March 13, 2023

அஞ்சலி : ஆயிரம் படம் கண்ட ஆரூர்தாஸ்

புகழ் மண்ணில் புதைந்தது ஆரூர் தந்த மூன்றாவது முத்து -அஜயன் பாலா , #ajayanbala@gmail.com
கண்களைக்காட்டிலும் காதுக்கு முக்கியத்துவம் கொடுத்து வளர்ந்த உலகின் ஒரே சமூகம் தமிழ் சமூகம் தான் இல்லாவிட்டால் தமிழகத்தில் மூலை முடுக்குகளில் கல்யாணம் காது குத்து என எந்த விழா நடந்தாலும் ஒரு படத்தின் வசனத்தை ஊருக்கே அலறவிட்டு திரும்ப திரும்ப கேட்டு மகிழ்ந்திருப்பார்களா . நம் மக்கள் ? இத்தனைக்கும் பராசக்தி போல அடுக்கு மொழியோ திருவிளையாடல் போல பக்தி பரவச ஊற்றோ இல்லாத வெறும் ஒருசராசரி சமூகதிரைப்படம் தான் விதி. ஆனாலும் தமிழ் மக்கள் இந்த படத்தின் வசனத்துக்கு கொடுத்த மதிப்பும் மரியாதையும் தமிழ் பண்பாட்டின் ஆய்வுக்கு உட்படுத்தவேண்டிய முக்கிய அம்சம் . அப்படிப்பட்ட புகழ்வாய்ந்த உரையாடல் எழுதிய திரைப்பட வசன எழுத்தாளர் ஆரூர்தாஸ் நேற்று மாலை 6 மணிக்கு தன் 91 வயதில் தன் வாழ்வை பூரணமாக நிறைவு செய்துகொண்டார்.. இறக்கும்போது எந்த நோய் நொடிகள் எதுவும் இல்லை . ஒரு வருடத்துக்கு முன் மனைவி இறந்த துக்கம் மட்டுமே அவரை நிம்மதி இல்லாமல் செய்துவிட்டது. அதுவரை சுறுசுறுப்பாக இயங்கி வந்த அவர் தன் மனைவி இறப்புக்குப் பின் மன அழுத்தம் மிகுந்து அனைவரிடமும் பேசுவதை நிறுத்திக் கொண்டார். பேபி என அவர் அன்பாய் அழைக்கும் அவர் மனைவி எப்போதும் அமரும் அந்த நாற்காலியில் யாரையும் பயன்படுத்த அனுமதிக்காமல் அந்த வெற்று நார்காலியை பார்த்தபடியே இடைப்பட்ட நாட்களை கழித்து வந்தவர் நேற்று மாலை 6மணிக்கு முழுவதுமாய் மூச்சை நிறுத்திக்கொண்டார் . ஆரூர் தாஸின் பெருமையை ஒரு புரிதலுக்காக விதி படத்திலிருந்து துவங்கினாலும் அவரது இதர சாதனைகளின் உச்சங்கள் அளப்பரியது. அதில் ஒன்று . ஆயிரம் படங்களுக்கு எழுத்துப் பணி புரிந்தவர் என்பது முக்கியமானது. தமிழ் சினிமாவில் இனி வேறு எவரும் கற்பனைகூட செய்து பார்க்க முடியாத சாதனை. இது. போட்டியும் சூழ்ச்சியும் பொறாமையும் மிகுந்த திரைப்பட உலகில் இன்று ஒரு எழுத்தாளனுக்கு ஒரு படம் எழுதி முடித்து வெளிவந்து டைட்டிலில் பேர் வாங்குவதற்குள்ளாகவே மூச்சு முட்டி நாக்கு தள்ளி விடும் சூழலில் ஆயிரம் படங்கள் வசனம் என்பது அத்தனை எளிதாக கடந்து போகும் விடயமல்ல . கடந்த பத்து பதினைந்து வருடங்களாக திரை எழுத்தாளனாக என்னால் ஒரு பத்து பதினைந்து படங்களில் பணியாற்ற முடிந்தது என்றால் அதற்கு ஆரூர்தாஸ் மட்டுமே காரணம் . ஒவ்வொரு படத்திலும் உச்ச கட்ட பிரச்சனைகள் தலையெடுத்து இனி சினிமாவில் எழுத்துத் துறையே வேண்டாம் என நான் முடிவெடுக்கும் சமயங்களில் எல்லாம் ஆரூர்தாஸ் அவர்களை எண்ணிப் பார்ப்பேன். மறுநாள் நான் மீண்டும் உற்சாகமாக என் பயணத்தை துவங்க அவர் ஆயிரம் படங்களுக்கு பட்ட அவஸ்தையும் அவமானங்களையும் எண்ணிப்பார்க்கும் அந்த ஒரு கணம் போதும் ஆயிரம் வாட்ஸ் உற்சாகம் என் தோளைப் பற்றிக்கொண்டு மீண்டும் அடுத்த ப்டத்துக்கான எழுத்துப் பணி நோக்கி உந்தித்தள்ளும். