November 25, 2012

இரண்டாம் வெளி - சற்றே நீண்ட சிறுகதை

இரண்டாவது வெளி
                                                      -அஜயன் பாலா

1.

எதிலுமே காரண காரியத்தை,அடிப்படையாக கொண்டு இயங்குபவன் நான். அது ஒரு மன பிரச்சனை என்று கூட கருதலாம். உதாரணத்திற்கு இப்போது என் மனதில் திடுமென பழைய பாடல் தானாக தோன்றினால் ஒரு பேச்சுக்கு  ரோஜா மலரே ராஜ குமாரி என வைத்துக்கொள்ளுங்கள்.. இந்த பாடல் எப்படி என் மனதுள் தோன்றியது?  அதன் காரண காரியம் என்ன? என்பது போன்ற கேள்விகளால் சில மணி நேரங்களுக்கு மண்டையை போட்டு பிய்த்துக்கொள்வேன். கடைசியாக மனதில் அன்று முழுக்க  அதுவரை கடந்த காட்சிகளை ஒவ்வொன்றாக ரீவைண்ட் பண்ணி ரீவைண்ட் பண்ணி பார்ப்பேன். கடைசியில் ரோஜா மலரே  என்ற படத்தின் போஸ்டர் கண்ணில் பட்டதுதான் இதற்கு காரணம் என்று நானாக இப்படி ஒரு முடிவுக்கு வந்தபிறகுதான் மனம் சமாதானமடையும். ஆனால் இப்படியான தேடல் முடிவுக்கு வரும்போது சட்டென ஒரு வெறுமை மனதில்தட்டும். அதுவரை  என்னை இன்புறுத்திய  ஏதோ ஒன்று ஒரு முடிவை எட்டியது போல. 

இப்படியான பட்சத்தில் ஒரு கதை  எழுத துவங்குகிறபோது நான் படுகிற அவஸ்தை இருக்கிறதே அது எப்படி பட்டது என்பது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட விஷயமாகும். கதையின் துவக்க பக்கங்களை எழுதிக்கொண்டிருக்கும் போதே அந்தக் கதை குறித்த துவக்க சிந்தனை எனக்குள் உருவானது எப்படி?  அதன் சூழல் சந்தர்ப்பம் எத்தகையது என யோசித்து அதையும் எப்படியாவது அந்த கதைக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என முயற்சிக்கும் எழுத்தாளன் நான்.

அது போலத்தான் இந்தக்கதையிலும் ஆகிவிட்டது... இப்போது  எழுதும் இக்கதையை பற்றி  சுருக்கமாக சொல்வதானால் இது நானும் என் நண்பர் சட்டர்ஜி என்பவரும் ஊட்டியிலிருக்கும் மாசினி குடிக்கு பயணப்பட்ட ஒரு உண்மை  அனுபவம். நாங்கள் தேடிச்செல்லும்  பெண் இருக்கிறாளே .அவளை என் வாழ்நாளில் மறக்க முடியாது அப்படி ஒரு முகம்... பத்து வருடங்களுக்கு முன் ஒரு மழை இரவில் சந்தித்தேன்.... மன்னிக்கவும் தவறாக சொல்லிவிட்டேன். அவள் அல்ல அவர்கள். ஒன்றல்ல இரண்டு.. பெண்கள்.. சகோதரிகள்..

ரவி வர்மா ஓவியங்களில் வருவார்களே அவர்களைபோன்ற  முகச்சாடை. ஒவ்வொரு ஏப்ரல் மாதங்களிலும் எனக்கு அவர்களது ஞாபகம் வரும். அந்த வீடு அந்த இரவு அந்த நட்சத்திரங்கள் மரங்களின் ஊளைக்காற்று எல்லாம் மனசுக்குள் நிழலாடும். இந்த கதை அந்த அந்த சம்பவத்தை பற்றியும் இப்போது நான் பத்து வருடங்களுக்கு பிறகு அவர்களை இரண்டாவது முறையாக சட்டர்ஜியுடன் தேடிசென்ற அனுபவம் பற்றிய கதை இது.

ஒரு சம்பவத்தை கதையாக்கும் போது செய்யும் சிறுசிறு சித்து வேலை தவிர  இக்கதையில் சொல்லப்பட்ட விஷயங்கள்  முழுவதும்  என் உண்மை அனுபவம்.

முதலில் இக்கதையை மாசினிகுடியில் அது ஒரு மழைக்காலம் என ரம்மியமான வரிகளுடன்தான் எழுத துவங்கினேன்.
ஆனால்  வழக்கம்போல காரணகாரியத்தை பிராண்டும் மனசு  சட்டென ஒருகேள்வி எழுப்பியது.   சரி யார் இந்த சட்டர்ஜி அவருக்கும் எனக்கும் எப்படி அறிமுகம், இதை சொல்லாமால் கதையை மட்டும் சொல்வது வாசகனுக்கு தீனி போடும் வேலையாயிற்றே.. ஒரு நவீன எழுத்துக்காரன் குதிரைக்கு புல்லு போடுவது போல வாசகமனதுக்கு கதை போடும் காரியத்தை செய்யலாமோ என கேள்வியை எழுப்பியது. எனவே சட்டர்ஜியை பற்றியும் நானும் அவரும் மாசினிகுடிக்கு  பயணத்தை துவக்கிய கதையை பற்றியும் முதலில் எழுதிவிட்டு அப்புறம் மைய கதையை கதைக்கலாம் என முடிவுறுத்துக் கொண்டு கதை எழுததுவங்கினேன்.

,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,


சட்டர்ஜி  சென்னையில் நெடுநாட்களாக பேச்சிலராக வசிக்கும் அறிவுஜீவி. நட்சத்திர விடுதி ஒன்றில் செப்  உத்தியோகம். தனிக்கட்டை. மேன்ஷன் வாழ்க்கை. மற்றபடி அவர் ஒரு வங்காளி என்பதை பேரை வைத்தே நீங்கள் ஊகித்திருக்கலாம்.. உண்மைதான் அவர் பிலிம் சேம்பரில் ஏதோஒரு அமெரிக்க படம். ஏசுவின் வாழ்க்கையை ஒட்டி எடுக்கப்பட்டது நாயகன் கூட மெல்கிப்ஸன் என நினைக்கிறேன்.

படத்தை பார்த்துவிட்டு வந்து குப்பை என திட்டிக்கொண்டிருந்தபோது அறிமுகம். அதன் பிறகு அடிக்கடி நானும் அவரும் சினிமா, இசை என் அறிவு சார்ந்த கூடல்களுக்கு ஒன்றாகவே சென்று வந்தோம்.

இப்படித்தான்  இரண்டு நாட்களுக்கு முன் மியூசிக் அகாடமியில் ஒரு ஐரோப்பிய இசைக் கச்சேரிக்கு சென்றிருந்தோம். வழக்கமாக இது போன்ற இசைக்கச்சேரிகளுக்கு சென்னையில் கூட்டமே இராது. அறிவுஜீவிகளுக்கான நிகழ்ச்சி அது. ஆனால் அன்று நாங்கள் அங்கு போனதும் அதிர்ச்சி.

