February 10, 2016

நான் உருவான கதை இயக்குனர் தங்கர் பச்சானுடன் ஒரு நேர்காணல் : அஜயன் பாலா

 எந்த ஒரு படைப்பாளியும் தானாக உருவாகி விடுவதில்லை. சமூகம் அரசியல் பொருளாதார சூழல்களின் நெருக்கடியில் இருந்துதான் திறமைகள் கூடிய ஒரு மனிதன் படைப்பாளியாக மன வெளிப்படுகிறான்.  என்னதான்படிப்புகள் அவன் தன்பெயருக்கும் புகழுக்காகவும் வெளிப்படுத்த வேண்டிய அவசியத்தின் காரணமாக உருவாகிறது. அந்தந்த படைப்புகளில் அவன் வளர்ந்த உலகம் அரசியல் பொருளாதார சமூக சூழல் நேரடியாகவோ   மறைமுகமாகவோ  பொதிந்திருக்கும்.  தங்கர்பச்சானின் படைப்புலகம் ஊடகம் இல்லாமல் நம்மோடு பேசுபவை.  தமிழ் சமூகத்தின் நாவீன யுககூட்டுமனநிலை யால் 2000க்கு முன் நிகழ்ந்த விசயங்கள் எல்லாம் அருவெறுப்பாக கருதப்பட்டு படைப்பாளிகளால் நிராகரிக்கப்பட்டதோடு அவற்றை எல்லாம் தன் படங்களில் எடுத்து திணித்து அவற்றின் மீது மதிப்பீட்டை உருவாக்கித்தந்ததில் முக்கிய பங்குஉண்டு. குறிப்பாக பொது இடங்களில் கூழ்குடிப்பது (சொல்லமறந்த கதை) இலக்கிய சிந்தனைகளை திறையில் காண்பிப்பது ( காதல் கோட்டை) பனம் பழம் சாப்பிடுவது. செம்பட்டைகேசட்டுடன் காண்பிப்பது அசலான கிராமத்து மனிதர்களை திரையில், உலவ விடுவது(அழகி)
நேரடியாக தலித்துகளையும் அவர்களது வாழ்நிலைகளையும் சாதிய சடங்குகளையும் குறித்து பாடாலாக வெளிப்படுத்தியது (தென்றல்)போன்றவற்றை சினிமாவில் துணிச்சலுடன்  திறையில் காட்சிபடுத்தியது அவர்க்கிருக்கும் சிறப்புகள். இதேநிலைக்கு சமமான குற்றச்சாட்டுகளையும் அவர்கள் மேல் மற்றவர் தொடுக்க வாய்ப்பில்லை என்றாலும் இன்றைய ஐ.டி உலகத்தில் தெரிந்த கிராமத்தையும் விமர்சிக்க முறையாகக்கொண்டால் ஒரே இயக்குநர் என்ற முறையில் தங்கர் பச்சான் காலத்தின் தவிர்க்க முடியாத நாம் முன்னிறுத்த வேண்டிய படைபாளியாகிறார். தனது படைப்புகளின் நதிமூலம் குறித்து தாமரை இதழுக்கு பிரத்யேகமாக அவர் அளித்த நேர்கானல் இது.
