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது ரவுண்ட அப் அது ஒரு ஹங்கேரிப்படம் பார்த்தேன். அதாவது ஒரு நிகழ்வை பார்வையாளர் பார்க்கும்போது எப்படி ஒரு நேரடி உணர்வை தருமோ அதை அந்த திரைப்படம் தரும். இதைத்தான் நான் படமா எடுத்திட்ருக்கேன்.

 நான் எடுக்க போற தாய்மண் கூட அப்படி ஒரு நேரடி அநுபவத்தை தரனும்னுதான் முயற்சி பண்றேன். அதாவது டாக்குமென்ட்ரிக்கும் ப்யூச்சர் பிலிமுக்கும் இடையில டாகுபியூச்சர்னு சொல்லுவோம் அந்த ஒரு உணர்வ ரவுண்டப் படத்தோட
இயக்குனர்.மிகோலஸ் ஷான்கோ கிட்ட கிடைச்சது. உலக திரைப்படங்கள்லேயே மிசான் சென்ங்கிறத உள்ளடக்கி படம்பண்ணவரு அவருதான். மிசான் சென்னா ஒரு முழு நிகழ்வையும் கட் இல்லாம ஒரே ஷாட்ல காட்றது. இதை கொண்டுவந்தவரு அவருதான். அப்புறம் திரைப்படவிழாக்களுக்கு போகும்போது அவர்படமா தேடிபோக ஆரம்பிச்சேன். இப்படி எல்லாம் தெரிஞ்சாலும் அதை எதார்த்தமா மண் வாசனை யோட  குடுக்கனும்கிறதிலயும் தெளிவாஇருந்தேன். அந்த வகையில் எனக்கு திரைப்படமும் கீ.ரா.வோட இலக்கியமும் எனக்கு முக்கிய காரணங்கள்.  ஒரு வரியில் சொல்லுகிறதா இருந்தா சொல்லிடலாம் கி.ரா. அய்யாதான் என்னை மாத்தினார். ஆனா அதுக்கு பின்னால் ஒரு கதையிருக்கு என்னோட மனநிலை ரொம்ப வித்தி யாசமா இருந்தது. சொல்லப்போனா  தாழ்வுமனப்பான்மை  கிராமத்திலிருந்து   வந்திருக்கோம் மத்தவ னெல்லாம் இங்கிலிஸ் பேசுறான்  நமக்கு தெரியலன்னு வருத்தமா இருக்கும்.ஆனா நான் அங்குசினிமா எக்ஸ்பிரஸ் படிக்கத்தான் போவேன்.  குமுதம் ஆனந்த விகடனும்கூட அங்கு வரும். ஆனா அது நம்ம கையில் கிடைக்காது. வர்ரவங்க மொதலில அதைதான் பாஞ்சி எடுப்பாங்க .  இந்த சமயத்துலதான் என் ஃபிரண்ட் ஒருத்தன் ஐடியா கொடுத்தான் சும்மா ஒரு தடினமான இங்லிஸ்புக்க கையில் எடுத்துவச்சுக்க அப்பத்தான்  ஒன்னப்பார்த்து எல்லோரும் பயப்படுய் வாங்கன்னான், சரின்னு நானும் நல்லா பெருசா இருக்கிற ஒரு இங்கிலிஸ் புத்தகமா பாத்து கையில எடுத்து வச்சிக்கனும் பஸ்சுல போகும் போதும்  வரும் போதும் அட்டை தெரியிர மாதிரி கையில எடுத்து வெச்சிக்குனு இருப்பேன். ஒரு தடவ தரமணியில் பேருந்துக்காக காத்திருந்தப்போ என் கூட ஒரே ஒரு பெண் மட்டும்தான் அங்க  இருந்திச்சு, பாத்தா நல்லா படிச்ச பொண்ணு அது என் கையில் இருக்கிற புத்தகத்தையே உத்து உத்து பார்த்திச்சி.   நானும் அதை பெருமையா அதுக்கு தெறியிர மாதிரி கையில புடிச்சி காண்பிச்சிக்கிட்டிருந்தேன், அது பக்கத்துல வந்து   இங்கிலிஸ்ல இந்த   ஆத்தரோட புக்ஸ்லாம்    படிச்சிருக்கீங்களான்னு   கேட்குது எனக்கு, கையும்
ஓடல. காலும் ஓடல நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல சமாளிச்சுப்பாத்தேன்,  அது என்ன உட்றமாதிரி தெரியல. என்னடா இது வம்பாபோச்சுன்னு சட்டுன்னு ஐய்யோ என்ன விட்டுடுங்க எனக்கு இதுல ஒரு வார்த்தை கூட தெறியாதுன்னு உண்மைய சொன்னேன்,  அந்த பொண்ணுக்கு பேயரஞ்சமாதிரி போச்சு. அப்புறம்தான் என் வெகுளித்தனத்தைபார்த்து சிரிச்சது. நிறைய புத்தகங்கள் படியுங்க,  இங்கிலிஸ்லேயே ஈசியா படிக்குறமாதிரி நிறையா புக்ஸ்லாம் இருக்குன்னு சொல்லிச்சே நாம இதே இங்கிலீஸ்லாம் படிக்கதெறிஞ்சா இந்நேரம் அந்த மாதிரி பொண்ணுங்ககூட பிரண்ட்சிப் கிடைச்சிருக்குமே தோனுச்சு. இனிமே நாம எதுன்னா படிக்கனும்னு ஒரு உந்தல் இருந்துகிட்டே இருந்திச்சு. இந்த சமயத்துலதான் ஒரு இங்கி லீஸ் படத்துக்காக தேவி தியேட்டருக்கு போனேன். அது எமரால்டு ஃபாரஸ்ட்னுபடம் இல்ல... இல்ல.. ப்ருலாகன் அப்ப எனக்கு மீசை சரியா முளைக்குல, அதனால என்ன தியேட்டருக்குள்ள விடமாட்டேன்னு ட்டான்.  நானும் எவ்வளவோ செஞ்சிபார்த்தேன் ஐ.டி.கார்டு காண்பிச்சேன்,  ஒன்னத்துக்கும் அவன் மசியல சரின்னு வெளியவந்து பஸ் ஸ்டாண்டுல வந்து நிக்கிறேன். அப்ப நடைபாதையில் புத்தக கடிய ஒருத்தன் போட்டிருந்தான் சடால்னு மழைவரவே நான் ஓடிப்போய் அந்த கடைகாரனுக்கு  புத்தகத்தையெல்லாம் எடுத்து வைக்க உதவினேன். அந்த கடைகாரனுக்கு என்னோட இந்த உதவியால எம்மேல ஒரு நன்றி உணர்ச்சி வந்திருக்கும் போல. தம்பி ஒரு டீ சாப்பிடலாம் வாங்கன்னு கூப்பிட்டான். இல்ல எனக்கு வேணான்னேன் சரி அப்ப எத்தன புக்கு எடுத்துக்கனும்னு சொன்னான். உடனே நான் புத்தகமா எடுத்து பாத்தேன் அதுல ஒரு புத்தகத்தில கையெழுத்து பிரதியிலே இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைனு எழுதியிருந்திச்சு அந்த புத்தகத்தை சோ, ஏ.ஸ்.ஏ சாமிக்கு கொடுத்தாரா இல்லை, ஏ.ஸ்.ஏ சாமி சோவுக்கு கொடுத்தாரா தெரியல.அது எனக்கு பிடிச்சிருந்தது ஏ.ஸ்.ஏ சாமி அப்ப இன்ஸ்டியூட்ல லெச்சரரா இருந்தாரு .அதனால் ஏதோ முக்கியமான புத்தகமாத்தான் இருக்கும்னு எடுத்துக்கிட்டேன். அப்படியே பஸ் ஏறினேன். ஆனா ஏறுனதுதான் தெரியும், புத்தகத்த திறந்து படிக்க ஆரம்பிச்சப்ப அச்சு அசலா என்னோட வாழ்க்கை. அதுவரைக்கும் நான் எதையெல்லாம் நினைச்சு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தேனோ அதெல்லாம் அந்த புத்தகத்துல படைப்பா மாறிஇருந்தது.அது கி.ரா வோட நாவல். என் வாழ்க்கை அந்த இமிஷத்தில தான் மாறிச்சு. அதுக்கப்பறம் நெறையா படிக்க ஆரம்பிச்சேன். மொழிபெயர்ப்பெல்லாம் படிக்கஆரம்பிச்சேன்  என் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சி.

