January 27, 2010

தி வே ஹோம் : உணர்வுகளின் சிம்பொனி

உலக சினிமா

(இந்த இதழ் அவள் விகடனில் பிரசுரமாகியுள்ள இக்கட்டுரை முதியோர் சிறப்பிதழுக்காக பிரத்யோகமாக எழுதப்பட்டது.)

தனிமை.வாழ்க்கை மனிதனுக்கு இரண்டு பரிசுகளை கொடையாக த்ருகிறது
அதனை போல இன்பம் நிறைந்த பாடும் இல்லை துன்பம் நிறைந்த பாடும் இல்லை.இளமையில் காதல்வசப்படும்போது உலகமே நம்மை உற்று கவனித்தலும் நமக்குள் நாம் தனிமையில்தான் வாழ்கிறோம். எவரும் நுழையமுடியாத் பொன் வண்ணம் பூசப்பட்ட வேலிகளுடானன
மலர்கள் நிறைந்ததொரு கனவுத்தோட்டம் அது. யாரும் இல்லாத அந்த தோட்டத்தில் பட்டாம்பூச்சிகள் நம்மை சுற்றி பறக்கும்.ஆனால் அதே சமயம் முதுமையில் அதே தனிமையில் நம்முள் இருப்பது என்ன ?

வெறும் பழைய ஞாபகங்களாக எஞ்சிநிற்கும் சாயம் போன நினைவுகளின் மிச்சம் தான். அதனையும் எத்தனை நாள் தான் புரட்டிக்கொண்டிருப்பது
ஒரு கட்டத்தில் அதுவும் இல்லாமலாகி உடல் மண்ணை விரும்ப துவங்கி தானாக குனிய துவங்குகிறபோதுதான் வாழ்க்கை என்பது வெறும் மகிழ்ச்சி மட்டுமல்ல அது உண்மையில் பெரும் சுமை என்பது புரியவரும்...

உண்மையில் சூழலில் இருப்பவர்களின் அன்பும் ஆதரவும் அப்போதுதான் முன்னெப்போதையும் விட அதிகமாக தேவைப்படும் .

ஆனால் அப்படிப்பட்ட தருணங்களில்தான் ஒரு குழந்தையோ இளைஞனோஅல்லது நடுத்தரவயது கோபக்காரனோ சிடுசிடுக்கும் மருமகளோ வயோதிக மனதை அதிகமாக புறக்கணித்து மிகுந்த மனவேத்னைக்கு ஆளாகுகின்றனர்

.
விரும்பிய உணவு விரும்பிய வாழிடம்,விரும்பிய தொலைக்கட்சி சேனல் எதுவும் அப்போது அவர்கள் தீர்மானத்திலில்லை.

இதெல்லாம் நகரத்து முதியவர்களுக்குத்தான் ஆனால் ஒரு கிராமத்தில் வாழும் முதியவர்களுக்கு இந்த ப்ரச்னை கொஞ்சம் குறைவுதான் . சரியான சமயத்தில் அனுபவம் தரும் படிப்பினையை ஊன்று கோலாக பயன்படுத்துகின்ற்னர்.

எனக்கு தெரிந்த எத்த்னையோ கிராமத்து முதியவர்கள் தள்ளாத வயதிலும் இயற்கை சூழலின் காரணமாகவோ என்னவோ சிறிதளவேணும் நகரத்து முதியவர்களின் ப்ரச்னைகளிலிருந்து தப்பித்து தன்னந்தனியாக மனௌறுதியுடன் வாழ்கின்றனர்

அப்படிப்பட்ட பெண்களில் ஒருவர்தான் ..தி வே ஹோம் படத்தின் நாயகி

பெரும்பாலான படங்களில் நாயகிக்கு வயது 15லிருந்து 25க்குள் இருக்கும்

ஆனால் இப்படத்தின் நாயகியான் கிம்- யூல்-பூனுக்கு வயது 77

நாயகன் சாங் வூவுக்கு வயசு என்ன தெரியுமா 8

சுருக்கமாக சொல்வதனால் வாழ்க்கையின் துவக்கத்தில் இருக்கும் இளம் தளிரான பேரனுக்கும் வாழ்க்கையின் இறுதிவாசலில் எந்நேரமும் விழ காத்திருக்கும் ஒரு பட்டுபோன மரம் போன்ற அவனது பாட்டிக்குமான உறவுதான் கதை

பேரனோ கோக் ,பிஸா, கெண்டகி சிக்கன், என வாழும் நகரத்து வார்ப்பு.

ஆனால் பாட்டியோ தலைகீழ் கூன்விழுந்த கிழவி. எங்கோ ஒரு மலைக்கிராமத்தில் ஒரு சிறு மண் குடிசையில் தன்னந்தனியாக வசித்து வருபவள்.வாய்பேச முடியாத ஊமை. காதுமட்டும் லெசாக கேட்கும் அவ்வளவுதான்

ப்டம் ஒரு நகரபேருந்தில் துவங்குக்கிறது நம் நாயகனான எட்டுவயது சிறுவன் சாங் வூ தன் அம்மாவுடன் பாட்டியின் கீராமம் நோக்கி புறப்பட்டு வருகிறான். சியோலில் தொழில் நடத்தி நஷ்டமாகிப்போன அவனது அம்மா உடனடியாக ஒரு வேலை தேட வேண்டிய நெருக்கடிகாரணமாக மகனை தன் அம்மாவுடன் கிராமத்தில் தங்க வைக்க அழைத்து வருகிறாள்

நகரத்து பேருந்தில் குறும்பும் துடுக்குத்தனமும் உற்சாகமுமாக இருக்கும் சாங் வூவின் முகம் அடுத்து ஒரு மலைகிராமத்து பேருந்தில் பயணிக்கும் போது அப்படியே மாறுகிறது. அவனுக்கு அந்த அழுக்கான பேருந்தும் இரைச்சலாக பேசும் கிராமத்து மனிதர்களும் பிடிக்கவில்லை. எரிச்சலடைகிறான் கையிலிருக்கும் வீடியோகேமின் முலமாக அதிகமாக சப்தம் எழுப்பி அவர்களது இரைச்சலுக்கு எதிர்வினை காட்டுகிறான்

அது ஒரு கொட்டாம்ப்பட்டி குக்கிராம் எந்தவசதியுமில்லை. துவக்கத்தில் அந்த கிராம வாழ்க்கைக்கு ஒத்து போக முடியாமல் சுணங்கும் சாங் வூ வேறு வழியே இல்லாத காரணத்தால் சகித்துக்கொள்கிறான்

மேலும் அந்த நரைத்த தலையுடன் கூடிய கூன் விழுந்த கிழவியுடன் அவனுக்கு பேசவேவிரும்பவில்லை.ஆனால் பாட்டிக்கோ பேரன் மீது அளவற்ற ப்ரியம். அவ்ள் அவனை குழிப்படுத்த என்னென்னவோ செய்தும் சாங்வூவுக்கு அந்த நாட்டுபுற கிழவியிடம் பேச பழக அவனுக்கு விருப்பமில்லை... நாள் முழ்க்க வீடியோகேம்ஸ் விளையாடுவதும் கோக் குடிப்பதுமாக பொழுதைகழிக்கிறான். இப்படியாக இருவரும் சிறுகுடிசைக்குள் வேருவேறு துருவங்களாக வாழும் போது ஒருநாள் இருவரையும் இணைக்க வந்தது ஒரு கரப்பான் பூச்சி . சாங்வூ கரப்பான் பூச்சியை பார்ததும் அலறுகிறான். எழுந்து பாட்டியிடம் அதனை அடித்து கொல்லுமாறு சுவற்றில் ஒடுங்கியபடி கத்துகிறான்.பார்வை சரியில்லாத நிலையிலும் பாட்டி கரப்பானை பிடிக்கிறாள் .அதனை கையோடு கொல்லும்படி நகரத்து சிறுவன் சாங்வூ கத்த கிராமத்து பாட்டியோ அத்னை கொல்லாமல் ஜன்னலை திறந்து வெளியே வீசுகிறாள்...

ஒருநாள் வீடியோகேம்சில் பேட்டரி தீர்ந்து போக தன் செவிட்டுபாட்டியிடம் தனக்கு பேட்டரி வாங்கிதா என கத்துகிறான் .ஆனால் பாட்டியோ தன்னிடம் போதிய பணம் இல்லை என்பதை உணர்த்தும் விதமாக சைகை செய்கிறாள். இத்னால் வெறுத்து போகும் சாங் வூ பாட்டி கழுவிகொண்டுவந்து வைக்கும் பீங்கான் பாத்திரத்தை காலால் எட்டி உதைத்து உடைக்கிறான் .அவள்து செருப்புகளை எடுத்து ஒளித்துவைக்கிறான்.பாட்டியை திட்டி சுவற்றில் கார்டூன்கள் வரைகிறான் . தூங்கிகொண்டிருக்கும் போது அவள் அணிந்து கொண்டிருக்கும் கொண்டை ஊசியை திருடி எடுத்துக்கொண்டு அத்னை விற்று பேட்டரி வாங்க கடையை தேடி விசாரித்து செல்கிறன்.ஆனால் கடைக்கார பாட்டிக்கு தெரிந்தவர் ஆதலால அவன் தலையில் ஒரு குட்டுவைத்து திருப்பி அனுப்புகிறார்.

ஒருநாள் புத்தகத்தை புரட்டிக்கொண்டிருக்கும் சாங்வூவுக்கு கெண்டகி சிக்கன் சாப்பிடும் ஆசை வருகிறது. பாட்டியிடம் தனக்கு கெண்டகி சிக்கன் வாங்கித்தா என கேட்கிறான். ஆனால் அவ்ளுக்கு அது என்னன்வென்று தெரியவில்லை

அவன் சொன்னதை புரிந்துகொண்டு பாட்டி த்லையில் கைவைத்து அசைத்து சேவலை போல பாவனை செய்து அதுவா எனக்கேட்க சாங் வூ உற்சாக மிகுதியால் ஆமாம் என கூவுகிறான் .

பாட்டியும் உடனே பை எடுத்துக்கொண்டு கூன் விழுந்த உடலுடன் மலைபாதயில் தடுமாறி வெளியே செல்கிறாள்

சிறுவன் சாங்வூவுக்கு பரம குஷி.. எப்படியும் பாட்டி கெண்டகி சிக்கன் வாங்கிவருவாளென

ஆனால் பாட்டியோ ஒரு உயிருள்ள கோழியை பேரனுக்காக மழையில் நனைந்தப்டி ஆசையுடன் வாங்கி அவன் தூங்கிக்கொண்டிருக்கும் நேரத்தில் சமைத்து அவனை எழுப்புகிறாள்

கெண்டகி சிக்கனை எதிர்பார்த்திருந்த சாங்வூவுக்கு இது பெரும் அதிர்ச்சி

பாட்டிய்யை திட்டி சாப்பிடமறுக்கிறான். பாடி நெஞ்சில்கைவைத்துமுன்றுமுறை சுற்ருகிறாள் .அப்படிசெய்தால் என்னை மன்னித்துவிடு என்பது அர்த்தம் .ஆனாலும் மனம் ஆறாத சாங்வூ பிறகு அப்படியேதூங்கிவிடுகிறான். பின் இரவு எழுந்து வேறுவழியில்லமல் ரகசியமாய் பாட்டிசமைத்த சிக்கனை சாப்பிடுகிறான். ஆனாலும் அவனுக்கு பாட்டி மீதான கோபம் தீரவில்லை.
.

இதனிடையே சாங்வூ அவ்ன் வயதில் கிரமத்து சிறுமியை சந்திகிறான் .முதல் சந்திப்பே முற்றும் கோணல் அவள் விளையாடிக்கொண்டிருந்த வீட்டை இவன் கால் வைத்து தெரியாமல் கலைத்துவிட்டதன் காரணமாக அவள் அவனோடு கோபிக்கிறாள். அவ்ளோடு பழகும் இன்னொரு கிராமத்து சிறுவனை வெறுக்கிறான்.அந்த சிறுவன் ஒருநாள் பள்ளத்தில் நடந்துவரும்போது மாடுஅவனை துரத்துவதாக பொய்ய்யாக கூச்சலிட அவன் ஓடி போய்தடுமாறி கீழே விழுந்து இவன் கைக்கொட்டி சிரிக்கிறான்.அந்த கிராமத்துசிறுவன் ஆற்றாமையுடன் எழுந்து நடந்துசெல்கிறான்.

