January 20, 2009

பிரமிள்


 கவிதை எரித்த சூரியன்

-அஜயன் பாலா
உலகம் சொற்களால் ஆனது! சொற்கள் இல்லாத ஓர் உலகத்தை நம்மால் கற்பனையில்கூட யோசிக்க முடியாது.
ஒரு சமூகம் தனது ஞாபகங்களைச் சொற்களின் பயன்பாட்டினூடே கதைகள் மூலமாகவும், கவிதைகள் மூலமாகவும் சேகரித்து வைத்துக்கொண்டு, தலைமுறை தலைமுறையாக வரலாற்றையும் கலாசாரத்தையும் கடத்தி வருகிறது. இந்தச் செயல்பாடு இல்லாத ஒரு மொழியில் சொற்கள் அர்த்தகனத்தைச் சுலபமாக இழந்துவிடுகின்றன.
இவ்வாறாக ஒரு சமூகத்தின் ஆன்ம வளர்ச்சிக்கு இறைச்சிப் பொருளாக விளங்கும் கவிஞனின் சொற்களும் வாழ்வும் காலங்காலமாக பரிதாபத்துக்குரிய நிலையில்தான் இருந்து வருகின்றன. வாழும்போது பாரதிபட்ட துன்பங்களும், அவமானங்களும் இன்று கதைகளாகவும் காவியங்களாகவும் சிலாகிக்கப்படுகின்றன. தனது ஒத்துவராத இயல்பு காரணமாக சமூகத்தில் அவர் பட்ட துன்பங்களின் கதைகள் நம் யோசனைக்கு அப்பாற்பட்டது. வாழும்போது கவிஞனை இம்சித்துப் பார்க்கும் இதே சமூகம், இறந்த பிறகு அவனுக்கு சிலை வைத்து கொண்டாடுவதுதான் மிகப்பெரிய வேடிக்கை.
பாரதிக்குப் பிறகு வந்த இத்தகைய தீவிர மனநிலை கொண்ட கவிஞர்களில் நகுலனும், பிரமிளும் குறிப்பிடத்தக்கவர்கள். மனித மனத்தின் இயல்பு குறித்தும், பிரபஞ்சத்திற்கும், இவற்றிற்குமிடையேயான தொடர்பு குறித்தும் கவிதை எழுதியவர்கள். அதேபோல வெளி உலகத்தை நேரடியாகத் தொடர்புகொள்ளாமல் ஒரு வித எள்ளல் தன்மையுடன் அவதானித்தவர்கள். இருவருமே அவர்களிடம் கேட்கப்படும் கேள்விகளைச் சிதறடித்துப் பதில்களையே கேள்விகளாக்கி தங்களது தீவிர மனநிலையை வெளிப்படுத்தியவர்கள். இருவரில் நகுலனுக்கு வீடே உலகமாக இருந்தது. ஆனால் பிரமிளுக்கு உலகமே வீடாக இருந்தது. இருவரில் பிரமிளுடன் நான் நேரடியாகத் தொடர்பு கொண்டிருக்கிறேன். அவரோடு சில பொழுதுகளில் உரையாடியிருக்கிறேன்.
அப்போது சென்னை ரங்கநாதன் தெருவில் “முன்றில்’ என்ற பெயரில் ஒரு புத்தகக்கடை இருந்தது. முன்றில் சிற்றிதழின் ஆசிரியரான மா. அரங்கநாதன் மற்றும் அவரது மகன் மகாதேவன் ஆகிய இருவரும் அதனை நடத்தி வந்தார்கள். அப்போது மாலை நேரங்களில் எழுத்தாளர்கள் அங்கு கூடுவது வழக்கம். நான் அப்போது நகரத்திற்குப் புதியவன். நண்பர் ஒருவரின் பரிச்சயத்தின்பேரில் அந்தக் கடைக்குச் செல்லத் தொடங்கினேன்.
சஃபி, கோபிகிருஷ்ணன், லதா ராமகிருஷ்ணன், சி. மோகன், கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், நாகார்ஜுனன், சாருநிவேதிதா, யூமா வாசுகி என பலரும் அங்கு வந்து செல்வர். இதனாலேயே அப்போது நான் பணி செய்து கொண்டிருந்த புலனாய்வு பத்திரிகையின் பணி முடிந்ததும் அந்த இடத்திற்கு விரைவேன். அதுபோல நான் விரைந்து சென்ற ஒரு நாளில் கால்மேல் கால்போட்டு அமர்ந்தவாக்கில் ஒல்லியாக, ஜோல்னா பை கண்ணாடி சகிதம் அமர்ந்திருந்தவரைப் பார்த்தேன்.
கூர்மையான நாசி மற்றும் விழிகளுடன், மீசை தாடி சுத்தமாய் ஷேவ் செய்யப்பட்டு மழுமழுவென முகம். அவர்தான் பிரமிள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை.
