August 1, 2010

பிரான்சின் புதிய அலை : ஒரு செலுலாய்ட் புரட்சியின் கதை


>


பிரான்சின் புதிய அலை


உங்களின் சினிமாக்கள் அயோக்கியத்தனம் அது மக்களை ஒரு தந்திரவலைக்குள் வீழ்த்தும் குப்பை ,அங்கு மனதை கட்டிப்போடும் மாய்மாலம் மட்டுமே எஞ்சுகிறது...இது கலை இல்லை...உண்மையான கலை இந்த வேலையை செய்யாது ...அது மக்களை ஏமாற்றாது மாறாக தனக்குள் ஒரு அழகையும் வடிவத்தையும் உருவாக்கிக்கொண்டு மக்களையும் ரசிக்க வைக்கும்


இதெல்லாம் ....அக்காலத்தில் 1959 க்கு முன்பு வரையிலான உலகசினிமாக்களின் மீதான விமர்சனங்கள்

விமர்சித்தவர்கள் யார் ?

துடிப்பான இருபது முதல் முப்பது வயதுக்குட்பட்ட நான்கைந்து இளைஞர்கள்

கையேது சினிமா என அவர்கள் நடத்திய பத்திரிக்கையில்தான் அவர்கள் இப்படி அக்கால திரைப்படங்களை தங்களது கூர் விமர்சனங்களால் கிழித்து தொங்க விட்டனர்.

இவர்களுக்கு சினிமாவை பற்றி என்ன தெரியும் ..வெறும் எழுதிவிட்டால் போச்சா வந்து ஒரு படத்தை எடுத்து பார்க்கட்டும் அப்புறம் தெரியும் ..

என இயக்குனர்களும் பதிலுக்கு இவர்களை தூற்றினர்

காலம் கனிந்தது .. ஒரு நாள் அவர்கள் சொன்னது போலவே அந்த விமர்சகர்கள் படைப்பாளிகளாக மாறினர். தங்களை புதிய அலை என அவர்களாகவே அழைத்துக்கொண்டனர். படம் எடுக்க துவங்கினர்.
படம் வெளியான போது அந்த விமர்சகர்களின் படங்கள் அதுவரையிலான உலகசினிமாவையே புரட்டி போட்டது . உலகமெங்கும் அவர்களின் சினிமாக்களுக்கு அரங்கம் எழுந்து கைதட்டியது. ஒரு சாதராண திரைப்பட சங்கத்தில் துவங்கிய அந்த இளைஞர்களின் வாழ்க்கை பத்திரிக்கையாளராக மாறி பின் படங்களை விமர்சித்து பின் உலக சினிமாக்களுக்கே வழிகாட்டியாக மாறியது தனிக்கதை
அன்று அவர்கள் தோற்றுவித்த நியூ வேவ் எனும் புதிய அலை இயக்கம் இன்று உலகசினிமா வரலாற்றின் மகத்தான திருப்பு முனையாக காலத்தால் அழுந்த பதியப்பட்டுள்ளது

ப்ராங்கோய்ஸ் ட்ரூபோ, Francois Truffaut, ழான் லுக் கொதார்த். Jean-Luc Godard, கிளாத் சாப்ரோல், Claude Chabrol, எரிக் ரோமர்Eric Rohmer.
இவரகள்தான் அந்த இளம் இயக்குனர்கள் ..அதுவரையிலான இலக்கணங்களை உடைத்து சினிமாவுக்கு புது இலக்கணம் எழுதிய உலகசினிமாவின் சிற்பிகள்


இவர்கள் எப்படி ஒன்றிணைந்தார்கள் … இவர்களின் பிதாமகன் யார்... இவர்கள் இதற்காக பட்ட சிரமங்கள்... என்ன?



