March 30, 2017

மனிதம் என்பதன் உயர்நிலை விளக்கம் - ராம் பால்




 (  ராம்பால்  42,  என்னுடைய நெருங்கிய நண்பர் .. உதவி இயக்குனர். இயக்குனராகும் வாய்ப்புக்காக காத்திருந்தவர். முக நூலில் அசோகமித்ரனுக்கு அஞ்சலிகுறிப்பை எழுதியவர் மறுநாள் அவருக்கு பலரும் எழுதும்படி திடீர் மாரடைப்பால் மரணத்தை தழுவிக்கொண்டார். )


 ராம்பால்  மனைவி மற்றும்  மழலைகள்

1999  -2000 ம்   வருடங்கள்.தான் என்  சென்னை வாழ்க்கையின் மிக நெருக்கடியான காலகட்டம்.. அப்போது நான் மேற்கு மாம்பலத்தில்  பால்சுகந்தி மேன்ஷனில் தங்கியிருந்தேன். . காதல் படத்தில் வருமே அதே மேன்ஷன்தான். சென்னைக்கு கனவுகளுடன்  வாய்ப்பு தேடி வருபவர்களீன் புகலிடம் அது. ஆண்களின் வீச்சமடிக்கும் புழுக்கமான உலகம்.  எப்போதும் சட்டை அணியாத வெற்று உடம்பும்  தோளில் தொங்கும் சிவப்பு குற்றால துண்டுமாக  சதா பால்கணியில் ஆண் உருவங்கள் அலைவதை தொடர்ந்து பார்த்தால்  நமக்கு தற்கொலை உணர்வு அடிக்கடி தலையெடுக்கும். எங்கோ தொலைவில் துணிகாயப்போட வரும் கூன் விழுந்த பெண்கள்  கூட தேவதையாக தோன்றும்.

அந்த மேன்ஷனில் அறை எண் 54 ல் நான் தங்கியிருந்த காலத்தில் ஓரு நாள் ராம்பால் நண்பர் வசந்த்துடன் என் அறைக்கு சிறிய பெட்டியுடன் வந்தார். . ஓல்லி உருவம்   சுடர்மிகும் குறுகுறுக்கும் கண் . அப்போது விஜய் டிவி ரமணகிரிவாசனிடம்  தொலைக்காட்சி சீரியலுக்கு உதவி இயக்குனராக பணிசெய்துகொண்டிருந்தார். அன்றுமுதல்  சக அறைவாசி. 

அதிகம் பேசமாட்டார்  வேலையில்லாத நேரத்தில் தரையில்  துண்டைவிரித்து படுத்துக்கொண்டிருப்பார். அப்போது நானும் பரபரப்பாக இருந்த நாட்கள். ஆனால் அவ்வளவாக பேச்சில்லை
கொஞ்ச நாட்களில் விஜய் டிவி வேலையும் போய்விட்டது. பொருளாதாரரீதியாக அவர் கஷ்டத்திலிருந்தார்அறையில் மதிய நேரம்  அருகிலிருக்கும் விடுதியில் உணவை பார்சல் வாங்கி பகிர்ந்துண்ணுவோம்மதிய உணவு உறுதியாக கிட்டும் என்ற நம்பிக்கையுடன்  நண்பர்கள் தேடி வருமளவிற்கு  என்  அறை சிறப்பை பெற்றிருந்தது.   அந்த சமயங்களில்  சாப்பிட எப்படி அழைத்தாலும் மறுத்துவிடுவார்.  சாப்பிடாமல் கூட பட்டினியாக படுத்துக்கொண்டிருப்பாரே  ஓழிய எவ்வளவு வேண்டி அழைத்தாலும்  பிடிவாதமாக மறுத்துவிடுவார்

