August 31, 2016

எங்கே என் நண்பன் அப்பாஸின் வீடு ?



எங்கே என் நண்பன் அப்பாஸின் வீடு ?
அஞ்சலி : ஈரானிய இயக்குனர்  அப்பாஸ் கியாரேஸ்தமி (1940-2016)
-      அஜயன் பாலா


ஈரானின் அறிவுலக இலச்சினை அப்பாஸ் கியாரோஸ்தமி  கடந்த மாதம் இறந்த போது உலகசினிமாவின் ஒரு அடையாளம்   தன்னை அழித்துக்கொண்டதாகவும் ,ஒரு மைல் கல் தன்னை மாய்த்துக்கொண்டதாக உணர முடிந்தது.

ஈரானின் சத்யஜித்ரே என அழைக்கும் அளவிற்கு மிக உன்னத படைப்புகளை காலத்தால் அழியாத காலசித்திரங்களை வழங்கியவர் .

இன்று அவர் இல்லை ..ஈரான் இனி என்ன செய்யும்
அதன் சூரியன் நிரந்தரமாக மறைந்துவிட்டது.

அவரது   மரணச்செய்தி அந்தரத்தில் தொங்கும் கண்ணீர் துளியாக நெடு நேரம் என்னை யோசிக்க வைத்தது.
பதட்டமில்லாத  உணர்ச்சியில்லாத அவரது விவரணை பார்வையாளனுக்குள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்க வல்லவை
அவரது படங்களை பார்க்கும் போது காமிராவை பிடித்தது கடவுளின் கையோ என நினைக்கத் தோன்றும்.

ஒரு தந்தையின் கரத்தை நம் தோளில் உணர்வது போல பார்வையாளனுக்குள் ஒரு பிரமை   உண்டாக்கக்கூடியது அப்பாஸ் கியாரஸ்தமியின்  காட்சி மொழி.

அவர் நினைத்தால் கதையின் மிகை உணர்ச்சியில் நம்மை சிக்க வைத்து கண்ணீரை கொட்ட வைக்க முடியும்,
ஆனால் அப்பாஸ் அதை ஒரு போதும் செய்ய விடுவதில்லை
மாறாக நம் அறிவு புலன்களை தீவிரமாக இயக்க வைத்து  படைப்பாக மாற்றுகிறார்.
அவருடைய கதைகளிலும் வலி நிறைந்த வாழ்வு இருக்கிறது
அன்பும்  நெகிழ்ச்சியுமான மனிதர்கள் இருக்கிறார்கள்
ஆனால் அவர்களின் உணர்வை காட்டிலும் கதையின் முக்கியமான சிடுக்கை காட்டிலும் அவர்களை சுற்றி சுழன்றிருக்கும் அரசியலை, அதன்  மாய வலைப்பின்னலை  நம்மில் உணரசெய்து நம் தகுதியை உயர்த்த செய்கிறார்.

அவரது படங்களில்   எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்   வேர் ஈஸ் மை பிரண்ட்ஸ் ஹோம்  where is my friends home
எங்கே என் நண்பனின் வீடு

பாக்கெட்டில் வைக்கும் நோட்டு போல குட்டியான அழகான கதை.  


படம் பாள்ளிக்கூடத்தில்  துவங்குகிறது . மாணவர்கள் வகுப்பறைக்கு ஓடுகிறார்கள். வகுப்புகள் துவங்குகின்றன .ஒரு வகுப்பில் ஆசிரியர்  வீட்டு பாடம்  எழுதியாச்சா என விசாரிக்கிறார். முதல் வரிசையில்  தன் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு ஏழை மாணவன்  வீட்டு சூழலால் பாடம்  எழுதவில்லை . அவனை ஆசிரியர்  நாளை அவசியம் எழுதவேண்டும்  இல்லாவிட்டால் டிஸ்மிஸ் என கடுமையாக எச்சரிக்கிறார், இதை பரிதாபத்துடன் பார்க்கிறான் நம் ஹீரோ.

பள்ளிகூடம் முடிந்து வீடு வருகிறான்.. பையை திறந்தால்  திட்டு வாங்கிய ஏழை மாணவனின் வீட்டு பாட நோட்டு தன் பையில் . பதட்டத்துடன்  அதை கொண்டு போய் நண்பனிடம் இரவே சேர்க்க அவன் வீட்டை தேடி  அந்த சிறுவன் அலைவது தான் கதை. இரவு நெடுநேரம் அங்கு இங்கு அவன் அலைந்து வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் திரும்புகிறான். மறுநாள் அந்த பையனுக்கு என்ன ஆனது என்பது இவன் அதன் பொருட்டு என்ன செய்கிறான் என்பதுதான் கதையின் இறுதி முடிச்சு அதன் சாரம்சம்.
இந்த அற்புதமான படத்தின் கதைக்கரு அவருக்குள் உருவாக காரணம் ஒரு கவிதை, அதை எழுதியவர் ஷோரப் ஹெபாரி ஈரானிய கவிஞர். அக்கவிதை


எங்கே என் நண்பனின் வீடு


 இருள் கவிழும் அந்திபொழுதில்
 குதிரை மீதமர்ந்தவன் 
வழிப்போக்கனிடம் கேட்டான்

 எங்கே அந்த நண்பனின் வீடு?


நிச்சலனமற்றிருந்தது வானம்
வழிப்போக்கன் உதட்டிலிருந்து
மிகபெரிய கிளை முறிந்தது

இருண்டு கிடந்த மணல்வெளி நோக்கி
உயர்ந்தன அவன் கைகள்

சற்று தொலைவிலிருந்த  பாப்ளர் மரத்தை
விரல் சுட்டி காண்பித்து சொன்னான்
அந்த மரத்தின் எதிரே
அங்கே ஒரு வழித்தடம்
கடவுளின் கனவை காட்டிலும்
அடர்ந்த பச்சை தோட்டத்தின் நடுவே
அதனோடு உண்மையான நட்பு
 நீல நிற ரெக்கையாக 
 காதலோடு  விரிந்து கிடந்தது
 அந்த வழிதடமேகினால் இறுதியில்
 அறிவின் எல்லைகளுக்கெல்லாம் அப்பால்
 ஒரு மலரின் முன் நாம் நிற்பதை
  உணர முடியும்
  மலரை நெருங்குவதற்கு முன்
  எல்லாக்காலத்துக்குமான
  தொன்ம கதைகளில் வரும்
  அந்த  நீரூற்று முன் நில்லுங்கள் 
 
  கட்புலனாகும் ஒரு பயங்கரம்

  அத் தருணத்தில் நம்மை
  உறை நிலைக்குள் தள்ளும்

  உண்மையும் சிரத்தையுமாக
  நீல வானம் ஓடை போல  நகரும்
  வேகமாய் தலையசைக்கும்
  உயர்ந்த பைன் மரங்களின் 
  இரைச்சலை அப்போது கேட்க முடியும்

 அங்கு ஒளிக்கூட்டிலிருந்து 
 மேவாய் தூக்கி ஒரு குழந்தை பார்க்கும்

  அக்குழந்தையிடம் கேளுங்கள்

  எங்கே அந்த நண்பனின் வீடு

                             மூலம்   : ஷோரப் ஷெப்ரி
                            தமிழில் : அஜயன் பாலா
இந்த கவிதைக்கும் படத்துக்கும்   எந்த விதத்தில்  தொடர்பு என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்  அப்பாஸ் இந்த கவிதையை எப்படியாக உள்வாங்கி அந்த கதையை செதுக்கிக்கொண்டார் என்பதன் மூலம் அவரது படைப்பாற்றலின் ஊற்றுக்கண்னை நாம்  கண்டுகொள்ள முடியும்.

1940 ல்  டெஹ்ரான் நகரத்தில்  பிறந்த அப்பாஸ் கியாரஸ்தமி  க்கும் ரேவுக்கும் பல ஒற்றுமைகள் .ரேவை போலவே ஒரு ஓவியராகவும்  தொடர்ந்து அவரை போலவே விளம்பர துறையிலும் பின்  அவரை போலவே சிறுவர் நூல்களுக்கு அட்டை வடிவமைப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.

1970ல் ஈரான் சினிமா கவ் எனும் படத்தின் மூலம்  புதிய பாதையை உருவாக்க அதன் தொடர்ச்சியாக 1970ல்  அப்பாஸ் கியாரஸ்தமி  12  நிமிடத்தில்  bread and alley  என்ற முதல் படத்தை  இயக்குகிறார். முதல் படத்திலேயே அவர் வழக்கத்தை மீறிய புதிய பாணியில் படம் பிடிக்க துவங்க அது காமிராமேனுக்கு புரியவில்லை.அவரிடம் விளக்கி படம் எடுப்பதற்க்குள்  மலையை உருட்டும் காரியமாகிவிட்டதாக பின்னாளில் கூறுகிறார்.
 
தொடர்ந்து அவர் பல குறும்படங்களை இயக்கி வந்தபின்தான் 1989ல்  வேர் ஈஸ் மை பிரண்ட்ஸ்  ஹோம் மூலம் உலக சினிமாவின் இயக்குனராக அறியப்படுகிறார்.

1987ல் வெளியான இப்படம் அவரது  திரைப்பட வரலாற்றின் திருப்புமுனை  படம் என்று மட்டுமல்லாமல் ஈரானிய சினிமாவுக்கே புதிய வெளிச்சத்தை உலகம் முழுக்க பெற்றுதந்த படம் என்றும் கூட சொல்லலாம் .

