February 15, 2010

கவிதை என்பது யாதெனில் ....கவிதை குறித்த புதிய தொடர்


கட்டுரை,படம்: அஜயன்பாலா



1. காலம்..கவிதை கவிஞன்

கவிதை பற்றியும் கவிதைகள் எழுதுவது பற்றியும் அதன் நோக்கம் செயல்பாடு ஆகியவை குறித்தும் காலம் தோறும் பல்வேறு கருத்துருவாக்கங்கள் உருவாகி வருகின்றன.

தமிழில் எப்படி தொல்காப்பியர் காலம் தொட்டே கவிதையின் அரசியல் மற்றும் அறிவியல்கள் பேசப்பட்டு வந்திருக்கிறதோ அது போல மேற்கிலும் கிரேக்க ,மொழியில் அரிஸ்டாட்டில் காலம் தொட்டே கவிதை குறித்து பேசப்பட்டும் எழுதப்பட்டும் வருகிறது.

ஒவ்வொருகாலத்திற்கும் கவிதையின் முகம் குரல் அவ்வப்போதான கலாச்சாரம் பண்பாடு பொருளதாரம் சமூக நிலைகளுக்கேற்றவாரு தன்னை உருமாற்றிக்கொண்டே வருகிறது.

இப்படியாக மாறிவருவது எல்லாம் அதன் வடிவமே தவிர
மனதின் நுகர்ச்சி இன்பம் தான் எல்லாகாலத்திலும் கவிதைக்கு ஆதார பின்புலனாக இருந்து இயங்க வைத்துக்கொண்டிருக்கிறது.

புலன்களின் வழியிலான துய்ப்பை கடந்து மனித மனம் அறிதலின் மூலமாக துய்க்கும் இன்பம் பெரும்பாலும் கவிதையில் மட்டுமே ஆதாரமாக்கிடைக்கிறது.

மொழி வளத்திற்கும் மனிதனுக்குமிடையிலான முக்கியமான தொடர்பு புள்ளி இதுதான்.

இதுதான் மனிதனை அவனது பொருள்சார்ந்த உடல்சார்ந்த வாழ்விலிருந்து வேறுபடுத்தி மற்றவரைக்காட்டிலும் மேன்மையுள்ளவனாக மாறுவதற்கான இச்சையை அவன் மனதுள் நிகழ்த்துகிறது.

இப்படியான மேன்மையானவர்களுக்கான போட்டியில் இலக்கியம் ஒவ்வொருநாளும் பல்வேறுவிதங்களில் வளர்ந்து மொழியையும் அதுசார்ந்த சமூகத்தையும் வளப்படுத்தி வரலாற்றையும் பண்பாட்டையும் கலாச்சார அடையாளங்களையும் காலம் காலமாக காப்பாற்றி வருகிறது.

கவிதை ஏன்?

ஒரு கவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

கவிதை நாம் எழுதாவிட்டால் மொழி என்ன குடியாமுழுகிவிடும் .
அல்லது சமூகத்துக்கு அதனால் என்ன பயன்?

இது போன்ற கேள்விகளை பின் தொடர்ந்து பதிலை நாம் தேடிச்செல்கிற போதுதான் கவிதைக்கும் ஒருசாதாரண மனிதனுக்குமான தொடர்பை அது அவன் வாழ்வோடு எத்த்னை பிணைக்கப்ப்ட்டிருக்கிறது என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

முதலில் ஒருகவிதையை நாம் ஏன் எழுதவேண்டும்

இதற்கான பதிலை ஒருவரியில் சொல்லிவிட முடியாது
அதன் பயன்பாடு பலதரப்பட்டது.

இந்த உலகம் ஒரு சினிமாநடிகனுக்கும் அரசியல்வாதிக்கும்
வங்கி ஊழியனுக்கும் , சாதாரண புடவை விற்பவருக்கும் கொடுக்கும் மரியாதையில் நூற்றில் ஒருவருக்குகூட கவிதை எழுதுபவருக்கு கொடுப்பதில்லை.