        அதுலயிருந்து நெறையா எழுத ஆரம்பிச்சேன். நெறையா எழுத்தாளனுக்கு கடிதம்போட்டேன் யாரோ ஒருவர் நீங்களே எழுதலாமேன்னு சொன்னாரு. அந்த சமயத்துல 1985-ல் அப்பா இறந்திட்டாரு அப்பாவோட சுடுகாட்டில வந்து பால் ஊத்தினப்போ எனக்கு ஒன்னு தோனிச்சி. உண்மையில அப்போ
நான் நிறைய வேதனையில இருந்தேன். சின்ன வயசிலிருந்து எங்கப்பா எங்களை வளர்க்கப்பட்ட கஷ்ட மெல்லாம் மனசுல ஓடிச்சு.எங்க அப்பா என்ன மட்டும் தான் தோள்ல தூக்கிட்டு கூத்துபார்க்க கூட்டிட்டு போவாரு.எங்கப்பானாலும் எவ்வளவு பெரிய மனுசனாயிருந்தாலும் நமக்கு இதே சுடுகாடுதான். இதே அப்பா மண்டைக்கு அடுத்தாப்புலதான் நம்மமண்டையும் வந்து கிடக்க போவுது,இதுக்கேன் நாம வயிராக்கி யத்துல என்னென்னமோ செய்யப்போறோம்னு தோனுச்சி. இதை ஒரு நாவலா எழுதுனும்னு முடிவு பண்ணினேன் அதுதான் ஒன்பது ரூபா நோட்டு. ஆனா அதுக்கு முன்னாடியே என்னோட சிறுகதை
தொகுப்பு வெள்ளைமாடு வெளியாயிடுச்சி.