ஈரானிய சினிமாவின் இன்னொரு திரைப்பட மேதையான மோஷன் மக்பல்ஃப் பின் தி சைக்ளீஸ்டும் இதே ஆண்டில்தான் வெளியானது.


இந்த இரண்டு படங்களும் உலக சினிமாக்களில் உண்டாக்கிய அதிர்வலைகள் காரணமாக தொடர்ந்து பல உலக படங்கள் ஈரானிய சினிமாவில் வெளியாகி உலகுக்கே அன்பையும் சகோதரத்துவத்தையும் சிறுவர்களின் அக உலகம் மூலமாக காண்பித்தது.

ரே எப்படி பதேர் பாஞ்சாலிக்கு பிறகு  அபராஜிதோ அபு சன்ஸார் என அபு  ட்ரையாலாஜி எடுத்தாரோ அதே போல அப்பாஸ் கியாரஸ்தமியும்    வேர் ஈஸ் மை ப்ரண்ட்ஸ் ஹோம்  படத்தைத் தொடர்ந்து   லைஃப் அண்ட் நத்திங் மோர், த்ரூ தி ஆலீவ் ட்ரீஸ் ஆகிய படங்களை இயக்கி அதற்கு கோக்கர் ட்ரையாலஜி என்றும் பெயர் சூட்டினார் .

அப்பாஸின் படங்களில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படும் படம் க்ளோஸ் அப்
1990ல் வெளியான இப்படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது உண்மை சம்பவமும் கூட . உலகில் எதார்த்தத்திற்கு மிக நெருக்கமான படம் என்றால் அந்த பட்டியலில் முதல் படமாக இடம் பெறகூடிய படம் க்ளோஸ் அப்

ஈரானில் அப்பாஸ் கியாரஸ்தமி போலவே புகழ்பெற்ற  உலகசினிமாவின் இன்னொரு நட்சத்திர  இயக்குனரான  மோஷன் மக்பல்ஃப் போல தோற்றம்  கொண்ட ஒருவன்  எதேச்சயாக பேருந்தில்  பயணிக்கும் போது அருகில் அமர்ந்திருக்கும் குடும்பப் பெண் அவனை உற்று  பார்க்கிறாள் . நீங்கள் பிரபல இயக்குனரான மக்பல்ஃப் தானே எனக்கேட்க அவனும்  ஆமாம் என தலையசைக்கிறான். அப்படி ஆரம்பிக்கிற நாடகம் தொடர்ந்து அப்பெண்மணி கேட்கும் கேள்விகளுக்கேற்ப  பதில் சொல்லி தான் மக்பல்ஃப்தான் என நம்ப வைக்கிறான் . அவளுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை . உலகமே போற்றும் இயக்குனர் இயல்பாக பழகுகிறாரே என வியந்து தன் முகவரி கொடுத்து வீட்டுக்கு வரசொல்கிறாள். அவனும் வீட்டுக்கு வர வீட்டார் விழுந்து விழுந்து உபசரிக்கின்றனர். அடுத்த படத்தை இயக்க பணமில்லை அதற்காகத்தான் அலைகிறேன் எனக்கூற அவர்கள் பணமும் கொடுத்து உதவுகின்றனர். பின்னர்தான் அவன் போலி மக்பல்ஃப் என தெரிய வந்து விவகாரம் போலீசுக்கு செல்கிறது . அவனும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது.  நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதும் பின் ஒரிஜினல் மோஷன் மக்பல்பே அவனோடு சேர்ந்து அவனால் ஏமாற்றப்பட்ட குடும்பத்திற்கு வந்து சமாதானம் ஆவதும்தான் கதை.

உண்மையாக நடந்த இச்சம்பவத்தை அப்படியே அதே பாத்திரங்களை கொண்டு அதே இடத்தில் திரும்ப நடிக்க வைத்து இயக்கினார்.  சில காட்சிகளை குறிப்பாக கோர்ட் விசாரனை காட்சிகளை நேரடியாக படம்பிடித்து இணைத்துள்ளார்.  இதனை படம்பிடிக்கும் அப்பாஸும் படத்துக்குள் வருவார்.  விசாரணையை படம்பிடிக்க   அவர் அரசாங்கத்திடம்  கேட்கும் காட்சி முதல் படம் முழுவதும்  இதனை பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கூட சினிமாவில் இடம்பெறுகிறோமோ என ஐய்யத்தை உண்டாக்கும் வகையில் மிக நெருக்கமான படமாக அவர் இதை உருவாக்கியிருந்தார். கொஞ்சம் பிசகினாலும் இது ஒரு டாக்குமண்டரி படமாக மாறிவிடும் . ஆனாலும் அவர் இதை புனைவாக்கும் துல்லியம்தான் அப்பாஸின் மேதமை வெளிப்படும் இடம்.

இறுதிக்காட்சியில் ஒரிஜினல் மக்பல்ஃப் போலியை பின்னால் உட்காரவைத்து டூவீலர் ஓட்டிக்கொண்டு வருவார். பின்னால் உட்கார்ந்து வரும் போலி ஆசாமி கையில் ஒரு ரோஜா செடி இருக்கும். இந்த செடியை நடுவில் வைத்து இருவரது முகமும் க்ளோசப்பில் இருக்குமாறு காணப்படும் அந்த  நீண்ட பாலோ ஷாட்   நமக்குள் அன்பின் உடைப்பை நிகழ்த்தும் . அதுதான் அப்பாஸின் இயக்கத்தின் மேதமை

பொதுவாக இது போன்ற உண்மைக்கு நெருக்கமான படம் பண்ணுபவர்கள் உணர்ச்சியை  உருவாக்குவதில் பின் தங்கி விடுவார்கள். டிராமாவை அறவே வெறுப்பார்கள்,
ஆனால் அப்பாஸின் படங்களில்  பெரும் பாறையில் சிறு செடி ஒன்று காற்றில் வேகமாக ஆடிக்கொண்டிருக்கும்
அதுதான் அவரது படங்களின் தனிச்சிறப்பு

பிற்பாடு  ரோபர்ட்டோ ரோஸலினி , ட்ரூஃபோ  , பெலினி உள்ளிட்ட உலகின் சிறந்த இயக்குனர்களின் பேரால் வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வாங்கினார்
மட்டுமல்லாமல் ,  சில்வர் லயன் வெனிஸ் விருது ,மற்றும் கேன்ஸ் விருது ஆகியவற்றையும் பெற்று சிறப்புக்கு அரிய பல உயரங்களை அடைந்தார். கடந்த ஜூலை 13ம் தேதி   உடல்  நிலை  சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறும் தருவாயில் முழுமையாக விடைபெற்றார்.

நன்றி : பல்சுவை காவியம்  மாத  இதழ்
செப்டம்பர் 2016


August 23, 2016

உதிரிகளின் குடில் : சி. மோகன்

சிறுபத்திரிக்கை உலகின் காட்பாதர் ,, சி.மோகன் எனும் நவீனத்துவ ஆளுமை(  விளக்கு விருது பெற்ற சி மோகன்  அவர்களுக்காக குதிரை வீரன் பயணம்  சிறப்பிதழுக்காக பிரத்யோகமாக எழுதப்பட்ட கட்டுரை )





பெரு மழைக்காலத்தில்  பல திடீர் சிற்றோடைகள் தோன்றி விண்ணில் மறையும் அதில் ஏதேனும் சிற்றோடைக்கு மட்டும் அதிர்ஷடம் கூடி யாரோ ஒருவரால் வாய்க்கால் நோக்கி மடைமாற்றம் செய்யப்படும் .. அந்த வாய்க்கால் வழியாக அந்த சிறு ஓடையானது ஆற்றில் கலந்து உலகையே விழுங்கும் சமுத்திரமாகும் வாய்ப்பு கிட்டும் . அந்த வாய்பை வழங்கிய  அந்த யாரோ ஒருவனது கைகளுக்கு  அது தெரிய வாய்ப்பில்லை. சி. மோகன் எனும் விமர்சகனது கை அத்தகையது. அவரால் மைமாற்றம் செய்யப்பட்ட சிற்றோடை நான் என்பதால் மேற்சொன்ன வரிகள் கடலிலிருந்து எழும் சிறுதுளி எனக்கூட கொள்ளலாம்.

அது நான் திருக்கழுக்குன்றத்தில் கொத்தி மங்கலம் எனும் சிறுகிராமத்தில் வசித்தபடி செங்கல்பட்டு கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலம் . பள்ளிக்காலத்தில் எங்கள் கவாஸ்கர் கிரிக்கட் க்ளப்பின் நாடக பணிகளில் தீவிரமாக செயல்பட்ட சீனியர் நண்பன் விமல் என்பவன் அப்போது சென்னை லயோலா கல்லூரியில் படித்துவிட்டு ஊருக்கு திரும்பியிருந்தான் . வழக்கம் போல அல்லாமல் முகத்தில் ஒரு  தீவிரம் ஞானியின் முகக்களை . காரணம் கேட்டபோது . கையில் ஒரு புத்தகம். இதை நீ அவசியம் படி என்றும் கூறி புத்தகத்தை நீட்டினான் . அந்த புத்தகம்  ஜே ஜே சில குறிப்புகள்  அதுவரை சுஜாதா பட்டுக்கோட்டை பிரபாகர் பாலகுமாரன் என வாசித்துக்கொண்டிருந்த என்னுள் அந்த புத்தகத்தின் புரியாத பிடிபடாத மொழியின் வசீகரத்தால் தாக்குண்டேன். அவன் சொன்னபடி அடுத்த சில நாட்களில்  புத்தகத்தை திருப்பிக்கொடுத்த போது  நவீன இலக்கிய வண்டு என்னையும் கடித்து விஷம் மூளைக்குள் ஏறி வினோதமானவனாக மாறிவிட்டதை அவன் எப்படியோ கிரகித்துக்கொண்டான்.. இது போல நவீன இலக்கிய வண்டால் கடிபட்ட இன்னும் சிலர் நம் ஊரில் இருப்பதகாக கூற  எனக்கு அவர்களோடு கலந்து அளவளாவி என்னையும் அவர்களோடு இணைத்துக்கொள்ளும் ஆவல் மிக்குண்டது.
வாரத்தில் சில நாட்கள் அவர்கள் மாலையில் மலை அடிவாரத்தில் கூடுவதாகவும் அடுத்த கூட்டம் பற்றி அறிவிப்பு வரும்போது அழைத்துசெல்வதாகவும் உறுதியளித்திருந்தான் . .. 

