October 6, 2009

வீழ்வதும்.. எழுவதும் குறித்த பாடல்

இன்னமும் அவர்களுடன் நான்
தோற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்
தோற்பதின் கலையை அழகாக கற்றவன்
போரின் எதிர்பாரா திருப்பமாக
வாளை உருவி கீழே எறிந்துவிடுவதன்
முழு லாவகத்தையும் கற்றவன் என்ற
பெருமையும் கூட உண்டு
எனது தோல்வியின் பாடலில்
ஊறித்திளைக்கும் இலக்கியத்தை
அறிந்தவன் என்ற கர்வமும் எனக்குண்டு
ரத்தம் உடலின் வழி வழிகிறபோது
உன்னதங்களின் தோல்வியை கண்டு கூச்சலிடுகிறேன்
அவை சடாரென கீழே சரியும் பற்வை உடலில் குத்திய
அம்பின் எழிலார்ந்த வடிவத்தை ரசித்தபடி...
பொத்தென தரை மோதுவதை போல..
பெரும் தோல்விகள் துயரக்காடாய்
சூழ்கிறபோது எண்ணிக்கொள்கிறேன்
அநத பறவைகளின் கடைசிகணங்களை
நான் ஒரு போதும் தோற்பதில்லை
கீழே விழுந்து எழும்
பிறந்த கன்றுகுட்டி போல
கண்தெரியாத பரவசம் என்னை
மயக்கத்தில் தள்ளுகிறது
தொடர்ந்து என்னை தயார்படுத்தியபடி விழுந்துகொண்டிருக்கிறேன்
கவிஞனுக்கு ஒருபோதும் மரணங்களில்லை
அவன் உயிர்த்துக்கொண்டிருக்கிறான் ஒவ்வொருமரணத்திலும்
பேரழிவின் இதிகாசங்களை கற்பனைகெட்டாத வார்த்தைகளில்
செதுக்குவதற்காக இந்த பூமியில்
அவன் விழுந்து தொலைக்கவேண்டியதாக இருக்கிறது
இன்னமும் பலமுறை

அஜயன்பாலா சித்தார்த்

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...