மறு நாள் பாட்டி தன் தோட்டத்தில் விளைந்த தர்பூசணி பழங்களை எடுத்துக்கொண்டு சாங்வூடன் சந்தைக்கு பேருந்தில் செல்கிறாள்.பழம் விற்ற பணத்தில் சாங்வூவுக்கு நூடுல்ஸும் ஒரு ஜோடி ஷூக்களும் வாங்கிதருகிறாள்
பேருந்தில் ஏறும் போது அங்கு அந்த சிறுமியையும் அவன் தோழன் ஒருவனையும் சந்திக்கிறான். அவர்கள் முன் பாட்டி ஜன்னல்வழியாக கொடுக்கும் அழுக்கு மூட்டையை வாங்க மறுத்து விடுகிறான் .பேருந்தும் புறப்பட்டுவிடுகிறது வீட்டிற்குவந்தவன் வெகுநேரமாகியும் பாட்டிவராததால் பேருந்து நிலையத்தில் அமர்ந்தபடி அவளுக்காக காத்திருக்கிறன் .கடைசி பேருந்தும் வந்து போகிறது பாட்டி வரவில்லை மனம் கலங்குக்கிறான் ,
பேரனுக்கு எல்லா காசையும் செலவு செய்துவிட்டமையால் பேருந்துக்கு காசில்லாமல் பாட்டி நடந்தேவருகிறாள் .தொலைவில்பாட்டியை சந்தித்ததும் ஓடிசென்று முன்பு வாங்க மறுத்த மூட்டையை வாங்கிக்கொள்கிறான்.அவ்ன் முன்னே நடக்க பாட்டிஒமெதுவாக பின்னேவருகிறாள்

ஒருநாள் அந்த தோழியாகவே வந்து அவனை தன் வீட்டிற்கு விளையாட அழைக்க . சாங்வூவுக்கு தூக்கமே வரவில்லை. மறுநாளேவிளையாட்டு பொருட்களை எடுத்துவைத்தவன் கண்ணாடியில் தன் முகத்தை பார்க்கிறான்.
முடிவெட்டினால் நன்றாயிருக்கும் என பாட்டியிடம் சொல்ல பின் அவளே அவனுக்கு முடிவெட்டுகிறாள்.ஆனால் அவள் முடியை ஒட்ட கத்தரித்துவிட கண்ணாடியை பார்த்த சாங்வூவுக்கு அதிர்ச்சி. பாட்டியை கடுமையாக திட்டிவிடுகிறான் .பாட்டி வழ்க்கம் போல நெஞ்சில்கைவைத்து சுற்ற
கோபித்துக்கொண்டு பேசாமல் படுத்துவிடுகிறான்.பாட்டி அவனிடம் ஒரு பொதியை வண்ணகாகிதத்தில் சுற்றி பாக்கெட்டில்வைக்கிறாள்

மறுநாள் தலைமேல் ஒருதுண்டை கட்டி சமாளித்த்படி தோழியின் வீட்டுக்கு விளையாடசெல்கிறான். மகிழ்ச்சியுடன் அவன் வீடு திரும்பும் வழ்யில் எதிர்பாராவிதமாக மாடு ஒன்று சாங்வூவை துரத்த பயந்து ஓடிகீழேவிழுகிறன் முன்பு அவனால் கேலிசெய்யப்பட்ட கிராமத்து சிறுவனே இப்போது மாட்டைவிரட்டி சாங்வூவை காப்பாற்றுகிறான். இந்நிகழ்ச்சி சாங்வூவுக்கு தன் குற்ற வுணர்ச்சியை அதிகப்படுத்துகிறது. கீழே விழுந்த சாங்வூ எழுந்திருக்கும் போதுதான் பாக்கெட்டிலிருந்து பாட்டி கொடுத்த பொதி ஒன்று விழுகிறது.அதில் அவனது வீடியோகெம்ஸ் கருவியும் பட்டரிக்காக சில ரூபாய் நோட்டுக்களும் அவ்ள் முடிந்து வைத்திருப்பதை பார்க்கிறான். இத்தனை நல்ல பாட்டியை நம் வேத்னைபடுத்திவிட்டோமே என்ற குற்ற வுணர்ச்சி அவனுள் பொங்கி பெருகுகிறது. இதேநேரத்தில் பட்டி அவனை தேடிவர கண்ணீரவனை மீறி பொங்கிவருகிறது.ஆனால் பாட்டியோஅவன் அடிபட்ட காரணமாக அழுகிறான் என நினைத்து ஆறுதல்படுத்துகிறாள்

இப்போது பாட்டி அவனிடம் ஒருகடிதத்தை காண்பிக்கிறாள் அவனை அழைத்துசெல்ல அவன் அம்மா வரப்போவதாக அனுப்பிய கடிதம் .
மறுநாள் காலை அவன்புறப்படவேண்டும் .அன்று இரவு
பாட்டியிடம் சாங்வூ இனி உடல் நிலைசரியில்லாவிட்டால் த்னக்கு கடிதம் மூலமாக தெரிவிக்கும் படிகூறி அதற்காக ஐயாம் சிக், ஐ மிஸ் யூ எனும் இரண்டுவார்த்தைகளை எழுதக்கற்றுதருகிறான் .உனக்குத்தான் போன் பேசமுடியாதே அத்னால்தான் எழுதகற்கும்படி சொல்கிறேன் எனும் சாங்வூ அவள் சிரமப்படுவதை பார்த்து பாட்டி நீஎதையும் எழுதாவிட்டால் கூட பரவாயில்லை வெறும் ஒரு வெள்ளை தாளை எனக்கு அனுப்பிவைத்தால்கூட போதும் உனக்கு உடம்பு சரியில்லை என்பதை தெரிந்து ஓடோடி வந்துவிடுவேன் எனக்கூறிவிட்டு அந்த எழ்ழுவயது சிறுவன் 78வயதுபாட்டியியை பிரியப்போகும் வேத்னை தாளாமல் அழத்துவங்க உடன் பாட்டியின் உடலும் சத்தமில்லாமல் குலுங்குகிறது. அன்று இரவே பாட்டியை திட்டி சுவற்றில் வரைந்த கார்டூன்களை அவனே அழிக்கிறான்.

.மறுநாள் அவன் அம்மாவருகிறாள் பேருந்து நிறுதத்தில் சாங்வூ அமைதியாக
பையுடன் அவன் அம்மாவுடன் இருக்கிறான். உடன் கூன்வளைந்த பாட்டியும்
பேருந்து வருகிறது .அம்மா ஏறுகிறாள் தொடர்ந்து ஏறும்சாங்வூ பின் இறங்வந்து பாட்டிக்கு தனக்கு மிகவும் பிடித்த விளையாட்டு பொம்மைதாங்கிய
அட்டையை பரிசாகதருகிறான் பின் அவன் ஏறிக்கொள்ள பேருந்து புறப்படுகிறது. பெருந்தின் பின்பக்க கண்னாடிவழியாக பாட்டியை பார்க்கும் சாங்வூ அழுதுகொண்டே தன் நெஞ்சில்கைவைத்து சுற்றுகிறான்
பாட்டி திரும்பவும் அந்த அடர்ந்த காட்டுபகுதிக்குள் தனியாக கைத்தடியுடன் நடந்து செல்கிறாள்.

இத்திரைப்படம் உலகின் அனைத்து பாட்டிமார்களுக்கும் சமர்ப்பணம் எனும் டைட்டில்கார்டுடன் முடிகிறது

2002ல் வெளியான இந்த தென்கொரிய நாட்டு படத்தை இயக்கியவர் லீ ஜியாங் ஹ்யாங் . இவர் ஒரு பெண் இயக்குனர் என்பதுதான் இங்கு குறிப்பிடத்த்க்கது.

இயக்குனரின் புகைப்படத்திற்கு
Lee Jeong-hyang என பதிவிடவும் கூகுல் தேடலில்

January 20, 2010

தொடுவானம் : சிறுகதை ..... அஜயன் பாலா

கடலுக்கப்பால் தொலைவில் தெரிந்த தொடுவானத்தின் விளிம்பை விரல்களால்
தடவியபடி வெறுமனே வேடிக்கை பார்ப்பவளாக அவள் அந்த நிழற்குடையில் நின்றுகொண்டிருந்தாள். எதிரே நீலக்கடல் வெளியின் மேல் வீசிய காற்று,
சுற்றி கரையாக எழுப்பப்பட்ட கற்சுவர்களின்மீது
சிறு அலைகளை மோதச் செய்து தளும்பிக்கொண்டிருந்தது.

கடலின்மீது பிரதிபலித்த சூரிய வெள்ளிச்சம் கரையெங்கும் ஒரு பாதரசப் பிரகாசத்தை உருவாக்கி அனைவரது கண்களையும் கூசச்செய்தது. அவளோடு இன்னும் சிலரும் அங்கே நிழற்குடையில் கையில் பைல்களுடன் தத்தமது பயணத்திற்காக காத்திருந்தனர்.அவர்கள் யாரும் ஒருவரோடொருவர் பேச விருப்பமற்றவர்களாக மணிக்கட்டைத் திருப்பி அவ்வப்போது நேரம் சரிப்பார்ததவாறு நின்று கொண்டிருந்தனர். இவள் மெளனமாய் தன் அகக்கண்களால் எல்லோரையும் கண்காணித்தவாறே அவனுக்காகக் காத்திருந்தாள்.ஆனால் அவனது வருகை ஒரு நிச்சயமற்ற நிகழ்வு.இருப்பினும் அதைத்தன் உள்ளுணர்வால் முன்கூட்டி அறிந்தவள் போல அவள் தன் விரல் நகத்தால் இன்னொரு நகத்தை துழாவியபடி அந்த நிழற்குடையில் நின்றுகொண்டிருந்தாள். வானத்தின் பேரமைதி அவளை உற்றுக் கவனிப்பதாகவே அவளுக்குத் தோன்றிற்று.

இன்றைக்கென்னவோ அந்த நிழற்குடையில் காத்திருக்கும் அனைவரது முகமும் மிகுந்த பொலிவுடன் இருப்பதாகத் தோன்றியது. தினம் தினம் இந்த நிழற்குடையில் அவள் அவர்களைப் பார்ப்பதுண்டு. அவர்களைத் தவிர வேறு எவரும் அந்த நிறுவனத்தில் அந்த நேரத்தில் வருவதில்லை. இன்றைக்கென்னவோ அவர்கள் அனைவரும் ஒளிமிகுந்த ஆபரணங்களுடன் பள பளக்கும் வஸ்திரங்களுடனும் வெவ்வேறு திக்கில் பார்த்தவாறு மெலிதாய் சிரித்துக் கொண்டிருந்தார்கள் . யாரும் அவளுடன் இது வரையிலும் பேசியிருக்காவிட்டாலும் அவளுக்கென்னவோ அவர்களின் பால் ஈரம் கசிந்திருந்தது.அவளாக அவர்களுடன் பேச நினைத்தாலும் உடைந்துவிடுவோமோ என்கிற பயத்தின் காரணமாய் பேசாதிருக்கிறாள்.

