January 11, 2010

பழைய காதலியின் கணவன்: கவிதை


பழைய காதலியின் கணவன்: கவிதை

நேற்று பாண்டி பஜாரில் காத்திருந்தேன்
பழைய காதலியின் கணவனை பார்க்க
அவன் கறுப்பா சிவப்பா
எதுவும் தெரியாது

இந்தபக்கமாக இத்தனை மணிக்கு
அவன் பைக்கில் போவான்
அவ்வளவுதான் குறிப்பு

அவன் எந்த நிறத்தில் சட்டையணிந்திருப்பான்
கிராப்பா ஹெல்மட்டா
கண்ணாடி,கைக்கடிகாரம் உண்டா
ஸ்கூட்டியா பைக்கா
எதுவுமே தெரியாது

ஆனால் பழைய காதலியின்
கணவன் இந்தவழியாகத்தான் வருவான்
அப்படிவருபவனுக்கு
இப்படிநான் இன்னமும் நிற்பது தெரிந்தால்;
பழைய காதலியின் கணவன்
கோபிப்பானா?
வருத்தப்படுவானா?
அதுவும் தெரியாது

பழைய காதலியின் கணவனுடைய அம்மாவை
அல்லது சகோதரியை சகோதரனை
அப்பாவை தாத்தாவை பாட்டியை
நேரில்பார்ப்பது கூட அதிர்ஷ்டம்தான்

குறைந்தபட்சம் ஒரு நாவல்
அல்லது சிறுகதையின்
வரிகளூக்குள் நாயகனாக நடித்த
மகிழ்ச்சியாவது மிஞ்சும்
என்றாவது ஒரு நாள்
அதை அவளும் படிக்க நேர்ந்து
அப்போதேனும்
எனை யோசிக்க நேர்ந்தால்
அதைவிட வேறென்ன வேணும்

நண்பர்களே நீங்களாவது அந்த கதையை
பாண்டிபஜாரில் பழைய காதலியின் கணவனை தேடி
எனும் தலைப்பில் ஒருகதை எழுதலாம்

அப்படி எழுதும் போது
ஒரே வரி மட்டும் சேர்த்து எழுதிவிடுங்கள்
ஒரு மாலையில் ஒரே குடையில்
இருவரும் நடந்து சென்ற அந்த
நீண்ட மழை நாளை

மற்றும்
சில துரோக வரிகளால்
எழுதப்பட்டதை போல
நானொன்றும் வெற்று கோமாளி அல்ல
திட்டங்கள் சூழ்ந்த உலகில்
அபத்தங்களின் மூலமாக
மட்டுமே அன்பை சொல்ல
வழிகண்டுபிடித்தவனென்று

நிச்சயம் நீங்கள் இதை எழுதும் போது
என் கைகள் உங்கள் தோள் மீது
விழும் நண்பர்களே
அவை உலகின் ஒப்பற்ற அன்பை
உங்கள் முன்சமர்ப்பிக்கும்
எதிர்காலத்திற்கான
குளிர்ச்சியோடு ...

அஜயன்பாலா சித்தார்த்

9 comments:

Raju said...

\\திட்டங்கள் சூழ்ந்த உலகில்
அபத்தங்களின் மூலமாக
மட்டுமே அன்பை சொல்ல
வழிகண்டுபிடித்தவனென்று \\

இது அருமையா இருக்கு பாலா ஸார்.

ajayan bala baskaran said...

நன்றி ராஜு இத்த்னை ஸ்பீடாக அன்பை செலுத்தினால் எப்படி
மகிழ்ச்சியாகத்தன் இருக்கிறது

rvelkannan said...

இந்த கவிதை
என்னை அதே தெருவில் தனியாக நிற்க வைத்து விட்டது. பாதசாரிகள் தூங்கிப்போன நேரத்தில் எழுத முயல்கிறேன் தெருவிளக்கின் உதவியோடு. ஒருவேளை தெருவிளக்கிற்கு தெரிந்திருக்க கூடும் காதலுக்கும் (பழைய ) காதலிக்கும் இடையே உள்ள வெப்ப தருணகளையும் அளவற்ற குளுமையையும்

ajayan bala baskaran said...

நன்றி வேல் நீங்கள் குறிப்பிட்டபிறகுதான் பிழை திருத்தம் இருப்பதை அறிந்தேன்.இனி கூடுமானவரை இது போல பிழை வராமல் பார்த்துக்கொள்கிறேன்
பின்னூட்ட வரிகள் கவிதயாக இருக்கின்றன வாழ்த்துக்கள்

Ravikumar Tirupur said...

//நிச்சயம் நீங்கள் இதை எழுதும் போது
என் கைகள் உங்கள் தோள் மீது
விழும் நண்பர்களே
அவை உலகின் ஒப்பற்ற அன்பை
உங்கள் முன்சமர்ப்பிக்கும்
எதிர்காலத்திற்கான
குளிர்ச்சியோடு ...//
ஆஹா.... அருமை!அருமை!

"உழவன்" "Uzhavan" said...

நல்ல கவிதை

ajayan bala baskaran said...

நன்றி முத்துசாமி பழனியப்பன் தொடர்ந்து எனக்கு உங்களது பின்னூட்டங்களை எதிர்பார்க்கிறேன்

ajayan bala baskaran said...

நன்றி ரவிக்குமார்

ajayan bala baskaran said...

நன்றி உழவன்

புதை படிவங்கள் வ

ப புதை படிவங்கள் வரிசைப்படுத்த்பட்ட மியூசியம் அறையில் மெதுவாய் நடந்து செல்கிறேன் தேவாலயத்தின் மவ்னத்துடன் புறாக்களின் சலசலப்பும் கேட்...