May 6, 2017

அணில் அகன்ற முன்றில் - மா அரங்கநாதன் அஞ்சலி :                                      -அஜயன் பாலா
1
எனது துவக்க கால சென்னை வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை மா. அரங்கநாதன் அவர்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க தனித்துவமான சிறுகதை எழுத்தாளர் .தமிழர் மரபு தொன்மம் பண்பாடு குறித்து தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்தவர். அவர் நடத்தி வந்த முன்றில் சிறு பத்ரிக்கை நவீன இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்பு.
அவரது மறைவு செய்தி முகநூல் வழியாக அறிய வந்தபோது ரயிலில் மகராஷ்ட்டிரா மாநிலத்தின்   சோலப்பூரை கடந்துகொண்டிருந்தேன்.  கல்லூரி வாழ்க்கை முடிந்து வாழ்க்கை குறித்த மிகபெரிய கேள்வியுடன் நகரம் எனும் பிரம்மாண்டத்தின் முன் பலஹீனமாய் நான் நின்றுகொண்டிருந்த காலத்தில் எனக்கு அறிமுகமானவர் மா. அரங்கநாதன்  சென்னையில் வாழ்க்கையை துவக்கிய முதல் மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட  தினமும் மாலை பொழுதுகளில் அவரை சந்தித்து கவிதை இலக்கியம் சினிமா என பலவற்றையும் குறித்து உரையாடி வளர்ந்திருக்கிறேன் .அவர் அப்போதுதான் தன் மாநகராட்சி பணியிலிருந்து ஓய்வு பெற்று முழு இலக்கியவாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தார். நானோ அப்போதுதான் வாழ்வின் துவக்க காலத்திலிருந்தேன்..தலையின் நரை போல பழுத்த அனுபவம் அவரிடமிருந்தது . எங்களது உரையாடல் வழி அந்த அனுபவத்தை நான் சிறுவனாக அவரிடமிருந்து திருடிக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனக்குமான உறவின் ஆரம்ப புள்ளியை தேடி  கடந்த காலங்களில்  மனம் பயணிக்க துவங்கியது. .


2
அப்போது நான் செங்கல்பட்டில் வசித்துக்கொண்டிருந்தேன். என் திருக்கழுக்குன்றம் இலக்கிய நண்பர்கள் மூலமாக தீவிர வாசிப்புக்கு தயாராகியிருந்தேன். என் அறிவுப்புலம் முழுக்க பட்டாம்பூச்சிகள் லட்சகணக்கில் சிறகடித்துக்கொண்டிருந்த காலம்.   .சாலையில் நடக்கும் போது எதிர்படும் மனிதர்கள் அனைவரையும் விட  ஒருபடி உயர்ந்தவனாக ஒரு கர்வம் . அவர்களுக்கு தெரியாத நகுலன் புதுமைப்பித்தன் தி,ஜானகிராமன்  அவர்களுக்கு தெரியாத ஜே ஜே . ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனக்குத்தெரியும்  என்பது போன்ற கர்வம். அப்படியான காலத்தில்தான்  .தேரோடும் வீதி படித்துவிட்டு திருவனந்தபுரம் போய் நீல பத்மனாபனை அவரது மின் வாரிய அலுவலகத்தில் சந்திக்க சென்றேன் . .உரையாடலின் நடுவே  முன்றில் எனும் பத்ரிக்கையை காட்டி  மா. அரங்கநாதன் பேரை முதன் முதலாக சொல்லி சென்னையிலிருந்து வருகிறது என்று கூறி அதன் ஒரு பிரதியையும் கையில் கொடுத்தார் .பக்கம் தானே  முடிந்தால் அவரை சந்தியுங்கள் என்றும் அறிவுறுத்தினார். சிவப்பு நிற அட்டையில் கோணல் மாணலாக முன்றில் என வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தது.