அவரிடம் பேசி பரிச்சயமும் செய்து கொண்டேன். பேச்சினூடே சினிமாக்கள் மீது அவருக்கிருந்த ஈடுபாடு என்னைக் கவர்ந்தது. ஒரு சினிமா தொடக்க காட்சியிலிருந்து இறுதிவரை க்ளைமேக்சை நோக்கியே நகர வேண்டும். நல்ல திரைக்கதை அப்படியாகத்தான் இருக்க வேண்டும் என பேச்சினூடே கூறினார்.
நண்பர்கள் மூலமாக அவரது முகவரியைப் பெற்றுக்கொண்டேன். அடுத்த இரு நாள்கள் கழித்து ஒரு ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டைத் தேடிச் சென்றேன். அப்போது அவர் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே ஒரு சிறிய அறையில் தங்கியிருந்தார். வீட்டு ஜன்னல் வழியாகப் பார்த்தால் கீழே பெரும் பன்றிக்கூட்டம் உணவுப்பொருள்களுக்காக சதா இரைச்சலிட்டபடி காணப்படும். அங்கே வசித்த யாரோ அதனைக் கூட்டமாக வளர்த்து வந்தனர். பிரமிள் தனியாக அங்கே வசித்து வந்தாலும் பெரும்பாலும் அங்கிருப்பவர்களிடம் நன்மதிப்பு பெற்றவராகவே இருந்தார். வீட்டைத்தேடி வந்தபோது குடியிருந்தவர்களின் பாவனையிலிருந்தே இதனை என்னால் யூகிக்க முடிந்தது. அந்தச் சிறிய அறையில் ஒரு மூலை முழுக்க வரிசையாக அடுக்கிவைக்கப்பட்ட புத்தகங்கள். அதற்கு முன் பிரமிளை சந்தித்தபோது வம்பை விலை கொடுத்து வாங்குவதுபோல என பலர் எச்சரித்தனர். ஆனால் அவர் என்னைச் சற்று கேலியும் கிண்டலுமாக அணுகினார்.
பேச்சினூடே சற்று நேரம் நிதானமாக என்னைத் தனது சோடாபுட்டி கண்ணாடி வழியாக ஊடுருவிப் பார்ப்பார். அன்றைய காலகட்டத்தின் சக எழுத்தாளர்கள்பற்றி விசாரித்தார். நீ அவனுடைய ஆளா என கேள்வி கேட்டார். அப்போது அவருக்கும் பல எழுத்தாளர்களுக்கும் மிகப்பெரிய சர்ச்சைகள் சிற்றிதழ்களில் ஓடிக் கொண்டிருந்த நேரம்.
அன்று எனக்கும் சேர்த்து அவரே உலை போட்டார். குக்கரில் வடிப்பதுபோல சிறிது தண்ணீர்கூட கஞ்சியாக வெளிப்படாமல் அலுமினியப் பாத்திரத்தில் சாதம் வடிக்கிறேன் பார் என்றார். அதுபோல வடித்துக் காண்பித்து என்னை ஆச்சரியப்படுத்தினார். அரிசிக்கும் தண்ணீருக்கும் ஒரு கணக்கு இருக்கிறது என்றார். பின் ரசம் மற்றும் ஊறுகாயுடன் அன்றைய என் பகல் பொழுது கழிந்தது.
அப்போது அவருக்கு எப்படியும் 54 வயதிருக்கும். அவரிடம் கேட்டபோது அப்படித்தான் சொன்னார். நானும் அவரும் அன்று வெளியில் இறங்கி நடந்தோம். எனக்கு உள்ளூர பெருமிதம். காலத்தின் மிகச்சிறந்த கவிஞனோடு வீதியில் நடந்து செல்கிறோம் என்ற உணர்வு.
ஆனால் எங்களைக் கடந்து சென்ற எவரும் அந்த ஸ்மரனை இல்லாது கடந்துபோவது என்னை ஆச்சரியப்படுத்தியது. இப்போது யோசிக்கும்போது என் அதீதம் நகைப்பை வரவழைக்கிறது என்றாலும் அப்போது பதட்டமான மனநிலையில் நகரத்திற்குப் புதிதாக அறிமுகமாகியிருந்த எனக்கு, அப்படியான உணர்வுதான் இருந்தது.
பின்னர் இருவரும் சற்றுதூரம் உஸ்மான் ரோட்டில் நடந்து சென்றபின் எதிரே ஒரு பசு எதிர்ப்பட்டது. அந்தப் பசுவின் முன் நெடுநேரம் அவர் நின்றார். அந்தப் பசுவும் சலனமில்லாமல் அவர் முன் நின்றது. இருவரையும் புறச் சூழலையும் நான் மாறி மாறிப் பார்த்தபடி அங்கே நின்றிருந்தேன். சாலையில் கடந்து செல்வோர் எங்களை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
