எல்லா குரங்குகளும் தொப்பியை
கழற்றி காற்றில் வீசுகின்றன
குரங்குகளின் மடத்தன்மை மறுத்து .
காற்றில் தடுமாறுகின்றன தொப்பிகள்
வேறிடம் செல்ல விழைந்து
தொப்பியை கழற்றி வீசுவதும்
மாட்டுவதுமாய் சிரித்துக்கொண்டிருக்கிறான் அவன்.
குரங்காய் இருப்பதைக்காட்டிலும் உன்னதம்
தொப்பிகளாய் காற்றில் நடனம் பயில்வது
------ டிங்கோ (உலக கவி )
July 30, 2011
July 27, 2011
டிங்கோ புராணம் 2– கவிதை தொடர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgrJBHV_NemfZgyyQa9uYCvGh6uDvhJA1WgXmZQ7SMaADLqI6YJ6MKsMVO0IhOw6oDQPK2HgdRLnufZYqWqTuXs8tJhahUuAcYzTf0WdFFLzeu7AcKonm_VXX2p702zFRFldFpuQd6G5wg/s200/dingo+3.jpg)
இரண்டாம் சந்திப்பு
இம்முறை
இரண்டு நாட்களுக்கு பின்
டிங்கோவை
கடைவீதியொன்றில் பார்த்தேன்
பின்னால் ஒரு பெண் துரத்த
சிக்னலில் தடுமாறிக்கொண்டிருந்தான்
கைகளில் ஒரு ஜோடி செருப்பு
தலையில் வட்ட குல்லாய்
அவன் கண்கள் அங்குமிங்குமாய்
மிகவும் பதட்டமாக இருந்தான்
வண்டியில் நகர்ந்து கொண்டே
கையசைத்தேன்
டிங்கோ நீ ஒரு கவிஞன்
என உரக்க கூவினேன்
டிங்கோ அதிர்ச்சியில் உறைந்து நின்றான்
காலம் கடந்து செல்லும்
ஒரு சிலை போல
டிங்கோ புராணம் – கவிதை தொடர்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhBsZEyCfoXYJBDJ8Lq2rrktz5JNZWruE2EkPL4IWt-b8NjcJsCZU2DRL3txwdQw0V1NeYYwSHUVtwhwlwqkpLJb8AHg3vaC6Tr27HNVpk4TZ5XcormOexmUS53lPgD6G6EcA4-N1x4BSQ/s200/dingo.jpg)
டிங்கோ புராணம் – கவிதை தொடர்
1.
செருப்பு திருடன் டிங்கோ வின் வீட்டிற்கு
காதலியுடன் மாலையில் சென்றிருந்தேன்.
முந்தின இரவு
குறி சொல்பவளின் வீட்டில்
அவளது செருப்பு தொலைந்திருந்தது.
வாசலில் இருந்த பாட்டிமார் இருவர்
டிங்கோ ஒரு அப்பாவி
அவன் மேல் வீண் பழி வேணாம்
என புலம்பிக்கொண்டிருந்தனர்
டிங்கோ வின் அம்மா
பல வண்ண காலணிகளை
எங்கள் முன் கடை பரப்பினாள்
பச்சை நீலம் சிவப்பு
மஞ்சள் ஊதா கருப்பு
குதிகால் உயர்ந்தது
பின்பக்கம் வார்வைத்தது
மற்றும்
ஏழை சிறுமிகளின்
தேய்ந்த ரப்பர் செருப்புகள்
அல்லாமல்
முழுதும் செருபுகளால் நிரம்பிய
அறையொன்றையும்
திறந்து காண்பித்தாள்
டிங்கோவின் தங்கை
மரத்தூணின் மறைவிலிருந்து
எங்களுக்கு குரங்கு காட்டினாள்
பாட்டிகளின் சாபம் பின் தொடர
ஏமாற்றத்துடன் படியிறங்கினோம்
தெருவில் டிங்கோ
ஐஸ் க்ரீம் வண்டிக்கருகே
நின்றுகொண்டிருந்தான்-அவன்
அருகிலிருந்த குருட்டு
பெண்னின் கால்களில் -என்
காதலியின் செருப்பு
நானும் காதலியும்
எதுவும் பேசாமல்
அவர்களை
கடந்து வந்தோம்
July 23, 2011
செம்மொழி சிற்பிகள் : 9 இரா. இராகவையங்கார்
இரா. இராகவையங்கார்
பிறப்பு ;20- 09- 1870
வள்ளல் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கியபோது அவருடன் அக்காரியத்தில் இயைந்து தமிழ்தொண்டு நிமித்தம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டிஅவற்றை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் . மட்டுமல்லாமல் காளிதாசனின் சாகுந்தலத்தையும், வால்மீகியின் இராமாயணத்தையும் நம் தமிழுக்குதந்தவர்.
தமிழ்த்தொண்டிற்கு பேர் போன இரண்டு இராகவையாங்காரில் மூத்தவர்
இன்னொருவரான மு. இராகவையங்கார் வேறு யாருமில்லை இவரது மருமகன்தான்.
சிவகங்கை சீமையின் தென்னவராயன் புதுக்கோடையில் பிறந்தவர்
தந்தை இராமானுஜ ஐயங்கார், தாயார் பத்மாலோசனி. தாய்மாமன் முத்துசாமி ஐயங்காரால் வளர்க்கப்பட்டவர். அவரது தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும்தான் இரா.இராகவையங்காரிடம் ஓட்டிக்கொண்டது. உடன் வடமொழியிலும் அவரிடமே புலமை பெற்றார்.பின் மெட்ரிகுலேசன் வரை பயின்று ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.
இராமாநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி முத்துராமலிங்க ராஜ ராஜேஸ்வர சேதுபதி,சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோரிடம் அரசவை புலவராக சில காலம் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவரது தமிழ் புலமை சமஸ்தானம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.
இச்சமயத்தில்தான் வள்ளல் பாண்டித்துரை அவர்கள் இவரை தன் நான்காம் தமிழ் சங்கத்திற்கு பணிபுரியுமாறு அழைப்புவிடுக்க அங்க்கிருந்து கொண்டு செந்தமிழ் எனும் இதழை துவக்கி ஆசிரிய பொறுப்பேற்று அதில் எண்ணற்ற ஆராய்ச்சிகட்டுரைகளை எழுதிதள்ளினார். இதனை கேள்வியுற்ற இராஜா சர் அண்ணாமலைசெட்டியார் அவர்கள் இவரை தனது அண்ணமலை பல்கலைகழகத்துக்கு தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பொறுபேற்குமாறு அழைப்புவிடுத்தார். அப்பணியில் சேர்ந்தவுடன் அவர்களை பதிப்புத்துறைக்கு ஆர்வம் பெற வைத்து அதற்கு தானே தலைவர் பொறுப்பையும் ஏற்றார். அதன் முதல் வெளியீடாக கடை யேழுவள்ளல் களில் ஒருவனான பாரி மன்னின் கதையை செய்யுளாக இயற்றி பாரிகாதை எனும் நூலையும் எழுதினார்.தொடர்ந்து சங்க பெண் கவிஞர்களை பற்றி நல்லிசை புலமை மெல்லியளாலர்கள் எனும் தலைப்பில் அரிய நூலொன்றையும் எழுதிவெளியிட்டார்..குறுந்தொகை பட்டினப்பாலை பெரும்பாணாற்றுபடை ஆகியவற்றிற்கு விளக்க உரையும் இவர் தீட்டியுள்ளார்.