                   மலைச்சாரல் படத்துக்கு அப்புறம்தான் தங்கராசுங்கற பேற தங்கர்பச்சான்னு மாத்திகிட்டேன். இந்த பேர் மாற்றம்கூட எதேச்சையா நடந்த்துதான்.நானும் என் கூட படிச்சவன் பாண்டியன் எனும் நண்பனும் கோடம்பாக்கத்திலேயே ஒரு டீக்கடையில டீ சாப்பிட்டே பேசிட்டே இருக்கோம். எனக்கு நம்ம அய்யா வச்ச பேரையே வெச்சுக்கலாம்னு ஒரு யோசனை ஆனா நண்பன்
தான் யோசனைபண்ணிட்டு தங்கர்பச்சான்னு வைடா நல்லாயிருக்கும்னு உறுதியா சொல்லிட்டான். நாளைக்கு மழைச்சாரல் படத்தோட டைட்டில் கார்டுக்கு பேர் கொடுக்கனும்.  தங்கர்பச்சான்னே கொடுத்திட்டேன்.பி சி  ஸ்ரீராம் ஒரு நாள் சொன்னாரு என்ன இன்னமும் தங்கராசுன்னு கூப்பிட்டவரு அவருமட்டும்தான்.என்னையா பேர இப்படி வச்சிருக்க யார் வாயிலயும் நுழையாதேன்னு கேட்டார். இந்தபேர மட்டும் நீ மற்றவங்கள சொல்லவச்சிட்டா அதுதான்யா உன்னோட வெற்றின்னு சொன்னார்.
என் நம்பிக்கை வீண் போகுல.

   -                       தாம்ரை இதழுக்காக் 2009ல் எடுத்த நேர்காணல் இது 

February 5, 2016

திரைக்கதைகளின் காட்பாதர்

  ராஜ் மோகன் எழுதி நாதன் பதிப்பக்ம் மூலமாக வெளியான தமிழ் மொழிபெயர்ப்பு காட்பாதர் திரைக்கதைக்கு நான் எழுதிய முன்னுரை                            

                                                                                       நாணயத்தின் இரண்டு பக்கங்கள் போலத்தான் நன்மையும் தீமையும் உல்கத்தில் நீக்கமற நிறைந்திருக்கிறது.  ஆனால் இவை இரண்டுமே அதிகார வர்க்கத்தில் இருப்பவர்களை பொறுத்தே மாறுபடுகிறது.
தங்களுக்கு சாதகமாக இருப்பவை நன்மை என்றும்  சாதகமற்றவை தீமை என்றும் கருத்தக்கம் கொண்டு அதிகாரவர்க்கத்தினர் இயங்குவதால் அத்னால் நசுக்கப்படும் எளிய மனிதர்கள் , சமூகத்தின் விளிம்பு நிலையில் இருப்ப்வர்கள் .. தங்களை வாழ்வித்துக்கொள்ள அதிகார வர்க்கத்தினருக்கு எதிரான மாற்று சக்திகளை உருவாக்க் முயல்கிறபோது ..வன்முறையும் களவும் கொள்ளையும் தவிர்க்கமுடியாத காரியாங்களாகிப்போகிறது.
அதிகாரத்தை அதிகாரத்தால் எதிர்கொள்ளும் இவர்கள் சிலர் இந்த சிந்தாந்தங்கள் குறித்து எதுவும் தெரியாமாலேயே கொலைகாரர்களாகவும் கொள்ளைகாரர்களாகவும் திருடர்களாகவும் இயங்கி கடைசி வரை நிழல் உலக வாழ்க்கையை வாழ்ந்து மடிந்து போகின்ற்னர். இவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களும் இறுதிவரை நிம்மதியிழந்து வாழ்வின் ஜீவ சாரத்தை முழுமையாக அனுபவிக்க  முடியாமல்  காவல் நிலையம் சிறை நீதிமன்ற்ம் எனற வட்ட்த்துக்குள் சிக்கி குற்றச்வுணர்ச்சியை பரிசாக பெற்று வாழ்வை முடித்துக்கொள்கின்ற்ணர்.
உலகில் இவர்க்ளுக்கான அறத்தை பேசி அதை இலக்கியமாக்கியவர் நீட்ஷே அத்னாலேயே கடவுள் இறந்துவிட்டார் எனும் அவருடைய கூற்று புகழ்மிக்கதாக இருந்த்து. நீட்ஷே வுக்கு பிறகு ஜெனெ இலக்கியரீதியாக் இந்த கருத்தாக்கத்துக்கு மதிப்புகூட்டினாலும் காட்பாதர் உல்க அளவில் இதை அங்கீகாரப்படுத்தியது.
காட்பாதருக்கு பிறகுதான் கெட்டவர்களுக்கான அறம் சமூகத்தில் ஒரு மதிப்பீட்டை  பெற்றது. நாயகன் கெட்டவ்னாக இருக்கும் ப்டங்கள் அங்கீகாரம் பெற்றன . அமிதாப்பும் ரஜினியும் இவர்களது பிரதிநிதிகளாக உருவெடுத்தார்கள் .ஏழ்மைதான் இவர்களை இப்படி ஆக்குகிறது என்பதை மக்களும் இதன்பிறகுதான் புரிந்துகொள்ள துவங்கினர் .
 
