January 7, 2010

கூட்ஸ் வண்டியின்மஞ்சளாய் விரிந்து கிடக்கும் கோதுமை வயல்களின் நடுவே அலாதியாக ஊளையிட்டபடி ஒரு கவிதைபோல் ஊர்ந்து செல்லும் ரயில் பெட்டிகளின் நிழ்ல்களோடு கடைசிப் பெட்டியில் ஊர்ந்து செல்லும் தன் நிழலையும் கூர்ந்து கவனித்தவாறு பயணிக்கிறான் இவன். கடவுளால் தனக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கையின் எல்லா கனிகளும் மிக மோசமானதாகவே இருப்பதாக எண்ணம் கொண்டவன்.சேகர் எஞ்சினை நோக்கி எட்டிப்பார்த்தான்.ஒரு வளைவில்,உடல் வளைந்து திரும்பிக் கொண்டிருந்த எஞ்சினை அவனால் பார்க்க முடியவில்லை.

அவன் இப்படித்தான் ஊளைச் சத்தம் கேட்கும் ஒவ்வொரு முறையும் ரயிலின் முகமான எஞ்சினைப் பார்த்துவிட வேண்டி ஆவலுடன் எட்டிப் பார்ப்பான். ஆனால் ஒரு முறையும் அவனால் எஞ்சினை முழுதாகப் பார்க்க முடிவதில்லை.ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான்.ஆனாலூம் அடுத்தமுறை அந்த ஊளை சத்தம் எப்பொழது கேட்கும் என மனதையும் செவியையும் தயார்படுத்தி ஆவலுடன் காத்திருப்பான்.


யோசித்துப் பார்த்தால் ஒருவித பைத்தியக்காரத்தனம் போல் தெரிந்தாலும் அவனுக்கு அது பிடித்திருந்தது . அந்த நீளமான எண்ணிக்கையில் அதிகமான பெட்டிகளை கொண்ட சரக்கு ரயிலில் தனக்கும் இனொரு உயிருக்குமான ஒரே தொடர்பே அந்த ஊளைச் சத்தம்தான் என்று இருக்கும்போது தன் எதிர்பார்ப்பு நியாயமானதாகவே அவனுக்குப் பட்டது.


ஒருவேளை,உலகில் கூட்ஸ் வண்டிகளின் கடைசிப் பெட்டியில் தன்னைபோல் கார்டாகப் பணிபுரியும் அனைவருமே இப்படித்தான் எஞ்சின் போடும் ஊளைச் சத்ததின்மேல் அலாதிப் பிரியம் கொண்டவர்களாக இருக்கக்கூடும் என நினனத்துக் கொண்டான்.

ரயில் முன்னைக் காட்டிலும் இப்பொழுது இன்னும் சற்று வேகத்துடன் ஒடத் துவங்கியது. சேகர் சற்று நிமிர்ந்து அந்த கடைசி பொட்டியின் வடிவத்தைப் பார்த்தான்.சிறுவயத்தில் ரஷ்ய நாவல்களைப் படிக்கும்போது கற்பனை வரைந்த சிறு வீடுகளைப்போல் வடிவம் கொண்டிருந்த அந்தப் பெட்டியின் அமைப்பு இப்பவும் அவனுள் விநோதமான ரசனைக் கீற்றை ஒளிர்விடச் செய்தது.

தான் இந்த வேலையில் சேருவதற்கு இந்தப் பெட்டியின் வடிவத்தின் மேல் தனக்கு இருந்த ஈர்ப்புகூட ஒருவிதக் காரணமாக இருக்கலாம் என்று இவன் நினைத்தான்.துவக்க காலங்களில் இந்த வேலையிலிருக்கும் விநோதமான பாவனைகள் இவனுக்கு மிகவும் பிடித்தமாகத்தான் இருந்தன. வழக்கமாக காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு அறையில் அடைபட்டு பைல்கலுக்கு நடுவே தொலைந்து கிடப்பதைவிட பச்சை,சிகப்பு கொடிக்களை அசைத்தபடி உலகத்தையே அறையாகவும் வானத்தையே கூரையாகவும் கொண்ட இப்பணி, அவனுக்கு மிகவும் பிடித்தமாகத்தான் இருந்தது.