கட்டுகடங்காத கூட்டம். அதுவும் பாப்கார்னும், ஐஸ்கிரீமும் தூக்கிக்கொண்டு அரங்கிற்குள் நுழைகிற கூட்டம்.. அவர்கள்  நிச்சயம் இசையை ரசிக்க வரவில்லை. அவர்களுக்கு தேவை ஒரு திருவிழா. அவ்வளவுதான். சமீபமாக இதுபோல பல அறிவு ஜீவி கூட்டங்களுக்கு ஏக கூட்டம் கூடி அவற்றின் சாரத்தை இழக்கசெய்வதை பற்றி நானும் சட்டர்ஜியும் பேசிக்கொண்டே அரங்கினுள் இருக்கைகளை தேடினோம். ம்ஹூம் கிடைக்கவில்லை. வெறுத்து போய் வெளியே வந்தோம் 
.......
பக்கத்திலிருந்த சிறுகடையில் டீ சாப்பிட்டபடி, சூழலில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தையும் இம்மாற்றம் கடந்த சில வருடங்களாக மனிதர்களிடம் காரணமற்ற ஒரு வேகத்தை அது கூட்டியிருப்பதையும் பற்றி பேச துவங்கினோம்.

ஒரு வித கேளிக்கை மனோபாவத்திற்கு மக்கள் ஆட்பட்டிருப்பது பற்றி எங்கள் பேச்சு எழுந்தது. இதனால் தீவிரத்தன்மை சகல துறைகளிலும் முனை மழுங்கிப்போகும் அபாயமிருப்பதாக சட்டர்ஜி சிகரெட் பிடித்துக்கொண்டே பேசினார். நம்மிடமும் கூட பதட்டம் கூடிவிட்டது. முன்பு உணர்ந்து செய்த பல காரியங்களை இன்று முடுக்கிவிட்ட இயந்திரங்களை போல செய்கிறோம்.  மேலும் இதன் மூலம்  நம் ஞாபகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிக்கப்படுகிறன. இது சதியா அல்லது எதேச்சையா என்பதெல்லாம் கேள்வி இல்லை. ஆனால் இப்படியாக ஒரு வாழ்க்கை நம்மை சூழ்ந்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம் என  இருவருமே பேச்சினூடே உணர்ந்தோம்.

இந்த சமயம் பார்த்து என் கண்ணின் எதிரே புதிதாக திடீரென முளைத்திருந்த ஒரு பிரம்மாண்டமான பளபள அடுக்குமாடி கட்டிடம் தென்பட்டது. அந்த இடத்தில் இதற்குமுன் பாரம்பர்யமான ஒரு பழைய கட்டிடம் இருந்தது. அதில் பல படபிடிப்புகள் கூட நடக்கும். இன்று அந்த பாரம்பர்ய கட்டிடம் இருந்த இடத்தில் திடீரென ஒரு அன்னிய முதலீட்டால் ஐடி நிறுவனம்  பிரம்மாண்டமாக எழுந்திருக்கிறது.

சட்டர்ஜியிடம் இந்த கட்டிடம் எனக்குள் என்னவோ செய்கிறது. ஒரு பயத்தை உண்டு பண்ணுகிறது,என்று சொல்ல இப்போது சட்டர்ஜியும் அந்த கட்டிடத்தை பார்த்தார். சட்டென என்ன நினைத்தாரோ எனக்கு இப்போதே அந்த கட்டிடத்தின் மேல் சிறுநீர் கழிக்க வேண்டும் என தோன்றுகிறது செய்யட்டுமா என கேட்டார். வாருங்கள் இருவரும் அதனை சேர்ந்தே செய்யலாம் எனக்கூற, இருவருமே உடனடியாக டீ கிளாஸையும், சில்லறையையும் கடையில் கொடுத்துவிட்டு எதிர்சாரிக்கு சென்றோம். எல்லாம் ஒரு கிறுக்குத்தனம். ஒன்னுக்கடிப்பதன்  மூலம் இன்று இரவு நிம்மதியாக உறங்கமுடியும் என்பது போல. சட்டென நாந்தான் சாட்டர்ஜியின் கையை பிடித்து நிறுத்தி வேண்டாம் என தடுத்தேன். சட்டர்ஜிக்கு பிடிவாதம். பிறகு அவரை சமாதனப்படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது. இருவரும் முன்பிருந்த அதே இடத்துக்கு திரும்பினோம். அப்படியெல்லாம் நம்மால் சுலபமாக இது போன்ற காரியங்களை செய்துவிடமுடியாது. நம்மிடம் குமாஸ்தாக்களின் மனநிலையே இன்னும் ஒட்டிக்கிடக்கிறது என அவரையும் சேர்த்துக் கொண்டேன்.

ஆனால் உண்மையில் அதுவல்ல பிரச்சனை. அக்கம் பக்கம் யாராவது பார்த்தால் சிரிப்பார்கள் அல்லது அந்த கட்டிடத்தின் செக்யூரிட்டியோடு சண்டைபோட வேண்டிவரும், இப்படி ஏதோ ஒரு பயம் என்னை அந்த காரியத்திலிருந்து முழுவதுமாக பிடுங்கிவிட்டது. இந்த சமயத்தில் தான் சட்டர்ஜி சொன்னார், நாம் இந்த சூழலிலிருந்து தப்பித்தாக வேண்டுமானால் உடனடியாக ஏதாவது ஒரு அபத்தமான நிகழ்வை செய்யவேண்டும். இன்றைய உலகம் காரண காரியத்தோடு இயங்குகிறது. நீயும் எந்த குறிக்கோளும் இல்லாமல் கிட்டத்தட்ட முட்டாள்தனமான அபத்தமான காரியத்தை செய்ய வேண்டும். அதுவும் திட்டமிட்டு நேர்த்தியாக முழு கவனத்துடன் அந்த அபத்தத்தை நிகழ்த்தவேண்டும். அப்படி செய்வதன் மூலமாகத்தான் நம்மை நெருக்கும் ஒரு அபாயத்திலிருந்து நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ளமுடியும் என்றார் சாட்டர்ஜி.

சட்டர்ஜி சொன்னதை நான் புரிந்து கொண்டதனால் எனக்கும் அது சரியென பட்டது. என்ன செய்யலாம் என யோசித்தபோதுதான் எனக்கு அந்த  மாசினிகுடி ஞாபகம் வந்தது. உடனே அவரிடம் ஊட்டியில் மசினிகுடி என ஒரு அட்டகாசமான ஊர் இருக்கிறது. அங்கு எனக்கு மிகவும் வேண்டப்பட்ட குடும்பத்து வீடு..

அவர்கள் வீட்டுக்கு போக போகிறோமா

சட்டர்ஜி முகத்தில் சிறு ஏமாற்றம்
ம் ஹூம் இல்லை இல்லை இரவு நேரத்தில் சென்று அவர்கள் வீட்டின் கதவை தொட்டு விட்டு திரும்பப் போகிறோம்.

அதுவும் ஊட்டியில் இருக்கும் ஒரு வீட்டின் கதவை தொட்டுவிட்டு..  அதுவும் இரவு நேரத்திலா?