நிழற்குடையின் காரணமாக கவிழ்ந்திருந்த நிழல் அவர்களின் மேல் சிகப்பும் மஞ்சளுமான நிறத்தைப்போர்த்தியிருந்தது.அவர்களனைவரும் காத்திருக்கும் வாகனம் இன்னும் வரவில்லை.எதிரே நீலக்கடல் சலனமற்று தொடுவானம் வரை வளர்ந்திருந்தது. அதன் நீல அமைதி மனதில் ஏற்படுத்திய குளுமையின் காரணமாக அவர்கள் அனைவரும் ஒரு நிமிடம் இமைகளை மூடித்திறந்துத் தங்களுக்குப் போதும் என்பதாக சமிக்ஞை செய்தனர்.கடலின் கரையாக நீலத்தைப் பிரித்த அந்த குட்டைச் சுவரில் நீர் ததும்பியபோது அவர்களது ஆடையில் சிதறியது.”க்ளுக்”கென் மெல்லிய சப்தமிட்டு குட்டைச் சுவரின் வழி தரையில் தளுப்பி வழிந்தது நீர் அவற்றினூடே சிறு சிறு வெள்ளைப் பூச்சிகள் ஈரம் சொட்ட தரையில் இறங்கி புற்களிடையே மறைந்து கொண்டிருந்தன.

அவள் அதனையே உற்றுப் பார்த்தாள் அவற்றின் ஒழுங்கு ஆச்சர்யமூட்டுவதாய் இருந்தது.பின் அவள் தன்னைச் சுற்றியிருக்கும் விநோத சூழலை ஒருமுறை நோட்டமிட்டாள்.அவளுக்குப் பின்னிருந்த விரிந்த புல்வெளி அவளறியாமல் மெளனமாய் வளர்ந்துகொண்டிருந்தது.விரிந்து கிடந்த வெள்ளை வானத்தின் அடியிலிருந்து வித்விதமான தோற்றங்களில் விலை உயர்ந்த ஆடைகளில் தொலைவில் திரிந்து கொண்டிருந்தத புராதன மனிதர்களிடையே அவள் அவனை பார்வையில் துழாவினாள்.கிட்டத்தட்ட அவனை வருமே அவனாக இருப்பதையே அவள் உணர்ந்தாள்.மெல்ல அன்னைவரும் அவளை நோக்கி திரும்பி அவளது பஞ்சுப் போன்ற வயிற்றைத் தடவிப்பார்க்க முயல வெட்கம் தாளாமல் தலைகவிழ்ந்தாள்.
சில சமயங்களில் இவளுக்கு நினைவு தப்பிவிடுகிறது.தான் யார் எதற்காக இங்கே வந்திருக்கிறோம்.இவையனைத்தும் ஒரு கனவா?அல்லது முற்றிலும் முழுமை பெறாத யாரோ ஒருவரின் கற்பனைப் பிரதேசமா?அல்லது எழுதப்படாத இசைக்குறிப்புகளுக்கான காட்சிப்படிமங்களின் மறுதோற்றங்களா?எதையும் அவளால் தீர்மானிக்க முடியவில்லை.அவளால் அங்கிருக்கும் எதையும் தன் விரல்களால் தீண்ட முடிகிறது எனும் ஆச்சர்யத்தின் காரணமாகவே அவள் அவ்வப்போது இதுபோலான கேள்விகளின் படிக்கட்டுகளில் ஏறிச்சென்றாள்.

அவன் கிட்டாததன் பொருட்டு மரணித்து போனவள்தானோ என்றும் சட்டென ஓர் எண்ணம் தோன்றும்.நினைவுகளில் வழிதப்பும் ஆடு துள்ளிக்குதித்து மீண்டும் வந்த வழியில் வயலட் பூக்கல் நிறைந்த தோட்டத்துக்கு திரும்பிச் செல்லும். வெகுதூரத்தில் மலை.அவளது வீடு.குழப்பம் நிறைந்த வீதிகளில் திரியும் கிராமத்து மக்கள். யாரோ தபதபவென ஓடிவரும் சப்தம் .பேசித்தீராத வீட்டின் ஞாபகங்கள்.சீராக விரிந்த சீட்டுக்கட்டில் இடம் மாற்றப்படும் ராணி. கிணற்றிலிருந்து வெளியேற்றப்படும் உடல் .. ஆட்களற்ற பந்தல் வீட்டுக்குள் கழுவி விடப்பட்ட நீரின் திட்டுகளில் பிரதிபலித்த தந்தையின் முகம்.குளித்து முடித்து தோளில் ஈரத்துடன் படியேறும் அண்ணன்.புகைப்படத்தில் அவள் கண்களில் பிரதிபலிக்கும் விளக்கின் அசையும் சுடர்.குதித்தபோது கிணற்றினடியில் பாதத்தில் குத்தியகல்

கடைசியாக அவன் தந்த முத்தம் .கிணற்றில் விலகிய அவன் விரல்கள்...

அவள் மீண்டும் நினைவிற்குள் வந்தபோது,அவளோடு நிழற்குடையில் பயணத்திற்காக காத்திருந்த அனைவரும் இடம் மாறி, நின்றிருந்தனர்.ஒருசிலர் வாகனம் கிடைத்து புறப்பட்டுச் சென்றுவிட்டிருந்தனர்.

ஒருவேளை அனைவருக்கும் வண்டி வந்திருக்கும்.அவன் கடைசிவரை வராது போனதால் துக்கித்துப் போனது அவள் நெஞ்சு.மெளனமாய் வளரும் புற்களிடையே தவழ்ந்து பனிக்காற்று அவள் கண்களைத் திறந்து கொண்டாள் என்பதை தெரிந்துகொண்டபின் அவளது கேசத்தைக் கலைத்து கழுத்தில் படர்ந்து ஈரமாய் ஸ்பரிசித்தது. யாருமற்ற தனிமையில் அவளது சோகங்கள் மேலும் அதிகப்படுத்த,பிரிந்த உதடுகளின் வழி மெலிதான பாடல் கிளம்பியது.வார்த்தைகளற்ற இசையில் அவளது உதட்டிலிருந்து சின்ன மேகங்கள் வெளிப்பட்டன.அலைகடலின் மேல் மிதந்தபடி வானத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தன.அவள் விழிகளின் ஓரத்திலிருந்து கசிந்த நீர்த்துளி காற்றில் சிதறி பட்டாம்பூச்சிகளாக வரிசையாகப் பறந்து சென்றன.
அவள் துயரம் அதிகமாக அதிகமாக அவ்ளுக்குபின்னால் மலைவரை விரிந்திருந்த புற்களும் மனஜ்சள் நிறத்தில் தகதகப்புடன் வேகமாய் வளரத்துவங்கின .

வெகுதூரத்தில் அவன் மூன்று நட்சத்திரங்களை இடுப்பில் கச்சையாக அணிந்துகொண்டு நடந்து வருவதைப் பார்த்தாள். சட்டென அந்தக் காட்சி அவளுக்குள் ஒரு மயக்கத்தின் காரணமாகத் தன் தந்தையைப் போலவும் இருந்தது. அது யார் என ஆச்சர்யத்துடன் அருகில் வரக் காத்திருந்தாள்.

வானத்தில் பச்சையாகப் புற்கள் ஆங்காங்கே முளைவிடத் துவங்கின.வெகு தொலைவில் அவன் அதோ கடலின்மேல் நடந்து வந்து கொண்டிருந்தான்.

புதிய பார்வை (ஆகஸ்ட் – 1 2006 )

January 15, 2010

“ நாயகன் ” சில பகிர்வுகள்

நேற்று பிலிம் சேம்பரில் சேம்பரில் சென்னை சங்கமம் நிகழ்ச்சியின் ஒருபகுதியான் தமிழ்சங்கமம் நிகழ்ச்சியில் எழுத்தில் எனக்கு மூத்தோனாகவிளங்கும் ஜெயகாந்தன் அவர்கள் குறித்த் கருத்தரங்கத்திற்கு சென்றிருந்தேன். நல்ல எழுத்து உடலை எப்படியெல்லம் எரித்து அனுபவமாக மாற்றுகிறது என்பது குறித்து பலரும் பேசிக்கொண்டிருந்தனர். கூட்டம் முடிந்ததும் வெளியே விகடன் பதிப்பகத்தில் பணிபுரியும் நண்பர் இலகுபரதி வந்து தோளைத்தொட்டு கைகுலுக்கினார். இந்த புத்தக சந்தையில் உங்கள் புத்தகங்கள் அமோகமாக விற்பனையாகின. நான் இருந்த சிலமணிநேரங்களுக்குள் பலரும் நாயகன் வரிசை புத்த்கங்களை மொத்தமாக கேட்டு வாங்கி எடுத்துசென்ற்னர் என்றார். இதனை சந்தையின்போதே ஸ்டாலில் இருந்த நண்பர்கள் என்னிடத்தில் சொல்லியிருந்தனர் என்றாலும் இப்போது எழுத்து குறித்து தீவிரமான மனசிந்தனையில் ஈடுபட்டிருந்த அந்த நேரத்தில் அவர் சொன்னது எனக்குள் ஒரு மன அவசத்தை உண்டுபண்ணியது. .

நாயகன் தொடராக வெளிவரும்போதே அதன் மிகப்பெரிய வெற்றியை செல்லுமிடங்களில்லெல்லாம் நான் உணர்ந்தவன். சென்ற வாரம் கூட ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னை வந்த அயலகதமிழர் மனோகரன் அவர்கள் என் முகவரியைத்தேடி என் வீட்டிற்கு வந்து நாயகன் தொடர் எழுதியமைக்காக என் அம்மாவிடம் கைகூப்பி தொழுதார். இக்கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும்போதே கூட சற்றுமுன் ஹைதராபாத்திலிருந்து கோவிந்தராஜ் எனும் வாசகர் பொங்கல் வாழ்த்துசொல்வதற்காக தன் மூன்று மகள்களையும் அழைத்து ஒருவர் பின் ஒருவராக எனக்கு வாழ்த்துகூற வைத்தார். ஒவ்வொருவாரமும் விகடன் வந்தவுடன் மூன்று மகள்களையும் உட்காரவைத்து நாயகன் கட்டுரைய்யை அவர் அப்படியே படித்துகாட்டுவது வழக்கமாம் . இதையெல்லம் நான் உங்களிடம் பகிர்வதற்குகாரணம் உண்மையில் இந்த பாரட்டுகளுக்கு நான் மட்டுமே தகுதியானவன்தானா ?
என்ற கேள்விதான்.

நாயகன் தொடர் எழுதுவதற்குமுன் என்னை பொறுத்தவரை வாழ்க்கையின் லட்சியமாக இரண்டுவிஷயங்கள் இருந்தன. அதில் ஒன்று தமிழில் சிறந்த இயக்குனராகிவிடுவது அதேசமயம் நல்ல தீவிரமான காலத்தால் அழிக்க முடியாத சிறுகதை மற்றும் நாவல்களை படைப்பது. இவை இரண்டுமட்டுமே என்னுள் ஆழமாக இருந்து என்னுடைய செயல்பாடுகளை தீர்மானித்து வந்தன. மட்டுமல்லாமல் என்னுள் ஒரு பெரும் படைப்பு தகிப்பை உண்டாக்கிக்கொண்டிருந்தது.

மற்றபடி வணிக பத்திரிக்கைகள் பக்கம் எந்த சந்தர்ப்பத்திலும் அழுத்தமான ஒரு வெற்றியை அதற்குமுன் நினைத்துகூட பார்தததுகிடையாது. அதுவும் சமூகம் அரசியல் போன்றவற்றில் அப்போது என்னுடைய ஈடுபாடு ஜீரோ எனக்கூட மதிப்பிடலாம். சமூகம் சார்ந்த என்னுடைய அக்கறை கூட குறும்பட விழாநடத்துவது என்ற அளவில் மட்டுமே இருந்துவந்தது. சுருக்கமாக சொல்வதானால் சமூகம்குறித்த அக்கறை குறைந்த ஒரு பிராணியாகவே இருந்துவந்தேன். சாதி மதம் அரசியல் உண்டே தவிர அதன்பொருட்டு சமூகத்தில் இயங்கவேண்டும் மக்களிடம் அதனை கொண்டுசெல்லவேண்டும் என்ற துளி ப்ரக்ஞை கூட என்னிடம் இல்லை. நாயகன் தொடரை எழுதுவத்ற்குமுன் பெரியார் அம்பேத்கர் சேகுவெரா மார்க்ஸ் போன்றவர்கள் குறித்த என்னுடைய அறிவுகூட மிக சாதரண நிலையில்தன் இருந்தது என்பதுதான் நிஜம்.

