September 18, 2010

பைட் கிளப் :

நதி வழிச்சாலை: 3


படிச்சு முடிச்சுட்டு சினிமா கனவோட சென்னைக்கு வந்த புதுசுல இரண்டு விஷயம் என்னை ரொம்பவே பயமுறுத்துச்சி. ஒண்ணு இங்கிலீஷ்

அப்ப நான் வேலை செஞ்ச ஒரு டூவீலர் கம்பெனிக்காக ஒவ்வொரு ஆபீசா ஏறி மேனேஜரை கரக்ட் பண்ணி மொத்தமா பத்து பதினைஞ்சு வண்டியை அவங்க தலையில கட்டணும் .என்னோட வேலை இதுதான் . கொஞ்சம் சிரமமான வேலை ஏற்கனவே நம்ம இங்கிலீஷ் அரைகுறை . பெரிசா அப்பியரண்சும் இல்லை. ஆனாலும் தெரிஞ்வர் ரெக்கமண்டேஷ்ன் காரணமா வேலையில சேத்துக்கிட்டாங்க .மொதல்ல இந்த கார்ப்பரேட் ஆபிசுக்குள்ள போறதுன்னாலே கைகால் உதறும். ஜெய்சங்கர் படத்துல வர்ற பாஸ் ஏரியா மாதிரி கும்மிருட்டு.. குண்டு குண்டு பல்பு.அதை மீறி அங்க உக்காந்துருக்க ரிசப்ஷனிஸ்ட் .அவ பேசற இங்கில்லீஷ் .

நாம ஏதாவது துணிச்சலோட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சா
உடனே பர்டன்னு ஒருவார்த்தை வரும் .. ஆண் பெண் யார்கிட்ட இங்கிலீஷ்ல பேச ஆரம்பிச்சாலும் .. உடனே ..பர்டன் .. . அது என்னவோ தெரியலை .இந்த வார்த்தைய கேட்டாலெ எனக்கு மூளை ஸ்டாப் ஆயிடும் அப்புறம் ஒரு வார்த்தையும் வாயிலர்ந்து வராது . எனக்கு ரொம்ப நாளைக்கு இந்த பர்டனுக்கு என்ன அர்த்தம்னே தெரியலை. யார்கிட்டயாவது அர்த்தம் கேக்க்லாம்னு பாத்தாலும் சின்னதயக்கம் . ம்ம் இது கூட தெரியலையா நீயெல்லாம் மெட்றாசுக்கு வந்து குப்பையை கொட்டி ன்னு கேவலப்படுத்திடு வாங்களோன்னு ஒரு சின்ன பயம். சமீபத்துல கூட ஒரு படத்துல இந்த வார்த்தைக்கு அர்த்தம் தெரியாம ஒரு கதாநாயகன் அவஸ்தை படறதை பார்த்தப்ப எனக்கு என்னோட அந்த காலத்து நெலமைதான் ஞாபகத்துக்கு வந்தது. நல்ல வேளையா ரெண்டேமாசத்துல அந்த வேலையை விட்டு பத்திரிக்கைக்கு ஓடினது தனிக்கதை.


இரண்டாவதா என்னை பயமுறுத்துன விஷயம் .. எழுத்தாளர்கள் அதுக்குமுன்னாடி வரைக்கும் எனக்கு எழுதுறவங்க மென்மையானவங்க.. புழு பூச்சிக்கு கூட தீங்கு நினைக்கமாட்டாங்க கடவுளுக்கு நிகரானவங்க.. நம்ம கிட்ட ஆட்சியை குடுத்தா எழுத்தாள்ர்கள் அனைவருக்கும் ஆயுசுக்கும் கஷ்டப்படாம இருக்க வீடுவசதி எல்லம் செஞ்சிகுடுத்து அவங்கள தொடர்ந்து எழுதவைக்கணும்ன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன். அப்ப கோபால புரத்துல காதி கிராமாத்யோக பவன்ல முன்றில் ஏற்பாட்டுல எண்பதுகளில் கலை இலக்கியம்னு ஒரு கருத்தரங்கு நடந்துகிட்டிருந்தது அதுக்குமுன்னாடி வரைக்கும் நான் ஒரு எழுத்தாளரையும் நேர்ல பாத்ததில்லை. அப்ப அதி தீவிர வாசகனா இருந்த நான் எழுத்தாள்ர்களை பாக்கறதை ஒரு தெய்வ காட்சியா நெனச்சிக்கிட்டிருந்தேன். அந்த கூட்டத்துக்கு போனா எல்லாரையும் பாக்கலாம்ன்னு சொல்லி நண்பன் ஒருத்தன் கூட்டிட்டு போனான். . ஆனா அங்க எல்லாமே தலைகீழ் . எந்த எழுத்தாளர் கிட்ட பேச போனாலும் அவனை விடக்கூடாது அவனை வெட்டணும் இவனை குத்தணும்னு ஒரே ஆளாளுக்கு கும்பல் கும்பலா நின்னு பேசிக்கிட்டிருந்தாங்க