  மிகவும் கோபப்படுத்தக்கூடிய அவரது அந்த சுய கவுரவமும் தன் கருத்தின் மீதான மூர்க்கத்தனமான பிடிவாதமும் தான் இன்று யோசிக்கும்போது  பத்தோடு பதினொன்றாக ஆக்கிவிடாமல் அவரது தனித்தன்மைக்கு வலு சேர்க்கிறதுஅதேசமயம் அந்த   இறுகிய உயர்ந்த மலைக்கு அப்பால் பிரம்மாண்டமான  கடல்  மனிதநேயமாக மறைந்திருந்ததை கண்டு அதிசயித்தேன். ஓரு மனிதன் இப்படியிருக்க முடியுமா என மலைக்கவைத்த சம்பவம் அது. அந்த சம்பவத்தை நான் சொல்வதற்கு முன்னால் அச்சம்பத்தில் தொடர்புடைய  இன்னொரு நண்பனை அறிமுகப்படுத்தவேண்டும். அவர் பெயர் ராஜன்அரவிந்தன்.
.
ராஜன் அரவிந்தன் ஓரு உதவி இயக்குனர் . சிறுகதை எழுத்தாளர் . நான் சென்னைக்கு வந்த காலம்  தொட்டு எனது நெருங்கிய நண்பர். பம்பாய் போல்டு இண்டியா பத்ரிக்கையில் சில காலம் பணிசெய்துவிட்டு இயக்குனராகும் கனவுடன் சென்னைக்கு வந்தவர்..  ரமேஷ் கிருஷ்ணனின் அதர்மம்  உள்ளிட்ட படங்களீல் பணிசெய்துவிட்டு ஜி  எம் குமாரிடம் சில படங்களுக்கு இணை இயக்குனராக வேலை செய்தவர் பிற்பாடு . இயக்குநராக  தீவிரமாக முயற்சி செய்து வந்தார். இக் காலத்தில் என்  மேன்ஷன் அறைக்கு அடிக்கடி வருவார்.  அறைக்கு அப்போது நா முத்துக்குமார்.. கற்றது தமிழ் ராம் ஆகியாரும்  அடிக்கடி வருவார்கள்  நான் இல்லாவிட்டாலும்  வருபவர்கள் பயன்படுத்த ஏதுவாக சாவி வெளியே கொக்கியில் தொங்கும். நா.முத்துகுமாரும் இந்த அறை குறித்து   அணிலாடும் முன்றில்  கட்டுரையில் எழுதியிருந்தார்.

 இப்படி பலரும் வந்தாலும் ராம்பாலுக்கு என்னவோ ராஐன் அரவிந்தனை மிகவும் பிடித்துப்போனது  சேர்ந்தால்  அவரிடம் மட்டுமே உதவி இயக்குனராவது என்ற உறுதியுடனிருந்தார். அதற்கு மிக முக்கிய காரணம் அவரும் இதேபோல தன்மானமும் சுயகவுரவமும் தனித்த கருத்தும் கொண்ட பிடிவாதக்காரர் . இருவருமே இளையராஜாவின் தீவிர வெறியர்கள். அதே  சமயம் ராம்பால்  யாரிடமும்  கோபப்படமாட்டார் அவரது கோபம் சமுகம் அல்லது படைப்புரீதியானது. ஆனால் ராஜன் தன் நண்பர்களிடம்  கடுமையாக கோபப்பட்டு மனம் நோக பேசிவிடுவாரர்ஆனாலும் கோபத்தைப்போலவே அவரது அன்பும் நட்பும் வலிமையானதாக இருந்தபடியால்  அவருக்கும் எனக்குமான நட்பு தண்டவாளங்கள் போல  பிரிந்தும்  இணைந்துமாக  இருந்தது

.ராஜன் அரவிந்தன்
பிற்பாடு  நான்  மேன்ஷன் வாழ்க்கையிலிருந்து தப்பித்து சிவில் வாழ்க்கைக்கு  குடிபெயர்ந்து விட்டேன் . ராம்பால் அதற்கு முன்பே வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்துவிட்டாலும்   ராஜன் அரவிந்தனை தொடர்ந்து சந்தித்து அவரோடு கதை விவாதம் செய்வதும் அவரோடு இணைந்திருப்பதுமாக இருந்தார்இடையில் நானும் ராஜனும் மீண்டும் நட்பாகி மீண்டும் சண்டையில் பிரிந்த நிலை. எனக்கும் அவர்களுக்குமான தொடர்பு முழுமையாக அறுந்துவிட்டசூழல்