                                                   -    அஜயன் பாலா  

 நான் உண்மையான ஒரு கிராமத்து வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன்.  அதனால்தான் அதை திரும்பவும் உருவாக்க முடியுது. சும்மா ஒரு பார்வையாளனா மட்டும் இது இருந்தால் சாத்தியமல்ல. இப்போ சின்ன வயசுல உடல் முழுக்க சிரங்கு வந்திருக்கும் உடம்பு முழுக்க கம்பங்கூழ் தடவி காத்துல படுக்கப்போட்டு வெச்சிருந்து கடைசியா தூக்கிக்கிட்டுபோய் ஓடையில போட்டிருவாங்க. எழுந்து வராலாம்னு நினைச்சா முடியாது. திரும்ப திரும்ப புடிச்சி தள்ளிவிடுவாங்க. மீன் எல்லாம் உடம்பை கொத்தி சுத்தப்படுத்தும்.கல்ல முள்ளுகுத்தும், கல்லுவெட்டும் கண்ணாடிகுத்தும் இப்படி எல்லாத்தையும் பார்த்திருக்கோம்.இதுக்கெல்லாம் இன்னைக்கு இருக்கிற எந்த வைத்தியமும் அன்னைக்கு கிராமத்தை கூட எட்டி பார்த்ததில்ல.  இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா....ஐய்யோ இந்தவாழ்க்கையை தான் பின்னாடி படமாஎடுக்கனும் அப்டின்னுஎல்லாம் எனக்கு தோணல.  முழுசா அனுபவிச்சு வாழ்ந்தேன். அதனாலதான் இந்தநகரத்து வாழ்க்கையிலும்என்னால முழு கிராமத்து மனுசனா வாழ முடிஞ்சிச்சு. உண்மையில நாமவாழ்ந்து முடிச்சவாழ்க்கையில எவ்வளவோ பெரிய வலிகளும் திரும்ப திரும்ப நினைச்சு பார்க்க வேண்டிய அத்தியாவிசயங்களும்  இருக்கு. அது மட்டுமில்லாமல் எனக்கு அந்த சின்ன வயசுலஒருசினிமான்னா ஒருடைரக்டர்இருக்கிறார்,ஒருகேமராமேன் இருக்கிறார், என்றெல்லாம் தெரியாது. சினிமான்னா பாட்டு, நடிகர்கள், இவங்கதான் எனக்கு தெரியும். சென்னைக்கு வந்ததற்க்கு அப்புறமாதான் பத்திரிக்கை கதை எல்லாம் புரியுது. அதிகாலையும் இந்த பால குமாரன், சுஜாத்தா இப்படி பட்டவங்கதான் முதல்லதெரிஞ்சது. உண்மையான தீவிர இலக்கியங்கள் எழுதுறவங்க  இருக்கிறதே தெரியாது.      
3 வயசு இருக்கும்போதே என்ன பள்ளிகூடத்தில சேத்திட்டதால ஏழு வயசுல  நான் 4  ம் வகுப்பு படிக்கிறேன். எங்களோட தொடக்க பள்ளிக்கு பக்கத்திலேயே உயர் நிலைப்பள்ளியும் இருக்கு. ஒருநாள் அங்கிருந்து ஒருத்தன் வந்தான். வாத்தியார் உன்ன கூட்டிட்டு வரச்சொன்னார்ன்னா,  எனக்கு ஒன்னும் புரியல. போனேன் பெரிய பள்ளிக்கூடம்.  ஆறேழுபடி ஏறித்தான் வகுப்புக்கு போனேன். ஏதோ திருத்தணி மலையேற்றமாதிரி இருந்துச்சு. உள்ளப்போனால் தமிழ் வாத்தியார் தான் இருந்தார். அந்த வகுப்பு 11ம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் என்னையே பார்க்கிறாங்க. ஆகாய வீதியில் அழகான வெண்ணிலாங்கற பாட்டு எந்த படத்துலன்னு கேட்டார். அங்கிருந்த மத்த பசங்களுக்கு உடனே பதில் தெரியல. ஒருத்தன் பிரகலாதாங்கிறான், இன்னொருவன் கடாச்சமங்கிறான், நான் கண்டசாலாபாடுனது, மஞ்சள் மகிமை படத்துலன்னேன், அதுக்கு தாண்டா உன்னை கூப்பிட்டேன்னு அனுப்பிட்டார்.  அப்பவே நிறைய பாட்டுகேட்பேன் படம்பார்ப்பேன். அதனால் பள்ளிக்கூடத்தில் என் பேரு நிறைய பிரபலம் ஆச்சி. 

