
தோற்றுக்கொண்டேதான் இருக்கிறேன்
தோற்பதின் கலையை அழகாக கற்றவன்
போரின் எதிர்பாரா திருப்பமாக
வாளை உருவி கீழே எறிந்துவிடுவதன்
முழு லாவகத்தையும் கற்றவன் என்ற
பெருமையும் கூட உண்டு
எனது தோல்வியின் பாடலில்
ஊறித்திளைக்கும் இலக்கியத்தை
அறிந்தவன் என்ற கர்வமும் எனக்குண்டு
ரத்தம் உடலின் வழி வழிகிறபோது
உன்னதங்களின் தோல்வியை கண்டு கூச்சலிடுகிறேன்
அவை சடாரென கீழே சரியும் பற்வை உடலில் குத்திய
அம்பின் எழிலார்ந்த வடிவத்தை ரசித்தபடி...
பொத்தென தரை மோதுவதை போல..
பெரும் தோல்விகள் துயரக்காடாய்
சூழ்கிறபோது எண்ணிக்கொள்கிறேன்
அநத பறவைகளின் கடைசிகணங்களை
நான் ஒரு போதும் தோற்பதில்லை
கீழே விழுந்து எழும்
பிறந்த கன்றுகுட்டி போல
கண்தெரியாத பரவசம் என்னை
மயக்கத்தில் தள்ளுகிறது
தொடர்ந்து என்னை தயார்படுத்தியபடி விழுந்துகொண்டிருக்கிறேன்
கவிஞனுக்கு ஒருபோதும் மரணங்களில்லை
அவன் உயிர்த்துக்கொண்டிருக்கிறான் ஒவ்வொருமரணத்திலும்
பேரழிவின் இதிகாசங்களை கற்பனைகெட்டாத வார்த்தைகளில்
செதுக்குவதற்காக இந்த பூமியில்
அவன் விழுந்து தொலைக்கவேண்டியதாக இருக்கிறது
இன்னமும் பலமுறை
அஜயன்பாலா சித்தார்த்
5 comments:
ஒவ்வொரு வரியும் செதுக்கி வைக்கப்பட்டது போல் இருக்கிறது. அதற்கு பின்னால் உங்களின் எண்ண உழைப்பு தெரிகிறது.
//கவிஞனுக்கு ஒருபோதும் மரணங்களில்லை
.........
இன்னமும் பலமுறை//
நம்மை நாமே தேற்றி கொள்ளவும் மட்டுமில்லாமல்
பெரும் உற்சாகத்தையும் தரும் வரிகள். அருமை
வணக்கம் அஜயன் பாலா,
தோல்விகளைக்கூட
கலை நயப் ப்படுத்திப்
பார்க்கும் பக்குவம்
உங்களுக்குள்
ஏற்பட்டிருக்கிறது.
இது ஒரு வெற்றிதான்.
அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்
எண்ண உழைப்பு மிக நல்ல வார்த்தையை பிரயோகித்து கவிதையையும் என்னையும் கவுரப்படுத்திய கண்ணனுக்கு நன்றி
நன்றி ஜெயமோகன் ..ஒருசந்தேகம் ஜெயமோகன் தக்கலை ஜெயமோகனா ?
மன்னிக்கவும் !
நான் "அவர்" இல்லை.
நான் மிகவும் சாதாரணவன்.
EMU LINES LTD - Shipping Company
நிறுவனத்தில் பணி புரிகிறேன்.
சென்னை ராயபுரத்தில் வசிக்கிறேன்.
எழுத்தில் அதிகம் ஆர்வம் உடையவன்.
நன்றி.
அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்
Post a Comment