நான் பங்கெற்ற ஒருசினிமா கதை விவாதத்தின் போது அப்படத்தின் நாயகனுடைய கதாபத்திரம் குறித்து தீவிரமாக அலசப்பட்டது

அப்போது நான் ஒரு பேச்சுக்காக நாயகன் கவிதை எழுதுபனாக என சொல்லத்துவங்கியதுமே பலருடைய முகமும் மெல்ல தன் ஒளியை இழந்து சுணங்க துவங்கியது

காரணம் அவனுக்கு எந்த பொருளாதார மதிப்பீடும் இல்லை

ஒரு அரசியல்வாதி, திருடர்,இடைத்தரகர், உழைப்பை சுரண்டும் முதலாளி, ரிக்‌ஷா ஓட்டுனர், கண்டக்டர், தோட்டி ,கூலிதொழிலாளி, பால்காரர்

இப்படி ஒரு நாயகன் யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். இத்த்னைக்கும் ஒரு ஓவியனாக கூட இருக்கலாம் .ஆனால் கவிஞனாக இருக்க மட்டும் நம் சினிமாக்கள் அனுமதிக்க மறுக்கின்றன

இத்தனைக்கும் சிலபடங்களில் ஒரு பண்க்கார நாயகன் கவிதை எழுதுபவராகவும் கதநாயகிக்கு அதனை படித்துக்காட்டுபவராகவும் காண்பிக்கிறார்கள் ஆனால்

கவிதையையே முழுநேர தொழிலாக செய்யும் ஒருவனை நாயகனாக காட்ட
நம் சினிமாக்கள் அச்சப்படுகின்றன

இதற்கு என்ன காரணம் தெரியுமா?

கவிஞனுக்கு ஸ்தூலமான திட்டமான ஒரு பொருளாதார பிம்பம் இல்லை

கோடீஸ்வரன் , முத்லாளி, குமாஸ்தா உழைப்பாளி எனும் இந்த நாலுவகைப்பட்டுக்குள் நாயகன் அடக்கப்படுகிறான்

ஓவியனுக்கு கூட பரிதாப்படக்கூடிய வறுமையாளன் அல்லது பொருள் பற்றி அக்கறை இல்லாதவன் என்ற பிம்பம் பொருந்திவிடுகிறது.அதன் மூலமாக உண்டாகும் சோகம் நாயகன் மீதான் இரக்கத்திற்கு உதவிசெய்கிறது

ஆனால் மொழிக்காக அதன் சக்க்ரங்களில் சிக்கி கவிதை எழுதுவதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் ஒருவனுக்கு இந்த சமூகம் தரும் மதிப்பீடு என்ன தெரியுமா?.......
பூஜ்யம்தான் .


அப்படியே அவசியம் வைக்க வேண்டுமானால் சினிமாவுக்கு பாடல் எழுதுபவனாக மட்டும் சேர்த்துக்கொள்கிறார்கள்

ஏனென்றால் அங்கு வருமானம் சேர்ந்துவிடுகிறது

கவிதயின் மூலமாக சாத்தியாமாகும் ஒரே தொழில் இது ஒன்றுதான்

ஆனால் இதன் இன்னொருபக்கம் பிரம்மாண்டமானது கற்பனைகெட்டா அதிசயங்கள் நிரம்பியது. வேடிக்கையானது

சொல்லப்போனால் கவிஞர்களும் மொழி சார்ந்த செயல்பாடுகளும் இல்லாவிட்டால் சமூக இயக்கமே ஸ்தம்பித்துவிடும்.

கவிதை வெளி

ஒரு சமூகத்தில் கவிதையின் பயன்பாடு என்ன என்பதை கவனிப்பதற்குமுன்
இதர கலைகளிலிருந்து கவிதை எவ்வாறு வேறுபடுகிறது என்பதை பார்க்க்லாம்

எல்லா கலைகளுக்கும் இடமும் காலமும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற்ன. ஆடல் பாடல் சிற்பம் ஓவியம் இசை என எந்த கலைகளை எடுத்தாலும் அவற்றின் காலம் குறுகிய அளவினது மட்டுமே.

அதுவும் இருபதாம் நூற்றாண்டின் அறிவியல்மாற்றங்களின் காரணமாக ஊடகங்களில் உண்டான வளர்ச்சி காரணமாக மட்டுமே இதில் சிலமாறுதல்கள்

ஆனால் இலக்கியத்தின் காலமோ எல்லைகளற்றது

யோசித்துபாருங்கள்

நமக்கு முன்னும்பின்னுமாக அது அனந்தகோடி வருடங்களை அதன் தகுதிக்கேற்றார் போல் ஒருகவிதை அல்லது இலக்கிய படைப்பு தக்கவைத்துக்கொள்கிறது.

