February 17, 2009

தன்னை மறுக்கும் கோடுகளுடன் மருது, அஜயன்பாலா

சென்னை எல்டாம்ஸ் ரோட்டில் இருக்கும் பார்வதி ஆர்ட் காலரியில் மருதுவின் ஓவியக்கண்காட்சியின் இரண்டாம் நாள் பகல்பொழுதில் அவரோடு நான் கைகுலுக்கிய நேரம் அறையினுள் சூரியன் பளிச்சென பிராகாசித்துக் கொண்டிருந்தான்.ஜனவரியின் முதல் வார ஞாயிறு துவங்கி தொடர்ந்து பத்து நாட்களாக நடக்கவிருப்பதாக அழைப்பிதழ் சொல்லியிருந்தது.தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் அவர் அழைத்திருந்தும் துவக்க நாள் விழாவுக்கு செல்ல முடியாத நெருக்கடியும்,அதன் காரணமாக எழுந்த குற்றவுணர்ச்சியும் அந்த இரண்டாவது நாள் பகல் பொழுதில் என்னை அவசரமாக அங்கு விரட்டியிருந்தது. முதல் நாள் மாலை நடந்திருந்த எளிய துவக்க விழாவிற்கு ஓவியர்கள் சந்தானராஜ்,அல்போன்ஸராய் ஆகியோருடன் மருதுவின் நெருங்கிய நண்பரான இயக்குனர் மிஷ்கினும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தனர்.அந்த கட்டிடத்தின் முதல் தளத்தில் நாங்கள் நின்று கொண்டிருந்த அறையின் சுவர் முழுக்க .ப்யூட்டி அண்ட் பீஸ்ட். என்ற தலைப்பில் அவரது சமீபத்திய ஓவியங்கள் வரிசையாக சட்டமடப்பிட்டு மாட்டப்பட்டிருந்தன. வெவ்வேறுவிதமான உருவச்சித்திரிப்பில் பெண்களின் பலவித பாவங்களை உணர்த்தும் தோற்றங்கள் வரிசையாக தொங்கிக்கொண்டிருந்தன. ஒவ்வொரு தோற்றத்துக்கும் பின்னால் நிழலாக அல்லது பெண் சித்திரங்களை காட்டிலும் உருவத்தில் சற்று கூடுதலாக மனித மன இருண்மைகளை அடையாளப்படுத்தும் விதத்தில் பல வகைப்பட்ட பிராணிகளின் தோற்றத்தை சித்திரமாக தீட்டியிருந்தார்.எருது,பசு,மான்,நரி,சிங்கம்,புலி, குதிரை, ஒட்டகம்,யாளி,என வெவ்வேறான அந்த நிழலுருவங்கள் பெண்களின் ஆழ்மனங்களை உணர்த்துவதாக இருந்தன.அவை அனைத்துமே முதல் பார்வைக்கு ஒன்றே போலிருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான மனவெளிக்கு நம்மை அழைத்து செல்வதாக இருந்தன.பிமபங்களை ஊடறுத்து செல்லும் காலம் மற்றும் வெளியின் தொடர்நிகழ்வின் பதிவாக அவரது எல்லா ஓவியங்களையும் ஒரு சேர மதிப்பிடமுடியும்.இந்த காட்சியில் வைக்கப்படிருந்த ஓவியங்களிலும் ஏறக்குறைய அதே போன்றதொரு தன்மையை என்னால் உணர முடிந்தது கோடுகளால் ஆன உலகம் மருதுவினுடையது.மிதமான வெளிச்சம் நிறைந்திருந்த அந்த பகல் பொழுதில் அவரோடு ஓவியங்களை குறித்து பேசக்கிடைத்த சந்தர்ப்பத்தின் போது அவரது உடல் பாவத்திற்கும் அவரது கோட்டொவியங்களுக்கும் இடையிலான ஒரு சமன்பாட்டை கண்டுபிடித்தேன்.இந்த வசதி கோடுகளுக்கு மட்டுமே இருப்பது போல தோன்றியது.பொதுவாக தூரிகைகளும் வண்ணங்களும் பெரும்பாலும் வெளித்தெரியாத குறிப்பிட்ட ஓவியனது ஆழ்ந்த மன உலகை பிரதிபலிப்பது போல் கோடுகள் குறிப்பிட்ட ஓவியனது உடல் மொழியை வெளிப்படுத்துவதாகவே எனது அனுமானம்.