காட்பாதர் செய்த மகத்தான் சாதனை இதுதான் . என்னதான் அது சினிமா எனும் கலையை மேம்படுத்தினாலும் அது த்துவார்த்த ரீதியாக தீமையின் பிறப்பிட்த்தை பற்றிய நியாயத்தை பேசி அத்ற்கு கலைக்கான அந்தஸ்தை உலகம் முழுக்க  உருவாக்கியதும் அடையாளப்படுத்தியதும்தான் அத்ன் உலக சாத்னை .
இன்றும் உலகின் மிகச்சிறந்த படங்களின் பட்டியலில் குரசேவா பெலினி கோதார்ட் பெர்க்மன் படங்களைபோல  கமர்ஷியல் படமான காட்பாதருக்கும் ஒரு இடம் கிடைத்துள்ளது என்றால் அத்ற்கான் முழுமுதல் காரணமும் மேற் சொன்ன காரணங்கள் தான்

காட்பாதர் மரியாபூசோ நாவலாக எழுதியபோது ச்வாதாரண த்ரிலராகத்தான் இருந்த்து. ஆனால் அது இலக்கியமானது அத்ன் திரைக்கதை மூலமாக்த்தன்
அத்த்கைய திரைக்கதையை தம்ழில் நாதன் பதிப்பகம் மூலமாக் கொண்டுவருவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். வெகுநாளாக நான் முயற்சித்து நேரமின்மை காரணமாக முடியாது போன காரியத்தை நண்பர் ராஜ்மோகன் மிக குறைந்த அவகாசத்தில் திற்மையாகவும் முழுமையாகவும் நிறை வேற்றியிருக்கிறார்.
இந்த நூலை வாசிப்பது மக்கத்தான் இலக்கியத்தை வாசிப்பது போன்றது. ஒரு திரைப்பட நூல் என்பதை தாண்டி இத்திரைக்கதை மனித வாழ்வின் சூட்சுமங்களை கண்டறிய உதவும் கையேடாகவும் நமக்கு வாய்ப்புள்ளது.
திரைக்கதையின் நேர்த்தி கலையம்சம் என சில வார்த்தைகளை முழுமையான் அர்த்தம் இந்நூலை வாசிக்கும்போது நமக்கு விளங்கும்
மேலும் சிலர் இப்பட்த்தை நூறுமுறை பார்த்திருக்க்க்கூடும் .ஆனால் அப்போதும் புல்ப்ப்டாத ப்ட்த்தின் சில முக்கிய அம்சங்கள் இந்நூலை வாசிக்கும் போது புலப்ப்டக்கூடும்
த்மிழ் திரைப்ப்ட சூழலும், திரைக்கதை பயில்பவர்களுக்கும் , உல்க சினிமா ரசிகர்களுக்கும் , இலக்கியவாதிகளுக்கும்  நாதன் பதிப்பகத்தின்  மகத்தான் பரிசு  இந்நூல்
ராஜ் மோக்ன் கடும் உழைப்பாளி, இலக்கிய ஆர்வமும் திரைப்ப்ட்த்தின் மீதான் காதலும் கொண்டவர் . எதற்குமே மறுப்பு சொல்லாமல் முடியும் முடித்துவிடலாம் என நம்பிக்கையுடன் பேசுபவர். அதுபோலவே முடிக்கவும் கூடிய்வர் .
இரவு 9மணிக்கு மேல் நகரின் மால் தியேட்டரில் சென்று படம் பார்ப்பதிலும் திரும்பும் வழியில் சைக்கிளில் தேநீர் விற்பவனிடம் தேநீரை வாங்கி பருகியபடி சென்னையின் பின்னிரவை ரசித்த்படி வீடு திரும்புவதிலும் பெரு விருப்பம் கொண்டவர்.
அவரிடம் இவ்விஷ்யம் குறித்து நான் சொன்னதுமே உடனடியாக ஒப்புக்கொண்டு துரிதமாக காரியத்தை செம்மையாக நிறைவேற்றி தந்துள்ளார்
அவருக்கு இது முதல் நூல். அவருக்கு இந்நூல் பெருமை சேர்க்கும்
என் அன்பான வாழ்த்துக்கள் 

அஜயன் பாலா
ajayanbala@gmail.com
எழுத்தாளர் & பதிப்பாசிரியர்
நாதன் பதிப்பகம்
காட் பாதர் திரைக்கதை தமிழில் 
விலை : 200
நாதன் பதிப்பகம்
43/72 , கேப்டன் காம்ப்ளக்ஸ் 
காவேரி தெரு 
சாலிக்கிராமம் 
சென்னை 13  




February 1, 2016

பை சைக்கிள்தீவ்ஸ் தமிழ் திரைக்கதை நூலின் மூன்றாம் பதிப்பின் முகவுரை


இன்று இந்த புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டியுள்ளது .
ஒரு புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டுவது ஒன்றும் அத்தனை பெரிய சாதனை அல்ல. ஆனால் எனக்கு இது அளப்பரிய மகிழ்ச்சி

காரணம் இது என்  முதல் புத்தகம் .முதல் குழந்தை போல அத்தனை பரவசத்தை இப்புத்த்கத்தின் முதல் பதிப்பின் முதல் பிரதியை கையில்  வாங்கியபோது உணர்ந்தேன்.