          திரும்பவும் 5 வதுபடிக்கும்போது என்ன ஒருநாள் குமாரசாமி  ஹெட்மாஸ்டர் கூப்பிட்டா ருனு, என்ன கூப்பிட்டு போனாங்க. இந்த முறையும் என்ன பாட்டுத்தான் கேக்கப்போராங்கனு நினைச்சுப் போனேன்.  ஆனால் இந்த முறை வேற ஒரு கேள்வி இங்கிலீஸ் கேள்வி. அட்டாக் இதுக்கு தமிழ்அர்த்தம் என்னனு கேட்டார். நான் தாக்குவதுன்னு சொன்னேன். அவருக்கு ரொம்பசந்தோசம். மற்றபசங்களைபார்த்து இவன் மூத்திரத்தைகுடிங்கடா உங்களுக்கு அறிவுவரும்ன்னு சொன்னார். ஏன் சொல்லுறேன்னா எனக்கு அப்ப படிக்கிறதிலும் ஆர்வம் இருந்திச்சி. கலையிலும் ஆர்வம் இருந்திச்சி. அப்ப தெருக்கூத்து பாவக்கூத்தி ன்னா ஓடிப்போய் முதல் ஆளா நிப்பேன். அப்புறம் மலேசியா கோலாலம்பூர் ரேடியோ சிங்கள வானொலி இப்படி எதையும் விட்டு வைக்கமாட்டேன். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் கடிதம் எழுதுவேன். என் பேரு எப்ப வரும்னு ரேடியோ முன்னாடி தவம் கிடப்பேன்.   நம்ம பேரை அப்ப கேட்கிறப்போ அப்படி ஒருசந்தோஷம். அந்த சந்தோஷம்தான் என்னபின்னாடியிலிருந்து துரத்திருக்குனு இப்ப தோணுது.              ஆரம்பத்தில் யாரும் இல்லை. எல்லோரும் திட்டுனாங்க நீ உருப்புடமாட்ட விளங்கமாட்டபொறுக்கி யாகத்தான் போவ இப்படி. அப்புறம் ஒரு அண்ணன் புரிஞ்சிக்கிட்டாரு. அவரு எப்பவுமே வானொலியும் கேமராவுமாதான் இருப்பாரு. அவருக்கு டார்க்ரூமே தானிய குதிருதான். அழகி படத்துலகூட ஒளியிலே பிறந்தது பாட்டுல காண்பிச்சிருப்பேன். நல்ல உசரமா நெல்லு போட்டு வைக்கிற குதிரு. அதுலதான்  அவருக்கு பிராசசிங்லாம் நடக்கும். நான் அப்ப கெமிக்கல்சை பிடிச்சிக்கிட்டு இருப்பேன். எல்லாம் முடிஞ்சு வந்து நெகடிவ்வ காய போட்டால் எங்கப்பா எல்லாத்தையும் தூக்கிட்டுபோய் தொழு வத்தில் வீசிடுவார். பெரிய பிரச்சனையே நடக்கும். எல்லாருக்கும் அண்ணன் தான் சயின்டிஸ்ட்.அப்போவெல்லாம் எனக்கு வீட்டிலேயும மதிப்புஇருக்காது. நண்பர்க்கிட்டேயும் மரியாதை இருக்காது .ரொம்ப கேவலமா திட்டுவாங்க. பொதுவாவே நான் பேசினா இவன் ரொம்ப பேசுரான் இவனுக்கு ஒரு பியூன் வேலைக்கூட கிடைக்காது, இப்படித்தான் சொல்லுவாங்க எதுக்கு அரசாங்க வேலைக்கு போகனும். மாசக்கடைசியிலகோவில்வாசாலில  உக்காந்திருக்கிற பிச்சைகாரங்களுக்கு  போடுற மாதிரி 2ஆயிரமோ 3ஆயிரமோ தூக்கிபோடுவாங்க அதை வச்சிகிட்டு அவன் வாழ்வானான்னு நினைப்பேன். எங்கிட்ட அப்ப ஐந்து காசுகூட இருக்காது ஆனா இப்படி தான் ஒரு சிந்தனை ஓடிக்கிட்டே இருக்கும். வாழ்க்கை எங்கிறது சுதந்திரமா வாழ்றது நம்மநினைச்சபடி செயல்படுறது. நம்ம நினைச்சபடி உருவாகுறது இந்த எண்ணம் எனக்கு அப்பவே வந்துடுச்சி. அப்பல்லாம் சினிமா எக்ஸ்பிரஸ் டெய்லி பத்திரிக்கை மாதிரிவரும். அதை அண்ணன் ஒரு நாள் வாங்கிட்டு வந்தாரு. அதோட பின்பக்க அட்டையிலதான் முதல் முறையா திரைபடகல்லூரி விளம்பரத்தை பார்த்தேன். 