இரண்டாவது நாள் மேடையில ஒரு வயசானவர் நாவல் பத்தி பேசிக்கிட்டிருக்கும்போதே கீழேருந்து குண்டா ஒருத்தர் எழுந்து ”நீ வாட வெளிய ஒண்ணை உதைக்கிறேண்டான் ‘’னு சவால் விட்றார்.. மேடையில பேசிக்கிட்டிருந்த வயசானவர் ஞானின்னும் கீழே பேசனவர் சாரு நிவேதிதான்னும் அப்புறமா தெரிஞ்சிக்கிட்டேன்.

இவங்களா இப்படி எனக்கு செம அதிர்ச்சி. இவ்வளவு கேவலமா சாதரண மனுஷங்க மாதிரி சண்டையை போட்டுக்கிறாங்கன்னு அன்னைக்கு நான் யோசிச்சேன். அதுக்கப்புறம் காலம் என்னை புரட்டி புரட்டி எடுத்துச்சி.கோணங்கி எஸ்.ராமகிருஷ்ணன் எல்லாரும் என் அறைக்கே வர ஆரம்பிச்சாங்க . நானும் குட்டயில விழுந்தேன்.

அன்னைக்கு நடந்த சண்டைய இப்ப யோசிக்கும் போது அந்த சண்டை எனக்கு இப்ப வேற ஒண்ணா தெரியுது. அது இரண்டு எழுத்தாளர்கள் பிரச்னை யில்லை இரண்டு தத்துவங்களோட ப்ரச்னைன்னு புரிஞ்சுக்க முடிஞ்சுது

நவீனத்துவத்தை அடிச்சுட்டு பின் நவீனத்துவம் மேலெழுந்த காலம் அது
சாரு மட்டும் இல்லாம அன்னைக்கு அங்க கூடியிருந்த நாகார்ஜுனன், ரமேஷ் -பிரேம் மாலதி மைத்ரி.. (அக்கா அப்பல்லாம் எழுத ஆரம்பிக்கலை ..ஆனாலும் செம பைட் குடுத்தாங்க) ராஜன் குறை, பாண்டிச்சேரி .ரவிக்குமார் டி ,கண்ணன் இவங்களுக்ககெல்லாம் தலைவரா இருந்த தமிழவன் இவங்க எல்லாருமே யாரையாவது அடிக்கணும் ஒதைக்கணூம்ங்கிற வேகத்தோடதான் திரிஞ்சாங்க

இந்தமாதிரி சண்டைகள்தான் சமூகத்துக்கும் இலக்கியத்துக்கும் வலுசேர்க்குது . எங்க கருத்துசண்டை அதிகமா இருக்கோ அங்க காலத்துக்கும் சமூகத்துக்கும் சண்டை நடந்துகிட்டிருக்குன்னு அர்த்தம் .

இந்த மாதிரி எழுத்தாளர்கள் சண்டை உலகம் முழுக்க பிரசித்தம்.

பிரான்ஸில் குருவும் சிஷ்யணுமா இருந்த ஆல்பர்காம்யு ..சார்த்தர் சண்டை உலக பிரசித்தம் ..அது மனித நேயத்துக்கும் , எதேச்சதிகார அரசியலுக்கு எதிரான கலகத்துக்கும் நடந்த யுத்தம்

இன்னைக்கும் அந்த சண்டைகள் குறித்துவிவாதம் தொடர்ந்துகிட்டுதான் இருக்கு .

அவங்களாவது பரவாயில்லை ..ஆனா அவங்களை விட பெருசுங்களா உலகமே அண்ணாந்து பாக்குற ஒரே காலத்தில் வாழ்ந்த ரஷ்யாவின் உலகபுகழ்பெற்ற மேதைகள் டால்ஸ்டாய் தஸ்தாயேவெஸ்கி துர்கனேவுக்கிடையிலேயே நடந்த சண்டைகள் ரொம்ப ஆச்சரயபடவைக்குது

டால்ஸ்டாயும் துர்கனேவும் கிட்டதட்ட பதினேழு வருஷம் ரெண்டு பேரும் காத்திரமா அடிச்சுகிட்டாங்க

இத்தனைக்கும் நம்ம ஊர் காந்திக்கே அஹிம்சைய போதிச்சவர் டால்ஸ்டாய் அப்படிப்பட்ட டால்ஸ்டாயே சக எழுத்தாள்ர் இவான் துர்கனேவை .. ஒருமுறை உனக்கு தில் இருந்தா வாடா ஒண்டிக்கு ஒண்டி மோதிபாப்போம்னு பகிரங்கமா சவால் விட்டார் .