எத்தனையோகோடிமனிதர்கள் இம்மண்ணில் அரசனாகவும் ஆண்டியாகவும் பிறந்தும் இறந்தும் போய்விட்டார்கள்

ஆனால் இன்றும் நம் மனதில் நிலைத்திருப்பது யார்

எத்த்னையோ ஆயிரம் மன்னர்கள் நம் சூழல் கண்டிருக்கலாம்

எத்தனையோ பேரழகிகள், செல்வந்தர்கள் அதிகாரம் படைத்தவர்கள் வாழும்போது பெரும் கர்வத்துடன் வாழ்ந்து மடிந்தவர்களை
இந்த மொழியும் சமூகமும் கண்டிருக்கலாம்

ஆனால் அவர்களில் எத்தனை பேரை நம் மொழியின் ஞாபகம் தக்க வைத்திருக்கிறது.

வள்ளுவர் காலத்தில் ஆண்ட மன்னனின் பெயர் என்ன

தொல்காப்பியர் காலத்தில் பேரும் புகழும் பெருமையுமாக வாழ்ந்தவர்கள் யார்யார்


கம்பரின் காலத்தில் வாழ்ந்த பேரழகன் யார்

ஆண்டாளைகாட்டிலும் அக்காலத்தில் வனப்புமிகுந்த பேரழகிகள் எத்தனை பேர்

பாரதியின் காலத்தில் அவரோடு வாழ்ந்தவர் எத்தனை கோடி


அத்த்னை பேரில் யாருடைய பெயரையாவது புத்தகங்கள் போற்றுகிறதா

காலம் எழுதும் கலவெட்டில் யார் பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.

இலக்கியங்களின் வெற்றி இதுதான் அது மனிதர்களையும் அவர்களது காலத்தையும் கடந்தது.

ஒருமொழி தன்னை நேசித்தவனை தன் காலத்தில் வஞ்சிக்ககூடும்

ஆனால் அவர்வர் நேசிப்புக்கும் படைப்பாக்கும் திறனுக்குமேற்ப வாழ்தலின் காலத்தை நீட்டி அவர்களையும் அவர்களது படைப்பையும் வரலாற்றின் தூண்களாக நிறுத்துகிறது.

அப்படித்தான் தொல்காப்பியனையும் ,வள்ளுவரையும் ,ஹோமரையும், ஷேக்ஸ்பியரையும் கமபனையும் , இளங்கோவடிகளையும் காளிதாசனையும் பாரதியையும் காலங்களை கடந்தும் தலைமுறைகளை கடந்தும் நூற்றாண்டுகளை கடந்தும் சரித்திரம் இன்னும் வாழவைத்துக்கொண்டிருக்க்கிறது.

இன்னும் இந்த த்லைமுறை கடந்தாலும் அடுத்ததலைமுறைகளில்லும் அவர்களே நிற்பார்கள் நாமெல்லாம் வெறும் புள்ளிவிவரப்பட்டியல்களில் மட்டுமே இடம்பெறுவோம் .

உயர்ந்த இலக்கியத்தின் காரணமாக நம்மில் சிலர் அடையும் இந்தபிரம்மாண்டம்தான் நம்மில் இன்னமும் அது தழைக்கவும் அதன் செயல்பாடு வழித்தடம் ஆகியவற்றை தீர்மானிக்கவும் காரணமாக இயங்கிவருகிறது.

ஒரு ஷேக்ஸ்பியர் ஒரு கம்பன் ஒரு வள்ளுவன் மற்றும் ஒரு பாரதி எழுதியதை போல இன்றும் நாம் அப்படியே எழுதினால் அதைவிட அபத்தம் வேறு எதுவும் இருக்க முடியாது.

ஆனால் அவர்கள் அனைவருக்குள்ளும் உள்ள பொதுமையான பண்புதான் காலம்காலமாக எல்லா இலக்கியத்துக்கும் அடிப்படை

அந்த ரகசியத்தை அதன் மையத்தை கவிதையின் ஆதாரமான இறைச்சியை இக்காலகவிதைகளின் வழி ஊடுருவிபார்ப்பதுதான் இத்தொடரின் விருப்பமும் அவாவும் .