          சினிமாவுக்கு இப்படியொரு படிப்பு இருக்கு அதுல சேர்ந்து படிக்கிறாங்கங்கிறதே அப்போதான் தெரியும். சரின்னு நானும் விண்ணப்பம் போட்டேன்.சீட்டு கிடைக்கில நான் அழ ஆரம்பிச்சிட்டேன்.எங்கப்பா அடிக்கவறாரு. அம்பத்தூர் எஸ்டேட்ல தினக்கூலிக்கு போய் வேலை செய்யுனும்னு சொன்னாரு. அப்புறம் அதேமாதிரிதான் ஆச்சு. அம்பத்தூர்லதான் டைப்ரைட்டிங் படிச்சுகிட்டே ஒரு வருஷம் வேலை செஞ்சான்.
ஒருதலைராகம் போன்ற படங்கெல்லாம் ஒருவருஷம் ஒடிச்சி சரி இந்த வருஷமாவது முயற்சி பண்ண லாமேன்னு, திரும்பவும் திரைப்பட கல்லூரிப்பக்கம் போறேன். எனக்கு இங்கதான் வாழ்க்கை இருக்குன்னு உள்மனசு உறுதியா சொல்லிடுச்சு. புடிச்ச இத படிச்சிடுரதுனு முடிவு பண்ணிட்டேன். ஆபாவாணன், ராசி மேனன், யூகிசேது இவங்கஎல்லாம் என்கூட படிச்சவங்கதான். சுகாசினி படிச்சிருந்தாங்க.அப்போ  முதல் வருஷ பசங்க எல்லோருக்கும் ராகிங் நடக்கும். மீசையை எடுத்திடுவாங்க. மீசையை வைத்துதான் யாரு எந்த வருஷம்னு அடையாளம் கண்டு பிடிக்கனும்.ரொம்ப தொந்தரவு கொடுத்தவன் இப்ப கேமராமேனா இருக்கிற அப்துல்ரகுமான்தான். கட்டியால அடிச்சி மிரட்டி என்னன்னவோ பண்ணுவான். பாத்தேன் அடிடா பார்க்கலாம்னு ஒரு நாள் எதிர்த்தும் நின்னேன்.  ஆனாலும் முதல் வருஷம்னா அந்த ராகிங்கிறது தவிர்க்க முடியல. 

திரைப்பட கல்லூரிக்கு போனதும் முதல் முறையா பதேர் பாஞ்சாலிபடம் போடுறாங்க நாங்கள் ஓடிப்போய் தியேட்டர்ல உக்காந்ததுக்கு அப்புறம்தான் கவனிக்கிறோம். சீனியர் பக்கத்துல உக்காந்திட்ட நூம்ன்னு. இருட்டுல ஒன்னும் தெரியல நில்லுங்கடா தலைகீழன்னு நிக்கவெச்சிட்டாங்க காவாசி படம் தலைகீழாதான் பாத்தேன் அப்படி பாத்த படம்தான் அதுவரைக்கும்பாத்த எல்லாத்தையும் மறக்கடிச்சது. திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது கிராமத்து ஆளா இருந்துதான் எனக்கு பெரிய விஷயமாஇருந்தது. அந்த மனநிலைக்கு நான் தள்ளப்படுகிற நிலைக்கு அப்படி அங்க சூழல் இருந்தது. நாலஞ்சுசட்டதான் இருக்கும்.திரும்ப திரும்ப அதையே  போட்டுகிட்டு போவேன் எவ்வளவுதான் நான் வியர்வை படாத போட்டாகூட கிராமத்து ஆளாதான் தெரியும்.  எல்லோரும் ஸ்பூன்ல சாப்பிட்டா நான் கையாலதான் சாப்பிடுவேன். ஆனா அந்த அவமானத்த நான் வெளியே காட்டிக்காம ரொம்ப பேசுவேன். எல்லோரும் என்னை அதிசயமா பார்ப்பாங்க என்னடா இவன் என்னென்னமோ பேசுரானே இதெல்லாம் எந்த உலகத்துல நடக்குதுங்கிறமாதிரி அந்தப்பார்வை இருக்கும். அதுல ஆச்சர்யம் கேலிகிண்டல் மிரட்சி அந்த பார்வை பல விதமா இருக்கும். திரைப்பட கல்லூரியில் படிக்கும்போது ரவுண்ட அப் அது ஒரு ஹங்கேரிப்படம் பார்த்தேன். அதாவது ஒரு நிகழ்வை பார்வையாளர் பார்க்கும்போது எப்படி ஒரு நேரடி உணர்வை தருமோ அதை அந்த திரைப்படம் தரும். இதைத்தான் நான் படமா எடுத்திட்ருக்கேன்.