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் 1931ம் ஆண்டு சந்தியாகு நாடார் ஆரோக்கிய மேரிக்கு மகனாகப் பிறந்தவர் பிற்பாடு ஆரூர்தாஸ் என அழைக்கப்பட்ட ஜேசுதாஸ் . தஞ்சை திருவாரூரில் பள்ளி படிப்பு படிக்கும் போது கலைஞர் கருணாநிதியின் நாடகங்களால் ஈர்க்கப்பட்டு சிறுவயதிலேயே நாடகம் எழுதி அதை தானே மேடையேற்றம் செய்த தாஸ் தன் நாடகத்துக்கு தனே சுவர்களில் விளம்பரம் எழுதும் வேலையை செய்யும் அளவுக்கு கலையின் பால் ஆர்வம் மிகுந்து காணப்பட்டார் . தஞ்சை பல்கலை கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் ஆய்வு பட்டம் படித்தவர் என்பது யாரும் அறியாத செய்தி. பிற்பாடு திருவாரூருக்கு வந்த கவிஞர் சுரதாவின் அறிமுகம் சினிமாவுக்கு அவரை வர தூண்டியது . சென்னைக்கு வந்து தஞ்சை இராமையா தாஸ் அவர்களிடம் வசன உதவியாளராக பணிபுரியும் வாய்ப்புகிட்ட அவர்தான் ஜேசுதாஸ் என்ற பெயரை ஆரூர்தாஸ் என மாற்றி அருளினார் . தேவர் பிலிம்ஸ் எடுத்த வாழவைத்த தெய்வம் மூலம் வசனகர்த்தவாக அறிமுகம் ஆகிய ஆரூர்தாஸ்க்கு சாவித்திரியின் அறிமுகம் தன் பிற்பாடு அவருக்கு பெரும்புகழ்தேடித்தந்த பாசமலர் படத்துக்கு வசனகர்த்தாவாக 1961ல் வாய்ப்பு வாங்கிக்கொடுத்தது. . அதன் பிறகு அவர் வாழ்க்கையில் உயரப்பறந்த கொடி கடைசியாக அவர் பணிபுரிந்த நடிகர் வடிவேலுவின் தெனாலிராமன் வரை இறங்கவே இல்லை நேரடிப்படங்கள் காலத்தில் மட்டுமல்லாமல் மற்ற மொழிபடங்கள் பெருகத்துவங்கிய போது வைஜயந்தி ஐ பி எஸ் .. பூ ஒன்று புயலானது என படையெடுத்த போது அதன் பிரமாண்ட வெற்றிகளுக்கும் இவரது வசனம் பெரும் தீயை பற்றவைத்தது. . ஒரு திரை எழுத்தாளன் ஆயுசு பத்து வருடங்கள் , அதன்பிறகு அடுத்த தலைமுறை அந்த இடத்தை ஆக்கிரமிக்கும் ஆனால் தன் அறுபதுகளின் காலம் முடிந்து பின் எண்பதுகளிலும் விதி மூலம் விஸ்வரூபம் பெற்று தொடர்ந்து அவர் பணியாற்றியது தான் அவரது ஆயிரம் படங்கள் பட்டியல் உயர காரணமாக அமைந்தது மற்ற கலைஞர்களை விடவும் எழுத்துத் துறையில் இருப்பவர்கள் அதிக சுய கவுரவமும் உணர்ச்சிக் கொந்தளிப்புடனும் இருப்பவர்கள் . எது அவர்கள் படைப்புக்கு மூலதனமோ அதுவே இத்துறையில் பிரச்சனையுமாகும் . அப்படிப்பட்ட சூழலில் எளிதில் உணர்ச்சி வசப்படும் ஆரூர்தாஸ் அவர்கள் இப்படி ஆயிரம் படங்களில் பணிபுரிந்த சாதனை என்னை பொறுத்த வரை எம் ஜி