அடிப்படையில் நான் எழுத்தாளனாக  இருந்தாலும் சினிமா  இயக்குனர் எனும் கனவே என்னில் அப்போது முதல் நிலையீல் இருந்தது.  . இலக்கியத்தின் மீதான  தீவிர அவா என்னுள் அப்போது கொழுந்துவிட்டு என்னை எரித்துக்கொண்டிருந்தாலும் சில கதைகள் எழுதியதோடு நிறுத்திக்கொண்டு தீவிரமாக திரைத்துறையில் களமிறங்கினேன்



நான் பணி புரிந்த லவ் டுடே எனும் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  திரையுலகில் இயக்குனராக போராடினேன்.  இருபதுகளை கடப்பதற்கு முன்பாக இயக்குனராகிவிட வேண்டும் என்ற வெறி காரணமாக தீவிரமான முனைப்புடன் இருந்தேன் .இத்தனைக்கும் அது எனக்கு இரண்டாவது படம் . உண்மையில் நான் அவ்வளவு அவசரப்பட்டிருக்க கூடாதோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது . ஆனால் அப்போது ஒரு வேகம் . மூர்க்கம் . கையில் சுமக்க முடியாத பெரும் வாளை உயர்த்தி பிடித்தபடி கடன் பட்ட டீக்கடைகளுக்கு டைவர்ஷன் போட்டு நிமிர்ந்து கடந்தேன். ஆனால் நான் எதிர்கொண்டதோ தொடர் தோல்வி. கதை நல்லா இருக்கு பூஜை தேதி என்னைக்கு வச்சுக்கலாம் என முதல் நாள் கைகுலுக்கியவர்கள் அடுத்த நாள் கொஞ்சம் பைனான்ஸ் பிரச்னை நாளைக்கு சொல்றனே  என பதில் சொல்வர். இதற்குள் அவசரப்பட்டு நானும் நண்பர்களிடம் சொல்லிவிடுவேன். மறுநாள் நண்பர்கள் எப்போ பூஜை ஹீரோ யார் என கேட்க  நானும் அடுத்த மாசம் என உண்மை மறைத்து சமாளித்து அடுத்த தயாரிப்பாளரிடம் ஓடினேன். ஏமாற்றம் தோல்வி  தொடர் கதையாக தொடர்ந்து  பல முறை என் கனவு பாதையில் விழுந்து எழுந்தேன் . கடைசியாக  ஒரே ஒரு தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார். தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேசி முடிவானது. பூஜைக்கான தேதிகளை குறித்தார். நம்பிக்கை வார்த்தைகள் பேசினார் . அட்வான்ஸ் கொடுக்க காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரச்சொன்னார். அட்வான்ஸ் பணம் பத்திரமாக கொண்டுவர ஒரு ஜிப் வைத்த பையுடன் சென்றிருந்தேன் என்னுடன் அன்று அவதாரம் படத்தின் கலை இயக்குனர்  தாமு உடன் வந்திருந்தார். கோவில் மண்டபத்தில் த்யாரிப்பாளர் எனக்காக காத்திருந்தார். பணம் கொடுப்பார் என கையை நீட்டினேன்

அவரோ என் கையை பிடித்தார். ஒரு மாதம் காத்திருங்கள் என்றார். தன் எதிர் பாராத பண நெருக்கடியை சொல்லி மனம் கலங்கினார். எனக்கு இது புதியதல்ல .ஆனாலும்  நான் வாங்கிக்கொண்டு போன பை என்னை கேலி செய்தது. தாமுவுக்கோ த்யாரிப்பாளர் மீது கடும் கோபம். வரும் வழி முழுக்க திட்டிதீர்த்தார்.  நான் மவுனமாக கேடுக்கொண்டேன் . பேருந்திலிருந்து   ரோகினி தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினோம். அவர் வருகிறேன் என சொல்லி தோளைத் தொட்டார். பிரிந்தோம். எனக்கு  மன அழுத்தம் அதிகமாக இருந்தது உலகம் சட்டென விரிந்துகொண்டே இருந்தது.  பிரம்மண்டமான உலகில் நான் மட்டும் ஒரு புள்ளியில் தனியாக இருப்பதை உணர்ந்தேன்.