இவற்றோடு இனியவை நாற்பது,நான்மணிக்கடிகை முத்தொள்ளயிரம் மற்றும் இன்னும் சில அரிய பைந்தமிழ் ஏடுகளை தேடிக்கண்டுபிடித்து அவற்றை நூலாக பதிப்பித்துள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை க்கு அடுத்து தமிழ் தாத்தா உ.வே,சாவால மகாவித்துவான் என அழைக்கப்பட்ட ஒரே புலவர் நம் இரா. இரகவையங்கர் என்பது ஒன்றே போதும் அவரது தமிழ் புலமைக்கு தரச்சான்று கூற.
விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு
வள்ளல் பாண்டித்துரை அவர்களின் அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தவர்.
மறைவு:11-7- 1946
பிறப்பு ;20- 09- 1870
வள்ளல் பாண்டித்துரைத்தேவர் நான்காம் தமிழ்சங்கத்தை துவக்கியபோது அவருடன் அக்காரியத்தில் இயைந்து தமிழ்தொண்டு நிமித்தம் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து பழந்தமிழ் ஓலைச்சுவடிகளை திரட்டிஅவற்றை நூலாக்கும் முயற்சியில் ஈடுபட்டவர் . மட்டுமல்லாமல் காளிதாசனின் சாகுந்தலத்தையும், வால்மீகியின் இராமாயணத்தையும் நம் தமிழுக்குதந்தவர்.
தமிழ்த்தொண்டிற்கு பேர் போன இரண்டு இராகவையாங்காரில் மூத்தவர்
இன்னொருவரான மு. இராகவையங்கார் வேறு யாருமில்லை இவரது மருமகன்தான்.
சிவகங்கை சீமையின் தென்னவராயன் புதுக்கோடையில் பிறந்தவர்
தந்தை இராமானுஜ ஐயங்கார், தாயார் பத்மாலோசனி. தாய்மாமன் முத்துசாமி ஐயங்காரால் வளர்க்கப்பட்டவர். அவரது தமிழ் பற்றும் தமிழ் ஆர்வமும்தான் இரா.இராகவையங்காரிடம் ஓட்டிக்கொண்டது. உடன் வடமொழியிலும் அவரிடமே புலமை பெற்றார்.பின் மெட்ரிகுலேசன் வரை பயின்று ஆங்கில அறிவை வளர்த்துக்கொண்டார்.
இராமாநாதபுரத்தை ஆண்ட பாஸ்கர சேதுபதி முத்துராமலிங்க ராஜ ராஜேஸ்வர சேதுபதி,சண்முக ராஜேஸ்வர சேதுபதி ஆகியோரிடம் அரசவை புலவராக சில காலம் பணிபுரிந்தார். இக்காலத்தில் இவரது தமிழ் புலமை சமஸ்தானம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டது.
இச்சமயத்தில்தான் வள்ளல் பாண்டித்துரை அவர்கள் இவரை தன் நான்காம் தமிழ் சங்கத்திற்கு பணிபுரியுமாறு அழைப்புவிடுக்க அங்க்கிருந்து கொண்டு செந்தமிழ் எனும் இதழை துவக்கி ஆசிரிய பொறுப்பேற்று அதில் எண்ணற்ற ஆராய்ச்சிகட்டுரைகளை எழுதிதள்ளினார். இதனை கேள்வியுற்ற இராஜா சர் அண்ணாமலைசெட்டியார் அவர்கள் இவரை தனது அண்ணமலை பல்கலைகழகத்துக்கு தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பொறுபேற்குமாறு அழைப்புவிடுத்தார். அப்பணியில் சேர்ந்தவுடன் அவர்களை பதிப்புத்துறைக்கு ஆர்வம் பெற வைத்து அதற்கு தானே தலைவர் பொறுப்பையும் ஏற்றார். அதன் முதல் வெளியீடாக கடை யேழுவள்ளல் களில் ஒருவனான பாரி மன்னின் கதையை செய்யுளாக இயற்றி பாரிகாதை எனும் நூலையும் எழுதினார்.தொடர்ந்து சங்க பெண் கவிஞர்களை பற்றி நல்லிசை புலமை மெல்லியளாலர்கள் எனும் தலைப்பில் அரிய நூலொன்றையும் எழுதிவெளியிட்டார்..குறுந்தொகை பட்டினப்பாலை பெரும்பாணாற்றுபடை ஆகியவற்றிற்கு விளக்க உரையும் இவர் தீட்டியுள்ளார்.
இவற்றோடு இனியவை நாற்பது,நான்மணிக்கடிகை முத்தொள்ளயிரம் மற்றும் இன்னும் சில அரிய பைந்தமிழ் ஏடுகளை தேடிக்கண்டுபிடித்து அவற்றை நூலாக பதிப்பித்துள்ளார். மீனாட்சி சுந்தரம்பிள்ளை க்கு அடுத்து தமிழ் தாத்தா உ.வே,சாவால மகாவித்துவான் என அழைக்கப்பட்ட ஒரே புலவர் நம் இரா. இரகவையங்கர் என்பது ஒன்றே போதும் அவரது தமிழ் புலமைக்கு தரச்சான்று கூற.
விவேகானந்தர் சிக்காகோ மாநாட்டுக்கு சென்று திரும்பிய போது அவருக்கு
வள்ளல் பாண்டித்துரை அவர்களின் அவையில் வரவேற்புரையும் வாழ்த்துரையும் வாசித்தவர்.
மறைவு:11-7- 1946
July 15, 2011
காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJJM5lp5KizQvFwSqNjdntuJc7Sxk4hsqra4cSE5Y7DEh2dwNBop8bVuHv8Ww9LzmNiEUv8pE3cZ0hu5rsKoNJidrPeY21Fz1KoLIwdx69npSMfrF4xeDW2X8Xd-0Y812zbWHMRDDScgA/s200/god+father.jpg)
உலக சினிமா வரலாறு-மூன்றாம் பாகம் -நவீன யுகம்
முதல் பாகம்-1805முதல் 1927 வரை- மவுன யுகம்
இரண்டாம் பாகம் -1927 முதல் 1972 வரை-மறுமலர்ச்சியுகம்
இவற்றை தொடர்ந்து இந்த இதழிலிருந்து 1972 முதல் நவீன யுகம் துவங்குகிறது.
மவுன யுகத்தில் தனக்கான கலையை மொழியை வடிவம் கண்டு கொண்ட சினிமா மறுமலர்ச்சியுகத்தில் தனது கலையின் மகத்தான படைப்புகளையும் மகோன்னத கலைஞர்களையும் அடையாளம் கண்டு கொண்டது.இதுவரையிலான சினிமா வரலாற்றின் ஆகசிறந்த இயக்குனர்கள் மறுமலர்ச்சி காலத்தை சார்ந்தவர்களாகவே இருக்கின்றனர். அது போலவே படைப்புகளும்
அப்படியானால் நவீன யுகம் ?
கடவுளின் இன்மை தான் நவின யுகம் பிரதானபடுத்திய ஒற்றை கோஷம் .
கடவுள் இறந்துவிட்டார் எனற நீட்ஷே வின் புகழ்பெற்ற வாசகத்தை அந்த தத்துவத்துக்கு பின்னாலிருந்த அரசியல் காரணங்களை முன்னிறுத்துவதாக அமைந்தது நவீன யுகத்தின் ஆகசிறந்த திரைப்ப்டங்கள்.