 நான் எடுக்க போற தாய்மண் கூட அப்படி ஒரு நேரடி அநுபவத்தை தரனும்னுதான் முயற்சி பண்றேன். அதாவது டாக்குமென்ட்ரிக்கும் ப்யூச்சர் பிலிமுக்கும் இடையில டாகுபியூச்சர்னு சொல்லுவோம் அந்த ஒரு உணர்வ ரவுண்டப் படத்தோட
இயக்குனர்.மிகோலஸ் ஷான்கோ கிட்ட கிடைச்சது. உலக திரைப்படங்கள்லேயே மிசான் சென்ங்கிறத உள்ளடக்கி படம்பண்ணவரு அவருதான். மிசான் சென்னா ஒரு முழு நிகழ்வையும் கட் இல்லாம ஒரே ஷாட்ல காட்றது. இதை கொண்டுவந்தவரு அவருதான். அப்புறம் திரைப்படவிழாக்களுக்கு போகும்போது அவர்படமா தேடிபோக ஆரம்பிச்சேன். இப்படி எல்லாம் தெரிஞ்சாலும் அதை எதார்த்தமா மண் வாசனை யோட  குடுக்கனும்கிறதிலயும் தெளிவாஇருந்தேன். அந்த வகையில் எனக்கு திரைப்படமும் கீ.ரா.வோட இலக்கியமும் எனக்கு முக்கிய காரணங்கள்.  ஒரு வரியில் சொல்லுகிறதா இருந்தா சொல்லிடலாம் கி.ரா. அய்யாதான் என்னை மாத்தினார். ஆனா அதுக்கு பின்னால் ஒரு கதையிருக்கு என்னோட மனநிலை ரொம்ப வித்தி யாசமா இருந்தது. சொல்லப்போனா  தாழ்வுமனப்பான்மை  கிராமத்திலிருந்து   வந்திருக்கோம் மத்தவ னெல்லாம் இங்கிலிஸ் பேசுறான்  நமக்கு தெரியலன்னு வருத்தமா இருக்கும்.ஆனா நான் அங்குசினிமா எக்ஸ்பிரஸ் படிக்கத்தான் போவேன்.  குமுதம் ஆனந்த விகடனும்கூட அங்கு வரும். ஆனா அது நம்ம கையில் கிடைக்காது. வர்ரவங்க மொதலில அதைதான் பாஞ்சி எடுப்பாங்க .  இந்த சமயத்துலதான் என் ஃபிரண்ட் ஒருத்தன் ஐடியா கொடுத்தான் சும்மா ஒரு தடினமான இங்லிஸ்புக்க கையில் எடுத்துவச்சுக்க அப்பத்தான்  ஒன்னப்பார்த்து எல்லோரும் பயப்படுய் வாங்கன்னான், சரின்னு நானும் நல்லா பெருசா இருக்கிற ஒரு இங்கிலிஸ் புத்தகமா பாத்து கையில எடுத்து வச்சிக்கனும் பஸ்சுல போகும் போதும்  வரும் போதும் அட்டை தெரியிர மாதிரி கையில எடுத்து வெச்சிக்குனு இருப்பேன். ஒரு தடவ தரமணியில் பேருந்துக்காக காத்திருந்தப்போ என் கூட ஒரே ஒரு பெண் மட்டும்தான் அங்க  இருந்திச்சு, பாத்தா நல்லா படிச்ச பொண்ணு அது என் கையில் இருக்கிற புத்தகத்தையே உத்து உத்து பார்த்திச்சி.   நானும் அதை பெருமையா அதுக்கு தெறியிர மாதிரி கையில புடிச்சி காண்பிச்சிக்கிட்டிருந்தேன், அது பக்கத்துல வந்து   இங்கிலிஸ்ல இந்த   ஆத்தரோட புக்ஸ்லாம்    படிச்சிருக்கீங்களான்னு   கேட்குது எனக்கு, கையும்
