September 11, 2011

”கனவுலக கட்டமைவாளன்”- பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா -நவீன யுகம்
பாகம் -2


உல்கசினிமா வரலாறு


அமெரிக்க சினிமாவுக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்திய இயக்குனர் என்பதுதான் பிரான்சிஸ் போர்ட் கொப்பாலா எனும் பெயருக்கான சரியான பதவுரையாக இருக்கமுடியும். உலகம் முழுக்க உள்ள திரை இயக்குனர்களையும் பாதித்த இரண்டு இயக்குனர்கள் ஒருவர் அகிராகுரசெவா என்றால் இன்னொருவர் நிச்சயம் கொப்பாலாவாக்த்தன் இருக்க முடியும்.
அதிலும் ஆர்ட் பிலிம் எனப்படும் கலைப்பட இயக்குனர்கள் மட்டும் அல்லாமல் வணீக இயக்குனர்களையும் பாதித்த ஒரே இயக்குனர் கொப்பல்லாதான். உலக அளவில் வணிக சினிமாவையும் கலைசினிமாவையும் இணைத்து பேர்லல் சினிமா எனும் புதுவகை சினிமாக்களின் தந்தை என்றும் கூறலாம்.

கொப்பாலா என்பது திரை மொழியின் ஒரு கவித்துவ ஆளுமை. 1970 களில் அமெரிக்க சினிமாவில் புதிய அலை வீசியது. George Lucas, Martin Scorsese, Robert Altman, Woody Allen,William Friedkin, Peter Bogdanovich, Steven Spielberg மற்றும் Brian De Palma என பல புதிய இயக்குனர்கள் மடை திறந்த வெள்ளமென வந்தனர். அந்த அலையின் முன்னோடி மற்றும் முதன்மை இயக்குனர் என்ற பெருமையும் கொப்பல்லாவுக்கு உண்டு.

இத்தாலியை பூர்வீகமாககொண்ட இசைக்குடும்பத்தின் மூன்று குழந்தைகளில் நடுவனாக பிறந்த கொப்பல்லா பிறந்தது நியூ யார்க்கின் ஹென்றி போர்ட் மருத்துவ மனையில். பையனுக்கு என்ன பெயர் வைக்கலாம் என அவரது பெற்றோர் மண்டையை போட்டு பெரிதாக குழப்பிக்கொள்ளாமல் பையன் பிறந்த மருத்துவ மனையின் பெயரில் இருந்த ”போர்ட்” டுடன் குடும்ப பெயரையும் சேர்த்து பிரான்சிஸ் போர்ட் கொப்பலா என நீளபெயரை சூட்டிவிட்டார்கள். சிறு வயதில் தாக்கிய இளம்பிள்ளை வாதம் காரணமாக படிப்பில் சோம்பிக்கொண்டிருந்த கொப்பல்லாவின் கையில் ஒரு நாள் கிடைத்தது ஒரு புத்தகம். டென்னிஸ் விலியம்ஸ் எழுதிய ”ஸ்ட்ரீட் கார் நேம்டு டிசையர்” எனும் நாடகம் அது. அது உண்டாக்கிய தாக்கத்தில் நாடகத்தின் பக்கம் கவனம் தூண்டப்பட்ட கொப்பல்லா பின் வெகு சீக்கிரமே சினிமாபக்கம் திரும்பினார் .அதற்கு காரணமாக இருந்தது ஐஸன்ஸ்டைனின் அக்டோபர் திரைப்ப்டம் . அதன் படத்தொகுப்பு முறையால் ஈர்க்கப்பட்டு வீட்டிலேயே 8 எம் எம் காமராவில் பல குட்டி பட்ங்களை எடுத்து அவரே எடிட் செய்து அறிவை வளர்த்துகொண்டார். கல்லூரி படிப்புக்கு அவர் தயாரான போது அவரது அப்பா பொறியியல் கல்லூரி நோக்கி கை நீட்ட இவரது கால்களோ சினிமா கல்லூரி பக்கம் திரும்பியது.அமெரிக்கவின் புகழ்பெற்ற UCLA பல்கலைகழகத்தில் திரைப்பட பிரிவில் மாணவராக சேர்ந்து பயின்று வெளிவந்த கையுடன் முதல்படமாக 1962ல் Tonight for Sure எனும் படத்தை இயக்கினார். உண்மையில் அவர் எடுக்க நினைத்ததோ ஒரு கலைப்ப்டம் ஆனால் வெளியான போது அது கிட்டத்தட்ட நீலபடமாக அங்கீகாரம் பெற்று அவருக்கு ஒரு அவபெயரை வாங்கிதந்தது. அதேவேகத்தில் The Bellboy and the Playgirls. எனும் பெயரில் அடுத்த படம் எடுக்க அதுவும் ம்ண்ணை கவ்விக்கொண்டது. இனி படம் எடுப்பதை விட்டு யாரிடமாவது உருப்படியாக அசிஸ்டண்டாய் சேர்ந்து தொழிலைகற்பதுதான் உத்தமம் எனும் முடிவோடு இயக்குனர் ரோஜர் கார்மன் என்பவரிடம் உத்வியாளராக சேர்ந்தார்.