3
இரண்டு மாதம் கழித்து எதேச்சையாக எங்கள் குடியிருப்பின் வளாகத்தில் எங்கள் வீட்டின் எதிர்வீட்டுக்கு  புதிதாக குடிவந்த ஒரு இளைஞன் அதே சிவப்பு நிற அட்டையுடனான முன்றில்  சிறு பத்ரிக்கையை வைத்துக்கொண்டு வாசிக்க எனக்கோ அதிர்ச்சி ,அவசரமாக நான் வீட்டினுள் சென்று நீல பத்மநாபன் கொடுத்த முன்றீலைத் தேடினேன். என் பிரதி வீட்டில் இருந்தது. அதுவரை இந்த செங்கல்பட்டிலேயே நாம் ஒருவர்தான் அறிவாளி என்ற  மிதப்பில் இருந்த என் நிலைப்பில்  முதன்முறையாய் மண். எத்தனையோ தெருக்கள்  எத்த்னையோ வீடுகள் கொண்ட செங்கல்பட்டில்  சரியாக என் காம்பவுண்டுக்குள் என் வீட்டின் எதிரேயே ஒரு அறிவுஜீவியா. என்னால் இந்த அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை.  நானும் அவனுக்கு போட்டியாக கையிலிருந்த முன்றில் புத்த்கத்தை எடுத்துக்கொண்டு வாசலில் சென்று அமர்ந்தேன்.  கையோடு அவன் இந்த முன்றிலை பார்த்து அதிர்ச்சியடைய போகும் கணத்தை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்த்படி . ஆனால் அவன் அதை பார்த்தும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றதும் எனக்கு இன்னொரு அதிர்ச்சி .
பிற்பாடு அடுத்த சில நாட்களீல், பேசி பழக ஆரம்பித்தபிறகு  பேர் வாசு என்றார். அந்த பெயர பிற்பாடு அகநாழிகை  பொன் வாசுதேவன் என்றானது அப்போது அவன் சென்னையில் படித்துக்கொண்டிருந்த காரணத்தால் இலக்கிய உல்கம் அவனுக்கு பரிச்சயம்  அடிக்கடி தான் பார்த்த எழுத்த்காளர்களை பற்றி சொல்வான். ஒருநாள் அவந்தான் முன்றில் சிறுபத்ரிக்கை மூன்று நாள் இலக்கிய கருத்தரங்கு நடத்த போகிறார்கள் அங்கு சென்றால் பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து பேசலாம் எனக்கூறினான். மூன்று நாள் சென்னையில் போய்வர செலவாகுமே என யோசித்த போது அதில் வாலண்டியராக பணிசெய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருகிறார்கள் .அவர்களுக்கான கூட்டம் மாம்பலத்தில் நடக்கிறது. வா இருவரும் அதில் சேர்ந்துவிட்டால் மூன்றுநாளும் அங்கேயே அவர்களுடன் தங்கிக்கொள்ளல்லாம், என்றான் .
