இதயங்களை ஊடறுத்து செல்லும் காட்சி ரயில் :
உலக சினிமா வரலாறு
மறுமலர்ச்சி யுகம் 16
நியோரியலிசங்களின் ஊற்றுக்கண்ணாகவும், முதன் முதலாக திரையில் மவுனத்தின் ஆழத்தில் கேமராவை பயணிக்க செய்தவரும் ஐரொப்பிய சினிமாவுக்கான அடையாளத்தை முதலில் நிறுவியவருமான ழான் ரெனுவார் தனது ரிவர் படத்தை எடுக்கும் திட்டத்தோடு 1948ல் இந்தியாவில் கல்கத்தா வந்து இறங்கினார். அப்போது தனக்கு ஆதரவாக சினிமாவின் காதலர்கள் அங்கே உலவிக்கொண்டிருப்பார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை. கல்கத்தாவில் திரைப்படச்சங்கத்தை நிறுவி வழிநடத்தி வந்த இளைஞர்கள் சிலர் ரெனுவாரை சந்தித்து ஆச்சர்யபடுத்தினர். இளைஞர்களுக்கோ திரைப்பட் சங்கம் மூலமாக கண்டுரசித்த ஒருபடத்தின் இயக்குனரை நேரில் சந்தித்த மகிழ்ச்சி, ரெனுவாருக்கோ தன் படப்பிடிப்புக்கான இடத்தேர்வுக்கு இனி கவலைப்ப்டவேண்டியதில்லை என்ற மகிழ்ச்சி. வந்தவர்களில் சற்று உயரமாக மூக்கு நீளமாக இருந்த அதிகம் பேசாத ஒரு இளைஞனின் ஆர்வம் ரெனுவாரை வசீகரித்திருக்கும் போல . படப்பிடிப்புகளுக்கு தவறாமல் ஆஜாரான அந்த இளைஞன் தனக்கும் இயக்குனராகும் ஆசை இருப்பதாக கூறி தான் அப்போது அட்டைப்படம் வடிவமைத்துக்கொண்டிருந்த ஒரு நாவலின் கதையை கூறினான்.
அந்த இளைஞன் கூறிய கதையை கேட்டு ரெனுவார் அப்போதைக்கு அந்த இளைஞனை தட்டி கொடுத்து உற்சாகபடுத்தினாலும் அவரே கூட அந்த கதை ஐந்தாறுவருடங்களுக்கு பிறகு உலகமே வியக்கும் அழியாக காவியமாக பதேர் பாஞ்சாலி எனும் பெயரில் படமாக வெளியாகி கேன்ஸ் திரைப்ப்டவிழாவில் பலரையும் வியக்கவைக்க போகிறது என்பதை எதிர்பார்த்திருந்திருக்க மாட்டார்.
. இக்காலக்ட்டத்தில் உலகின் முக்கிய நாடுகள் அனைத்துமே சினிமா எனும் புதிய மொழிக்கு தங்களாலான அணிகலனை புதுபுது இயக்குனர்கள் மூலம் அழகு பூட்டிக்கொண்டிருந்த சமயத்தில் இந்தியசினிமா மட்டும் ராஜாக்களையும் அவர்களது பிரம்மாண்ட செட்டுகளையும் விட்டு வெளியே வரவில்லை..இல்லாவிட்டால் மேடைநாடகத்தை ஒத்த நீளமான வசனம் மிகுந்த சமூகப்படங்களாகவே இருந்தன. இச்சூழலில். பிமல்ராய்,ரித்விக்கட்டக்,சேத்தன் ஆனந்த் போன்ற சில இயக்குனர்கள் மட்டும் சற்று வித்தியாசமான படங்களை எடுத்துவந்தாலும் அவர்களும் கூட இந்தியாவை விட்டு வெளியில் தாண்ட முடியாத சூழ்நிலை.