March 5, 2017

அரசியல் மேடையாகிப்போன 89வது ஆஸ்கார் விருது விழா


இது தமிழ் படங்களில் வழக்கமாக நடக்கும் விஷயம்.. அதுவரை வில்லனுக்கு அடியாளாக சேவகம் செய்தவன் இறுதிக்காட்சியில்   திடீரென நாயகன் பக்கம் சேர்ந்து பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக்  கொடுப்பான்.. கெட்டவன் நல்லவனாக மாறி  அதுவரை வில்லன் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டு மனசாட்சியை திறந்து நாயகன் பக்கம்  அவன் பேசும்போது அரங்கில் கைதட்டல் உணர்ச்சிப் பெருக்கில் அதிரும்
இம்முறை லாஸ்ஏஞ்சல்ஸ் டால்பி அரங்கில்  89 வது ஆஸ்கார் விருது நிகழ்வை நேரடியாகவும் நேரலையாகவும் பார்த்த பலகோடி இதயங்களும் அத்தகைய உணர்வு நெகிழ்ச்சியில் தான் கைதட்டினர்
ஆஸ்கார் என்றாலே அது அமெரிக்க அரசின் கலாச்சரா ஊதுகுழல் எனுமளவிற்கு கடந்த காலத்தில் தன் எஜமான விசுவாசத்தை வருடா வருடம் காட்டி வந்துள்ளது.அமெரிக்க ராணுவத்தை துதிபாடி எடுத்தாலே அந்த வருடம் ஆஸ்கார் நிச்சயம் என்பது எழுதப் படாத விதி.  அமெரிக்கன் ஸ்னைப்பர் (American snipper)ஆர்கோ(Argo) ஜீரோ டார்க் தெர்டி (zero dark thirty) என இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம் .

அது போல விருது நிகழ்ச்சியில் அத்தி பூத்தார் போல  யாராவது அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்தால் போதும் அடுத்த நொடியே  மைக்கில் ஆஜராகி அது அவர்களின் தனிப்பட்ட சொந்த கருத்து அதற்கும் ஆஸ்கார் கமிட்டிக்கும் சம்பந்தமே இல்லை என பதட்டத்துடன் அறிவித்துவிடுவார்கள்.  1975ல் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்ற பெர்ட் ஷிண்டர் வியட்நாமுக்கு எதிரான அமெரிக்காவின் வல்லாதிக்க போருக்கு கண்டனம் செய்து அரங்கை விட்டு வெளியேறியவுடன் அறிவிப்பாளராக இருந்த ப்ராங்க் சினட்ரா மைக் முன் பதறியடித்து ஓடிவந்து ஆஸ்கார் விருது கமிட்டிக்கும் இதற்கும் துளியும்  தொடர்பில்லை என  துண்டறிக்கை வாசித்தார்.

இப்படி காலம் காலமாக அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த ஆஸ்கார் கமிட்டி இந்த வருட விழாவில் அமெரிக்க  அரசாங்கத்திற்கு எதிராக ஜல்லிக்கட்டாக துள்ளித் திமிறி அனைவரையும் ஆச்சரயப்படுத்தியது. விருது வாங்குபவர்கள் பலரும்  தங்களது உரையில் ட்ரம்புக்கு எதிராக  தங்கள் கருத்துரிமையை அரங்கில் நிலைநாட்ட  அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரங்கில் பலத்த கரவொலி.

பதவியேற்ற எட்டாம் நாளிலேயே ட்ரம்ப் குறிப்பிட்ட ஏழு வளைகுடா  நாடுகளுக்கு குடியெற்ற தடைச்சட்டம் விதித்தையொட்டி  அமெரிக்கா முழுக்க  எழுந்து வரும் எதிர்ப்பலையின்  எதிரொலிதான் அந்த கரவொலி என்பது உலகமே அறிந்த ஒன்று.

அவர் இந்த தடையை அறிவிப்பதற்கு முன்பே ஆஸ்கார் அறிவித்த இந்த வருடத்திற்கான  விருதுத் தேர்வு பட்டியலில் சிறந்த வெளிநாட்டு பட பிரிவில்    ஈரானின் சேல்ஸ் மேன் படமும் அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால்   ட்ரம்பின் இந்த வளைகுடா நாடுகளுக்கான தடைச்சட்ட அறிவிப்பு வெளியான உடன் தனது நாட்டை அவமதிக்கும் அமரிக்காவின் இந்த அங்கீகாரம்  தனக்கு தேவையில்லை  விழாவை  நிராகரிக்கிறேன் என உடனடியாக படத்தின் இயக்குனர் அஸ்கார் பர்காடி அறிவித்தார்.  இதனால் விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படமாக சேல்ஸ் மேன் தேர்வு செய்யப்பட மாட்டாது என அனைவரும் எதிர்பார்த்து கிடந்த நிலையில்   சேல்ஸ் மேன் சிறந்த படமாக அறிவிக்கப் பட்டது அனைவரையுமே ஆச்ச்ரயப்படுத்தியது.