இந்த ஒண்டிக்கு ஒண்டி சண்டைக்கு அவங்க சொல்ற பேர் டூயல் DUEL

ஒத்தைக்கு ஒத்தியா நின்னு வாள் சண்டை போடற இந்த DUEL ரஷ்யாவில ஒரு கலாச்சாரம் . வீரனுக்கு அழகு நம்ம ஊர்ல பாறாங்கல்லை தூக்குறா மாதிரி அங்க இந்த DUEL. ஒரே பொண்ணுக்கு ரெண்டுபேர் ஆசைப்பட்டா ஆளுக்கு ஒருபக்கம் கத்தியை உருவிக்கிட்டு நிப்பாங்க ..சண்டை ஆரம்பிச்சிட்டா யாரவது ஒருத்தர் குத்துபட்டு சாவறது வரைக்கும் கடைசி வரைக்கும் நிறுத்தக்கூடாது .. இது தான் இந்த DUEL.லோட விதி

உலக புகழ் பெற்ற ரஷ்ய கவிஞர் புஷ்கின் ஒருகாதலுக்காக இது மாதிரி நடந்த சண்டையிலதான் சின்ன வயசுலயே இறந்தாரு

அப்படிப்பட்ட ஒண்டிஒண்டி சண்டைக்கு சக எழுத்தாளனை புத்துயிர்ப்பு மாதிரி காலத்தால் அழியாத நாவலை எழுதுன டால்ஸ்டாயே கூப்பிட்டிருக்கார்னா பாத்துக்குங்க எழுத்தாளனோட கொபத்தை.அதுக்கப்புறம் டால்ஸ்டாய் இதுக்காக துர்கனேவ் கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டார்ங்கிறது தனிக்கதை.

அதேபோல தஸ்தாயேவெஸ்கிக்கும் துர்கனேவுக்கும் கூட ரொம்ப ப்ரச்னை. தன்னோட The Devils நாவல்ல கர்மசோனிவ்ங்கீற ஒரு மோசமான எழுத்தாளன் பாத்திரத்துல அச்சு அசலா துர்கனேவையே அவர் சித்தரிச்சிருந்தார். கடைசியில் 1888ல் புஷ்கின் சமாதியில நடந்த ஒரு கூட்டத்துல உன்னோட படைப்புகள் உன்னதமானவை எனக்கூறி தஸ்தாவெஸ்கி கண்ணீரோட போய் துர்கனெவை கட்டியணைச்சிகிட்டது தனிக்கதை

September 14, 2010

நாயகன் பெரியார் குறித்த எனது நேர்காணல்


கலைஞர் தொலைக்காட்சியில் நாளைகாலை 8 மணிக்கு
சந்தித்த வேளை நிகழ்சியில் பெரியார் குறித்த எனது நேர்காணல் ஒளிபரப்பாக உள்ளது.

