February 1, 2016

பை சைக்கிள்தீவ்ஸ் தமிழ் திரைக்கதை நூலின் மூன்றாம் பதிப்பின் முகவுரை


இன்று இந்த புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டியுள்ளது .
ஒரு புத்தகம் மூன்றாவது பதிப்பை எட்டுவது ஒன்றும் அத்தனை பெரிய சாதனை அல்ல. ஆனால் எனக்கு இது அளப்பரிய மகிழ்ச்சி

காரணம் இது என்  முதல் புத்தகம் .முதல் குழந்தை போல அத்தனை பரவசத்தை இப்புத்த்கத்தின் முதல் பதிப்பின் முதல் பிரதியை கையில்  வாங்கியபோது உணர்ந்தேன்.

அடிப்படையில் நான் எழுத்தாளனாக  இருந்தாலும் சினிமா  இயக்குனர் எனும் கனவே என்னில் அப்போது முதல் நிலையீல் இருந்தது.  . இலக்கியத்தின் மீதான  தீவிர அவா என்னுள் அப்போது கொழுந்துவிட்டு என்னை எரித்துக்கொண்டிருந்தாலும் சில கதைகள் எழுதியதோடு நிறுத்திக்கொண்டு தீவிரமாக திரைத்துறையில் களமிறங்கினேன்



நான் பணி புரிந்த லவ் டுடே எனும் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து  திரையுலகில் இயக்குனராக போராடினேன்.  இருபதுகளை கடப்பதற்கு முன்பாக இயக்குனராகிவிட வேண்டும் என்ற வெறி காரணமாக தீவிரமான முனைப்புடன் இருந்தேன் .இத்தனைக்கும் அது எனக்கு இரண்டாவது படம் . உண்மையில் நான் அவ்வளவு அவசரப்பட்டிருக்க கூடாதோ என இப்போது எண்ணத் தோன்றுகிறது . ஆனால் அப்போது ஒரு வேகம் . மூர்க்கம் . கையில் சுமக்க முடியாத பெரும் வாளை உயர்த்தி பிடித்தபடி கடன் பட்ட டீக்கடைகளுக்கு டைவர்ஷன் போட்டு நிமிர்ந்து கடந்தேன். ஆனால் நான் எதிர்கொண்டதோ தொடர் தோல்வி. கதை நல்லா இருக்கு பூஜை தேதி என்னைக்கு வச்சுக்கலாம் என முதல் நாள் கைகுலுக்கியவர்கள் அடுத்த நாள் கொஞ்சம் பைனான்ஸ் பிரச்னை நாளைக்கு சொல்றனே  என பதில் சொல்வர். இதற்குள் அவசரப்பட்டு நானும் நண்பர்களிடம் சொல்லிவிடுவேன். மறுநாள் நண்பர்கள் எப்போ பூஜை ஹீரோ யார் என கேட்க  நானும் அடுத்த மாசம் என உண்மை மறைத்து சமாளித்து அடுத்த தயாரிப்பாளரிடம் ஓடினேன். ஏமாற்றம் தோல்வி  தொடர் கதையாக தொடர்ந்து  பல முறை என் கனவு பாதையில் விழுந்து எழுந்தேன் . கடைசியாக  ஒரே ஒரு தயாரிப்பாளர் உறுதியாக இருந்தார். தொழில்நுட்ப கலைஞர்களிடம் பேசி முடிவானது. பூஜைக்கான தேதிகளை குறித்தார். நம்பிக்கை வார்த்தைகள் பேசினார் . அட்வான்ஸ் கொடுக்க காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்கு வரச்சொன்னார். அட்வான்ஸ் பணம் பத்திரமாக கொண்டுவர ஒரு ஜிப் வைத்த பையுடன் சென்றிருந்தேன் என்னுடன் அன்று அவதாரம் படத்தின் கலை இயக்குனர்  தாமு உடன் வந்திருந்தார். கோவில் மண்டபத்தில் த்யாரிப்பாளர் எனக்காக காத்திருந்தார். பணம் கொடுப்பார் என கையை நீட்டினேன்

