July 31, 2016

சினிமா இயக்குனர்களுக்கான வழித்துணை கையேடு ; விக்னேஷ்வரனாகிய நான் ,நூல் விமர்சனம் :


நூல் விமர்சனம் :


விக்னேஷ்வரனாகிய நான்   ஆசிரியர் இயக்குனர் ஏ.வெங்கடேஷ்  

        
   சினிமா பற்றி தமிழில்  வருடம் தோறும் பல புத்தகங்கள் வந்து கொண்டேயிருக்கின்றன.  ஆனால் கோடம்பாக்கத்தை புரிந்து கொள்ள எந்த புத்தகத்திலும் சாவிகள் இல்லை. குறிப்பாக உதவி இயக்குனர் காலத்திலும் இயக்குனருக்கான முயற்சியின் போதும் படப்பிடிப்பு  தளங்களிலும் உளவியல் சார்ந்தும்  நடைமுறை பிரச்சனை சார்ந்தும்  பல சிக்கல்களை   ஒருவன் எதிர்கொள்ளகூடும்.   பாக்யராஜ் அவர்களின் வாங்க சினிமாவை பற்றி பேசலாம் எனும் ஒரு புத்தகம் தான்.  அதுவும் கூட திரைக்கதை பற்றியே பெரிதும் பேசியது. இந்நிலையில்  உதவி இயக்குனர்களுக்கு ஒரு பைபிள் போல வந்திருக்கும் வழி காட்டி தான் இயக்குனர்.ஏ.வெங்கடேஷ் அவர்கள் எழுதி டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடாக வந்திருக்கும் விக்னேஷ்வரனாகிய நான் எனும் புத்தகம்.

               ஏ .வெங்கடேஷ் ஒரு கமர்ஷியல் இயக்குனர்  அவரிடம் கற்றுக்கொள்ள என்ன இருக்கிறது என உலக சினிமா மேதைகள் சிலர் நினைக்கலாம்.   அவர்கள் மட்டுமல்ல வாழ்க்கை எனும் போர்களத்தில் நின்று வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் ஒவ்வொருவரும் அவரிடம் கற்க பல விஷயங்கள் இருக்கிறது.

              ஹாலிவுட்டில்   studio darlings  என இயக்குனர்கள் சிலரை வகைப்படுத்துவார்கள் . கோடம்பாக்கத் தமிழில்  தயாரிப்பாளர்களின் காதலி.  இந்த காதலிகள் உள்ளடக்கத்தை விட  உற்பத்தியில் அதிக கவனம் செலுத்துபவர்கள். பத்து ரூபாய் காரியத்தை எட்டு ரூபாயில் முடிப்பார்கள் சரியான திட்டமிடல்  கடும் உழைப்பு இரண்டும் இவர்களின் சொத்து. குறித்த காலத்திற்கு முன்பாக படத்தை முடித்து செலவைக் குறைப்பது அவர்கள் அணுகுமுறை . தமிழில் அதற்கு சரியான உதாரணம்  ஏ வெங்கடேஷ் அவர்கள். இவருக்கு  முன்னோடியாக கே எஸ் ரவிக்குமாரை சொல்லாம். இவர்களின் படத்தை போலவே தினசரி வாழ்விலும் எப்போதும் துடிப்போடும் ஆற்றலோடும் இருப்பார்கள் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்குமேலாக தொடர்ந்து படங்களை இவர்கள் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் அதன் சூட்சுமம்  இதுதான். சினிமா என்பது பல பேருக்கு சோறு போடும் வர்த்தக  இயந்திரம் என்ற கோணத்தில் பார்த்தால் இவர்கள்  இண்டஸ்ட்ரிக்கு பிரம்மாக்கள் . நான் என்னதான் உலக சினிமா பற்றி எழுதினாலும் இந்த தொழில் இயந்திரத்தில் நானும் ஒரு சிறிய ஆணி என்ற எண்ணம் எப்போதும் எனக்கு உண்டு. இவ்வகை யில் இவ்வகை இயக்குனர் மேல் முன்னோடிகளாக மதிப்பும் மரியாதையும் உண்டு. .
        
         ஏ.வெங்கடேஷ் சாருக்கும் எனக்கும்  காமன் பிளாட்பார்ம்  இயக்குனர் கே.ராஜேஷ்வர் அவர்கள். இருவருமே அவருடைய உதவியாளர்கள் . அவர்  பணியாற்றி பத்து வருட இடைவெளிக்கு பின் நான் சேர்கிறேன்.  அவரை முதன் முதலாக சந்தித்ததும் கே.ராஜேஷ்வர் அவர்களின் துறைமுகம் படப்பிடிப்பில் தான் . எனது சினிமா வாழ்க்கை க்கு பிள்ளையார் சுழி போட்ட படம் அது.