4,
பத்து பேர் வந்த கூட்டத்தை அரங்கநாதன் மகன் மகாதேவன்( இப்போது நீதியரசராக பொறுப்பிலிருப்பவர். ) உடன் ராம்ஜி என்ற நண்பர் ( இப்போது என்ன செய்கிறார் என தெரியவில்லை . தீவிரமான இலக்கிய ஆர்வலர் கவிதை எழுதுபுவர்) இருவரும் நிகழ்ச்சி  நடக்கும்போது வாலண்டியர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என பேசினர். ஏறக்குறைய தமிழின் முக்கிய எழுத்த்காளர்கள அனைவருமே பங்கேற்கபோகும் செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஒரு வித சாகச உணர்வையும் கொடுத்து. நிகழ்ச்சியின் போது  தேநீர் உபசரிக்கும் பணி எனக்கு வழங்கப் ப்ட்டது. கூடுதலாக எழுத்தாளர்களை விடுதியிலிருந்து நிகழ்ச்சி நடக்கும் காதி பவனுக்கு ஆட்டோவில் அழைத்து வரும் பணியும் இரவில் எழுத்தாளர்கள் தங்கியிருக்கும் ஐகஃப் விடுதியில் அவர்களுக்கான உணவு இத்யாதிகளை கவனிக்கும் உப பொறுப்பும்
முன்றில் முகாமில் எழுத்தாளர்களை நேரில் சந்தித்தும் அவர்களுக்கு தேநீர்  உபசாரனை செய்ததிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி  பிற்கால வாழ்க்கையின் மாற்றங்களுக்கு காரணமான பலர் எனக்கு அங்குதான் அறிமுகமானார்கள் அதுவரை எழுத்தாளர்கள் என்றாலே கடவுளுக்கு அடுத்த நிலையில் அவர்களை உயர்த்தி வைத்திருந்த என் பிம்பங்களூம் அங்கு சரிந்து நொறுங்கின. அனைவரும் எல்லா உணர்ச்சிகலுக்கும் கட்டுப்பட்ட சாதாரண மனிதர்கள் தான். என்பதையும் உணர்ந்துகொண்டேன்
முகாம் வாசலில் ஒருமுறை சைக்கிளில் வெள்ளை வேட்டி சட்டை சகிதம் நின்றுகொண்டிருந்தவரை காட்டி யாரோ இவர்தான் மா அரங்கநாதன்  என்றார்கள் . அவ்வளவுதான்.
5
அதன். பிறகு அடுதத மாதமே சென்னைக்கு அதிலும் அரங்கநாதன் குடியிருந்த பழவந்தாங்கலில்  அதே கல்லூரி வீதியில் அறைவாசியாகும் சந்தர்ப்பத்தை  காலம் எனக்கு நல்கியது ஒரு ஆச்சரயமான ஜியோமிதி தான்.  சென்னை  மீனம்பாக்கம் எதிரே  டிசி எம் டயோட்டா கமபெனியில்  சேல்ஸ்மேன் வேலை. அநத வேலையில் சக பணியாளனான பாஸ்கர்தான் தன் அறையில் தங்கிக்கொள்ள அழைப்புவிடுக்க  அப்படியாகத்தான் பழவந்தாங்கல் வாழ்க்கை எனக்கு சித்தித்தது.   ஒரு ஞாயிற்று கிழ்மை அரங்கநாதனை வீட்டில் சந்திக்க போகலாம் என திட்டமிட்டிருந்த போதுதான் வாசு முன்றில் புத்தகக் கடை தி நகரில் ரங்கநாதன் தெருவில் சாந்தி கம்ப்ளக்சில் துவக்கியிருக்கிறார்கள்  நேரடியாக அங்கு போகலாம் என்றாதோடு கையோடு கூட்டிசென்றன்.
இப்படியாக ரங்கநாதன் தெருவில் ஒரு மா அரங்கநாதனை அக நாழிகை வாசுதேவன்  மூலம் ஒரு பகல் பொழுதில் சந்தித்தேன்
கடை அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது அரங்கநாதனுக்கு  நான் நீல பத்மனாபனை சென்று சந்தித்தது குறித்து ஆச்சர்யம் மகிழ்ச்சி அப்படியா பரவாயில்லையே தம்பி ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே என தட்டிக்கொடுத்தார்.   அதன்பிறகு  நேரம் கிடைக்கு  போதெல்லாம் சென்று சந்திப்பேன். வெகு சுலபமாக ஓரிரு சந்திப்புகளில் நெருங்கிவிட்டோம் . இலக்கியத்தின் மீதான எனது ஆர்வம் தொடர்ந்து அவரை நோக்கி  பல கேள்விகளை கேட்க வைக்க அதுபோல அவரும் சளைக்காமல்  பதில் சொல் வார். அப்படி சொல்வதில் அவருக்கு அத்தனை ஆர்வம்
வயது வித்யாசம் இல்லாமல் சிகரட் பிடிக்க சொல்வார் .அப்போது அவர் சார்மினார் சிக்ரட் பிடிப்பார் . செயின் ஸ்மொக்கர் போல பிடித்துக்கொண்டிருந்தார். 50 வயதுக்கு பிறகுதான் சிகரட் பிடிக்கும் பழக்கம் தொற்றியது ஆனால் விட முடியவில்லை என்பார்
சிகரட் பிடிக்க வாகாக கடைக்கு வெளியில் வந்தால் குட்டி மொட்டை மாடி அதன் சுவர் பக்கம் வந்து . அங்கிருந்து கீழே பார்த்தால் ரங்கநாதன் தெருவின் ஜனத்திரள் அடர்த்தியாக தெரியும் . ஒரு பக்கம் கடைக்கு ஆளே வராத முன்றில் புத்தகக் கடை  இன்னொருபக்கம் தமிழ் நாட்டின் மிக முக்கிய வணீக மையமும் அதிகமாய் மக்கள் கடக்கும் வீதி .  .  இந்த இரண்டு எதிரெதிர் துருவங்களும்  பார்வைக்கு எதிரேயே வைத்து பார்த்துக்கொண்டு சிகர்ட் பிடிப்பது  அப்போது எனக்கு மிகவும் பிடித்த வித்தியாசமான  சுவாரசியமான பொழுது போக்கு .
