May 11, 2010

தமிழின் மிகமிக சிறந்த நாவல் - தாண்டவராயன் கதை

தக்கை மற்றும் சொற்கப்பல் இணைந்து நடத்திய
நாவல் விமர்சன அரங்கு.
- சிறுவரைவு


சொற்கப்பல் மூன்றாவது நிகழ்வான நாவல் விமர்சன அரங்கு. தக்கை இலக்கிய அமைப்புடன் இணைந்து சேலம் சிவகாமி அம்மையார் மேல் நிலைப்பள்ளி வளாகத்தில் திறந்தவெளி நிகழ்வாக கடந்த 08 மே சனிக்கிழ்மையன்று திட்டபடி நடந்தேறியது. பங்கேற்பாளர்களிடம் தீவிரமானதொரு அகபதிவுகளுடன் சஞ்சலங்களையும் மிகுந்த மன எழுச்சியையும் உண்டாக்கியபடி நடந்தேறிய இந்நிகழ்வுக்கு .. தமிழின் குறிப்பிடத்தக இளம் படைப்பாளிகள் ஐம்பதுக்கும்மேற்படோர் பங்கேற்று சிறப்பித்தனர்.

வா.மு.கோமு, கண்மணிகுணசேகரன், க.மோகனரங்கன், சிபிச்செல்வன், அசதா, அய்யப்ப மாதவன் ஸ்ரீநேசன், கண்டராதித்தன், பால்நிலவன் ,மணல்வீடு மு.ஹரிகிருஷ்ணன், தமிழ்நதி, சந்திரா,ஷாராஜ் ,இசை, இளங்கோகிருஷ்ணன், சாகிப்கிரான், குலசேகரன், நீலகண்டன் ,பாக்கியம் சங்கர், ச.முத்துவேல், விஷ்ணுபுரம் சரவணன், அகச்சேரன், ராஜா, ,சக்தி அருளானந்தம், கீதாஞ்சலி ப்ரியதர்ஷிணி, சேலம் திவ்யா மற்றும் சென்னை விழுப்புரம் , வேலூர், ஆம்பூர்,தர்மபுரி,ஓசூர், பெரம்பலூர், மேட்டுபாளையம் கோவை,திருப்பூர்,பெங்களூரு என பல்வேறு இடங்களிலிருந்து வருகைதந்திருந்த எண்ணற்ற இளம் படைப்பாளிகள் பங்கேற்ற இந்நிகழ்வுக்கு சுப்ரபாரதி மணியன் தலைமை தாங்கினார். த்க்கை பாபு மற்றும் அகநாழிகை வாசுதேவன் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.

சேலத்தின் மின்வெட்டு காரணமாக பள்ளிக்கூட வகுப்பறையில் நடக்கவேண்டிய நிகழ்வு எதிர்பாராமல் மரத்தடிக்கு மாற பிற்பாடு அதுவே நிகழ்ச்சியின் மற்றொருசிறப்பாகவும் மாறியது..

தக்கை பாபு அனைவரையும் வரவேற்று பேசினார். அஜயன்பாலா சொற்கப்பல் குறித்து அறிமுகம் நிகழ்த்தி பின் தொடர்ந்து நிகழ்வுகளை ஒழுங்குபடுத்தும் பணியும் மேற்கொண்டார்.


ஈசன் இளங்கோ வாழ்த்துரைக்கு பின் சுப்ரபாரதிமணியன் சமகால நாவல்களின் போக்கு குறித்து ஒருகட்டுரை வாசிக்க அதன்பின் பின் விமர்சன அரங்கு துவங்கியது.நாவலாசிரியர் மற்றும் விமர்சகர் இருவரைபற்றியும் இன்னொருபடைப்பாளர் அறிமுகம செய்வித்தபின் ஒவ்வொரு கட்டுரையும் வாசிக்கப்படது.
.
முதலாவதாக கண்டராதித்தன் அறிமுகத்துக்குபின் அசதா கட்டுரை வாசிக்க வந்தார். கரிகாலனின் நிலாவை வரைபவன் நாவல் குறித்து சற்று நவீனமுயற்சி என்றவகையில் தன் சாரம்சத்தை கட்டுரையில் அசதா வெளிப்படுத்தினார்..

