நதிவழிச்சாலை:5
சச்சின் டெண்டுல்கர், ஏர்.ரஹ்மான் ..

இந்தி சினிமாவின் பத்திரிக்கைகளான பிலிம் பேர்.. ஸ்க்ரீன் போன்றவற்றில் வரும் சில கட்டுரைகளின் எழுத்து நடை காமெடியாக யிருக்கும் . கவர்ச்சியாக எழுதுவதாக எண்ணிக்கொண்டு சில அபத்தமான ஒப்புமைகளைதருவர். உதாரணத்துக்கு "மணிரத்னைத்தை ஹாலிவுட்டின் ஸ்பீல்பெர்க்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும்,.. "ஆமீர்கானை ஹாலிவுட்டின் டாம்குரூஸூக்கு பாலிவுட்டின் பதிலடி" என்றும் "நடிகை யாரேனும் கால்மேல் கால்போட்டு அமர்ந்து போஸ் கொடுத்தால் அவரை ஷ்ரன்ஸ்டோனுக்கு பதிலடி" என்றும் கைக்கூசாமல் எழுத ஆரம்பித்துவிடுவர்!
ஆனால் அதேசமயம் நம் ஊரில் நம் காலத்தில் நம் கண்முன்னிருக்கும் இரண்டு மிகப்பெரிய நட்சத்திரங்களுக்கிடையில் அநியாயத்துக்கு காணப்படும் அபரிதமான ஒற்றுமைகளை யாரும் இதுவரை கவனிக்காமல் போனதேஆச்சரியமான ஒன்று.
நான் சொல்லும் இரண்டு பேரும் உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை எடுத்து சென்றதில் குறிப்பிடத்தக்கவர்கள்.வெற்றிகளின் உயரத்துக்கு அசாத்திய வெற்றி அல்லது இமாலயவெற்றி என்ற வார்த்தைகளுக்கு பதிலாக இவர்களின் பெயரையே குறிப்பிடும் அளவிற்கு தகுதி வாய்ந்தவர்கள்
நான் சொல்வது : சச்சின் டெண்டுல்கர்....... ஏ.ஆர் ரகுமான் என்கிற இருவர் தான்.
இருவருக்குமிடையிலான டி.என்.ஏவை ஒரு பயோகெமிஸ்ட்டை வைத்து ஆராய்ந்தால் பல உண்மைகள் தெரியவரும் போல ..அந்த அளவுக்குஇருவரது உயரம் தோற்றம் சுபாவம் ஆகியவற்றில் ஆச்சரியபடும் ஒற்றுமைகள்
உண்மையில் துவக்ககாலங்களில் நான் இவர்கள் இருவரையுமே அவ்வளவாக ரசித்தவனில்லை அதற்கு காரணம் இன்னும் இருவர் ..
முதலாவதாக கிரிக்கெட்டில் துவக்க காலங்களில் சச்சின் எனக்கு பிடிக்காமல் இருந்ததற்குகாரணம் . முன்னால் கேப்டன் அசாருதீன்
அப்போது நான் அசாருதீனின் பரம விசிறி.. விளையாட்டை ஒரு கலையாக பாவித்து அதன் மரபை பூரணமாக உள்வாங்கி ஆட்ட ஒழுங்கின் அழகை கலையாக மாற்றுவதில் எனக்கு பிடித்தமான சில பேட்ஸ் மேன்கள் உண்டு. அதில் இலங்கையின் அரவிந்த் டிசில்வா மற்றும் வெஸ்ட் இண்டீசின் வில்லியம்சுக்கு பிறகு அசாருதீன் எனக்கு பிடித்தமானவராக இருந்தார் அலட்டிக்கொள்ளாமல் பேட் பிடிக்க வரும் அவரது ஸ்டைல் எனக்கு மிகவும்பிடிக்கும். வரிசையாக முன்று விக்கட்டுகள் சாய்த்திருக்கும் அடுத்துஎன்னவாகப்போகிறதோ என்ற பதட்டம் பார்வையாளர்களுக்கும் சக ஆட்டக்காரர்களுக்கும் இருக்கும்.அந்த சமயத்தில் துளி பதட்டமில்லாமல் அனாயசமாக சூயிங்கமைமென்றபடியே மட்டையுடன் வந்து.. காலரை இழுத்துவிட்டுக்கொண்டு மணிக்கட்டை ஆட்டிவிட்டு மட்டை செண்டர் ஸ்டெம்புக்கு வைத்து அம்பயரிடம் லைன் கேட்பார் .. அந்த முகத்தில் அனைவரிடமும் காணப்படும் திக்...திக்... துளியும் இருக்காது. அதே போல் சொல்லிவைத்தார் போல டீமை தன் கையில் தாங்குவார் ( நினைவுப்படுத்துகிறேன்:நான் சொல்வது அந்தகாலம்) ஒரு கேப்டன் எப்படி இருக்கவேண்டும்.அவர் ஆடுகளத்தில் எப்படி செயல்படவேண்டும் என்பதற்கு அவர் ஒரு சரியான உதாரணம். மன உறுதிதளராமல் சக வீரர்களை அரவணைத்து அதே சமயத்தில் இக்கட்டான தருணங்களில் தன் ஆட்டத்தின் மூலம் டீமை காப்பாற்றி என இப்படியான விடயங்களில் அவர் எனக்கு பிடித்தமானவராக இருந்தார்.