இந்த நேரத்தில் 1950 ல் கல்கத்தவில் ரே அப்போது பணிசெய்துகொண்டிருந்த விளம்பர நிறுவனத்தின் உரிமையாளரான டி.ஜே கெய்மர் அவரை தொழில் நிமித்தமாக லண்டனுக்கு அனுப்பி வைத்தார். கிட்டதட்ட ஆறு மாதங்கள் அங்கு தங்கியிருந்த சத்யஜித்ரே லண்டனைவிட்டு புறப்படும்போது முழுக்க வேறு ஆளாக மாறியிருந்தார்.மனம் மிகுந்தபதட்டத்தில் இருந்தது அதற்கு காரணம் கிடைத்த குறைந்த அவகாசத்தில் அங்கு அவர் பார்க்க நேர்ந்த 90 திரைப்படங்கள். அதில் சிலகுறிப்பிட்ட படங்கள் அவரது உலகைமுற்றிலுமாக மாற்றின.அப்படி அவருக்குள் பாதித்த படங்கள் எவை தெரியுமா இத்தாலியின் நியோ ரியலிஸ அலையில் உருவான திரைப்படங்கள் அதிலும் குறிப்பாக ஒரு திரைப்படம்.விட்டோரியா டிசிகா வின் பை சைக்கிள் தீஃப் தான் அந்த அந்தபடம். படத்தின் அச்சு அசலான எதார்த்த்தை கடந்து படத்தில் சித்தரிக்கப்பட்ட சிறுவன் ரிசியின் அக உலகம் ரே வை வெகுவாக கவர்ந்திருந்தது.இப்போது ரிசி இருந்த இடத்தில் தான் எடுக்கவிருந்த நாவலின்கதையில் வரும் அபு இருந்தான் .
.சிறுவயது முதலே ரேவுக்கு குழந்தைகளின் உலகத்தோடு ஒருவித தீவிர ஈடுபாடு இருந்துகொண்டே இருந்தது..உண்மையில் வாழ்க்கை பெரியவர்களுக்கானது மட்டுமல்ல அங்கு குழந்தைகளும் சிறுவர்களும் வயதான பாட்டிகளும் இருக்கிறார்கள்.அவர்களின் உலகங்கள் பொதுபுத்தியில் இயங்கும் பெரியவர்களின் (இளைஞர்கள் மற்றும் நடுத்தரவயதுடையோரின்)
உலகங்களிலிருந்து வேறானவை.இதை உணர்ந்ததாலோ என்னவோ ரேவின் கேமராபார்வை எப்போதும் சிறுவர்களை குறிவைத்தே சுழன்று வந்தது, ஆனால் அன்றைய திரைப்படங்கள் உலகம் முழுக்கவும் அவரது பார்வைக்கு தலைகீழாகத்தான் சுழன்றன. இதனால்தான் முதல் முறையாக குழந்தைகளின் உலகத்தை ஓரளவுக்காவது அங்கீகரித்த பைசைக்கிள் தீஃப் அவரை மிகவும் தொந்தரவு செய்திருந்தது,லண்டனிலிருந்து கப்பலில் இந்தியாவுக்கு புறப்படும்போது இத்தகைய மனஅவசத்துடன் புறப்பட்டவர் கல்கத்தா வந்து இறங்குவதற்குள் முழு திரைக்கதைய்யையும் எழுதி முடித்திருந்தார்.