அது போல விழாவில் அறிவிக்கப்பட்ட  சிறந்த துணைநடிகருக்கான முதல் விருதே மூன் லைட்  படத்தில் நடித்த  மகேர்ஷலா  அலி ஒரு இஸ்லாமியருக்கு என்பதும் இதில் கவனிக்கதக்கது.

இந்த  எதிர்ப்பு அலையின் மூலவித்து இதற்கு முன் நிகழ்ந்த பாப்டா விருது விழாவிலேயே  துவங்கிவிட்டிருந்தது.  அவ்விழாவில் விருது பெற மேடையேறிய  புகழ்பெற்ற நடிகை மெரீல்ஸ்ட்ரீப்  ட்ரம்ப்பின் மீதும் அவரது  குடியேற்ற தடை ச்சட்டத்தின் மீதும்  நேரடியாக  தாக்கி பேசி கலைஞர்களின் கருத்துரிமையை நிலைநாட்டினார்.  அவர் பேசியைதையொட்டி ட்ரம்பும் பதிலுக்கு  மெரீல் ஸ்ட்ரீப் தகுதிக்கு மீறி புகழ்பெற்றுவிட்ட நடிகை அதனால்  அவர் பேசியதை நான்  பொருட்படுத்தவில்லை என  ட்விட்
செய்ய ஒட்டுமொத்த ஹாலிவுட்டும் ட்ரம்பின்  இந்த ட்விட்டை  எதிர்க்க துவங்கியது.

காரணம் மெரில் ச்ரீப்பின் தகுதி அப்படி. க்ராம்ர் வெர்சஸ் க்ராமர் படத்தில் அவர் நடிப்பை கண்டு வியாக்காதவன் சினிமா ரசிகனாகவே  இருக்க முடியாது .சிறந்த நடிகைக்காக   மூன்று முறை ஆஸ்கார் விருதை பெற்ற மெரீல்ஸ்ட்ரீப்  இதுவரை அதிக முறை  ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்டவர்கள் பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுவருகிறார் என்பதுதான்  ஹைலைட். மொத்தம் 19 முறை . உலகின் எந்த நடிகருக்கும் நடிகைக்கும் இல்லாத இந்த சிறப்புமிக்க நடிகையை பார்த்து ட்ரம்ப் அவர் தகுதிக்கு மீறி புகழப்பட்ட்டவர்  என பழித்துக்கூறியதுதான்  பலரையும் உசுப்பிவிட்டது.

விருதுகமிட்டி இதற்காகவே மெரீல் ஸ்ட்ரீப்பை அழைத்து இந்த வருட விழாவில் முதல் வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்  அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அரங்கத்தையே எழுந்து நின்று ஒரு நிமிடம் கைதட்ட வைத்து கவுரப்படுத்தியது .
 விழாவின் ஹைலைட்டே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் ரேடியோ ஜாக்கியும் நகைச்சுவை நடிகருமான ஜிம்மி  அசராமல் நாசூக்காக சந்தர்பம் கிடைத்த போதெல்லாம் ட்ரம்பை நாகரீகமாக போட்டுததள்ளினார்.

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு உடனடியாக ரிட்விட் கொடுக்கும் ட்ரம்ப் நிகழ்ச்சி துவங்கி இவ்வளவு நேரமாகியும் இதுவரை ஒரு ட்வீட்டும் போடவில்லையே அவர் இப்ப என்ன செய்கிறார். நிகழ்ச்சியை பார்க்கிறாரா இல்லையா என மேடையிலே கலாய்த்த  ஜிம்மி கிம்மல்  அங்கேயே செல்போனில் ட்ரம்புக்கு என்ன செய்யறீங்க ட்ரம்ப் என ட்வீட்செய்து அதை ஸ்க்ரீனில் அனைவருக்கும் லைவ்வாக காண்பித்தது ஹைலைட்.. ஒருவகையில் கிம்மல் செய்தது கொஞ்சம் கூடுதலாக தெரிந்தாலும் இதுதான் இன்றைய இணைய உலகம் தனி மனிதனுக்கு வழங்கியிருக்கும் உச்சபட்ச சுதந்திரம் என்பதையும் மறுப்பதற்கில்லை. விழாவில் ரெட் கார்பட்டிலேயே  அனைவரையும் அசத்தியவர் நம்மூர் ப்ரியங்கா சோப்ரா தான். வெள்ளியாக ஜிலுஜிலுத்த அவரது வித்தியாசமான கவுன் அனைவரையும் எட்டி பார்க்கும்படி ஈர்த்தது.