மருதுவின் உடல்பாவங்கள் நொடிக்கொரு சித்திரத்தை தனது உடலிலிருந்து வெளியேற்றிக்கொண்டிருப்பவை. தன் உடல் நிற்கும் வெளியில் தன் உருவத்துக்கு நிலையான ஒருகோட்டை எவரும் உருவாக்கிவிட முடியதபடி கணம்தோறும் அசைந்து கொண்டேயிருக்கும் அவரது உடல் எனக்குள் பல ஆச்சர்யங்களை உண்டாக்கின.பிம்பங்களின் இந்த நிலையற்ற தன்மையை பதியவைப்பதுதான் அவரது ஓவியங்களின் சாரம்சமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.மருதுவோடு நேரில் பழகியவர்களுக்கு இங்கு நான் சொல்ல வரும் தகவல் சுலபமாக புரிந்திருக்கும். பெருக்கல் குறி போட்டார்போல் குறுக்காக போடப்பட்ட கால்களுடன் நின்றவாக்கில் அசைந்து கொண்டே இருக்கும் அவரது இரு கைகள் அடுத்த நொடி ஒருக்களித்த இடுப்பிற்கும் இன்னொரு சமயம் மேலுயர்ந்து கோர்த்த நிலையிலும் இன்னும் சிலசமயங்களில் முதுகுக்கு பின்னால் நெட்டி முறித்த நிலையிலுமாக தொடர்ந்து வெவ்வேறாக, ஒரு தொடர் வரைகலைசித்திரத்தின்பிம்பங்களை போல அவை உருமாறிக்கொண்டே இருக்கின்றன. இந்த அவரது இயல்பான சுபாவமே அவரது ஓவியங்களை குறித்து மிகப்பெரிய விளக்கவுரையை எனக்குள் உருவக்குவது போலிருக்கவே தொடர்ந்து நான் ஓவியங்களை குறித்து அவருடன் பேசியபடியே கூடுதலான கவனத்துடன் அவரிடமிருந்து உதிரும் சித்திரங்களையும் கண்டு ரசித்தபடி இருந்தேன்.அப்போது அவர் ஐரோப்பிய மறுமலர்ச்சி கால ஓவியர்களான செஸான்,காகின், துளுஸ் லோத்ரெக்,வான்கா ஆகியோரை பற்றி பேசிக்கொண்டிருந்தார்.எனது புற கவனம் அதில் குவிந்திருந்தாலும்,அவ்வப்போது இடை வெட்டாக எனது அககவனம் முதல் முறையாக அவரை சந்தித்த நிகழ்வு குறித்து காலங்களின் பின்னால் என்னை துரத்தி ஓடச்செய்து கொண்டிருந்தது. சென்னைக்கு வந்து இலக்கியச்சூழலில் கொஞ்சம்கொஞ்சமாக என்னை மூழ்கடித்துக்கொண்ட ஆரம்பகலங்களில் மருது எனும் ஒலிச்சொல் மிகவும் வசீகரமானதொன்றாகவே இருந்தது.இப்போதும் நகருக்குள் புத்தகங்களை பிராதான உடமையாக கருதியபடி புதிதாக இந்நகருக்குள் நுழையும் ஒரு இளைஞனுக்கு அச்சொல் அவனது மனப்பரப்பில் உண்டாக்கும் பிரதிமைகள் அவ்ன் நம்பும் ஒரு உலகத்திற்கு வலு சேர்க்ககூடிய¨வ்யாக இருந்துவருவதுதான் அவரது சிறப்பு.அதே சமயம் சூழலுக்கு புதியதாக வரும் ஒருவனால் சுலபமாக நெருங்கக்கூடியவரகவே அவர் இப்போதும் இருந்துவருகிறார்..மருதுவுடன் ஒரு டீ சாப்பிடுவது என்பது தமிழ் சமூகத்தின் ஆதாரமான ஒரு கோட்ட்டுடன் அமர்ந்து நாம் பேசுவது போல.இந்த பெருமை ஆதிமூலத்துக்குதான் முழுமுதல் சொத்து என்றாலும் மருதுவுடன் சில கணங்களை செலவழிக்கும் ஒரு இளைஞன் வெறுமனே ஓவியத்தை பற்றி மட்டுமல்லாது இலக்கியம் ,சினிமா,வரைகலை ஊடகம் என பல்வேறு துறைகளை குறித்த பல தகவல்களை சேகரித்துக்கொள்ள முடியும். வினோதம் வெளிக்காட்டாத இந்த சென்னை நகருக்குள் முதன் முதலாக நான் அடியெடுத்து வைத்த ஆரம்ப சில,பல நாட்களின்போது வீதிகளில் நான் நடந்து சென்றதாகவே உணரவில்லை.