இரண்டாவதாக கவிஞர் இசையின் அறிமுகத்துக்கு பிறகு இளங்கோகிருட்டிணன் கீரணூர் ஜாகீர்ராஜாவின் துருக்கி தொப்பி நாவல்குறித்த கட்டுரையுடன் வந்தார். நாவல்குறித்தான தன் வரலாற்று பார்வையை முதலில் விரிவாக கூறியபின் நாவல் குறித்த தன்செறிவான் கட்டுரையை வாசித்தார். ஆசிரியரது முந்தைய இருநாவல்களை காட்டிலும் இது பலவகைகளில் சிறப்பானதாக இருந்தாலும் நாவல்முழுக்க வாசகனுக்கான அமைதிக்கு எங்கும் இடமில்லாமல் இருக்கிறது என்றார். ஷாராஜ் இதர இஸ்லாமியநாவல்களில் இந்த நாவலின் இடம் என்ன என்பதை கட்டுரையாளர் குறிப்பிடவில்லை என்பதை குறையாக குறிப்பிட இளங்கோ கிருட்டிணனுக்கு முதலில் அவர் கேள்வி புரியவில்லை.பின் தோப்பில்முக்கம்மது மீரான் மற்றும் சல்மாவின் நாவல்களோடு ஒப்பிடும்போது இதனை எப்படி குறிப்பிடுகிறீர்கள் என கேட்க இளங்கோ அத்ற்கு இது அவற்றைவிட இது சிறந்த நாவல் என்றே குறிப்பிட்டார்.

தொடர்ந்து காலை அமர்வின் இறுதிகட்டுரையாளராக வாமு.கோமுவின் சாந்தாமணியும் இன்ன பிற காதல்கதைகளும் நாவல்குறித்தான கட்டுரையுடன் வந்தார் சாகிப்கிரான் அத்ற்கு முன்னதாக சாகிப்கிரானை தக்கை பாபு அறிமுகம் செய்ய வா.மு.கோமுவை மண்ல்வீடு ஹரி அறிமுகபடுத்தினார். எடுத்த எடுப்பிலேயே தன் வாத்தியார் என கோமுவை குறிப்பிட்ட ஹரிமுடிக்கும் போது அவர் இப்போது எழுதுவதை இன்னொருமுறை படித்துவிட்டு அச்சுக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும் எனக்கூறி தன் வழக்கமான குத்த்லோடு முடித்தார்.மொத்த ஆறு நாவல்களில் வா.மு. கோமுவின் சாந்தாமணியும் இன்னபிற கதைகளும் நாவலுக்கு கடும் எதிர்வினை நிகழ்ந்தது. சாகிப்கிரான் இந்தவிமர்சனகட்டுரை வாசித்து முடிப்பதற்குமுன் , கவிஞர் தமிழ்நதி எழுந்து இந்த நாவலுக்கு கடும் எதிர்ப்பை தெரிவிக்க உடன் எழுத்தாள்ர் சந்திராவும் சேர்ந்துகொண்டார். இருவருமே இந்தநாவலில் அளவுக்கதிகமாக பாலியல்சித்தரிப்புகள் இருப்பது குறித்தும் பெண்களை இழிவுபடுத்துவதாக எழுதப்பட்டுள்ளது என்றும் ஆவேசத்துடன் பேசினர். அதற்கு பதில் சொல்லும் விதமாக எழுந்த செந்தில் கோமு உலகில் நடக்காத ஒன்றை எழுதவில்லை எனக்கூற பதிலுக்கு தமிழ் நதி நாவலில் இடம்பெற்ற ஒருகாட்சியை கூறி இப்படியெல்லாம் நடக்கிறதா என கேட்க உடனே சிபிச்செல்வன் எழுந்து ஆமாம் நடக்கிறது தமிழ் நாட்டின் எல்லாகிராமங்களில்லும் சர்வ சாதாரணமாக நடக்கிறது எனக்கூற தொடர்ந்து தமிழ் நதிக்கு ஆதரவாக பலரும் பேச துவங்கினர்.

கவிஞர் ஷாராஜ் கோமுவுக்கு ஆதரவாக களத்தில் குதித்தார். ஜொஸ் அண்ட்ராயினுக்கும் சிபிச்செல்வனுக்கும் வாமுகோமுவின் நாவலுடைய பின் நவீனத்துவதகுதிகள் குறித்து நேரடி வாக்குவாதம் துவங்கியது. இறுதியாக பேசவந்த வாமு.கோமு ஆமாம நான் என் புத்தக விற்பனைக்காகத்தான் அப்படி எழுதினேன் என அதிரடியாக கூறி ப்ரச்னைக்கு முற்றுபுள்ளி வைத்தார். அதுவரை கொந்தளிக்கும் கடலாக ஆர்ப்பரித்துக்கொண்டிருந்த தமிழ்நதி மற்றும் சந்திரா இருவரும் சற்றும் எதிர்பாரா இந்தபதிலால் அடுத்துபேச விருப்பமற்று உறைந்துவிட்டனர். அவர்களுக்குமட்டுமல்லாமல் கூட்டத்தினர் அனைவருக்கும். கோமுவின் இந்தபதில் அதிர்ச்சியாகவே இருந்தது.