ஓடல. காலும் ஓடல நானும் எனக்கு தெரிஞ்ச இங்கிலீஸ்ல சமாளிச்சுப்பாத்தேன்,  அது என்ன உட்றமாதிரி தெரியல. என்னடா இது வம்பாபோச்சுன்னு சட்டுன்னு ஐய்யோ என்ன விட்டுடுங்க எனக்கு இதுல ஒரு வார்த்தை கூட தெறியாதுன்னு உண்மைய சொன்னேன்,  அந்த பொண்ணுக்கு பேயரஞ்சமாதிரி போச்சு. அப்புறம்தான் என் வெகுளித்தனத்தைபார்த்து சிரிச்சது. நிறைய புத்தகங்கள் படியுங்க,  இங்கிலிஸ்லேயே ஈசியா படிக்குறமாதிரி நிறையா புக்ஸ்லாம் இருக்குன்னு சொல்லிச்சே நாம இதே இங்கிலீஸ்லாம் படிக்கதெறிஞ்சா இந்நேரம் அந்த மாதிரி பொண்ணுங்ககூட பிரண்ட்சிப் கிடைச்சிருக்குமே தோனுச்சு. இனிமே நாம எதுன்னா படிக்கனும்னு ஒரு உந்தல் இருந்துகிட்டே இருந்திச்சு. இந்த சமயத்துலதான் ஒரு இங்கி லீஸ் படத்துக்காக தேவி தியேட்டருக்கு போனேன். அது எமரால்டு ஃபாரஸ்ட்னுபடம் இல்ல... இல்ல.. ப்ருலாகன் அப்ப எனக்கு மீசை சரியா முளைக்குல, அதனால என்ன தியேட்டருக்குள்ள விடமாட்டேன்னு ட்டான்.  நானும் எவ்வளவோ செஞ்சிபார்த்தேன் ஐ.டி.கார்டு காண்பிச்சேன்,  ஒன்னத்துக்கும் அவன் மசியல சரின்னு வெளியவந்து பஸ் ஸ்டாண்டுல வந்து நிக்கிறேன். அப்ப நடைபாதையில் புத்தக கடிய ஒருத்தன் போட்டிருந்தான் சடால்னு மழைவரவே நான் ஓடிப்போய் அந்த கடைகாரனுக்கு  புத்தகத்தையெல்லாம் எடுத்து வைக்க உதவினேன். அந்த கடைகாரனுக்கு என்னோட இந்த உதவியால எம்மேல ஒரு நன்றி உணர்ச்சி வந்திருக்கும் போல. தம்பி ஒரு டீ சாப்பிடலாம் வாங்கன்னு கூப்பிட்டான். இல்ல எனக்கு வேணான்னேன் சரி அப்ப எத்தன புக்கு எடுத்துக்கனும்னு சொன்னான். உடனே நான் புத்தகமா எடுத்து பாத்தேன் அதுல ஒரு புத்தகத்தில கையெழுத்து பிரதியிலே இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைனு எழுதியிருந்திச்சு அந்த புத்தகத்தை சோ, ஏ.ஸ்.ஏ சாமிக்கு கொடுத்தாரா இல்லை, ஏ.ஸ்.ஏ சாமி சோவுக்கு கொடுத்தாரா தெரியல.அது எனக்கு பிடிச்சிருந்தது ஏ.ஸ்.ஏ சாமி அப்ப இன்ஸ்டியூட்ல லெச்சரரா இருந்தாரு .அதனால் ஏதோ முக்கியமான புத்தகமாத்தான் இருக்கும்னு எடுத்துக்கிட்டேன். அப்படியே பஸ் ஏறினேன். ஆனா ஏறுனதுதான் தெரியும், புத்தகத்த திறந்து படிக்க ஆரம்பிச்சப்ப அச்சு அசலா என்னோட வாழ்க்கை. அதுவரைக்கும் நான் எதையெல்லாம் நினைச்சு தாழ்வுமனப்பான்மை கொண்டிருந்தேனோ அதெல்லாம் அந்த புத்தகத்துல படைப்பா மாறிஇருந்தது.அது கி.ரா வோட நாவல். என் வாழ்க்கை அந்த இமிஷத்தில தான் மாறிச்சு. அதுக்கப்பறம் நெறையா படிக்க ஆரம்பிச்சேன். மொழிபெயர்ப்பெல்லாம் படிக்கஆரம்பிச்சேன்  என் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமா மாற ஆரம்பிச்சி.