ஒரு முறை என் கையில் ஒரு கட்டுரையில்  சிறந்த ஆங்கில நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றை வைத்து இனி அவ்வளவுதான் இதை மட்டும்தான் தேடி படிக்க போகிறேன் எனக்கூற அவர் அதை கண்டித்தார். அது குறுக்கு வழி குறுக்கு வழியில போறவன் ஒருநாளும் உருப்பட்டதா சரித்திரமில்ல என கிண்டலாக கண்டித்தோடு வாசிப்பு என்பது ஏற்கனவே ஒருவனுடைய ரசனை தொடர்ந்து செல்வது அல்ல உன் அனுபவத்தின் வழியாக நீயாக தேடி கண்டடைவதுதான். அதுதான் உன் உடம்பில் உப்பாக கலக்கும் என அறிவுறுத்தினார்.  மேலும் நாவல்களை போலவே நான் பிக்‌ஷன் படி அதுதான் உனக்கு பல விஷய்ங்களை கற்றுதரும் என அறிவுறுத்தினார்.
அன்றே வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த பட்டியலை நான் கிழித்து குப்பையில் போட்டேன். பிற்பாடு என் தேடலில் நான் கண்டடைந்தது பிரபலமாகத புத்தகங்கள். அப்படியாகத்தான் ரோமன் எனும் பொலான்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்று நூலை கன்னிமாராவில் கண்டெடுத்தேன் பிற்பாடு நான்  விகடனில் நாயகன் தொடர் எழுத அந்த பொலான்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றில் கற்ற எழுத்து சார்ந்த தொழில் நுட்பங்களே வெகு ஜன வாசகர்களிடம் கொண்டு செல்ல பெரிதும் உதவின. தி நகர்  .  எலூர் லெண்டிங் லைப்ரரியில் மால்கம் எக்ஸ் பயோகிராபி ,  சாப்ளின் ஆட்டொ  பயோகிராபி ,  வான்காவின் வாழ்க்கை வரலாறான லஸ்ட் பார் லைஃப் என  பெரும்பாலான நான் பிக்‌ஷன் நூல்களை தேடி பிடித்து படிக்க துவங்கினேன் இவை யனைத்துமே இன்று என் வாழ்க்கையின் உயரத்திற்கு வழி வகுத்துள்ளன பிற்பாடு  சாப்ளின்  வான்கா பற்றி எழுத  இவையே எனக்கு உந்து சக்தியாக அமைந்தன..