இந்த ரோஜர் கர்மன் அப்படி ஒன்றும் பெரிய இயக்குனர் இல்லை ஆனால் பிற்காலத்தில் பெரிய இயக்குனர்களாக அறியப்பட்ட அனைவரும் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் .டைட்டானிக் எடுத்த கேம்ஸ் காமரூன் , சைலன்ஸ் ஆப் தி லாம்ப் எடுத்த ஜொனதன் டம்மி ,ரேகிங் பல் , டிபார்டட் ஆகியபடங்களை எடுத்த மார்டின் ஸ்கார்சி.. தி ப்யூட்டிபுல் மைண்ட் மற்றும் தி டாவின்சி கோட் ஆகிய படங்களை இயக்கிய ரான் ஹாவர்ட் பொன்றவர்கள் இவரிடம் உதவியாளராக இருந்தவர்கள் என்பது மட்டுமெ இந்த ரோஜர் கார்மனுக்கு ஒரு சரித்திர புகழை உண்டாக்கி தந்துள்ளது .
அவருடன் Tower of London (1962) உள்ளிட்ட சில படங்களில் பணி புரிந்தபின் கொப்பல்லாவுக்கு மீண்டும் இயக்குனர் ஆசை துளிர் விட்டது . இது இரண்டாவது ஆட்டம் . முதல் முறை கண்ட தோல்விகளின் வலி இன்னமும் அவரது முதுகை அழுத்தியது. 1966 ம் ஆண்டு வெளியான You're a Big Boy Now படம் அவர் நினைத்த வெற்றியை அவருக்கு உருவாக்கிதந்தது. கணக்குபடி பார்த்தால் அது அவருக்கு ஐந்தாவது படம். அவர் எதிர்பார்புக்கு இணங்க பல விழாக்களில் இப்படம் பங்கேற்று விருது கமிட்டிகளுக்கு இப்படம் பரிந்துரைக்கப்பட்டது.

அத்ன்பிறகு அவர் இயக்கத்தில் வெளியான Finian's Rainbow, The Rain People இரண்டு படங்களும் அவருக்கு சிறந்த இயக்குனர் எனும் அடையாளத்தை உருவாக்கி தந்தன.இந்த சூழலில் அவர் த்ன்னை போலவெ புதுமைகளிலும் புதிய தொழில் நுட்பங்களிலும் ஆர்வம் கொண்ட ஒரு துறுதுறு இளைஞனை சந்தித்தார். அவர் பெயர் ஜார்ஜ் லூக்காஸ். பின்னாளில் ஸ்டார் வார்ஸ் எனும் அமெரிக்க சினிமாவின் ஆகசிறந்த அறிவியல் புனைவை உருவாக்கிய

மேதை. அவரது கற்பனைத்திறத்தால் வசிகரம் கொண்ட கொப்பல்லா நண்பன் ஜார்ஜ் லூக்காஸின் முதல் படத்துக்கு அவரே தயாரிப்பு நிர்வாகியாக பணிபுரிந்தார்.