இடையில் மார்லன் பிராண்டோ எனும் நடிகரின் வாழ்க்கை குறித்த புத்தகம் கூட அப்போதிருந்த பண நெருக்கடியை தீர்ப்பதற்காகத்தான் எழுதியிருந்தேன்
ஆனால் அதில் பிராண்டோவின் சமூகம் குறித்த ஈடுபாடு அரசியல் விழிப்புணர்வு மற்றும் பொறுப்புணர்வு ஓரளவு என்னை பாதித்தன என்றாலும்
என் எழுத்து கற்பனைகளை பிரசவிப்பதில்மட்டுமே மேலும் அக்கறை செலுத்திவந்தது. இதனிடையேதான் நாயகன் எழுதும் வாய்ப்புவந்தது

நாயகன் எழுததுவங்கியபின் தான் என்னுள் மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஒவ்வொருநாயகனையும் எழுதுவதற்காக நான் மேற்கொண்ட பயணத்தின் போது ஒவ்வொருவருமே என்னை புரட்டி எடுத்த்னர். அப்போது நான் அடைந்த துக்கம் கேள்வி ஆய்வு பரவசம் ஆகியவை என்னை தாக்கிய அதேவேகத்தில் வாசகர்களுடன் பகிர்ந்துகொண்டதன் காரணமாகத்தான் அந்த தொடர் இத்த்னை வெற்றிபெற காரணமாக கருதுகிறேன்

குறிப்பாக பெரியாரின் உண்மையின்மீதான் காதல் அம்பேத்காருக்கு சமூக நீதியின் மீதிருந்த தன்னலமற்ற அர்ப்பணிப்பு .அதிகாரத்திற்கெதிராக த்ன்னையே புதைத்துக்கொண்ட சேவின்மாண்பு , ஒட்டு மொத்த மனைத குத்திற்குமாக யோசனையை ஆழாமாக்கி தன் சுகதுக்கங்களையெல்லாம் இழந்த மார்க்ஸின் பேரன்பு போன்றவை
இந்த சமூகம் உணர தவறியவையாக உணர்ந்தேன்

இந்த வேதனைதான் என்னை வெறிகொள்ள வைத்து ஒவ்வொருவாரமும் என்னை பேயாட்டம் கொண்டு எழுதவைத்தது.

நாயகன் தொடருக்குபிறகு என் புற உலக மாற்றத்தை விட அக உலகில் எனக்கேற்பட்ட மாற்றத்தை மிக முக்கியமானதாக கருதுகிறேன்

அதற்கு முன்பிருந்த அஜயன்பாலாவைவிட கூடுதல் பொறுப்புள்ள மனிதனாக என்னை மாற்றியிருக்கினற்ன.

வெறுமனே கற்பனையில் அரசனாகவும் எதார்த்த்தின்மீதும் சமூகத்தின் மீதும் கவலையற்றவனாகவும் இருந்த என்னை என்னுலகத்தை முழுவதுமாக மாற்றிய ஒரு நெம்புகோல உண்டென்றால் அது நாயகன் தொடர்தான். அத்ற்குகாரணமாக இருந்தவர் விகடன் பொறுப்பாசிரியர் திரு ரா. கண்ணன்..

அதற்குமுன் எளிமையாக எழுததெரிந்தும் அதுகுறித்து வாளாவிருந்த என்னை பல்வேறு விஷ்யங்களை ஒன்றாக தொகுத்தும் பகுத்துபார்க்கும் என்னுடைய ஆய்வறிவை உறங்கி கிடந்த நெருப்பாம் சமூகத்தின் மீதான் பற்றை ஊதிபெருக்கி என்னுள் என்னை நான் புயலென ஊடுருவ வழிவகை செய்தவர்.

இதற்குமுன் நான் எழுதியிருந்த பை சக்கிள்தீவ்ஸ் மற்றும் மார்லன் பிராண்டோ பற்றிய எனது புத்தகங்கள்தான் அவர் என்னை தெர்ந்தெடுக்க காரணமாக இருந்திருக்கிறது என்பதை பிற்பாடு அறிந்தேன். ஒரு தீவிர வாசிப்பாளர் சமூக அக்கறைமிகுந்தவர் பொறுப்பான இடத்தில் அமர்ந்திருப்பதன் காரணமாக சமுகம் எத்த்கைய பலனை அடைகிறது என்பதற்குஇது ஒரு முக்கிய உதாரணம். இத்னை மற்றவர்களுக்கு உணர்த்துவதும் என்னுடைய கடமையாக உணர்கிறேன்.

மேலும் இத்னை எழுத என்னிடம் பணிக்கும் போதே சேகுவேரா சார்லிசாப்ளின் கார்ல்மார்கஸ் நெல்சன் மண்டேலா பெரியார் என அந்த வரிசையை தீர்மானித்தது மட்டுமல்லாமல் அதற்கான நாயகன் எனும் தலைப்பை தீர்மானித்தவரும் அவர்தான்.

இதையெல்லம் நான் வெளிப்படுத்துவது அவசியமற்றது என்றாலும் பலரும் என்னை புகழ்ந்துதள்ளூகிற போது அத்ற்கு சிறிதளவேனும் பங்கிருக்கும் கண்ணனை என்னால் நினைக்காமல் இருக்க முடியவில்லை என்பதுதான் நிஜம்.

மேலும் பெரியார் மூலமாக நான் கற்றுக்கொண்ட உண்மையின் மீதான் பற்றை அவாவை வெளிப்படுத்த இதை பயன்படுத்திக்கொள்வதிலும் எனக்கு அள்ப்பரிய மகிழ்ச்சி .
அஜயன்பாலா
15 -01-2010
சென்னை

January 11, 2010

பழைய காதலியின் கணவன்: கவிதை

பழைய காதலியின் கணவன்: கவிதை

நேற்று பாண்டி பஜாரில் காத்திருந்தேன்
பழைய காதலியின் கணவனை பார்க்க
அவன் கறுப்பா சிவப்பா
எதுவும் தெரியாது

இந்தபக்கமாக இத்தனை மணிக்கு
அவன் பைக்கில் போவான்
அவ்வளவுதான் குறிப்பு

அவன் எந்த நிறத்தில் சட்டையணிந்திருப்பான்
கிராப்பா ஹெல்மட்டா
கண்ணாடி,கைக்கடிகாரம் உண்டா
ஸ்கூட்டியா பைக்கா
எதுவுமே தெரியாது

ஆனால் பழைய காதலியின்
கணவன் இந்தவழியாகத்தான் வருவான்
அப்படிவருபவனுக்கு
இப்படிநான் இன்னமும் நிற்பது தெரிந்தால்;
பழைய காதலியின் கணவன்
கோபிப்பானா?
வருத்தப்படுவானா?
அதுவும் தெரியாது

பழைய காதலியின் கணவனுடைய அம்மாவை
அல்லது சகோதரியை சகோதரனை
அப்பாவை தாத்தாவை பாட்டியை
நேரில்பார்ப்பது கூட அதிர்ஷ்டம்தான்

குறைந்தபட்சம் ஒரு நாவல்
அல்லது சிறுகதையின்
வரிகளூக்குள் நாயகனாக நடித்த
மகிழ்ச்சியாவது மிஞ்சும்
என்றாவது ஒரு நாள்
அதை அவளும் படிக்க நேர்ந்து
அப்போதேனும்
எனை யோசிக்க நேர்ந்தால்
அதைவிட வேறென்ன வேணும்

நண்பர்களே நீங்களாவது அந்த கதையை
பாண்டிபஜாரில் பழைய காதலியின் கணவனை தேடி
எனும் தலைப்பில் ஒருகதை எழுதலாம்

அப்படி எழுதும் போது
ஒரே வரி மட்டும் சேர்த்து எழுதிவிடுங்கள்
ஒரு மாலையில் ஒரே குடையில்
இருவரும் நடந்து சென்ற அந்த
நீண்ட மழை நாளை

மற்றும்
சில துரோக வரிகளால்
எழுதப்பட்டதை போல
நானொன்றும் வெற்று கோமாளி அல்ல
திட்டங்கள் சூழ்ந்த உலகில்
அபத்தங்களின் மூலமாக
மட்டுமே அன்பை சொல்ல
வழிகண்டுபிடித்தவனென்று

நிச்சயம் நீங்கள் இதை எழுதும் போது
என் கைகள் உங்கள் தோள் மீது
விழும் நண்பர்களே
அவை உலகின் ஒப்பற்ற அன்பை
உங்கள் முன்சமர்ப்பிக்கும்
எதிர்காலத்திற்கான
குளிர்ச்சியோடு ...

அஜயன்பாலா சித்தார்த்

January 7, 2010

கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி

சிறுகதை: அஜயன்பாலா

மஞ்சளாய் விரிந்து கிடக்கும் கோதுமை வயல்களின் நடுவே அலாதியாக ஊளையிட்டபடி ஒரு கவிதைபோல் ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளின் நிழ்ல்களோடு கடைசிப் பெட்டியில் ஊர்ந்து செல்லும் தன் நிழலையும் கூர்ந்து கவனித்தவாறு பயணிக்கிறான் இவன். கடவுளால் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லா கனிகளும் மிக மோசமானதாகவே இருப்பதாக எண்ணம் கொண்டவன்.சேகர் எஞ்சினை நோக்கி எட்டிப்பார்த்தான்.ஒரு வளைவில்,உடல் வளைந்து திரும்பிக் கொண்டிருந்த எஞ்சினை அவனால் பார்க்க முடியவில்லை.

அவன் இப்படித்தான் ஊளைச் சத்தம் கேட்கும் ஒவ்வொரு முறையும் ரயிலின் முகமான எஞ்சினைப் பார்த்துவிட வேண்டி ஆவலுடன் எட்டிப் பார்ப்பான். ஆனால் ஒரு முறையும் அவனால் எஞ்சினை முழுதாகப் பார்க்க முடிவதில்லை.ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான்.ஆனாலூம் அடுத்தமுறை அந்த ஊளை சத்தம் எப்பொழது கேட்கும் என மனதையும் செவியையும் தயார்படுத்தி ஆவலுடன் காத்திருப்பான்.

யோசித்துப் பார்த்தால் ஒருவித பைத்தியக்காரத்தனம் போல் தெரிந்தாலும் அவனுக்கு அது பிடித்திருந்தது . அந்த நீளமான எண்ணிக்கையில் அதிகமான பெட்டிகளை கொண்ட சரக்கு ரயிலில் தனக்கும் இனொரு உயிருக்குமான ஒரே தொடர்பே அந்த ஊளைச் சத்தம்தான் என்று இருக்கும்போது தன் எதிர்பார்ப்பு நியாயமானதாகவே அவனுக்குப் பட்டது.

ஒருவேளை,உலகில் கூட்ஸ் வண்டிகளின் கடைசிப் பெட்டியில் தன்னைபோல் கார்டாகப் பணிபுரியும் அனைவருமே இப்படித்தான் எஞ்சின் போடும் ஊளைச் சத்ததின்மேல் அலாதிப் பிரியம் கொண்டவர்களாக இருக்கக்கூடும் என நினனத்துக் கொண்டான்.

ரயில் முன்னைக் காட்டிலும் இப்பொழுது இன்னும் சற்று வேகத்துடன் ஒடத் துவங்கியது. சேகர் சற்று நிமிர்ந்து அந்த கடைசி பொட்டியின் வடிவத்தைப் பார்த்தான்.சிறுவயத்தில் ரஷ்ய நாவல்களைப் படிக்கும்போது கற்பனை வரைந்த சிறு வீடுகளைப்போல் வடிவம் கொண்டிருந்த அந்தப் பெட்டியின் அமைப்பு இப்பவும் அவனுள் விநோதமான ரசனைக் கீற்றை ஒளிர்விடச் செய்தது.

