May 3, 2011

நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
- காலபைரவன்


நூல்: மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
ஆசிரியர்: அஜயன் பாலா


போதாமைகளினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நமது தமிழ்ச் சூழ்லில் எப்போதாவது,யார் மூலமேனும் கலை இலக்கியம் குறித்த வெளிச்சத்தின் திறப்பைக் காலம் தொடர்ந்து நிகழ்த்தியபடியே இருக்கிறது.கலை இலக்கியம் குறித்த பார்வை உலகம் முழுக்க தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தாலும்கூட,அது எந்த வகையிலும் நமது பொது புத்தி சார்ந்த உலகை எதுவுமே செய்து விடுவதில்லை.அதற்காக நமது ஊடகக்காரர்கள் ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுத்து வைக்க விரும்புவதில்லை.

கலை வடிவங்களில் ஆழ்ந்து புரிதல் இல்லாதவர்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் படைப்பாக்கங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய நிர்பந்தம் வேறு. திரைப்படம் ஓர் ஊடகமாக வலுப்பெற்று ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட பின்பும், நாம் அடையாளம் காணக்கூடிய மொன்னையான சூழலில்தான் ”மார்லன் பிராண்டோ”வின் தன் சரிதக் கட்டுரைகள் அஜயன் பாலாவின் பெருமுயற்சியால் தமிழ் வடிவ்ம் பெற்று வெளிவந்திருக்கிறது.

அலைகளையே கடல்கள் என்று நம்பும் நமது மனம்,நடிக்கிற எல்லோரும் நடிகர்கள் தான் என்று கற்பிதம் செய்து கொள்கிறது.அவ்வாறான சிந்தனையில் உள்ள குறைபாட்டையும் நமது பார்வையின் தெளிவின்மையையும் பிராண்டோவின் கட்டுரைகள் கேலி செய்கின்றன.ஒரு நடிகன் என்ற அளவிலேயே நின்றுவிட்ட பிராண்டோவின் பிம்பம்,இந்நூலின் மூலம் தகர்த்தெறியப்பட்டு சமூகம் குறித்தா ஆழ்ந்த அக்கறையும் புரிதலுங்கொண்ட ஒரு கலைஞன் என்ற பிம்பத்தை தமிழ்ச் சூழலில் கட்டமைக்கிறது.

தேடலை முன்வைத்து தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பவனே கலைஞன்.ஒழுக்கவாதிகள் கலாச்சாரத்தின் பேரால் கட்டமைக்கும் அடக்குமுறைகளை தீவிரத்துடன் எதிர்த்து இயங்க வேண்டிய கூடுதலான் பொறுப்பும் கலைஞனுக்கு இருக்கிறது. அவ்வாறு வாழ நேரிடும் ஒரு கலைஞன் சமூகத்தால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறான் என்பதையும் இப்படித்தான் வாயிலாக உணரமுடிகிறது.தன்சரிதக்கட்டுரைகள் அதீத கவனத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டு தொகுக்கப்படும் இக்காலகட்டத்தில்,பிராண்டோவின் எழுத்து வெளிப்படையான நிகழ்வுகள் மூலம் தமிழ் எழுத்துப் பரப்பில் கவத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்படுள்ளது குறிப்பிடபட வேண்டிய ஒன்று.
இந்நூலில் வெற்றியென கருதுவது,திரைத்துறையினர் மட்டுமல்லாது,அனைவராலும் வாசிக்க முடிகிற அளவில், புத்தகம் பல தளங்களில் நின்று செயல்படுவதைத்தான் “நான் மரபுகளை மீறுபவன்;அது என் தனிப்பட்டகுணம்” என்று கூறும் பிராண்டோவால்,உண்மையான அன்பும், நல்லுணர்வும், பரிவும்,நற்காரியங்களும் இவ்வுலகில் சமூக அநீதிக்கும் வன்கொலைகளுக்கும் ஏதேச்சாதிகாரங்களுக்கும் இன்ன பிற அழிவு சக்திகளுக்கும் எதிராகச் செயல்படும் என நம்புகிறேன் என்று கூறமுடிக்கிறது. மேலும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுமையைத் தாண்டி அவ்வாளுமையோடு தொடர்புடைய பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்கள்,கலகங்கள் ஆகியவற்றை வாசிக்க நேர்கையில் ,நமது நடிகர்களின் இயங்குதளம் பற்றிக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இரண்டு மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றவுடனேயே தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று வலம் வரும் நம் தமிழ் மெகா நடிகர்களை ஒப்பிடும்போது பிராண்டோவின் செயல்பாடும் அயராத உழைப்பும் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. ஏசுவே எதற்க்காக நான் இந்த நகரத்திற்கு வரவேண்டும் என்று தன் பாராட்டு விழாவில் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பிராண்டோவால் கேட்க முடிகிறது.”எது அவர்களை இப்படி ஒரு விபரீதமான மனநிலைக்குத் தள்ளுகிறது? ,என்று அவர்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக யோசிக்கவும் முடிகிறது. ஐந்தடி தூரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கை பின்தொடர முடிகிறது. பூர்வகுடி இந்தியர்களுக்காக தனக்களிக்கப்பட்ட விருதை நிராகரிக்க முடிக்கிறது. இந்தியாவின் சாதியமைப்புகள்,ஏழ்மை நிலை குறித்து எடுத்த விவரணப் படத்தை கடைசி வரை போராடியும் அவாரால் வெளியிட முடியாமல் போகிறது.

