August 31, 2016

எங்கே என் நண்பன் அப்பாஸின் வீடு ?



எங்கே என் நண்பன் அப்பாஸின் வீடு ?
அஞ்சலி : ஈரானிய இயக்குனர்  அப்பாஸ் கியாரேஸ்தமி (1940-2016)
-      அஜயன் பாலா


ஈரானின் அறிவுலக இலச்சினை அப்பாஸ் கியாரோஸ்தமி  கடந்த மாதம் இறந்த போது உலகசினிமாவின் ஒரு அடையாளம்   தன்னை அழித்துக்கொண்டதாகவும் ,ஒரு மைல் கல் தன்னை மாய்த்துக்கொண்டதாக உணர முடிந்தது.

ஈரானின் சத்யஜித்ரே என அழைக்கும் அளவிற்கு மிக உன்னத படைப்புகளை காலத்தால் அழியாத காலசித்திரங்களை வழங்கியவர் .

இன்று அவர் இல்லை ..ஈரான் இனி என்ன செய்யும்
அதன் சூரியன் நிரந்தரமாக மறைந்துவிட்டது.

அவரது   மரணச்செய்தி அந்தரத்தில் தொங்கும் கண்ணீர் துளியாக நெடு நேரம் என்னை யோசிக்க வைத்தது.
பதட்டமில்லாத  உணர்ச்சியில்லாத அவரது விவரணை பார்வையாளனுக்குள் மிகுந்த தாக்கத்தை உண்டாக்க வல்லவை
அவரது படங்களை பார்க்கும் போது காமிராவை பிடித்தது கடவுளின் கையோ என நினைக்கத் தோன்றும்.

ஒரு தந்தையின் கரத்தை நம் தோளில் உணர்வது போல பார்வையாளனுக்குள் ஒரு பிரமை   உண்டாக்கக்கூடியது அப்பாஸ் கியாரஸ்தமியின்  காட்சி மொழி.

அவர் நினைத்தால் கதையின் மிகை உணர்ச்சியில் நம்மை சிக்க வைத்து கண்ணீரை கொட்ட வைக்க முடியும்,
ஆனால் அப்பாஸ் அதை ஒரு போதும் செய்ய விடுவதில்லை
மாறாக நம் அறிவு புலன்களை தீவிரமாக இயக்க வைத்து  படைப்பாக மாற்றுகிறார்.
அவருடைய கதைகளிலும் வலி நிறைந்த வாழ்வு இருக்கிறது
அன்பும்  நெகிழ்ச்சியுமான மனிதர்கள் இருக்கிறார்கள்
ஆனால் அவர்களின் உணர்வை காட்டிலும் கதையின் முக்கியமான சிடுக்கை காட்டிலும் அவர்களை சுற்றி சுழன்றிருக்கும் அரசியலை, அதன்  மாய வலைப்பின்னலை  நம்மில் உணரசெய்து நம் தகுதியை உயர்த்த செய்கிறார்.

அவரது படங்களில்   எனக்கு மிகவும் பிடித்த திரைப்படம்   வேர் ஈஸ் மை பிரண்ட்ஸ் ஹோம்  where is my friends home
எங்கே என் நண்பனின் வீடு

பாக்கெட்டில் வைக்கும் நோட்டு போல குட்டியான அழகான கதை.  


படம் பாள்ளிக்கூடத்தில்  துவங்குகிறது . மாணவர்கள் வகுப்பறைக்கு ஓடுகிறார்கள். வகுப்புகள் துவங்குகின்றன .ஒரு வகுப்பில் ஆசிரியர்  வீட்டு பாடம்  எழுதியாச்சா என விசாரிக்கிறார். முதல் வரிசையில்  தன் அருகில் அமர்ந்திருக்கும் ஒரு ஏழை மாணவன்  வீட்டு சூழலால் பாடம்  எழுதவில்லை . அவனை ஆசிரியர்  நாளை அவசியம் எழுதவேண்டும்  இல்லாவிட்டால் டிஸ்மிஸ் என கடுமையாக எச்சரிக்கிறார், இதை பரிதாபத்துடன் பார்க்கிறான் நம் ஹீரோ.