தான் இந்த வேலையில் சேருவதற்கு இந்தப் பெட்டியின் வடிவத்தின் மேல் தனக்கு இருந்த ஈர்ப்புகூட ஒருவிதக் காரணமாக இருக்கலாம் என்று இவன் நினைத்தான்.துவக்க காலங்களில் இந்த வேலையிலிருக்கும் விநோதமான பாவனைகள் இவனுக்கு மிகவும் பிடித்தமாகத்தான் இருந்தன. வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு அறையில் அடைபட்டு பைல்கலுக்கு நடுவே தொலைந்து கிடப்பதைவிட பச்சை,சிகப்பு கொடிக்களை அசைத்தபடி உலகத்தையே அறையாகவும் வானத்தையே கூரையாகவும் கொண்ட இப்பணி, அவனுக்கு மிகவும் பிடித்தமாகத்தான் இருந்தது.

நாட்கள் செல்லச் செல்லத்தான் அவனுக்கு இதன் ஒரே மாதிரியான இலக்கற்ற பயணமும் சோர்வும் வெறுப்புறச் செய்தன. ரயிலின் இடைவிடாத ‘தடக், தடக்” ஒசை தன் வாழ்வின் துயரத்துடன் ஏதோ ஒன்றில் பொருத்திப் போவதாகவே உணர்ந்தான்.எல்லாவற்றையும் காட்டிலும் அவனால் ஜிரணிக்க முடியாமல் போனது இப்பணியிலிருக்கும் தனிமைதான்.தன்னோடு பேச,சிரிக்க ஒரு ஜிவனும் கிட்டாதா என அவன் எத்தனையோ முறை கடைசிப் பெட்டியில் தவித்தபடி அங்குமிங்குமாய் அலைந்திருக்கிறான்.

துருப்பிடித்த அந்த கடைசிப் பெட்டி அறையில்,இரும்பின் வாசமும் சோகம் காப்பும் அதன் விநோதமான அமைப்பும் அநேக சமயங்களில் அவனை தற்கொலை செய்துகொள்ளும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.சந்தர்ப்பம் கூடிய சில தருணங்களில் ஒடும் ரயிலிலிருந்து கீழே குதித்துவிடலாமா என்றுகூட அவன் நினைத்ததுண்டு. அதுபோன்ற சமயங்களிலெல்லாம் ரயிலின் எஞ்சின் போடும் அந்த விநோதமான ஊளைச் சத்தம்தான் அவனை ஆசுவாசப்படுத்தும்.அந்த சப்த்ததை கேட்ட மாத்திரத்தில் பெரும் விடுத்தலை உணர்வு நிரம்பியவனாக தன்னை உணர்வான்.எஞ்சினை இயக்கிச் செல்லும் டிரைவரின் முகம் தன்னை பார்த்து சிரிப்பது போல் ஒரு காட்சி கண்முன் தோன்றும்.ஒரு ரயிலின் சாதாரண ஊளைச் சத்தம் அவனை மீண்டும் கேட்கத் தூண்டியதற்கு அதன்மீது அவன் பெருவிருப்பம் கொண்டிருந்ததற்கும் இதுதான் காரணம்.

ரயில் இப்போது ஒரு பெருநகரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதற்கான அடையாளங்களக தொழிற்சாலை புகைக்கூண்டுகளையும் வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே பொருத்தப்பட்ட தீப்பெட்டி வீடுகளையும் கடந்து கொண்டிருந்தது.

அவன் தன் அறைக்குள் வந்து இருகையில் அமர்ந்து கொண்டான். பெரும்பாலும் அவன் இதுபோன்ற நகரங்கள் எதிர்ப்படும் நேரங்களில் காணச் சகியாமல் அறைக்குள் வந்து அடைந்து கொள்வான்.ரயில் நிலையங்களைக் கடந்ததுசெல்ல நேரிடும்போது மட்டுமே கொடிகளுடன் வெளிவந்து தன் சமிக்ஞைக் கடமைகளை நிறைவேற்றுவான் .ரயில் நிலையம் கடந்ததும் மீண்டும் தன் அறைக்குள் வந்து இருக்கையில் அமர்ந்து கொள்வான்.நகரத்தையும் அதன் பெருத்த இரைச்சலையும் காணும் ஒவ்வொரு சமயங்களிலும் அவனுள் காரணமற்ற ஒரு வலி ஏற்ப்படும்.அவ்வபோது வாகனங்களில் எதிற்ப்படும் சந்தோஷமான மனிதமுகங்களே அதற்க்கு காரணமாக இருக்கக்கூடும்.ரயில்வே கேட் அருகே இரண்டு சக்கர வாகனங்களில் எதிர்ப்படும் சந்தோஷமான மனிதமுகங்களே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.ரயில்வே கேட் அருகே இரண்டு சக்கர வாகனங்களின் பின்னிருக்கையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திறப்பிற்காக காத்திருக்கும் நடுத்தர ஆண்களைக் காணும்போது அவனுள் அவனுக்கே தெரியாமல் அவனது ஆதங்கத்தின் காரணம் பொறாமையின் சிறு பொறி எழுந்து அடங்கும். இதற்காகவே அவன் ரயில், நகரங்களைக் கடக்கும் போதெல்லாம் அறைக்குள் அடைபட்டுக் கொள்வான்.

தன் வயதில் இரண்டு குழந்தைகளுடன் தாம்பத்தியத்தின் பூரணத்தை அடைந்துவிட்ட தன் நண்பர்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் கண்டும் காணாமல் விலகிச் செல்வான். இது போன்ற சந்தர்ப்பங்களில் காரணமின்றி அவளது முகம் ஞாபகத்தில் வந்துபோகும். மணமகள் தேவை விளம்பரத்தின் வழியாக அவளது ஒன்றுவிட்ட பெரியப்பா ஏற்பாடு செய்திருந்த வரன் அவள்.தனக்கு வரவிருக்கும் கணவர் ,கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டியில் பணியாளராக இருப்பதை தன் தோழிகளிடமும் உறவினர்களிடமும் கூறிக் கொள்வத்தில் வெளியே சொல்ல முடியாத ஒரு அசூயையும் அவஸ்தையும் இருப்பதாகக் கூறி தன்னை நிராகரித்தவள்.ஏனோ தெரியவில்லை,அவனிடம் அவள் இதைக் கூறும்போது அவள் செய்த பாவனைகள் அவனுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தன.அதுவரையிலும் அவளை பற்றி ஏந்த ஒரு மனப்பதிவும் கொள்ளாதிருந்த அவனுக்கு அவள்மேல் திடீரென ஒர் கரிசனம் தன்னுள் உடைப்பட்டு பிரவாகம் எடுப்பதை உணர முடிந்தது. ஒருவேளை இந்தக் கடைசிப் பெட்டியின் உள்ளார்ந்த ரகசியங்களையும் உளவியல் புதிரையும் அறிந்திருந்தது கூட அவள் மேல் அவனுக்கு ஈர்ப்பு வரக் காரணமாக இருந்திருக்கலாம். அவளது விழிகளுக்கு நடுவே தன்னால் பார்க்க முடிந்த ஒரு வினோத வசிகரம்தான் அதன் பிற்பாடு அவளை மறக்க முடியாமல் அவனைத் துயரத்தில் ஆழ்தியது.இப்பவும் அவனது ரயில்,பெருங்கோயில் நகரங்களை கடந்து செல்லும்போதெல்லாம் காரணமற்று அவளது முகம் அவனது ஞாபகத்தில் வந்து போகும்.

அதன் பிறகு மீண்டும் தனக்கு ஏன் மற்றொரு திருமணம் செய்ய வாய்ப்புக் கிட்டவில்லை என யோசித்த ஒவ்வொரு சமயமும் இந்த கடைசிப் பெட்டி வேலையே பிரதான காரணமாகப்பட்டது.ஆனால் அதுமட்டுமே காரணமில்லையென்றும் அவன் நன்றாக அறிந்திருந்தான். ஒரு வேளை,தன் திருமணத்தைப் பற்றி நினைவுகூர யாருமற்றுப் போன அல்லது யாரும் முன்வராத தன் இயல்பும் ஒரு காரணம் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியம்.

கல்லூரியில் படித்த காலம்தொட்டெ பேசிப் பழக ஒருவரும் அற்று, பேச வந்த சிலரிடமும் கூச்சத்தின் காரணமாக நிலை மறந்தவனாக பாவனைகள் செய்து விலகிக் கொண்டிருக்கிறான்.நண்பர்கள் என்று ஒருபோதும் யாருமற்று தனித்த தன் பயனத்தில் எப்போதேனும் கிடைத்தவர்கள் அனைவரையும் அவர்களின் பேச்சுத் துணையாக மட்டுமே தன்னைக் கருதிக் கொண்டவன்.மிகப்பெரிய இடைவெளியை ஆட்களைப் பார்த்த மாத்திரத்திலே கண்டுவிடக்கூடிய அதிசயக் கண்கள் தன்னிடம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டான். தன்னுடன் பழகிய ஒருவரும் வார்த்தைகளால் அந்த இடைவெளியை நிரப்ப முய்ற்சிக்காதது கூட தந்தனித்த மனோ வியாகுலங்களுக்கு காரணமாகப் பட்டது. அற்புதமான தவானியுடன் எழும் ஒரேயெரு வார்த்தையிலேயே அந்த இடைவெளியை நிரப்பிவிட முடியும் என அவன் உறுதியாய் நம்பினான்.அலுவலக நிமித்தமாகவோ,பேருந்திலோ,சாலை அல்லது இதர பொது இடங்களிலோ தென்படும் பெண்களின் முகத்தை அவன் கூர்ந்து கவனித்துள்ளான்.தன்னைக் கடந்து ஊடுருவிச்செல்லும் ஒளிக்காக எபோதும் கதவுகளைத் திறந்தபடியே அவர்களை எதிற்கொண்டுள்ளான். அதீதம்தான் அவனது வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களிலும் விஷக் கத்தியை மறைத்து வைத்தது என்று அவன் எப்போதோ ஒருமுறை நினைத்துக்கொண்டான்.

வெறுபுற்றவன் போல தன்னிலைக்கு அவன் முனைந்தபோது ரயில் நின்றுவிட்டிருப்பதை உணர்ந்து அறையைவிட்டு வெளியே வந்து நின்றான்.பரவெளியில் ஒரு துணுக்கெ செத்துக்கிடந்த்த ரயிலின் கடைசிப் பெட்டியிலான தன் இருப்பை உணர்ந்தபடி தலை எக்கி எஞ்சினைப் பார்த்தான்.ரயில் மீண்டும் எபொழுது உயிர் பெறும் என சொல்வதற்க்கில்லை. சில சமயங்களில் ஒரு நாள் முழுக்க அப்படியே இருக்க வேண்டியத்தாகக்கூட நேர்ந்துவிடும்.பிடிமானக்கம்பியைப் பிடித்து கொண்டு வெறுமனே நின்றப்படி அந்த பிரம்மாண்ட அமைதியை ரசித்தான்.இபோது ஆட்டின் கணைப்பும் கழுத்துமணிச் சப்தமும் அருகாமையில் கேட்க,அவன் பார்வையைச்சுழல விட்டான்.நீண்ட தண்டவாளத்தின் குறுக்கே வலப்புறச் சரிவிலிருந்து திடுமென நாலைந்து ஆடுகள் மேலேறி வர, அவற்றுடன் ஒரு சிருவன் கடைசிப் பெட்டியில் நின்றுகொண்டிருந்த இவனை பார்த்து சிரித்தான்.பின் மறுபடியும் ஆடுகளைச் சரிவிற்குள் விரட்டிவிட்டு பெட்டியின் அருகே வந்து நின்றான்.தண்டவாளத்திற்கு இணையாக சற்று தூரத்தில் தெரிந்த நெடுஞ்சலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன.

