May 14, 2011

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்




மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்
எழுதியவர்- உமாசக்தி

ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.


நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.


'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்கச் செய்து நம்மைப் பித்தாக்கிவிடுவார். அஜயன் பாலா இவை எல்லாவற்றின் கலவையாக இக்கதையின் வாயிலாக நம் கண்முன் நிற்கிறார்.


அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.


'மருதா' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசிரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்களகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.


'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது.

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...