September 5, 2010

எனது வணக்கத்துக்குரிய ஆசான்இன்று ஆசிரியர்தினம். சின்ன வயசில் பள்ளிக்கூட காலங்களில் இது மற்றுமொரு விடுமுறை நாள் அவ்வளவே ஆனால் இன்று இந்ததினத்தில் என்னை வழிநடத்திய என் வளர்ச்சிக்கு முக்கிய பங்களித்த ஆசிரியர்களை நினைவு கூர்ந்த போது இந்த நாளின் விசேஷத்தை உணர முடிந்தது.
.


பில்லா இந்த பேரை கேட்டதுமே பலருக்கும் இரண்டு சூப்பர் ஸ்டார்களின் ஞாபகம் வரும். ஆனால் எனக்கோ என் பள்ளிக்கூட வாத்தியார் பால்ராஜ் மாஸ்டர்தான் நினைவுக்குவருவார். காரணம் நான் சந்தித்த முதல் இண்டலெக்சுவல் அவர்தான். திருக்கழுக்குன்றத்தில் புன்னமை தியாகராச .வன்னியர்சங்க நடுநிலைப்பள்ளி ..இதுதான் என் பால்யங்களை தொகுத்த இடம். வீட்டிலிருந்து பள்ளிக்கு இரண்டுகி.மீ நடக்க வேண்டும் அந்த நடை எங்களுக்கு போராடிக்காது காரணம் வழியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் சினிமா போஸ்டர்கள்

எனது பள்ளிகாலங்களில் மிகுந்த பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கிய திரைப்படம் பில்லா. ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்த அப்படத்தின் விளம்பரம் . தினத்தந்தியில் அப்போதெல்லாம் முழு பக்கத்துக்கு படத்தின் விளம்பரம் வரும். பள்ளி செல்லும் வழியில் ஒரூ முடிதிருத்தும் கடை. அக்கடையில் பள்ளிவிட்டு வரும் வழியில் தினமும் குறைந்தது அரை மணிநேரமாவது அந்த நைந்த பக்கங்களை புரட்டிக்கொண்டிருப்போம். கன்னித்தீவு மற்றும் கிரிக்கட் செய்திகளும் எங்கள் ஆர்வத்துக்கு உபரி காரணம் என்றாலும் பக்கம் பக்கமாக வரும் சினிமா விளம்பரங்கள்தான் எங்களது கனவுகளை தீர்மானித்தன. ஒரு முழு பக்க சினிமா விளம்பரத்தை பார்க்கிற போது உள்ளுக்குள் பெரும் மகிழ்ச்சி கரைபுரளும் இதற்கெல்லாம் காரணமே இல்லை. அதிலும் ரஜினி படங்கள் என்றால் கேட்கவே வேண்டாம். இப்படித்தான் பில்லா திரைப்படம் எனக்குள் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது. நானும் படம் எப்படா நம்ம ஊருக்கு வரும் எப்ப அதை பார்க்க போகிறோம் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்துகிடந்தேன். இச்சமயத்தில் எங்களுக்கு மிகவும் பிடித்த ஆசிரியர் பால்ராஜ் அந்த படத்தை யாரும் பார்கக கூடாது என பள்ளியில் கட்டளை இட்டார். காரணம் அப்போது பில்லா ரங்கா என்ற இரு கொலைகாரார்கள் ஒரு சிறுவனை கடத்தி கொடூரமாக கொன்றிருந்தனர். இது அக்காலத்தில் பெரும் பரபரப்பான சேதியாக இருந்தது. வியாபராத்துக்காக சினிமா தயாரிப்பாளர்கள் கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் இந்த பெயரை பயன் படுத்துகிறார்கள் . அந்த குழந்தையின் தாய்தந்தை எவ்வளவு வேத்னைப்படுவார்கள். அதனால் இந்த படத்தை யாரும் பார்க்க கூடாது என வேண்டுக்ள் விடுத்தார் அன்றைய சிறுவயது மூளைக்கு அது எட்டவில்லை. ஆனால் அவர் சொன்னது மட்டும் ஞாபகத்தில் ஒட்டிக்கொண்டது. காரணம் அது பில்லா பற்றியதகவலாக இருந்ததாலோ என்னவோ...

இப்போது இரண்டாவதுமுறையாக பில்லா வந்தபோது அப் பெயருக்கு இருந்த மதிப்பும் மக்களின் அங்கீகாரமும் அப்பெயர்காரணமே தெரியாத தலைமுறையினாரிடம் காணப்பட்ட கொண்டாட்டத்தையும் பார்த்தவுடன் பால்ராஜ் சார் சொன்னது ஞாபகத்துக்கு வந்தது. இந்த பெயர் ப்ரச்னையை இன்று வரை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை.என்னை முதன் முதலாக நடிகனாக மேடையேற்றியதும் அந்த பாலராஜ் ஆசிரியர்தான். என்னை மட்டுமல்ல என்னை போல திறமையான மாண்வர்களை பார்த்தும் அவராகவே தீவிரமாய் த்ன் ஈடுபாட்டை காண்பித்து அவர்களுக்கான வழி சமைத்து தருவார் .அதேபோல பள்ளி விவகாரம்தாண்டி எங்கு கிரிக்கட் மேட்சுகள் நடந்தாலும் ஓரமாய் சைக்கிளை நிறுத்திவிட்டு அமர்ந்து வேடிக்கை பார்ப்பார். யாராவது போங்கு ஆட்டம் ஆடினால் உடனே அம்பயராக அங்கேயே இருந்தபடி விரலால் தீர்ப்பை சொலவார். பால்ராஜ் மாஸ்டருக்குமேல் முறையீடுகள் இல்லை.