சட்டர்ஜியின் முகத்தில் சட்டென பிரகாசம். பிரமாதம் கிளம்பலாம் கிளம்பாலாம் என உற்சாகபடுத்தினார்.

நம்மை யாராவது அந்த நேரத்தில் பார்த்துவிட்டால்.. சட்டர்ஜி கேட்க ம்ம்ஹூம் இப்படியெல்லாம் கேட்டால் பயணம் தடைபட்டுவிடும். கண்ணை மூடிக்கொண்டு புறப்படுவோம் நம்மீது இந்த சூழல் திணிக்கும் அதிகாரத்திலிருந்து தப்பிப்போம். நமது ஞாபகங்களை மிட்போம். உண்மையில் நாம் செய்யபோவது ஒரு வித்தியாசமான புரட்சி என பேச வங்காளிக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது.  மறுநாள் புறப்படும் நேரம் இடம் மற்றும் சந்திப்பு பற்றி பேசிக்கொண்டு இருவரும் பிரிந்து சென்றோம்.


2.
மாசினி குடி .. என் வாழ்வில் என்றும் மறக்க முடியாத நிலக்காட்சியை நான் தரிசித்த இடம். குறிப்பாக அந்த இரண்டு பெண்களின் முகம். பாவாடை சட்டையணிந்து ஒயர் கூடைபின்னும் இரண்டு பெண்களை ரவிவர்மா ஓவியமாக தீட்டினால் எந்த மாதிரி முகக்கள் இருக்குமோ அப்படி ஒரு தோற்றம். இத்தனைக்கும் அது பாழடைந்த வீடு. பத்து வருடங்களுக்கும் முன்  ஊட்டியில் ஒரு தனியார் தொண்டு  நிறுவனத்திற்கான பழங்குடிகள்  குறித்த கள ஆய்வுக்காக வந்திருந்த போதுதான் அந்த அனுபவம் நேர்ந்தது.

நான் அப்போது பதட்டம் நிறைந்தவன். பட்டாம் பூச்சிகளை பிடிக்க அலையும் சிறுவனின் பதட்டத்தை என் கண்களிலும் கைகால் அசைவிலும் அடிக்கடி காணலாம். சாலையில் பேருந்துகளில் ரயில் பயணங்களில் அழகான பெண்களை கண்டுவிட்டால் களிபேருவகை என் மனதில் நடனம் கொள்ளும். ஆனந்ததில் அலைக்கழியும். அப்படிப்பட்ட பெண்களுடன் பேச நேர்கிற போது அல்லது அவர்களது உள்ளத்திலே அறிமுகம் கொள்ளும் துவக்க நிமிடங்களில் அதி காலைநேர கடலின் மேற்பரப்பை போல மனம் பலவித பரவச உணர்ச்சியால் அலையலையாக  எம்பி அடங்கும். ஒரு கட்டத்தில் எதார்த்ததினாலும்  ஏமாற்றத்தினாலும் பழக்கத்தினாலும் உணர்ச்சிகள் அனைத்தும் வடிந்து விட்டாலும் பின்பும் அந்த உணர்ச்சி நிலையை அடைய மனம் ஏங்கும்.

இப்படியான காலத்தில்தான் ஒருநாள் ஊட்டிக்கு வந்திருந்தேன். ஊட்டிக்கு வருவதும் அதுதான் முதல் முறை. ஊட்டியில் பணிகள் முடிந்த பின் நானும் என்னை நெறிபடுத்தும் மூத்த அலுவலரும் இரவில் மோயாருக்கு பேருந்தில்  சென்று கொண்டிருந்தோம். வழியெங்கும் மழை ஒரு நண்பனை போல தொட்டும் விட்டும் உடன் பயணித்து வந்தது. நாங்கள் சென்ற பேருந்து திடீரென பேரிங் கழன்றதன் காரணமாக பாதியில் நிற்க மோயார் செல்லும் எங்களின் பயணம் பாதியில் தடைபட்டது.  என்னை நெறிப்படுத்தும் மூத்த அலுவலரும் நானும் நடுங்கும் குளிரில் நள்ளிரவில் மாசினிகுடிக்குள் இறங்கினோம். என்னை நெறிப்படுத்துபவர் அங்கு தன்னுடைய உறவினரின்  வீடு இருப்பதாகவும் அங்கு சென்று இரவு தங்கி விடிகாலையில் பேருந்து பிடிக்கலாம் எனவும் கூறினார்.


அதுவரை அப்படி ஒரு குளிரை பார்க்கவில்லை அப்படி ஒரு இருட்டையும் பார்க்க வில்லை. இரவுப்பூச்சிகளின் சத்தம் தவிர காற்றில் அசையும் மரங்களின் சத்தம் இதைத்தவிர வேறு சத்தமே இல்லை.

எங்கு பார்த்தாலும் இருட்டு. நாங்கள் ஒரு  பள்ளத்தில் இருக்கிறோம் என்பதை தொலைவில் தெரிந்த மரங்களின் முகப்பை வைத்து அறிந்து கொண்டோம்.

மழை வேறு நின்றுவிட்டது. காற்றும் இல்லை. என்னை நெறிப்படுத்தும் அதிகாரி  என் கையை பிடித்துகொண்டு ஒரு மேட்டில் ஏறினார். அவரது கை திண்மையாகவும் உறுதியாகவும் குளிர்ச்சியாகவும் இருந்தது. அந்த இடம் சேறும் சகதியுமாக  வழுக்கியபடி இருந்தது. 

கொஞ்சம் தூரம் அப்படியே ஏறிய போதுதான் சற்று உயரத்தில் நட்சத்திரங்கள் தெரிந்தன. நிலவு வெளிச்சம் அருகிலிருந்த ஆளுயர புதர்களை எனக்கு உணர்த்தியது. கைகள் சில்லிட்டன.

என் கைகள் இரண்டையும் தேய்த்து சூடாக்கினேன்.  ஸ்வெட்டர் வழியாக குளிர்காற்று உடலுக்குள் ஊளையிட்டது. இன்னும் சற்று மேலே ஒரு சமதளத்திற்கு வந்தபோது ஆகாயம் முழுவதுமாக தெரிய ஆரம்பித்தது. இப்போது இருவரும் ஒரு விரிந்த மேடான நிலத்தில் நின்று கொண்டிருந்தோம்..

நாங்கள் ஏறிவந்தது குறுக்கு வழியாம் அவர் சொன்னார். இல்லாவிட்டால் சுற்றிவர பத்து நிமிடம் பிடிக்குமாம். இப்போது தொலைவு காட்சிகள் மெல்ல கண்ணுக்கு பழக்கமாகின. காட்சிகளில் ஒளிந்திருந்த நிழலுருவங்கள் மெல்ல எனக்கு புலப்பட்டன. நாங்கள் ஒரு சரிவின் கீழே நின்று கொண்டிருந்தோம் தொலைவில் ஒரு மேடு. மேட்டின் விளிம்பில் குறித்த இடைவெளியில்  கறுப்பாய் நிழலுருவங்களாய்  ஓட்டுவீடுகள்  தெரிந்தன.