சைவம் தழைத்தோங்கும் திருக்கழுக்குன்றம் திராவிட இயக்கத்திற்கும் பெயர் போனது..குட்டி காஞ்சீபுரம் என்றே அதனை குறிப்பிடலாம் . இயற்கையிலேயே வாசிப்பு பலம் கொண்ட இளைஞர்களின் தேடல் சுஜாதா பாலகுமாரன் என திரிந்த அக்காலத்தில் ஊருக்கு புதிதாய் பாலிடெக்னிக் வந்ததிலிருந்தே பல மாற்றங்கள் .

 மாற்றத்திற்கு காரணம்  பாலிடெக்னிக்கில்  ஆங்கில ஆசிரியராக  பணிபுரிய வந்த தினகரன். ஆதவன் கதைகளில் வருவது போன்ற  சுதந்திரமும் கலை ஈடுபாடும் நவீன இலக்கிய ஈடுபாடும்  கொண்ட இளைஞர் . . அவரது மாணவராக இருந்த . செழியன் எனும் மாணவன் மூலமாக  நவீன இலக்கிய விபத்து  ஜே ஜே சிலகுறிப்புகள்  வழியாக ஊருக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது.  வைரமுத்துவின் வரிகளையும் பாலகுமாரன் நாவல் வரிகளையும்  மனப்பாடம் செய்து ஒப்புவித்து வந்த பலருக்கு ஜே ஜே வின் நாவல் வரிகள் மனப்பாடமாகத்துவங்கின .. அவர்கள் ஒன்றாக கூடி உருவாக்கிய சிந்தனை மையம் என்ற சிறு அமைப்புதான் விமல் என்னிடம் கூறிய மலை அடிவாரத்தில் கூடும் அந்த இளைஞர்கள் .


முன் சொன்னது போல  இரண்டு நாள் கழித்து நடந்த மலையடிவார கூடுகைக்கு விமல் என்னை சைக்கிளில் அழைத்து சென்று அறிமுகப்படுத்தினான் . ஒரு புதிய ஆடு போல அவர்கள் முன் நின்றேன்.   

 மாட்டுக்கு சொறிந்து கொடு மனுஷனுக்கு சொறியாதே என்பதுதான் அவர்களின் தீவிர கோஷம் . உண்மையின் பால் தீவிர பற்று கொண்டவராக  இருப்பவர்கள் மட்டுமே சிந்தனை மையத்தின் உறுப்பினராக முடியும் என குழுவின் அங்கீகரிக்கப்டாத தலைவன் செழியன் அடிக்கடி சொல்வான் கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அன்று எத்தனை தடவை சுய மைதுனம் செய்தோம் என்பதை வெளிப்படையாக சொல்லவேண்டும் .ஒருநாள் அவரவர் கள்ளக்காதல்களை வெளிப்படையாக அறிவித்துக்கொள்ள வேண்டும் என செழியன் உத்தரவிட அனைவரும் அவரவர் உறவுகளை பாலியல் தொழிலாளியை சைக்கிளில் ஏற்றி சென்று ஊருக்கு வெளியே புணர்ந்ததை . சொல்ல ஆரம்பிக்க அனைவரும் அதைக் கேட்க சுவாரசியமானார்கள். சிந்தனை மையம் தினந்தோறும் களை கட்டியது. அப்போது இது போன்று வித்தியாசமாக நடந்து கொள்வதிலும் புரியாமல் பேசுவதிலும் யார் உசத்தி என ஒரு போட்டியே எங்களுக்குள் நடக்கும். அனைவரும்  ஜே ஜே போல நினைத்துக்கொண்டு தினமும் மாலையில் அவரவர் எழுதிய கவிதைகளை வாசிப்போம்.. எனக்கு தெரிந்து அனைவரும் சேர்ந்து ஏற்றுக்கொண்டதாக ஒரு கவிதைகூட இல்லை. வாசித்து முடித்தவுடனே அனைத்து ஜே ஜே க்களும் ஒன்றாக சேர்ந்து வாசித்தவனை கும்முவது தான் நடந்தது.

எங்கள் மாவட்டத்தில் அப்போது எல்லா ஊர்களிலும் இலக்கிய கூட்டங்கள் நடத்தி வந்தார். அவர் பெயர் இலக்கிய வீதி இனியவன் . தமிழகம் முழுக்க அறிந்தவர். ஆனால் அப்போது அவர் யார் என அவ்வளவாக தெரியாது .  அவருடைய இலக்கிய செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து எங்கள் அமைப்பு ஒரு கடிதம் போட்டது.  உங்கள் கூட்டங்களில் உண்மையான விமர்சனங்கள் இல்லை துதி பாடல்கள் மட்டுமே எதிரொலிக்கிறது. இலக்கிய கூட்டத்தை திருமண விழா போல நடத்துகிறீர்கள் என்பதாக அக்கடிதம் கார சாரத்துடன் இருந்தது.  தபாலை பார்த்தவுடன் பதட்டத்துடன் எங்களை உடனே சந்திக்க விரும்புவதாக ஒரு கடிதம் போட்டார்.  அந்த கடிதம் எங்களுக்கு பெரிய வெற்றியாக இருந்தது . ஆளாலுக்கு அவரை எப்படி அணுகுவது என ரகசியமாக முன் திட்டம் போட்டோம். நீ அவரிடம் இதை பற்றி கேளு நீ அவரிடம் அதை பற்றி கேளு என பிரித்துக்கொண்டோம் . சொன்னபடி இனியவன் ஊருக்கு பஸ்சில் வந்து இறங்கியதும் அவரை சைக்கிளில் பிக் அப் செய்து கொண்டு அத்ற்காக ஏற்பாடு செய்திருந்த ஒரு மண்டபத்திற்கு அழைத்து சென்றோம் . அங்கு அனைவரும் காத்திருந்தனர் . சிக்கினான் சிங்காரம் என நானும் மனதில் நினைத்தால் . நடந்தது என்னமோ தலைகீழ்  எஙகளை அவர் கடுமையாக புகழ் நாங்கள் புகழ்ச்சியில் மயங்கி பம்மி அவர் மட்டுமே பேச நாங்கள் வாய் மூடி கேட்டு அவரை மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தோம்.

பால் சார்த்தர்.. எக்சிஸ்டென்ஷியலிசம் ....தர்மானந்தர் கோசம்பி ஆகியோரது கட்டுரைகளின் சிறு பகுதியுடன் ஒரு ...சர்ரியலிஸ கவிதை  ஆகியவை பிரசுரிக்கப்பட்ட நான்கு பக்க துண்டு பிரசுரத்தை ஊருக்குள் பொதுமக்களிடம் விநியோகித்தோம்.   
.
இப்படியான காலத்தில் ஒருநாள் முதன் முதலாக அக்கூட்டத்தில் நானும் கவிதை வாசிக்க போக என்னை அக்கூட்த்திற்கு அறிமுகப்படுத்திய விமல் எச்சரித்தான் வேணாம் இந்த விபரீத விளையாட்டு என .. ஆனால் நான் துணிந்து என் முதல் கவிதையை அன்று கூட்டத்தில் வாசித்துவிட்டு தலை நிமிர   பெரிய அமைதி. பரவாயில்லை நம் கவிதை உண்டாக்கிய தாக்கம் அது என எனக்குள் ஒரு திமிர் வாலை சுருட்ட அடுத்த சில நொடிகளில் விழுந்தன தர்ம அடிகள் ..என்னை வறுத்து எடுத்தார்கள் . இதுக்கு பேர் கவிதையா .கவிதைன்னா என்ன .. முதல்ல நீ என்ன படிச்சிருக்க சுத்த வேஸ்ட் குப்பை என ஆளாளுக்கு சின்னாபின்னாமாக்கினார்கள் .விமல் என்னைக் காப்பற்ற எவ்வளவோ போராடி பார்த்தான் . அவர்களது பேச்சில் புரியாத பெயர்கள் அதிகமிருந்தன வெறும் ஜேஜே படிச்சிட்டா எழுதிடமுடியுமா ? உனக்கு ஞானக்கூத்தன் தெரியுமா? நகுலன் தெரியுமா  டேய் இவனுக்கு புதுமைபித்தன் தெரியுமான்னு கேளுடா  முதல்ல படி அப்புறம் எழுதலாம்  கடைசியில் அனைவரும் கூட்டம் முடிந்து கிளம்பியபோது வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்ட  பெண்ணை அவர்கள் கடந்து செல்வதாக உணர்ந்தேன்.  என் கையில் கசங்கி கிடந்த  கவிதை காகிதம் என்னை பரிதாபமாக பார்த்தது. வீடு திரும்புவது வரை விமல் என்னிடம் எதுவும் பேசவில்லை  அன்று இரவு முழுக்க மனம் கொந்தளித்தது. அவர்களின் அவமானத்தால் எதையாவது செய்தாக வேண்டும் என்ற வெறி ஏற்பட ஒரே நாளில் இவர்களை விட மிகப்பெரிய இலக்கியவாதியாகுவது எப்படி என்ற கேள்வி எனக்குள் குமைந்தது. 