ஒரு வேளை நான் ஒரு கறுப்பினத்தவனாக பிறந்திருந்தால் என நினைத்துப் பார்க்கிறேன்.என்னை ஒருவன் விலைக்கு வாங்கியிருக்க முடியும் என்ற எண்ணத்தையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கறுப்பினத்தவர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தவும் முடிகிறது.பத்திரிக்கை சுதந்திரம்,தனிமனித சுதந்திரத்தை பாழ்படுத்தாத வரையில் போற்றத்தக்கதே என்று திட்டவட்டமாக நம்பும் பிராண்டோ,டைம் இங்க் பத்திரிக்கையை தனியாளாய் நின்று பணியவைக்கிறார்.

நடிகர் என்ற வகையில் அவர் ஒரு சிறந்த உழைப்பாளி.உணர்ச்சிகளை வரவழைக்க உயர்ந்த இசையையும், தரமான கவிதைகளையும் நேசிக்கின்ற ஒரு நடிகனாகவும்,நடிப்பு சிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் ஒரு நடிகனாக இயங்குகிறார்.நடிப்பின் கோட்பாடுகளை உள்வாங்கியதோடு நின்று விடாமல் அதைப் பரிசீலிக்கவும் செய்கிறார்.ஆதனால்தான் ஸ்டெல்லா ஆட்லரையும் நுட்பமாகப் பின் தொடர முடிக்கிறது.அமெரிக்கா,பிரிட்டன் நாடக ஆக்கங்களைப் பற்றியும்,அவற்றின் போக்கில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் தனித்தன்மைகள் குறித்தும் பேசமுடிக்கிறது.இசை,புத்தகங்கள் மீதான இவரின் ஆழ்ந்த ஈடுபாடு இவருக்கு வேறொரு ரூபத்தைக் கொடுக்கின்றன.

சுயசரிதை என்ற வகையில் இயங்கும் ஒரு நூலின் பிராதான அம்சம் அதன் வெளிப்படைத் தன்மையே.அவ்வகையில் பிராண்டோ ஒளிவும் மறைவுமின்றி தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை வாசிக்கும்போது உணரமுடிக்கிறது.காதலிகள் மனைவிகள்,அதிகாரப்பூர்வமற்ற பிள்ளைகள்,தான் நேசித்த,தன்னை நேசித்த பெண்கள் பற்றிய விவரங்களை எல்லாம் எந்தவித பூடகமுமின்றி அவரால் எழுதமுடிக்கிறது. சாப்ளினை எப்படி மேதையாக உணருகிறாரோ அதைப்போன்று அவரை விமர்சிக்கவும் செய்கிறார்.சாப்ளின் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:சாப்ளின் ஒரு மேதை என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை.என்றாலும்,மற்ற எல்லோரையும்போல எல்லா கீழ்த்தரமான குணங்களையும் கொண்ட மிகச்சாதாரண மனிதர்களுள் ஒருவர்தான் அவர்.தன்னைப் பற்றிய சுயதெளிவும்,சமூகம் குறித்த ஒரு விமர்சனப் பார்வையும் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு ஒருவரை மிகத் திட்டவட்டமாக மதிப்பீடு செய்யமுடியும் எனத் தோன்றுகிறது.

”என் வாழ்க்கையின் அடுத்த புள்ளி என்ன என்பது குறித்து எனக்கும் எதுவுமே தெரியாது.வெற்றி என்பது என் வாழ்வில் அசந்தர்ப்பமாக நேர்ந்தது” எனப் பேசும் பிராண்டோ,நான் மட்டும் சரிவர நேசிக்கப்பட்டிருந்தால் என் வாழ்க்கைப் பாதை வேறெப்படியாகவோ திசை திரும்பியிருக்ககூடும்”என்று ஆதங்கப்படவும் செய்கிறார்.முடிவின்மையை நோக்கி தொடர்ந்து பயணிக்க ஆகப்பெரிய கலைஞர்களால்தான் முடியும் என்பதை நூலின் வாயிலாக அறிய முடிகிறது.

ஒர் அசாத்திய உழைப்பை அஜயன்பாலா, தமிழ்ப்படுத்து வதற்காகச் செலுத்தியிருக்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உணரமுடிக்கிறது. அதோடு மட்டுமின்றி நெருடல்களற்ற வாசிப்பிற்காக அவர் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதையும் அறியமுடிகிறது.

- கால பைரவன்.. புதிய்பார்வை- நூல் தலைப்பு: மார்லன் பிராண்டோ தன் சரிதம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு பொள்ளச்சி
- தொலைபேசி: +91 9865005084
- +914259226012
-

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...