அதுவரை கலைசினிமாவுக்கும் வணிக சினிமாவுக்கும் இடையில் இருந்த கோடு மெல்ல அழிய துவங்கியது நவீன யுகத்தின் மிக முக்கிய விளைவு.. இரண்டுக்குமிடைப்பட்ட பேர்லல் சினிமா எனும் புதிய ரசனை உலக்மெங்கும் வரவேற்பை பெற துவங்கியது. இதனால் பலன் அடைந்தது என்னவோ அமெரிக்க சினிமாக்கள்தான் இதனால வன்முறையின் மூலம் புதிய அறங்கள் அதிகம் வெளிச்சமிடப்ப்ட்டன.
அதுவரை மறுமலர்ச்சி யுகத்தில் பிரதானபடுத்தப்ட்ட மனித மனம் பின்னுக்குதள்ளப்பட்டது
வெற்று ரசனைகளை கடந்து சமூகத்தின் அவலங்கள் வன்முறை எனும் கவர்ச்சியின் மூலம் வெளிக்கொணரப்பட்டன.
..மேலும் தனி மனித இருப்பு குறித்த கேள்வி? .இயற்கைக்கும் மனிதனுக்குமான உறவு குறித்த தேடல்,ஆகியவற்றுடன் கற்பனையின் முழு வீச்சில் அறிவியலின் சாத்தியங்களை தொழில் நுட்பத்தின் உதவியுடன் வெளிப்படுத்துவது ஆகிய அமசங்கள் இந்தப் யுகத்தை ஆக்ரமித்திருந்தன.
சுருக்கமாக சொல்வதனால் வரவேற்பறையிலிருந்த காமிரா புழக்கடைக்கும் இடம் பெயர்ந்தது
நவீன யுகம் .1
காட்பாதர் :கெட்டவர்களின் அறம். சினிமா அழகியலின் அகராதி
”காட் பாதர் உண்மையிலே ..தலைசிறந்த படங்களில் ஒன்றா”?
இன்னமும் இந்த கேள்வி உலகம் முழுக்க சினிமாவிமர்சகர்களின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிறது.
ஒரு மாபியா கும்பல் தலைவனை பற்றிய கதை எப்படி கலைபடமாக அங்கீகரிக்கப்படும் ?
மேலும் வணிக சினிமாக்களின் குணம் என அது வரை கருதப்பட்ட மிகை கூறல்.,அதீத வன்முறை பிரம்மாண்ட தயாரிப்பு. பெரிய விநியோகம் போன்ற அத்தனை இலக்கணக்களும் கொண்ட இப்ப்டம் சிறந்த உலகப்ப்டம் என்றால் இத்ர படங்கள் என்ன ?
இந்த கேள்விகளுக்கெல்லாம் இன்று வரை யாரும் சரியான பதிலை சொல்ல முடியவில்லை ஆனாலும் இன்றும் உலக சினிமா தளத்தில் காட்பாதர் எல்லா காலத்திலும் ஆகசிறந்த பத்து படங்களுக்குள் ஒன்றாகவே கருதப்படுகிறது.
சினிமா நூற்றாண்டை ஒட்டி உலகம் முழுக்க நூறு முக்கிய விமர்சகர்களிடம் அவர்களுக்கு பிடித்த பத்து படங்களை ஒரு ஆங்கில இதழ் கேட்டு வாங்கி தொகுத்து வெளியிட்டிருந்தது. அதில் பரவலாக அனைவராலும் அங்கிகரிக்கப்பட்ட முதல் படம் காட்பாதர் தான்..
இதன் மூலம் காட்பாதர் படத்தின் வெற்றி சினிமா என்றால் என்ன கேள்விக்கு புதிய அர்த்ததை எழுதியுள்ளது.
அது வரை சினிமா மொழி .என்பது ஒளிப்பதிவு எடிட்டிங் என்ற இரு பதங்கள் மட்டுமே என்ற எண்ணத்தை இத்திரைப்படம் முழுமையாக மாற்றியது . சினிமா என்ற கலையின் ரகசியங்களில் அரங்க நிர்மாணம் , ஆடை வடிவமைப்பு, மேக் அப் எனப்படும் சிகை மற்றும் முக அலங்காரம் மற்றும் சப்தங்கள் மற்றும் பின்னணி இசை ஆகியவற்றின் கலை பங்களிப்பும் அதன் தரத்தை தீர்மானிக்க வல்லது என்பது இதன் மூலம் நீருபணமானது.
1972ல் முதல் பாகம் அடைந்த வெற்றி 1974ல் இரண்டாம் பாகத்தையும் 1987ல் மூன்றாம் பாகத்தையும் உருவாக்கிதந்தது. இந்த மூன்று பாகத்திற்கும் அமெரிக்க எழுத்தாளரான மரிய பூஸோ வின் காட்பாதர் எனும் நாவல்தான் அடிப்படை. . தீமையின் அறம் என்பது,பொருளாதாரத்தால் நசுக்கப்ப்ட்டவர்களின் ஒடுக்கப்ப்ட்ட வாழ்நிலை எனும் புதிய பரிணாமத்தை கவர்ச்சியான கதையாடல் மூலம் கூறிய இந்நாவலின் ஆசிரியர் மரியோ பூஸோ .அமெரிக்க வாழ் இத்தாலியர். வளர்ந்தது அமெரிக்காவில் மன்ஹாட்டனில் இருக்கும் ”நகரத்தின் சமயலைறையில்” ஆம். Hells kitchen. இதுதான் அந்த இடத்தின் பெயர்..
அமெரிக்காவில் ஹட்சன் நதியோரம் இருக்ககூடிய மன்ஹாட்டன் பகுதியின் 8 வது அவென்யூவில் 34 வது தெருவுக்கும் 54வது தெருவுக்கும் இடைப்பட்ட இந்த பகுதிதான் ஹெல்ஸ் கிச்சன் எனும் நகரத்தின் சமையலறையாக அழைக்கப்படுகிறது. எப்போதும் கொலை கொள்ளை வழிப்பறி ஆகியவற்றுக்கு ஆதிகாலம் முதலே அடைக்கலமாக இருந்த காரணத்தால் இதற்கு இந்த பெயர் வாய்த்துவிட்டிருந்தது. மஞ்சள் பத்திரிக்கையில் சிறிதுகாலம் வேலை செய்த மரியோ பூஸோ 1969ல் எழுதிய மூன்றாவது நாவல்தான் காட்பாதர். வெளீயான் நாளிலிருந்தே பெரும் வரவேற்பை பெறத்துவங்கிய இந்நாவல் ஏற்க்குறைய எட்டு பதிப்பகங்களால். நிராகரிக்கப்ப்ட்டது. பெரும் சூதாடியும் குடிகாரனுமான மரியோ பூசோவுக்கு இருந்த கடன் தான் இந்த நாவலை எழுதவும் எழுதிய பக்கங்களை தூக்கிக்கொண்டு தயரிப்பாளர்களிடம் ஓடவும் வைத்தது .
அப்போது பாரமவுண்ட் சினிமாவுக்கு பொறுப்பிலிருந்த ராபர்ட் இவான்ஸ் மரியோபூஸோவின் நாவல்மீது ஒரு கண்வைத்து கணக்கு போட்டார். காரணம் அதில் இருந்த மசாலா வாசம் . கொள்ளைகூட்ட குண்டர்கள் பின்புலம் உடன் கொஞ்சம் இத்தாலிய கவுபாய் படங்களின் சாயல். இந்த காம்பினேஷனில் வெளிவந்தால் எந்த படமும் நிச்சயம் கல்லாபெட்டி கலகலக்கும் என கணக்கு போட்டார். அந்த கணக்குக்கு காரணம் அப்பொது செர்ஜியோனி லியோணியின் கவுபாய் படங்கள் கமர்ஷியலாக உலகம் முழுக்கவும் பெரு வெற்றி கொண்டாட்டத்தை நிகழ்திக்கொடிருந்தன..