ஆர் சிவாஜியின் சாதனைகளுக்கு நிகரானது. இப்படி இந்த இரு துருவங்களும் புகழ் உச்சியில் கொடிகட்டிப் பறந்த அந்த அறுபதுகளில் மொத்த திரை உலகமும் எம் ஜி ஆர் சிவாஜி என இரண்டு குழுவாக பிரிந்து கிடந்தது. ஒருவருடைய குழுவை சேர்ந்தவர் இன்னொரு குழுவுக்குப் போய்விட்டால் துரோக பட்டம் விழுந்து விடும் . இதற்கு பயந்துகொண்டு நடிகர் நடிகைகள் தவிர தொழில் நுட்பகலைஞர்கள் எவருமே அணி மாறாமல் விசுவாசியாய் இருந்தார்கள் அப்படிப்பட்ட போட்டிநிறைந்த காலத்தில் இருவராலும் தவிர்க்க முடியாத எழுத்தாளராக வலம் வந்து இருவருக்கும் தொடர் வெற்றிகள் பெற்றுதந்தது அவருடைய இன்னொரு சாதனை. சிவாஜியின் பாசமலர் படித்தால் மட்டும் போதுமா பார் மகளே பார் தெய்வ மகன் என தொடர்ந்து 28 படங்களுக்கும் எம் ஜி ஆரின் தாய் சொல்லைத் தட்டாதே , தாயைக் காத்த தனயன் வேட்டைக்காரன், பரிசு ,பறக்கும் பாவை ,அன்பே வா என 24 படங்களுக்கும் என இருவருக்கும் வசனம் எழுதியவர். இதில் அவரவர் படங்களுக்கேற்ப எழுதுவதும் தனிக்க்லை எம் ஜி ஆர் படங்களுக்கு நாயக பாத்திர வடிவமைப்பும் அவருகேற்ற காட்சி அமைப்பும் அதில் எளிமையும் சுவாரசியமும் முக்கியம் . மற்றபடி வசனம் புரியும்படி இருந்தல் போதும் இறுதியில் நல்லவன் வாழ்வான் கெட்டவன் சாவான் என்ற நீதி பின்பற்றப்படவேண்டும் ஆனால் சிவாஜிக்கு எழுதுவது சவால் நிறைந்தது .அதில் நாயகனை விடவும் கதையும் காட்சியமைப்பும் அழுத்தமாக இருக்க வேண்டும் சிவாஜிக்கு மட்டுமல்லாமல் உடன் நடிக்கும் பாத்திரத்துக்கும் தேவைப்படும் இடங்களில் வசனம் பிரமாதமாக் அமையவேண்டும் . வசனம் நன்றாக இருந்தால்தான் நடிப்பும் சிறப்பாக அமையும். வசனம் சரியாக அமையாவிட்டால் வெறும் நடிப்பை வைத்துக்கொண்டு சமாளிக்க முடியாது. அதனால் ஆரூர்தாஸ் அவர்களுக்கு எம் ஜி ஆரைவிடவும் சிவாஜிக்கு எழுதுவதில்தான் கூடுதல் விருப்பம் .காரணம் அதில் தான் அவரது முழுத்திறமையும் காண்பிக்க முடியும். அவரது படங்களின் வசன திறமைக்கு எடுத்துக்கட்டாக பலரும் பாசமலர் படத்தில் சிவாஜி ஜெமினி பேசும் வசனங்களை உதாரணமாகச் சொல்வார்கள் .ஆனால் எனக்கு அவர் படங்களில் தெய்வ மகன் படத்தில் அப்பா சிவாஜியோடு முகம் கருகிய மகன் சிவாஜி பேசும் காட்சி மிகவும் பிடிக்கும் அந்த காட்சியின் ஒட்டுமொத்த வசனமும் சிறப்பு என்றாலும் ஒருகட்டத்தில் மகன் அப்பாவை பார்த்து - நான் பொறந்தப்ப் நீங்க பணக்காராரா தான இருந்தீங்க - ஆமாம் - அப்ப நான் விகாரமா பொறந்தேங்கிற ஒரே காரணத்துக்காகத்தானே என்னை வேண்டாத பொருளை குப்பைத்தொட்டியில வீசி எறியிற மாதிரி என்னை எறிஞ்சிட்டீங்களா .. நீங்க பொறந்தபோ உங்க அப்பா இதே மாதிரிதான் செய்ஞ்சாரா - எது - இல்லை