மேலும் அசாரின் சிக்சர் பாணி எனக்குமிகவும் பிடிக்கும்
அப்போது நான் மற்றும் உதவி இயக்குனர்கள் பலரும் இராமேஸ்வரம் பட இயக்குனர் செல்வம் அறையில் கூடுவோம் . பெரியார் சாலை பேருந்து நிலையத்துக்கு பின்புறம் இருந்த ஒரு தெருவில் அவரது அறை இருந்தது.
முத்துராமலிங்கம்(சினிமா பி.ஆர.ஓ வாக இப்போது பணிபுரிந்து வருபவர் ) வைரக்கண்ணு( உதவி இயக்குனராக இருந்து மாரடைபால் பிற்பாடு உயர்நிலை எய்தியவர்)இன்னும் பலரும் அங்கு கிரிக்கெட் பார்க்க கூடுவோம். அவர்களில் பலரும் அப்போது சச்சின் ஆதரவளர்கள். கேப்டனாக இருந்த அசாரை பார்த்தாலே திட்டத்துவங்குவார்கள் . அதன் காரணமாகவே நான் சச்சினுக்கு எதிரானவனாக மாறவேண்டி வந்தது.
சிலவருடகாலம் அப்படித்தான் இருந்தேன்
.
.ஆனால் ஒருமுறை சிக்ஸர் சித்து துபாயிலிருந்து பாதி டூரில் திடீரெனதிரும்பியபோது விமான நிலையத்திலேயே அழுதுகொண்டே டிவிக்கு
பேட்டிதந்தார் அதில் அசார் தன்னை வேண்டுமென்றெ ஆடவிடாமல் சதிசெய்து தன்னை தகுதியற்றவனாகசித்தரித்துவிட்டார்யென பொருமி தள்ளினார் . ஒரு ஆண் இப்படி பப்ளீக்காக அழுமளவிற்கு பாலிடிக்ஸ் செய்யும் கேப்டன் ஒருக்காலும் சிறந்த மனிதனாக இருக்க முடியாது என அப்போதைய அறிவுக்கு அரைகுறையாக முடிவெடுத்து அசார் கட்சிக்கு மானசீகமாக ராஜினாமா கடிதம் எழுதினேன்.
அதன் பிறகு நண்பர்களுடன் சேர்ந்து நானும் சச்சினுக்கு மெதுவாக கைதட்ட ஆரம்பித்தேன் . அதற்கேற்றார் போல் அசாருதீன் டவுசர் கிழியும் சத்தம் மெல்ல கேட்க துவங்கியது. ஆட்டம் சரியில்லை. சக ஆட்டகாரர்களின் புகார். என அசார் வெளுக்க துவங்கினார்..நல்ல வேளையாக அவர் மீது ஊழல் குற்றசாட்டு வருவதற்கு முன்பே நான் முழுவதுமாக மாறியிருந்தேன்.சச்சின் கேப்டனாக இருந்த போதுகூட அவர் மீது ஈர்ப்பு வரவில்லை. டீமில் கங்குலி கை ஓங்க ஓங்க நான் முழுவதும் சச்சினிடம் சரண்டர் ஆனேன் .காரணம் கங்குலியை எனக்கு பிடிக்காது.
ஏன் பிடிக்காது என யாரும் கேட்காதீர்கள் அதற்கு காரணமே தேவையில்லை.( கங்குலி ரசிகர்கள் மன்னிக்கவும்). பிறகு சச்சினின் அந்த தன்னடக்கம் பொறுமை நிதானம் எல்லாம் இப்போதுதான் முழுசாக கண்ணில் பட்டது.. அடடா திறமை ஒருபக்கம் இருக்கட்டும் என்ன பாந்தம் என்ன உறுதி.பிறகு அவரது ஒரு பிறந்த நாளின் போது மனைவியை காலரியில் அமரவைத்து செஞ்சுரி அடித்து அவருக்கு அர்ப்பணித்த அந்த ஆட்டம் அவரை நாயகனாகவே மனசுக்குள் உட்காரவைத்து மாலையிட்டது. அதன் பிறகும் அவரிடம் பசை போல ஒட்டவைத்துக்கொண்டது .