அட்வான்ஸாக ஒரு தொகை கொடுத்து கதை உரிமையை வாங்கியவர் ராபர்ட் இவான்ஸ் இயக்குனராக யாரை போடலாம் என மண்டையை போட்டு உழப்பிக்கொண்டிருந்த போது ஆர்தர் பென், கோஸ்டா காவ்ரஸ், எலியா கஸன் , பிரட் ஜின்னமன் என பல பெயர்கள் பரீசலனைக்கு வந்தன. யாராக இருந்தாலும் ஒரு இத்தாலியர் இயக்கினால்தான் அந்த மாபியா குண்டர் தன்மையை படத்தில் கொண்டுவரமுடியும் என முடிவு கட்டினார்.ஆனால் அவ்ர் அழைத்த யாரும் முன் வரவில்லை. இறுதியா கவுபாய் படங்களை இயக்கி புகழ் உச்சத்தில் இருந்த செர்ஜியோ லியோனியையே இயக்குனராக முடிவெடுத்தார். ஆனால் அவருக்கோ தன் முன் வந்திருக்கும் வாய்ப்பு உலக சினிமாவரலாற்றில் அழுத்தமான முத்திரை பதிக்க போகும் படம் என தெரியவில்லை . இச்சமயத்தில்தான் வாய்ப்பு எனும் பகடை இத்தாலியை புர்வீக மாக கொண்ட இன்னொரு புதிய இயக்குனரான கொப்பல்லா வை நோக்கி உருண்டது .
இதற்கு முன் கொப்பல்லா நான்கு படங்கள் இயக்கியிருந்தார். அதில் ஒருபடம் மிகபெரிய வெற்றி. அப்படம் Finian's Rainbow, அப்போது பல பிரச்னை அவரும் அவரது நண்பரும் இயக்குனருமான ஜார்ஜ் லூகாசும் இணைந்து உருவாக்கிய ஜியோட்ரோப் எனும் ஸ்டூடியொ அப்பொது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. அதை சமாளிக்க உடனடியாக அவர் படம் பண்ணியாகவேண்டிய சூழல் . அதனால் ஒத்துக்கொண்டார்
சரி இயக்குனர் தேர்வாகிவிட்டது அடுத்தபிரச்சனை நடிகர் குறிப்பாக நாயகன் பாத்திரமான டான் கர்லோன் .
யாரை போடலாம் என்ற கேள்விக்கு பேரமவுண்ட் இயக்குனருக்கு சொன்ன ஒரே பதில் யாரை வேண்டுமானாலும் போடுங்கள் ஆனால் அந்த நபர் மட்டும் வேண்டாம் .. யார் அந்த நபர் .. பிராண்டோ மார்லன்பிராண்டோ . அந்த ஆள் ஒரு முசடன். எதற்கும் அடங்க மாட்டான் அவன் நடித்த சமீபத்திய படங்களும் தோல்வி வேறு. ஆனால் கெட்ட பந்தா வுக்கு மட்டும் குறைவில்லை . அவனை மட்டும் போடாதீர்கள் என திட்டவட்டமாக ஸ்டூடியோ நிர்வாகம் கொப்பலாவுக்கு சொல்லிவிட்டது.
ஆனால் எழுத்தாளரான் மரியோ பூசோவுக்கும் இயக்குனருக்கும் இந்த வேடத்தில் மார்லன் பிராண்டோ மட்டும்தான் அச்சு அசலாக பொருந்துவார் என்பது அசைக்க முடியாத நம்பிக்கை .
தயாரிப்பாளர்களின் வறுபுறுத்தலுக்காக பலரையும் அழைத்து வசனம் பேசி காட்டசொன்னார்கள் . இத்தாலிய நடிகர்களான லாரன்ஸ் ஓலிவர் முதல் பைசைக்கிள் தீவ்ஸ் இயக்குனர் விட்டோரியா டிசிகா வரை எத்தனையோ பேரை வரவழைத்தார்கள். ம்ம்ஹூம் கொப்பல்லோ பிடிவாதமாக இருந்தார்.
மாரல்ன் பிராண்டோ ஒருவருக்குதான் இந்த பாத்திரம் பொருந்தும் என திட்டவட்டமாக சொல்லிவிட்டார். ஆனால் பேரமவுண்ட் நிர்வாகமோ மசியவே இல்லை. நாம் கேட்க போனால் அந்த ஆள் இன்னும் கொஞ்சம் திமிர் ஏறும். பிடிவாதமாக மறுத்துவிட்டனர் . இப்படியாக இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் டான் கர்லோன் பாத்திரத்துக்கு இழுபறி நீடிக்க இன்னொருபுறம் இதரபாத்திரங்களுக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கபட்டனர்
டான் கர்லோனின் இளைய மகன் மைக்கேல் கர்லோன் பாத்திரத்துக்கு அல்பாசினொவும் மூத்த மகன் பாத்திரத்துக்கு மைக்கேல் கேன் உட்பட பலரும் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். இதர தொழில் நுட்பகலைஞர்களும் முடிவாகிவிட்டது .ஆனால் இன்னமும் யார் அந்த நாயகன் ? அதுமட்டும் முடிவாகவில்லை. தயாரிப்பு நிறுவனம் கையை பிசைந்தது.
திறமையின் செருக்குக்கு முன் இறுதியில் பணம் பணிந்தது.
மார்லன் பிராண்டோ வுக்கு தகவல் சொல்லப்பட்டது . மரியோ பூசோ எப்போதோ அனுப்பியிருந்த நாவலை பிராண்டோவும் அவரது உதவியாளரும் தேடி எடுத்தனர். உதவியாளர் அலிஸ் இந்தவாய்ப்பை விட்டுவிடாதீர்கள் மிக சிறந்த பாத்திரம் என அழுத்தம் கொடுக்க பிராண்டோ கண்ணாடியில் முகம் பார்த்தார். தன் மேகப் மேனிடம் ஒரு க்ளீப்பை எடுத்துவரச்சொன்னார், .தலைக்கு ஜெல் போட்டு பின்னால் இழுத்து வாரினார். அடுத்த பத்தாவது நிமிடம் எதற்கும் அசையாத இரும்புத்தலையன். டான் கர்லோன் அங்கு தயாராக அதை அப்படியே வீடியோவில் பதிவு செய்து கொப்பல்லோ வுக்கு அனுப்பி வைத்தார்.
படப்பிடிப்பு துவங்கியது. கொப்பல்லோ தன் கற்ப்னையின் அனைத்து ஜன்னல்களையும் திறந்தபடி காமிராமுன் இருந்தார். இதனால் படப்பிடிப்பில் நொடிக்கு நொடி மாற்றங்கள் தொடர்கதையாகின . இது தயரிப்பாளர்களுக்கு பெரும் தலைவலியை உண்டாக்கியது . பாரமவுண்ட் நிறுவனம் சட்டென கொப்பலோ வை இயக்குனர் பதவியிலிருந்து தூக்கிவிட்டு அந்த இடத்தில் எலியாகஸானை கொண்டுவர முடிவு செய்துவிட்டது.
இளம் இயக்குனரான கொப்பல்லோவுக்கு இந்த செய்தி தெரியவந்தது. இது அவருக்கு பெரிய அவமானம் அது மட்டுமல்லாமல் எதிர்கால வாழ்க்கைகே இது முற்றுபுள்ளியாகிவிடும் ..படப்பிடிப்பில் கொப்பல்லோவின் முகத்தில் தென்பட்ட சோகரேகை பிராண்டோவின் கூரிய விழிகளுக்குதப்பவில்லை.
