
அஜயன்பாலா
இரண்டு நாட்களுக்கு முன்னால் சிறிய முதலாளி ஒருவர் என் வீட்டிற்கு அருகிலுள்ள புதரில் முயல்பிடிக்க வந்தார். அவரது தொப்பியில் ஒரு குருவி இருந்தது. அவர் அதைப்பார்க்கவில்லை. மாறாக கையில் தொரட்டுகோலை பிடித்துக் கொண்டு புதரில் குத்தியபடி முயலை வெயியே வரும்படி சத்தமிட்டார். நான் குருவியை என்னிடம் வருமாறு கையசைத்துக் கூப்பிட்டதும் தொப்பியிலிருந்து குருவி என்னிடம் பறந்து வந்தது. முள்ளங்கி தோட்டங்கள் சற்றியிருக்க அருகே என் ஓட்டு வீடு இருந்தது. தூரத்தில் பூமிக்கு அப்பால் பச்சையாய் பந்துபோல ஒன்று வெகுநேரமாய் நின்று கொண்டிருந்தது.தொரட்டிக்கோலுடன் திரும்பிய சின்ன முதலாளியிடம் அது என்ன எனக் கேட்டேன். தெரியவில்லை என்றார். அவருக்கு முயல் கிடைக்கவில்லை என நிறைய்யவே கோபம்.சின்ன முதலாளி உங்களுக்காக வேண்டுமானால் அந்த முயலை நான் பிடித்து தருகிறேன் என்றேன். முதலாளிக்கு நான் சொல்வது காதில் விழவில்லை. என்னிடமிருந்தக் குருவியும் முதலாளியின் தொப்பிக்கு மீண்டும் பறந்து சென்றது.

எனக்கு அது மிகவும் வருத்தத்தை தந்தது. வீட்டிக்குள் ஓடிப்போய் ஒரு பழைய தொப்பியை எடுத்து வந்து நானும் அணிந்து கொண்டேன். குருவியைப் பார்த்து இங்கு வருமாறு கையசைத்தேன். முயல் கிடைக்காத கோபத்துடன் முதலாளி தொரட்டிக்கோலை பூமியில் வேகமாய் குத்தியபடி வீட்டுக்கு புறப்பட்டார்.இன்னொரு நாள் சின்ன முதலாளி என் தோட்டத்து வீட்டுக்கு வந்தார்.உங்களுக்கு முயல் வேண்டுமா, நான் உதவி செய்யட்டுமா என்றேன். அவர் அதைப்பற்றி கேட்காதவராக என்னிடம் கண் சிமிட்டிக் கொண்டே எனக்கு ஒரு கடிதம் எழுத வேண்டும் என்றார். இருவரும் அன்று மாலை முழுக்க கடிதம் எழுதினோம். அந்த கடிதத்தில் முட்டைமுட்டையாகப் போட்டுக்கொடுத்தேன். சின்ன முதலாளியும் துள்ளி குதித்தபடி ஜோர் ஜோர் என்றார். கடிதத்தை மடித்து ஜிப்பாவில் வைத்துக் கொண்டார். போகும்போது அவரிடம் பூமிக்கப்பால் பச்சையாக ஒன்று பெரிதாக அதோ பந்துபோல தெரிகிறதே அது என்ன என்று கேட்டேன்.ஆமாம் மிகவும் பெரிதாக இருக்கிறது என்றார். நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோதே இருட்டிவிட்டது. பந்து இப்போது மிகவும் பிரகாசமாக தெரிந்தது. சின்ன முதலாளி கொஞ்ச நேரம் யோசித்து விட்டு அது நிலவாக இருக்கும் என்றார்.என்னால் நம்ப முடியவில்லை.அடுத்த நாள் நான் முள்ளங்கி செடிகளின் தோட்டத்தை தாண்டி ஓடிச்சென்று அந்த பெரிய பந்தின் அருகில் நின்றேன். அதன் மேல் சாய்ந்து கொண்டேன். மெத்தென்றிருந்தது. விளையாட்டின் போது தவறுதலாக வந்து விழுந்த பந்து போல தோன்றியது.பந்தை மெதுவாக உருட்டினேன். அது நகர்ந்தது. மெதுவாக அப்படியே முள்ளங்கி வயல்களினூடே உருட்டினேன். முள்ளங்கி செட்டிகள் ‘அய்யோ என்னைக் கொல்கிறாயே’ என கூச்சலிட்டன.சின்ன முதாளியிடம் சொல்லிவிடாதே என கெஞ்சினேன்.மறுநாள் என் தோட்டத்து வீட்டின்மேல் பந்து இருந்தது. வீட்டுக்குள் எல்லோரும் கூடிவிட்டனர். எல்லோரும் அதை நிலா என்றனர். சின்ன முதலாளிக்கு தெரிந்தால் நீ அவ்வளவுதான் என பயமுறுத்தினர். அன்று மாலையே சின்ன முதலாளி காலால் காலி பீர் பாட்டிலை உருட்டியபடி என் வீட்டு முன் வந்து நின்றார்.