கிட்டதட்ட பறந்துகொண்டிருந்தேன்.எழுத்தாளர்களை நேரடியாக சந்தித்து அவர்களோடு பேசக்கிடைத்த வாய்ப்புகள் எனது மாலை நேரங்களை மேலும்வசீகரமாக்கிக்கொண்டிருந்தன.தி.நகர் ரங்கநாதன் தெருவிலிருந்த ஒரு வணிக வளாகத்தின் மூன்றாவது மாடியில் அப்போது முன்றில் சிற்றிதழின் அலுவலகம் இயங்கிவந்ததும் ஒரு முக்கிய காரணம்.பிரமிள்,நகுலன்,கோணங்கி,எஸ்.ராமகிருஷ்ணன்,கோபிகிருஷ்ணன்,சாரு நிவேதிதா,லதாராமகிருஷ்ணன்,யூமா வாசுகி,ஆகியோரை போல மருதுவையும் முதன்முதலாக அங்குதான் சந்தித்தேன்.அதன் பிறகு நான் பணிசெய்து கொண்டிருந்த அரசியல் புலனாய்வு பத்திரிக்கையின் தொடர் நிமித்தமாக ஓவியங்களை வாங்கசென்ற போது ஓரளவு பரிச்சயம் ஏற்பட்டது.அதுவரை நேரடிதன்மை கொண்ட பெண்களை மட்டுமே பிரதானமாக கொண்ட சித்திரங்களாக பார்த்து பழகிய தமிழ் வெகுஜன வாசக பரப்பிற்கு தனது சிதிலமான சித்திரங்களின் மூலம் புதியதொரு திசையை மருது உருவாக்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது.ஆதி மூலத்தை முன்னோடியாக கொண்டு பல ஓவியர்கள் அன்று தீவிர பத்திரிக்கைகளில் இத்தகைய பாணியை முன்பே உருவாக்கிக்கொண்டிருந்தாலும் புத்தகங்களின் மேலட்டைகளிலும்,வணிக இதழ்களிலுமாக மருது வேகுஜன தளத்தில் நன்கு ஊடுருவிக்கொண்டிருந்தார்.அதன் பிறகு கூட்டங்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் அவரை அடிக்கடி சந்தித்தபோது சுயப்ரக்ஞை இல்லாமல் பழகும் அவரது சுபாவம் என்னை ஈர்தது. சில வருடங்களுக்கு பிறகு ஒரு முழு நகர மனிதனாக காலம் என்னை மாற்றியிருந்த ஒருநாளில் அவரது குடியிருப்பு வளாகத்துக்கு ஒரு நாள் செல்ல நேரிட்டது.அப்போது தினமணியில் வாராவாரம் ஞாயிற்றுக்கிழமை உலகசினிமாவின் வரலாற்றை எழுதுவதற்கான தயாரிப்பு வேலைகளில் துரிதமாக ஈடுபட்டிருந்தேன்.98ன் இறுதிக்காலம் அது.இப்பொதிருப்பது போன்ற வலை வசதிகள் எதுவும் அப்போது முழுவதுமாக முகிழ்ந்திராத காலம் அது. அந்த தொடரில் அறிமுகப்படுத்தவிருந்த ஜாம்பவான்களின் புகைப்படங்கள் எதுவும் பிரசுரிக்க தகுதியான நிலையில் இல்லை. வெறுமனே புகைப்படமாக வெளிவிடுவதைக்காட்டிலும் அவர்களை மருதுவின் கோடுகளில் ஓவியமாக வரைந்து பிரசுரித்தால் தொடருக்கு கூடுதல் கவனத்தை தரும்.இதனை அப்போது அங்கு உதவி ஆசிரியராக இருந்த தமிழ்மகனிடம் கூற அவரும் ஒத்துக்கொண்டார்.ஆனால் அத்ற்காக நிர்வாகம் ஒத்துக்கொண்ட தொகை மிக மிக சொற்பமானது.மருது இதற்கு சம்மதிப்பாரா என்ற ஐயத்துடன் அவரது வீட்டிற்கு சென்றபோது உண்மையில் எனக்கு ஆச்சர்யத்தை அவர் தரப்போகிறர் என நான் எதிர் பார்க்கவில்லை.எப்போதும் தளராத அதே உற்சாகத்துடன் கதவை திறந்து எதிர்கொண்ட மருதுவிடம் வந்திருக்கும் தகவலை சொன்னதும் உள்ளே சென்று தடி தடி யான புத்த்கங்களை என் முன் எடுத்து வந்த மருது நன் வெகு நாட்களாக பல நுலகங்களில் தேடி கிடைக்காத இயக்குனர்களின் புகைப்படங்களை கொண்டுவந்து காண்பித்ததோடு அல்லாமல் என் தொடருக்கு தேவையான பல தகவல்களை சட சட வென சொல்லியவண்ணமிருந்தார்.