சிறந்த நாயகனுக்கான விருதை மான்செஸ்டர்  பை தி சீ படத்தில்  நடித்தமைக்காக பெற்ற   கேசீ அப்ளக்  கின் குட்டி குடுமி விழாவில் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி அறிவிப்பாளர் ஜிம்மி கிம்மல் அந்த கவர்ச்சியான குடுமி பற்றி மெடையில் விவரிக்க பின்னால் அமர்ந்திருந்த மேட் டாமன் அதை கையால் அசைத்து காண்பித்தது கூடுதல் அழகு.
சிறந்த படத்தை வென்ற மூன்லைட் கறுப்பின மக்களின் வாழ்க்கையின் அவலத்தை சொல்லும் படம் சிறுவன்,

மாணவன், இளைஞன் என  அன்புக்காக ஏங்கும் நாயகனது மூன்று பருவ வாழ்க்கையை சித்தரிக்கிறது.  சிறந்த படத்தோடு சிறந்த  திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ( மகேஷாலா அலி) என மேலும் இரண்டு விருதுகளை க்குவித்த இப்படம்   ஒரு பாலுறவை மையமாக கொண்டு  எழுதப்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக கவனிக்கப்படவேண்டியது.
இதே  போல கறுப்பின மக்களின் வாழ்வை சொன்ன பென்சஸ்  படத்தில் நடித்தமைக்காக  சிறந்த துணை நடிகைக்கான விருதை வயோலா டேவிஸ் பெற்றார்.

ஒரே சமயத்தில் சிறந்த துணை  நடிகர் நடிகை இரண்டு விருதுகளும் கறுப்பின கலைஞர்கள் பெறுவதும் இதுவே முதல் முறை .
இந்த வருட விழாவின் சூப்பர் படம்  லா லேண்ட்  . சிறந்த இயக்கம் சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை ,சிறந்த பாடல் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு  என மொத்தம்  ஆறு விருதுகளை பெற்று  அசத்தியது.

லா லாலேண்டின் கதையில் அப்படி ஒன்றும் விசேஷம் எதுவும் இல்லை  இயக்குனர் விக்ரமனின்   பூவே உனக்காக,  உன்னிடத்தில் என்னைகொடுத்தேன் கதைகளின் உல்டாதான் .டத்தின் டைட்டிலும் இயக்குனர் விக்ரமன் பிராண்ட்  பின்னணி  இசையான லா லாலா வே வைத்திருப்பது  ஒரு ஆச்சர்யமான  ஒற்றுமை .

தன் திறமையை மறைத்து நாயகன்  தன் காதலியின் திறமையை வெளிகொணர்ந்து அவளை சினிமாநட்சத்திரமாக்குகிறான் .சில வருடங்களுக்குபின்   அவள்  இன்னொரு கோடீஸ்வர காதல் கணவனோடு கைகோர்த்தபடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில்  இவன் கூலிக்கு இசையமைக்கும்போது அவளை பார்க்கிறான் . அவள் கண்டுகொள்லாமல்  கடக்கிறாள் . இதுதான் கதை . நாயகி ரியான் கோஸ்டல்கிங்கின்  போதையூட்டும் கண்கள் ஆஸ்காருக்கும் மேல்.சிறந்த நடிகைக்காக இன்னொரு ஆஸ்காரும் தந்திருக்கலாம்

ம்யூசிக்கல் பட பாணியில் பாடல்களுடன்  முதல் பாதியும் இரண்டாம் பாதியில் அழுத்தமான காட்சிகளுமாக நகரும்  படத்தின்  திரைக்கதை  அப்படி ஒன்றும் பெரிய விசேஷம் இல்லை . இதற்கு முன் 14 நாமினேஷன் பெற்ற டைட்டானிக்   படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் லா லா  வெறும் லோ லோ தான் .

 இப்படியிருக்க சிறந்த படத்துக்கும் லா லா லேண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  அதனை அறிவிக்க வந்த நடிகரும் இயக்குனருமான  வாரன்பெட்டி கூற  அரங்கமே ஆச்சர்யப்பட்டது . லால லாலேண்ட் குழுவினரும் தங்கள் மேல் கொட்டும் இந்த திடீர் அதிர்ஷ்ட மழையை நம்ப முடியாமல் வியப்புடன் மேடைக்கு வந்துவிட  சினிமாக்ளைமாக்ஸ் போல இல்லை இல்லை தவறாக வாசித்துவிட்டேன் சிறந்த படம் மூன்லைட் தான் என வயதான வார்ன்பெட்டி திருத்திகூற லா லா லேண்ட் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து நிற்க திடீர் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிபோய் மூன்லைட் குழுவினர் மெடையேறி சிறந்த படத்துக்கான பரிசை பெற்றனர்.
இவ்வளவுபெரிய நிகழ்ச்சியில் இப்படியான தவறுகள் குழப்பங்கள் நடக்க  வாய்ப்பே இல்லை .

 நம்மூர் தொலைகாட்சி நிகழ்ச்சிகல் டி ஆர்பிக்காக நடத்தும்  திட்டமிட்ட திரைக்கதைகள் ஆஸ்கார் விழாவிலும் நடக்கும் . இவை நிகழ்ச்சியின் சுவார்சியத்துக்காக  திட்டமிட்டு நடத்தப்படும் குழ்ப்பங்கள் என பலரும் கூறுகின்றனர்.  இதையே  இந்திய இயக்குனரும் முன்னாள் ஆச்கார் விருதாளாருமான  இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமலன் போன்றவர்கள் டிவிட்டரில் பதிவு செய்திருக்கின்ற்னர்.
அஜயன் பாலா



No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...