நாட்கள் செல்லச் செல்லத்தான் அவனுக்கு இதன் ஒரே மாதிரியான இலக்கற்ற பயணமும் சோர்வும் வெறுப்புறச் செய்தன. ரயிலின் இடைவிடாத ‘தடக், தடக்” ஒசை தன் வாழ்வின் துயரத்துடன் ஏதோ ஒன்றில் பொருத்திப் போவதாகவே உணர்ந்தான்.எல்லாவற்றையும் காட்டிலும் அவனால் ஜிரணிக்க முடியாமல் போனது இப்பணியிலிருக்கும் தனிமைதான்.தன்னோடு பேச,சிரிக்க ஒரு ஜிவனும் கிட்டாதா என அவன் எத்தனையோ முறை கடைசிப் பெட்டியில் தவித்தபடி அங்குமிங்குமாய் அலைந்திருக்கிறான்.

துருப்பிடித்த அந்த கடைசிப் பெட்டி அறையில்,இரும்பின் வாசமும் சோகம் காப்பும் அதன் விநோதமான அமைப்பும் அநேக சமயங்களில் அவனை தற்கொலை செய்துகொள்ளும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி இருக்கின்றன.சந்தர்ப்பம் கூடிய சில தருணங்களில் ஒடும் ரயிலிலிருந்து கீழே குதித்துவிடலாமா என்றுகூட அவன் நினைத்ததுண்டு. அதுபோன்ற சமயங்களிலெல்லாம் ரயிலின் எஞ்சின் போடும் அந்த விநோதமான ஊளைச் சத்தம்தான் அவனை ஆசுவாசப்படுத்தும்.அந்த சப்த்ததை கேட்ட மாத்திரத்தில் பெரும் விடுத்தலை உணர்வு நிரம்பியவனாக தன்னை உணர்வான்.எஞ்சினை இயக்கிச் செல்லும் டிரைவரின் முகம் தன்னை பார்த்து சிரிப்பது போல் ஒரு காட்சி கண்முன் தோன்றும்.ஒரு ரயிலின் சாதாரண ஊளைச் சத்தம் அவனை மீண்டும் கேட்கத் தூண்டியதற்கு அதன்மீது அவன் பெருவிருப்பம் கொண்டிருந்ததற்கும் இதுதான் காரணம்.

ரயில் இப்போது ஒரு பெருநகரத்தை நெருங்கிக் கொண்டிருப்பதற்கான அடையாளங்களக தொழிற்சாலை புகைக்கூண்டுகளையும் வயல்களுக்கு நடுவே ஆங்காங்கே பொருத்தப்பட்ட தீப்பெட்டி வீடுகளையும் கடந்து கொண்டிருந்தது.

அவன் தன் அறைக்குள் வந்து இருகையில் அமர்ந்து கொண்டான். பெரும்பாலும் அவன் இதுபோன்ற நகரங்கள் எதிர்ப்படும் நேரங்களில் காணச் சகியாமல் அறைக்குள் வந்து அடைந்து கொள்வான்.ரயில் நிலையங்களைக் கடந்ததுசெல்ல நேரிடும்போது மட்டுமே கொடிகளுடன் வெளிவந்து தன் சமிக்ஞைக் கடமைகளை நிறைவேற்றுவான் .ரயில் நிலையம் கடந்ததும் மீண்டும் தன் அறைக்குள் வந்து இருக்கையில் அமர்ந்து கொள்வான்.நகரத்தையும் அதன் பெருத்த இரைச்சலையும் காணும் ஒவ்வொரு சமயங்களிலும் அவனுள் காரணமற்ற ஒரு வலி ஏற்ப்படும்.அவ்வபோது வாகனங்களில் எதிற்ப்படும் சந்தோஷமான மனிதமுகங்களே அதற்க்கு காரணமாக இருக்கக்கூடும்.ரயில்வே கேட் அருகே இரண்டு சக்கர வாகனங்களில் எதிர்ப்படும் சந்தோஷமான மனிதமுகங்களே அதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.ரயில்வே கேட் அருகே இரண்டு சக்கர வாகனங்களின் பின்னிருக்கையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் திறப்பிற்காக காத்திருக்கும் நடுத்தர ஆண்களைக் காணும்போது அவனுள் அவனுக்கே தெரியாமல் அவனது ஆதங்கத்தின் காரணம் பொறாமையின் சிறு பொறி எழுந்து அடங்கும். இதற்காகவே அவன் ரயில், நகரங்களைக் கடக்கும் போதெல்லாம் அறைக்குள் அடைபட்டுக் கொள்வான்.