அடர்த்தியான இருள் என்றாலும் மேலே தெளிவாக விரிந்து கிடந்த வானமும் நட்சத்திரங்களும் எனக்குள் ஒரு இசைத்தட்டை சுழலவிட்டது. ஒரு பழைய இந்தி பாடலை கேட்பதுபோல ஒரு ரம்மியம். இருவரும் மேட்டில் அந்த வீடுகளை நோக்கி நடந்தோம். அது ஒரு மலையின் உச்சி போல தெரிந்தது வீடுகளுக்கு பின்னால் நட்சத்திரங்களுடன் பிரம்மாண்டமான ஆகாயம். கீழே சரிந்து கொண்டிருந்தது... ஒவ்வொரு வீட்டின் முன்பும் அளவாக வடிவமைக்கப்பட்டு வேலி சமைக்கப்பட்ட தோட்டங்கள் அத்தோட்டத்து   பூக்களின் வாசம் இரவை ஒரு  ஆலாபனைக்குள் இழுத்தது. இப்போது நிலவை மறைத்த மேகம் மெல்ல விலகியிருக்கும் போல மெல்ல நிலவெளிச்சம் ஓடுகளின் மேல் படர்ந்து அவற்றில் மினுக்கம் ஏற்பட வைத்தது. காற்றில்  மரங்கள் அசையும் உஸ் சத்தம.. வீடுகளுக்கிடையில் தெரிந்த இடைவெளிவழியாக தொலைதூர அடர்ந்த மரங்கள் புலப்பட்டன.. 


நான் சட்டென அவரிடமிருந்து விலகி வீடுகளுக்கிடையிலான இடைவெளிவழியாக அதன் பின்பக்கம் சென்றேன். வாவ் அது ஒரு மிகப்பெரிய பள்ளதாக்கு.. நட்சத்திரங்களுடன் ஆகாயம் பிரம்மாண்டமாக கீழிறங்கிக்ண்டிருந்தது. என் வாழ்வில் அப்படி ஒரு காட்சியை கண்டதில்லை அந்த நிலவு வெளிச்சத்தில் உடலை அறுக்கும்குளிரில் கால்களுக்கு கீழே எங்குமாக விரிந்து கிடந்த சரிவும் பெரும் பள்ளத்தாக்கும் அதனுள்  தொலைதூர மரங்களும் அவற்றின் மீதான் நிலவெளிச்சமும் என் இதயத்தை நொடியில் விரித்து ஒவென கூச்சலிட தூண்டின ...ஆனால் இரவின் மயான நிசபதம் காரணமாக என்னால அதை செய்யமுடியவில்லை.

அந்த பதட்டமான உணர்ச்சியை என்னை நெறிப்படுத்துவர் புரிந்து கொள்ளவில்லை.. பரவசத்தில் என் கண்ணில் மகிழ்ச்சியின் நீர் தளும்பிவிட்டது. அவர் அருகில் வந்து போகலாமா என்றார். 

அந்த குட்டி ஓட்டு வீட்டின் காம்பவுண்ட்  கேட்டை சத்தமில்லாமல் திறந்தோம். உள்ளே கதவின் ஓரமாக இருந்த சுவிட்சை நெறிப்படுத்துபவர் அழுத்தினார். சட்டென ஒரு குரல்.

....யாரு..? ...... வெளிச்சம் நிரம்பிய குரல் ............

அடுத்த நொடியே கதவு திறக்க, பாவாடை சட்டையுடன் துடிப்பான ஒரு பெண் கையில் பாதி பின்னிய ஒயர்கூடை.. அளவாக செதுக்கிய மூக்கு பென்சிலால் செதுக்கிய உதடுகள் இரண்டுக்கும் இடையில்... நாசியிலிருந்து மேலுதட்டின் எம் எழுத்து வளைவுகளுக்கு இறங்கும்  தெளிவான கோடுகள்  கத்திபோல கூர்மையான விழிகள் மற்றும் நேர் வகிடெடுத்து படியவாரி எலி பின்னல் போட்டிருந்த அந்த சிறு பெண்ணின் முகம்  கண நேரத்தில் மனதில் ஆழமாக பதிந்துவிட்டது. 

அச்சிறுபெண் பின்புறமாக இருந்த அறைக்குள் குரல் கொடுத்தாள். அடுத்த நிமிடமே வெளியே வந்த இன்னொரு பெண் பாவாடை தாவணியில் கையில் தோசை கரண்டியுமாக வெளியே வந்தாள். அவளுக்கும் அதே முகம் அதே மேலுதடு எம் மற்றும் நாசியிலிருந்து கிழிறங்கும் இரட்டை வரி கோடு. முகத்தில் அபரிதமாக வழிந்தது ஒளி. உடன் பெரியவளுக்கான தோரணை. அவர்களின் முகத்தின் வாத்ஸ்லயம் வெளியில் நான் கண்ட நிலக்காட்சியின் ரம்மியத்துக்கு எள்ளளவும் குறைந்ததில்லை. மனதுக்குள் ஒரு பந்து விழுந்து துள்ளியது. கஷ்டப்பட்டு அதை அடக்கி வைத்தேன். இதயத்தில் கிடாரை மீட்டும்  விரல்கள் யாருடையதோ தெரியவில்லை.. உண்மையில்  அந்த நொடியில் அப்படியான மனநிலைதான். அந்த சூழல் என்னை முழுவதுமாக கவ்விக்கொண்டது. காரணம் வேறொன்றுமில்லை. ஒருவிதமான பரவசமும் பதட்டமுமான மனநிலை.

இது போன்ற மனோநிலைகள் எனக்கு மட்டும் வாய்க்கிறதோ என்றுகூட அடிக்கடி நான் நினைத்து பார்ப்பதுண்டு. நல்ல இசையை கேட்கும் சந்தர்ப்பத்திலும் நான் இந்த என் கட்டுபட்டற்ற மனநிலையை உணர்ந்திருக்கிறேன்.. இது போன்ற உணர்வு நிலைகளில்  லயித்து என்னை மீள் உயிர்ப்பு செய்யும் சந்தர்ப்பங்கள் அக்காலங்களில் எனக்கு அதிகமாக வாய்த்திருந்தது.

இன்று பார்க்கும் போது அவற்றை வாழ்வின் மிக உயர்ந்த தருணம் என்றும் கூட சொல்ல தோன்றுகிறது. ஆனால் அதே சமயம் வேறுவகையில் பார்த்தால் எனக்கே வெட்கமாகவும் இருக்கிறது. யார் என்றே தெரியாதவர் வீட்டில் சிறுபெண்களின் முகத்தை பார்த்து உள்ளூர களிப்புறுவதும் குதூகலிப்பதூவும் எந்த விதத்தில் நியாயமாக கொள்ள முடியும். ஆனாலும்  கதை எழுதுபவனுக்குள் சற்றேனும் நேர்மை வேண்டும் என்ற காரணத்தால் எனது அக்கணத்தைய மனோநிலையை உங்களுக்கு விவரிக்கிறேன்.