6
பிற்பாடு தளபதி போலீஸ் செய்தி என வெவ்வேறு பத்ரிக்கைகளில் வேலை மாறிய போதும்என்  தினசரி மாலைப்பொழுதுபோக்கு  முன்றில் புத்தகடையாகதான் இருந்தது.  தினசரி கடை முடிந்தவுடன் அவரும் நானும் வெளியே வந்து மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி பழவந்தாங்களில் இறங்கி வீட்டிற்கு நடந்து ஒரு புள்ளியில் நான் என் வீட்டிற்கு பிரிந்து செல்வேன்.வழி முழுக்கவும் பேசிக்கொண்டே செல்வோம்
சிறிது நாட்களீல் அதே சாந்தி காம்ப்ளக்ஸ் மூன்றாவது  தளத்தில் முன்றில் கடை எதிரேயே கோபிகிருஷ்ணன் , சஃபி, லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடத்திய ஆத்மன் மன நல ஆலோசனை மையம் ஒன்றும் துவக்க் ப்பட்டது.. தினசரி பத்து எழுத்தாளராவ்து அங்கு பார்க்க முடியும். கோணங்கி எஸ் ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா, நாகார்ஜுனன், பன்னீர்செல்வம் ,சி.மோகன் ருத்ரன் ஆகியோருடன் பல ஆரம்ப எழுத்தாளர்களும் அங்கு மாலை , கூட ஆரம்பித்தனர் .ஒரு நாள் தாடி வைத்த இளைஞரை அரங்கநாதன் அறிமுகம் செய்தார் அவர்தான் யூமாவாசுகி. இவரும் நம்ம ஊர் பழவந்தாங்கல்தான் அறை எடுத்திருக்கிறார் என்றார். அப்போது அவரது முதல் கவிதை தொகுப்பு வெளியாகி அதன் முன்னுரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அங்கு தினசரி வருபவர்களில் கோணங்கி மிகவும் பிடித்துபோனார் .ஒருநாள் கோணங்கி எஸ் ராமகிருஷ்ணன் இருவரும் முன்றில் கடையில் சந்தித்து அப்படியே என்னுடன் பழவந்தாங்கல் வந்து என் அறையில் வந்து தங்கினர். நான் எழுதிவைத்த கதைகளை எல்லாம் படித்துவிட்டு உற்சாகப்படுத்தினர். பின் அப்படியே யூமாவசுகி அறைக்கு போய் பேசிக்கொண்டிருந்தோம்.  பின் அங்கிருந்து மா அரங்கநாதன்  வீட்டிற்கு போய் அவரது வீட்டின் மொட்டை மாடியில் இலக்கியவாதிகளுகென ஒதுககப்ப்ட்ட பிரத்யோக அறையில் இரவு தங்கினோம்
அந்த் அறை அரங்கநாதன் மகன் மகாதேவன் அலுவலகமாகவும் இலக்கியவதிகளுக்கன தங்கும் விடுதியாகவும் இருந்தது. அங்கு தங்கி தான் என் வாழ்வின் முதல் கட்டுரை எழுதினேன் . இலக்கியச்சிந்த்னை மாதாந்திர கதை தேர்வு செய்யும் பணீயை மேற்கொண்டிருந்த நான் அஅந்த் அறையிலேயே கொடுக்கப்ட்ட அந்த மாத இழகள் அனைத்தையும் படித்து சிறந்த ஏஸ் சங்கரநாராயணனின் கவாஸ்கர் கதையை தேர்வு செய்து ஏன் அதை தேர்வு செய்தேன் என கட்டுரையும் ஆந்த அறையில் எழுதினேன் . ஒரு எழுத்தாளனை பிரசவித்த் அறை அது. பிற்பாடு யூமா அங்கு சிலகாலம் தங்கியிருந்தார்.


7
அரங்கநாதனின் விசேஷ குணம் அவரது மௌனம்
அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென மௌனமாகி சிறிது நேரம்  அண்ணாந்து பார்ப்பார்.  உண்மையிலேயே மவுனமா இல்லை நடிக்கிறாரா என்று கூட எண்ணத்தோன்றும்  அப்படி ஒரு பாவம் அது . அந்த மவுனம் கலைய குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும் . அந்த இரண்டு நிமிடத்திய நிச்சலனம் நமக்குள் ஊடுருவி பெரும் அனுபவத்துள் ஆழ்த்திவிடும்.
