May 28, 2009

சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ....... சிறுகதை .........

அஜயன்பாலா

இரண்டு நாட்களுக்கு முன்னால் சிறிய முதலாளி ஒருவர் என் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் முயல்பிடிக்க வந்தார். அவரது தொப்பியில் ஒரு குருவி இருந்தது. அவர் அதைப்பார்க்கவில்லை. மாறாக கையில் தொரட்டுகோலை பிடித்துக் கொண்டு புதரில் குத்தியபடி முயலை வெயியே வரும்படி சத்தமிட்டார். நான் குருவியை என்னிடம் வருமாறு கையசைத்துக் கூப்பிட்டதும் தொப்பியிலிருந்து குருவி என்னிடம் பறந்து வந்தது. முள்ளங்கி தோட்டங்கள் சற்றியிருக்க அருகே என் ஓட்டு வீடு இருந்தது. தூரத்தில் பூமிக்கு அப்பால் பச்சையாய் பந்துபோல ஒன்று வெகுநேரமாய் நின்று கொண்டிருந்தது.தொரட்டிக்கோலுடன் திரும்பிய சின்ன முதலாளியிடம் அது என்ன எனக் கேட்டேன். தெரியவில்லை என்றார். அவருக்கு முயல் கிடைக்கவில்லை என நிறைய்யவே கோபம்.சின்ன முதலாளி உங்களுக்காக வேண்டுமானால் அந்த முயலை நான் பிடித்து தருகிறேன் என்றேன். முதலாளிக்கு நான் சொல்வது காதில் விழவில்லை. என்னிடமிருந்தக் குருவியும் முதலாளியின் தொப்பிக்கு மீண்டும் பறந்து சென்றது. எனக்கு அது மிகவும் வருத்தத்தை தந்தது. வீட்டிக்குள் ஓடிப்போய் ஒரு பழைய தொப்பியை எடுத்து வந்து நானும் அணிந்து கொண்டேன். குருவியைப் பார்த்து இங்கு வருமாறு கையசைத்தேன். முயல் கிடைக்காத கோபத்துடன் முதலாளி தொரட்டிக்கோலை பூமியில் வேகமாய் குத்தியபடி வீட்டுக்கு புறப்பட்டார்.இன்னொரு நாள் சின்ன முதலாளி என் தோட்டத்து வீட்டுக்கு வந்தார்.உங்களுக்கு முயல் வேண்டுமா, நான் உதவி செய்யட்டுமா என்றேன். அவர் அதைப்பற்றி கேட்காதவராக என்னிடம் கண் சிமிட்டிக் கொண்டே எனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றார். இருவரும் அன்று மாலை முழுக்க கடிதம் எழுதினோம். அந்த கடிதத்தில் முட்டைமுட்டையாகப் போட்டுக்கொடுத்தேன். சின்ன முதலாளியும் துள்ளி குதித்தபடி ஜோர் ஜோர் என்றார். கடிதத்தை மடித்து ஜிப்பாவில் வைத்துக் கொண்டார். போகும்போது அவரிடம் பூமிக்கப்பால் பச்சையாக ஒன்று பெரிதாக அதோ பந்துபோல தெரிகிறதே அது என்ன என்று கேட்டேன்.ஆமாம் மிகவும் பெரிதாக இருக்கிறது என்றார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே இருட்டிவிட்டது. பந்து இப்போது மிகவும் பிரகாசமாக தெரிந்தது. சின்ன முதலாளி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அது நிலவாக இருக்கும் என்றார்.என்னால் நம்ப முடியவில்லை.