புதிய அலைக்குமுன் பிரான்ஸ்

இரண்டாம் உலகப்போரில் பிரான்சை நாஜிக்கள் தன் கைக்குள் வைத்திருந்த நேரம் அதன் ஜன்னல்கள் அனைத்தும் முழுவதுமாக அடைக்கப்பட்டிருந்தன. அமெரிக்க சினிமாக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்ததகாலம் அது. கலையின் மீதும் சுதந்திரத்தின் மீதும் அளவற்ற ஈடுபாடு கொண்ட பிரான்ஸ் தேசத்தவரை இந்த தடைகள் ரொம்பவே சங்கடப்படுத்தியது.. அதிலும் குறிப்பாக 1920 க்கும் 1930 க்கும் இடைப்பட்ட பிரான்சில் கலைச்செழுமையான காலத்தில் வாழ்ந்த ஆந்த்ரே பாஸின் , அலைன் ரெனாய்சிஸ் ,ஆஸ்ட்ரெக் ஆகிய கலைஞர்களுக்கு இது பெரும் நெருக்கடியை தோற்றுவித்தது. இதிலிருந்து தங்களை விடுவித்து கலையின் புதிய வெளிகளுக்கு தாவும் மனோ நிலையில் அவர்கள் உந்தி தள்ளப்பட்டபோது அவர்கள் அதற்கு வழியில்லாமல் அல்லலுற்றனர். போர் முடிந்தது நாஜிப்படைகள் பிரான்சிலிருந்து அகற்றப்பட்டன .. ஜன்னல்கள் திறக்கப்பட்டன புதிய காற்று புதிய வெளிச்சம் புதிய சிந்தனைகள் ...பிரான்சின் அறிவுலகத்துள் பெரும் பாய்ச்சலோடு புகுந்தது. கலைகளின்பாலும் தத்துவங்களின் பாலும் அதிக ஈடுபாடு கொண்ட ஆந்த்ரே பாஸினுக்கு சினிமாவின் மீது பார்வை குவிந்தது. இடது சாரி பார்வை கொண்ட பாஸின் அமெரிக்க படங்களின் முதலாளித்துவதன்மைகளையும் அதன் போலித்தனங்களையும் அவதானித்தார். இதில் உயிரோட்டம் இல்லை.. இவர்கள் சொல்வதில் பொய் இருக்கிறது .. ஆழ் மனங்களின் உள்ளுணர்வுகள் படைப்பாக இல்லை. ஏற்கனவே யாரோ ஒருவர் தீர்மானித்து எழுதப்பட்ட கதையை கேமரா மற்றும் படத்தொகுப்பினால் உருவாக்குவது மட்டுமே இயக்குனர் வேலை இல்லை என்றும் பத்திரிக்கைகளில் சாடினார். பாஸினுடன் அலெக்ஸாண்டர் ஆஸ்ட்ரெக் எனும் அறிஞரும் சேர்ந்தார். அவர்தான் பிற்பாடு எழவிருந்த புதிய அலை எனும் இயக்கத்துக்கு அடிநாதமாக இருந்த ”கேமரா ஒரு பேனாவை” போல எனும் முக்கியமான கருத்தாக்கத்தை வெளியிட்டவர்.



எழுத்தாளனுக்கு எப்படி பேனாவோ அது போல இயக்குனருக்கு கேமார செயல்படவேண்டும் . தன் சுயசிந்தனையுடன் தன்னியல்பாக எழுதுவது போல கேமராவால் ஒரு இயக்குனர் யாருடைய (குறிப்பாக தயரிப்பாளர்களின் ).
அதிகாரத்துக்கும் கட்டுபடாமல் உருவாக்கும் போதுதான் சினிமாவில் அசலான படைப்புத்தன்மைகள் வெளிவரும் எனக்கூறினார். உடன் ஹாலிவுட் இயக்குனர்களில் குறிப்பிடத்தக்வர்களான பிரிட்ஸ் லாங், டி டபிள்யூ கிரிபித் , ஜான் போர்ட்.. ஆகியோர் பற்றியும் அவர்களில் ஒளிந்துகொண்டிருந்த நவீன சினிமாவுக்கானகூறுகளையும் குறிப்பிட்டு ”சினிமா தி ஆர்ட் ஆப் ஸ்பேஸ்” எனும் கட்டுரை ஒன்றை எழுதினார் .