ஒருநாள் குஷால் தாஸ் கார்டனில் படப்பிடிப்பு . ஸ்பாட்டில் நான் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த போது இயக்குனர் ராஜேஷ்வருடன் கண்ணாடி போட்டு இன் பண்ணியபடி பணிவாக ஒருவர் பேசிக்கொண்டி ருந்தார். அவர்தான் இயக்குனர்  ஏ.வெங்கடேஷ் . ஷங்கர் அசோசியேட் மகா பிரபுன்னு  ஒரு பிரம்மாண்ட படம் பண்ணிக்கிட்ருக்கார், பின்னால் இன்னொரு அசிஸ்டண்ட் என்னிடம் அவசரமாக காதில் ஓதினான். (மகா பிரபு அப்போது மிகபெரிய அளவில் எதிர் பார்ப்பில் இருந்த படம்.)  அந்த ஒரு செகண்ட் தான் அந்த காட்சி . ஆனால் அது மனதில் ஸ்திரமாக ஒட்டிக்கொண்டது. காரணம் இயக்குனர் முன்  மகா பிரபு காட்டிய அலாதி பணிவு, உடல் மொழி.

                அதன் பிறகு காலங்கள் உருண்டன. ஏ.வெங்கடேஷ் கமர்ஷியல் இயக்குனராக இண்டஸ்ட்ரியில் கொடிகட்டி பறக்க துவங்கினார்  , நானும் என் பணியில் ..இப்போது நண்பர் ஒருவர் மூலமாக வெங்கடேஷ் அவர்கள் என்னை அழைக்க அவரை பார்க்க செல்கிறேன். இடைப்பட்ட காலத்தில் கிட்டத்தட்ட 20 படங்கள் இயக்கி பேரெடுத்தவர். ஆனால் இன்றும் நான் முதன் முதலாக பார்த்த அதே பணிவு பதட்டம்  வெற்றிபெற வேண்டும் என்ற துடிப்பு . நேரடியாக பேச்சை துவக்கினார் “மனிதன் படம் பார்த்தேன் உங்க  டயலாக்ஸ்  பிடிச்சிருந்தது. என்னோட அடுத்த படத்துல உங்க கூட வொர்க் பண்ணலாம்னு நெனக்கிறேன்.”
      எனக்கு தயக்கம் ,“சார் நான் கொஞ்சம் சிரியஸ் ..  நீங்க பக்கா கமர்ஷியல்  எனக்கு பஞ்ச் டயலாக்லாம் எழுத வராது. எதார்த்தமான உரையாடல் தான் என்னோட ஸ்டைல்  

      ”சார்  இந்த படம் கமர்ஷியல்,கொஞ்சம் வெரைட்டி வித்யாசமான த்ரில்லர்..
        உங்களை மாதிரி ஒரு ரைட்டர் இருந்தா ப்ராஜக்ட் நல்லா இருக்கும்னு யோசிக்கறேன். ”
            பின் சுருக்கமாக கதையை சொன்னார். ரொம்ப பிடித்து போனது. ஹிட்ச்காக் பாணீ த்ரில்லர்.  எழுதித்தான் பார்ப்போமே என ஒத்துக்கொண்டேன் . உடனே செக்கை போட்டு அட்வான்ஸ் நீட்டினார். வாழ்க்கை அதை பிடுங்கிக்கொள்ளும் கண்டிஷனில் இருக்க  வாங்கிக்கொண்டு வீடு வந்துவிட்டாலும்  ஒரு தயக்கம் இருந்துகொண்டே இருந்தது.  இதுவரை பணியாற்றியவர்கள் அனைவரும் சமவயதினர் . ஆனால் முதன்முறையாக  வயதிலும் அனுபவத்திலும்  மூத்த ஒருவரிடம் பணியாற்ற போகிறோம் எப்படி  என்பது போல ஒரு தயக்கம். கருத்துகள் வெளிப்ப்டையாக முன் வைப்பது என் வழக்கம் ஏற்றுக்கொள்வாரோ இல்லையோ என்றும் ஒரு அச்சம் .

          சில நாட்கள் கழித்து அவரது இந்த புத்தகம் தயாரான நிலையில் படிக்க கொடுத்தார். இக்கட்டுரைகளை படிக்க துவங்கிய நான் அடடா  இப்படி ஒரு மனிதரிடமா பணியாற்ற போகிறோம் என உள்ளம் துள்ள துவங்கியது.
                அப்படி  அந்த புத்தகத்தில் என்ன இருக்கிறது என உங்களுக்கு கேள்வி எழலாம். வாழ்க்கை இருக்கிறது . வாழ்க்கையை விட சிறந்த பல்கலைகழகம் எதுவும் இருக்கமுடியாது. கிட்ட்த்தட்ட இருபதுக்கும் மேற்பட்ட படங்களை இயக்கி வெற்றிகளையும் தோல்விகளையும் ரோலர் ஸ்கோலர் போல மாறி மாறி சந்தித்த அவரது அனுபவங்களுக்கு பின்னால் இருக்கும் வலியும் அழுகையும் கோபமும் புன்னகையும் மகிழ்ச்சியும் களிப்பும்  தான் இந்த புத்தகம் . 