தன் வயதில் இரண்டு குழந்தைகளுடன் தாம்பத்தியத்தின் பூரணத்தை அடைந்துவிட்ட தன் நண்பர்களை எதிர்கொள்ளும் சந்தர்ப்பங்களில் கண்டும் காணாமல் விலகிச் செல்வான். இது போன்ற சந்தர்ப்பங்களில் காரணமின்றி அவளது முகம் ஞாபகத்தில் வந்துபோகும். மணமகள் தேவை விளம்பரத்தின் வழியாக அவளது ஒன்றுவிட்ட பெரியப்பா ஏற்பாடு செய்திருந்த வரன் அவள்.தனக்கு வரவிருக்கும் கணவர் ,கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டியில் பணியாளராக இருப்பதை தன் தோழிகளிடமும் உறவினர்களிடமும் கூறிக் கொள்வத்தில் வெளியே சொல்ல முடியாத ஒரு அசூயையும் அவஸ்தையும் இருப்பதாகக் கூறி தன்னை நிராகரித்தவள்.ஏனோ தெரியவில்லை,அவனிடம் அவள் இதைக் கூறும்போது அவள் செய்த பாவனைகள் அவனுக்கு மிகவும் பிடித்தமாக இருந்தன.அதுவரையிலும் அவளை பற்றி ஏந்த ஒரு மனப்பதிவும் கொள்ளாதிருந்த அவனுக்கு அவள்மேல் திடீரென ஒர் கரிசனம் தன்னுள் உடைப்பட்டு பிரவாகம் எடுப்பதை உணர முடிந்தது. ஒருவேளை இந்தக் கடைசிப் பெட்டியின் உள்ளார்ந்த ரகசியங்களையும் உளவியல் புதிரையும் அறிந்திருந்தது கூட அவள் மேல் அவனுக்கு ஈர்ப்பு வரக் காரணமாக இருந்திருக்கலாம். அவளது விழிகளுக்கு நடுவே தன்னால் பார்க்க முடிந்த ஒரு வினோத வசிகரம்தான் அதன் பிற்பாடு அவளை மறக்க முடியாமல் அவனைத் துயரத்தில் ஆழ்தியது.இப்பவும் அவனது ரயில்,பெருங்கோயில் நகரங்களை கடந்து செல்லும்போதெல்லாம் காரணமற்று அவளது முகம் அவனது ஞாபகத்தில் வந்து போகும்.

அதன் பிறகு மீண்டும் தனக்கு ஏன் மற்றொரு திருமணம் செய்ய வாய்ப்புக் கிட்டவில்லை என யோசித்த ஒவ்வொரு சமயமும் இந்த கடைசிப் பெட்டி வேலையே பிரதான காரணமாகப்பட்டது.ஆனால் அதுமட்டுமே காரணமில்லையென்றும் அவன் நன்றாக அறிந்திருந்தான். ஒரு வேளை,தன் திருமணத்தைப் பற்றி நினைவுகூர யாருமற்றுப் போன அல்லது யாரும் முன்வராத தன் இயல்பும் ஒரு காரணம் என்பதும் அவனுக்கு நன்றாகத் தெரியம்.

கல்லூரியில் படித்த காலம்தொட்டெ பேசிப் பழக ஒருவரும் அற்று, பேச வந்த சிலரிடமும் கூச்சத்தின் காரணமாக நிலை மறந்தவனாக பாவனைகள் செய்து விலகிக் கொண்டிருக்கிறான்.நண்பர்கள் என்று ஒருபோதும் யாருமற்று தனித்த தன் பயனத்தில் எப்போதேனும் கிடைத்தவர்கள் அனைவரையும் அவர்களின் பேச்சுத் துணையாக மட்டுமே தன்னைக் கருதிக் கொண்டவன்.மிகப்பெரிய இடைவெளியை ஆட்களைப் பார்த்த மாத்திரத்திலே கண்டுவிடக்கூடிய அதிசயக் கண்கள் தன்னிடம் இருப்பதாகவே நினைத்துக் கொண்டான். தன்னுடன் பழகிய ஒருவரும் வார்த்தைகளால் அந்த இடைவெளியை நிரப்ப முய்ற்சிக்காதது கூட தந்தனித்த மனோ வியாகுலங்களுக்கு காரணமாகப் பட்டது. அற்புதமான தவானியுடன் எழும் ஒரேயெரு வார்த்தையிலேயே அந்த இடைவெளியை நிரப்பிவிட முடியும் என அவன் உறுதியாய் நம்பினான்.அலுவலக நிமித்தமாகவோ,பேருந்திலோ,சாலை அல்லது இதர பொது இடங்களிலோ தென்படும் பெண்களின் முகத்தை அவன் கூர்ந்து கவனித்துள்ளான்.தன்னைக் கடந்து ஊடுருவிச்செல்லும் ஒளிக்காக எபோதும் கதவுகளைத் திறந்தபடியே அவர்களை எதிற்கொண்டுள்ளான். அதீதம்தான் அவனது வாழ்க்கையின் அனைத்துப் பக்கங்களிலும் விஷக் கத்தியை மறைத்து வைத்தது என்று அவன் எப்போதோ ஒருமுறை நினைத்துக்கொண்டான்.