மறுநாள் என்னை சமாதானப்படுத்த வீட்டிற்கு வந்த விமலின் கையில் புது யுகம் என்ற இதழ் .. இது வெளியாகி ரெண்டே இதழோடு நின்று போய்விட்டது .. இதில் பாதசாரி எழுதிய காசி எனும் கதையை படி.. அதுதான் இன்றைய இலக்கிய உலகில் ட்ரெண்ட் என கொடுத்தான் .

அந்த புத்தகத்தை வாசிக்க புரட்டிய போதுதான் சி மோகன் எழுதிய தற்கால நாவல் இலக்கியம் எனும் கட்டுரை எனக்கு அறிமுகமானது. அந்த கட்டுரை தான் என் பிற்கால இலக்கியம் நோக்கிய வாழ்க்கையை தீர்மானித்தது என்றால் மிகையில்லை.. அந்த கட்டுரையில் தமிழின் சிறந்த நாவல்கள் குறித்து  ஒரு கட்டுரை எழுதிய கையோடு அதில் பட்டியலையும் கொடுத்திருந்தார்.

மிகச்சிறந்த நாவல் எதுவுமில்லை
என்று கூறியவர்

இதுவரை வந்தவற்றில் சிறந்த நாவலாக மோக முள்ளை குறிப்பிட்டு தொடர்ந்து குறிபிடத்தகுந்த நாவல்கள் என அம்மா வந்தாள், புளிய மரத்தின் கதை ..புயலிலே ஒரு தோணி என மூன்றையும் சொல்லி பின் தமிழில் மற்ற சில முக்கியமான நாவல்கள் என முப்பதுக்குமேற்பட்ட நாவல்களை பட்டியலிட்டிருந்தார்.

அடுத்த ஒரு மாதம் முழுக்க நான் நூலகங்கள் சென்று தீவிர வேட்டையாடி அந்த நாவல்களை தேடி எடுத்து வாசித்ததோடு அல்லாமல் அவர்களது இதர நூல்கள் சிறுகதைகள் என படிக்க துவங்க என் வாழ்க்கையும் என்னை சுற்றிய உலகமும் முழுமையாக மாற துவங்கியது.

யாருக்காக எதற்காக தீவிரமாக படிக்க துவங்கினேனோ அந்த எண்ணமே எத்தனை அபத்தமானது என்பதை உணர முடிந்தது. உடல் இலேசாகி நான் வேறொருவனாக சில காலத்தில் மாற துவங்கினேன். தெருவில்  பேருந்தில் தியேட்டர்களில் பார்க்கும் இதர மனிதர்களை விட நான் சற்று உயரமானவனைப்போல ஒரு கடவுளைப் போன்ற உணர்வு.. வேறு யாரவது கையில் புத்தகம் வைத்திருந்தால் அது என்ன புத்தகம் என அறியும் ஆவல் அவரும் நம்மை போல நவீன இலக்கியம் வாசிப்பவரா .. புதுமைப்பித்தன் ஜானகிராமன் குபாரா மௌனி .. பெயர் சொன்னால் தெரியுமா . இப்படியாகத்தான் என் வாழ்க்கை எழுத்து சார்ந்த வாழ்க்கை நோக்கி திசை திரும்பியது .இதற்கு  காரணமாக இருந்த அந்த முக்கிய புள்ளியின் நாயகனாக நான் கருதுவது       சி.மோகனைத்தான் . ஒரு தீவிரமான விமர்சனம் அல்லது கட்டுரையின் பின் விளைவுகள் எத்தகையதாக இருக்கும் என்பதற்கு என்னை விட சிறந்த உதாரணம் இருக்க முடியாது. அந்த பட்டியல்  அதிலிருந்த தேர்வும் ரசனையும் தமிழ் நவீன இலக்கியத்தின் ஆழமான மையச் சரடு ன்பதையும்  அதன் முக்கியத்துவத்தையும் பிற்பாடு வாசிக்க வாசிக்க உணர்ந்தேன்.

ஆனால் அதே சமயம் அக்கட்டுரை இல்லாமல்  நான் என் போக்கில் வாசிக்க ஆரம்பித்தால்  நான் அப்பாதையை அடைய சில வருடங்களாவது நிச்சயம் ஆகியிருக்கும்.

அதற்கு வழி வகை செய்த இந்த கட்டுரையை எழுதிய சி மோகன் எப்படி இருப்பார் .. அவரை  சந்தித்து பேசிவிட்டாலே போதும் ..ஒட்டுமொத்த இலக்கிய உலகையும் புரிந்து கொண்டு அதன் மையப்புள்ளியில் ஐக்கியமாகிவிடலாம் என்ற எண்ணமும் மனதுக்குள் எழுந்தது

சி மோகன் நீ யார், எப்படி இருப்பாய், என்பதுதான் அப்போது எனக்குள்ளிருந்த தலையாய கேள்வி. அந்த கேள்விக்கு விடையாக நான் சி மோகனை சென்னையில் சந்தித்த போது என் வாழ்க்கை இரண்டு வருடங்களை விழுங்கியிருந்தது.ஆனால் அந்த சந்திப்பின் பிறகு இந்த ஆளை ஏண்டா பார்த்தோம் . என வெறுக்கும் படியான காரியமும் நிகழ்ந்தது.

இடைப்பட்ட நாட்களில் சிந்தனை மையம்  அன்றாட பிரச்னைகளால் சிதைந்தது. மையத்து இலக்கிய ஆளுமைகள் அனைவரும் அன்றாட பிரச்னைகளால் சிக்கி சின்னாபின்னமாகி ஆளுக்கொருதிசையில் வேலைக்கு போய் கோலிகுண்டுகளாக உருண்டனர்.. நான் மட்டும் பெரும் எழுத்தாளனாகி இலக்கிய உலகின் மையத்தை அடையும் கனவுடன் சென்னைக்கு வந்து சேர்ந்தேன். அக்காலத்தில் சினிமா ஆசையும் அதோடு சேர்ந்து ஒட்டிக்கொண்டது என்றாலும் அப்போது எனக்குள் இருந்த இலக்கியவாதிதான் என்னையும் என் வாழ்க்கையையும் தீர்மானிக்கும் தீவிரத்தில் இயங்கினான்.
. சென்னையில் விற்பனை பிரதிநிதி வேலைகளில் சேர்ந்து அப்படி இப்படி என அலைந்து  பல கூட்டங்களுக்கு சென்று எழுத்தாளர்கள் அறிமுகமாக நவீன நாடம் பார்த்து அந்த பாதிப்பில் நானும் தாண்டவராயன் என்றொரு கதை எழுதி சுப மங்களாவில் கொடுத்து நடையாய் அலைந்து பின் திரும்ப வாங்கிவந்தேன்.  அப்போது என்னுடன் தளபதி பத்திரிக்கையில் பணி புரிந்த விக்கிரமாதித்யன் கதையை வாசித்துவிட்டு ..  உன்னை யாருடா சுப மங்களாவுக்கு கொடுக்க சொன்னா வயல்னு ஒரு  பத்திரிக்கை மந்தை வெளியில இருக்கு அங்க போய் கொடு அதோட ஆசிரியர் என் பிரெண்டு  என அண்ணாச்சி சொல்ல

அவர்  பேரு?

சி மோகன் ?

என் நிலை உங்களுக்கு சொல்லவே வேண்டாம்
அன்று மாலையே அரக்கபக்க  மயிலாப்பூரில் கபாலி கோயிலை ஒட்டி  கச்சேரி சந்துவில்  5ம் எண் வீட்டை தேடி நடந்துகொண்டிருந்தேன்.  ஒரு காதலி வீட்டை நெருங்குவது போல பதட்டம்..  வாசலை நெருங்கி விட்டேன்
உள்ளே எட்டி பார்த்தேன் யாருமில்லை சட்டென ஒரு கட்டையாக ஒரு ஆசாமி சிகரட் பிடித்தபடி வந்தார் யார் வேணும் போலீஸ் போகேட்டார்.

வயல் ..

ஆமாம் வயல் ஆபிஸ்தான் என்ன வேணும்;

கதை எழுதியிருக்கேன் ,,.பதட்டத்துடன் சொல்ல 

அப்படியா இங்க அதை வச்சி என்ன பண்றது

இங்க சி மோகன்னு

நான்தான்  .

கவிஞர் விக்ரமாதித்யன் அனுப்பி வச்சார், 

சரி, அப்ப குடுத்துட்டு போங்க படிச்சி பாத்துட்டு சொல்றேன்.