வகுப்பில் நான் வழக்கமாக மூன்றாம் ரேங்க். முதல் ரேங்கில் கண்ணன். ( அவன் தங்கை சங்கரி பேரழகி. அந்த வயதிலேயே அவளுக்கு நான் கலர் மிட்டாய் வாங்கி தருவது போல கனவுகள் எல்லாம் வந்ததுண்டு ) எனும் பிராமண பையன் இரண்டாம் ரேங்கில் குமரகுருபரன். கண்ணன் படிப்பில்தான் முதல் ரேங்கே தவிர குணத்தில் அவன் கடைசி ரேங்க். யாரும் அவனை தொட்டுவிடாமல் பார்த்துக்கொள்வான். கொஞ்சம் ஏழையான அழுக்கு உடை பசங்களை கண்டால் அருவருப்பான பூச்சியை கண்டதுபோல முகத்தை சுளிப்பான். இதனாலேயே எனக்கு அவனை பிடிக்காது . இருவருமே பேசிக்கொள்ளமாட்டோம். இதர வகுப்பு நண்பர்கள் உணவு இடைவேளைகளில் இருவரையும் பிடித்து தள்ளி பேச வைக்க கடும் முயற்சி செய்தனர் .ஆனாலும் அவனை எனக்கு கடைசி வரை பிடிக்கவில்லை ... அதேசமயம் பால்ராஜ் மாஸ்டர் கண்ணனிடம் மட்டும் சற்று கூடுதலாக அக்கறைகாட்டுவார். இத்தனைக்கும் அவர் கிறித்துவர்.ஆனாலும் கண்ணன் முதல்மார்க் வாங்குகிற காரணத்தால் அவனிடம் கூடுதல் அக்கறை. சட்டென எதையும் புரிந்துகொள்கிற அவனது அறிவுத்திறனுக்கு இது போன்ற போட்டிகள் சரியான வடிகால என நினைத்தார். பேச்சு போட்டி கட்டுரை போட்டி என்றால் அவனுக்குதான் எழுதிகொடுப்பார். அவனும் அதை பேசி முதல் பரிசு வாங்கிவருவான். ஒருநாள் ஒரு போட்டிக்கு மாஸ்டர் எழுதி கொடுத்தும் அவன் போட்டியில் கலந்துகொள்ளாமல் வீட்டிலேயே இருந்துவிட்டான் மறுநாள் அவன் பள்ளி வந்ததும் பால்ராஜ் மாஸ்டர் கோபத்தில் அவனை கடுமையாக திட்டிதீர்த்தார். இனி உனக்காக இந்த பால்ராஜ் எதற்கும் எழுதிதரமாட்டான் என கோபத்துடன் கூறினார்.

ஆனாலும் அடுத்த சில நாட்களில் அனைத்து பள்ளிகள் சார்பாக பேச்சு போட்டிக்கு அழைப்பு வந்த போது பால்ராஜ் மாஸ்டர் அவனையே அழைத்து போட்டிக்கு எழுதிக்கொடுத்து அனுப்பிவைத்தார். அவர் அன்று அந்த காரியத்தை செய்த போது எங்களுக்குள் கடும் புகைச்சல் இருந்தது. நான் கூட பால்ராஜ் மாஸ்ட்ரை வெறுத்தேன்.ஆனால் அவர் ஒரு ஆசிரியராக எந்த பாரபட்சமும் இலாமல். துவேஷம் இல்லாமல் நடந்து கொண்ட விதம் இன்றும் அவர் பிம்பம் என் மனதில் நிழலாட காரணமாக இருக்கிறது. அவர் குறித்து கட்டுரை எழுதவும் அதுவே காரணமாக இருக்கிறது.

3 comments:

Vel Kannan said...

நல்லதோர் நினைவு பகிர்வு, என் பால்யகாலத்தையும் நினைவுப்படுத்துகிறது. அதே சமயத்தில் உங்களின் கண்ணன் போன்ற யாரையும் தொடாத என் காலத்து(இப்பொழுதும் இருப்பார்களோ) நண்பர்களையும், அவர்கள் அந்த மாதிரி நடந்தற்கு காரணம் தேடியும் கேள்வி எழுகிறது அஜயன்.

இலக்கிய சாளரம் said...

நன்றி வேல்... அது அவர்களின் குற்றமல்ல அவர்களது குடும்பத்தினரின் சமூகத்தின் குற்றம். இதை எழுதுவதற்கு முன் இப்படி எழுதலாமா என்று கூட யோசிக்க தோணியது..

thiru said...

vannakam

valluvan

sudesamithiran cousine

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...