April 25, 2010

என் சமீபத்திய கவிதைகள் மூன்று








1.ஒரு அவமானம் தொடர்பான கவிதை

அவமானம் என்பது சுய பரிசோத்னை
ஆகவே அதனை விரும்பி எதிர்கொள்கிறேன்
என்னை அவமானப்படுத்த நினைப்பவர்கள்
மிகவும் அழகானவர்கள்
யன்னலை அறைந்த அவர்களின் மோதிர விரல்கள்
மிகுந்த ஒளிவீசுவதை கண்டிருக்கிறேன்
அவமானங்கள் கழிவிரக்கத்தை அதிகரிப்பதால்
பெரும் நாயகத்தன்மைக்கும்
அல்லது
ஒரு நாவலுக்கான எழுச்சிக்கும்
உந்தி தள்ளுகின்றன
ஒரு பெருத்த அவமானத்துக்குபின்
எழுதப்படுவதால் இக்கவிதை
கவிதையில்லாமல் போனதற்காக
வருத்தப்படுகிறேன்
நான் துக்கத்தில் இருப்பதால் கவிதை வாசிப்பவர்கள்
பிறகு என்னை குறித்து யோசிக்காமல்
வேறு ஒன்றை அல்லது
கடற்பறவை உங்கள் வீட்டுக்குள் நடந்து வருவதை
ரசிக்க தயாரகும்படி உத்தரவிடுகிறேன்

2. யாரவள் ..

என்னை தெரியாத ஒருவளின் அருகே
மழை சாயங்காலத்தில் ஒதுங்கிநின்றேன்
சட்டென அவள் அதைச்செய்வாள்
என எதிர்பார்க்கவில்லை
வானம் ஒடுங்கி நின்றது
மழை முடிந்தது
நான் முழுவதுமாக நனைந்திருந்தேன்

3.நிம்மதியாக இறங்கி வாருங்கள்

செத்துப்போன எலியை கண்டு யாரும்
பயப்படவேண்டாம் அது ஒருக்காலும் உங்களுக்கு
தீமை செய்யாது
தோழர்களே நம்பிக்கையுடன் வெளியே வாருங்கள்
அது நேற்றிரவு உங்களால் கொல்லப்பட்ட எலியல்ல
காலாதிகாலமாய் மீது விழுந்த அடிகளால்
ஏற்பட்டிருக்கிறது இந்த துர்மரணம்
முடிந்தால் ஒருமாலையிட்டு பரிகாரம் தேடுங்கள்
அல்லாவிடின்
உங்கள் தோட்டங்களில் சிறுகுழிக்கேனும் இடம் கொடுங்கள்
கவலை வேண்டாம்
உங்கள் கனவில் அது ஒருக்காலும் வந்து பயமுறுததபோவதில்லை
அல்லது சுவர்களை கீறி தொந்தரவு தரப்போவதில்லை
மனிதர்களே நிம்மதியாக இறங்கி வாருங்கள்
உங்களின் கைக்கெடிகாரங்கள் பத்திரமாக இருக்கட்டும்

8 comments:

செல்ல நாய்க்குட்டி மனசு said...

என்னை அவமானப்படுத்த நினைப்பவர்கள்
மிகவும் அழகானவர்கள் //
அற்புதமான வரிகள் அஜயன்,
நம்மை உந்தித் தள்ளி உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்லும் வரிகள்.

chandru / RVC said...

3வது கவிதை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. ;)

ajayan bala baskaran said...

நன்றி செல்வராஜ் ஜெகதீசன் நீங்கள் சொன்ன திருத்ததை ஏற்று சரிசெய்துவிட்டேன் மிக்க நன்றி

ajayan bala baskaran said...

நன்றி நாய்க்குட்டியாரே

ajayan bala baskaran said...

நன்றி சந்துரு

rvelkannan said...

1.
கடற்பறவை வீட்டினுள் வருவதை ரசிக்கும் மனது/பார்வை இருந்தால் /இருப்பவர்களுக்கு
அவசியம் இந்தகவிதை ரசிக்கமுடியும் / புரியும்

2.
எதயையோ சொல்லாமல் சொல்லி செல்லும் கவிதை.
நான் நனைந்த ஒன்றை நானும் நினைத்துகொள்கிறேன் கவிதையின் ஊடாக.

3.
இவையிரண்டும் முக்கியமான கவிதை போக்கை மாற்றக்கூடிய வரிகள் என கருதிகிறேன்

அ. //அது நேற்றிரவு உங்களால் கொல்லப்பட்ட எலியல்ல //
ஆ. //உங்களின் கைக்கெடிகாரங்கள் பத்திரமாக இருக்கட்டும்//

முக்கியமாக தலைப்பு
'' நிம்மதியாக இறங்கி வாருங்கள்''

வேறு வேறு தளத்தில் பயணிக்கும் கவிதைகள் எங்களையும் அனுபவிக்க விழைகிறது

நன்றி அஜயன்

ajayan bala baskaran said...

nantri velkannan

பா.ராஜாராம் said...

இரண்டாவது கவிதை ரொம்ப பிடிச்சிருக்குங்க.

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...