வெளியில் வந்தபின்  எனக்கு ஒரு புறம் செம கடுப்பு அவர் கொஞ்சம் சகஜமாக பேசியிருந்தால் கூட அண்ணே உங்கள பாக்கத்தான் இத்தனை நாளா..  நீங்கதான்  எனக்கு  வழிகாட்டி அது இதுன்னு புலம்பி தள்ளியிருந்திருக்கலாம்.  இவ்வளவு பெரிய ஆள் நம்மை ஏதோ அட்ரஸ் கேட்க வந்தவன் போல அலட்சியபடுத்திவிட்டாரே என உள் மனது பொருமினாலும்  
இன்னொரு புறம்  அட இலக்கிய உலகின் மையத்துக்கே வந்துவிட்டோம்       சி மோகன் வாசித்துவிட்டதாக சொன்னாலே நாம் வேற லெவல்தான் என அக மகிழ்ந்து நடந்தேன். அதன்பிறகு நான் வாரத்துக்கு இருமுறை கச்சேரி சந்துக்குள் நடப்பேன் ..மோகன் அலட்சியமாக வாங்க தம்பி இன்னும் படிக்கல.. அப்படியா எங்க இருக்குன்னு தெரில தேடணும்.. எனக்கு செம கடுப்பாக இருக்கும். சில நேரங்களில் சிகரட் பிடித்தபடி அங்கு மோகனுக்கு பதில் சுகுமாரன் அமர்ந்திருப்பார் . போ போ அப்புறம் வா ஆளில்லை மாதிரி பதில் சொல்வார்.  கடுப்பில் ஒருநாள் கதையை கொடுங்கள் எனக்கூற அதன்பிறகு விடாப்பிடியாக அலைந்து வாங்கி வந்துவிட்டேன்..மேலும் அப்போது எனக்கு சென்னையும் இலக்கிய உலகமும் முழுமையாக பிடிபட்டிருந்தால் ரசிக மனோபாவம் விலகி  விட்டிருந்தேன் . நாளடைவில் கோணங்கி, எஸ் ரா, பிரமிள் ,  ஆகியோர் பழக்கமாக மோகன் மேலிருந்த வசீகரம் குறைந்தும் மறைந்தும்  போனது. ஆனால் நம் கதையை படிக்காமல் உதாசீனப்படுத்திய  இந்த ஆளுக்கு  நாம் யார் என காட்டவேண்டும்  என்ற எண்ணம் மட்டும் உறுதியாக இருந்தது.



        அதன் பின் அக்கதையை .விக்கிரமாதித்யன் விருட்சத்திற்கு கொண்டு போய் கொடுக்க ஒரு வருடம் கழித்து விருட்சம் அழகியசிங்கர் வீட்டுக்கு போன கோணங்கியும் ஸ் ராவும் பழைய குப்பைகளை கிளற அப்போது அவர்கள் கையில் பட்டு சாப விமோசனம் பெற்றது என் முதல் கதையான தாண்டவராயன். எழுதி கிட்டத்ட்ட நான்கு வருடங்களுக்கு பின் அதிசயமாக நிகழ்ந்தது இந்த விபத்து.

        வாழ்க்கையில் முதல் கதை பிரசுரமானபோது கிடைத்த மகிழ்ச்சியை நான் வேறெதிலும் அடையவில்லை . இப்போது என் கவனம் சி மோகன் மேல்தான்.  இப்போதாவது அவர் என் கதையை படித்துவிட்டு அடடா இவனையா நாம் அலைய வைத்தோம் என குற்றவுணர்ச்சியில் மருகியிருப்பார் என்ற நினைப்பு.
       
 அப்போதெல்லாம் இப்படித்தான் அனைத்திலும் ஒரு அதீத கற்பனை என் கதையை போலவே எனக்குள் உருத்திரளும் மேலும் அப்போது சிறுபத்திரிக்கைகள் மிக குறைவு. கணையாழி, விருட்சம், முன்றில், இப்படித்தான் அதனால் தீவிர இலக்கியவாதி இதில் பிரசுரமாகும் கதை கவிதைகளிலிருந்து தப்பிக்க வாய்ப்பே இல்லாத சூழல்.

.       கதை வெளியாகி சில நாள் கழித்து எதேச்சையாக  தி நகர் முன்றில் அலுவலகத்தில் சி மோகனை  பார்க்க நேர்ந்த போது அவரிடம் என் கதை படித்துவிட்டீர்களா என கேட்க, அப்படியா பார்க்கவில்லையே எனக்கூற நான் கையிலிருந்த விருட்சம் இதழைக்கொடுக்க  வையுங்க வையுங்க அப்புறம் படிக்கலாம்.. வாங்க முதல்ல டீ சாப்பிடலாம் என முன்றில் அரங்கநாதன் மகன் மகாதேவனோடு அழைத்துசென்றார்.  

அதன்பிறகு தினமும் முன்றில் மாலை நேர சந்திப்புகள் சி மோகனோடு களைகட்டத்துவங்கும்  நான் கதை படித்துவிட்டீர்களா என கேட்க அதுக்கென்ன பொறுமையா படிசிட்டா போச்சி என அனாயசமாக என்னை டீல் பண்ணுவார்.

         அக்காலத்தில் முன்றில் தினசரி கூடுதலில் நகரின் இலக்கிய பிசாசுகள் வந்து செல்வர் . கோபி கிருஷ்ணன், சஃபி, லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி பாண்டியராஜன் , கோணங்கி, எஸ்ரா, நாகார்ஜுனன், சாரு, பிரேம், பிரமிள் என திமிங்கிலமும் தலைப்பிரட்டைகளுமான ஒரு கலவையாக அங்கே பலரும் வந்து செல்வர். ஆனாலும் சி மோகன் வரும்போது மட்டும் அந்த இடத்தில் மகிழ்ச்சி அலை ததும்பும். மற்றவர்களின் தீவிரத்தோடு அவரிடம் என்னை போன்ற இளைஞர்கள் சுலபமாக நெருங்ககூடிய இணக்கமும் காணப்படும்.
.
        அவரது கேலியான நகைச்சுவை பேச்சு  மற்றும் இலக்கியத்தின் அறம் சார்ந்த மதிப்பீடுகளின் .மீதான எள்ளல் ஆகியவை அப்போது என்னை மிகவும் ஆச்சர்யபடுத்தின. வாழ்க்கையை விட படைப்பு பெரிசு என்பதான  ஒரு தத்துவத்தையும் அதற்கான காரணத்தையும் அவரிடமிருந்தே புரிந்துகொண்டேன்  அவரிடமிருந்த ஒருவித நீட்ஷேதன்மைக்குள் நானும் ஐக்கியமாகி வாழ்வின் இன்னொரு பக்கத்துக்குள் நுழைய துவங்கினேன் .

       ஆனாலும் என் கதையை கடைசி வரை அவர் படிக்கவேயில்லை என்பதால் எனக்குள் அவர் மீது ஒரு கசப்பு மட்டும்  மறையாமல் மனதின் அடி ஆழத்தில் உறைந்து கொண்டிருந்தது.

       மோகனுக்கும் எனக்குமான இரண்டாவது இன்னிங்ஸின் போது மனுஷ்யபுத்திரனின் சென்னை வருகையின் போது நிகழ்ந்தது. கிட்த்ட்ட நான்கைந்து வருடங்களுக்கு பிறகான சந்திப்பு . இடைப்பட்ட காலத்தில் பத்திரிக்கை வாழ்க்கையிலிருந்து  சினிமா வாழ்க்கைக்குள் மூழ்வதுமாக திரும்பி உதவி இயக்குனராக மாறியிருந்தேன். அடுத்து படம் டைரக்ட் செய்யலாம் என்ற கனவுடன் அலைந்து கொண்டிருந்தேன் . அப்போது நான் தங்கியிருந்த மேன்ஷன்  அறைக்கு அடிக்கடி வரும் என் நண்பர்  பாடலாசிரியர் நா.முத்துக்குமார்  பாலா மனுஷ்யபுத்திரன் சென்னைக்கு வந்துருக்கார், என்னைக்கூப்பிட்ருக்கார் ..வாங்க பாத்துட்டு வரலாம்  என்றார். அப்போது புதிய காலச்சுவடு வர ஆரம்பித்த சூழலில் பெரிய கவனத்தை ஈர்த்து கொண்டிருந்தது. சுராவின் பழைய காலச்சுவடுகள் அனைத்தையும் ஒரு சேர தேடிப்பிடித்து நான் வாசித்திருக்கிறேன். அதன் வடிவம் இலக்கியத்தரம் ஆகியவற்றின் மீது எனக்கிருந்த அபிமானம் புதிய காலச்சுவடில் இல்லை. சரி இதை வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் என அப்போது அந்த இதழின் ஆசிரியர் குழுவில் இருந்த மனுஷ்யபுத்திரனை சந்திக்க நுங்கம்பாக்கம் அய்கஃப் வளாகத்திற்கு முத்துக்குமாருடன் சென்றிருந்தேன் .

எனக்கும் மனுஷ்யபுத்திரனுக்கும் என்ன ராசியோ இதுவரை உண்டான தனிப்பட்ட சந்திப்புகள் அனைத்துமே காரசாரமான சண்டை தான் . அன்று நான் காலச்சுவடு இதழ் குறித்து அதன் வடிவமைப்பு குறித்து விமர்சித்து பேச மனுஷ்யபுத்திரன் பதட்டமும் கோபமுமாக என்னை நிராகரித்துக்கொண்டிருந்தார். அப்படியே பேச்சு வளரும் போது சி மோகனும் அங்கு வந்தார். மனுஷ்புத்திரன் ஒருகட்டத்தில் ஆவேசமாக பேச துவங்க  மோகன் சட்டென உள் நுழைந்து என் கருத்துக்கு ஆதரவாக பேசி என்னை காப்பாற்றினார் . அடுத்து சி மோகனுக்கும் மனுஷ்யபுத்திரனுக்குமிடையே கடும் வாக்குவாதம் தொடர ஒரு கட்டத்தில்     சி மோகன் மனுஷ்யபுத்திரன் செய்தது தவறு என உணர்த்தி அவரை அமைதியுற செய்தார்.