 தன் சிற்றிதழுக்கு முன்றில் எனும் பெயர் காரணம் குறித்து கேட்கும் போது

காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே
என்ற குறுந்தொகை பாடலைகூறி   அதில் வரும் அணீலாடும் முன்றில் என்பது அக்காலத்து  தமிழ்ர்வீட்டின் முற்றம் .  சதுர வடிவில் ஒரு வெளி அந்த வெளியில் முன்றில் வந்து ஆடுவதில் இடையீடாக உண்டாக்கும் அமைதியையும் அகாயவெளியில் அது உண்டாக்கும் காட்சியினூடான  ஒரு மாயத்தோற்றத்தையும் விளக்கி ஒரு கணம் அந்த பேரனுபவத்துள் நம்மை அழைத்துசென்றுவிடுவார் .
அவரது எல்லா சிறுகதைகளிலும் இந்த மவுனத்தின் வழியான ஒரு வெளியை உணர முடியும். இதை அவர் அமைதி என குறிப்பிடுவார் . கதையின் முடிவில் ஒரு அமைதி வேண்டும் எதையும் சொல்லக்கூடாது ., வாசக்னாக அதை உள் வாங்க இடம் கொடுக்க வேண்டும் என்பார்
அரங்கநாதனுக்கு சிறுகதையில் போர்ஹே பிடிக்கும் அடிக்கடி போர்ஹேவின் கதை ஏதாவது ஒன்றை கூறுவார் . அதிகமாக எழுத தேவையில்லை குறைவாக எழுதினாலே போதுமானது என்பார். எப்பேர்பட்ட எழுத்தாளனையும் அவன் இவன் என தான் செல்லமாக கூப்பிடுவார் உனக்கு ஜே ,டி. சாலிங்க்ரை தெரியுமா ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கான்  உலகமே அவனை சாகறவரை கொண்டாடுச்சி என்பார் .
நான் அவரோடு பழகிய நாட்களில் அவரது பஃறுளியாற்று மாந்தர்கள் நாவல் எழுதியிருந்தார். நாவலின் அச்சு பிரதியை என்னிடம் படிக்க தந்தார். படித்துவிட்டு சில திருத்தங்களை சொன்ன போது . இன்னும் நீ ஒழுங்கா படிக்கவே ஆரம்பிக்கல உங்கிட்ட கொடுத்தம்பாரு என திட்டினார்
என்னை பலர் முன்னிலையில் உரிமையுடன் கிண்டலடிப்பார் அந்த நாட்களில் ரயில் மற்றும் பேருந்து பயணக்களில் படிக்க வசதியாக இருக்கும்படி  எப்போதும் என் கையில் ஏதாவது ஒரு புத்த்கம் இருக்கும்  பெரும்பாலும் அது ஆங்கில புத்த்கங்களாகத்தான் இருக்கும் . முன்றில் கடைக்குள் நான் உள்ளே நுழையும் போது யாராவது  அருகே அமர்ந்திருந்தால்  என்னை காண்பித்து பாத்தீங்களா சரியா போச்சா என சொல்லி அந்த நண்பருடன் சிரிப்பார் . பிறகுதான் அவர் அவர்களிடம் என்னை பற்றி கூறி போட்ருக்க ட்ரஸுக்கு மேச்சா புக் ஒன்னூ கையில வச்சிகிட்டு வருவான் பாருங்க என கூறியிருப்பார். நானும் கையில் புத்தகத்துடன் நுழைய அவரிடம் காட்டி சிரிப்பார். சொன்னா மாதிரியே வந்துட்டான் பாருங்க என கூறி மகிழ்வார். அவர் என்மீது எடுத்துக்கொண்ட அந்த உரிமை பிடித்திருந்தது.
சினிமா பாரடைஸோ வில் வரும்  ஆப்ரெட்டருக்கும் சிறுவனுக்குமான உறவைப்போன்றது அது .நானும்விடாமல் அவரை வெறுபேற்றும் விதமாக கேள்விகள் கேட்பேன்.