அடுத்த நாள் நான் முள்ளங்கி செடிகளின் தோட்டத்தை தாண்டி ஓடிச்சென்று அந்த பெரிய பந்தின் அருகில் நின்றேன். அதன் மேல் சாய்ந்து கொண்டேன். மெத்தென்றிருந்தது. விளையாட்டின் போது தவறுதலாக வந்து விழுந்த பந்து போல தோன்றியது.பந்தை மெதுவாக உருட்டினேன். அது நகர்ந்தது. மெதுவாக அப்படியே முள்ளங்கி வயல்களினூடே உருட்டினேன். முள்ளங்கி செட்டிகள் ‘அய்யோ என்னைக் கொல்கிறாயே’ என கூச்சலிட்டன.சின்ன முதாளியிடம் சொல்லிவிடாதே என கெஞ்சினேன்.மறுநாள் என் தோட்டத்து வீட்டின்மேல் பந்து இருந்தது. வீட்டுக்குள் எல்லோரும் கூடிவிட்டனர். எல்லோரும் அதை நிலா என்றனர். சின்ன முதலாளிக்கு தெரிந்தால் நீ அவ்வளவுதான் என பயமுறுத்தினர். அன்று மாலையே சின்ன முதலாளி காலால் காலி பீர் பாட்டிலை உருட்டியபடி என் வீட்டு முன் வந்து நின்றார். வருடன் ஒரு உயரமான சார் ஒருத்தரும் இருந்தார். நான் பெரிய மனிதர்கள் செய்வதுபோல் ஜேபியில் கைவைத்துக்கொண்டே வாசலில் அவர்களை வழிமறித்தேன். சின்ன முதலாளியின் முகம் உர்ர்...ரென்றிருந்தது. வீட்டை ரெண்டு முறை சற்றி சுற்றி வந்தனர். நன்றாக தேடுங்கள் ‘என்னிடம் எதுவும் இல்லை’ என கை விரித்தேன்.வீட்டுக்குள் பந்தை ஒளித்து வைத்ததுதான் பிரச்னை. முயல் எப்படியோ மோப்பம் பிடித்து வீட்டிற்குள் வந்துவிட்டது. அது ஒரு பணியாரம் என நினைத்து இரண்டு இடங்களில் கடித்துவிட்டது. ருசியாக இருக்கிறதே எனக் கூச்சலிட்டது. மறுநாள் காலையிலேயே அதன் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போய் சின்ன முதலாளியிடம் தோட்டத்தில் விட்டுவிட்டு ஓடிவந்தேன்.சின்ன முதலாளி அநத் பந்தை மரியாதையாக என்னிடம் தந்துவிடு என வெளியே வந்து கூச்சல் போட்டார். நான் காதில் கேட்காதவனாக ஓடிவந்து விட்டேன்.ஞாபகமாக பந்தை எடுத்து பேக்கில் வைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனேன். வழியில் முள்ளங்கி தோட்டம் முழுக்க கடல் வந்து போயிருந்தது. ஒரு முள்ளங்கி ‘எல்லாம் உன்னால்தான்’ என சபித்தது.ஒரு சிறுமி நடுங்கிக் கொண்டிருந்தாள். உடல் முழுக்க நனைந்திருந்தது. அவள் மிகவும் வருத்தமாயிருந்தாள். நீ ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் எனக் கேட்டேன். என் அம்மாவை காணோம் என கைகளை விரித்துக் காட்டினாள்.எனக்கு என்னவோ போலிருந்தது. பைக்குள்ளிருந்த பந்தை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.ஐ........ அவள் ஆச்சர்யமாகவும் சந்தோஷத்துடனும் அதை வாங்கிக் கொண்டாள்.நான் திரும்பிப் பார்க்காமல் வேகமாய் ஸ்கூலுக்குப் போனேன். மணி அடிக்கிறது.
 நன்றி:தக்கை காலாண்டிதழ்
ஆகஸ்ட் 2008இதழில் பிரசுரமானது