வீட்டில் இருந்த அவர்களது அப்பா அம்மா இருவருமே எங்கோ வெளியூருக்கு போயிருக்கிறார்கள். அப்பா அங்கிருந்த பள்ளிகூடத்தில் தலைமை ஆசிரியர் போல. நாளை மாலை தான் வருவார்களாம். இருவரும்  என்னை நெறிப்படுத்துபவரை மாமா என அவர்கள் உரிமையுடன் அழைத்தார்கள். நெறிப்படுத்துபவர் பேருந்து பிரச்சனையை கூறி இங்கு இரவு தங்க அனுமதி கேட்டார் சின்னவள் பெரியவளை பார்த்தாள். பெரியவள் தலையசைத்தாள் ஆனால் அவள் பார்வை என்னை கூர்ந்து கவனித்தது. புருவங்கள் ஒன்றை ஒன்று கேள்விகேட்கும் விதமாக நெருக்கி கொண்டன. ஆனால் அதை வெளிக்காட்ட விரும்பாதவளாக தலையசைத்தாள். பெற்றோர் இல்லாத வீட்டில் என்ன தான் உறவினன் ஆனாலும் உடன் ஒரு அந்நியனுடன் தங்க வைப்பது குறித்து அவளுக்கு ஐயம் உண்டாகியிருக்ககூடும். நான் சற்று கூடுதலாகவே உணர்ச்சி வசப்பட்டவனாக இருந்தேன்.
.
உடமைகளை வைத்துவிட்டு அங்கிருந்த நாற்காலிகளில் அமர்ந்தோம் இருவரும் உள்ளே சென்ற பின் தங்கையை போலிருந்தவள் மட்டும் சட்டென வெளியே வந்து என்னை குறுகுறுக்க பார்த்தாள். எனக்குள் சில ஜன்னல்கள் அப்போது திறந்தன. இக்கட்டான காலத்தில் தங்குவதற்கு இடம் கொடுத்தவர்களிடம் மனபேய் தன் வாலை நீட்டுவதை உணர்ந்து அதனை சுருட்டிவைக்க வேண்டும் என மனதில் எண்ணிக்கொண்டேன்.

வீடுமுழுக்க ஆங்காங்கு ஓயர்வேலை பொருட்கள் அல்லது மணிகோர்த்த அழகுபொருட்கள் காணப்பட்டிருந்தன.

அந்த அறையின் மூலையில் மரமேசை. அதன் மேல் துணி விரிக்கப்பட்டு பெரிய குமிழ் ரேடியோ காணப்பட்டது. அதன் மேல் வண்ணங்கள் சிறு வலைத்துணியும் அதன்மேல் இரண்டு தலையாட்டும் நாய் பொம்மைகளும் காணப்பட்டன. நடுவில் ஒரு சிறு பீங்கான் ஜாடி. ரேடியோவில் அந்தநேரத்திலும் பாட்டு ஒலித்துக் கொண்டிருந்தது கர்புர்ர் மற்றும் வினோத சத்தத்துடன் அது தன்பாட்டுக்கு பாட்லகளை பாடிக்கொண்டிருந்தது.

நாங்கள் உடைமாற்றி இருவரும் ஒருவரை பார்த்து ஆசுவாசப்பட்ட கணத்தில் உள்ளிருந்து அவசரமாக ஒடிவந்த சிறுபெண் கண்கள் கலங்கியபடி மாமா அக்கா அழ்றா என பதட்டதுடன் சொல்ல.. சட்டென நெறிப்படுத்துபவர்  உள்ளே ஓடிச்சென்றார். சிறிதுநேரம் கழித்து பதட்டம் கொள்ளாமல் நானும் சமையல் கட்டுக்குள் செல்ல அக்கா தங்கை இருவரும் அழுது கொண்டிருந்தனர்.

நண்பர் அவர்கள் இருவரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தார். எனக்கு சட்டென ஒரு கலக்கம். நாம் வந்ததால ஏதேனும் விபரீதமோ என நினைத்தவன் மீண்டும் மவ்னமாய்  பழையபடி நாற்காலியில் அமர்ந்தேன்.

நெறிப்படுத்துபவர் இப்போது என்னிடம் வந்து என் முகத்தையே கூர்ந்துபார்த்தார். எனக்கு மேலும் கலவரம். பின் அதுவரை என் பின்புலம் பற்றி அவ்வளவாக விசாரிக்காத நெறிப்படுத்துபவர் எனது பூர்விகம் அப்பா அம்மாவின் பூர்வீகம் உடன்பிறந்தார் என அனைத்தையும் விசாரிக்க துவங்கினார். உள்ளுக்குள் ஆயிரம் கேள்விகள் எழுந்தாலும் நான் சொல்லிக் கொண்டிருந்தேன்.

பின் உள்ளே சென்றவர் வெளியே வந்தார். இப்போது அக்காள்தங்கை இருவரும் வெளியே வந்தனர்.

நான் சட்டென எழுந்து நின்றேன். உக்காருங்க உக்காருங்க என அக்காள் சொன்னாள்.

அதன்பிறகுதான் எனக்கு அவர்கள் அழுத காரணத்தை சொல்லி ஆச்சர்யபடுத்தினர்

கடந்த வருடம் அவர்களது சகோதரன் ஒருவன் மைசூர் கல்லூரியில் படிக்கபோனவன் கல்லூரி தேர்தல் தகராறில் அடித்துகொல்லப்பட்டிருகிறான் அதிலிருந்து கடந்த ஒரு வருடமாக வீட்டில் யாரும் சரியாக சாப்பிடுவதில்லை. ஆச்சர்யப்படும் வகையில் என் முகம் அவனை போலவே முழுமையாக ஒத்து போயிருக்கிறதாம் .என்னை பார்த்தவுடன் தம்பியின் நினைவுவரவே அழுகைதாளவில்லை அக்காவுக்கு

இப்போதுதான்பார்த்தேன் அந்த மூத்த பெண்ணீன்  முகத்தை என்னை விட வயது கூடியவளா நம்ப மறுத்து மனம். அப்போதைக்கு அவர் சொன்னது எனக்குள் ஆச்சர்ய்த்தையும் பிரமிப்பையும் ஏஏற்படுத்தியிருந்தாலும்  அதுவரையிலான என் பதட்டமான அழகியலில் தத்தளித்த மனோநிலை சட்டென சாறூவடிந்து மிக்ச்சாதரணமானவனாக் என்னை நினைக்கவைத்துவிட்டது. இப்போது யோசிக்கும் போது அது தவறுதான் என்றலும் உண்மையில் என் மனநிலை அப்படித்தான் இருந்தது என்பதை நான் வெட்கத்துடன் குற்ற வுணர்ச்சியுடன் ஒத்துக் கொள்கிறேன்.