நீங்களும் என்னை மாதிரிதான இருக்கீங்க அதனால் உங்கப்பா உங்களை வேணாம்னு சொல்லிட்டாரான்னு கேட்டேன் இல்லை ஏன் அவர் அழகா இருப்பார் இந்த வேத்னையை புரிஞ்சுக்க முடியாதவர் இல்லை உங்கப்பா ஏழை அதனாலதான் அவருக்கு இருதயம் பாசம் இரக்கம் எல்லாமே இருந்தது ஆனா எங்கப்பா பணக்காரன் அவர்கிட்ட இரும்புப் பெட்டி மட்டும்தான் இருந்தது . இப்படி வசனத்தில் உணர்ச்சிகளைத்தாண்டி உள்ளூணர்வை தோண்டி எடுக்கும் வசனங்கள் படம் முழுக்க விரவிக்கிடக்கும் இப்படி போட்டி நடிகர்களுக்கு ஒரே சமயத்தில் எழுதியது மட்டுமல்லாமல் போட்டி தயாரிப்பு கம்பெனிகளுக்கும் தொடர்ந்து வசன எழுத்தாளராக பணி புரிந்தது அவருடைய இன்னொரு சாதனை. தேவர் பிலிஸ் கம்பெனியில் அவர் பயணத்தை துவக்கினாலும் தொடர்ந்து அவர் ஏவி எம் வாஹினி போன்ற நிறுவங்களுக்கும் அதே சமயத்தில் எழுதிவந்தார் இப்படி ஒரே சமயத்தில் அவர் எப்படி இத்தனை படங்களுக்கு பணிபுரிந்தார் இத்தனை தயாரிப்பாளர்களை இத்தனை இயக்குனர்களை இத்தனை நடிகர்களை எப்படி அவர் திருப்திபடுத்தியிருப்பார் என்பதை யோசித்துப்பார்க்கும் போது அது உண்மையில் சர்கஸ்களில் பார்விளையாடுவதைக்காட்டிலும் சாகசம் நிறைந்த காரியம் . எப்போதும் கற்பனையிலும் உணர்ச்சியிலும் மிதக்கும் ஒரு படைப்பாளன் எப்படி ஆளுமை பணிகளிலும் கொடிகட்டிப்பரந்தார் என்பது மேலான்மை ஆய்வு பட்டப்படிப்புக்கே தகுதியான ஒரு வாழ்க்கைப்பாடம். இவை அனைத்தையும் மீறி இதை படங்களுக்கு உழைக்க அவரிடம் இருந்த ஆற்றலும் கற்பனையும் உடல் பரமாரிப்பும் ஒழுக்க பண்பும் இன்னொரு ஆச்சரியம்
இப்படி புகழ் வாய்ந்த எழுத்துலக சாதனையாளர்கள் ஆரூர்தாஸின் மரணத்துக்கு பெருமை கூட்டும் வகையில் பல பரிசுகள் அவருக்கு கிட்டிருந்ததல்லாம் ஆறுமாதங்களுக்குமுன் தமிழக அரசு சார்பாக கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி கலைத்துறை வித்தகர் விருதை அறிவித்து அதோடு நில்லாமல் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரிடையாக அவர் வீட்டுக்கே சென்று படுக்கையில் இருந்த அவருக்கு தன் கைகளால் வழங்கியது ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு அரசாங்கம் செய்த தகுதியான கவுரவம். ஆனால் அதேசமயம் சிறு நடிகரின் வைபவத்துக்கு திரண்டு வந்து வாழ்த்தும் இந்த திரையுலகம் இந்த மிகபெரிய சாதனையாளரின் இறப்பை புறக்கணித்தது பெரும் வருத்ததுக்குரியது. இறப்பு வீட்டுக்கு சிவக்குமார் வைரமுத்து பாக்யராஜ் தவிர சமகால நட்சத்திரங்கள் ஒருவரும் கண்டுகொள்ளாமல் புறக்கணித்திருப்பது வேதனைக்கும் வருத்தத்திற்குரிய விடயம் . நன்றி: அருஞ்சொல் வலைத்தளம் இதழ்

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...