அதேபோல ஏ.ஆர் ரகுமான்
சச்சினுக்கு அசார் போல ஏ.ஆர் ரகுமான் எனக்கு நெடுநாட்களாக ஈர்க்காமல் போனதற்கு இளையராஜா ஒரு பெரிய காரணம்.
இளையராஜா என் நெஞ்சத்தில் நீக்கமற நிறைந்திருந்த காலத்தில் திரையுலகில் சட்டென அவரது புகழுக்கு பங்கம் .. ஒரு நிழல் அவரது மாஉருவை சிறிதே மறைத்தது. தன் துல்லியமான நவீன ஒலிப்பதிவு தரத்துடன் ஏ.ஆர் ரகுமான் எனும் ஒரு இளைஞனின் து(உ)ருவம் தான் அது. சின்ன சின்ன ஆசையை விட புது வெள்ளைமழை துவக்க இசை ஈர்த்தது. ஆனாலும் மனசு ஏற்க வில்லை.பிறகு ஜெண்டில்மென் சிக்குபுக்கு வந்ததும் முடிவெடுத்தேன் இல்லை இது சமூகத்துக்கு ஆரோக்கியாமான சத்தம் இல்லை என நண்பர்களிடம் உளறினேன்.
அக்காலத்தில் நகரம் முழுக்க வீடியோ கேம்ஸ். அந்த கடைகளை தாண்டும் போதெல்லாம் ஒரு வினோத சப்தம் . இளைஞர்கள் பலர் அதிகமாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்து வந்தனர். எப்போதெல்லாம் அந்தகடையை தாண்டுகிறோனோ உலகம் அழிவின் சப்தமிது ..என எண்ணத்துவங்கினேன். ரகுமானின் பாடல்களின் துவக்ககால இசையொலிகள் இப்படியாக இருப்பதாகநண்பர்களிடம் கூறி இவர் நிக்கமாட்டார் என பொருமினேன்.
பின் கிழக்குசீமையிலே படம் வந்தது .. அதன் வினோத இசை பாடல்கள் மெல்ல ஈர்க்க துவங்கியது. திருடா திருடாவில் வரும் ராசாத்தி பாட்டைபெரும்குரலெடுத்து ஆள் இல்லாத மொட்டை மாடியில் உச்சச்சதியில்பாடி மகிழ்ந்தேன் .ரகுமான் உணர்வுகளை சொல்லக்கூடியவர் மனசு மறுத்தாலும் அறிவு அங்கீகரித்தது. . மெல்ல மெல்ல ஏஆர் ரகுமான் ஈர்க்க துவங்கினார்.
அதே சமயம் அசாரை வெறுத்தார் போல நான் இளையராஜாவை வெறுக்கும் சந்தர்ப்பம் மட்டும் வாய்க்கவில்லை ..இன்று இந்த நிமிடம் வரை .. ஷாஜி போன்றவர்கள் கட்டுரை படிக்கும் போது அவர்களது கலாச்சார புரிதலின்மையும் கலைஞனது இயல்புக்கூறுகள் குறித்த அறிவு போதாமையும்தான் என்னுள் எழுந்ததே தவிர இளையராஜாவின் மீதான என் பார்வை எள்ளளவும் மாறவில்லை. இன்னும் சொல்லப்போனால் இதன்பிறகுதான் இளையராஜாவின் ஆழத்தையும் பலத்தையும்தேடி இன்னும் என்னால் ஆழமாக சஞ்சரிக்க முடிந்தது.
அதேசமயம் ஏ.ஆர் ரகுமான்மீதும் அவரது இசையின் மீதும் எனக்கு ஈர்ப்பு அதிகரிக்க துவங்கியது . ஜில்லுனு ஒரு காதல்கதையின் ' 'முன்பே வா' வை திரும்ப திரும்ப கேட்டு தொலைந்து போன-மறைந்து போன-கைவிட்டு போன காதலிகளின் முகத்தை நினைத்து கண்ணீர் மல்கியிருந்திருக்கிறேன் அதிலும் குறிப்பாக அவரது இந்திபட பாடல்களை நான் மிகவும் ரசித்தேன்
சொல்லப்போனால் அவருக்கு கர்நாடகத்தை விட ஹிந்துஸ்தானிதான் அட்டகாசமாக வருகிறது என்றும் கூட சொல்வேன்.