மா அரங்கநாதனோடு தனிப்பட்ட முறையில் உறையாடிவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் நவீன இலக்கியத்தை விடம் தமிழ் பண்பாடு தொன்மம் வரலாறு ஆகியவற்றில் தீவிரமான  ஈடுபாடுகொண்டவர். குமரிக்கண்டம் கபாடபுரம் ஆகிவற்றைகுறித்தும் தமிழர்கள் மூத்தகுடிகள் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையும் தீவிர ஆரய்ச்சிமனமும் இருந்துவந்துள்ளது.
பிறகு நான் திரைப்ப்டத்துறையில் சேர்ந்தபின் அவரை அடிக்கடி  சந்திப்பது குறைந்துவிட்டதென்றாலும் எப்போதாவது சென்று பார்ப்பேன்  ஹாலிவுட் படங்கள் பற்றி சொல்வார்  சென்னையில் முதன் முதலாக வேலைகிடைத்து பேச்சிலராக வந்து தங்க ஆரம்பித்த நாட்களில் தான் ஓடி ஓடிபார்த்த ஹாலிவுட் படங்களையும்  அந்த அனுபவத்தையும் அடிக்கடி கூறுவார். அப்போது வந்த ஹாலிவுட்  சினிமா  பத்ரிக்கைகளை எல்லாம் அவர் சேகரித்து வைத்திருந்தார். ஜேம்ஸ் டீனோட ரிபல் வித் அவுட் காஸ் பாத்ருக்கியா .. மூனே படத்துல சூப்பர்ஸ்டாராகி உச்சத்துல இருக்கும்போதே செத்துபோனான் 
அதே முன்றில் கடையில்தான் எனக்கு பிரமிளும் அறிமுகம் அவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்த பிரமிளும் அரங்கநாதனும் சண்டை வந்து இருவரும் கட்டுரைகளில் தாக்கிக்கொண்டது எனக்கு பெரும் அதிர்ச்சி . இருவருக்கிடையிலும் நான் மாட்டிக்கொண்டு  கடைசியில் பிரமிளால் வெறுக்கப்ப்ட்டதை பற்றி பிரமிள் பற்றிய கட்டுரையில் விளக்க்மாக எழுதியிருக்கிறேன்
என் முதல் சிறுகதை தாண்டவராயன் எழுதி முடித்துவிட்டு அவரிடம் கொடுத்தபோது வழக்கமாக கிண்டலடித்து வெறுபேற்றுவார் என நினைத்தேன். ஆனால் அவர் வெகுநேரம் அமைதியாக அமர்ந்துவிட்டு . இந்த கதையை நான் ஒரு முறை எழுதி பாக்கனும்னு தொணுது அதுதான் இந்த கதையோட வெற்றி . தொடர்ந்து எழுது என ஆசீர்வதித்தார். அவரது ஆசி வீண் போகவில்லை அவர் சொன்னது போலவே குறைவான படைபுகளையே  எழுதவே விரும்புகிறேன் 
பிற்பாடு பாண்டிச்சேரியில் அவர் சென்றபின் நானும் வாசுவும் ஒருமுறை நேரில் பார்த்து அக நாழைகைக்காக ஒரு பேட்டி எடுத்தோம் அக நாழிகை வராமல் போனதால் பேட்டியும் அச்சாகவில்லை
அச்சமயத்தில் நான் எழுத்தளனாக் ஒரு அடையாளம் பெற்றிருந்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. காணாமபோயிடுவேன்லா நெனச்சிடுந்தேன் பொழைச்சிகிட்டியே என பெருமிததோடு புன்ன்கைத்தார்
ஒரு தந்தையின் புன்னகை அது
மறக்க முடியாத மவுனத்துடன் அந்த புன்னகையும் இன்று சேர்ந்துகொண்டது

அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் 

thanks : amrudha  magazine may 2017

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...