பள்ளிகூடம் முடிந்து வீடு வருகிறான்.. பையை திறந்தால்  திட்டு வாங்கிய ஏழை மாணவனின் வீட்டு பாட நோட்டு தன் பையில் . பதட்டத்துடன்  அதை கொண்டு போய் நண்பனிடம் இரவே சேர்க்க அவன் வீட்டை தேடி  அந்த சிறுவன் அலைவது தான் கதை. இரவு நெடுநேரம் அங்கு இங்கு அவன் அலைந்து வீட்டை கண்டுபிடிக்க முடியாமல் திரும்புகிறான். மறுநாள் அந்த பையனுக்கு என்ன ஆனது என்பது இவன் அதன் பொருட்டு என்ன செய்கிறான் என்பதுதான் கதையின் இறுதி முடிச்சு அதன் சாரம்சம்.
இந்த அற்புதமான படத்தின் கதைக்கரு அவருக்குள் உருவாக காரணம் ஒரு கவிதை, அதை எழுதியவர் ஷோரப் ஹெபாரி ஈரானிய கவிஞர். அக்கவிதை


எங்கே என் நண்பனின் வீடு


 இருள் கவிழும் அந்திபொழுதில்
 குதிரை மீதமர்ந்தவன் 
வழிப்போக்கனிடம் கேட்டான்

 எங்கே அந்த நண்பனின் வீடு?


நிச்சலனமற்றிருந்தது வானம்
வழிப்போக்கன் உதட்டிலிருந்து
மிகபெரிய கிளை முறிந்தது

இருண்டு கிடந்த மணல்வெளி நோக்கி
உயர்ந்தன அவன் கைகள்

சற்று தொலைவிலிருந்த  பாப்ளர் மரத்தை
விரல் சுட்டி காண்பித்து சொன்னான்
அந்த மரத்தின் எதிரே
அங்கே ஒரு வழித்தடம்
கடவுளின் கனவை காட்டிலும்
அடர்ந்த பச்சை தோட்டத்தின் நடுவே
அதனோடு உண்மையான நட்பு
 நீல நிற ரெக்கையாக 
 காதலோடு  விரிந்து கிடந்தது
 அந்த வழிதடமேகினால் இறுதியில்
 அறிவின் எல்லைகளுக்கெல்லாம் அப்பால்
 ஒரு மலரின் முன் நாம் நிற்பதை
  உணர முடியும்
  மலரை நெருங்குவதற்கு முன்
  எல்லாக்காலத்துக்குமான
  தொன்ம கதைகளில் வரும்
  அந்த  நீரூற்று முன் நில்லுங்கள் 
 
  கட்புலனாகும் ஒரு பயங்கரம்

  அத் தருணத்தில் நம்மை
  உறை நிலைக்குள் தள்ளும்

  உண்மையும் சிரத்தையுமாக
  நீல வானம் ஓடை போல  நகரும்
  வேகமாய் தலையசைக்கும்
  உயர்ந்த பைன் மரங்களின் 
  இரைச்சலை அப்போது கேட்க முடியும்

 அங்கு ஒளிக்கூட்டிலிருந்து 
 மேவாய் தூக்கி ஒரு குழந்தை பார்க்கும்

  அக்குழந்தையிடம் கேளுங்கள்

  எங்கே அந்த நண்பனின் வீடு

                             மூலம்   : ஷோரப் ஷெப்ரி
                            தமிழில் : அஜயன் பாலா
இந்த கவிதைக்கும் படத்துக்கும்   எந்த விதத்தில்  தொடர்பு என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்  அப்பாஸ் இந்த கவிதையை எப்படியாக உள்வாங்கி அந்த கதையை செதுக்கிக்கொண்டார் என்பதன் மூலம் அவரது படைப்பாற்றலின் ஊற்றுக்கண்னை நாம்  கண்டுகொள்ள முடியும்.

1940 ல்  டெஹ்ரான் நகரத்தில்  பிறந்த அப்பாஸ் கியாரஸ்தமி  க்கும் ரேவுக்கும் பல ஒற்றுமைகள் .ரேவை போலவே ஒரு ஓவியராகவும்  தொடர்ந்து அவரை போலவே விளம்பர துறையிலும் பின்  அவரை போலவே சிறுவர் நூல்களுக்கு அட்டை வடிவமைப்பாளராகவும் பணி புரிந்துள்ளார்.