(தொடரும்)
நன்றி :”தாமரை” பிப்ரவரி இதழ்

16 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

மிகவும் தேவையான, அறிவுபூர்வமான பதிவு. தொடர்ந்து பயணிக்கக் காத்திருக்கிறோம்...

rvelkannan said...

கவிதை பற்றி தொடர்க்கு வாழ்த்துகளுடன் வரவேற்கிறேன்.
சங்க கால பாடல்களில் தொடங்கி இன்றுவரை என்பது நெடும்பயணம்.
களைப்பின்றி தடங்கலின்றி பயணபட ஊக்கமும் உற்சாகமும் உங்களிடம் இருக்கும் என்று நம்புகிறேன்.
தொடர் முடிந்த பிறகு இதை பற்றி பேசுவதே முழுமையாகவும் சிறப்பனதகவும் இருக்கும் என்பது என் எண்ணம்.

ajayan bala baskaran said...

நதியாகவும் ஆனவரே மிக்க மிக்க நன்றி

ajayan bala baskaran said...

தங்கள் எண்ணம் ஈடேறும் விதமாக கடுமையாக உழைக்க சித்த்மாயிருக்கிறேன் வேல்

"உழவன்" "Uzhavan" said...

கவிஞர்களையும் கவிதைகளையும் பெருமைப்படுத்தியமை கண்டு மகிழ்ச்சி.. அழகான முக்கியமான கட்டுரை.
தொடரட்டும்... வாழ்த்துக்கள்

மண்குதிரை said...

எழுத்தை தொழிலாகக் கொள்வதின் சிக்கல்தான் கொஞ்சம் பயமாக இருக்கிரது.

தொடரை எதிர் பார்க்கிரேப்ன்.

ajayan bala baskaran said...

தொடர்ந்த பின்னூட்டங்களுக்கும் என்னை ஊக்கபடுத்திவருவதற்கும் மிக்க நன்றி உழவன்

ajayan bala baskaran said...

அப்படி முழுவதுமாக சொல்லமுடியாது .மண் குதிரை ..தன்னிலை மறக்கும் கவிஞனுக்குத்தான் வாழ்க்கை கிடுக்கிப்பிடி. ஆனால் எத்தனையோஎழுத்தாளர்கள் ஜெயகாந்தன் சுந்தரராமசாமி ஜெயமோகன் ராமகிருஷ்ணன் ஆகீயோர் நன்றாகாத்தானே வாழ்ந்துகொண்டிருகிறார்கள்

Unknown said...

நல்லதொரு முயற்சி பாலா.

ஸ்ரீவி சிவா said...

//ஒரு பேச்சுக்காக நாயகன் கவிதை எழுதுபனாக என சொல்லத்துவங்கியதுமே பலருடைய முகமும் மெல்ல தன் ஒளியை இழந்து சுணங்க துவங்கியது //

நண்பர் குழாம் துவங்கி எல்லா மட்டங்களிலும், கவிதையெழுதுவதென்பது கேலிக்குரிய விஷயமாகவே மாறிக் கொண்டிருக்கிறது.

ஆழ்ந்த பார்வை... நல்லதொரு முயற்சி அஜயன்.
அடுத்து என்ன சொல்ல போறீங்கன்னு எதிர்பார்ப்பு அதிகமாகுது.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

ஏனோ இந்த பதிவு படிக்கும் போது "சிப்பி இருக்குது முத்து இருக்குது "
பாடலும் அழகழகான கமல் ஸ்ரீதேவி ஜோடியும் நினைவு வந்தது. நிறைய நாங்கள் தெரிந்து கொள்ள முடிகிறது.

ajayan bala baskaran said...

நன்றி செல்வராஜ்,நன்றி ஸ்ரீவி
தொடர் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்

Muthusamy Palaniappan said...

I need this knowledge. Very nice. Go on

ajayan bala baskaran said...

thanku muthu

muthuvel said...

நல்ல தொடர்

துயர் துடைக்க வழி ?

Anonymous said...

What a great resource!

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...