அவரோ என் கையை பிடித்தார். ஒரு மாதம் காத்திருங்கள் என்றார். தன் எதிர் பாராத பண நெருக்கடியை சொல்லி மனம் கலங்கினார். எனக்கு இது புதியதல்ல .ஆனாலும்  நான் வாங்கிக்கொண்டு போன பை என்னை கேலி செய்தது. தாமுவுக்கோ த்யாரிப்பாளர் மீது கடும் கோபம். வரும் வழி முழுக்க திட்டிதீர்த்தார்.  நான் மவுனமாக கேடுக்கொண்டேன் . பேருந்திலிருந்து   ரோகினி தியேட்டர் ஸ்டாப்பில் இறங்கினோம். அவர் வருகிறேன் என சொல்லி தோளைத் தொட்டார். பிரிந்தோம். எனக்கு  மன அழுத்தம் அதிகமாக இருந்தது உலகம் சட்டென விரிந்துகொண்டே இருந்தது.  பிரம்மண்டமான உலகில் நான் மட்டும் ஒரு புள்ளியில் தனியாக இருப்பதை உணர்ந்தேன்.

கடல் நீர் என் கண்வழியாக பூமியை நனைக்க துவங்கியது.
அறைக்கு வந்து யாருடனும் பேசாமல் கவிழ்ந்து படுத்தேன். ம்னம் வெறுமையில் தத்தளித்தது. ஒரு வித காரணமற்ற அச்சம் இருளாக நெஞ்சில் குடிகொண்டது . இரண்டுநாட்களாக சாப்பிடக்கூட மனமில்லாமல் அறையில் சுருங்கிகிடந்தேன்.  மூன்றாம் நால் எதையாவது செய்தே தீரவேண்டிய மன் அவசம் உந்தி தள்ளியது. பரணில்  எதையோ தேடிய போது இந்த மொழிபெயர்ப்பை தாங்கிய நோட்டு கையில் அகப்பட்டது . பை சைக்கிள் தீவ்ஸ் திரைக்கதை என எழுதி சுமார் முப்பது பக்கங்களுக்கு கிறுக்கியிருந்தேன்.  நான்கு வருடங்களுக்கு முன்  எழுதியது.  தூசு தட்டி வெளியில் எடுத்தேன்.  பிலிம் சேம்பரில் சென்னை பிலிம் சொசைட்டி மூலமாக முதன் முறையாகஇந்த  படத்தை பார்த்து நெகிழ்ந்து  கோடம்பாக்கம் வரை நடந்தே  அறைக்கு  திரும்பி அடுத்த சில நாட்களில்  போக் ரோடிலிருக்கும் ஏலூரு லெண்டிங் லைப்ரரியில் இதன் திரைக்கதை புத்த்கம் கிடைத்த வுடன் ஆர்வம் மிகுதியில் உடனடியாக அந்த புத்த்கத்தை ஜெராக்ஸ் எடுத்து க்கொண்டு எழுத ஆரம்பித்திருந்தேன். காரணம் ஏலூருவில் பத்து நாளுக்கு புத்த்கத்தின் விலையில் பத்து சதவீதம் வாடகை.. புத்தகம் 500 ரூபாயாக இருந்தால் 50 ரூபாய் .. ஒருநாள் அதிகமானால் 5 ரூபாய் கணக்கில் வாட்கை வசூலித்தார்கள் . அப்போது என்னால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாத சூழல் ஆகவேதான் ஜெராக்ஸ் எ4னும் அற்புதம் மூலம் அந்த புத்தகத்தை நிரந்தரமாக்கிக்கொண்டேன். அதை வைத்துக்கொண்டு ஒரு வேகத்தில் எழுத ஆரம்பித்து பின் நாம் எழுதுவது சரியா தவறா என்ற குழப்பத்தில் பாதியில் அதை மூடி அப்படியே பெட்டியில் பூட்டியிருந்தேன்.இடையில் அறை மாற்ரும் போதெல்லாம் அதுவும் என்னுடன் சில புத்தகங்களை போல அல்லோகலப்பட்டது .

இந்த நிலையில்தான் அது மீண்டும் என் கண்ணில் ப்ட தூசு தட்டி எடுத்து வாசித்தேன்.அப்போது நான் தங்கியிருந்த  மேற்கு மாம்பலம் பால் சுகந்தி மேன்ஷன் அறை எண் 53க்கு  கவிஞர் யூமா வாசுகி ,இயக்குனர் கற்றது தமிழ் ராம் உள்ளிட்ட பல நண்பர்கள் விஜயம் செய்வர் . ராம் எனக்கு நா. முத்துக்குமார் மூலமாக பரிச்சயம்.