September 10, 2010

சினிமா என்பது கணத்திற்கு இருபத்தி நான்கு சட்டகங்களாக சரியும் உண்மைகள்


உலக சினிமா வரலாறு 23
பிரான்சின் புதிய அலை பகுதி ; இரண்டு


தனது சினிமா குறித்த புதிய கோட்பாடுகளை உலகிற்கு அறிவிக்கும்விதமாக 1951ல் “கையேது சினிமா” Cahiers du Cinema எனும் இதழை துவக்கிய அதன் ஆசிரியர் ஆந்த்ரே பஸின் ... இளைய எழுத்தாளர்களை ஆரம்ப இதழ்களில் உள்ளே அனுமதிக்க தயங்கினார். அவர்களிடம் காணப்பட்ட அபரிதமான துடிப்பும் வேகமும் தான் இதற்கு காரணம் . அவர்களது விமர்சனங்கள் காரசாரமாக இருந்தன .. ஆனாலும் எரிக் ரோமர்,கோடார்ட், ரிவெட் , க்ளாத் சாப்ரோல் மற்றும் த்ருபோ போன்ற இளம்படைப்பாளிகள் இதழூக்கான மற்ற பணிகளில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டனர். .. திரைப்பட இயக்குனர்களை பேட்டி காண்பது .. திரைப்பட விழாக்கள் பற்றி குறிப்பெழுதுவது போன்ற சிறு அள்வில் அவர்களது எழுத்துக்கள் பிரசுரமாகின. ஆனாலும் அதற்கு நாளுக்குநாள் வரவேற்பு கூடிக்கொண்டே இருந்தது. ஆந்த்ரே பஸின் ஒரு தந்தையை போல அவர்களை வழி நடத்தினார். குறிப்பாக த்ரூபோ ஆந்த்ரே பஸினின் செல்லபிள்ளையாகவே வளர்ந்தார். ஒருமுறை த்ரூபோ இளம் குற்ற வாளிகளுக்கான சிறையில் காவலர்களால் பிடிபட ஆந்த்ரேபஸின் தான் அவரை அங்கிருந்து மீட்டு வந்து தன்னோடு தங்க வைத்துக்கொண்டார்.
முதன்முதலாக் 1953ல் த்ரூபோ எழுதிய "A Certain Tendency of the French Cinema எனும் கடுமையான விமர்சனம் தாங்கிய கட்டுரையை ஆந்த்ரே பஸின் துணிந்து பிரசுரித்தார் . அக்கட்டுரை எதிர்பாராத விதமாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது . ஒரு பக்கம் பிரெஞ்சு சினிமாவின் அக்காலத்திய இயக்குனர்கள் கொதித்தெழ இன்னொருபக்கம் வாசகர்களிடமிருந்து பலத்த வரவேற்பு . இக்கட்டுரைக்கு கிடைத்தவரவேற்பை தொடர்ந்து பஸின் கோடார்ட், சாப்ரோல் ,எரிக் ரோமர் என அனைவரையும் எழுதவைத்தார்.. இதழை இளைஞர்களின் எண்ணங்கள் முழுவதுமாக ஆகரமித்தன. சினிமா பற்றிய புதியகருத்துருவாக்கங்கள் உதித்தன. வெறுமனே நாவலில் இருப்பதை அச்சு பிறழாமல் ஸ்டூடியோவில் படம்பிடிக்கும் முறைமையை இவர்கள் கடுமையாக சாடினர்.விதிகளை உடையுங்கள் இவைதான் அவர்களின் கோஷம் சினிமா இயக்குனரின் ஊடகம் அங்கு தயாரிப்பாளனுக்கோ கதாசிரியனுக்கோ நடிகனுக்கோ முக்கியத்துவமில்லை. இயக்குனர் சர்வ சுதந்திரமாக தான் நினைத்ததை காமிராமூலமாக எழுதுகிற போதுதான் சினிமா எனும் கலை உயிர்பெறுகிறது என்பது போன்ற தங்களது கலைகோட்பாடுகளால் பிரெஞ்சு சினிமாவை அதிரவைத்த்னர்.

உலகசினிமாகளை தலைகிழாக புரட்டி தாங்கள் இயக்குனராக அங்கீகரிப்பவரது பட்டியலை வெளியிட்டனர். அமெரிக்காவின் கிரிபித், D.W. Griffith, விகட்ர் ஸ்ட்ரோஜம் ,Victor Sjostrom,பஸ்டர் கீட்டன் , Buster Keaton, சார்லி சாப்ளின்,Charlie Chaplin, எரிக் வான் ஸ்ட்ரோஹிம் Erich von Stroheim போன்றவர்களையும் பிற்காலத்தைய இயக்குனர்களில் ஆல்பிரட் ஹிட்ச்காக் Alfred Hitchcock , ஜான் போர்ட் john ford ஹாவர்ட் ஹாக்ஸ் Howard Hawks ஆர்சன் வெல்ஸ் Orson Welles ஜெர்மனியில் எர்னஸ்ட் லூபிட்ச் , Ernst Lubitsch, ப்ரிட்ஸ் லாங் Fritz Lang முர்னோ . Murnau இத்தாலியின் ரோபர்ட்டோ ரோஸலினி மற்றும் விட்டோரியா டிசிகா ஆகியோர் கொண்ட பட்டியலைமட்டுமே தாங்கள் அங்கீகரிக்கும் முழுமையான இயக்குனர்களாக அறிவித்தனர் . மற்ற்வர்கள் கதை சொல்லிகள் .அவர்கள் ஒருகதைக்குள் மக்களின் ஞாபகங்களை மூழ்கடித்தனர் . ஆனால் இவர்கள் மட்டும சினிமாவின் கலையை கதைகளையும் ரசிகணையும் கடந்து அழைத்து சென்றவர்கள் என அறிக்கை விட்ட்னர் .