. கடைசியாக நான் ராஜனை   பார்த்தது அபிபுல்லா சாலையில்.  வடக்கு உஸ்மான் ரோட்டை  கடக்கும்போது ராஜன் எதிரே நடந்து வந்தார். இருவருமே  யாரோ போல பார்த்தபடி சாலையை கடந்தோம். எனக்கு நன்றாக தெரியும் என்னைப்போலவே ராஜனும் மிகுந்த மனக்குமுறலோடு  இருந்திருப்பார்

அதன் பிறகு 2002 பிப்ரவரியில் ராஜன்  புற்று நோயால் இறந்த சேதியை ராம்பால் எனக்கு தெரிவித்தபோது அதிர்ந்தேன் கழுத்துக்கு கீழே சிறு கட்டி போல ஒன்று உருவாகி அவரை வெகுவாக இம்சித்து வந்தது. அதை அவர் பெரிதாக பொருட்படுத்தவில்லை. சுய பகடி ராஜனின் தனித்த குணம். அந்த கட்டியை விராலால் பிடித்து நீ என்னை  ரொம்ப சோதிக்கிற  பாத்துக்க . ஒருநாள் உன்னை  அறுத்து எரியப்போறேன் என தனக்குத்தானே சொல்லி சிரிப்பார். இது போன்ற கழுத்துக்குகீழே சிறு கட்டி வந்து பிற்பாடு புற்று நோயால் இறந்தவர்கள் சிலரை அதன் பின் பார்த்து எச்சரிதுள்ளேன். . கழுத்தில் ஏதேனும்  கட்டி வந்தால் அல்லது யாரிடமாவது பார்த்தால் உடனே மருத்துவரை சந்திக்க வேண்டுகிறேன்.

 கடைசியாக சந்தித்த அன்று  ராஜனோடு பேசாமல் கடந்த குற்றவுணர்ச்சி என்னை உறுத்த அவசர அவசரமாக ராஜன் கடைசியாக தங்கியிருந்த ராயப்பேட்டை அலுவலகம் நோக்கி கண்ணீருடன் விரைந்தேன்இறுதிக்காலத்தில் நண்பர்கள அனைவருடனும் தன்னை துண்டித்துகொண்டு   யாருடனும்  எந்த தொடர்புமில்லாமல் அனாதையாக இறந்துள்ளார் . இறுதிக்காலத்தில் அவரோடிருந்து அவரை கவனித்துக்கொண்ட ஓரே ஆத்மா ராம்பால் மட்டுமே நான் சென்ற போது . . ராம்பால் அவசரத்திலிருந்தார் . அவர் மட்டுமே தனியாளாக மருத்துமனை சடங்குகளை முடித்துக்கொண்டு பணம் திரட்டி  ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து உடன் ராஜனின்   உடமைகளையும் ஏற்றிக்கொண்டு  ஊருக்கு கொண்டுசெல்ல  புறப்பட்ட நிலை.    அவரால் என்னுடன் பேசக்கூடமுடியவில்லை  சில நொடிகளில்   ஆம்புலன்ஸ் ராஜனின் சொந்த ஊரான திருநெல்வேலி களக்காட்டிற்கு  புறப்பட்டுவிட்டது .. ராம் பால் தனியாளாக அந்த உடலுடன் ராஜனின்  உடமைகளையும் எடுத்துக்கொண்டு  உடன் பயணித்தார்
  
இது கூடப்பெ ரிய விடயமில்லை ஆனால் இதற்குபின் உண்டான அந்த கொடுமையான அனுபவம் அதை அவர் எதிர்கொண்ட விதம்தான்  ராம்பாலின் மீதான என் மதிப்பீட்டை  அதிகரிக்கச்செய்த விடயங்கள். அவருடைய வார்த்தையிலேயே இதை சொல்வதானால்  எதிரிக்குகூட இப்படிப்பட்ட அனுபவம் நேரக்கூடாது என்பதுதான் 