இந்த சந்தர்ப்பத்தில்தான் பாரமவுண்ட் கம்பெனியிலிருந்து ஒரு அழைப்பு .கம்பெனி அவரை காட்பாதர் படத்துக்கு இயக்குனராக நியமித்தது

அதன் பிறகு புகழ் சூரியன் கொப்பலாவின் வீடுதேடி வந்து ஹலோ சொல்ல துவங்கியது. காட்பாதர் உலக சினிமா ரசிகர்களை புருவம் நெறிக்கசெய்தது .
காட்பாதர் இரண்டாம் பாகம் 1974ல் வெளியான பிறகு உலக சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது அதே ஆண்டு வெளியான கான்வர்சேஷன் மற்றும் ஐந்துவருட த்யாரிப்பில் வியட்நாம் போரை மையமாக வைத்து உருவாக்கிய அவரது அபோகலிப்ஸ் நவ் 1979 போன்ற படங்கள் இன்றும் அவரது பெயரை நிலைத்திருக்க செய்துள்ளது .

கொப்பல்லோவின் தனித்திறமை அவரது சினிமாவின் அழகியல்.கத்தாலிக்க கிறித்துவத்தின் ஆன்மீகத்தை உள்ளடக்கிய அழகியல். அந்த் உயர்ந்தபட்ச அழகியல்த்ன்மை தன் அவரது வன்முறை படங்களையும் கூட கலைபடங்களாக மாற்றுகிறது.காட்பாதர் படத்தில் டான் பனூசியை இள வயது டான் கர்லோனாக நடிக்கும் ராபர்ட் டி நீரோ சுட்டுக்கொள்ளும் காட்சியின் போது உடன் இணையாக ஏசுவின் ஊர்வல காட்சியும் இடைவெட்டாக காண்பிக்க படுகிறது . பின்னணியில் ஆன்மிக இசையுடன் ஒரு நியாயமான கொலை நிகழ்த்தபடும் போது உண்டாகும் அழகியல் தன்மை சமூகத்தின் இருண்ட த்ன்மைகளுக்கு பின்னால் அழகியலை ஏற்றி அதற்கான நியாயத்தை நம் ஆழ் மனதில் கற்பிப்பதாக உள்ளது. இப்பத்தின் ஒளிப்பதிவு அதுவரையிலான சினிமா ஒளீப்பதிவு முறைமகளை த்லைகீழாக மாற்றியது.

கதாபத்திரங்களின் முகத்துக்கு வெளிச்சம் அதிகம் கூட்டும் விதமாக ஒளியமைப்புகளை செய்து வந்த விதம் மாற்றப்பட்டது. கார்டன் வில்லிஸ் அதிக லைட்டுகளை உபயோகப்படுத்தி அவற்றை பேக்லைட் எனப்படும் உத்தியில் பாத்திரங்களின் த்லை புருவம் பின்புலத்தில் இருக்கும் மேசை நாற்காலி திரைச்சீலை ஆகியவ்ற்றின் மீது ஒளீ விழச்செய்து புதிய தன்மையை உருவாக்கினார்.

4 comments:

Rathnavel said...

நல்ல பதிவு.

கார்த்தி கேயனி said...

நல்ல தகவல்

மதுரை அழகு said...

இவருடைய ஒளிப்பதிவைத்தான் நம் ஆட்கள் காப்ப்ய்யடிக்கிறார்களா...! சே...! இந்த நேரத்தில் நாயகன் படம் வேற ஞாபகத்திற்க்கு வருது.

ஸ்ரிகரின் வலைப்பதிவு said...

நல்ல தகவல்கள் நண்பரே, நன்றி .....

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...