May 20, 2009

உலக சினிமா வரலாறு..: இரண்டாம் உலகபோரில் சினிமா


மறுமலர்ச்சி யுகம்.........12


நம் இருப்பை, மனிதனின் நாகரீகத்தை பண்பாட்டு வளர்ச்சியை கேலி செய்யும் விதமாக போரின் அவலங்களை நாள் தோறும் ஊடகங்களின் வாயிலாக காண்கிறோம்.ஒரு மனிதன் தன் கைவாளால் ஒரு நேரத்தில் ஒருவனை கொன்ற காலம் போய் அதே ஒருவனால் இன்று எத்த்னை பேரை கொன்று குவிக்க முடியும் என்ற சவாலாக மனித குலத்தின் நாகரீக வளர்ச்சி மாறிவருவது பெரும் துயரமான ,வெட்ககேடான விஷய்ம்

கொத்து குண்டுகள், ரசாயண ஆயுதங்கள் ,உயிரியல் பயங்கராயுதங்கள் என மனித முகம் நாளுக்குநாள் விகாராமாகிக்கொண்டே போகிறது. இதுவரை மனித குலம் கண்ட பேரழிவுகளில் இரண்டம் உலக போரே இன்றுவரை முதலிடம் வகிக்கிறது.

காலங்களினூடே இரண்டாம் உலகபோர் எனும் பெரும் நரக வாகனம் கடந்துசென்றதன் பலனாக அதன் ரத்தம் தோய்ந்த வழிதடத்தில் 48 மில்லியன் மனித உயிர்கள் பலியாகின.
கிட்டதட்ட 18 மில்லியன் மக்கள் தம் சொந்த பந்தங்களை இழந்து நாடற்றவர்களாகவும்.வீடற்றவர்களாகவும் மாறினர்.கிட்டதட்ட எல்லா ஐரோப்பிய நகரங்களிலும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கு உள்ளானது.குடியிருப்புகள் சிதிலமாயின.வனங்கள் பற்வைகள் மிருகங்கள்,ஆகியவற்றின் இயல்பு வாழ்க்கை தொலைந்து போயின.

சோவியத் யூனியனின் மனித புழக்கத்துக்கு ஆட்படாத மொத்த நிலப்பரப்பில் கிட்டதட்ட 40 சதவீதம் இறந்தவர்களின் முகாம்களாக மாறியது. போலந்து நாட்டின் 25 சதவீத மக்கள் வதை முகாம்களில் அடைக்கப்பட்டனர்.

இரண்டாம் உலகபோரின் சீரழிவுகளில் பெரும்பான்மை ஹிடலரின் நாஜிபடைகளால் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இன்று உலகசினிமாவின் சரித்திரங்களை புரட்டி பார்க்கிறபோது மனைத நேயத்தை வலியுறுத்தும் பல படங்கள் இக்காலக்ட்டத்தை சித்த்ரிப்பதாகவே இருக்கின்றன,
தி கிரேட் டிக்டேட்டர்,தி ப்ரிட்ஜ் ஆன் தி ரிவர் க்வாய்,லைப் இஸ் பியூட்டி ஃபுல்,பிளாட்டுன்,ஷிண்ட்லர்ஸ் லிஸ்ட்,மற்றும் பியனிஸ்ட், போன்ற படங்கள் அவ்ற்றுள் சில.
உலகைன் தலைசிறந்த நூறுபடங்கள் என பட்டியலிட்டால் அவ்ற்றுள் குறைந்தது இருபது படங்கள் இந்த இரண்டாம் உலகபோரின் அவலத்தை சித்த்ரிப்பதாகவே அமையும்.

அப்படிப்பட்ட சூழலில் சினிமாவின் நிலை எப்படி இருந்திருக்கும் என்பதற்கு வார்த்தைகள் தேவையில்லை ஆனாலும் போருக்கு பின் இத்தாலிய சினிமாவின் எழுச்சியை கட்டியம் கூறுவதாக போர்நடக்கும்துவக்ககாலங்களிலேயே அங்கொன்றும் இங்கொன்றுமாக சில மாறுதல்கள் தோன்ற துவங்கின.

இந்த மாரற்றதுக்கு இத்தாலியின் சர்வாதிகாரியான் முசோலினியும் ஒரு விதத்தில் காரணம் ஆவார்.
முன்னால் சோஷலிஸ்ட்டான முசோலினி சினிமாவை மிகவும் காலதாமதமாகத்தான் புரிந்து கொண்டார்.

சினிமாவை குறித்து லெனின் சொன்ன ” மிகச்சிறந்த ஆயுதம்
‘ எனும் சொற்றொடர் தான் அவருக்கு சினிமாவின் மீதான புரிதலை வளர்த்துக்கொள்ள மிகவும் தூண்டுதலாக இருந்தது.