மிகச்சிறிய வட்டத்தாரால மட்டுமே படிக்கப்பட்ட இக்கட்டுரைகள் நாளடைவில் சினிமா ஆர்வலர்கள் மத்தியிலும் புதுமை விரும்பிகளிடத்தும் புதிய வரவேற்பை பெற்றது. பிரான்சில் பல இடங்களில் சினிமா சங்கங்கள் எனப்படும் சிறு சிறு குழுக்கள் உருவாக்கம் பெற்றன.ஐம்பதுக்கும் குறைவான உறுப்பினர்களை கொண்ட இக்குழுக்கள் வெவ்வேறு மொழிகளில் வெளியாகும் நல்ல சினிமாக்களை இங்கு திரையிட்டு அதன் தரம் குறித்து காரசாரமாக விவாதித்தானர் . இப்படியான குழுக்களில் ஒன்று சினிமாத்தொக் பிரான்ஸ் Cinematheque Française, எனப்படும் குழு . ஹென்றி லாங் லோயிஸ் எனப்படுபவரால் நடத்தப்பட்டு வந்தது. இக்குழுவில் ஐம்பதுக்கும் குறைவானோர் தீவிரமான உறுப்பினர்கள் . அவர்கள் பெரும்பாலும் மவுனமொழி படங்களையே அதிகம் பார்த்தனர்.அதிகமான சினிமாவை பார்ப்பதன் மூலமாக மட்டுமே சினிமாவில் பயிற்சி பெற முடியும் எனபதை இக்குழு உறுதியாக நம்பியது . கூடுமானவரை வெளிமொழி படங்களை சப் டைட்டில் எனப்படும் மொழிமாற்ற எழுத்துருக்கள் இல்லாமல பார்த்து அதன் மூலம் இன்னும் கூடுதலாக காட்சி மொழிக்கு தங்களை தயார்படுத்திக்கொண்டனர் .

இந்த குழுவுக்குள் முதன்முதலாக ஒரு சிறுவன் ..16 வயதேயான சிறுவன் ஒருவன்வந்தான் . மிகவும் துறுதுறுப்பாகவும் மற்றவர்களைக்காட்டிலும் சினிமாக்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவனாகவும் காணப்பட்ட அவன் தான் பிற்பாடு பிரெஞ்சு சினிமாவின் முகவரியாக மாறிப்போனான் .. அவன் பெயர் பிரான்ஸ்வா த்ரூபோ ...புதிய அலை இயக்கத்தின் மிக முக்கிய முதன்மை இயக்குனராக இன்றளவும் உலகசினிமாவால் அறியப்பட்டவன். அக்காலத்தில் சிறுவயதில் தந்தையின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் விதமாக சினிமா பார்க்க வந்த த்ரூபாவுக்கு அதுவே உணவாகவும் வேதமாகவும் வாழ்க்கையாகவும் மாறிப்போனது .

த்ரூபாவை போலவே சினிமாத்தொக் குழுவுக்கு ஒரு நாள் இன்னொரு இளைஞனும் வந்து சேர்ந்தான் . பிற்பாடு உலகசினிமாவில் தனித்தன்மை மிகுந்த இயக்குனராகவும் பல இயக்குனர்களின் மானசிக ஆசானாகவும் உருவானவன் .அவன் பெயர் கோதார்த். ழான் லூக் கோதார்த் என்பது முழுப்பெயர் . தனது தீவிரமான அரசியல் பார்வைகளாலும் மிகச்சிறந்த காட்சி கட்டமைபுக்களாலும் உலகசினிமாவுக்குள் அதிர்வலைகளை நிகழ்த்தியவன்(ர்).. சினிமா என்பது ஒரு ஒருவழிப்பதையானால் அது முடிவுறும் இடத்தில் நிற்பவர் கொதார்த். இவரது படங்களை வேதமாக கருதுபவர்களும் உண்டு ஆனால் அன்று சினிமாதொக் சங்கத்தினுள் நுழைந்த போதோ மிக சாதராணமான இளைஞன் ..இவரும் துவக்கத்தில் தந்தையாரது கொடுமையால் பாதிப்புக்கள்ளானவர். இதன் காரணமாகவே சினிமா சங்கங்களுக்கு சென்று சினிமா பார்ப்பதை வழக்கமாக கொண்டிருந்தார். இதை பற்றி பின்னாளில் குறிப்பிடும் போது அக்காலங்களில் சினிமா திரையானது வீட்டு பிரச்சனைகளிலிருந்து தப்பித்து வேறு உலகங்களுக்கு செல்லும் சுவராக இருந்தது எனக்கூறியுள்ளார்.