           இதில் மொத்தம் 31  பகுதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரச்சனை, அதனால் உணடான அழுத்தம் அதை தீர்க்க அவர் போராடிய விதம் என சுருக்கமாகவும் விறுவிறுப்பாகவும் விவரிக்கிறார்.

          சிறுவயது சூழல் இளமைக்கால வறுமை. படித்து முடித்து வேலை தேடும் படலம், வாய்ப்பு தேடி கோடம்பாக்கம்  வீதிகளில் படிகளாய் ஏறிய காலம் என ஒவ்வொரு காலத்திலும் தான் பெற்ற அறிவை கற்றுக்கொண்ட பண்புகளை   நம்மோடு அழகாக கடத்திவிடுகிறார்.
             இவற்றை வரிசையாக சொல்லியிருந்தால் கூட புலம்பலாக இருந்திருக்கும் . போரடித்திருக்கும் . புத்திசாலித்தனமாக நடைமுறை வாழ்க்கையில் துவங்கி ஷங்கருடான ஜென்டில் மேன் அனுபவங்களை சொல்லி போகிற போக்கில் தன் வலிகளையும் இதயத்தில் சுருக்கென குத்தி போகிறார்.

            ஒரு பகுதியில் படிப்பு முடித்து குடும்பத்தை காப்பற்ற பஸ் ஸ்டாண்டில் தள்ளுவண்டியில் கூவி கூவி ஜூஸ் விற்கிறார், சட்டென அவர் குரல் கம்முகிறது அவர்முன்  முன்னாள் காதலி அப்பா அம்மா ஆகியோர் .அவமானம் ஒருபக்கம்  ஆனாலும்  தொடர்ந்து கூவுகிறார். அவர்களையும் வாங்கி பருகசொல்லி கூவுகிறார். அங்கிருந்து அந்த பெண்னை முதன்முதலாக பார்த்த அனுபவம் விரிகிறது. காதல் கதையானாலும் அதில்  நாம் வாழ்க்கையில் கற்றுக்கொள்ள ஒரு அழுத்தமான வாழ்க்கை பாடத்தை நமக்கு விட்டு செல்கிறார்.

           ஜென்டில் மேன் படப்பிடிப்பு , முழுதுமாய் முடிய இன்னும் நான்கே நாட்கள் தான் . இந்நிலையில் கேம்ரா மேன் ஜீவாவுக்கும் இயகுனர் ஷங்கருக்கும் சட்டென முட்டிக்கொள்கிறது. இனி ஜீவா வேண்டாம் என ஷங்கர் முடிவெடுக்கிறார். ஜீவாவும் இனி இந்த படமே வேணாம் என முடிவுக்கு வருகிறார். அசோசியெட்டாக அப்படத்தில் பணிபுரியும் வெங்கடேஷ்  சட்டென ஷங்கரிடம் ஒரு வார்த்தை சொல்கிறார். நின்ற படப்பிடிப்பு மீண்டும் இயங்குகிறது. பிரம்மாண்டமான வெற்றி பெற்று தொடர்ந்து அந்த கூட்டணி பல வெற்றி படங்களையும் படைத்தது வரலாறு.
            அப்படி அவர் சொன்ன வார்த்தை என்னவாக இருக்கும் யோசித்து பாருங்கள்.இப்படி ஒவ்வொரு பகுதியிலும் ஒரு மிளகாய் வெடி நம்மை அசரவைக்கிறது. அதே போல எழுத்தும் அத்தனை செறிவு  அத்தனை  துல்லியம் .சொல்ல வந்த விஷயத்தை  நறுக்கென சொல்லுகிறார். பல நாளா பத்திரிக்கையில் டெஸ்க் வொர்க் அனுபவஸ்தர்களுக்கு கூட வாய்க்காத ஒரு கச்சிதம் ஒவ்வொரு கட்டுரையிலும் நம்மை புத்தகத்தை கையை விட்டு இறங்க விடாமல் கட்டிப்போடுகிறது .

          இந்த புத்தகத்திற்கு இயக்குனர் ஷங்கர் மற்றும் வசந்த பாலன் இருவரும்  எழுதியிருக்கும் முன்னுரைகள் புத்தகத்திற்கு கூடுதல் மதிப்பை உண்டாக்குகிறது,பதிப்பித்த டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பனுக்கு வாழ்த்துக்கள். இது போன்ற அனுபவ கட்டுரைகள் இன்னும் ஷங்கர் மணிரத்னம்  போன்றவர்களிடமிருந்து தெரிந்து கொள்ள  ஆவலை உண்டாக்குகிறது இப்புத்தகம்.
.

புத்தகத்தை ஆன்லைனில் பெற       www.discoverybookpalace.com    அணுகவும். 

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...