1970ல் ஈரான் சினிமா கவ் எனும் படத்தின் மூலம்  புதிய பாதையை உருவாக்க அதன் தொடர்ச்சியாக 1970ல்  அப்பாஸ் கியாரஸ்தமி  12  நிமிடத்தில்  bread and alley  என்ற முதல் படத்தை  இயக்குகிறார். முதல் படத்திலேயே அவர் வழக்கத்தை மீறிய புதிய பாணியில் படம் பிடிக்க துவங்க அது காமிராமேனுக்கு புரியவில்லை.அவரிடம் விளக்கி படம் எடுப்பதற்க்குள்  மலையை உருட்டும் காரியமாகிவிட்டதாக பின்னாளில் கூறுகிறார்.
 
தொடர்ந்து அவர் பல குறும்படங்களை இயக்கி வந்தபின்தான் 1989ல்  வேர் ஈஸ் மை பிரண்ட்ஸ்  ஹோம் மூலம் உலக சினிமாவின் இயக்குனராக அறியப்படுகிறார்.

1987ல் வெளியான இப்படம் அவரது  திரைப்பட வரலாற்றின் திருப்புமுனை  படம் என்று மட்டுமல்லாமல் ஈரானிய சினிமாவுக்கே புதிய வெளிச்சத்தை உலகம் முழுக்க பெற்றுதந்த படம் என்றும் கூட சொல்லலாம் .

ஈரானிய சினிமாவின் இன்னொரு திரைப்பட மேதையான மோஷன் மக்பல்ஃப் பின் தி சைக்ளீஸ்டும் இதே ஆண்டில்தான் வெளியானது.


இந்த இரண்டு படங்களும் உலக சினிமாக்களில் உண்டாக்கிய அதிர்வலைகள் காரணமாக தொடர்ந்து பல உலக படங்கள் ஈரானிய சினிமாவில் வெளியாகி உலகுக்கே அன்பையும் சகோதரத்துவத்தையும் சிறுவர்களின் அக உலகம் மூலமாக காண்பித்தது.

ரே எப்படி பதேர் பாஞ்சாலிக்கு பிறகு  அபராஜிதோ அபு சன்ஸார் என அபு  ட்ரையாலாஜி எடுத்தாரோ அதே போல அப்பாஸ் கியாரஸ்தமியும்    வேர் ஈஸ் மை ப்ரண்ட்ஸ் ஹோம்  படத்தைத் தொடர்ந்து   லைஃப் அண்ட் நத்திங் மோர், த்ரூ தி ஆலீவ் ட்ரீஸ் ஆகிய படங்களை இயக்கி அதற்கு கோக்கர் ட்ரையாலஜி என்றும் பெயர் சூட்டினார் .

அப்பாஸின் படங்களில் விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்படும் படம் க்ளோஸ் அப்
1990ல் வெளியான இப்படத்தின் கதை மிகவும் சுவாரஸ்யமானது உண்மை சம்பவமும் கூட . உலகில் எதார்த்தத்திற்கு மிக நெருக்கமான படம் என்றால் அந்த பட்டியலில் முதல் படமாக இடம் பெறகூடிய படம் க்ளோஸ் அப்

ஈரானில் அப்பாஸ் கியாரஸ்தமி போலவே புகழ்பெற்ற  உலகசினிமாவின் இன்னொரு நட்சத்திர  இயக்குனரான  மோஷன் மக்பல்ஃப் போல தோற்றம்  கொண்ட ஒருவன்  எதேச்சயாக பேருந்தில்  பயணிக்கும் போது அருகில் அமர்ந்திருக்கும் குடும்பப் பெண் அவனை உற்று  பார்க்கிறாள் . நீங்கள் பிரபல இயக்குனரான மக்பல்ஃப் தானே எனக்கேட்க அவனும்  ஆமாம் என தலையசைக்கிறான். அப்படி ஆரம்பிக்கிற நாடகம் தொடர்ந்து அப்பெண்மணி கேட்கும் கேள்விகளுக்கேற்ப  பதில் சொல்லி தான் மக்பல்ஃப்தான் என நம்ப வைக்கிறான் . அவளுக்கோ மகிழ்ச்சி தாங்கவில்லை . உலகமே போற்றும் இயக்குனர் இயல்பாக பழகுகிறாரே என வியந்து தன் முகவரி கொடுத்து வீட்டுக்கு வரசொல்கிறாள். அவனும் வீட்டுக்கு வர வீட்டார் விழுந்து விழுந்து உபசரிக்கின்றனர். அடுத்த படத்தை இயக்க பணமில்லை அதற்காகத்தான் அலைகிறேன் எனக்கூற அவர்கள் பணமும் கொடுத்து உதவுகின்றனர். பின்னர்தான் அவன் போலி மக்பல்ஃப் என தெரிய வந்து விவகாரம் போலீசுக்கு செல்கிறது . அவனும் குற்றத்தை ஒப்புக்கொள்ள வழக்கு விசாரணைக்கு வருகிறது.  நீதிமன்றத்தில் தீர்ப்பு பெறுவதும் பின் ஒரிஜினல் மோஷன் மக்பல்பே அவனோடு சேர்ந்து அவனால் ஏமாற்றப்பட்ட குடும்பத்திற்கு வந்து சமாதானம் ஆவதும்தான் கதை.