படம் எடுக்க பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார் இறுதியில் வேறு வழியேஇல்லாமல் அவரது மனைவியின் நகைகள் அவரது கழுத்தைவிட்டு இறங்கி அடகு கடைக்குள் ஓட அடுத்த நாள் காமிரா சுழலத்துவங்கியது. ரே தானே இப்படத்தை தயாரிக்க துவங்கினார். ஒளிப்பதிவாளராக சுப்ரதோ மித்ரா வை நியமித்தார் ரேவை போலவே சுப்ரதோ மித்ராவுக்கும் முன்பின் எந்த திரைப்பட அனுபவமும் கிடையாது. இன்னும் சொல்லப்போனால் அதற்கு முன்வரை சினிமா கேமராவை தொட்டது கூட கிடையாது. ரெனுவாரின் ரிவர் படப்பிடிப்பின் போது வேடிக்கை பார்க்க அனுமதிக்கப்பட்ட ரேவை போலத்தான் மித்ராவும் புகைப்படங்கள் எடுத்துக்கொள்ள மட்டும் அனுமதிக்க பட்டார். அப்போது இருவருக்குள்ளும் அறிமுகம் ஏற்பட கைக்குலுக்கிக்கொண்டு நண்பர்கள் ஆயினர் இருவரும். மித்ராவின் புகைப்படங்களை பார்த்த ரே தான் படம் எடுக்கும் போது நிச்சயம் உதவி கேமராமேனா சேர்த்துக்கொள்கிறேன் என்றுதான் சொல்லியிருந்தார். ஆனால் படம் துவங்கும்போது ரே சொன்ன தொகை கட்டுபடியாகாத காரணத்தால் பலரும் வர மறுக்க இறுதியில் வாய்ப்பு 21 வயதே ஆன சுப்ரதோமித்ரா ஒளிப்பதிவாளராகவே நியமிக்கப்பட்டார். அதே போல கலை இயக்குனரையும் ரிவர் படத்தில் பணி புரிந்த பன்சிதாஸ் குப்தாவை ஒப்பந்தம் செய்துகொண்டார். படத்தில் முற்றிலும் புதுமுகங்களை மட்டுமே நடிக்க வைப்பது என முடிவு செய்த ரேவுக்கு அபுவின் தந்தை பாத்திரத்துக்கு மட்டும் தவிர்க்க முடியாமல் வங்காள படங்களில் ஏற்கனவே நடித்து அனுபவம் பெற்ற நடிகரான கானு பாணர்ஜிய்யை ஓப்பந்தம் செய்ய வேண்டியதாகிப்போனது. அவரது மனைவி சரபோஜியாவாக நடிக்க ரேவின் மனைவி தன்னுடைய தோழி ஒருவரை கொண்டுவந்து அறிமுகப்படுத்தினார்.அவருக்கு முன்பே நாடகத்தில் நடித்த அனுபவம் இருக்கவே அவரை தேர்வு செய்து கொண்டார்.சிறுமி துர்காவாக நடிக்க நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. உமா தாஸ் குப்தா எனும் சிறுமி தேர்ந்தெடுக்கப்பட்டாள். ஆனால் அபு பாத்திரத்திற்கு மட்டும் சரியான சிறுவன் கிடைக்காதபோது அப்போதும் ரேவின் மனைவி வீட்டின் அருகில் இருந்த சிறுவன் ஒருவனை கொண்டு வந்தார்.
இறுதியில் பாட்டி இந்திர் பாத்திரத்துக்குத்தான் ஆளே கிடைக்கவில்லை. பின் ஒரு விப்ச்சார விடுதி ஒன்றில் அவர் எதிர்பார்ப்புக்குய் ஏற்றார் போல ஒரு வயது முதிர்ந்த கூன் விழுந்த பெண் இருப்பதை கேள்விப்பட்டு அவரை சென்று பார்த்த ரேவுக்கு அவரை பிடித்து போக அதன் பிறகுதான் படப்பிடிப்பு தளத்துக்கே ரே புறப்பட்டார்.