அதன் பிறகு  அவர்கள் சட்டென துக்கத்தை துறந்துவிட்டு பரபரப்பாக சமையல் வேலையில் இறங்கினார்கள் .. என்னிடம்
அவ்வப்போது பேச்சுகொடுத்தார்கள் .. உப்புமா அடுத்த பதினைந்து நிமிடங்களில் ஆவி பறக்க இருதட்டுகளில் கொண்டுவந்து சகோதரிகள் வைத்த்னர். பின் நெறிப்படுத்துபவர் அவர்களையும் சாப்பிட சொல்ல இருவரும் தட்டுகளொடு எங்கள் முன் அமர்ந்த்னர் .. அக்காள் அவ்வபோது தம்பியை பற்றி அடிக்கடி கூற உடன் தங்கையும் சேர்ந்துகொண்டாள் ..சாப்பிடுவதற்கு முன் இளையவள் என்னை ஒரு முறை பார்த்தாள் . நான் அவளை பார்த்தேன் . உங்களை அண்ணன்னு கூப்பிடலாமா எனக்கேட்டாள் . எனக்கு சட்டென தொண்டை அடைத்துக்கொண்டது ..ம்ம் வார்த்தை வரவில்லை. நான் சகோதரிகளோடு வளராதவன் . அந்த உணர்வு என்ன அது எப்படியானது என்பதை அறிந்திலன். அதனால் எனக்கு என்வயசு பெண்கள் அனைவருமே பெண்களாத்தான் தெரிந்தனர். முதல் முறையாக ஒரு பெண் இப்படி கேட்டவுடன் எனக்கு அதை எப்படி எதிர்கொள்வது என தெரியவில்லை. வெறுமனே தலையாட்டினேன் . உண்மையில் அந்த கேள்வியை வெறுத்தேன் . எனக்கு எல்லாமே வெறுப்பாக இருந்தது. சட்டென எழுந்து வீட்டினுள் ஓடிய இளையவள் ஒரு பழைய சட்டை ஒன்றை கொண்டுவந்தாள். அவள் அத்னை கொண்டுவருவதை கண்ட அடுத்த நொடியே எனக்கு தெரிந்துவிட்டது . அண்ணா இத நீங்க எனக்காக போடுறீங்களா என அந்த பெண் கேட்க எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது...  என்னுடைய மன்நிலையை ஒரு பார்வையில் சட்டென புரிந்து கொண்ட மூத்த்வள் .. தங்கையின் பேரை சொல்லி ரொம்ப சீன் போடாதடி வந்து சாப்பிட உக்க்காரு என சொல்லி சட்டென சூழலை மாற்றினாள் .மூத்தவளின் சாதூர்யம் பெண்மையின் உயரத்தை எனக்கு காட்டியது, பெண்களின் மேல் எனகேற்படும் பெரு வியப்பு எனலாம் இது போன்ற உள்ளுணர்வுகளை கிரகிக்கும் நுட்பமான ஆற்றல் பெண்களுக்கு மட்டுமே இருப்பதை அவ்வப்போது கவனித்திருக்கிறேன். அத்ன் பிறகு சூழல் சகஜமாக அனைவரும் சாப்பிடத்துவங்கினோம்.  சாப்பிட்டு முடித்ததும் எனக்கோ துக்கம் கண்களை சொக்கிதள்ளீயது .ஆனால் அவர்களோ என்னோடு மேலும் உரையாடும் ஆவலில் இருந்தனர் ..தங்கை உள்ளேயிருந்து சீட்டுகட்டை எடுத்துவந்தாள் பெட்ஷீட்டை விரித்து டாங்கி விளையாடத் துவங்கினோம். விளையாட்ட்டு சூடுபிடிக்க துங்கியபோது அவர்கள் த்ங்களைமறந்து ஆர்வமாக ஈடுபட்டனர். எனக்கும் சுவாரசியம் தீப்பற்றியது . நான் டாங்கியாக மாறியபோது இருவரும் விழுந்து விழுந்து சிரித்த்னர்  இடையில் தங்கை உள்ளே ஒடிச்சென்று தன் அண்ணன் அவளின் பிறந்த நாளுக்கு தானே வாட்டர் கலரில் வரைந்து தந்த வாழ்த்து அட்டையை காண்பித்தாள்.காலையில் நாங்கள் புறப்படவேண்டிய காரணத்தால் ஒருகட்ட்த்தில் உறங்கசெல்வது என முடிவெடுத்தோம் . எங்களுக்காக இரண்டு பாய்களையும் த்லையணையும் சிறுபெண் விரித்துகொடுத்தாள் அத்ன் மேல் பெட்ஷீட்டையும் விரித்துதந்தாள். விளக்கை அணைத்துவிட்டு அவர்கள் பகத்து அறைக்குள் சென்றனர் . இரவு விளக்குமட்டும் எரிந்து கொண்டிருந்தது.நெரீப்படுத்துபவர் படுத்தவுடன் உறங்கிவிட்டார் ஆச்சரயமாக இருந்தது.  .படுத்த்வாக்கில் அண்றைய நாளின் எதிர்பாரா திருப்பங்களை பற்றி யோசித்தேன் .

இரண்டு பெண்கள்குறித்த நினைப்பும் நெடுநேரம் என்னை அலைக்கழித்தது. என் வாழ்வில் ஒருபோதும் யோசிக்காத  ஒரு வீட்டுக்குள் இந்த கணத்தில் நான் இருப்பதும் அந்த வீட்டின் பொருட்கள் வழியாக இருந்த உயிர்த்ன்மையும் ஆச்சர்யபடுத்தின கூடவே  என்னைகுறித்தும் ஒரு அருவருப்பு கசப்பு.. இனி பெண்களை கண்டதும் உள்ளம் துள்ளுவதற்குள் முளையிலேயே கிள்ளிவிடவேண்டும் என முடிவெடுத்துக்கொண்டேன்.

நாளை காலை இங்கிருந்து போகும் பொது அவர்களிடம் ஒரு அண்ணனை போல நடக்க எண்ணி எப்படி பேசலாம் என யோசித்து வைத்திருந்தேன்.மனசோடு சண்டை போடவேண்டி இருந்தது .. குளிர் அதிகம் .அவர்கள் த்ந்த போர்வை ஒரு வேளை ஆவர்களின் அண்ண்ணுடையதாக இருக்க்லாம் .. அவனை  நினைத்து ஒரு நிமிடம் பிரார்த்த்னை செய்துகொண்டேன். 
  
  
என் துரதிஷ்டம் மறுநாள் கருக்கலிலேயே இருவரும் பேருந்தினை பிடிக்க புறப்பட வேண்டியதாக இருந்தது.காலை ஐந்து மணிக்கு அலாரம் வைத்து எழுந்துகொண்டோம்
ஆச்சர்யம் என்னவென்றால் அன்று இரவே எங்களுடைய உடைகளை எங்களுக்கு தெரியாமல் துவைத்து மறுநாள் காலை பாதி ஈரத்துடன் இஸ்திரியும் போட்டு தந்தார்கள். நல்லகாபி போட்டுதந்தார்கள் .குடித்துவிட்டு அவர்களுடன் சொல்லிக்கொண்டு  வெளியேவந்தபோதும் .இருட்டு கடுங்குளிர்.
திரும்பி பார்த்தேன் வானத்தில் நட்சத்திரங்கள் இடம் மாறியிருந்தன. அதன் பிறகு  மோயர் கேம்பிற்கு கிளம்பி வந்துவிட்டோம்.