சிறுவனின் பார்வையிலிருந்து தான் தப்பிக்கும் விதமாக சேகர் சற்று தூரத்தில் விரையும் அந்த வாகனங்களைப் பார்ப்பதுப்போல பாவனை வரவழைத்துக் கொண்டான்.பற்களால் குச்சியைக் கடித்தபடி பெட்டியில் ஏற முயற்சிப்பது போல பாவனை செய்த அச்சிறுவனின் களங்கமற்ற வெட்கம் நிறைந்த அப்பார்வ்வையை எவ்விதமாய் எதிற்க்கெள்வது என அறியாமல் சேகர் ஒரு நிமிடம் விக்கித்து போனான். பதிலுக்கு அச்சிறுவனிடம் ஒரு புன்னகைக்குக்கூட வக்கற்றுப்போன தன் அருவருப்பான மனோநிலையைக் குறித்து கூனிக் குறிகியவன், தன் பார்வையை அவனிடமிருந்து விலக்கி மீண்டும் வேறு திசையில் பார்க்கத் துவங்கினான்.அச்சிறுவன் மீண்டும் அவன் எதிரே வந்து எதையாவது தருமாறு கேட்கும் பாவனையில் கையை நீட்ட தன்னியல்பு மீறி அவனுள் ஒரு புன்னகை சுடர்விட்டது.

சில்லரைக்காக வேண்டி பாகெட்டை நோக்கி விரல்கள் தன்னிச்சையாக தட்டுப்பட,சட்டென நினனவு வந்ததவனனப் போல் தன் கடைசி பெட்டி அறைக்குள் நுழைந்தவன் கையில் ஒரு பாக்கெட்டுடன் வெளியே வந்தபோதுதான் அச்சிறுவனை அழைத்தபடி சரிவிலிருந்து மேல் நோக்கி வரும் ஒரு பெண்ணின் முகத்தை அவன் காண நேரிட்டது.சட்டென ஒரு ஈர்ப்பு.செம்பட்டை நிறக் கேசத்துடன் ஒரு பதினான்கு வயது நிலவைப் போல சரிவிலிருந்து மேலெழுந்தது அம்முகம்.அம்முகத்தைப் பார்த்த மறு நொடியில் அடைபட்ட மனதிலிருந்து பீறிட்டெழும் நீருற்று போல் ஒரு பரவசம் அவனுள் நிகழ்ந்தது.அவளது விழிகளினூடே தெரிந்த ஒளியில் இது நாள் வரை அடைபட்டிருந்த ஏதோ ஒன்று மெல்ல கரைந்து உருகி வழிவதை சேகர் உணர்ந்தான் காரணமற்ற உணர்வு.

இவ்வளவு நாளாய் தான் மறுதலித்த, உடன்பட முடியாது போன பெண் உறவுகளெல்லாம் இந்தக் கணத்தின் பொருட்டு தானோ என அவன் சந்தேகப்படும்படியான ஒரு பிரம்மை.தன்னியல்பு முற்றாக மாறி அவளுடன் ஒரு வார்த்தையேனும் பேசிவிடத்துடித்த மனதின் கொந்தளிப்பை எண்ணி அவனே தன்னை அச்சர்யப்பட்டுக் கொண்டான்.நினனவுக்கு வந்தவனாக தன்னைத் தானே வெட்க்கிச் சிரித்தபடி கையிலிருந்த பாக்கெட்டிலிருந்து சில ரொட்டித் துண்டுகளை எடுத்து சிறுவனை நோக்கி வாங்கிக் கொள்ளும்படி நீட்டினான். இபொது அவளின் சம்மதத்தை எதிற்நோக்க, அவளோ வாங்க வேண்டாமென விழியால் சைகை செய்தாள்.இபோது அவன் கையிலிருந்த ரொட்டிதுண்டை பெண்ணை நோக்கி நீட்ட அவளோ வெட்கப்பட்டவளாக முறுவலித்து வேண்டாம் என்பதான பாவனையில் குனிந்தபடி தலையை இருபுறமும் அசைத்து கொண்டிருந்தாள். கையில் பிடித்த ரொட்டித் துண்டுடன் இன்னும் சற்றே குனிந்தவாறு அவர்களை நோக்கி அவன் நீட்ட,மூவருக்கும் இடையே சற்றுநேரம் ஒரு அலாதியான மெளனம்.

ஆடுகளின் கழுத்து மணிச்சத்தம்.

சிறுவன் , பெண்ணைப் பார்பத்தும் இவனைப் பார்த்துச் சிரிப்பதுமாக நின்று கொண்டிருந்தான்.அப்பெண் இப்போது சிறுவனின் தோளைத்தட்டி வாங்கிக்கொள்ளச் சொல்லவும் சிறுவன் இவன் நீட்டிக்கொண்டிருந்த ரொட்டித்துண்டை சட்டெனப் பிடுங்கி இரு கைகளாலூம் பிடித்தபடி சாப்பிடத் துவங்கினான்.இவனுள் இனம்புரியாத ஒர் சந்தோஷ உணர்வு. இப்போது இவன் மேலும் இரண்டு துண்டுகளை எடுத்து அப்பெண்ணை நோக்கி நீட்ட, வெட்கத்துடன் அவள் குனிந்தபடி தலையசைத்து பின் சட்டென உடன் பட்டவளாக இவனை நோக்கி கைகளை நீட்ட இருவருக்கும் இடையே இடைவெளி. அவளை நோக்கி இன்னும் சற்று இவன் குனிய முற்பட ரயில் தடக்கென்ற சப்தத்துடன் இவனை பின்னோக்கி இழுத்துச் செல்ல, கையிலிருக்கும் ரொட்டித் துண்டுகளை என்ன செய்வதென்று அறியாமல் அதிர்ச்சியுடன் கடைசிப் பெட்டியில் நிற்கும் இவனைச் சுமந்தபடி அமைதியாக ஊளையிட்டவாறு ரயில் வேகம் பிடிக்கத் துவங்கியது.
- மயில்வாகனன் மற்றும் கதைகள் தொகுப்பிலிருந்து

கூட்ஸ் வண்டியின்

January 1, 2010

தமிழில் வில்லன்களும் சமீப இனவரைவு படங்களும்- ஒருபார்வை :அஜயன் பாலா

70 பதுகளில்தான் முதன்முறையாக வில்லன்களுக்கு கோட்டு போடும் உரிமையே வந்தது.அதுவரை பெரும்பாலும் கட்டம் போட்ட லுங்கி ,கர்ச்சீப், கன்னத்தில் பெருமாள் கோயில் உருண்டை சைசில் மச்சம் என வில்லத்தனத்தோடு உப காரியமாய் பூச்சாண்டி காட்டுவதையும் செய்துவந்தனர் .அதிலும் எம்.ஜி.ஆர் சிவாஜி காலத்தில் சொல்லவேண்டாம்.அவர்கள் திரையில் தோன்றினாலே கரிச்சு கொட்ட ஆரம்பித்தனர்.பாவம் நம்பியார் தான் அதிகமான திட்டு வாங்கியிருப்பார். ராமதாஸ் பி.எஸ் வீரப்பாவுக்கு கூட அப்படி கிடைத்திருக்காது. ஒரு பக்கம் எம்.ஜி ஆரிடம் அடி இன்னொருபக்கம் பார்வையாகளின் வசவு என இரண்டுபக்கமும் கும்மாங்குத்து வாங்கி அவதிப்பட்டனர். இந்த சூழலில்தான் அசோகன் வந்தார்.கொஞ்ச நாள் அவரும் எம் ஜி ஆரிடம் அடிவாங்கி களைத்து போய் கடைசியாக ஜெய்சங்கர் ரவிச்சந்திரன் காலம் வந்ததும் அப்படியே ஷிப்ட் ஆகினார். வாங்கோ உக்காருங்கோ என குரலை நீட்டி மக்கள் கைதட்டி ரசிக்கதக்க வில்லனாக மாறினார்.இக்காலத்தில்தான் வில்லன்களின் முகம் கொஞ்சம் கொஞ்சமாக மறையத்துவங்கியது. அதுவரை நேரடியாக அடிதடியில் இறங்கிய வில்லன்களுக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக கூட்டம் சேர ஆரம்பிதத்து.உடன் அவர்களும் ஒதுங்கி போய் ஒரு மேசை மேல் இருட்டில் உட்கார்ந்து கொண்டு பல கலர்பல்புகளுடன் மிஷின் ஆபரேட்டர் போல் தோற்றம் தர ஆரம்பித்த்னர்.

70துகளில் சினிமாவுக்கு யாராது சென்றுவந்தால் சிறுவர்கள் அவர்களிடம் கேட்கும் முதல் கேள்வி இந்த படத்தில் பாஸ் யாரு?
பாஸ் என்றால் ஏதோ பெரிய மல்டி நேஷ்னல் கம்பெனியின் ஓனர் என நினைக்கவேண்டாம் . இவர்கள் கேட்பது கொள்ளை கூட்ட பாஸ்.
அதுவும் புரியாதவர்களுக்கு இன்றைய பாஷையில் சொல்வதானால் வில்லன்.

.
இன்று இருப்பது போல அன்றைய வில்லன்களுக்கு அரிவாளை துக்கிகொண்டு அங்குமிங்குமாக ஓடவேண்டியதோ, சரியாக மீசைகூட முளைக்காத கதாநாயக பயல்களின் அடிக்கு பயந்து கடைசியில் மானம்கெட்டு கைகூப்ப வேண்டியதோ ,நாயகிகளின் அப்பாவாக அண்னனாக மாமனாக டாடா சுமோவில் வெள்ளைசட்டை மீசை சகிதம் ஆயுதங்களுடன் திரிய வேண்டிய அவசியமோ,அல்லது முகத்தை அஷ்ட கோணலாக்கி பக்கம் பக்கமாக வசனம் பேசவேண்டிய அவசியமோ இல்லை.சிம்பிள் ஒரே ஒரு மொட்டை மட்டும் போட்டுகொண்டிருந்தால் போதும் கூடுதலாக வித்தியாசமாக சிரிக்கதெரிந்துகொண்டால் போனஸ் பாயிண்ட்..பெரிதாக அடிதடி எல்லாம் தெரிந்திருக்க வேண்டியதில்லை. எல்லாம் மிலிட்டிரி டிரஸ் போட்டு துப்பாக்கி சகிதம் நடமாடும் ஆட்கள் பார்த்துக்கொள்வார்கள்.

எப்போதாவது கற்பழிக்க வேண்டிய தேவை மட்டும் ஏற்படும் அதிலும் பெரும்பாலும் நாயகியாகத்தான் இருக்கும் இல்லாவிட்டால் கிளப்பில் இரண்டு அரைகுறை ஆடையுடன்கூடிய நங்கைகளின் தோளில் சரிந்து கொண்டு மது அருந்துவது அல்லது மது அருந்திக்கொண்டே போன் பேசுவது இதுதான் அவரது முக்கியபணி. ( வெல்லம்......பேசாமல் அந்த காலத்து வில்லனாக பிறந்திருந்தால் செம வாழ்க்கை)
அதே போல பாஸ் அவ்வளவு சீக்கிரம் சுலபமாக காட்சியளிக்கமாட்டார். மேடைமேல் சில் ஹவுட்டில் அதாவது நிழல் உருவமாகத்தான் காட்சி கொடுப்பார். அவரை எல்லோரும் பாஸ் பாஸ் என்றுதான் அழைக்கவேண்டும்..ஒரு கட்டத்தில் சுட்றாதீங்க பாஸ் பாஸ் என ஒருவர் அலற அவரை பாஸ் துப்பாக்கியால் சுட்டு புகையை வாயால் ஊதுவார்.

க்ளைமாக்சில் காலி கள்ளி பெட்டிகள் அல்லது அட்டைபெட்டிகள் அடுக்கப்பட்ட குடோவுனில் க்தாநாயகனின் அண்ணி அம்மா காதலி தங்கை அல்லது தங்கச்சி புருஷன் இவர்களில் யாராவது மூன்றுபேரை கயிற்றில் கட்டிபோடவேண்டும் .வில்லன்களுக்கும் இந்த கள்ளிபெட்டிகளுக்கும் அப்படி என்ன தொடர்போ தெரியவில்லை. இதுகுறித்து கூட யாராவது ஆய்வு செய்யலாம்.சினிமா ஷூட்டிங்களுக்கு கள்ளிபெட்டி சப்ளை செய்தே கோடீஸ்வரர் ஆன ஏஜெண்ட் கதைகளும் உண்டு . மற்றபடி க்ளைமாக்சில்மட்டும் நேரடியாக கதநாயகனுடன் சண்டை போடவேண்டிவரும் அப்போதுமட்டும் நான்கைந்து குத்துக்களை வாங்க உடம்பை தேத்திவைத்துக்கொண்டால் போதும்.மற்றபடி பாஸ்களின் வாழ்க்கை ஜாலிவாழ்க்கை.