27 அக்டோபர் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பல பொருளாதார தடைகளால் அடிக்கடி நின்று போனது வருடங்கள் ஓடின. மீதிபடப்பிடிப்புக்கு தேவையான போதியபணம் கிடைக்காத சூழலில் ரே கைய்யை பிசைந்து கொண்டு நின்றபோது அவரது தாயார் ஒரு ஆலோசனை தந்தார். அதன்படி அப்போதைய வங்காள முதல்வர் பி.சி.ராய்க்கு தாயரின் வேண்டுதலுக்கிணங்க போட்டுகாண்பித்தார்.படத்தை பார்த்த முதல்வர் அதன் கவித்துவமான அழகியல்வசம் ஈர்க்கப்பட்டு மீதபடத்தை வங்காள அரசாங்கத்தின் போக்குவரத்து அமைச்சகத்தின் மூலம் எடுக்க முடிவு செய்து அதற்குண்டான பொருளுதவிக்கு ஒத்துழைத்தார்.இறுதியில் 1952ல் துவங்கிய படப்பிடிப்பு பின் மீண்டும் இரண்டுவருடங்களுக்கு பின் தொடரப்பட்டு முழுமையாக முடிந்தது. இது குறித்து ஒரு முறை பேட்டி ஒன்றில் பேசிய ரே உண்மையில் இடைப்பட்ட காலங்களில் மூன்று அதிசயங்கள் நிகழ்ந்தன. ஒன்று அபு வளரவில்லை, இரண்டு துர்காவும் வளரவில்லை, மூன்று இந்திர்பாட்டி இறக்கவில்லை.இந்த மூன்றில் ஒன்றுநடந்திருந்தாலும் இன்று பதேர் பாஞ்சாலிக்கு கிடைத்திருக்கும் பெயரும் புகழும் கிட்டியிருக்குமா என்பது சந்தேகமே. நல்ல கலை என்பது திறமையுடன் சேர்ந்து சில அசந்தர்ப்பங்களாலும் ஆனதுதானோ என பதேர் பாஞ்சாலிகுறித்து ரே சொன்ன மேற்சொன்ன கூற்று நம்மை யோசிக்க வைக்கிறது.
படத்தின்கதை அபு எனும் சிறுவனின் பால்ய காலத்தை அவனது வாழ்நிலத்தை,சூழலை,அவனோடு வளர்ந்த புல் பூச்சி மரம் செடி கொடிகளை,அவனால் உட்கிரக்கிக்க முடியாத குடும்ப அவலத்தை வறுமையை விவரிக்க கூடியதாக இருந்தது. அபுவின் தந்தை ஹரிஹர ரெ காலம் காலமாக நிஷிந்பூர் கிராமத்தில் மத சடங்குகளை நிகழ்த்தி பிழைப்பு நடத்துபவர். வருமானம் மிக குறைவு ஆனாலும் அதைபற்றி கவலைப்படாமல் எப்போதும் பாட்டு கவிதைகள் என எழுதி என்றாவது ஒருநாள் அதன் மூலம் பெரிய பணம் ஈட்டிவிடமுடியும் என கனவு காண்பவர். இதனாலேயே குடும்பம் போதியவருமானம் இல்லாமல் கடன் வறுமை ஆகியவற்றில் சிக்கி தத்தளிக்க துவங்குக்கிறது. கணவன் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்கிறாரே என மனைவி சரபோஜாயா விசனப்படுகிறாள் காரணம் அவர்களது மூத்தமகள் துர்கா. பத்துவயது நிரம்பியசிறுமிதான் என்றாலும் பெண் அல்லவா. துர்காவின் தம்பிதான் அபு .இருவருக்கும் நெருக்கமான இன்னொருவர் வயதான கண்தெரியாத இந்திர் எனும் பாட்டி . இந்திர்பாட்டிக்கு கூன் முதுகு பொக்கைவாய். பாட்டியின் மேல் ப்ரியம் கொண்ட துர்கா அடிக்கடி அடுத்தவீட்டுக்காரர்களின் மரங்களிலிருந்து கொய்யாபழங்களை திருடிக்கொண்டுவந்து தருவாள். இதனால் அந்த வீட்டு உரிமையாளர்கள் துர்காவை அடக்கி ஒடுக்கும்படி சர்பாஞ்சாவிடம் அடிக்கடி சண்டைக்கு வருவது வழக்கம்.ஒருமுறை மணி மாலை ஒன்றை துர்கா திருடிவிட்டதாக புகார் வருகிறது .ஆனால் துர்கா அதை அப்போதைக்கு மறுத்துவிடுகிறாள்..