விஷயம் அவருக்கு தெரிய வந்தது. ஒருதாளை கொண்டுவரச்சொல்லி அவசரமாக அதில் இரண்டு வரி எழுதி தயாரிப்பு நிறுவனத்துக்கு கொடுத்தனுப்பினார்.
அதை படித்த தயாரிப்பாளர்கள் முகம் அதிர்ச்சியில் விக்கித்துக்கொண்டது.
“கொப்பல்லோ வைத்தவிர வேறு ஒரு இயக்குனர் இங்கு வந்தால் அடுத்த நிமிடம் நான் வெளியேறிவிடுவேன் ”.
.
பாரமவுண்ட் அடுத்த நாளே படப்பிடிப்பை தொடருமாறு கொப்பலோவுக்கு உத்தரவிட்டது.
கொப்பல்லோ யார் உண்மையில் சிறந்த இயக்குனரா..
பிராண்டோவே வியக்கும் அளவுக்கு அவரிடம் இருந்த திறமை என்ன..
(அடுத்த இதழில்)
July 8, 2011
செம்மொழி சிற்பிகள் 8 காசிவத்தம்பி
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiFXYIqSaPzfXp7ZE-cuaaolyEAamf7gQqZsqKOiVgs8tCo1jC1aSq-rCBMwmgSW_XjfRxpjBG_a9JOeiQK7oNOvcYFXOEfnehPmV2W12JBZyfOmbXM3Hh9o_9SpdmIOXRWHzsWEcCb5x4/s200/images+%25285%2529.jpg)
கார்த்திகேசு சிவத்தம்பி
நவீன தமிழுக்கு ஈழ்த்தின் கொடை. சங்க இலக்கியத்தை அதன் பெருமையை மேற்குலகம் அறியசெய்தவர்.சங்க இலக்கியங்களுக்கும் , கிரேக்க ரோம இலக்கியக்கங்களுக்கும் இடையிலான் உறவை விவரித்துகாட்டி தமிழின் பாரம்பர்யத்தை நிலைநிறுத்தியவர்.சிறந்த ஆய்வாளர்,விமர்சகர்.
பிறப்பு: 10-05-1932
யாழ்ப்பாணத்தில் கரவெட்டி எனும் ஊரில்பிறந்தவர்.தந்தை கார்த்திகேசு . தாயார் வள்ளியம்மை. தந்தை ஒரு சிறந்த தமிழ் பண்டிதர்.அதனால் இளமையிலிருந்தே இவரது தமிழ் ஆர்வம் வயதோடு வளர துவங்கியது.கரவெட்டி விக்னேசுவரா கல்லூரியில் தொடக்க கல்வியையும்,கொழும்பு சாகிக்கிரா கல்லூரியில் இடைநிலைக்கல்வியும், இலங்கை பேராத்னை பல்கலைகழகத்தில் இளங்கலை,முதுகலை பட்டங்களும் பெற்றார்.உடன் பர்மிங்காம் பல்கலை கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தமிழ் நாடகதுறை சார்ந்த இவரது ஆய்வேடு இதர ஆய்வுகளை போலல்லாமல் தமிழ்ர் மரபையும் கலை பண்பாட்டையும் பரந்துபட்ட தன்மையில் விரிவான ஆய்வின் பின்புலத்தில் உருவாகியிருந்தது. இக்கட்டுரைகள் பத்தாண்டுகளுக்கு பிறகு நூலாக வெளியாகி தமிழக அரசின் சிறந்த நூலுக்கான பரிசையும் வென்றது. இந்நூலுக்கு பிறகு ஈழத்தில் தமிழ் நாடகத்துறை பெரும் மாறுதலை சந்தித்தது எனக்கூறலாம்
பத்தாண்டுகள் கொழும்பு சாகிரா கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிந்த சிவத்தம்பி அவர்கள் பிற்பாடு யாழ்ப்பண பல்கலைகழகத்தில் பதினேழு ஆண்டுகளும்,இரண்டு ஆண்டுகள் மட்டகளப்பில் கிழக்கு பல்கலைகழகத்திலும் பணிபுரிந்துள்ளார். மட்டுமல்லாமல் சென்னை உலகதமிழராய்ச்சி நிறுவனம்,மற்றும் இங்கிலாந்து ஜெர்மனி ஆகிய நாடுகளில் வருகைதரு பேராசிரியராக பணீபுரிந்துள்ளார்.
வெறும் பேராசிரியராக மட்டுமல்லாமல் மிகச்சிறந்த மார்க்சிய திறனாய்வாளராக தமிழ் உலகம் முழுமைக்கும் அறியப்பட்டிருப்பவர்.
.பின்னாளில் தோன்றிய பின் நவீனத்துவ விமர்சன மரபுக்கு இது முன்னோடி என்பது குறிப்பிடத்தக்கது.
இவற்றோடு இவர் நாடக நடிகரும் கூட . கைலாசபதியும் இவரும் இணைந்து விதானையார் வீட்டில் எனும் நாடகத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றது குறிப்பிடத்தகது. தானே பல நாடகங்களை எழுதி இயக்கவும் செய்துள்ளார்.
பல கல்லூரிகளில் பல்கலைகழகங்களில் பாடத்திட்டங்களை வகுத்துள்ளார்.
நாட்டார் வழக்கற்றியல் துறைக்கும் இவர் ஆற்றிய பணி குறிப்பிடத்தகுந்தது.முல்லை தீவில் நாட்டாரியல் விழா ஒன்றையும் நடத்தியுள்ளார்.தமிழ் இலக்கியம், சமயநூல்கள்,சமூகவியல்,மானிடவியல், அரசியல்,வரலாறு,கவின் கலைகள் ஆகிய துறைகளில் தேர்ச்சியும் பயிற்சியும் மிக்கவர் . மேற்கண்ட இத்துறைகளீல் இலங்கை மற்றும் தமிழ் சூழலில் இதுவரை நடைபெற்று வந்த மாறுதல்களையும் துல்லியமாக கவனித்து தன் ஆய்வுக்குபடுத்தி வந்தது ஒன்றே இவரது பெருமைகளின் சான்று.
July 7, 2011
அரங்கம் அறுத்த நிகழ்த்து கலையும் நாடகக்காரன் முருகபூபதியும்
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjL-WaQd5pCV_RWBy-Ux30fC8WojR4La4xyAYy4GAIn2-kCcIaq5EuVHhyphenhyphenD5fSd3-vAElwQhpXXNwrJLsWuQQSmtDYbW-3XmipfMnbum-lt1QVUiRzKlqf5jWMjkcSnOqReT7lEkSuE2hk/s200/tanjore+ilakkiya+payanam+031.jpg)
முருகபூபதி : ஒரு அதீத கலைஞனின் சமூக உடல்
சத்யஜித்ரேவின் அபு சன்ஸாரில் ஒரு காட்சி. அனேகமாக உலகசினிமாவின் அற்புத காட்சிகளூள் ஒன்றாகக்கூட அது இருக்கக்கூடும் . கல்கத்தாவில் தனியறையில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வசிக்கும் ஆரம்ப எழுத்தாளன் அபுவை நண்பன் ஒருவன் தேடி வருவான் .ஒருமாதத்துக்கு பிறகு அவன் புண்ணியத்தில் அபுவுக்கு வயிறுமுட்ட சாப்பாடு.. நண்பர்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இருட்டில் இரயில்பாதையில் பேசிக்கொண்டு வருவர் . அப்போது அபு மகிழ்ச்சியால் திளைத்தபடி என்றாவது ஒருநாள் தான் மிகபெரிய எழுத்தாளனாகி கலகத்தாவில் வசதியான வீட்டில் அம்மாவுடன் வந்து வசிக்க போவதாக கைகளை விரித்து மகிழ்ச்சியுடன் தன் கனவை பேசிச்செல்வான் . அவன் பேசிக்கொண்டிருப்பதை நடைமுறை தெரிந்த நண்பன் அப்பாவியாக பார்ப்பான் . ஒரு எழுத்தாளனுக்கு இந்தக் கனவு சாத்தியப்படுமா என்பது போன்ற பார்வை அது.