இவர்களோடு அப்போது எரிக்ரோமர் Eric Rohmer. களவுத் சாப்ரோல் Claude Chabrol, போன்றவர்களும் தீவிரமாக இச்சங்கங்களில் ஈடுபட்டனர். இவர்கள் வெறுமனே திரைப்படங்களை பார்ப்பதோடுமட்டுமில்லாமல் தங்களுக்கு பிடித்த திரைப்படத்தின் புகைப்படங்கள் மற்றும் சுவரொட்டிகளை சேகரிப்பது.. மேலும் தங்களுக்கு பிடித்த இயக்குனர்களை பட்டியலிடுவது ,அவர்கள் குறித்த தகவல்களை சேகரிப்பது போன்ற காரியங்களிலும் ஈடுபட்டனர்.

இவரை போலவே இச்சங்கங்களில் அக்காலத்தில் ஈடுபட்ட அலைன் ரெனாய்ஸ், Alain Resnais, ழாக் ரிவெட், Jacques Rivette, , ரோஜர் வாதிம் Roger Vadim, போன்றவர்களும் பிற்பாடு குறிப்பிடத்தக்க இயக்குனர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

ஆனாலும் இவர்களுக்கும் முன் சொன்ன நால்வருக்கும் என்ன வேறுபாடு என்றால் முன்னவர்கள் இவர்களைக்காட்டிலும் கூடுதல் திறமை கொண்டவர்கள் என்பது மட்டுமில்லாமல் அடிப்படையில் எழுத்தாளர்கள்,... அதனால் இவர்கள் அக்காலத்தில் புதிய சினிமா மற்றும் கலை இலக்கியம் குறித்து கட்டுரைகள் எழுதின ஆந்த்ரே பசினுடன் தொடர்பு கொண்டு தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர் . உடன் தங்களது விமர்சனங்களை அவ்வப்போது வெவ்வேறு பத்திரிக்கைகளுக்கு கட்டுரைகளாகவும் எழுதி சிறுசிறு சலசலப்புகளை உருவாக்கினர். துவக்கத்தில் இக்கட்டுரைகளுக்கு ஆங்காங்கு வரவேற்பு கிட்டவே நமக்கென்று ஒரு இதழ் இருந்தால் இன்னும் கூடுதலாக எழுதிகுவிக்கலாமே என்ற எண்ணம் இவர்களுக்குள் தோன்றியது... இதே சமயம் இவர்களது தத்துவ குருவான பாஸினுக்கு இதற்குமுன் அவர் தொடர்ந்து எழுதிவந்த இதழ் நின்று போக ..அனைவரது ஒத்துழைப்புடன் பாஸின் அடுத்த சில நாட்களிலேயே ஒரு புதிய இதழை துவக்கினார். கையேது சினிமா . Les Cahiers du Cinema.. சினிமா வரலாற்றில் சினிமாவளர்ச்சியில் ஏதேனும் ஒரு இதழுக்கு சிறுபங்களிப்பு இருக்குமானால் அது இந்த இதழுக்கு மட்டுமே இருக்கும்.

1951 ல் இந்த இதழின் முதல் பிரதி வெளியான போது அடுத்த சில வருடங்களில் இந்த இதழ் மகத்தானசசாதனைகளை செய்யப்போகிறது என யாரும் எதிர்பார்க்கவில்லை.
(பிரான்சின் புதிய அலை.... .11தொடர்ச்சி .. அடுத்த இதழில்)
நன்றி : புத்தகம் பேசுது ஆகஸ்ட் மாத இதழ்

10 comments:

rvelkannan said...

சிறப்பான படைப்பு. புதிய அலையை பற்றிய நல்லதோர் அறிமுகம். எப்போது அஜயன் அந்த அலை தமிழில் வரும். (தற்போது கனிந்து வருவதாக நான் கருதுகிறேன் இதற்கு முன்னால் பாரதிராஜா ,மகேந்திரன் காலத்தில் வந்தது ஆனால் வந்த வேகத்தில் அடங்கியும் போனது.) பிரான்ஸ்வா த்ரூபோ இவர் இயக்கிய படங்கள் .... ஏதேனும் சொல்ல முடியுமா அஜயன் ...?

ajayan bala baskaran said...