கடல் நீர் என் கண்வழியாக பூமியை நனைக்க துவங்கியது.
அறைக்கு வந்து யாருடனும் பேசாமல் கவிழ்ந்து படுத்தேன். ம்னம் வெறுமையில் தத்தளித்தது. ஒரு வித காரணமற்ற அச்சம் இருளாக நெஞ்சில் குடிகொண்டது . இரண்டுநாட்களாக சாப்பிடக்கூட மனமில்லாமல் அறையில் சுருங்கிகிடந்தேன்.  மூன்றாம் நால் எதையாவது செய்தே தீரவேண்டிய மன் அவசம் உந்தி தள்ளியது. பரணில்  எதையோ தேடிய போது இந்த மொழிபெயர்ப்பை தாங்கிய நோட்டு கையில் அகப்பட்டது . பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை என எழுதி சுமார் முப்பது பக்கங்களுக்கு கிறுக்கியிருந்தேன்.  நான்கு வருடங்களுக்கு முன்  எழுதியது.  தூசு தட்டி வெளியில் எடுத்தேன்.  பிலிம் சேம்பரில் சென்னை பிலிம் சொசைட்டி மூலமாக முதன் முறையாகஇந்த  படத்தை பார்த்து நெகிழ்ந்து  கோடம்பாக்கம் வரை நடந்தே  அறைக்கு  திரும்பி அடுத்த சில நாட்களில்  போக் ரோடிலிருக்கும் ஏலூரு லெண்டிங் லைப்ரரியில் இதன் திரைக்கதை புத்த்கம் கிடைத்த வுடன் ஆர்வம் மிகுதியில் உடனடியாக அந்த புத்த்கத்தை ஜெராக்ஸ் எடுத்து க்கொண்டு எழுத ஆரம்பித்திருந்தேன். காரணம் ஏலூருவில் பத்து நாளுக்கு புத்த்கத்தின் விலையில் பத்து சதவீதம் வாடகை.. புத்தகம் 500 ரூபாயாக இருந்தால் 50 ரூபாய் .. ஒருநாள் அதிகமானால் 5 ரூபாய் கணக்கில் வாட்கை வசூலித்தார்கள் . அப்போது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாத சூழல் ஆகவேதான் ஜெராக்ஸ் எ4னும் அற்புதம் மூலம் அந்த புத்தகத்தை நிரந்தரமாக்கிக்கொண்டேன். அதை வைத்துக்கொண்டு ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து பின் நாம் எழுதுவது சரியா தவறா என்ற குழப்பத்தில் பாதியில் அதை மூடி அப்படியே பெட்டியில் பூட்டியிருந்தேன்.இடையில் அறை மாற்ரும் போதெல்லாம் அதுவும் என்னுடன் சில புத்தகங்களை போல அல்லோகலப்பட்டது .

இந்த நிலையில்தான் அது மீண்டும் என் கண்ணில் ப்ட தூசு தட்டி எடுத்து வாசித்தேன்.அப்போது நான் தங்கியிருந்த  மேற்கு மாம்பலம் பால் சுகந்தி மேன்ஷன் அறை எண் 53க்கு  கவிஞர் யூமா வாசுகி ,இயக்குனர் கற்றது தமிழ் ராம் உள்ளிட்ட பல நண்பர்கள் விஜயம் செய்வர் . ராம் எனக்கு நா. முத்துக்குமார் மூலமாக பரிச்சயம்.

அன்று அறைக்கு வந்த ராம சுப்பு (ராம்) என் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு பாலா அருமையாக இருக்கிறது இதை முழுவதுமாக எழுதி முடிக்கலாமே என்றார். துளி நம்பிக்கை வந்தது. அடுத்து வந்த யூமா வாசுகியும் அதை படித்துவிட்டு பாலாஜி ( என் ஒரிஜினல் பெயர்) இதை முதலில் கையோடு முடித்துவிடு என்றார். இருவரும் கொடுத்த  உற்சாகம் என் மன நெருக்கடிக்கு மருந்தானது . பாதியில் நான் நிறுத்தி வைத்த இந்த நூலை மீண்டும் தொடர்ந்து  எழுதத்தூண்டியது. அன்று  முதல் இரண்டு மாதங்கள் முழுவதும் அறையை  விட்டு வெளியேறாமல் எழுதத்துவங்கினேன்  என் உதவியாளரான ரவிச்சந்தர் அதை கையோடு பிரதியெடுத்து உதவி செய்தார் .

வெட்டி எழுதி வாக்கியம் சமைக்கும் போது உண்டகும் பரவசம் எனக்குள் படைப்பு சம்பந்தமான பல ரகசிய அறைகளை திறந்துவிட்டன .புதிய பறவைகள் என் மனதுள் பிரவேசித்தன முழுமையாக எழுதி முடித்தபின் யூமாவாசுகி  தமிழினி வசந்த குமாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.  நான் ஆர்வக்கோளாறு  காரணமாக புத்த்கம் இன்னும் எத்தனை நாளில் ரெடியாகும் அட்டை  அவுட் எல்லாம் என் ரசனையின் படி வரவேண்டும் என்பது போல எதையோ  உளறினேன். அது வசந்த குமாருக்கு  கொஞ்சம் எரிச்சலூட்டிவிட்டது. தம்பி உங்களுக்கு இது முதல் புத்தகம்.  நான் என் இஷ்ட்த்துக்கு எப்ப கொண்டுவர முடியுமோ அப்போதான் கொண்டுவருவேன் என திட்டமாக கூறி கையோடு ஸ்க்ரிப்டை கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டார். மொக்கை வாங்கிய விரக்தியுடன் அறைக்கு திரும்பினேன் .