உண்மையில் அபுவை போலத்தான் சென்னைக்கு வந்த புதிதில் நானும் இருந்தேன். அதே போல ரயில் பாதையோரம் பழவந்தாங்கலில் ஒரு அறையில் வசித்துவந்தேன். பொருள் பற்றி எந்த கவலையுமில்லாமல்.
கனவுகள் பெரிய பெரிய கனவுகள் . கையில் காலணா தங்காது ஆனாலும் கைகளை வீசினால் உலகமே எனக்குச் சொந்தம் என்ற மகிழ்ச்சியுடன் காலால் பூமியை அளப்பேன்.அப்படி அளந்து கொண்டிருந்த ஒருநாள்
மாலையில் என் அறைக்கு நான் இப்பவும் மதிக்கும் எழுத்தாளர் கோணங்கி வந்திருந்தார். கோணங்கி என்னைத்தேடி அறைக்கு வருவது பிரபலமான திரை நட்சத்திரம் ஒரு ரசிகனின் வீட்டுக்கு வருவதுபோல எனக்கு அப்படி ஒரு பரவசத்தை தரக்கூடியது .
அன்று அவருடன் அவரை போலவே இன்னொருவரும் வந்தார்.. பாலா இவன் என் தம்பி முருக பூபதி சீக்கிரம் தஞ்சாவூர்ல நாடகம் படிக்கப் போறான் .நாடகம்தான் அவன் உலகம் பாத்துக்க “ அதே போல் பூபதியிடம் திரும்பி ”டேய் பூபதி பாலா நம்மளைப் போல பாத்துக்க . நீ எப்ப வந்தாலும் ஃப்ரியா இங்க தங்கலாம் எனக்கூறி என் சிறிய அறையை மேலும் பெரிதாக்கினார் . அதுமுதல் பூபதி எனக்கு இன்னொருநண்பன்.
கோவில்பட்டியில் கோணங்கியின் வீட்டுக்குப் போகும் சமயங்களில் பூபதியும் நானும் நல்ல இணை. கோவில்பட்டியில் அவர்களது இந்திராநகர் வீட்டை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதுவே ஒரு புதிர்த்தன்மை. அந்த வீட்டை தனியாக ஒருவன் தேடி கண்டுபிடித்தாலே அவன் தமிழின் புதிர்க்கதைகள் எழுதத் தகுதியானவன். அங்கு சென்று திரும்பாத நவீன படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணலாம் . இலக்கிய உலகு அந்த வீட்டுக்கு பெரும் கடன்பட்டுள்ளது. நவீன இலக்கியத்தின் தெற்கு முகவரி என்று கூட அந்த வீட்டை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம்.
அந்த வீட்டிற்குச் செல்லும் சமயங்களில் சிலசம்பவங்கள் எனக்குள் ஆழமான பாதிப்பை உண்டாக்கியுள்ளன. அதில் ஒன்று கோணங்கி. ஊரிலுள்ள சில முக்கிய இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு .. அதிலும் ஒரு கிணறு .. அதைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் கோணங்கி முருகபூபதி காலைக்கடன் கழிக்க வெகுதூரம் பொட்டல்காட்டில் நடந்து செல்வோம் . வழியில் ஓரு தூர்ந்த கிணற்றை காண்பிப்பார் கோணங்கி.. அந்த இடமே பூதத்தின் காலடியால் மிதிபட்டது போல தூர்ந்து போய் ஒரு அமானுஷ்யத்தை உண்டாக்கும். இந்த கிணற்றில்தான் ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்பார் .அது உண்மையா பொய்யா தெரியாது ஆனால் ஒரு மர்மம் அங்கு முடிச்சவிழ்ந்து நம்முடன் பயணிக்கத் துவங்கும்.
ஒருமுறை நான் சென்ற போது கோணங்கியின் அம்மா மரண படுக்கையில் இருந்தார். கோணங்கி என்னை அவரிடம் அறிமுகபடுத்த அவர் அந்த முடியாத நேரத்திலும் படுக்கையில் இருந்துகொண்டே என்னை அருகழைத்து நெற்றியில் விபூதி பூசினார்.
கோணங்கியை காட்டிலும் பேச்சுதுணைக்கு பூபதியும் நானும் நல்ல இணை .அவரது சமீபத்திய நாடகம் பற்றித்தான் எங்களது பேச்சு துவங்கும். ஆனாலும் அதன் பின் எங்களது பேச்சு தீவிர இலக்கியம் , ஓவியம் ,சென்னை நாடகச் சூழல் இவற்றைத்தாண்டி பல மீ பொருண்மை வெளிகளில் அலையும். அவர்களது மொட்டைமாடி அறையில் வினோத படங்கள் இருக்கும் .. சிறு பொம்மைகள் எங்களோடு உரையாடத்துவங்கும். செல்லரித்த பழைய புகைப்படங்களில் காணப்படும் நாடகக்காரர்கள் இரவில் தூங்கும்போது தாண்டிச்செல்வர்.... விபரீதங்களும் மர்மங்களும் நிறைந்த கோணங்கியின் மொட்டை மாடி அறையில் மார்கவெஸ் , சல்வடார் டாலி, புதுமைபித்தன், மொசார்ட் .ஜோதி விநாயகம், தஸ்தாயெவெஸ்கி என இறந்துபட்ட மனிதர்களும் அண்டரண்டா பட்சிகள், விசித்திர குள்ளர்கள் .. விக்ரமாதித்யன் பதுமைகள் , சேகுவேரா வின் கை., கர்னல் கிட்டுவின் ஷூ என இரவுகளீல் எதுவும் நம் கண்முன் வர வாய்ப்புள்ளது .அவர்கள் அனைவருக்குமான உலகம் அங்கு சித்தித்திருந்தது. பழைய ஏடுகிழிந்த புத்தகங்கள் நிறைந்த அலமாரிகளில் அவர்கள் ஒளிந்து கொண்டிருப்பதை போன்ற பிரமை எனக்குள் எப்போதுமிருக்கும் இதற்கும் பகுத்தறிவுக்கும் முடிச்சு போட்டால் பதில் இல்லை . ஆனால் இந்த தீவிர சமிக்ஞைகளை புரிந்துகொள்வதன்முலம் நாம் இன்னொரு அனுபவத்துக்கு தயாராக முடியும் மட்டுமல்லமல் பூபதியின் நாடக உடைகள் புராதன பழங்குடி இசைக்கருவிகள் முகமூடிகள் வினோதபுகைப்படங்கள் ஆகியவை அந்த மர்ம அறையில் இருந்தபடி இப்போதும் என்னோடு உரையாடிக்கொண்டிருப்பவையாக இருந்துள்ளன.