எத்த்னை நாள்தான் விமர்சனம் எழுதுவது நமக்கான சினிமாவை நாம் தான் தீர்மானிக்க வேண்டும் என முடிவு செய்த இந்த இளைஞர்கள் அடுத்த கட்டமாக களத்தில் இறங்கினர் .அக்காலத்தில் இயக்குனராவதற்கான வழி முதலில் பிரபல இயக்குனர்களிடம் உதவியாளர்களாக சேருவது பின் குறும்படம் எடுத்து அதன் மூலம் பெரிய தயாரிப்பாளர்களை பிடிப்பது. இதுதான் . ஏற்கனவே இவர்கள் மேல் அக்கால இயக்குனர்கள் கடுங் கோபத்தில் இருந்த காரணங்களால் அவர்கள் உதவி இயக்குனராக சேருவது அத்தனை எளிதான காரியமாக இல்லை . ஆளுக்கு வெவ்வேறான துறைகளின்மூலமாகவும் உதவி இயகுனர்களாக தாங்கள் அங்கீகரித்த இயக்குனர்களிடமும் முதலில் சினிமா தொழிலுக்குள் நுழைந்தனர். அத்ன்படி களாவுத் சாப்ரொல் 20 தி செஞ்சுரி பாக்ஸில் நிர்வாக பிரிவிலும் .கோடார்ட் ஒரு திரைப்படத்தின் மக்கள் தொடர்பு பிரிவிலும் நுழைய த்ரூபோ ரோபர்டோ ரோஸலினியிடம் ரிவெட் ரெனுவாரிடமும் உதவி இயக்குனர்களாக துறைக்குள் நுழைந்தனர் . சிலகாலம் பணிபுரிந்த அனுபவத்தின் மூலம் சொந்தமாக தங்களது கைபணத்தை போட்டு படம் எடுக்க துவங்கினர் . அக்காலத்தில் அரசாங்கம குறும்படங்களுக்காக பொருளுதவி செய்தது ஆனால் அத்தகைய படங்களில் இயக்குனரின் வேலை ஸ்டார்ட் கட் சொல்வதாக மட்டுமே இருந்து வந்தது இதனால் தாங்களே சொந்த கம்பெனி துவக்கி படம் எடுத்த்னர். ஒருவருடைய படங்களில் மற்ற்வர்கள் உதவி இயக்குனராக சம்பளம் இல்லாமல் வேலை செய்தனர். அதன்படி முதலில் எரிக் ரோமர் ,மற்றும் ரிவட் ஆகியோர் படமெடுக்க கோதார்த், சாப்ரோல் ஆகியோர் திரைக்கதை எழுதினர். கோதார்த் ஸ்விட்சர்லாந்தில் இருந்த அணைக்கட்டு ஒன்றை ஆவணப்படாமாக முதலில் எடுக்க துவங்கினார். ஒரு கட்டத்தில் காசில்லாமல் படப்பிடிப்பு பாதியில் நின்று போனது. அத்ற்கு தெவையான மீத பணத்துக்காக அதே அணைக்கூட்டிலேயே கூலியாளாக வேலை செய்து அதன் மூலம் கிடைத்த வருமானத்தை கொண்டு படத்தை முடித்தார் கோதார்த்.. இடைக்காலத்தில் த்ரூபோவுக்கு திருமணம் ஆகியிருந்தது . அவரது மனைவியின் தந்தை சற்று வசதிமிக்கவராக இருந்த காரணத்தால் சொந்தமாக கம்பெனி துவக்கசெய்து அவரது பணத்தின் மூலம த்ரூபோ குறும்படமெடுக்க துவங்கினார். முதல் திரைப்படம் Les Mistons . தொடர்ந்து இரண்டாவதாக அப்போது பிரான்சில் பெய்த அடைமழையை வைத்து மற்றுமொரு குறும்படம் எடுக்க துவங்கினார். ஒருகட்டத்தில் த்ரூபோவுக்கு அப்படத்தை எடுப்பது சிரமமாக இருக்க கோதார்த்திடம் காமிராவை ஒப்படைத்தார். அப்படத்தை தொடர்ந்து இயக்கிய கோதார்த் த்ரூபோவின் திரைக்கதையை பின் தொடராமல் தன்னிச்சையான படமாக எடுத்து படத்தை முடித்தார் . நியூவேவ் எனப்படும் புதிய அலையின் முதல் படமாக வரலாற்று ஆய்வாளர்கள் இப்படத்தையே குறிப்பிடுகின்றனர்.