1924ல் முசோலினி இத்தலியை குறித்த செய்தி மற்றும் ஆவணப்படங்களை எடுப்பதற்காக லுசி எனும் சினிமாவுக்கான் அரசு பள்ளி ஒன்றை நிறுவினார்.

1935ல் இத்தாலியின் அனைத்து செயல்பாடுகளையும் தன் சர்வாதிகார குடை எனும் ஒற்றை அதிகாரத்துக்குள் கொண்டு வந்த முசோலினி சினிமாவையும் அது போல் அரசு கட்டுபாட்டிற்கு கொண்டுவந்தார்.

600.000 சதுர மீட்டர் பரப்பளவில் ஜெர்மனியின் யு .எப். ஏ வுக்கு நிகரான ஸ்டுடியோ ஒன்றை நிறுவிய முசோலினி அத்ற்கு சினி சிட்டா ஸ்டுடியோஸ் என பெயரும் சூட்டினார்.
உடன் திரைப்ப்டம் குறித்த பள்ளியையும் புண்ரமைத்தார்.

1937ல் ரோமாபுரி நகரம் உருவானதாக கருதப்படும் ரோமின் புனிதநாளான ஏப்ரல் 21ம் நாள் இந்த பிரம்மாண்ட ஸ்டுடியோவை திறந்தார்.

அடுத்த ஒருவருடத்தில் இந்த ஸ்டுடியோ மொத்தம் 81 திரைப்படங்களை த்யாரித்து வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்ய படுத்தியது.

வழக்கமாக இத்தாலியில் உருவாகும் படங்களின் எண்ணிக்கைய்யை விட இது இரண்டு மடங்கு கூடுதலாகும்.

இக்காலத்தில் அந்த பள்ளியில் சேர்ந்த சில மாணவர்கள் தங்களது அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தியபடி வளர்ந்தனர்,
இளம் இயக்குனரன லூகி சியாரனி lughi chiaranni யால், சினிமா குறித்த அவரது பார்வைகளால் வசீகரம் கொண்ட அந்த இளைஞர்கள் மிகவும் உற்சாகமும் புத்தெழுச்சியும் புதுமை விரும்பிகளாகவும் இருந்தனர்.

ரோபர்ட்டோ ரோஸலினி, மைக்கேல் ஆஞ்சலோ ஆண்டனியோனி போன்ற அந்த மாணவர்களால் தான் பின்னாளில் இத்தாலி உலகசினிமாவில் மிகபெரிய மாறுதலை செய்ய போகிறது என்பதை அந்த மாணவர்களும் ,ஆசிரியரும் முசோலினியே கூட அறிந்திருக்க வில்லை.

இவர்கள் சினிமா குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொள்ளவும்,அறிவை பெருக்கவும் ஒரு இதழ் ஒன்றை துவக்கினர் .அதன் பெயர் ப்ளாக் அண்ட் ஒயிட்.

இக்காலத்தில் இந்த பத்திரிக்கைக்கு போட்டியாக இன்னொரு இதழ் வந்தது. சினிமா எனும் த்லைப்பில் வெளியான அந்த இதழ் ஐஸன்ஸ்டன், புடோவ்கின்,பேலா பெலஸ் ஆகியோரின் சினிமா குறித்த கட்டுரைகளை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கியது.மேலும் இத்தாலியிலேயே இன்னொரு புதிய இளைஞன் ஒருவன் சில அற்புதமான கட்டுரைகளை எழுதி வந்தான் அவனது பெயர் லூசியோனோ விஸ்கோண்டி,பின்னாளில் இத்தாலிய சினிமாவுக்கு சில ஒப்பற்ற கலைபடைப்புகளை வழங்கிய இயக்குனராக பெயரெடுத்தவர்.