எப்போதாவது சர்போஜயா கோபத்தில் திட்டும்போதெல்லாம் இந்திர்பாட்டி கூன் விழுந்த முதுகுடன் பக்கத்து வீடுகளில் சென்று தஞ்சம் புகுவாள். இதுதவிர துர்காவின் உலகம் முழுக்க தம்பி அபுவை சார்ந்தது. அது போலத்தான் அபுவுக்கும் அக்காவைத் தவிர வேறு உலகம் இல்லை. அவர்களது உலகத்தில் அந்த சிறுகிராமத்தின் வயல்வெளி ,குளம் அங்குவசிக்கும் உயிரினங்கள் மற்றும் எப்போதாவது மாலை நேரங்களில் மணி அடித்தபடி வரும் மிட்டாய்காரன் கிராமத்தின் இதர பணக்கார சிறுவர்கள் இவைகளால ஆனது. அவர்கள் இருவரும் தங்களது வயல்வெளிகளில் விளையாடும் போதெல்லாம் எப்போதாவது தொலைவில் ரயிலின் ஓசை கேட்கும் . ஒரு நாள் அக்கா தம்பி இருவரும் ரயிலின் ஓசையை கேட்டு அதனை பார்க்க வயல் மற்றும் தோப்புகளின் வழியே ஓடுகின்றனர். ஓரிடத்தில் அவர்களின் எதிரே சற்று தொலைவில் புகைவிட்டபடி ரயில் போய்க்கொண்டிருப்பதை வேடிக்கை பார்க்கின்றனர்.
வறுமை காரணமாக ஹரிஹரபாபு வெளியூருக்கு சென்று பஞ்சம் பிழைக்க புறப்படுகிறார். திரும்ப வரும் போது கைநிறைய பணத்துடன் வருவதாக மனைவியுடன் கூறுகிறார். எப்போதுமே குடும்பகவலையால் வருத்தமுற்றிருக்கும் மனைவி சரபோஜயாவுக்கு கணவனின் வார்த்தைகள் சிறிதளவு மகிழ்ச்சி யூட்டுவதாக இருக்கிறது. ஆனால் கணவன் சென்ற பின் தான் குடும்பசூழல் மேலும் வறுமைக்கு ஆளாகிறது. ஓருபக்கம் தனிமை இன்னொருபக்கம் வறுமை இதனால் சரபோஜயாவின் வாழ்க்கை மிகுந்ததுயரத்தை பாரமாக சுமக்கிறது. ஒருநாள் விளையாட போகும் துர்காவும் அபுவும் திரும்பும் வழியில் தங்களது இந்திர்பாட்டி பிணமாக வழியில் இறந்துகிடப்பதை பார்க்கின்றனர்.
இதனிடையே பருவம் மாறுகிறது. மழைக்காலம் துவங்குகிறது. துர்கா மழையில் நீண்டநேரம் நனைகிறாள். விளைவு மறுநாள் அவள் படுத்த படுக்கையாகக்கிடக்கிறாள். வறுமையில் அவதிப்படும் சரபோஜாயா தனக்கு தெரிந்த வைத்தியங்களையெல்லாம் செய்து பார்க்கிறாள். இறுதியில் காலத்தின் சதியின் முன் தோற்றுபோகிறாள். இச்சூழலில் பணம் சம்பாதிக்க வீட்டைவிட்டு வெளியூர் போன கணவன் ஹரிஹரரே மகிழ்ச்சியுடன் வீடு திரும்புகிறான். ஆவலுடன் வீட்டுக்குள் நுழைபவன் மனைவி சிலைபோல அமைதியாக இருப்பதை பார்க்கிறான் அடுத்த நொடிஅவனது காலில் விழுந்த மனைவி வீறிட்டழுவதை பார்த்தபின்தான் மகள் துர்கா தன்னை விட்டு போய்விட்டதை ஹரிஹர பாபு உணர்கிறான்.
இறுதியில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த ஊரை விட்டு வெளியேற ஹரிஹரரே முடிவு செய்கிறார். பொருட்கள் மூட்டைகட்டப்படுகின்றன. அப்போது அபு வின் கைகளில் துர்கா தான் திருடவில்லை என மறுத்த மணிமாலை கிடைக்கிறது. அதனை தானும் துர்காவும் அடிக்கடி சுற்றி விளையாடிய குளத்தில் அபு எறிகிறான். அது மூழுகுவதையே பார்க்கிறான். திரைப்படம் இத்தோடு முடிகிறது.
-அஜயன் பாலா
( அடுத்த வாரம் ரே... இந்திய சலனத்திரையின் முடிவுறாத அழகியல் )
.