இச்சூழலில் அரசாங்கத்தின் சில புதிய சட்டங்களின் மூலமாக வும் புதிய தொழில் நுட்பங்களின் மூலமாக சினிமா எடுக்கும் செலவு குறைய்ய துவங்க ஆந்த்ரே பஸின் தலைமையிலான அந்த புதிய இளைஞர் படைக்கு கதவுகளை திறந்து வழிவிட்டார் போலானது. அதுவரை பிரான்சுக்குள் மட்டுமே வீசிய புதிய அலை கரைகள் உடைத்து உலக நாடுகளெங்கும் வீச துவங்கிய காலமும் வந்தது.

புதிய அலை >
அதுவரையிலான விதிகளை உடைத்தெழுந்த புதிய அலை சினிமாக்களின் காலத்தை துவக்கியவர் ரோஜர் வாதிம் .. 28 வயது இளைஞர் அவரது And God Created Woman) (1956) என்ற படம்தான் அந்த பெருமைக்குரிய திரைப்படம் . தொடர்ந்து மெல்வில்,லூயி மால் , சாப்ரோல் போன்றவர்களின் திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளிவந்து கொண்டிருந்தாலும் அவை பிரான்சில் மட்டுமே அதிர்வலைகளை உண்டாக்கிக்கொண்டிருந்தன. இது குறித்து 1957ல் பிரான்சில் வெளியான நாளிதழ் ஒன்றில் புதிய இளைஞர்கலின் சினிமா பற்றி ஒருகட்டுரை பிரசுரமானது. The New Wave: Portrait of Today’s Youth எனும் தலைப்பிட்ட கட்டுரையில்தான் முதன் முறையாக நியூ வேவ் புதிய அலை எனும் பதம் பயன்படுத்தப்பட்டது . ஆனாலும் கட்டுரை புதிய இளைஞர்கள் பெரிதாக எதுவும் சாத்தித்து விடவில்லை என்றே எழுதியிருந்தது . இந்நிலையில்தான் 1959ல் பிராங்கோய்ஸ் த்ரூபோவின் (The 400 Blows) (1959).எனும் படம் வெளியானது . பெற்றோர்களின் பொறுப்பின்மையால் சிறுவர்கள் படும் அவதியும் அத்னால திசை மாறும் அவர்களது வாழ்வையும் பற்ரிய இப்படம் காட்சி அமைப்பிலும் படத்தொகுப்பிலும் அதுவரையில்லாத புதிய் அணுகுமுறை கண்டு பார்வையாளர்கலும் விமர்சகர்களும் வியந்தனர். அவ்வருட கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தை பார்த்தவர்கள் அதிர்ந்த்னர் . சிலர் இதுதான் சினிமா என உற்சாகத்தில் இரைந்த்னர் . இது உண்மையை பேசுகிறது.இதுவரை பார்க்காத புது அனுபவத்தை உண்டாக்குகிறது என பரவசமடைந்தனர் . விழாவுக்கு வந்திருந்த் வெளிநாட்டு இயக்குனர்கள் மத்தியில் ஒரே இரவில் த்ரூபொ நாயகனாக மாறி உலக சினிமாவின் புதிய நட்சத்திரமாக பிரகாசித்தார் . இத்த்னைக்கும் அவர் எழுதிய ஒரு விமர்சனத்திற்காக முந்தைய வருட விழாவுக்கு அவருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது . அதே கேனஸ் திரைப்படவிழா இந்த வருடம் அவரை சிறந்த இயக்குனராக அறிவித்து பெருமை தேடிக்கொண்டது .. உலகசினிமா அரங்குகளில் எழுதியது பொல் படமெடுத்து நிரூபித்துகாட்டிய இளஞனை பற்றிய தகவல் பரபரப்பாக பேசப்பட்டது .

படத்தை எடுத்த தயாரிப்பாளர் இப்போது த்ரூபோவிடம் அடுத்த படத்திற்காக அணுக த்ரூபோ இம்முறை தான் இயக்குவதை விட த்ன் நண்பன் இயக்குவது வரலாற்றிற்கு பெருமை சேர்க்கும் செயல் என்றார்