வெறுபுற்றவன் போல தன்னிலைக்கு அவன் முனைந்தபோது ரயில் நின்றுவிட்டிருப்பதை உணர்ந்து அறையைவிட்டு வெளியே வந்து நின்றான்.பரவெளியில் ஒரு துணுக்கெ செத்துக்கிடந்த்த ரயிலின் கடைசிப் பெட்டியிலான தன் இருப்பை உணர்ந்தபடி தலை எக்கி எஞ்சினைப் பார்த்தான்.ரயில் மீண்டும் எபொழுது உயிர் பெறும் என சொல்வதற்க்கில்லை. சில சமயங்களில் ஒரு நாள் முழுக்க அப்படியே இருக்க வேண்டியத்தாகக்கூட நேர்ந்துவிடும்.பிடிமானக்கம்பியைப் பிடித்து கொண்டு வெறுமனே நின்றப்படி அந்த பிரம்மாண்ட அமைதியை ரசித்தான்.இபோது ஆட்டின் கணைப்பும் கழுத்துமணிச் சப்தமும் அருகாமையில் கேட்க,அவன் பார்வையைச்சுழல விட்டான்.நீண்ட தண்டவாளத்தின் குறுக்கே வலப்புறச் சரிவிலிருந்து திடுமென நாலைந்து ஆடுகள் மேலேறி வர, அவற்றுடன் ஒரு சிருவன் கடைசிப் பெட்டியில் நின்றுகொண்டிருந்த இவனை பார்த்து சிரித்தான்.பின் மறுபடியும் ஆடுகளைச் சரிவிற்குள் விரட்டிவிட்டு பெட்டியின் அருகே வந்து நின்றான்.தண்டவாளத்திற்கு இணையாக சற்று தூரத்தில் தெரிந்த நெடுஞ்சலையில் வாகனங்கள் விரைந்து கொண்டிருந்தன.

சிறுவனின் பார்வையிலிருந்து தான் தப்பிக்கும் விதமாக சேகர் சற்று தூரத்தில் விரையும் அந்த வாகனங்களைப் பார்ப்பதுப்போல பாவனை வரவழைத்துக் கொண்டான்.பற்களால் குச்சியைக் கடித்தபடி பெட்டியில் ஏற முயற்சிப்பது போல பாவனை செய்த அச்சிறுவனின் களங்கமற்ற வெட்கம் நிறைந்த அப்பார்வ்வையை எவ்விதமாய் எதிற்க்கெள்வது என அறியாமல் சேகர் ஒரு நிமிடம் விக்கித்து போனான். பதிலுக்கு அச்சிறுவனிடம் ஒரு புன்னகைக்குக்கூட வக்கற்றுப்போன தன் அருவருப்பான மனோநிலையைக் குறித்து கூனிக் குறிகியவன், தன் பார்வையை அவனிடமிருந்து விலக்கி மீண்டும் வேறு திசையில் பார்க்கத் துவங்கினான்.அச்சிறுவன் மீண்டும் அவன் எதிரே வந்து எதையாவது தருமாறு கேட்கும் பாவனையில் கையை நீட்ட தன்னியல்பு மீறி அவனுள் ஒரு புன்னகை சுடர்விட்டது.