அ
வருடன் ஒரு உயரமான சார் ஒருத்தரும் இருந்தார். நான் பெரிய மனிதர்கள் செய்வதுபோல் ஜேபியில் கைவைத்துக்கொண்டே வாசலில் அவர்களை வழிமறித்தேன். சின்ன முதலாளியின் முகம் உர்ர்...ரென்றிருந்தது. வீட்டை ரெண்டு முறை சற்றி சுற்றி வந்தனர். நன்றாக தேடுங்கள் ‘என்னிடம் எதுவும் இல்லை’ என கை விரித்தேன்.வீட்டுக்குள் பந்தை ஒளித்து வைத்ததுதான் பிரச்னை. முயல் எப்படியோ மோப்பம் பிடித்து வீட்டிற்குள் வந்துவிட்டது. அது ஒரு பணியாரம் என நினைத்து இரண்டு இடங்களில் கடித்துவிட்டது. ருசியாக இருக்கிறதே எனக் கூச்சலிட்டது. மறுநாள் காலையிலேயே அதன் காதைப் பிடித்துத் தூக்கிக்கொண்டு போய் சின்ன முதலாளியிடம் தோட்டத்தில் விட்டுவிட்டு ஓடிவந்தேன்.சின்ன முதலாளி அநத் பந்தை மரியாதையாக என்னிடம் தந்துவிடு என வெளியே வந்து கூச்சல் போட்டார். நான் காதில் கேட்காதவனாக ஓடிவந்து விட்டேன்.ஞாபகமாக பந்தை எடுத்து பேக்கில் வைத்துக்கொண்டு ஸ்கூலுக்குப் போனேன். வழியில் முள்ளங்கி தோட்டம் முழுக்க கடல் வந்து போயிருந்தது. ஒரு முள்ளங்கி ‘எல்லாம் உன்னால்தான்’ என சபித்தது.ஒரு சிறுமி நடுங்கிக் கொண்டிருந்தாள். உடல் முழுக்க நனைந்திருந்தது. அவள் மிகவும் வருத்தமாயிருந்தாள். நீ ஏன் அழுதுகொண்டிருக்கிறாய் எனக் கேட்டேன். என் அம்மாவை காணோம் என கைகளை விரித்துக் காட்டினாள்.எனக்கு என்னவோ போலிருந்தது. பைக்குள்ளிருந்த பந்தை எடுத்து அவளிடம் கொடுத்தேன்.ஐ........ அவள் ஆச்சர்யமாகவும் சந்தோஷத்துடனும் அதை வாங்கிக் கொண்டாள்.நான் திரும்பிப் பார்க்காமல் வேகமாய் ஸ்கூலுக்குப் போனேன். மணி அடிக்கிறது.
நன்றி:தக்கை காலாண்டிதழ்
ஆகஸ்ட் 2008இதழில் பிரசுரமானது
5 comments:
நல்ல புனைவு அஜயன். ஆனால் புரியலை..;)))
நமது குழந்தைகளை நம்மல் முழுவதுமாக புரிந்துகொள்ள முடிகிறதா அது போலத்தான் இரடு அல்லது மூன்றுவயது குழந்தையின் பார்வையில் இந்த உலகம் எந்த காரணம் கொண்டும் இயங்குவதில்லை ஆனால் நாம்தான் அனைத்திலும் காரணம் இருக்க வேண்டும் என பிரயத்தனபடுகிறோம் நமது நுகர்வுமனத்தின் ப்ரச்னையே இது ஒருகதையின் இரண்டுவரிகளை உங்கள் மனம் மெல்ல முடியுமானால் அதுவே போதுமானது.
kathaiyai padikka aarambittha vudanea puriyathodangiyathu ithu oru kuzanthaiyin paarvaiyil ikkaathaiyin payanam eanbathai athoodu innum oru santhosam naan innum tholaikkavillai ean kuzanthaithanathai eanbathaiyum
நன்றி வினு குழந்தமைதான் கதையின் ஆதாரம் என்பதை உணர்ந்து அதனை என்னோடு பகிர்ந்தமைக்கும்
kulandaigal kadaigal yaluda yan valthukkal ajai sir
Post a Comment