அப்போது  என் பிலிம் சொசைட்டி நண்பர்கள் ஜார்ஜ்( தற்போது தொலைகாட்சி தொடர்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.) மற்றும் ரியாஸ் (தற்போது கோவையில் பிசினஸ் எய்துகொண்டிருக்கிறார்) இருவரும் என் உற்ற தோழர்கள்.  இருவரும் என் அறைக்கு வந்து இதனை படித்துபார்த்துவிட்டு நிழல் திருநாவுக்கரசுவிடம் கொண்டுசென்றனர். அடுத்த சில நாட்களில் என் வாழ்வின் முதல் புத்தகமும் அச்சாகியது.  அது விதிப்படி மீண்டும் தமிழனி வசந்தகுமார் அவர்களின் மேற்பார்வையில் தன் கொண்டுவ்ரப்பட்டது.  முதல் புத்த்கம் கையில் வாங்கிய கையோடு வெளியே வந்த போது அப்போது வழியில் எஸ் ராம்கிருஷ்ணன் எதிர்பட்டார் . அவர் கையில் முதல் புத்தகத்தை கொடுத்தேன் . நண்பர் இசக்கியப்பன் அப்போது என்னுடனிருந்தார். அவருக்கு இரண்டாவது புத்தகம்

அடுத்த சில நாளில் நண்பர்கள் அருண்மொழி ,ஆந்திரா வங்கி பாலசுப்ரமணீயன் ஆகியோரது முன்னெடுப்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. ஏற்பாடானது, வெளியீட்டுக்காக  யாரை அழைக்கலாம் என யோசித்த போது நண்பர்கள் ராஜா மற்றும் நா முத்துக்குமார் உதவியுடன் இயக்குனர்  பாலுமகேந்திராவை சந்தித்து நூலை கொடுத்தேன். அவரோடான என் முதல் சந்திப்பு அது.  பாலுமகேந்திரா வெளியிட  தங்கர் பச்சான் அதை பெற்றுக்கொள்வதாக முடிவானது . உடன் நிகழ்வில் இயக்குனர்கள் அம்ஷன் குமார், ஹரிஹரன் வாழ்த்துரை வழங்கவும் பேசி முடிவானது. நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் அப்போதிருந்த ஜெர்மன் மொழிக்கான  முகமை பகுதியான  மாக்ஸ் முல்லர் பவனில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம். அப்போது அங்கு பணியாற்றி வந்த பிரசன்னா ராமஸ்வாமி அதற்கு உதவி செய்தார்
 
நான் ஒழுங்கு செய்த முதல் கூட்டம் அதுதான்.
விழா நாளன்று மிகுந்த பதட்டத்துடன் எத்தனை பேர் வருவார்களோ என காத்திருந்தேன் . வழக்கமாக அப்போது மாக்ஸ் முல்லர் பவன் நிகழ்வுகளுக்கு இருபது பேருக்கு மேல் வந்தாலே அதிசயம் . ஆனால் நிகழ்வில் பை சைக்கிள் தீவ்ஸ் ப்டம் திரையிடுவதாக் அறிவிப்பு செய்திருந்த  காரணத்தால் கூட்டம் எக்கச்சக்காமாக் எதிர் பாராமல் குவிந்து விட்டிருந்தது.  
நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த கூடம் தாண்டி அதனையொட்டிய சிறிய அறை மற்றும் படிக்கட்டிலும் வாசலிலும் வராந்தாவிலும்  நண்பர்கள் வழிந்து நிறைந்திருந்தனர். முதல் முறையாக அந்த கட்டிடம் வரலாறுகாணாத கூட்டத்தை கண்டிருப்பதாக மாக்ஸ் முல்லர் பவனை நிர்வகித்த பெண்மணி தன் ஆங்கில பேச்சில் கூறினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் என்னை தங்களது வார்த்தைகளால் என் எழுத்து பாதைக்கு ஞான ஸ்னானம் செய்த்னர். குறிப்பாக பாலு மகேந்திரா தமிழின் வெளி வந்திருக்கும் அற்புதமான சினிமா பற்றிய முதல் நூல் என கூறினார். தங்கர்பச்சான் ஒரு சம்ஸ்கிருத வார்த்தை கூட இல்லாமல் எழுதப்ப்ட்டிருப்பதை வியந்து பாராட்டினார் . நான்கு மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் மனம் குமைந்து கண்ணீர் சொறிந்த காட்சி மன்க்கண்ணில் நிழலாட ஏற்புரை நிகழ்த்த மைக் முன் வந்து நின்றேன் .
 