த்ரூபோ சொன்ன இயக்குனர் ழான் லூக் கோதார்த்
அவர் எடுத்த படம் (Breathless) (1960). அந்தபடமும் அடுத்த வருட பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான வெள்ளிக்க்கரடி விருதை வாங்க நியூவேவ் என பிரெஞ்சு நியூவேவ் என விமர்சகர்கள் ஒருமனதாக அழைக்க துவக்கினர் .
கோதார்த்தின் படங்கள் அனைத்து சம்பிரதாயங்களையும் உடைத்தது. இத்த்னைக்கும் அது வழக்கமான ஹாலிவுட் பி மூவி சஸ்பென்ஸ் வகைப்ப்டம்தான் ..ஆனாலும் காமிரா உயிரோட்ட்மாக அசைந்தது . படத்தொகுப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. சினிமா என்பது வெறும் கதை சொல்வது மட்டுமல்ல அதை தாண்டியது என்பதை அனைவரும் ஏற்க துவங்கினர்
(தொடரும் )

September 5, 2010

எனது வணக்கத்துக்குரிய ஆசான்இன்று ஆசிரியர்தினம். சின்ன வயசில் பள்ளிக்கூட காலங்களில் இது மற்றுமொரு விடுமுறை நாள் அவ்வளவே ஆனால் இன்று இந்ததினத்தில் என்னை வழிநடத்திய என் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்த போது இந்த நாளின் விசேஷத்தை உணர முடிந்தது.
.


பில்லா இந்த பேரை கேட்டதுமே பலருக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஞாபகம் வரும். ஆனால் எனக்கோ என் பள்ளிக்கூட வாத்தியார் பால்ராஜ் மாஸ்டர்தான் நினைவுக்குவருவார். காரணம் நான் சந்தித்த முதல் இண்டலெக்சுவல் அவர்தான். திருக்கழுக்குன்றத்தில் புன்னமை தியாகராச .வன்னியர்சங்க நடுநிலைப்பள்ளி ..இதுதான் என் பால்யங்களை தொகுத்த இடம். வீட்டிலிருந்து பள்ளிக்கு இரண்டுகி.மீ நடக்க வேண்டும் அந்த நடை எங்களுக்கு போராடிக்காது காரணம் வழியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்கள்

எனது பள்ளிகாலங்களில் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிய திரைப்படம் பில்லா. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த அப்படத்தின் விளம்பரம் . தினத்தந்தியில் அப்போதெல்லாம் முழு பக்கத்துக்கு படத்தின் விளம்பரம் வரும். பள்ளி செல்லும் வழியில் ஒரூ முடிதிருத்தும் கடை. அக்கடையில் பள்ளிவிட்டு வரும் வழியில் தினமும் குறைந்தது அரை மணிநேரமாவது அந்த நைந்த பக்கங்களை புரட்டிக்கொண்டிருப்போம். கன்னித்தீவு மற்றும் கிரிக்கட் செய்திகளும் எங்கள் ஆர்வத்துக்கு உபரி காரணம் என்றாலும் பக்கம் பக்கமாக வரும் சினிமா விளம்பரங்கள்தான் எங்களது கனவுகளை தீர்மானித்தன. ஒரு முழு பக்க சினிமா விளம்பரத்தை பார்க்கிற போது உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி கரைபுரளும் இதற்கெல்லாம் காரணமே இல்லை. அதிலும் ரஜினி படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படித்தான் பில்லா திரைப்படம் எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. நானும் படம் எப்படா நம்ம ஊருக்கு வரும் எப்ப அதை பார்க்க போகிறோம் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்துகிடந்தேன். இச்சமயத்தில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் பால்ராஜ் அந்த படத்தை யாரும் பார்கக கூடாது என பள்ளியில் கட்டளை இட்டார். காரணம் அப்போது பில்லா ரங்கா என்ற இரு கொலைகாரார்கள் ஒரு சிறுவனை கடத்தி கொடூரமாக கொன்றிருந்தனர். இது அக்காலத்தில் பெரும் பரபரப்பான சேதியாக இருந்தது. வியாபராத்துக்காக சினிமா தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இந்த பெயரை பயன் படுத்துகிறார்கள் . அந்த குழந்தையின் தாய்தந்தை எவ்வளவு வேத்னைப்படுவார்கள். அதனால் இந்த படத்தை யாரும் பார்க்க கூடாது என வேண்டுக்ள் விடுத்தார் அன்றைய சிறுவயது மூளைக்கு அது எட்டவில்லை. ஆனால் அவர் சொன்னது மட்டும் ஞாபகத்தில் ஒட்டிக்கொண்டது. காரணம் அது பில்லா பற்றியதகவலாக இருந்ததாலோ என்னவோ...