.அந்த கொடுமையான அனுபவம் என்னவென்றால் . ராஜன் உடலை எடுத்துச்சென்ற ஆம்புலன்ஸ் மழை நேரத்தில் மரத்தில் மோதி பெரும்விபத்துக்குள்ளாகிவிட்டது வாகனத்திலிருந்து உடலை  வெளியே எடுத்து வைத்துக்கொண்டு  இன்னொரு  வண்டிக்கு ஏற்பாடு  பண்ணி  அது வரும் வரை தனியாக சடலத்தோடு  இருட்டில் மழையில்  காத்திருந்து …… இதை.. எழுதும்போது படிப்பவர்கள்  அசூயை ஆகிவிடக்கூடாது என  எண்ணி நாசூக்காக எழுத மனம் விழைகிறதென்றால் அதை நேரிடையாக அனுபவிப்பது . எத்தனை துயரமானது. அதை தாங்கவும் தொடர்ந்து தனியாளாய் உடலை அவரது வீட்டாரிடம் சென்று ஓப்படைக்கவும் மிக உறுதியானதும் பொறுமையதுமான மனநிலைமட்டுமல்லாமல் மனதளவில் மிகப்பெரிய மனிதநேயமும் கடப்பாட்டுணர்வும் இருந்தால் மட்டுமே இக்காரியத்தை செய்திருக்கமுடியும்..

 இந்த உலகில் நட்பு  எனும் அடைமொழிக்குள் எத்தனையோ பேரை சந்தித்து க்கொண்டேயிருக்கிறோம் ஓருவராவது இந்த மனநிலைகொண்டவராக  இருப்பாரா அல்லது நாம்தான் இத்தகைய ஆளாய் இருப்போமா என்பதும் ஆச்சர்யமே. என்னால் இறந்த வீட்டில் ஒரு நிமிடத்திற்கு மேல் இருக்க முடியாது. தப்பித்து ஓடவே மனம் விழையும். ஆனால் சடலத்தோடு ஒரு பகல் ஒரு இரவு முழுக்க தனியாளாய் வாழ்வதும் இக்கட்டான தருணத்தை எதிர்கொள்வதும் அத்துணை சாதாரண காரியமல்ல் .

. அப்படி ஆச்சர்யபடத்தக்க தனித்தன்மையும் மனித பண்பும் கொண்ட ராம்பாலுக்கே இப்படி ஓரு மரணம் வாய்க்கிறது என்றால் இந்த உலகின் அசுசு எதன் அடிப்படையில்தான் சுழல்கிறது என்ற கேள்விதான் அவரது இறப்பு செய்தியை கேள்வியுற்ற தினத்திலிருந்து  என்னை கொல்கிறது.

பிறகு ராம்பால் ஊருக்கு வந்தபின் கையோடு  ராஜன் அரவிந்தனது பிரசுரமான கதைகளையும் பத்திரமாக வீட்டில் கேட்டு கையோடு கொண்டுவந்தார். மவுன் ரோடு ஆன்ந்த் தியேட்டர் உமாபதி அரங்கில்  ராம் பால் மற்றும் நண்பர்களுடன் இணைந்து . ராஜன் அரவிந்தனுக்கான நினைவஞ்சலி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தேன்.  2002  மார்ச் என்ற ஞாபகம் ஜெயமோகன், எஸ் ராமகிருஷ்ணன் ஆகியோரை அழைத்திருந்தேன். 

ஜெயமோகனால் அப்போது வர இயலவில்லை.  எஸ் ராமகிருஷ்ணன்  சொன்னபடி வந்து சிறப்புரை ஆற்றினார்.  இலக்கியவாதிகள், திரைத்துறையினர் என  பலரும் பங்களிப்பு செய்த அவ்விழாவில்  சில நண்பர்கள் சலசலப்பை உண்டாக்கியபோதும் அது பலரிடமும் ராஜன் அரவிந்தன் எனும்  சிறுகதை எழுத்தாளனை அறிமுகப்படுத்த  பதிய வைக்க உறுதுணையாக இருந்தது. .கூட்டத்திற்கு வந்த அழகியசிங்கர் நிகழ்வுகுறித்து விருட்சம் இதழில் எழுதினார்.