அன்று அறைக்கு வந்த ராம சுப்பு (ராம்) என் மொழிபெயர்ப்பை படித்துவிட்டு பாலா அருமையாக இருக்கிறது இதை முழுவதுமாக எழுதி முடிக்கலாமே என்றார். துளி நம்பிக்கை வந்தது. அடுத்து வந்த யூமா வாசுகியும் அதை படித்துவிட்டு பாலாஜி ( என் ஒரிஜினல் பெயர்) இதை முதலில் கையோடு முடித்துவிடு என்றார். இருவரும் கொடுத்த  உற்சாகம் என் மன நெருக்கடிக்கு மருந்தானது . பாதியில் நான் நிறுத்தி வைத்த இந்த நூலை மீண்டும் தொடர்ந்து  எழுதத்தூண்டியது. அன்று  முதல் இரண்டு மாதங்கள் முழுவதும் அறையை  விட்டு வெளியேறாமல் எழுதத்துவங்கினேன்  என் உதவியாளரான ரவிச்சந்தர் அதை கையோடு பிரதியெடுத்து உதவி செய்தார் .

வெட்டி எழுதி வாக்கியம் சமைக்கும் போது உண்டகும் பரவசம் எனக்குள் படைப்பு சம்பந்தமான பல ரகசிய அறைகளை திறந்துவிட்டன .புதிய பறவைகள் என் மனதுள் பிரவேசித்தன முழுமையாக எழுதி முடித்தபின் யூமாவாசுகி  தமிழினி வசந்த குமாரிடம் என்னை அழைத்துச்சென்றார்.  நான் ஆர்வக்கோளாறு  காரணமாக புத்த்கம் இன்னும் எத்தனை நாளில் ரெடியாகும் அட்டை  அவுட் எல்லாம் என் ரசனையின் படி வரவேண்டும் என்பது போல எதையோ  உளறினேன். அது வசந்த குமாருக்கு  கொஞ்சம் எரிச்சலூட்டிவிட்டது. தம்பி உங்களுக்கு இது முதல் புத்தகம்.  நான் என் இஷ்ட்த்துக்கு எப்ப கொண்டுவர முடியுமோ அப்போதான் கொண்டுவருவேன் என திட்டமாக கூறி கையோடு ஸ்க்ரிப்டை கொடுத்து திருப்பி அனுப்பிவிட்டார். மொக்கை வாங்கிய விரக்தியுடன் அறைக்கு திரும்பினேன் .

அப்போது  என் பிலிம் சொசைட்டி நண்பர்கள் ஜார்ஜ்( தற்போது தொலைகாட்சி தொடர்களுக்கு வசனம் எழுதி வருகிறார்.) மற்றும் ரியாஸ் (தற்போது கோவையில் பிசினஸ் எய்துகொண்டிருக்கிறார்) இருவரும் என் உற்ற தோழர்கள்.  இருவரும் என் அறைக்கு வந்து இதனை படித்துபார்த்துவிட்டு நிழல் திருநாவுக்கரசுவிடம் கொண்டுசென்றனர். அடுத்த சில நாட்களில் என் வாழ்வின் முதல் புத்தகமும் அச்சாகியது.  அது விதிப்படி மீண்டும் தமிழனி வசந்தகுமார் அவர்களின் மேற்பார்வையில் தன் கொண்டுவ்ரப்பட்டது.  முதல் புத்த்கம் கையில் வாங்கிய கையோடு வெளியே வந்த போது அப்போது வழியில் எஸ் ராம்கிருஷ்ணன் எதிர்பட்டார் . அவர் கையில் முதல் புத்தகத்தை கொடுத்தேன் . நண்பர் இசக்கியப்பன் அப்போது என்னுடனிருந்தார். அவருக்கு இரண்டாவது புத்தகம்