உண்மையாக நடந்த இச்சம்பவத்தை அப்படியே அதே பாத்திரங்களை கொண்டு அதே இடத்தில் திரும்ப நடிக்க வைத்து இயக்கினார்.  சில காட்சிகளை குறிப்பாக கோர்ட் விசாரனை காட்சிகளை நேரடியாக படம்பிடித்து இணைத்துள்ளார்.  இதனை படம்பிடிக்கும் அப்பாஸும் படத்துக்குள் வருவார்.  விசாரணையை படம்பிடிக்க   அவர் அரசாங்கத்திடம்  கேட்கும் காட்சி முதல் படம் முழுவதும்  இதனை பார்த்துக்கொண்டிருக்கும் நாம் கூட சினிமாவில் இடம்பெறுகிறோமோ என ஐய்யத்தை உண்டாக்கும் வகையில் மிக நெருக்கமான படமாக அவர் இதை உருவாக்கியிருந்தார். கொஞ்சம் பிசகினாலும் இது ஒரு டாக்குமண்டரி படமாக மாறிவிடும் . ஆனாலும் அவர் இதை புனைவாக்கும் துல்லியம்தான் அப்பாஸின் மேதமை வெளிப்படும் இடம்.

இறுதிக்காட்சியில் ஒரிஜினல் மக்பல்ஃப் போலியை பின்னால் உட்காரவைத்து டூவீலர் ஓட்டிக்கொண்டு வருவார். பின்னால் உட்கார்ந்து வரும் போலி ஆசாமி கையில் ஒரு ரோஜா செடி இருக்கும். இந்த செடியை நடுவில் வைத்து இருவரது முகமும் க்ளோசப்பில் இருக்குமாறு காணப்படும் அந்த  நீண்ட பாலோ ஷாட்   நமக்குள் அன்பின் உடைப்பை நிகழ்த்தும் . அதுதான் அப்பாஸின் இயக்கத்தின் மேதமை

பொதுவாக இது போன்ற உண்மைக்கு நெருக்கமான படம் பண்ணுபவர்கள் உணர்ச்சியை  உருவாக்குவதில் பின் தங்கி விடுவார்கள். டிராமாவை அறவே வெறுப்பார்கள்,
ஆனால் அப்பாஸின் படங்களில்  பெரும் பாறையில் சிறு செடி ஒன்று காற்றில் வேகமாக ஆடிக்கொண்டிருக்கும்
அதுதான் அவரது படங்களின் தனிச்சிறப்பு

பிற்பாடு  ரோபர்ட்டோ ரோஸலினி , ட்ரூஃபோ  , பெலினி உள்ளிட்ட உலகின் சிறந்த இயக்குனர்களின் பேரால் வழங்கப்படும் அத்தனை விருதுகளையும் வாங்கினார்
மட்டுமல்லாமல் ,  சில்வர் லயன் வெனிஸ் விருது ,மற்றும் கேன்ஸ் விருது ஆகியவற்றையும் பெற்று சிறப்புக்கு அரிய பல உயரங்களை அடைந்தார். கடந்த ஜூலை 13ம் தேதி   உடல்  நிலை  சரியில்லாமல் மருத்துவ சிகிச்சை பெறும் தருவாயில் முழுமையாக விடைபெற்றார்.

நன்றி : பல்சுவை காவியம்  மாத  இதழ்
செப்டம்பர் 2016


No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...