சில்லரைக்காக வேண்டி பாகெட்டை நோக்கி விரல்கள் தன்னிச்சையாக தட்டுப்பட,சட்டென நினனவு வந்ததவனனப் போல் தன் கடைசி பெட்டி அறைக்குள் நுழைந்தவன் கையில் ஒரு பாக்கெட்டுடன் வெளியே வந்தபோதுதான் அச்சிறுவனை அழைத்தபடி சரிவிலிருந்து மேல் நோக்கி வரும் ஒரு பெண்ணின் முகத்தை அவன் காண நேரிட்டது.சட்டென ஒரு ஈர்ப்பு.செம்பட்டை நிறக் கேசத்துடன் ஒரு பதினான்கு வயது நிலவைப் போல சரிவிலிருந்து மேலெழுந்தது அம்முகம்.அம்முகத்தைப் பார்த்த மறு நொடியில் அடைபட்ட மனதிலிருந்து பீறிட்டெழும் நீருற்று போல் ஒரு பரவசம் அவனுள் நிகழ்ந்தது.அவளது விழிகளினூடே தெரிந்த ஒளியில் இது நாள் வரை அடைபட்டிருந்த ஏதோ ஒன்று மெல்ல கரைந்து உருகி வழிவதை சேகர் உணர்ந்தான் காரணமற்ற உணர்வு.

இவ்வளவு நாளாய் தான் மறுதலித்த, உடன்பட முடியாது போன பெண் உறவுகளெல்லாம் இந்தக் கணத்தின் பொருட்டு தானோ என அவன் சந்தேகப்படும்படியான ஒரு பிரம்மை.தன்னியல்பு முற்றாக மாறி அவளுடன் ஒரு வார்த்தையேனும் பேசிவிடத்துடித்த மனதின் கொந்தளிப்பை எண்ணி அவனே தன்னை அச்சர்யப்பட்டுக் கொண்டான்.நினனவுக்கு வந்தவனாக தன்னைத் தானே வெட்க்கிச் சிரித்தபடி கையிலிருந்த பாக்கெட்டிலிருந்து சில ரொட்டித் துண்டுகளை எடுத்து சிறுவனை நோக்கி வாங்கிக் கொள்ளும்படி நீட்டினான். இபொது அவளின் சம்மதத்தை எதிற்நோக்க, அவளோ வாங்க வேண்டாமென விழியால் சைகை செய்தாள்.இபோது அவன் கையிலிருந்த ரொட்டிதுண்டை பெண்ணை நோக்கி நீட்ட அவளோ வெட்கப்பட்டவளாக முறுவலித்து வேண்டாம் என்பதான பாவனையில் குனிந்தபடி தலையை இருபுறமும் அசைத்து கொண்டிருந்தாள். கையில் பிடித்த ரொட்டித் துண்டுடன் இன்னும் சற்றே குனிந்தவாறு அவர்களை நோக்கி அவன் நீட்ட,மூவருக்கும் இடையே சற்றுநேரம் ஒரு அலாதியான மெளனம்.

ஆடுகளின் கழுத்து மணிச்சத்தம்.

சிறுவன் , பெண்ணைப் பார்பத்தும் இவனைப் பார்த்துச் சிரிப்பதுமாக நின்று கொண்டிருந்தான்.அப்பெண் இப்போது சிறுவனின் தோளைத்தட்டி வாங்கிக்கொள்ளச் சொல்லவும் சிறுவன் இவன் நீட்டிக்கொண்டிருந்த ரொட்டித்துண்டை சட்டெனப் பிடுங்கி இரு கைகளாலூம் பிடித்தபடி சாப்பிடத் துவங்கினான்.இவனுள் இனம்புரியாத ஒர் சந்தோஷ உணர்வு. இப்போது இவன் மேலும் இரண்டு துண்டுகளை எடுத்து அப்பெண்ணை நோக்கி நீட்ட, வெட்கத்துடன் அவள் குனிந்தபடி தலையசைத்து பின் சட்டென உடன் பட்டவளாக இவனை நோக்கி கைகளை நீட்ட இருவருக்கும் இடையே இடைவெளி. அவளை நோக்கி இன்னும் சற்று இவன் குனிய முற்பட ரயில் தடக்கென்ற சப்தத்துடன் இவனை பின்னோக்கி இழுத்துச் செல்ல, கையிலிருக்கும் ரொட்டித் துண்டுகளை என்ன செய்வதென்று அறியாமல் அதிர்ச்சியுடன் கடைசிப் பெட்டியில் நிற்கும் இவனைச் சுமந்தபடி அமைதியாக ஊளையிட்டவாறு ரயில் வேகம் பிடிக்கத் துவங்கியது.

No comments:

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...