அடுத்த சில நாளில் நண்பர்கள் அருண்மொழி ,ஆந்திரா வங்கி பாலசுப்ரமணீயன் ஆகியோரது முன்னெடுப்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி. ஏற்பாடானது, வெளியீட்டுக்காக  யாரை அழைக்கலாம் என யோசித்த போது நண்பர்கள் ராஜா மற்றும் நா முத்துக்குமார் உதவியுடன் இயக்குனர்  பாலுமகேந்திராவை சந்தித்து நூலை கொடுத்தேன். அவரோடான என் முதல் சந்திப்பு அது.  பாலுமகேந்திரா வெளியிட  தங்கர் பச்சான் அதை பெற்றுக்கொள்வதாக முடிவானது . உடன் நிகழ்வில் இயக்குனர்கள் அம்ஷன் குமார், ஹரிஹரன் வாழ்த்துரை வழங்கவும் பேசி முடிவானது. நுங்கம்பாக்கம் காதர் நவாஸ் கான் சாலையில் அப்போதிருந்த ஜெர்மன் மொழிக்கான  முகமை பகுதியான  மாக்ஸ் முல்லர் பவனில் நிகழ்ச்சியை நடத்த திட்டமிட்டோம். அப்போது அங்கு பணியாற்றி வந்த பிரசன்னா ராமஸ்வாமி அதற்கு உதவி செய்தார்
 
நான் ஒழுங்கு செய்த முதல் கூட்டம் அதுதான்.
விழா நாளன்று மிகுந்த பதட்டத்துடன் எத்தனை பேர் வருவார்களோ என காத்திருந்தேன் . வழக்கமாக அப்போது மாக்ஸ் முல்லர் பவன் நிகழ்வுகளுக்கு இருபது பேருக்கு மேல் வந்தாலே அதிசயம் . ஆனால் நிகழ்வில் பை சைக்கிள் தீவ்ஸ் ப்டம் திரையிடுவதாக் அறிவிப்பு செய்திருந்த  காரணத்தால் கூட்டம் எக்கச்சக்காமாக் எதிர் பாராமல் குவிந்து விட்டிருந்தது.  
நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த கூடம் தாண்டி அதனையொட்டிய சிறிய அறை மற்றும் படிக்கட்டிலும் வாசலிலும் வராந்தாவிலும்  நண்பர்கள் வழிந்து நிறைந்திருந்தனர். முதல் முறையாக அந்த கட்டிடம் வரலாறுகாணாத கூட்டத்தை கண்டிருப்பதாக மாக்ஸ் முல்லர் பவனை நிர்வகித்த பெண்மணி தன் ஆங்கில பேச்சில் கூறினார். விழாவில் பங்கேற்ற அனைவரும் என்னை தங்களது வார்த்தைகளால் என் எழுத்து பாதைக்கு ஞான ஸ்னானம் செய்த்னர். குறிப்பாக பாலு மகேந்திரா தமிழின் வெளி வந்திருக்கும் அற்புதமான சினிமா பற்றிய முதல் நூல் என கூறினார். தங்கர்பச்சான் ஒரு சம்ஸ்கிருத வார்த்தை கூட இல்லாமல் எழுதப்ப்ட்டிருப்பதை வியந்து பாராட்டினார் . நான்கு மாதங்களுக்கு முன் கோயம்பேட்டில் மனம் குமைந்து கண்ணீர் சொறிந்த காட்சி மன்க்கண்ணில் நிழலாட ஏற்புரை நிகழ்த்த மைக் முன் வந்து நின்றேன் .
 
என் முன் என் நெருங்கிய நண்பர்கள் அனைவரும் இருந்தனர் . திருக்கழுக்குன்றத்திலிருந்து என் பால்ய  நண்பன் விமல் வந்திருந்தான். என் கல்லூரி நண்பர்கள் வெங்கட்ட பெருமாள் ஸ்ரீராம் .. பழவந்தாங்கல் சிவக்குமார்  யூமா வாசுகி செம்பூர் ஜெய்ராஜ் , ராஜன் அரவிந்தன்  மற்றும்  ஷங்கர் ,தளவாய் பாஸ்கர் சக்தி, தமிழ் மகன், காயத்ரி  கிருஷ்ணா டாவின்சி  என் முன்னாள் அறை நண்பர்கள் முத்துராமலிங்கம் , செல்வம் மற்றும் என் தங்கை உமா அவளது கணவர் சுரேஷ் என் அம்மா என அப்போது என் வாழ்க்கைக்கு நெருக்கமான பலரும் என் கண்முன் வரிசையாக அமர்ந்திருந்தனர்.  ..நான் கனவு கண்ட என் முதல் நூல் வெளியாகிவிட்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம் அது. மகிழ்ச்சியில்  கண்ணீர் துளிர்த்தது . அந்த கண்ணீர் என் உடல் தொடர்பானது அல்ல . என் சென்னை வாழ்க்கை அது உண்டாக்கிய அழுக்கு மன இருட்டு தொடர்பானது நெஞ்சு நிறைந்து கண்ணீரை கட்டுபடுத்தியபடி  ஒரு ராஜ க்ரீடம் சூடிய அரசனாக உணர்வதாக கூறி நெகிழ்ந்தேன் .