என் முன் என் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இருந்தனர் . திருக்கழுக்குன்றத்திலிருந்து என் பால்ய  நண்பன் விமல் வந்திருந்தான். என் கல்லூரி நண்பர்கள் வெங்கட்ட பெருமாள் ஸ்ரீராம் .. பழவந்தாங்கல் சிவக்குமார்  யூமா வாசுகி செம்பூர் ஜெய்ராஜ் , ராஜன் அரவிந்தன்  மற்றும்  ஷங்கர் ,தளவாய் பாஸ்கர் சக்தி, தமிழ் மகன், காயத்ரி  கிருஷ்ணா டாவின்சி  என் முன்னாள் அறை நண்பர்கள் முத்துராமலிங்கம் , செல்வம் மற்றும் என் தங்கை உமா அவளது கணவர் சுரேஷ் என் அம்மா என அப்போது என் வாழ்க்கைக்கு நெருக்கமான பலரும் என் கண்முன் வரிசையாக அமர்ந்திருந்தனர்.  ..நான் கனவு கண்ட என் முதல் நூல் வெளியாகிவிட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. மகிழ்ச்சியில்  கண்ணீர் துளிர்த்தது . அந்த கண்ணீர் என் உடல் தொடர்பானது அல்ல . என் சென்னை வாழ்க்கை அது உண்டாக்கிய அழுக்கு மன இருட்டு தொடர்பானது நெஞ்சு நிறைந்து கண்ணீரை கட்டுபடுத்தியபடி  ஒரு ராஜ க்ரீடம் சூடிய அரசனாக உணர்வதாக கூறி நெகிழ்ந்தேன் .

இன்று நான் எழுத்தாளனாக அடையாளம் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடிப்படை காரணமாக இருந்த என் முதல் நூல் இது
இப்படியாக இப்புத்தகம் என்னளவில் ஒரு மகத்தான சாதனையை உள்ளடக்கியதாக இருந்தாலும் இதன் புற சாதனைகளும் அத்தனை  எளிதானதல்ல


2000க்கு முன் 90 கலீன் இறுதி காலங்களில்  தமிழ் சினிமா எப்படியிருந்ததோ ஆனால் கோடம்பாக்கம் வட்டாரத்தில்  உலகசினிமா என்ற வார்த்தையே பலரையும் அச்சுறுத்தக்கூடிய சொல்லாக இருந்தது .குரசேவா த்ரூபோ என  பெச்செடுத்தாலே பலரும் குழப்பவாதி என்பது போல என்மேல் சந்தேக பார்வைகள் வீசினர். மேலும் அக்காலத்தில்  பல நூல்கள் உலகசினிமா பற்றி வந்திருந்தாலும் அவை பெரும்பலும் அறிவுஜீவி வட்டத்துக்காக அதற்கான இறுக்கமான மொழி நடையுடன் மட்டுமே வெளிவந்தன.

ஆனால் இப்புத்த்கம் வெளியான பின் பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்கள் இலக்கிய வாசகர்களின் கரங்கள் என் வலக்கையை பற்றி குலுக்கினர்.  . முதல் முறையாக கோடம்பாகத்தின் தீப்பெட்டி அளவு அறைகளின் அலமாரிகளில் இப்புத்த்கம் ஒரு மதிப்புமிக்க இடத்தை பிடித்ததுதான் இந்நூலின்  சாதனை. அது வரை தலைதெறிக்க ஓடிய கோடம்பாக்கம் நண்பர்கள் கூட இந்நூலை வாசித்தபின்   பிலிம் சொசைட்டி திரையிடல்களுக்கு மெல்ல தங்கள் பாதங்களை திசை திருப்பினர்..அந்த உதவி இயக்குனர்கள்தான் பிற்பாடான தமிழ் சூழலின் மாற்றத்துக்கும் அடிகோலியவர்கள் . இந்த நூலுக்கு கிடைத்த வரவேற்பை யொட்டி பல உலக  சினிமாக்களின் திரைக்கதைகள் வெளிவரத்துவங்கின .வெற்றி பெற்ற தமிழ் சினிமாவின் திரைக்கதைகளை அச்சிட்டு வெளியிடும் புதிய வழக்கமும் பதிப்பு சூழலில் வருவதற்கு இப்புத்தகமே காரணமாக இருந்தது.

இந்த மூன்றாம் பதிப்புக்கு காரணமாக  விளங்கும் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும்  புத்தகம் பேசுது ஆசிரியர் தோழர் நாகராஜன் அவர்களுக்கும் ,நண்பனும் இப்புத்தகத்தின் மெய்ப்பு திருத்தரும் சக  எழுத்தாளருமான கீரணூர் ஜாகிர் ராஜாவுக்கும்  இந்த புத்தகத்தை சிறந்த முறையில் வடிவமைத்து அச்சிட்டு  வெளியிடவிருக்கும் புத்தகம் பேசுது ,பாரதி புத்தகாலயம் குழுவினருக்கும் என் நினைவார்ந்த நன்றிகள்


அஜயன்பாலா

19-07-2011

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...