3

இது நடந்து பத்து வருடங்களாகிறது. இப்போதும் அந்த நிலக்காட்சியும் , சகோதரிகளின் வாஞ்சையும் ஒரு காவியம் போல மனதில் பதிந்துவிட்டது. எனது உணர்வுகளை பெரும் உயரத்துக்கு அழைத்துசென்ற அந்த நாள் உயர்ந்த ஒரு நாவலின் முக்கியமான பகுதியை படிக்கும் போது நாமறியாமல் கொள்ளும் மன எழுச்சியை ஒத்ததாக இருக்கிறது. மீண்டும் அந்த மனஎழுச்சிக்கு செல்ல பலமுறை ஏங்கியதுண்டு . ........என்றாவது ஒருநாள்  அந்த மாசினிக்குடிக்கு சென்று ஒரு பகல் பொழுதில் அந்த நிலக்காட்சியை அந்த வீட்டை அந்த சகோதரிகளை தரிசிக்க வேண்டும் என்ற உந்துதல் என்னை அவ்வப்போது இம்சித்து கொண்டிருந்தது.இந்த மூன்றில் எது என்னை ஆகர்ஷிதத்து என சொல்வதற்கில்லை. அந்த அனௌபவம் ஒன்றோடு ஒன்று பின்னி பிணந்ததாக இருந்தது.

 அந்த நாளுக்குபிறகு   இன்று வரை நான் அதுபோன்ற அப்பழுக்கற்ற தூய்மையான் அன்பை தரிசிக்கவில்லை..அவர்களது வீட்டின் முன்பக்க தோட்டத்தின்  மலர்கள் அனைத்தையும் விட சிறந்தவையாக அவர்களது தன்மை இருந்ததை இப்போதும் உணர்கிறேன். அவர்கள் இப்போது எனக்குள் இசையை உண்டாக்கிய கண்களுக்கு சொந்தகாரார்களாகவோ அல்லது அதன் பின் நான் மாற்றிக்கொண்ட சகோதரிகளாகவோ என் நினைவில் இல்லை .

இரண்டு அற்புத்மான மனித உயிரிகள் . ஒப்பற்ற அன்பை பரிவை எனக்கு காண்பித்து தந்த தேவதைகள்.நாம் வாழும் காலத்தே எத்த்னை யோ மனித முகங்களை கடந்து வருகிறோம் ஆனாலும் அதில்  ஒருசில முகங்கள் மட்டுமே நாம் நமக்குள் உய்ருவதற்கு காரணமாக அமைந்துவிடுகின்றன. அப்படிபட்ட முகங்களாக அவர்கலின் முகத்தை உணர்கிறேன் . எப்போதாவது வாழ்வில் நம்மை மீறிய ஒரு அற்பத்த்னம் எனக்குள் எட்டிபார்க்கும் காலங்களில் அந்த முகங்கள் என்னுள் நிழலாடும்.  வாழ்வில் என்றேனும் மீண்டும்  ஒரே ஒரு முறை அவர்களது வீட்டிற்குள்  சென்று சில நிமிடங்கள் இருக்க வேண்டும் அதே அனுபவத்தை மீண்டும் உட்கொள்ளவேண்டும் . நல்ல வேளையாக அந்த வீட்டில் நான் அப்போது பார்த்த எந்த பொருளும் மாறிவிடாமல் வேறு புதிய பொருட்கள் சேராமல் அந்தந்த இடத்தில் இருந்த பொருட்கள் அனைத்தும் அதே தோற்றத்தில் இருக்கவெண்டும் . பெண்களும் காலத்தல் மாறாமல் அதே முகங்களூடப் அதே ஆடை மற்றும் சுபாவத்துடன் காண்ப்படவேண்டும்.  ஆனால் இதெல்லாம் ஒரு கனவு. அற்புதமான கனவு .அவ்வளவுதான் .

அதன்பிறகு நான் சில மாதங்களில்லேயே அந்த வேலையை விட்டு அரசு உத்தியோகம் கிடைத்து வாழ்க்கையின் பற்சக்கரங்களில் சிக்கிக்கொண்டேன்.

 எத்னையோ மனிதர்க்ள் பலவிதமன அனுபவங்கள் .ஆனாலும் அவ்வப்போது மழைநாட்களிலோ அல்லது யாரேனும் இலக்கியவாதிகளோடு மதுகுடித்த நிதான இரவுகளிலோ மாசினி குடி ஞாபகம் வரும்.அப்போதெல்லாம்  அந்த வீட்டில் அவர்கள் இன்னும இருப்பார்கள் என்ற ஐயமும் வரும். பத்திரிக்கைகளில் ஏதேனும் மாசினிகுடி பற்றி செய்திகள் வந்தால் என்ன செய்தி என கவனிப்பேன் . தொலைக்காட்சிகளில் என்றாவது அந்த ஊரைபற்றிய தொகுப்ப்பு காட்சிகள் காண்பிக்கமாட்டார்களா என்றும் குழந்தைத்தனமாக மனம் ஏங்கும். உண்மையில் அவர்கள் இன்னமும் அங்கு இருப்பார்களா என்பது ஐயம்தான். 


ஒரு வேளை அவர் அப்பாவுக்கு மாற்றல் ஆகி போயிருக்கலாம். அப் பெண்கள்  இருவருக்குமே கல்யாணம் ஆகி வேறு எங்கோ பம்பாய் டெல்லி அல்லது கோவை என போயிருக்கலாம். ஆனாலும்மனதில் லேசானதொரு நம்பிக்கை போய்தான் பார்ப்போமே . நம்மை மறந்தாலும் உங்கள் அண்ணனை போல ஒருத்தன் என்றிர்களே என சுலபமாக ஞாபகபடுத்திவிடலாம்..


இத்த்னைக்கும் இடையில் பலமுறை ஊட்டிக்கு சென்றுவிட்டேன். ஆனால் ஒருமுறையும் என்னால் மாசினிகுடிக்கு  அந்த இடத்த்துக்கு செல்ல முடியவில்லை . ஒவ்வொருமுறையும் ஏதோ ஒரு தடை. பெரும்பாலும் நேரம்தான் . ஒருமுழு நாளை தனியாக செலவு பண்ண முடியாத நெருக்கடி  அத்னால்தான் சாட்டர்ஜி அன்று மியூசிக் அகாடமியில்  அபத்தமான காரியம் பற்றி கேட்ட்டதும் என்னை மீறி மாசினிகுடிக்கு செல்வது பற்றி சொல்ல நேர்ந்தது.  என்னை பொறுத்தவரை இது அபத்தமான நிகழ்வு இல்லை. இது என்னை மேலும் உணர்ச்சி வசப்படசெய்யக்கூடிய .என்னை களிப்படையச் செய்யக்கூடிய நிகழ்வு. ஆனால் அதை சட்டர்ஜிக்கு வெளிப்படுத்தகூடாது
அவரை பொறுத்த்வரை இது காரணமற்ற  ஒரு அபத்தமான நிகழ்வு. இப்படியாக நாங்கள் பேருந்தில்  புறப்பட்டு . எங்களது திட்டப்படி மறுநாள் காலை  ஊட்டி வந்து இறங்கினோம் , ஏர்கனவே பொட்ட திட்டப்படி மாசினிகுடியில் அந்த  வீட்டுக்கு  இருட்டில் சென்று கதவை தொடுவது எனும் திட்டப்படி மாலை இருட்டிய பிறகு ஊட்டியிலிருந்து  மாசினிகுடி பயணம் மேற்கொள்வது என முடிவாகியது . அதுவரை பகலில் ஊட்டியில் என்ன செய்யலாம் என யோசித்தோம் .