இவர்கள் காலத்திலேயே இன்னொரு மார்க்சிய சிந்தனைய்யை அடிப்படையாக கொண்ட எழுத்தாளர் ஒருவர் திரைக்கதை எழுதுவதில் புலமை பெர்றிருந்தார். சிசரே சவாட்டினி எனும் இந்த திரைக்கதையாசிரியர் தான் இத்தாலியில் தொடர்ந்து வந்த நியோரியலிஸம் எனும் அலைய்யின் மிக முக்கியமான கர்த்தாக்க்களிலொருவராக இருந்தவர்.இத்தாலிய சினிமாவிற்கு மட்டும்மல்லாமல் உலக சினிமாவுக்கே நன் கொடையாக கருதப்படும் பை சைக்கிள் தீவ்ஸ் போன்ற திரைப்படகளின் திரைக்கதை ஆசிரியராக தனது பங்களிப்பை செய்தவர்.
(தொடரும்
இணைப்பு புகைப்ப்டம் ;நிக்காலோ கிட்மன்,திரைப்படம் ஆஸ்திரேலியா
இக்கட்டுரைத்தொடர் புத்த்கம் பேசுது மாத இதழில் உலகசினிமா மறுமலர்ச்சியுகம் எனும் பெயரில்வெளியாகி வந்துகொண்டிருக்கிறது

May 4, 2009

தவிர்க்க முடியாத கவிதை -2

அல்லது இது கடவுளுக்கும் ம்னிதனுக்குமான
ஒப்பந்தங்கள் காலாவதியாகிற நேரம்
ஆகச்சிறந்த மனிதனின் எல்லா
கனவுகளும் நீர்த்து போகிற நாட்களில்
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
ஒரு சிறுதவளையின் காதலொலி
கூழாங்கல்லின் சிறு அசைவு
செலவுக்கு காசு கேட்டு
தாமதமாக வந்த
இறந்து போன நண்பனின்
தாய் எழுதிய கடிதம்
சிவப்பாக மாறிவரும் கம்ப்யூட்டர் திரை
மன்ம் வெதும்பும் வெப்ப செய்திகளில்
கடந்துவரும் காதலியின்
ஆதுரம் மீதுரும் விழிகள்
இப்படியாக சதாஇடம்பெயரும்
நாடோடி மன்ம் இன்று தலைப்பில்
பிணங்கள் இல்லை ஆசுவாசத்துடன் நிமிர்கிற போது
ஹாரன் இரைச்சல்
பாத்து போடா சாவுகிராக்கி
நான் ஓடிக்கொண்டிருக்கிறேன்
ஒரு *சேக்ரிபைஸ் நாயகனை போல
தீப்பந்தத்துடன் *பெர்க்மனுக்கு
எதிரான திசையில்......
........

*சேக்ரிபைஸ்,,ஸ்வீடன் இயக்குனர் இங்கமர்பெர்க்மனின் திரைப்படம்

தவிர்க்க முடியாத கவிதை:1


ஒரு மரம் என்ன செய்ய முடியும்
நம்புங்கள் மரத்தை போலவே
நின்றுகொண்டிருக்கிறேன்
கடந்து செல்லும் சில பறவைகளை பார்த்தபடி
உடன் வந்தமர்கின்றன
விருப்பமின்றி தலைமேல்
இன்னும் சில பறவைகள்
யாரையும் அழைத்ததில்லை
பறவைகளால் அதிகம் காயப்பட்டவன்
அநேகரில் அநேகன்
அவற்றின் கீச்சொலிகள் நற் தருணங்களில்
கிளைகளை உற்சாகத்தில் தானாக
அசைக்க செய்யும்.
ஒரு மரம் நடனமாடுவதை அப்போது பார்க்க்லாம
நீர் பெருகும் கண¢ப்பொழுதில்
கிளைகளில் எச்சமிட்டபடி
வேறுவேறு மரங்களுக்கு
செல்லும் அவ்ற்றை பார்த்துக்கொண்டே இருக்கிறேன்
உயர்ந்த ஆணின் நறுவிசான புன்னகையுடன்
மேற்கிலிருந்து வந்துகொண்டே இருக்கின்றன
இன்றும் சில பறவைகள்
மேகங்கள் அவ்ற்றை வழிமறித்து
என் பக்கமாக திசை திருப்புவதை
பார்த்துக்கொண்டிருக்கிறேன் வேடிக்கையாக

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...