77க்கு முன் தமிழ்சினிமா எப்படி இருந்தது என்பதற்கு இந்த பாஸ் களின் அட்டூழியம் ஒன்றே போதும் அதன்பிறகு பாஸ்கள் கொஞ்சம் கொஞ்சமாக அரசியல்வாதி, கதாநாயகியின் அப்பா அல்லது அண்ணன் என் எதார்த்த முகங்களுக்கு மாறினர் ஹெலன் சி.ஐடி சகுந்தலாவுக்கு பதில் சில்க் அனுராதா கச்சைகட்டினர். எம்.ஜி.ஆரிடம் வாங்கிய அடிகளை தொடர்ந்து நம்பியார் பாவம் ரஜினி கமல்களிடமும் கொஞ்சநாள் அடிவாங்கினார். பிறகு அந்த பொறுப்பை ஜெய்சங்கர் விஜயகுமார் ஆகியோரிடம் ஒப்படைத்து விட்டு வயதுக்கு தகுந்த கேரக்டர் பக்கம் ஒதுங்கிக்கொண்டார். இவர்களை தொடர்ந்து கொஞ்சநாள் தியாகராஜனும் பிறகு ராதாரவியும் நாயகிகளுக்கு அண்ணன்னாக அல்லது அப்பாவாக அல்லது கிராமத்துபண்ணையாராக வலம் வந்து வில்லத்தனங்கள் செய்தனர். மம்பட்டியானுக்கு பிறகு தியாகராஜன் கொஞ்சம் ஹீரோபக்கமாக ஓரம் கட்டப்போக ராதாரவிமட்டுமே ரொம்ப நாளைக்கு வேட்டிகட்டியவில்லனாக வெற்றிவலம் வந்தார். அப்பைடியேஅவர் பேண்ட் போட்டாலும் கோட்டு சூட்டுடன் தொழிலதிபர் வில்லனாகவேவந்தாரே ஒழிய நகரத்துவில்லன் வேஷத்துகு அவரை யாரும் கூப்பிடவில்லை என்றே தெரிகிறது. இடக்காலத்தில் தமிழ் ரசிகர்களுக்கு உயரமான் வில்லன்களை பார்க்கும் ஆசைவந்தது. மேலும் அவர்கள் ஒரே மாதிரி சுயமற்றவர்களாக க்ளைமாக்சில் கோழைகளைப்போல கதாநாயகனுக்கு பயந்து ஓடுபவர்களாக இல்லாமல் கொஞ்சம் விவரமானவர்களாகவும் சுயமரியாதை மிகுந்தவர்களாகவும் இருக்கவேண்டுமென ரசிகர்கள் எதிர்பார்த்தனர். சத்யராஜும் ரகுவரனும் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய பிற்பாடு இதே பாணீயில் பிரகாஷ்ராஜும் அதே உடல்தகுதியுடன் வில்லனாக நெடுங்காலத்துக்கு வலம் வந்தார். இப்படி உயரமானவர்களை வில்லனாக்கி பார்க்கும் மனோபாவம் தமிழனுக்கு வர காரணம் என்ன என ஒரு கலாச்சார ஆராய்ச்சியே கூட செய்யலாம். இப்படியான வில்லன்கள் வில்லர் எனும் மரியாதையான இடத்துக்கு வந்தாலும் கிளைமாக்சில் அவர்கள் தர்ம அடிவாங்குவது மட்டும் குறையவில்லை. என்ன சாகும் போது மட்டும் கொஞ்சம் விறைத்துக்கொண்டு அப்போதும் அதே திமிருடன் இறந்தார்கள். இடைப்பட்ட காலத்தில் சிலபடங்களில் எதிலுமே சேத்தி இல்லாமல் மன்சூர் அலிகான் வில்லனாக வலம் வந்தார்.ஆனால் அவர் நிஜவாழ்க்கையிலும் சிலவில்லத்தனம் செய்துவிட்டதாக ஒரு பெண் புகார் கொடுதத்தன் பேரில் தன் கேரியரை இழந்தார். இப்படியாக பல வில்லர்கள் வலம் வந்தாலும் தனது எதார்த்தமான் நடிப்பால் வில்லத்தனத்திற்கும் மரியாதை கொடுத்தவர் நாசர். கமல்ஹாசனுடன் அவர் வில்லனாக நடித்த பல படங்களீல் குணச்சித்திரமும் ஹாச்யமும் களைக்கட்டின.இன்னும் சொல்லப்போனால் தேவர் மகன் படத்தில் அவரது நடிப்பு கமல் மற்ரும் சிவாஜியின் நடிப்புக்கு இணையாக இருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவரயிலான வில்லன் நடிப்பில் சிறந்த நடிப்பு எதுவென்று கேட்டால் தேவர் மகன் தான் என கண்னை மூடி கூறிவிடலாம் .அந்த அளவுக்கு அவரது நடிப்பு இன்னமும் நம் கண்முன்னால் நிற்கிறது. ஒருபக்கம் கமலுக்கு வில்ல்னாக நாசர் என்பதும் ரஜினிக்கு வில்லனாக ரகுவரன் என்பதும் எழுதப்படாத விஒதியாகவே இருந்தது. கமல் நாசர் இருவரும் மெதட் ஆக்டிங் எனப்படும் திட்டநடிப்பில் ஒத்துப்போவதாலும் ரஜினி ரகுவரன் இருவரும் ஹைப்பர் ஆக்டிங் எனப்படும் ஆற்றல் நடிப்பு வைகையை சேர்ந்ததாலோ என்னவோ இந்த காம்பினேஷன் இயல்பாகவே ஒத்து போனது.

இதன்பிறகு அஜீத் விஜய் ஆகியோர் காதல்கதைகளுடன் வந்த போது வில்லனின் ரோல் கொஞ்சம் மாறதுவங்கியது. அதுவரை உயரமாக இருந்த வில்லனுக்கு இப்போது மீசை காணமால் போனது .கொஞ்சம் பணக்காரத்தன்மை அல்லது அமெரிக்க ரிட்டர்ன் ஆகியோர் வில்லன்களாக வ்ந்தனர். இக்காலங்களில் கதாநாயகன் பெரும்பாலும் நடுத்தர குடும்பத்தை சார்ந்தவனாகவே இருந்துவந்ததால் அவர்களது வில்லன்கள் தவிர்ரகமுடியாத பணக்கார இளைஞனாகவும் அமெரிக்க ரிட்டர்னாகவும் இருந்தார்கள் .இக்காலத்தில் கரண் தான் பிசியாக இருந்தார். அஜீத்துடன் நண்பனாக விஜய்யிடம் வில்லனாக அல்லது அஜித்திடம் வில்லனாக விஜய்யிடம் நண்பனாக என மாறிமாறி பிஸி கால்ஷீட்டில் பறந்தார்.

இக்காலத்தில் க்ளைமாக்சில் வில்லன்கள் அடிவாங்குவது குறைந்து மிக நல்லவர்களாக மாறி நாயகியைய்யும் நாயகனையும் சேர்த்துவைப்பது ஒன்றைமட்டுமே செய்துவந்தனர். க்ளைமாக்சில் நாயகன் கருத்து சொல்வது அல்லது அதிர்ச்சி அடையவைப்பது போன்றவை இக்காலத்தில் துவங்கியது..

வில்லன்கள் என்பது ஆட்கள் என்பதிலிருந்து விலகி சமய சந்தர்ப்பங்கள் வில்லன் ரோலில் முக்கிய பங்கு வகித்தன. வில்லன்கள் இல்லாத அல்லது அவர்களது ஆதிக்கம் குறையகுறைய தமிழில் மெல்ல நல்ல சினிமாக்கள் உதயமாக துவங்கின. அத்ன் முதல் துவக்க புள்ளியாக வந்த திரைப்படம் சேது.

2000க்கு பிறகு வந்த இந்தி வில்லன்கள்

1999ன் இறுதியில் டிசம்பர் மாதம் வெளியான சேது திரைப்படம் இம்முறை மக்கள் மாறினார்கள் ஆனால் கோடம்பாக்கம் மாறவில்லை. அதன்பிறகும் வில்லன்கள் வந்த்னர் ஆனந்த்ராஜ் நாசர் ரகுவரன் பிரகாஷ்ராஜ் ஆகியோர் அதீத பணக்கார பின்புலத்துடன் வில்லனாக வலம் வந்தனர்.. சேதுவுக்குபிறகு தொடர்ந்து பல திரைப்படங்கள் தோல்வியுற்ற போதும் மக்களின் ரசனை மாற்றத்தை கோடம்பாக்கம் முழுமையாக புரிந்துகொள்ளவில்லை.

தயாரிப்பாளர்கள் மீண்டும் க்ளைமாக்ஸ் கருத்து சொல்லும் படங்களையும் பண்க்கார வில்லன்களையும் எதிர்பார்த்தனர்.இக்காலகடத்தில்தான் பல இந்திக்கார வில்லன்கள் கஷ்டப்பட்டு தமிழ்பேசி விஜயகாந்த் அர்ஜூன் மற்றும் விஜய் அஜீத் சூர்யா விக்ரமோடு சண்டை போட்டனர்.பிரகாஷ் ராஜ் அவர்களை தன் அனாயசமான வசன உச்சரிப்பால் ஓரம்க்கட்டி ஆதிக்கம் செலுத்தினார். இக்காலத்தில் . தங்கர்பச்சான இவர் மூலம் அழகி எனும் புதிய திரைப்படத்தை மக்களுக்குமுன் வைத்தார். பச்சையான மரம் செடிகொடிகளைபோல தங்கர்பச்சானின் செம்பட்டை முடி மனிதர்களும் பச்சையான வாசத்துடன் திரைப்படங்களில் அறிமுகமானார்கள்.இவர்படத்தில் வில்லன் வாழ்க்கையின் விதியும் காலமுமாக இருந்தது..

. சேதுவில் மன நலம் குன்றியவர்களை காண்பிக்கும் காட்சியும், அழகியில் சிறுவயது பருவ காட்சிகளிலும் இயக்குனர்கள் தங்களது தனித்தன்மையை நிரூபித்திருந்தனர்.

இக்காலத்தில் தமிழில் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாடும் அதன்காரணமாக இயக்குனர்களின் கதை சொல்லால் போக்கும் நிறையவே மாற துவங்கியிருந்தது. கவுதம் மேனன் செல்வராகவன் போன்ற தொழில்நுட்ப தேர்ச்சிகொண்ட அதேச்ம்யம் புதிய தலைமுறைக்கான் ரசனைகளை அறிந்த இயக்குனர்கள் இளைஞர்களை கவர்ந்தனர். செல்வராகாவனின் துள்ளுவதோ இளமை இக்கால இளைஞர்கள் மற்றும் சமூகத்தின் உளவியலை அப்பட்டமாக சிததரித்திருந்தது..அதன்பிறகு வெளியான இவரது படங்களில் செக்ஸும் வன்முறையும் இடம் பிடித்ததே தவிர அந்த எதார்த்தம் காணாமலே போனது ஒரு இழப்பு.