அதன் பின் யூமாவாசுகி மூலமா தளவாய் சுந்தரம் சங்கர்ராம சுப்ரமணியன்  ஆகியோர் நெருங்கிய நண்பர்களாக மாறினர். அவர்களுடன் அடிக்கடி சந்திப்புகள் தொடர என் சினிமா வாழ்க்கையை இலக்கிய வாழ்க்கை வென்று மீண்டும் தீவிர  இலக்கியத்தினுள் பிரவேசிக்க துவங்கினேன் . இக்காலத்தில் தான் என் முதல் நூல் பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை மொழிப்பெயர்ப்பு நூல் வெளியாகி பெருத்த வரவேற்பும் பெற்றது. அடுத்த நான் எழுதிய கூட்ஸ் வண்டியின் கடைசிப்பெட்டி இந்தியா டுடேவில் வெளியாகி இலக்கிய சிந்தனை பரிசும் பெற்றது . எனக்குள் எழுத்து சார்ந்த வேட்கை தீப்பற்றி எரிய அடிக்கடி இலக்கிய  கூட்டங்களுக்கு செல்வது , கூட்டம் முடிந்தபின்  நண்பர்கள் அறையில் தங்குவது என என் முழு நேரமும் இலக்கியம் சார்ந்த வாழ்வுக்குள் சிக்கியது. இக்காலத்தில் சி மோகன் எங்கள் குழுவின் தலைவனாக இருந்தார். 1998லிருந்து 2004ம் ஆண்டு வரையிலான இக்காலக்கட்டத்தில் என் வாழ்க்கை முழுக்க இலக்கியம் சார்ந்ததாக மட்டுமே இயங்கியது . ஒரு வேளை தீவிரமாக இக்காலத்தில் நான் சினிமாவில் இயங்கியிருந்தால் அப்போதே இயக்குனராகியிருக்க முடியும். ஆனால் எழுத்து சார்ந்த என் வேட்கை என் மனசாட்சியை நிச்சயம் கொன்றிருக்கும்.

இந்த இடைப்பட்ட காலத்தில் தான் பதிப்பகங்கள் விஸ்வரூபமெடுக்க துவங்கியது. புத்தக விழாக்களின் முகங்கள் மாறின. இலக்கிய பதிப்பகங்கள் நிறுவனங்களாக  மாறின. திமணி வியாழக்கிழைமை மட்டுமே நவீன இலக்கியத்துக்கு இட ஒதுக்கீடு செய்திருந்த பெரும்பத்திரிக்கைச் சூழல் இலக்கியவாதிகளை எழுத்தாளர்களாக அங்கீகரிக்க துவங்கியது. நவீன இலக்கியவாதிகளின் முகங்கள் பொங்கல் தீபாவளி நாட்களில் குமுதம் பத்திரிக்கைகளில் படைப்புகளாக வரத் துவங்கின. எஸ் ரா, ஜெயமோகன், ஆகியோர் பொது புத்தியில் ஸ்டார் எழுத்தாளர்களாக அங்கீகாரம் பெற்றனர் . க்ரைம் நாவலாசிரியர் என்ற அடையாளம் மாறி சுஜாதாவுக்கு  இலக்கிய மதிப்பீடுகள் கிடைக்க துவங்கியது. தீராநதி எனும் இலக்கிய இதழை  குமுதம் கொண்டு வந்தது. இடைநிலை இதழ்கள் என்ற வார்த்தை புழக்கத்துக்கு வந்தன. இப்படியாக எழுத்து சார்ந்த வணிக சூழலாக இலக்கியத்தின் முகம் மாறிக்கொண்டிருந்த வேளையில், இந்த வட்டாரத்துக்குள் சிக்காத அல்லது சிக்க விரும்பாத சிறு பத்திரிக்கை மரபை விடாமல் காப்பாற்றும் தன் முனைப்போடு சென்னையிலும் சென்னைக்கு வெளியிலும்  ஆங்காங்கு கவிஞர்களும் எழுத்தாளர்களும்  இயங்கினர் .இதில் ஒரு குழு பிற்பாடு புது எழுத்து பத்திரிக்கை வாயிலாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டாலும், அதற்கு சற்று முன்பாகவே சிறுபத்திரிக்கை சார்ந்து சென்னையில் இயங்கிய நாங்கள் தவிர்க்கவே முடியாமல் சி மோகன் நிழலில் அடைக்கலமானோம்..


         இக்காலத்தில் சி மோகன் ராயப்பேட்டை முகப்பேர் மவுன்ரோடு கடற்கரையோரமாக சிட்டி செண்டர் எதிரே என பல்வேறு பட்ட அறைகளுக்கு இடம் மாறிக்கொண்டேயிருந்தாலும் பெரும்பாலும் அந்த அறைகள் சிறுபத்திரிக்கை எழுத்தாளர்கள் கூடும் இடங்களாக மாறின . அங்கே அனைவரது ஒழுங்கின்மைகளுக்கும் ஒரு அனுமதி இருந்தது. சிறுபத்திரிக்கை சார்ந்து தொடர்ந்து இயங்கவும் உரையாடல் நிகழ்த்தவும் பேசவும் ஆலமரம் போல அனைவரையும் அவர்  ஒருங்கிணைத்தார்.. அவர் அதை மெனக்கெட்டு செய்யாவிட்டாலும் காலம் அவர் மூலமாக அதை நிகழ்த்திக்கொண்டதாகவே தோன்றுகிறது . ஓவியம் சார்ந்த அவரது பார்வைகள் விமர்சனங்கள் காரணமாக பல ஓவியர்கள் கவிஞர்களைப் போல அவரைத்தேடி வந்தனர் . எழுத்தாளர்களும் ஓவியர்களும் கலைஞர்களும் அவர் அறைகளில்  சங்கமித்தனர் . அவர் இக்காலத்தில் கொண்டுவந்த புனைகளம் இதழுக்காக மெரீனா கடற்கரையில் ஓவியர்களும் எழுத்தாளர்களும் கூடும்  நிகழ்வுகளை ஓவியர் விஸ்வம் ஓவியர் சந்த்ரு ஆகியோரோடு இணைந்து ஒழுங்கு செய்தார்.. பல புதிய ஓவியர்கள் பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகமாக இந்த நிகழ்வுகள் வழிவகுத்தன. சந்தோஷ், பெனிட்டா ரோஹிணிமணி போன்ற ஓவியர்கள் இந்த நிகழ்வுகளில் தான் சிறுபத்திரிக்கைகளோடு அறிமுகமாயினர். எழுத்து பிரக்ஞை சிற்றிதழ் செயல்பாடுகளின் தொடர்ச்சியாக இவற்றை உணரமுடிகிறது..
           இக்காலத்தில் நிகழ்ந்த  இலக்கிய கூட்டங்கள், புத்தக நிகழ்வுகள்  உலக சினிமா திரையீடுகள், நாடகங்கள் முடிந்தபின் அல்லது பாதியிலேயே எழுந்து சி மோகனுக்காக  காத்திருப்போம் . அவர் வந்தபின்  கூட்டமாக நடக்க துவங்குவோம். சிலசமயங்களில் எண்ணிக்கை நான்கைந்து பேராகவும் இருக்கும் சில சமயங்களில் பதினைந்து இருபது பேர் வரையும் அதிகமாகும் .  அது அறையாக இருந்தாலும் மது விடுதியாக இருந்தாலும் அனைவரும் வட்டமாக அமர்ந்து பழைய பாடல்களை பாடுவதை ஒரு சம்பிராதய துவக்க நிகழ்வாக கொள்வோம் . மோகன் கிட்டத்தட்ட அனைத்து சபைகளிலும்  சிட்டுக்குருவி பாடுது அதன் பெட்டை ஒன்றை தேடுது என்ற பாடலை பாடிவந்தார். பாடல்கள் பெரும்பாலும் அரிதான பாடல்களாகவே அது இருக்கும் . அக்காலத்தில்  தொடர்ந்து பல சபைகளில் பங்களித்த டி.கண்ணன்  யாருக்குமே பரிச்சயமில்லாத பழைய மிகபழைய பாடல்களில் வல்லவராக இருந்தார் . பாடலை தொடர்ந்து மெதுவாக இலக்கியம் சார்ந்த வாதங்கள் உருவாகத் துவங்கும். பெரும்பாலான சமயங்களில் அவை நீண்ட விவாதமாக மாறும்  சில சமயங்கள் அந்த வாதங்கள்  பெரிதாக சோபிக்காமலும் போகும்,  மோகன்மீது அன்பும் மரியாதையும் மிகுந்த மருதா பால்குரு , சந்தியா நடராஜன் போன்ற பதிப்பாளர்களின் ஆதரவு  கள்ளழகர் போன்ற எழுத்தாளர் கம் அதிகாரிகளின் கருணையும்  தக்க சமயத்தில் நிகழ்ச்சியை தடங்கலில்லாமல் நீட்டிக்க பெரிதும் உதவியிருக்கின்றன.
.
          அனைவரும் கூடவும் பைத்தியம் போல உளறவும் அரசியல் பொருளாதார நெருக்கடிகளிலிருந்து தப்பித்து பெரும் களிப்புடனான இரவுகளை அனுபவிக்கவும் இது போன்ற சபைகள் அப்போது  பெரிதும் உதவின .  . கிட்டத்தட்ட நானே 25க்குமேற்பட்ட இந்த கூட்டங்களில் கலந்திருக்கிறேன். தீவிரமான இலக்கியம் சார்ந்த கருத்து மோதல்களின் போது பலரும் உணர்ச்சி வசப்பட்டு கத்துவார்கள் ஆனாலும் சிறு கைகலப்பு கூட அவரது இந்த இலக்கிய நிகழ்வுகளில் நடந்தேறியதில்லை.. இலக்கிய உலகில் ஜெயகாந்தனின் சபைகளை விடவும் கூடுதலான மதிப்பீடு வாய்ந்த சபைகள் இவை. ஒற்றை குரல் அதிகாரமோ ..அல்லது தனி மனித வழிபாடுகளோ இங்கு அறவே இல்லை      சி மோகன் யார் என்றே தெரியாதவர் கூட இந்த சபைகளில் இடம் இருக்கும். ஆனால் சிறுபத்திரிக்கை சார்ந்த செயல்பாடுகளை ஏற்றுக்கொண்டவராக அவர் நிச்சயம் இருக்கவேண்டும் என்பது மட்டுமே அதில் விதி .