8 comments:
அன்பு அஜயன் பாலா அவர்களுக்கு,
ரேயினைப் பற்றிய பதிவுகளும், பதேர் பாஞ்சாலியை சிலாகிக்காதவர்களும் சினிமா பற்றிய தேர்ந்த அறிவில்லாதவர்கள் எனலாம். அதுவும் உங்களிடம் இருந்து இதை,போன்ற பதிவை படிப்பது ஒரு முழுமையை தருகிறது.
பதேர் பாஞ்சாலி எடுப்பதற்கு விற்றதில் மனைவி பிஜோயாவின் நகைகள் மட்டுமல்லாது தனது மிகப்பிடித்த இசைத் தட்டுகளையும் விற்றார். அவருடைய அம்மாவின் மூலம் கிடைத்த சில தொடர்புகளை வைத்து பதேர் பாஞ்சாலியை எடுக்க முடிந்தது எனலாம்.
நீங்கள் சொன்னது போல் கெய்மரிடம் விஸ்வலைசராக பணியாற்றிய போது கிடைத்த வாய்ப்புகள் அவரை இந்திய சினிமாவின் நிரந்தர பிதாமகன் ஆக்கியது.
ரொம்ப சந்தோஷமாக இருந்தது இந்த பதிவை படிக்கும் போது ஏன்னு தெரியலை. ரிசி, டோடோ, அப்பு எனக்கு மறக்க முடியாத மூன்று சிறுவர்கள்.
அன்புடன்
ராகவன்
இது வரை பதேர் பாஞ்சாலி என்பதை பெயரளவில் அறிந்திருந்தேன்.ரே பட்ட சிரமங்களுடன் படத்தையும் காட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி.
நன்றி ராகவன்,நன்றி வேல்ஜி தொடர்ந்து நான் எழுதுவதற்கான ஜீவசக்தியே 8உங்களது வார்த்தைகள்தான்
அருமையான பதிவு அஜயன். மிகவும் ரசித்தேன். நான் ஜர்னலிசம் படிக்கையில் மாஸ் மீடியா சப்ஜெக்ட் புரொபசன் ரவிராஜ் எடுத்தார். அப்போது அவ்ர் பதேர் பாஞ்சாலியிலிருந்து விளக்கிய மழைக்காட்சி என் நினைவினின்று எங்கும் நீங்காது...அதன் பின் படத்தை நாவலை வாசித்த போதும், அத்திரைப்படத்தைப் பார்த்தபோதும் உருவாகிய நெகிழ்ச்சியும் மனவெழுச்சியும் சொல்லில் அடங்காதது. இப்பதிவினை வாசித்ததும் அது மீண்டும் நிகழ்ந்தது, பகிர்விற்கு நன்றி அஜயன் ;))
வணக்கம் அஜயன் பாலா,
சினிமாவை நீங்கள் பார்க்கும்
பார்வை - பகிர்வு – வெளிப்பாடு
மிக நேர்த்தியாக உள்ளது
காத்து இருக்கிறேன்
உங்களின் அடுத்த பதிவிற்கும்...
அன்புடன்
எஸ். எஸ். ஜெயமோகன்
நன்றி உமா.பதேர் பாஞ்சாலி யாரை மிக அளவுக்கதிகமாக பாதிக்கிறதோ அவர்கள் இந்த உலகின் மீது பெரும் அன்பு கொண்டவர்கள்.குழந்தைகளீன் உலகின் மூலமாக ரே காட்டுவது இதைத்தான். பிரபஞ்சத்தின் சகலவற்றின்மீதான் பார்வை.இயற்கையின் வழி மெய்ய்மையை உணரும் பெர்ந்தருணம் இதுதான் பதேர் பாஞ்சாலி
உங்களின் வார்த்தையினால் என் கட்டுரை கவுரவம் பெறுகிறது நன்றி ஜெயமோகன்
பதேர் பாஞ்சாலி
பார்த்தேன்.
ஒரு ஏகாந்த அனுபவம்
-உமா மகுடேஷ்
Post a Comment