குளிருக்கு உள் ஸ்வெட்டர் போட முடிவெடுத்து  ஒரு விதேச மத்யமம் பாருக்குள் குவாட்ட்ரை காலி பண்ணிவிட்டு கொஞ்சம் பாட்டிலில் குளீர் பானத்துடன் பார்சல் செய்துகொண்டு பொட்டானிக்கல் கார்டனுக்கு சென்று விட்டோம். பகல் முழுக்க அங்கேயே  படுத்துவிட்டு எதையோ வாயில் தள்ளி வயிற்றையும் ரொப்பிக்கொண்டு மாலை பேருந்து நிலையத்துக்கு வந்து த்யாராக இருந்த மாசினி குடி பேருந்துக்குள் ஏறி அமர்ந்துகொண்டோம்.


பஸ்ஸில் ஸ்வெட்டர் அணிந்த இதர  மக்கள் அனைவரும் எங்களை வித்தியாசமாக பார்த்துக்கொண்டிருந்தனர் .பத்துவருடத்துக்கு முன் நானும் என்னை நெறிபடுத்துவரும் மேற்கொண்ட அந்த பயணம் இப்போது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பத்து வருடத்தில் பெரிய மாற்றங்கள் எதுவும் ஏற்பட்டு விடவில்லை . சிலரிடம் செல்போன்கள் இருப்பதை தவிர. பேருந்தும் கூட அதே பேருந்தாக இருக்கலாம் என்றே எண்ண தோன்றியது. பயணித்தவர்களும் அவர்களாகவே இருக்கவும் வாய்ப்பிருக்கிறது. பத்து வருடங்கள் ஒரு மனித வாழ்வில் எப்படியெல்லாம் மாறுதல்கள் செய்கிறது . அந்த பெண்கள் இருந்த அதே வீட்டில்தான் இப்பவும் இருக்கிறார்களா . தெரியவில்லை . அன்று போலவே  புறப்பட்டு சில மணிநேரத்திலெயே மழை பிடிக்க துவங்கியதால் அனைவரும் ஜன்னலை அடைக்க வேண்டியதாகிப்போனது .

வண்டி சட்டென பாதியில் , நின்றது மழை அதிகம் இருப்பதால் இருட்டில் சாலைகள் அறுப்பட்டுக்டக்க வாய்ப்புள்ளதாகவும் மழை முழுவதும் முடிந்தபின் புறப்படும் என கண்டகடர் குண்டை தூக்கி போட நானும் சட்ட்ரஜியும் விக்கித்து போனொம். நெரம் கூடியதே தவிர மழை நின்ற பாடில்லை. எங்கள் வாகனத்துகுமுன்னும் பின்னுமாக ம்லும்சில வாகனங்கள் நிற்கதுவங்கின .சற்றுநேரத்தில் அசதி மிகுதியால் சட்டரஜி கண்ணை மூட நானும் உறங்கிப்போனேன் .

சட்டென கண்விழித்தபோது பேருந்து நகரத்துவங்கியிருந்தது அவசரமாக ஷ்ட்ட்ரை துக்கி பார்க்க கிடத்ட்ட மழை  முழுவதுமாக நின்று விடிய ஆரம்பித்துவிட்டிருந்தது .

குளிரில் நடுங்கிக்கொண்டேஇருவரும் விடியற்காலையில் அந்த மாசினிகுடி என்னும் ஊரில் இறங்கினோம் சிறிய ஊர். முன்பு வந்ததை விட இப்போது கடைகள் அதிகமாகிவிட்டதாக தெரிந்தது. உண்மையில் அந்த இடத்தை பகலில் பார்க்க விருப்பமில்லை . மீண்டும் அதே பொன்ற இருட்டு அதெநட்சத்திரம் அந்த சூழல் இதற்காகத்தன் ஏங்கினேன்
என்ன செய்வது காலம் எங்களை காலையில் கொண்டுவந்து போட்டுவிட்டதஒரே ஒரு டிக்கடை மட்டும் திறந்திருந்தது.
டீசப்பிட்ட்டோம் குளிரில் நடுங்கொண்டெ டீ பொட்டுதந்தார்.
அவரிடம் நான் தேடிவந்த கொட்ரஸுக்கு செல்ல வழிகெட்டபோது  அவர் சொன்ன தகவல் அதிர்ச்சியாக இருந்தது .
அவர்காண்பித்த திசையில் சென்று மேடேறி சென்றோம் சட்டர்ஜிக்கு கைகொடுத்து தூக்கினேன். நிலப்பகுதியில் உயர்ந்த மரங்களினூடே அந்த பனி சூழ்ந்த பிரதேசத்தில் இருவரும் வந்து நின்றோம் சட்ட்ரஜி சோம்பல் முறித்தார்  நான் அதிர்ச்சியில் உறைந்து நின்றேன் அந்த கட்டிடங்கள் முழுவதுமாக இடிக்கப்பட்டு வெட்டவெளியாக காண்ப்பட்டது தொலைவில் மலை அதன் பள்ளதாக்கு மேலே விரிந்த ஆகாயம் ஆகியவை காணப்பட்டது

வீடுகள் இடிக்கப்ப்ட்ட இடத்தில் ஐந்து நட்சத்திர விடுதி வரப்போவதற்கான அறிவிப்பு பலகை அங்கே இருந்தது .பெரும் துக்கம் என்னை சூழ்ந்தது. அந்தவீடு அப்பெண்கள் எல்லாம் என் நினைவுக்குள் முட்டி மோதின . என்னை அண்ணா என அழைக்கட்டுமா எனக்கேட்ட அந்த சிறுபெண்ணின் முகம் நினைவுக்குள் வந்து போனது.
அப்படியே புல் தரையில் கவிழ்ந்து படுத்தேன். காரணமில்லாமல் உடல் குலுங்குவதை சட்ட்ரஜி பார்த்து வியந்திருக்க கூடும் . .எங்களது அபத்த பயணம் இறுதியில்  பெரும் எதார்த்ததுள் வந்து சிக்கிக்கொண்டதுதான் நான் சற்றும் எதிர்பாராத துக்க்கரமான முடிவு. சட்டர்ஜி என்னை எழுப்பினார்
எழுந்து உடலிலிருந்த ஈரத்தையும் மண்ணையும் உதறினேன் . இயற்கை அபத்தத்தை வென்று விட்ட்தாக சட்டர்ஜி கைகளை உயர்த்தி உரக்க கூவினார் .
அவருக்கு என் கதை எதுவும்தெரியாது. ஆனாலும் அவர் மகிழ்ச்சி என்மனதை மெல்ல மாற்றியது


          


                                                    


No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...