         ஒவ்வொரு கூடுகையின் இறுதி நிமிடங்களின்போது இனி எவனையும் நான் இங்க சேக்கமாட்டேன் என அவர் கோபப்படுவதை பலமுறை பார்த்திருக்கிறேன் . ஆனால் மறுநாள் காலையிலேயே அது காணாமல் போகும் . இத்தனைக்கும் அனைவருக்கும் பஸ்சுக்கு காசில்லாமல் நிற்கும் போது அவர் தன் கடைசி கையிருப்பையும் கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி வைப்பார். இதை படிப்பவர்களுக்கும் வெளியில் இருந்து இதை பார்ப்பவர்களுக்கும் இது போன்ற நிகழ்வுகள் இலக்கிய மதிப்பீடற்ற காரியமாக  தோன்றலாம் . ஆனால் உண்மையில் இந்த கூடுகைகள்  சிறுபத்திரிக்கை வரலாற்றின் மகத்தான மணித்துளிகள் என்றே சொல்வேன். எழுதுவது .. பேசுவது .. இதழ்களை நடத்துவது போல இந்த கூடுகைகளுக்கும் அங்கீகரிக்கப்படாத இலக்கிய தகுதிகள் உண்டு . இங்கே நிகழும் உரையாடலின் தாக்கங்கள் படைப்புகள் குறித்த புரிதல்கள் அனைவரது சிந்தனை மற்றும் கற்பனை தளங்களில் மாற்றங்களை நிகழ்த்திக்கொண்டிருந்தன.  

             பின் நவீனத்துவம் தமிழ்சூழலின் . சுனாமி போல பெரும் விபத்து இந்த விபத்தினால் தமிழ்ச்சூழலில் தலித்தியம் பெண்ணியம் போன்ற கோட்பாட்டு சிந்தனைகள் அதிகம் தோன்றி அவை தமிழர்களின் பொதுப்புத்தியை சமூக நீரோட்டத்தை பாதித்து என்பதென்னவோ உண்மை. முந்தைய பத்திகளில் சொன்ன இலக்கிய பரவலாக்கம் கூட பின் நவீனத்துவ சுனாமிதான் காரணமாக இருக்கலாம் . ஆனால் சிறுபத்திரிக்கை சூழல் அதன்பின் பெரும் சிதைவுக்கு ஆட்பட்டது . நவீனத்துவத்தின் போது பிரவாகமெடுத்த அதன் மரபார்ந்த சரடு பின் நவீனத்துவ காலத்தின் போது ஒரு உச்சத்திற்கு போய் முற்றாக சிதைவுற துவங்கியது. கூட்டணிகள் விலகியபோது கூடாரங்களும் காலியாகின
ஏற்கனவே எதார்த்தம் செத்துவிட்டது போன்ற அறிக்கைகளின் மூலமாக பேரதிர்ச்சியை சந்தித்து சிதைவுக்குள்ளான நவீனத்துவ படைப்பாளிகளும் உறைநிலைக்குள் சென்றனர்.

           இந்த சுனாமிக்கு பிறகான தமிழ் சூழலின் மரபான சிறுபத்திரிக்கை சார்ந்த சரடை  ஒருங்கிணைக்க அதன் சாரத்தை முழுமையாக உள் வாங்கிய நபர் ஒருவர் தேவையாக இருந்தார். சி மோகன் அக்காரியத்தை தமிழ்ச்சூழலுக்கு செவ்வனே செய்தார் என்று சொல்லலாம். தொடர்ந்து  தீவிரமான இலக்கிய மரபை ஒழுங்கின்மை மூலமாக ஒழுங்கு செய்தது அவருடைய மகத்தான சாதனை . அதற்கான தத்துவ பின்புலம் சிந்தனை பின்புலம் அவரிடம் செறிவாகவே உட்பொதிந்திருந்தது.  அனார்கிஸ்டுகளுகே உண்டான அமைப்பின் மீதான அவரது  அவநம்பிக்கையும் அவலச்சுவையும்  எங்களது அபத்தங்களை அங்கீகரித்தது. அதுவே  சிறுபத்திரிக்கை சார்ந்த பெரும் நம்பிக்கையூட்டலுக்கான காரியங்களாக நிகழ்த்த துவங்கியது.

           பதிப்புத்துறையில் மோகனுக்கிருந்த ஆர்வமும் ஈடுபாடும்  பல நல்ல புத்தகங்கள் உருவாக்க காரணமாக இருந்தது. சுந்தர் ராமசாமி ஜே ஜே சில குறிப்புகளை எழுதி முடித்துவிட்டு  அதன் ஒரு பிரதியை சென்னை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு அச்சுக்கு அனுப்பி வைக்க இன்னொரு பிரதியை மதுரையிலிருந்த சி மோகனுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மோகன் அதை படித்து அதில் சில காலக்குழப்பங்கள் மற்றும் பதிப்பு சார்ந்த சில கோளாறுகள் இருப்பதை கண்டு சுந்தர ராமாசாமிக்கு கூற சு ரா உடனே க்ரியா ராமகிருஷ்ணனனுக்கு ஸ்டாப் பிரிண்டிங் என தந்தி கொடுத்து நிறுத்தி வைக்குமளவுக்கு சி மோகனுடைய ரசனைக்கு உயர்ந்த மதிப்பீடு அளித்துள்ளார். அதன் பின் மோகன் நாகர்கோவிலுக்கு சென்று சு ரா வுடன் சேர்ந்து  சில திருத்தங்கள் செய்து  அதன்பின் அச்சுக்கு அனுப்பியது வரலாறு

          கா. நா. சுவுக்குபின் நவீன இலக்கியத்தின் மீதான பாண்டித்யம் கொண்ட ஆளுமையாக இருந்தாலும் அவர் அத்துறையில் தீவிரமாக பங்களிக்கவில்லை
           ஒவ்வொரு புதிய நாவல்கள் அல்லது படைப்புகள் உருவாகும் போது மோகன் இதை எப்படி கருதுகிறார் அவருடைய பார்வை என்ன என்பதை அறிய தீவிரமாக சிறுபத்திரிக்கையில் இயங்கும் இளைஞர்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது

           ஆனால் மோகன் பல சமயங்களில் அந்த எதிர்பார்ப்புகளுக்கு தலை அசைத்ததில்லை .  பல முறை இது குறித்து அவரை நான் குற்றச்சாட்டாக சபைகளில் விவாதித்திருக்கிறேன். அவர் வாழ்வில் அவர் கடந்து வந்த இலக்கிய அரசியல்கள் அவருக்கு உண்டாக்கிய மன உளைச்சல்களே அதற்கு காரணம் . இது பற்றி அவர் வெளிப்படையாக சில உரையாடல்களின் போது பகிர்ந்திருக்கிறார்.

             அவரது கட்டுரைகளில்  நடை வழிக்குறிப்புகள் உச்சம் என்றே சொல்வேன் . சம்பத், ஜி நாகராஜன்,ப சிங்காரம் போன்ற ஆளுமைகளை அவர் மீட்டுருவாக்கம் செய்தது அவர் இக்காலத்தில் செய்த குறிப்பிடத்தக்க காரியங்களில் ஒன்று

           அவர் ஒட்டுமொத்த இலக்கிய பணிக்குமான காரியங்களில் ஒன்றாக ஒன்றை சொல்ல வேண்டுமென்றால் புயலிலே ஒரு தோணி , கடலுக்கு அப்பால் போன்ற மகத்தான நாவல்களை படைத்த ப சிங்காரத்தை அவர் தமிழ் சூழலுக்கு அடையாளம் காட்டியதைச் சொல்வேன்.

              இக்காலங்களில் நான் நண்பர்களுடன் தீவிரமாக இயங்கி சமூக இலக்கிய விவாசாயங்களில் ஈடுபட்டேன்  சிலம்பு 2002 என்ற மூன்று நாள் தமிழின் முதல் குறும்பட ஆவணப்பட விழாவை  நண்பர்கள் அருண்மொழி செல்லையா ,டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் , தன சேகர் , பனுவல் சிவ. செந்தில்நாதன் அகியோர் உதவியுடன் நடத்தினேன். சங்கம் என்ற பெயரில் தொடர்ந்து ஏழெட்டு சிறு அரங்கு இலக்கிய விவாதங்களை குட்டி ரேவதி ஷங்கர் ராம சுப்ரமணியன் தளவாய் சுந்தரம், ராஜ கோபால் ஆகியோருடன் இணைந்து ஒருங்கிணைத்தேன் சம்பத் , கோபிகிருஷ்ணன், ஆ மாதவன் , வண்ண நிலவன் ஆகியோருக்கும் அப்போது புதிதாக எழுத துவங்கிய பெண் கவிஞர்களுக்குமாக அக்கூட்டங்கள் நடைபெற்றன,  இக்காலங்களில் இக்கூட்டங்களை நடத்த வெளி ரங்கராஜன் பெரிதும் உதவியாக இருந்தார். மோகனை போலவே ரங்கராஜனும் எங்களது சிறுமைகளுக்கு இலக்கிய அங்கீகாரத்தை தந்து தொடர்ந்து இயங்க உற்சாகம் அளித்து வந்தார்.