இப்போது இரண்டாவதுமுறையாக பில்லா வந்தபோது அப் பெயருக்கு இருந்த மதிப்பும் மக்களின் அங்கீகாரமும் அப்பெயர்காரணமே தெரியாத தலைமுறையினாரிடம் காணப்பட்ட கொண்டாட்டத்தையும் பார்த்தவுடன் பால்ராஜ் சார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பெயர் ப்ரச்னையை இன்று வரை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.என்னை முதன் முதலாக நடிகனாக மேடையேற்றியதும் அந்த பாலராஜ் ஆசிரியர்தான். என்னை மட்டுமல்ல என்னை போல திறமையான மாண்வர்களை பார்த்தும் அவராகவே தீவிரமாய் த்ன் ஈடுபாட்டை காண்பித்து அவர்களுக்கான வழி சமைத்து தருவார் .அதேபோல பள்ளி விவகாரம்தாண்டி எங்கு கிரிக்கட் மேட்சுகள் நடந்தாலும் ஓரமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்து வேடிக்கை பார்ப்பார். யாராவது போங்கு ஆட்டம் ஆடினால் உடனே அம்பயராக அங்கேயே இருந்தபடி விரலால் தீர்ப்பை சொலவார். பால்ராஜ் மாஸ்டருக்குமேல் முறையீடுகள் இல்லை.

வகுப்பில் நான் வழக்கமாக மூன்றாம் ரேங்க். முதல் ரேங்கில் கண்ணன். ( அவன் தங்கை சங்கரி பேரழகி. அந்த வயதிலேயே அவளுக்கு நான் கலர் மிட்டாய் வாங்கி தருவது போல கனவுகள் எல்லாம் வந்ததுண்டு ) எனும் பிராமண பையன் இரண்டாம் ரேங்கில் குமரகுருபரன். கண்ணன் படிப்பில்தான் முதல் ரேங்கே தவிர குணத்தில் அவன் கடைசி ரேங்க். யாரும் அவனை தொட்டுவிடாமல் பார்த்துக்கொள்வான். கொஞ்சம் ஏழையான அழுக்கு உடை பசங்களை கண்டால் அருவருப்பான பூச்சியை கண்டதுபோல முகத்தை சுளிப்பான். இதனாலேயே எனக்கு அவனை பிடிக்காது . இருவருமே பேசிக்கொள்ளமாட்டோம். இதர வகுப்பு நண்பர்கள் உணவு இடைவேளைகளில் இருவரையும் பிடித்து தள்ளி பேச வைக்க கடும் முயற்சி செய்தனர் .ஆனாலும் அவனை எனக்கு கடைசி வரை பிடிக்கவில்லை ... அதேசமயம் பால்ராஜ் மாஸ்டர் கண்ணனிடம் மட்டும் சற்று கூடுதலாக அக்கறைகாட்டுவார். இத்தனைக்கும் அவர் கிறித்துவர்.ஆனாலும் கண்ணன் முதல்மார்க் வாங்குகிற காரணத்தால் அவனிடம் கூடுதல் அக்கறை. சட்டென எதையும் புரிந்துகொள்கிற அவனது அறிவுத்திறனுக்கு இது போன்ற போட்டிகள் சரியான வடிகால என நினைத்தார். பேச்சு போட்டி கட்டுரை போட்டி என்றால் அவனுக்குதான் எழுதிகொடுப்பார். அவனும் அதை பேசி முதல் பரிசு வாங்கிவருவான். ஒருநாள் ஒரு போட்டிக்கு மாஸ்டர் எழுதி கொடுத்தும் அவன் போட்டியில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருந்துவிட்டான் மறுநாள் அவன் பள்ளி வந்ததும் பால்ராஜ் மாஸ்டர் கோபத்தில் அவனை கடுமையாக திட்டிதீர்த்தார். இனி உனக்காக இந்த பால்ராஜ் எதற்கும் எழுதிதரமாட்டான் என கோபத்துடன் கூறினார்.

ஆனாலும் அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிகள் சார்பாக பேச்சு போட்டிக்கு அழைப்பு வந்த போது பால்ராஜ் மாஸ்டர் அவனையே அழைத்து போட்டிக்கு எழுதிக்கொடுத்து அனுப்பிவைத்தார். அவர் அன்று அந்த காரியத்தை செய்த போது எங்களுக்குள் கடும் புகைச்சல் இருந்தது. நான் கூட பால்ராஜ் மாஸ்ட்ரை வெறுத்தேன்.ஆனால் அவர் ஒரு ஆசிரியராக எந்த பாரபட்சமும் இலாமல். துவேஷம் இல்லாமல் நடந்து கொண்ட விதம் இன்றும் அவர் பிம்பம் என் மனதில் நிழலாட காரணமாக இருக்கிறது. அவர் குறித்து கட்டுரை எழுதவும் அதுவே காரணமாக இருக்கிறது.

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...