உணவு இடைவேளைக்கு பிறகு மதிய அமர்வில் கண்மணிகுணசேகரனின் நாவலை ச.முத்துவேல் விமர்சனம் செய்யவந்தார். நாவலில் போதுமான அழுத்தம் இல்லை என்பதாக கூற தன்னுரையாக பேச வந்த கண்மணி தன் இயல்பான கிராமத்து பேச்சால் சூழலை கலகலப்பாக மாற்றினார்.
முத்துவேல் இன்னும் கூடுதலாக கவனம் செலுத்தி விமரசனம் செய்திருக்கலாம் என ஆற்றாமையை வெளிப்படுத்திய கண்மணி
தன் நாவல்களை நம்பி படிக்க்லாம் அது ஒரு போதும் உங்களை ஏமாற்றாது என கூறி முடித்தார். தன்னியல்பான அவரது பேச்சை கேட்பவர்கள் தமிழின் மிகசிறந்தபடைப்பாளி இவர்தானோ என எண்ணத்தோன்றும். பேச்சினூடெ சர்வசாதரணமாக மெனகெடாமல் அந்த அளவுக்கு நகைச்சுவை உணர்வு துள்ளுகிறது


.பாவெங்கடேசன் குறித்து ஓசூரிலிருந்து வந்த சிவக்குமார் அறிமுகம் செய்ய கவிஞர் ஸ்ரீ நேசனை அஜயன் பாலா அறிமுகப்படுத்தினார் . நேசன் வாசித்த பா.வெங்கடேசனின் தாண்டவராயண் கதை பலவிவாதங்களை பெரும் புயலாக கிளப்பிவிட்டது. எடுத்த எடுப்பிலே இதுவரை வந்த தமிழ் நாவல்களில் மிக மிக சிறந்த நாவல இதுதான் என திட்டவட்டமாக கூறிவிட்டு பேசதுவங்கினார். நாவல் கதையின் போக்கு குறித்து அவர் பேசியவிதம் அனைவரையும் இறுக்கமாக ஒருமந்திரத்தில் கட்டிப்போட்டது. தாண்டவராயன் கதை மோகமுள் ,விஷ்ணுபுரம் பொன்ற நாவல்களையெல்லாம் பின்னுக்குதள்ளிவிட்டது என்றும் கூறினார். நாவலைபடித்த போது அவருக்கு ஏற்பட்ட மலைப்பு அவர்பேசியதை அங்கு கேட்ட அனைவருக்கும் தொற்றியதென்னவோ உண்மை.

தமிழ் மகன் எழுதிய வெட்டுபுலி நாவல்குறித்த தன் விமர்சனத்தை சிவராமன்(பைத்தியக்காரன்) கட்டுரையாக எழுதி அனுப்பியிருந்தார். கட்டுரையாளர் நாவலாசிரியர் இருவருமே தவிர்க்க முடியாத காரணங்களால் வரமுடியவில்லை. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தக்கை வே,.பாபு அக்கட்டுரையை வாசித்தார்.


நேச்னை தொடர்ந்து கருத்துதெரிவிக்க வந்த தூரன் குணா மிகசிறந்த நாவல் என சொல்லமுடியாது எனகூறியதோடு அல்லாமல் இந்நாவல் இதர உலகநாவல்களான நேம் ஆபத் ரோசஸ் மற்றும் மை நேம் இஸ் ரெட் ஆகிய நாவல்களின் தாக்கம் இதில் அதிகமாக இருந்தது என்றும் மறுத்துபேசினார் அதேச்மயம் தாண்டவராயன் கதை தமிழில் குறிப்பிடத்தகுந்த நாவல் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் கூறி முடித்தார்

தொடர்ந்து இந்நாவல் குறித்த தன் வாசிப்பனுபத்தை கீதாஞ்சலி ப்ரியதர்ஷினி கட்டுரை ஒன்றை வாசித்தார்.இத்னை தொடர்ந்து தங்களது கருத்துக்களை தெரிவித்த எழுத்தாள்ர் பால் நிலவன் கவிஞர் குலசேகரன் ஆகியோரும் நேசன் கூற்றுக்கு ஆதரவான கருத்துக்களை கூறினர். இத்னைத்தொடர்ந்து தேர்ந்த ஐந்து விமர்சகர்களுடன் தாண்டவராயன் கதை குறித்து தனியாக ஒரு விமர்சன அமர்வை நிகழ்த்த சொற்கப்பல் முடிவுசெய்திருப்பாக நிகழ்ச்சியை தொகுத்துவழங்கிய அஜயன்பாலா அங்கேயே தெரிவித்தார், நிகழ்ச்சியின் துவக்க கட்டுரையாக திட்டமிடப்பட்ட தாண்டவராயன் கதை இறுதி கட்டுரையாக மாறிப்போனது கூட ஆச்சர்யமான நிகழ்வு..


-வெள்ளை வாரணன்

1 comment:

butterfly Surya said...

பகிர்விற்கு நன்றி அஜயன்.

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...