பூபதியின் அக உலகம் கோணங்கியின் அக உலகத்தோடு எளிதில் பொருந்தகூடியது ஆனாலும் கோணங்கி வெவ்வேறு உலகங்களூக்குள் சட்டென தாவிவிடுவார் .. பாய்வதிலும் கடந்து செல்வதிலும் தான் அவருக்கு விருப்பம். ஆனால் பூபதியின் உலகம் அப்படிப்பட்டதல்ல .. அது குறிப்பிட்ட ஒரு உலகத்துள் நுழைந்தால் அதன் ஆழத்தில் முங்கி இன்னொரு எல்லையை நோக்கி நீந்துபவை ..கோணங்கி பேச்சுக்கு திரும்பி விடுவார் ஆனால் பூபதி மௌனத்தோடு உரையாடுபவர் . அதனால்தான் அவரது நாடகங்களில் அழுத்தம் அதிகம். ..
பூபதியின் நாடகங்கள் பெரும்பாலும் தொன்ம சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. சடங்குகள் நம் பழங்குடி மரபு. இதில் பல சடங்குகளைத்தேடி பூபதி பல மாதங்கள் காட்டில் அலைந்து திரிந்து கண்டுபிடித்துள்ளார். இப்படியான் ஆராய்சியில் சில மாதங்கள் அவர் மூழ்கி விட்டு வீடு திரும்பியபோது நானும் அப்போது கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன்.
ஆளே வித்தியாசமாக இருந்தார். தேனீ கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வெளிவந்தவர் போல, பார்ப்பது பேசுவது எல்லாம் வித்தியாசமாக இருந்தது .. ஏதோ பெர்க்மன் படத்துக்குள் இருக்கிறார் போல ஒரு பிரமை தோன்றும் அதன் பிறகுஅவர் நாடகங்களில் வசனங்கள் மெல்ல பின் வாங்க துவங்கி உடல் அசைவுகள் அதிகம் முக்கியத்துவம் பெறத்துவங்கின .
ஒருமுறை அவரது முக்கியமான நாடகம் நடந்து முடிந்த சமயம். ஆனந்த விகடனில் அந்த நாடகம் பற்றி ஒருகட்டுரை வெளியாகியிருந்தது. வழக்கமாக பூபதியும் அவரது நண்பர்களும் மீடியாக்கலிலிருந்து விலகியிருப்பவர்கள் கோணங்கியை போல.காரணம் மீடியாக்கள் காரணமாக கலைத்த்ன்மை சாரம் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் நம்பினர் .ஆனால் அந்தமுறை அப்போது விகடனில் நிருபராக இருந்த அருள் எழிலனின் விருப்பத்தின்பேரில் அக்கட்டுரை வெளியாகியிருந்தது. விகடன் வெளியான சிலநாட்களில் பூபதிக்கு சக நாடகக்காரன் ஒருவனிடமிருந்து ஒரு அநாமதேய கடிதம். பூபதி மீடியாக்காரனாக மாறிவிட்டதாகவும் இனி நாடகத்தை விட்டு சினிமாவுக்கு நுழையபோவதையே இது காண்பிக்கிறது என்பதாகவும் நக்கல் செய்து எழுதப்படிருந்தது அக்கடிதம். அதை படித்த பூபதி மிகவும் விசனப்பட்டுகிடந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்குச்சென்றிருந்தேன்.தகவலைகேள்விப்பட்டதும் இலக்கியம் மட்டுமல்லாமல் எல்லாத்துறையிலும் இது போன்ற ஏழரை ஆட்கள் எட்டரை வேலைகளில் ஈடுபவடுதை அறிந்து வருத்தம் கொண்டேன் . அவருக்கு ஆறுதல் எப்படிச் சொல்லலாம் என யோசித்தேன். அவரை மன அழுத்ததிலிருந்து முழுவதுமாக விடுவிக்க அவரது பாணியை கையாள்வதென முடிவு செய்தேன் .
பின் அவரிடம் நாடகம் நடத்துன நிலத்துக்கு நீ என்ன செஞ்சே எனக் கேட்டேன் ?அந்த இடம் ஒரு தேரி காடு நல்ல செக்கசெவேலென சிவந்துகிடக்கும் வளமான செம்மண் பூமி . அதில் பல பூச்சிகள் உயிரினங்கள் தாவரங்கள் செழித்த நிலம் ..அந்த இடத்தில் வெறுமனே பூமியை பயன்படுத்திவிட்டு வரலாமா அதன் சமன் குலைந்திருக்குமல்லா.. எனகேட்டேன் .உடனே ஒரு கெடா வெட்டி பொங்கல் போடு எல்லாம் சரியாகும் என்றேன். அடுத்த சில நாட்களில் அங்கு தன் குழுவினருடன் சென்று பூபதி பொங்கலிட்டு மொட்டை போட்டுக்கொண்டு திரும்பினதாக போனில் தகவல் சொன்னார் . அந்த குரலில் மகிழ்ச்சி தெறித்தது.
இது ஒரு சைக்கலாஜி அவ்வளவுதான் .அப்போதைக்கு அவரை பீடித்திருக்கும் மன அழுத்த்திலிருந்து விடுவிக்க எனக்கு தெரிந்த ஒரே மருந்து அவரை இன்னொரு கொண்ட்டாட்டத்துக்கு தயார்படுத்துவது அவ்வளவே.
இந்த விடயத்தை நான் இங்கே பகிர்வதற்கு காரணம் பூபதி தன் கலையை உணர்வு பூர்வமாகவும் சடங்காகவும் வழிபட்டு அதை எப்படி தனக்கான கலாச்சராமாக மாற்றிக்கொண்டார் என்பதுவே ஆகும். இத்தனைக்கும் அவருக்கு கடிதம் எழுதியவர் மேல் அவருக்கு சிறிதும் கோபமில்லை . ஆனால் அவருக்கிருந்த மன உளைச்சல் எல்லாம் இப்படி ஒரு எதிர்வினை வருமளவுக்கு தன் செயல் இருந்துவிட்டதோ எனும் அச்சம் காரணமாகத்தான். ஆனால் அது தேவையற்றது என்பதை நான் உணர்ந்தேன் ஆனால் சொல்லவில்லை. மாற்று வழியை காண்பித்தேன் அவ்வளவுதான்.
இந்த சம்பவத்தை நான் குறிப்பிடக் காரணம் ஒரு கலைஞனாக அவரிடம் நான் கண்ட பரிபூரண முழுமைதன்மையை உங்களுக்கு விளக்கத்தான். இத்தனை சுயநேர்மையுடன் நாடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் இன்று தமிழ்சூழலில் ஒருவரும் இல்லை .
அவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு ஆய்வாளராக பல கிராமங்களுக்கு சென்று பல நாடக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படங்களை சேகரித்து ஒரு கண்காட்சியும் நிகழ்த்தியுள்ளார். இது ஒரு அரிய பணி .உண்மையில் இது ஒரு அரசாங்கத்தின் பணி .தனி மனிதனாக தன் ஆர்வத்தின் பேரில் மட்டுமே இதை செய்திருக்கிறார். இந்தபணிக்கு அவர் எந்த அங்கீகாரத்தையும் எதிர் இன்று வரை எதிர்பார்த்தவரில்லை. அரசாங்கம் விருது கொடுத்தால்கூட அது அவரை கொச்சைபடுத்துவது போலத்தான். நானும் கூட ஒரு பதிவுக்காகத்தான் இங்கே குறிப்பிடுகிறேன் .