உண்மையில் இன்று தமிழின் திரை துறை சார்ந்த எவரையும்விட உலக சினிமா குறித்த அவரது தேடலும்,அறிவும் அன்று என்னை பிரமிக்க வைத்தது.இதை நன் குறிப்பிடுவதன் காரணம்சமூகத்தின் மேல் தளத்தில் இத்தகைய கோடுகள் உயிர்ப்புடன் உலா வர வெறுமனே அவரது திறமை மட்டுமே காரணமல்ல அதனையும் கடந்த அவரது ஈடுபாடும் ,எழுத்து பிரதியின் மீதான ஆர்வமும்தான். பிறகு ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பிக்கான இடத்தேர்வு நிமித்தம் இரண்டொரு நாட்கள் அவரோடு ராமேஸ்வரத்தில் கடற்கரை ஒட்டிய விடுதி ஒன்றில் தங்க நேரிட்டது.அவர் கலை இயக்குனராகவும்,நான் இணை இயக்குனரகவும் அந்த படத்தில் இணைந்திருந்தோம்.அங்கு பணிகளேதுமற்ற ஒரு பகல் பொழுதில் அவரது அறையில் அமர்ந்தபடி இருவரும் எதிர்கால திரைப்படதுறை குறித்த விவாதத்தில் களம் புகுந்தோம். கணிணி வரை கலை தான் இனி எதிர்கால திரைப்படமாக முழு மாற்றமடையும் என அவர் கூற நான் அவரோடு கடுமையாக முரண்பட்டு எதிர் நின்றேன்.சினிமா எனும் கலை செயல்பாட்டு தளத்தில் முற்று முழுக்க திட்டமிடுதலுக்கும்,எதேச்சையான தன்னியல்பான நிகழ்வுகளுக்குமன முரண்படாக அந்த உரையாடல் பாதியிலேயே நின்றது.அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பின் இப்போதுதான் அவரோடு கலை குறித்த தீவிரமான உரையாடலுக்கு சாத்தியப்படிருந்தது.இம்முறை எனக்கும் அவருக்கு மான உரையாடல் திரும்ப திரும்ப கோடுகளின் வராலாற்றையே வட்டமிட்டு கொண்டிருந்தது. மருதுவின் கோடுகள் என்பது அவருடையதல்ல மேற்கத்திய ஓவிய மரபின் திணிப்பிலிருந்து விடுபட எத்தனித்த தமிழ் கூட்டு மனநிலை தானக தன்னை தேடி வரிந்து கொண்ட கோடு அது.கோடு அது.அந்த கோட்டின் துவக்க புள்ளி திருச்சி மண்ணிலிருந்து தோன்றிய ஆதி மூலம் எனும் தீவிர தேடல் கொண்ட கலைமனத்திடமிருந்தே துவங்கியது என்பது அவரும் மறுக்க முடியாத உண்மை.ஆதி தனக்கான கலை மரபை தனது புராதன ஞாபகங்களிலிருந்து தோற்றுவிக்க விழைந்த போது தமிழ் கல்வெட்டுகளிலிருந்தும்,ஓலை சுவடி எழுத்து வகைமைகளிலிருந்தும் இன்னும் பெரிய எழுத்து கதை எழுத்துக்கள்,மற்றும் அய்யானார்,மாரியம்மன்,சுடலை மாடன் போன்ற மண்சர்ந்த தெயவ உருவங்களிலிருந்தும் தீவிரமாக தேடி அவர் அதனை முதலி கண்டடைந்தார்..தமிழ் ஓவிய மரபானது,தனபால்,அல்போன்சா,சந்தான்ராஜ் போன்ற மேதைகளின் வழியாக உருவாக்கம்பெற்றிருந்தாலும் நமக்கேநமக்கான கோடுகளை உருவாக்கி, மண் சார்ந்த அடையாளங்களை ஓவிய பொருளாக மற்றிய பெருமை முற்று முழுக்க ஆதியிடமிருந்தே துவக்கம் பெறுகிறது.இதனை வெளிக்கொணர்ந்ததில் அப்போது ப்ரக்ஞை சிற்றிதழின் பங்கு அபாரமானது.