இவர்களின் வரவுக்குபிறகு தமிழின் மிகச்சிறந்த மாறுதல் 2004ல் தான். இதற்குமுன் பாலா, தங்கர்பச்சான் ஆகியோர் துக்கியிருந்த பாதையில் சேரன் மற்றும் பாலாஜிசக்திவேல் பயணத்தை துவங்கினார்கள் .ஆட்டோ கிராப்,காதல் இந்த இரண்டுபடங்கள்தான் முதன்முதலாக திரைக்கதை வசனத்தை சினிமாவாக பிரதிஎடுக்கும் வழமையான போக்கை மாற்றின . அதுவரை காட்சி ரீதியாக கதை நகர்த்தும் தன்மை விலகி ஷாட் பை ஷாட்டாக கதை நகர்த்தும் உலகசினிமாவின் அடிப்படை தகுதியை தமிழ்சினிமா இப்படங்களின் மூலமாகத்தான் எட்டதுவங்கியது. இதில்காதல் படத்தில் வில்லன் இருந்தாலும் அக்காலகட்டத்தில் மண்சார்ந்த அல்லது இனவரவியல்கூறுகளுடன் கூடிய பாத்திரபடைப்புகளின் துவக்கமாக இந்தபடத்தின் வில்லர்களின் தன்மை மாறியிருந்தது.இந்த இருபடங்களும் தமிழில் தர அடிப்படையில் முதன் முதலாக வெளிநாடுகளில் நடக்கும் உலகபடவிழாக்களில் பங்கேற்கும் தகுதியை பெற்றிருந்தன.

காதல் லண்டன் திரைப்படவிழாவிலும் ஆட்டோகிராப் டொராண்டோ திரைப்படவிழாவிலும் பங்கேற்கும் தகுதியை அடைந்து தமிழர்களின் நீண்டநாள் கனவை பூர்த்திசெய்தன. அதிலும் ஆட்டோகிராப் முதல் காட்சியில் நாயகன் ஊரில்கால் அடிவைக்கும் போது ஞாபக அடுக்குகளிலிருந்து சரிந்துவிழுவதாக காட்டப்படும் நூற்றுக்கண்க்கான வாழ்க்கை துணுக்குகள் தமிழ்சினிமா அதுவரை காணாதது. மேலும் படத்தின் துவக்கத்தில் வரும் பள்ளி பருவ காதல்காட்சி உலகசினிமாவின் தரத்திற்கு மிகச்சரியான உதாரணம். இத்னை தொடர்ந்துவந்த அடுதடுத்த பருவங்கள் அந்த தரத்திலிருந்து தன்னை குறைத்துக்கொண்டே வந்தன. என்றாலும் தமிழில் கடந்த பத்தாண்டுகளில் உலகதரமதிப்பீட்டில் முன்னணியில் இருக்கும் படமாக ஆட்டோகிராப் படத்தைத்தான் சொல்ல முடியும்.

.அதே போல காதல் படத்தில் கையாளப்பட்ட சில அரிதான நுட்பங்கள் அதன் நம்பகத்தனமையைய்யும் கலைத்ரத்தையும் கூட்டிததந்திருந்தன. இறுதிக்காட்சியின் மிகைதன்மை மற்றும் செயற்கையான முடிவு ஆகியவை மட்டும் சரிசெய்யப்படிருந்தால் இதுவும் தமிழின் உன்னதத்தை உலக சினிமாவின் பட்டியலில் இடம் பெற வைத்திருக்கும் . சேரனின் தவமாய் தவமிருந்து இதேவரிசையில் வந்திருந்த தரமான திரைப்படம்..கடின உழைப்பும், கலைநயமும் சிற்ப்பாக வடிவம் கொண்டிருந்த இப்படம் பொது அனுபவமாக மாறாமல் தனிமனித அனுபவமாக அதாவது நாவல் வாசிப்பதுபோன்ற அனுபவத்தோடு தங்கிப்போனதால் ஆட்டோகிராப் அடைந்த உயரத்தை இப்படம் அடைய முடியாமல் போனது.

இனவரைவு படங்களின் வருகை..

இப்போது காதல் உருவாக்கிய இனவரைவு வில்லன்கள் மெல்ல தமிழில் பலதிரைப்படங்களில்பிரவேசிக்க துவங்கினர். இச்சமயத்தில் வெளியான பல சென்னை நகர் சார்ந்த குறிப்பாக வடசென்னையை பின்புலனாக கொண்ட பலபடங்களில் இத்தகைய இனவரைவு வில்லன்கள் அதிகமாக தோற்றமளித்த்னர். பலர் கழுத்துவரை நீளமாக முடியை வளர்த்துக்கொண்டு பயமுறுத்தினர்.காக்க காக்க படத்தில் வில்லனாக தோன்றிய ஜீவன் இந்த பேஷனை துவக்கினர்.இப்படியாக முடியை இரண்டுபக்கமும் பரப்பிக்கொண்டு தோற்றமளிக்கும் வில்லன்களின் ஆதிக்கம் இன்றுவரை குறையவில்லை

ஒரு கட்டத்தில் இனவரைவை அடிப்படையாக கொண்ட கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்கள் அதிகமாக வரத்துவங்கின. இதற்கு அப்போது சக்கை போடுபோட்ட உலகசினிமாவான சிட்டி ஆப் காட் மூலகாரணமாக இருந்து நம் இயக்குனர்களை அதன் கவர்ச்சியில் விழ வைத்தது.இது போன்ற படங்களீல் குறிப்பிடத்தகுந்த படமாகவும் வடசென்னை வாழ்வின் ஒருபகுதியாக கானா வைசரியான முறையில் பயன்படுத்தி வெற்றிபெற்ற பட்ம் சித்திரம் பேசுதடி. இதில் நானே ஒரு அங்கமாக இனவரைவு பாத்திரமாக நடிக்க நேர்ந்தது.

இப்படத்தில் வில்லன் ஒரு மண்டி வியாபாரியாக பேரம் பேசிக்கொண்டே தன் அடியாட்களுக்கு கட்டளையிடுவது வேடிக்கையாகவும் புதுமையாகவும் இருந்தது. இப்படியாக பலபடங்கள் இக்காலத்தில் வந்தாலும் பிற்பாடு வந்த பொல்லாதவன் சென்னை இனவரைவியலை துல்லியமாக சித்தரித்தபடமாக வெளியானது .ஆனால் இதில் வில்லன் ஆதிக்கம் அதிகமாக இருந்தகாரணத்தால் அக்காலகட்டத்துக்கான புதியமசாலபடமாக மாறிப்போனது விபத்து.

தொடர்ந்து வெளியான படங்களில் பருத்திவீரன் ,வெயில் போன்றபடங்கள் மட்டுமே மேற்சொன்ன ஆட்டோகிராப் மற்றும் காதல் திரைப்படத்திற்கு இணையான தாக்கத்தை பார்வையாளர்கள் மத்தியில் உண்டாக்கின.

பருத்திவீரன் திரைப்படம் கிட்டத்தட்ட த்மிழ்சினிமாவின் கத்ரினா புயல் என்றுதான் சொல்லவேண்டும் தொழில் நுட்ப ரீதியாக தன் அசாத்திய புலமையை இயக்குனர் இத்திரைப்படத்தில் அழுத்தபதித்திருந்தார்.. இரண்டும் இனவரைவு படங்களாகவும் காதல் படத்தை தொடர்ந்த மதுரை சார்ந்த இனவரைவு படங்களின் நீட்சியாகவும் இருந்தன. இரண்டு படங்களிலும் தென்பகுதி மக்களின் வாழ்வு உள்ளும் புறமுமாக தோலுரிக்கப்பட்டது. வெய்யிலில் மனிதவாழ்வின் அவலம் ஆன்மவிசாரமாக ஒரு இலக்கியத்குதியுடன் படைப்பாக்கம் பெற்றிருந்தது. ஒழுங்கிற்குள் கட்டமைக்கபடாத திரைக்கதை அதன் குறையாகிபோனது. அதே போல பருத்திவீரன் தமிழின் மிகச்சிறந்த காட்சிபடுத்துதலை தக்கவைத்துக்கொண்டிருப்பினும் அதன் உள்ளடக்கம் வணிக ரசனையைசார்ந்தே இயக்கம் கொண்டிருந்த காரணத்தாலும் பிற்போக்கு தனத்தை ஆதரிக்கும் இறுதிக்காட்சியின் வன்முறை காரணமாகவும் உலகதர மதிப்பீட்டை இதனால் எட்ட முடியாமல் போனது.ஆனாலும் வெயில் கேன்ஸ் திரைப்படவிழாவிலும் மற்றும் பருத்திவீரன் ஜெர்மன திரைப்படவிழாவிலும் கலந்து தமிழர்களுக்கு பெருமையை ஈட்டிதந்தன.

இந்த நான்குபடங்களுடன் இக்காலகடட்த்தில், சென்னை 28, மொழி,சுப்ரம்ண்யபுரம்,பூ வெண்ணிலா கபடிக்குழு பசங்க , நாடோடிகள் போன்ற படங்கள் இதேவரிசையில் தொடர்ந்து வெளியாகி வெற்றி பெற்று வருவதும் வணிக திரைப்படங்கள் தோல்வியடைந்துவருவதும் குறிப்பிடத்தகுந்தது. மேற்சொன்ன படங்களில் சுப்ரமணியபுரம் படம் மட்டுமே வில்லனை தக்கவைத்துக்கொண்டிருந்தது. ஏற்கனவே இருந்த சென்னை இன வரைவு, மதுரை இனவரைவு ஆகிய இருகூறுகளுடன் வெண்ணிலா கபடிக்குழு, பசங்க போன்ற்வை தமிழகத்தின் வன்முறை இல்லாத இதரசிறு நிலப்பரப்புகளை பின்புலனாக கொண்டு வெளியாகி இருந்தன.

என்னதான் நல்லபடமாக இருந்தாலும் வில்லனை தக்கவைக்கும் போது அந்தபடம் தவிர்க்க முடியாமல் வன்முறைசார்ந்து இயங்க நேரிடுவதையும் எதார்த்தம் இழப்பதையும் நம்மால் உணரமுடிகிறது.

இனவரைவு படங்களின் காரணமாக குறிப்பிட்ட பகுதிமக்களின் கலாச்சராம் பொதுத்தனமைக்குள் ஊடுருவது வரவேற்கத் தகுந்ததாகவும் பன்னாட்டு தொழில்முதலீடுகளின் காரணமாக மாறிவரும் கலாச்சார மாண்புகளுக்கு த்க்க பதிலடியாகவும் இயங்கி வருவது ஒருவரவேற்கதக்க விஷயமே ஆனாலும்

இது பொன்ற படங்களில் கதாநாயகர்களாக சித்தரிக்கபடும் லும்பர்கள் பராகிரமசாலிகளாகவும் பெண்களை தங்களது மோசமான வசனங்களால் இழிவுபடுத்துபவர்களாகவும் இருக்கின்றனர். இளைஞர்களின் கைதட்டலையும் அதன் மூலம் கல்லா கட்டலையும் குறிவைத்து தரமான பின்புலத்துடன் உண்டாக்கபடும் இது போன்ற திரைப்படங்களால் சமூகம் பெருத்த சீரழிவுக்கே அழைத்து செல்லபடுகின்றன. பெண்களை கொச்சைபடுத்தும் ஒரு படம் அது எத்த்னை தரமாக எடுக்கப்பட்டிருந்தாலும் மோசமான படமே. மதுரை இனவரைவு சார்ந்து எடுக்கப்பட்ட பல படங்கள் தொழில் நுட்பத்தில் என்னதான் சிறந்து விளங்கினாலும் வன்முறை,மற்றும் பெண்களை இழிவுபடுத்தும் செயல்களில் அதிகமாக ஈடுபடுவதும் பிற்போக்கான கருத்துகளை ஆதரித்து வருவதும் வருந்தத் தக்கதாகவே இருக்கிறது.

பொதுவாக இக்கட்டுரையை காலம் தோறும் நிகழ்ந்துவரும் வில்லன்களின் மாறுபாடை சொல்லவே எழுத நினைத்தேன்.ஆனால் தவிர்க்கவே முடியாமல் 2000க்கு பிற்கான சினிமக்களை அலசும் விதமாக மாறிபோய்விட்டது.
இப்படியெல்லம் எழுதுவதால் இது ஏதோவில்லன்கலை ஒழித்துக்கட்ட நடக்கும் சதியாக யாரும் கருதவேண்டாம் .இது ஒருபார்வை அவ்வளவே.
அதற்காக நான் சொல்வது மட்டுமே வேதவாக்கும் அல்ல.

நன்றி : www.tamizstudio.com

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...