        அதுலயிருந்து நெறையா எழுத ஆரம்பிச்சேன். நெறையா எழுத்தாளனுக்கு கடிதம்போட்டேன் யாரோ ஒருவர் நீங்களே எழுதலாமேன்னு சொன்னாரு. அந்த சமயத்துல 1985-ல் அப்பா இறந்திட்டாரு அப்பாவோட சுடுகாட்டில வந்து பால் ஊத்தினப்போ எனக்கு ஒன்னு தோனிச்சி. உண்மையில அப்போ
நான் நிறைய வேதனையில இருந்தேன். சின்ன வயசிலிருந்து எங்கப்பா எங்களை வளர்க்கப்பட்ட கஷ்ட மெல்லாம் மனசுல ஓடிச்சு.எங்க அப்பா என்ன மட்டும் தான் தோள்ல தூக்கிட்டு கூத்துபார்க்க கூட்டிட்டு போவாரு.எங்கப்பானாலும் எவ்வளவு பெரிய மனுசனாயிருந்தாலும் நமக்கு இதே சுடுகாடுதான். இதே அப்பா மண்டைக்கு அடுத்தாப்புலதான் நம்மமண்டையும் வந்து கிடக்க போவுது,இதுக்கேன் நாம வயிராக்கி யத்துல என்னென்னமோ செய்யப்போறோம்னு தோனுச்சி. இதை ஒரு நாவலா எழுதுனும்னு முடிவு பண்ணினேன் அதுதான் ஒன்பது ரூபா நோட்டு. ஆனா அதுக்கு முன்னாடியே என்னோட சிறுகதை
தொகுப்பு வெள்ளைமாடு வெளியாயிடுச்சி.

                   மலைச்சாரல் படத்துக்கு அப்புறம்தான் தங்கராசுங்கற பேற தங்கர்பச்சான்னு மாத்திகிட்டேன். இந்த பேர் மாற்றம்கூட எதேச்சையா நடந்த்துதான்.நானும் என் கூட படிச்சவன் பாண்டியன் எனும் நண்பனும் கோடம்பாக்கத்திலேயே ஒரு டீக்கடையில டீ சாப்பிட்டே பேசிட்டே இருக்கோம். எனக்கு நம்ம அய்யா வச்ச பேரையே வெச்சுக்கலாம்னு ஒரு யோசனை ஆனா நண்பன்
தான் யோசனைபண்ணிட்டு தங்கர்பச்சான்னு வைடா நல்லாயிருக்கும்னு உறுதியா சொல்லிட்டான். நாளைக்கு மழைச்சாரல் படத்தோட டைட்டில் கார்டுக்கு பேர் கொடுக்கனும்.  தங்கர்பச்சான்னே கொடுத்திட்டேன்.பி சி  ஸ்ரீராம் ஒரு நாள் சொன்னாரு என்ன இன்னமும் தங்கராசுன்னு கூப்பிட்டவரு அவருமட்டும்தான்.என்னையா பேர இப்படி வச்சிருக்க யார் வாயிலயும் நுழையாதேன்னு கேட்டார். இந்தபேர மட்டும் நீ மற்றவங்கள சொல்லவச்சிட்டா அதுதான்யா உன்னோட வெற்றின்னு சொன்னார்.
என் நம்பிக்கை வீண் போகுல.

   -                       தாம்ரை இதழுக்காக் 2009ல் எடுத்த நேர்காணல் இது 

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...