தொடர்ந்து நண்பர்கள் பொன் சுதா, காந்திநாதன், மற்றும், சரசு ராம் ஆகியோர் நினைவுறுத்தியதன் பேரில்  ராஜன் அரவிந்தன்  சிறுகதைகளை நூலாக கொண்டுவரலாம் என நானும் ராம் பாலும் திட்டமிட்டோம். அப்போது மருதா பாலகுரு என் சிறுகதைகளை பதிப்பிக்கும் பணியில் இருந்தார். நான் என்னுடைய கதைகளுக்கு முன் ராஜன் அரவிந்தனுடைய சிறுகதைகளை தொகுக்க வேண்டும் என அவரிடம் வேண்டுகோள் வைத்தேன், மறுப்பு சொல்லாமல் உடனடியாக அதை செய்தார். .  ராஜன் அரவிந்தன் பற்றீய தன் அனுபவங்களை ஒரு கட்டுரையாக எழுதி தரச்சொல்லி எஆம் பாலிடம் கேட்டு வாங்கி அதையும்  தொகுப்பில் சேர்த்தேன்.. . ராம்பால் அஜயன் பாலா என இருவர் பெயரும் தொகுப்பாளர்கள என போட்டு நூலை வெளிக்கொண்டு வந்தோம் . 2002 அக்டோபர் 19 அன்றூ டான் பாஸ்கோ பள்ளியில்  நிகழ்ந்த சிலம்பு 2002 குறும்பட விழாவில்
அந்நூலை வெளியிட்டோம்
இப்படியாக தான் குருவாகவும் நண்பனாகவும் பழகிய ராஜன் அரவிந்தன் மேல்  அவர் காட்டிய  அனபும் மரியாதையுமே  ராம் பால் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதையை  தோற்று வித்தது.. இதன் காரணமாகவே அவரது முதல் திருமணத்திற்கு அவரது சொந்த ஊரான் அம்மன் புரத்திற்கு நேரிடையாக சென்று கலந்துகொண்டேன். என்ன காரணத்தாலோ அந்த மண வாழ்க்கை நீடிக்கவில்லை. பிற்பாடு  இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பதை அறிந்து மிகவும் மன மகிழ்ந்தேன். கலாபாககாதலன் ஏழாம் அறிவு போன்ற படங்களில் பணி புரிந்து விட்டு இயக்குனராகும் கனவோடு காத்திருந்த ராம்பால் வழக்கம்போல பேட்மிண்டன் ஆட் வெளியில்சென்றவர் மாரைட்பால் உயிர்நீத்த நிலையில் சடலமாக வீட்டுக்கு கொண்டுவரப்பட்டார்.

இன்று மனைவி மற்றும் இரண்டு சிறு குழந்தைகளை தவிக்கவிட்டு மறைந்துவிட்டார்..ராம் பால் சிறந்த மனிதன் சிறந்த நண்பன் என்ற வரைகளை மீறி சிறந்த கணவனாகவும் சிறந்த தந்தையகாவும் இருந்துள்ளார் .. முகநூலில் திருமணநாளுக்கும்  அவர் பிறந்தநாளுக்கும் மகளிர்தினத்துக்கும் தன் மனைவியை அன்பால் பலர்முன்னிலையில் இப்படி ஓரு காதலா என பலரும் வியப்புறும் வகையில் எழுதி வந்தவன் இப்படி திடீரென மறைந்தால் அந்த மனைவி அடையும் துன்பநிலை எத்தகையது என்பதை அனைவருமே அறிவோம் அதுவும் எட்டு வயதிலும் முன்றுவயதிலுமாக இரண்டு குழந்தைகளுடன் உறவினர் யாருமற்ற சென்னை வாழ்க்கையை தளிபெண்ணாக அவர் எதிர்கொள்ளப்போவது புயலில் சிக்கிய படகினைப்போல பெரும் போராட்டமான காலமே. .

 இந்நிலையில் அவரது குழந்தைகளின் எதிர்கால நலனுக்காக தண்பர்கள் கூட்டாக இணைந்து சிறு தொகை திரட்ட முயற்சித்து வருகிறோம் முடிந்தால் உங்களது பங்களிப்பும் அதில் ஓரு கைப்பிடி இருக்கட்டும்

அவரது வங்கி எண்

Name : M . RAMPAL
Bank : IOB
SB A/ C NO : 149201000014043
BRANCH : KK NAGAR
IFSC CODE : IOBA0001492

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...