ரங்கீலா துவங்கி அவர் இசையமைத்த இந்திபாடல்கள் தமிழ் பாடல்களைவிடவும் முழுமையான வெற்றியடைந்தவை தால்,லகான் ,ரங் தே பசந்தி, தேசம், ஜோதாஅக்பர், டெல்லி 6, ஸ்லம்டாக் மில்லியனர் என அவரது பாட்ல்களை இப்போதும் ஆவலுடன்
கணிணியில் கேட்டுவருகிறேன். .
குறிப்பாக ஆஸ்கார் விழாவின் போது அவர் உச்சரித்த தமிழ் சொற்கள் தமிழனாக என்னை அவர் மேல் மிகவும் பெருமைகொள்ளச்செய்தன. இப்படியாகத்தான் இந்த மேதைகள் இருவராலும் நான் ஈர்க்கப்பட்டேன்.
ஒருவகையில் இந்த இருவர் மீதும் ஒரு பொறாமையும் கூட எனக்கு உண்டு. .. இத்தனை புகழ் அடைந்த பின்பும் அதுகுறித்த அலட்டலில்லாத அவர்கள்தன்மை என்னை சில சமயங்களில் வெட்கபடவைக்கின்றன
இவர்கள் இருவரிடமும் காணப்படும் அதிசய ஒற்றுமைகளை பட்டியல் போட்டால் அடுக்கிக்கொண்டே போகலாம்.
உயரத்திலும் உருவத்திலும் இருவரையும் ஒப்பிட்டு பாருங்கள் இருவருக்கும் இருக்கும் ஒற்றுமை அபரிதமானது என்பது உங்களுக்கு தெரியவரும் . இருவருமே வார்த்தைகளை நம்பாமல் செயல்களால் உலகத்தோடு உரையாடுபவர்கள் . இருவரும் இதுவரை மீடியாக்களில் பேசிய வார்த்தைகளை ஐந்து நிமிடத்தில் எண்ணிவிடலாம். மட்டுமல்லாமல் இருவரையும் ஒருசேர வைத்துபார்த்தால் பலவகைகளில் இருவருக்கும் அபரிதமான ஒற்றுமை இருப்பது தெரியவரும்.
ஏறக்குறைய ஒரே காலத்தில் ஓரிரு வருட இடைவெளியில் அறிமுகம். சச்சின் 89 ரஹ்மான் 91 என நினைக்கிறேன். அறிமுகமாகி தோன்றி ஒரே சமயங்களில் 94 வாக்கில் உச்சத்துக்கு சென்றவர்கள் .இன்று வரை நிலைத்து நின்று ஆடிக்கொண்டிருப்பவர்கள் . தொடர்ந்து மெகா மெகாஸ்டார்களாக இந்தியவானிலும் உலக வானிலும் ஜொலிப்பவர்கள்
இருவரது உடல் பாவத்தையும் கொஞ்சம் கவனித்து பாருங்கள் இருவருக்குமிடையே பொருத்தம் அத்தனை கனக்கச்சிதம். உயரம் பொறுமையான நடை , சின்ன கண்கள் உதடு ஒட்டியபடி சிரிக்கும் சிரிப்பு, பதில் சொல்லி மாட்டிக்கொள்ள விரும்பாத கேள்விகளுக்கு தோளைகுலுக்கிக்கொள்ளும் பாங்கு என அடுக்கிக்கொண்டே போகலாம் அவர்களது ஒற்றுமைகளை.
உலகம் அறிந்த இந்தியாவின் மிகபெரிய இரண்டு நட்சத்திரங்கள் என்று சொன்னாலும் இவர்கள் இருவர் மட்டுமே நிற்பார்கள்.
அதே போல இருவருமே திறமைகளை வெளிப்படுத்துவதில் எவரும் அருகில் நெருங்க முடியாத உச்சநிலை வெளிப்பாட்டுத்திறன் பெற்றவர்கள்
இந்தியாவின் அனைத்து பகுதி மக்களாலும் நேசிக்கப்படுபவர்கள்
வாழ்க்கை எனும் பெரும்பரப்பில் மனித பண்புகளிலிலும் துருவ நட்சத்திரமாக பிரகாசிக்கும் இவர்களிடம் காணப்படும் ஒற்றுமைகள் குறித்து யாரவாது தீவிரமாக ஆராய்ச்சி செய்து நூல் ஒன்றை எழுதினால் அது பலருக்கும் புகழ்வானுக்கு பயணிக்கும் வழித்துணையாக அமையும்
நாம் ஓடவேண்டியது எவ்வளவோ தொலைவு
ஆனால் அதற்குமுன் கற்கவேண்டியது எத்தனையோ மைல்கள்
--