இன்று நான் எழுத்தாளனாக அடையாளம் பெற்று உங்கள் முன் நிற்பதற்கு அடிப்படை காரணமாக இருந்த என் முதல் நூல் இது
இப்படியாக இப்புத்தகம் என்னளவில் ஒரு மகத்தான சாதனையை உள்ளடக்கியதாக இருந்தாலும் இதன் புற சாதனைகளும் அத்தனை  எளிதானதல்ல


2000க்கு முன் 90 கலீன் இறுதி காலங்களில்  தமிழ் சினிமா எப்படியிருந்ததோ ஆனால் கோடம்பாக்கம் வட்டாரத்தில்  உலகசினிமா என்ற வார்த்தையே பலரையும் அச்சுறுத்தக்கூடிய சொல்லாக இருந்தது .குரசேவா த்ரூபோ என  பெச்செடுத்தாலே பலரும் குழப்பவாதி என்பது போல என்மேல் சந்தேக பார்வைகள் வீசினர். மேலும் அக்காலத்தில்  பல நூல்கள் உலகசினிமா பற்றி வந்திருந்தாலும் அவை பெரும்பலும் அறிவுஜீவி வட்டத்துக்காக அதற்கான இறுக்கமான மொழி நடையுடன் மட்டுமே வெளிவந்தன.

ஆனால் இப்புத்த்கம் வெளியான பின் பல இயக்குனர்கள் உதவி இயக்குனர்கள் இலக்கிய வாசகர்களின் கரங்கள் என் வலக்கையை பற்றி குலுக்கினர்.  . முதல் முறையாக கோடம்பாகத்தின் தீப்பெட்டி அளவு அறைகளின் அலமாரிகளில் இப்புத்த்கம் ஒரு மதிப்புமிக்க இடத்தை பிடித்ததுதான் இந்நூலின்  சாதனை. அது வரை தலைதெறிக்க ஓடிய கோடம்பாக்கம் நண்பர்கள் கூட இந்நூலை வாசித்தபின்   பிலிம் சொசைட்டி திரையிடல்களுக்கு மெல்ல தங்கள் பாதங்களை திசை திருப்பினர்..அந்த உதவி இயக்குனர்கள்தான் பிற்பாடான தமிழ் சூழலின் மாற்றத்துக்கும் அடிகோலியவர்கள் . இந்த நூலுக்கு கிடைத்த வரவேற்பை யொட்டி பல உலக  சினிமாக்களின் திரைக்கதைகள் வெளிவரத்துவங்கின .வெற்றி பெற்ற தமிழ் சினிமாவின் திரைக்கதைகளை அச்சிட்டு வெளியிடும் புதிய வழக்கமும் பதிப்பு சூழலில் வருவதற்கு இப்புத்தகமே காரணமாக இருந்தது.

இந்த மூன்றாம் பதிப்புக்கு காரணமாக  விளங்கும் என்னை தொடர்ந்து ஊக்குவிக்கும்  புத்தகம் பேசுது ஆசிரியர் தோழர் நாகராஜன் அவர்களுக்கும் ,நண்பனும் இப்புத்தகத்தின் மெய்ப்பு திருத்தரும் சக  எழுத்தாளருமான கீரணூர் ஜாகிர் ராஜாவுக்கும்  இந்த புத்தகத்தை சிறந்த முறையில் வடிவமைத்து அச்சிட்டு  வெளியிடவிருக்கும் புத்தகம் பேசுது ,பாரதி புத்தகாலயம் குழுவினருக்கும் என் நினைவார்ந்த நன்றிகள்


அஜயன்பாலா

19-07-2011

No comments:

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...