அவர் உருவக்கிய அந்த வழித்தடத்தில் பலர் பயணித்திருந்தாலும் அதனை அடுத்தகட்டத்திற்கு வெகு ஜன ஊடகங்களின் வாயிலாக சதாரண மக்களுக்கு அறிமுகப்படுத்திய மிக முக்கியமான பணி மருதுவினுடையது.மதுரை மண் சார்ந்த தன் வாழ்வில் பால்யத்தில் தான் கண்ட காட்சிகளை,பிரதிமைகளை அவர் வெகு ஜன ஊடகத்தில் கோடுகளின் மூலமாக சித்திரமாக வரித்தபோது தமிழ் வாசக பரப்பில் அது பெரும் வரவேற்பை பெற்றது.அதே சமயம் ஆதி உருவாக்கிய மரபை தன் தொன்மங்களை நோக்கி கொண்டு சென்றவர் சந்துரு.இதனை சுருக்கமாக சொல்வதானால் ஆதியிடமிருந்து சந்துரு அகத்தேபயணிக்க மருது தனது கோட்டை புறத்தே கொண்டு வந்தார். இரண்டுமே இரண்டு விதங்களில் தமிழ் ஓவிய சூழலில் மிக முக்கியமான நிகழ்வு.தனது தேடலின் அடியொற்றி நடந்தது சந்ரு¢ன் நிகழ்வு.ஆனால் மருதுவுக்கு அப்படியல்ல வெகுஜனங்களை அடைந்த அவரது பாதை மிகுந்த மெனக்கடல்களையும் காத்திருப்பையும் உள்ளடக்கியது. இன்று தமிழ் சூழலில் அறிவு சார்ந்த விஷயங்களுக்கு அடையாளமாக சில கோடுகளும்,சில எழுத்து வடிவங்களும் காணப்படுகின்றன.என்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் ஒரு புத்தகம் தன்னை நவீன இலக்கியமக அறிவித்துக்கொள்ள வேண்டுமென்றால் அதன் அட்டையில் இத்தகைய கோடுகளுடன் எழுத்து வடிவம்,அல்லது சித்திரம் இருந்தால் மட்டுமெ போதுமானதாக கருதுகிற அளவிற்கு அடையாளம் கண்டிருந்தது. அதுவே நாளடைவில் வெகு ஜன பத்திரிக்கைகளின் வழியாக வளர்க்கப்பட்டு பொதுத்தளத்தில் தமிழ் அடையாளமாக கருதப்படுகிற அளவிற்கு வளர்ச்சியடைந்திருக்கிறது. ''1985ல் பொங்கல் இதழுக்காக உருவாக்கப்பட்ட இலக்கிய இணைப்பிதழில்தான் முதன் முதலாக ஆதியிடமிருந்தும்,என்னிடமிருந்தும் ஓவியங்களை வாங்கி ஆனந்த விகடன் இதழ் பிரசுரித்திருந்தது.அதுதான் வெகு ஜன ஊடகத்தில் நவீன ஓவியத்தின் முதல் அறிமுகம்.இந்த முயற்சிக்கு அப்போது அங்கு பணியாற்றி¢க்கொண்டிருந்த வேல்சாமி எனும் பத்திரிக்கையாளரின் தீவிர ஆர்வம் ஒரு முக்கிய காரணம்.அதனை தொடர்ந்து அப்போது குங்க்குமம் இதழில் பணியாற்றிக்கொண்டிருந்த பாவை சந்திரன் நவீன ஓவியங்களை வாங்கி பிரசுரிப்பதில் ஆர்வம் காட்டினார். இந்த இரு பத்திரிக்கையாளரும் தான் இன்று இந்த கோட்டோவியங்களுக்கான வளர்ச்சிகான பாதைக்கு அடித்தளம் அமைத்து தந்தவர்கள்'' எனக்கூறும் மருது பத்திரிக்கை ஓவியங்களுக்காக இன்று வரை எந்தசமரத்தையும் தனக்குள் அனுமதிக்காதவர் ..அதே சமயம் தனது கோடுகள் எந்த மாதிரியான எழுத்துக்கு துணை நிற்கின்றன என்பதிலும் மருது மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு வந்திருக்கின்றார்.இதனால் தான் அவை தன் மகத்துவத்தை இப்போதும் தக்க வைத்துக்கொண்டிருக்கின்றன தன்னை மறுக்கும் கோடுகளுடன் மருது, அஜயன்பாலா

No comments:

உலகம் ஒளிர்கிறது கவிதை,

கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...