        சம்பத்துக்கு நடந்த முதல் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் கட்டுரையும் வாசித்தார். இதர கூட்டங்களில் அவர் கலந்துகொள்ளாவிட்டாலும் இது போன்ற காரியங்களை நிகழ்த்துவற்கு தேவையான ஆன்ம பலம் அல்லது  மையமான நம்பிக்கையூட்டும் சக்தியாக இருந்திருக்கிறார் என்பதை இப்போது உணர்கிறேன்.

          இந்த நாட்களின் உச்ச நிகழ்வாக என்னுடைய சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு ஒன்றும் மையிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையத்தில் 2002ம் ஆண்டின் இறுதி வாக்கில் நடந்தேறியது.. அன்று பதிப்பக நிறுவங்களின் அபத்தங்களை முன்னிட்டு எதையாவது செய்யலாம் என நினைத்த போது மூன்றே மூன்று சிறுகதைகளை மட்டும் கொண்ட அந்த சிறுநூல் ஒன்றை வெளியிட நண்பர் செல்லையா முன் வந்தார். அவரது குலுக்கை பதிப்பகம் மூலமாக அது அச்சாகியது.
          அதன் வெளியீட்டு விழாவை வித்தியாசமாக வெளியிட முடிவுசெய்த போது கோணங்கி ஒரு முறை போடி நாயக்கனூர் ரயிலில் வெளியிட்ட கதையை கேள்விப்பட்டு அதே போல நிகழ்வாக மாற்ற உத்தேசித்தோம் அப்போதுதான் நகருக்கு அறிமுகமாயிருந்த  பறக்கும் ரயிலில் வெளியிட முடிவும் செய்தோம்.
           மயிலாப்பூர் பறக்கும்  ரயிலில்,,, ரயில் ஓடும்போது  ஜன்னல் வழியாக வீசி எறிந்து இயற்கைக்கு சமர்ப்பித்துதான் எங்கள் திட்டம். மொழிக்கும் இயற்கைக்குமான உறவை கொண்டாடுவதுதான் இந்நிகழ்வின் பின்னாலிருந்த தாத்பர்யம்  சி மோகன் வெளியிட யூமாவாசுகி அதை வாங்கி ஜன்னல் வழியாக வீசி எறிய முடிவு செய்தோம்.  சிறுகதை எழுத்தாளர்கள் ஜி முருகன் , ஜான் பாபுராஜ் ஆகியோரும் இதில் பேச்சாளர்களாக  அழைக்கப்பட்டிருந்தனர்.
அன்று எதிர்பார்த்தது போல ஒரு அக்காலத்தில் எங்களோடு எப்போதும் பயணிக்கும் நண்பர்கள் இருபது பேர் ஒன்று சேர்ந்தனர்.
           
சிமோகன் வழக்கமாக கடைபிடிக்கும்  ஒழுங்கின்மைகளில் கூட்டங்களுக்கு பங்கேற்பதை அவர் தன்போக்கில் முடிவெடுப்பதும் ஒன்று.அது போலவே அன்றும் வராமல் போய்விடுவாரோ என பயந்தேன், நல்ல வேளையாக ராஜ கோபால் ஷங்கர் ராம் சுப்ரமணியனுடன் காலையில் முதல் ஆளாக ஆட்டோவில் வந்து இறங்கினார் .அனைவருக்கும் ரோஜாப்பூ கொடுத்து வரவேற்றோம்.. இப்படியான ஒரு நிகழ்வை ஒருங்கிணைக்க சி மோகன் வாழ்வின் நெருக்கடிகளிலிருந்து படைப்பாளி தப்பிக்க வேண்டிய சூழலையும் அபத்தங்களின் வழியாக இலக்கியத்தை உயிர்ப்பிக்க வேண்டிய நிர்பந்தங்களையும் பற்றி ஏதோ ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார். அந்த வாசகங்களை மட்டும் பிரதியெடுத்து  வந்தவர்களுக்கு விநியோகித்தோம்
      
            முறையாக டிக்கட் எடுத்துக்கொண்டு படியேறி பிளாட்பாரத்திற்கு சென்று வட்டமாக அமர்ந்து  வழக்கம் போல பழைய பாடல்களை பாடி நிகழ்ச்சியை துவக்கினோம் .நல்லவேளையாக அப்போதெல்லாம் பறக்கும் ரயில்களில் பயணிகள் சொற்பம் .. அதிகாரிகளும் யாரும் வரவில்லை.. அரைமணிநேரம் பாட்டு பாடி கழிந்தபின் பறக்கும்ரயில் வந்தது அனைவரும் ஏறிக்கொண்டோம் உற்சாகம் பரபரவென பற்றிக்கொண்டது.
        ( கவிஞர் யூமா வாசூகி)
         திட்டமிட்டது போல சி மோகன் துவக்க உரை நிகழ்த்தி புத்தகத்தை கொடுக்க ஓடும் ரயிலின் ஜன்னல் வழியாக யூமா வாசுகி இயற்கைக்கு சமர்ப்பித்தார். ஆனால் அது விழுந்த இடம் கூவம் ஆகிப்போனது நாங்களே அறியாத விபத்து .
       அதன் பின் அழைப்பிதழில் குறிபிட்டது போல பாரிஸ் கார்னரில் இருந்த மதுவிடுதிக்குள் கூடினோம். கூட்டம் தொடர்ந்து அங்கும் நடைபெற்றது முன்கூட்டி அறிவித்ததுபோல  மொத்த செலவையும் அய்யப்ப மாதவன் ஏற்றுக்கொண்டான் . யவனிகா ஸ்ரீராம் அப்போது வாசித்த அபாரமான கவிதை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு யாரோ 100 ரூபாய் பரிசாய் வழங்கினார்கள் ,பெரும் மகிழ்வும் கொண்டாட்டமுமான அந்த நிகழ்வை தொடர்ந்து அனைவரும் கடற்கரைக்கு சென்று கடலில் குளித்தபடி அன்றைய நாள் முழுக்க களிப்பில் திளைத்து கிடந்தோம்.

           அன்று  முழுக்க எங்களுடன் பயணித்த நண்பராகவும் பத்திரிக்கையாளராகவும்  தளவாய் சுந்தரம் குமுதம் இதழில் அப்போது தீராநதியில் பணியாற்றி வந்தார். அவர் இதை தீராநதி செய்தியாக கொண்டு செல்ல அவர்களோ குமுதத்தில் கூவத்தில் வீசியெறியப்பட்ட புத்தகம் மதுக்கடையில் நடந்த இலக்கியக்கூடம் வித்தியாசமான புத்தக வெளியீட்டு விழா என செய்தியாக்கி விட்டது.

             இதை படித்துவிட்டு அந்த ஆண்டு முழுக்க அனைத்து பத்திரிக்கைகளிலும் இந்த நிகழ்வை கண்டித்தும் விமர்சித்தும் பலரும் எழுதி வந்தனர்.      இந்தியா டுடே  பல்வேறு தரப்பினரிடம் இது குறித்து எதிர்மறையான கருத்துக்களை வாங்கி வெளியிட்டது ..

             இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அனைவரும் சி மோகன் தலைமையில் இந்தியா டுடே வின் கட்டுரைக்கு கண்டனம் தெரிவித்து இனி யாரும் இந்தியா டுடே வில் எழுதப்போவதில்லை  என அறிவித்து கையெழுத்திட்டு இந்தியாடுடே டெல்லி அலுவலகத்துக்கு கடிதம் எழுதினோம் .. இந்த கடிதத்தில் எங்களை உதிரிகள் என்ற சொல் மூலமாக அடையாளப்படுத்திக்கொண்டோம்.

            இப்படியாக அந்த நிகழ்வு அனைவராலும் மறக்க முடியாத நிகழ்வாக வரலாற்றில் பதிந்தது

           இதில் எனக்கொரு மகிழ்ச்சி என்னவென்றால் இந்த விழாவின் மூலமாக என் கதைகள் குறித்து கருத்தே சொல்லாமல் பத்துவருடமாக தப்பித்து வந்த சி மோகனை பேச வைத்ததும் தான்.          தமிழ்சூழலுக்கு சி மோகன் போன்ற ஆளுமைகள் பெரும் கொடை
அரிது அரிது.

                  தன்னை இலக்கியத்துக்காக முற்றாக சிதைத்துக்கொண்ட ஆளுமை அவர். கா நாசு போல திட்டமான உழைப்போ ஸ்தூலமான பங்களிப்போ இல்லாவிட்டாலும் சி மோன் அவரது தொடர்ச்சியாக என் தலைமுறைக்கு அந்த பங்களிப்பை செய்தவர்.

          அவர் பிற்பாடு கவிதை, நாவல், மொழிபெயர்ப்பு, என துரிதமாக இயங்கி வந்தாலும்  அவரது ரசனையும் விமர்சனமும் தமிழில் மகத்தான  பங்களிப்பை செய்திருக்கின்றன.

         அவ்வகையில் இந்த விளக்கு விருது இந்த வருடம்  பெருமை மிக்க காரியத்தை செய்திருக்கிறது என்பதை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.









புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...