இன்று கிட்டதட்ட நாடகம் என்ற துறையே அழிந்துவிட்டது . எல்லா பட்டறைகளும் கோடம்பாக்க குடியிருப்புகளாக சினிமாவை செழுமைபடுத்த வந்துவிட்ட சூழலில் நம் கண்முன் ஒற்றை ஆளாய் இன்னமும் உறுமிக்கொண்டிருக்கும் உடல் பூபதியினுடையது என்பதில் ஐயமில்லை . அவரது நாடகங்கள் நமக்கு நெருக்கமானதோ இல்லையோ நமது உடல்களுக்கு மிகவும் நெருக்கமானவை. அவரது உடல் அசைவுகள் நாம் மிருகமாக காட்டில் உலவிய காலங்களை மீண்டும் நமக்குள் உணர்த்துபவை. நாடகம் என்பதை தீர்மானிக்கும் சதுரவடிவ அரங்கத்தன்மையை அறுத்து நமக்குள்ளிருக்கும் வெளிகளை மேடையாக்கும் சாத்தியம் கொண்டவை . அப்படியான் ஒரு தமிழ் நாடகக்காரனின் அந்த உடல் நம் முன் மீண்டும் சென்னையில் தோன்ற உள்ளது . வரும் ஜூலை பத்தாம் தேதி பூபதியின் புதிய நாடகம் சூர்ப்பணங்கு ஸ்பெசஸ் எண்: 1, எலியட்ஸ் க்டற்கரை. பெசண்ட் நகரில் நடைபெற உள்ளது. ஒரு புதிய அனுபவத்துக்காக காத்திருப்பவர்கள் அவசியம் தவறவிடகூடாத தருணம் இது..
July 2, 2011
செம்மொழி சிற்பிகள் : 7 வள்ளலார் இராமலிங்க அடிகள்
வாடிய பயிரைக்கண்டபோதெல்லாம் வாடி நின்றேன் எனகூறி தன் தீந்தமிழால் அன்பை போதித்த மனித நேயர். எளிய தமிழை துவக்கி வைத்தவர் அருளாளர், உள்ளத்தால் ஒருவன் இறைத்தனமை அடையமுடியும் என்பதற்கு இலக்கணமாக இருந்தவர். தமிழின் மூலம் உயிர்களிடத்தில் அன்பை போதித்தவர் சடங்குகளாலும் சாதிகளாலும் புரையோடிக்கிடந்த சமூகத்தை தன் ஒளிமிகுந்த தமிழால் புரட்டிபோட்டவர்.பத்தொன்பதாம் நூற்றாண்டின் நனி சிறந்த தமிழர் வள்ளலார் என தமிழுலகமே ஏற்றுக்கொண்ட இராமலிங்க அடிகள்.
தோற்றம் :05-10-1823
சிதம்பரம் அருகே மருதூரில் பிறந்த அடிகளாரின் இயற்பெயர் இராமலிங்கம். தந்தை ராமையா பிள்ளை. தாயார் சின்னம்மாள். சிறுவயதிலேயே தந்தையை இழந்த காரணத்தால் சென்னைக்கு ஏழுகிணறு பகுதியிலிருந்த அண்ணன் சபாபதியின் வீட்டுக்கு குடும்பம் இடம்பெயர்ந்தது. சபாபதிக்கு தொழிலே பக்திதான் . கோவில் கோவிலாக சென்று சமய சொற்பொழிவுகளை நடத்திவந்தார்.அத்னால் இவருக்கும் சிறுவயதிலேயே கோவில்கள் பரிச்சயமானது .சமயம் கிடைக்கும்போதெல்லாம் கந்த கோட்டம் ,வடபழனி என முருகன் கோவில்களுக்கு சென்று தானாகவே பாடல்கள் புனைவதை இராமலிங்கம் தொழிலாக கொண்டிருந்தார்.துவக்க கல்வியின்போதே தன் புலமையால் ஆசிரியர்களை ஆச்சர்யபடுத்தினார். ஒரு முறை சென்னை முத்தியாலு பேட்டையில் நடந்த கூட்டத்திற்கு உடல் நலமின்மையினால் அண்ணன் சபாபதி சொற்பொழிவாற்ற முடியாமல் போக வேறுவழில்லாத காரணத்தால் அங்கு இராமலிங்கர் தன் முதல் சொற்பொழிவுக்கு காலத்தால் நிர்பந்தப்படுத்தப்ட்டார். அன்று அச்சொற்பொழிவைக்கேட்டவர்கள் பரவசத்துக்கு ஆளாயினர். அன்று தொட்டு இராமலிங்கர் ஊர் ஊராக திரிய ஆர்ம்பித்த்னர்.
தன் அக்காள் மகள் தன்ம் என்பவரை திருமண்ம் செய்தாலும் தமிழும் தவ வாழ்க்கையுமே இவரது இல்லறமாக இருந்தது.கவைதை எழுதுவதையும் பாடல் புனைவதையும் முழுநேர தொழிலாக கொண்ட இராமலிங்கரின் வரிகள் ஆழமாகவும் எளிமையாகவும் புதுமையாகவும் இருந்தன. தனித்திரு, பசித்திரு விழித்திரு,ஒன்றேசெய், நன்றே செய், இன்றே செய் போன்றவை அவர் கூறிய ஆகச்சிறந்த வரிகளில் சில.
முதன் முதலாக முதியோர் கல்வியை தொடங்கியவர். தமிழ் நாட்டில் முதன் முதலாக திருக்குறள் வகுப்பை துவக்கினார் போன்ற பெருமைகளும் இவருக்குண்டு.மனுமுறைகண்ட வாசகம், சீவகாருண்ய ஒழுக்கம் போன்ற சிறந்த உரைநடை நூல்களும் இவரது தமிழ்த்தொண்டின் சிறப்புகள்.
மொத்தம் 5818 பாடல்களை கொண்ட இவரது தொகுப்பு அருட்பா எனப்பட்டது
இவரது பாடல்கள் சமூக மாறுதல்களை பேசின. சடங்கு சம்பிரதயங்களை இவர் கடுமையாக எதிர்த்தார்.உயிர்பலிகூடாது என வறுபுறுத்திய இவர் சாதிமதம் குலம் கோத்திரம் போன்றவை மனிதனை சிறைப்படுத்தும் விலங்குகள். அவை உடைத்தெறியப்பட வேண்டும் என புரட்சிகருத்துக்களை கூறினார். இதனால் இவருக்கு சமூகத்தில் எதிர்ப்புகள் அதிகம் உண்டாயின .
அவற்றுள் யாழ்பாணத்தை சேர்ந்த தமிழ் அறிஞர் ஆறுமுக நாவலரின் எதிர்ப்பு இவரது பாடல்களை அருடபா இல்லை மருட்பா எனக்கூறி வழக்கு தொடுக்கும் அளவிற்கு சென்றது. தமிழகம் முழுதும் அறிஞர்கள் இரண்டு அணிகளாக பிரிந்தனர். கடலூர் வழக்கு மன்றத்தில் நடந்த இறுதிக்கட்ட உசாவலில் இராமலிங்கரின் பாடல்கள் அருட்பாதான் என தீர்ப்பாகியது.
சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற அமைப்பை நிறுவி ஏழைமக்களின் பசிப்பிணி போக்க வடலூரில் தருமசாலை ஒன்றயும் 1870ல் நிறுவினார்.
நூறு ஆண்டுகளை கடந்தும் இன்றுவரை அந்த அடுப்பு அணையாமல் எரிந்துவருவது அவரது வாழ்வின் சிறப்புக்கு சான்று.
மறைவு :30-01-1874
Subscribe to:
Posts (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...