நன்றி வேல் கண்ணன் தமிழில் இது போன்ற அலை வருவதற்கு நிறைய்ய சாத்தியமிருக்கிறது.. சமீபத்திய திரைப்படங்கள் கூட தர அடிப்படையில் முந்தைய பாரதிராஜா மகேந்திரன் காலத்தோடு ஒப்பிடும் போதுசற்று குறைந்த தரத்தினதாக இருப்பினும் இக்காலமும் தமிழ் சூழலில் குறிப்பிடத்க்க காலமே ,வன்முறை யை தவிர்த்துவிட்டு பார்த்தால் பல குறிப்பிடத்தக்க படங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் தொடரச்சியாக தமிழில் பல மாறுதல்கள் வர வாய்ப்புள்ளது அதெ சமயம் சகலகலாவல்லவன் போல ஒரு குப்பை வந்து சூழலை திசை திருப்பவும் வாய்ப்புள்ளது

த்ரூபோ எனும் அதி கலைஞன் குறித்த தகவல் இக்கட்டுரை தொடர்ச்சியில் எழுத உள்ளேன்

பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி வேல் கண்ணன்

http://rkguru.blogspot.com/ said...

நல்லதோர் சினிமா இலக்கிய பார்வை, ஆழ்ந்து உள்நோக்குதல்..... மிகவும் அருமையா பதிவை எழுதுருக்கிங்க என்று சொல்வதை விட அக்கால சினிமா படைப்பாளிகளை ஓவியமாய் வரைந்திருக்கிறீர்கள் என்று சொல்லலாம்...எங்கள் வாழ்த்துகளுடன் மென்மேலும் உங்கள் ஆழமான பார்வை தொடரட்டும் ....!

மதரசாஸ் பட்டினம் படம் பார்த்தேன் உங்கள் பங்களிப்பு இயக்குனருக்கு மிகவும் பெருயுதவியாக இருந்திருக்கிறது. நிச்சயம் அப்படம் பல விருதுகளை குவிக்கும் சந்தேகமேயில்லை....எனக்கு அப்படம் பார்த்த பிறகுதான் தமிழ் சினிமா மேலே ஒரு மரியாதையே வந்தது....என்ன ஒரு அற்புதமான படைப்பாளிகள்.... அதற்கு உங்களை போன்ற படைப்பாளிகளும் காரணமாக இருந்திருக்கிறீர்கள்.

நட்புடன்
Rk குரு

ajayan bala baskaran said...

நன்றி குரு உங்களை போன்ற தீவிர வாசகர்கள் துரத்துவதால் மட்டும் இந்த எழுத்து இயந்திரம் ஓடிக்கொண்டிருக்கிறது .. இன்னமும் வேகமாக ஓடுவேன்..

இதற்குமுன் சில திரைப்படங்களில் அதன் திரைக்கதைகளில்முழுமையாக பங்கேற்றிருக்கிறேன் என்றாலும் அவை மதராஸ் பட்டினம் அளவுக்கு புகழையும் பெயரையும் ஈட்டவில்லை. அதற்கு ஒரே காரணம் இயக்குனர் .தனது படைப்பின் மேல் அவர் கொண்டிருந்த ஈடுபாடு அவரது தொழில் நுட்ப மேதைமை .

Jose Antoin said...

அஜயன் கட்டுரை படித்தேன். உத்வேகம் ஊட்டக் கூடியதாக இருந்தது. நன்றி.

ajayan bala baskaran said...

நன்றி ஜோஸ் .ஒரு கமெண்டுக்காக பலமுறை யோசிக்கும் உங்களிடமிருந்து கிடைக்கும் பாராட்டு கட்டுரையின் தரம் குறித்து எனனை பெருமிதம் கொள்ளவைக்கிறது

geethappriyan said...

நல்ல கட்டுரை.தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்

ajayan bala baskaran said...

நன்றி கீதப்ரியன்

Unknown said...

அருமையான கட்டுரை சார். வெறுமனே விமர்சனம் செய்வதோடு நின்று விடாமல் புதிய அலை இலைஞர்கள் தங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போது புதிய வகை சினிமவை எடுத்துக் காட்டியது அருமையான தகவல். தமிழில் புதிய அலை போன்ற சூழல் உறுவாக தக்க தருணம் இது என்ற வார்த்தையில் நம்பிக்கை தெரிகிறது. தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்

கனவுதுரத்தி said...

பள்ளிச் சீருடையில் பள்ளிக்குச் செல்லாமல் தெருவோரம் விளையாடித் திரியும் எந்த ஒரு சிறுவனும் Antoine Doinel-யும் François Truffaut-யும் எனக்கு நியாபகப்படுத்தி செல்கிறார்கள் இன்று வரை..

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...