சில நிமிடங்கள் கழித்து அங்கிருந்து புறப்பட்டபோது அவரிடம் நான், ஏன் எதற்காக அப்படி நின்றீர்கள், என்றேன். நான் பசுவோடு பேசிக் கொண்டிருந்தேன் என்றார். சிறிது நேரம் இருவரும் ஒன்றும் பேசாமல் அமைதியாக நடந்து கொண்டிருந்தோம். அவர் சொன்னது உண்மையா, பொய்யா எதையும் நான் யோசிக்கவில்லை. ஓர் ஆசீர்வதிக்கப்பட்ட மனிதனைப்போல ஒருவித களிப்பு அப்போது என்னுள் நிறைந்திருந்தது.
இரண்டாவது முறை அவர் வீட்டிற்குச் சென்றபோது இருவரும் வெளியில் இறங்கி வெகுதூரம் நடந்தோம். கோடம்பாக்கம் மேம்பாலத்தில் ஏறி இறங்கி ஒரு புத்தக அலமாரி குறித்து விசாரித்தோம். அவர் எதிர்பார்த்ததை விட நல்ல அலமாரி கிடைத்தது. போதிய பணம் கொண்டுவராததால் பிறகு வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறிவிட்டு மீண்டும் பாலத்தில் ஏறி இருவரும் உஸ்மான் ரோடு பக்கமாக நடந்து வந்தோம்.
அப்போது பரவாயில்லை உன்னோடு வந்தால் காரியம் கூடுதலாகப் பலிதமாகிறது என மகிழ்ச்சியுடன் கூறினார். எல்லாம் சில நொடிகள்தான். சட்டென பேச்சு, மா. அரங்கநாதன் குறித்து எழுந்தது. அப்போது இருவரும் சிற்றிதழ்களில் கடுமையாக மோதிக் கொண்டிருந்தனர். இந்தப் பிரிவு எனக்குள் வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது.
நான் இதுகுறித்து பேச்சு எடுத்ததும் உடனே அவர் முகம் மாறியது. எனக்குத் தெரிந்துவிட்டது நீ அவனுடைய ஆள் எனக் கூறியபடி அவசரமாக என்னைப் பிரிந்து எதிர்சாரிக்கு வேகமாக ஓடி ஒரு “ஸ்டூடியோ’வினுள் நுழைந்துகொண்டார். அங்கிருந்த நபர்களிடம் என்னைக் காண்பித்து ஏதோ சொன்னார். கடைக்காரர்கள் வெளியில் வந்து என்னைப் பார்த்தனர். உடனே நானும் அந்த இடத்தைவிட்டு அகன்றேன். எனக்கு வருத்தமாக இருந்தது.
அவரிடம் ஏன் இதுகுறித்து பேச வேண்டும் என என்னை நானே நொந்துகொண்டேன். ஒரு குழந்தையைப்போல அவர் ஓடிச்சென்றது இப்போது என் மனதில் காட்சி சித்திரமாக என்னைத் துன்புறுத்துகிறது. இது நிகழ்ந்து சில ஆண்டுகள் கழித்து அவர் இறந்த சேதி கேள்விப்பட்டபோது உண்மையில் என் கண்களில் நீர் துளிர்த்தது.
கடைசிவரை ஒரு நிம்மதியின்மை அவரை அலைக்கழித்தது. உலக நியதிக்கு ஆட்படாதவராக அவர் தன்னை முழுவதுமாக வேறு உலகத்தில் இருத்திக்கொண்டு வாழ்ந்து வந்தார்.
இதுபோன்ற கவிஞர்கள் குறித்து ஒரு சமூகம் எப்போதும் பிரக்ஞை இல்லாமல் சுழல்கிறது. இப்போது ஓரளவு நிலைமைகள் சாதகமாகத் தெரிகின்றன. ஆனால் எல்லா காலத்திலும் தீவிர மனநிலையும் சொற்களின் தேடலும் கொண்ட கவிஞன் சமூகத்தின் புறக்கணிப்புக்கு ஆளாகவே செய்வான்.
இந்த முரணைப் புரிந்து கொள்வதும், இத்தகைய கவிஞர்கள் குறித்து நமது பொதுபுத்திக்கு உட்படுத்துவது மட்டுமே அவர்களுக்கு நாம் செய்யும் சரியான காரியமாக இருக்க முடியும்.

5 comments:

உமாஷக்தி said...

அற்புதமான மனிதரைப் பற்றிய அருமையான பதிவு. வாழ்த்துக்கள் அஜயன்.

divya said...

ma.aaranganathan pattri yeluntha eelaivalikku peragu marupadiyaum santhikkavellaya toolary

loganathan arumugam said...

ஐயா உங்கள் பதிவு seems to reflect ur conscious and subconsious mind , we still trained to live in the absurd world where such selfless souls are neglected , after bharathi now piramil

Anonymous said...

அடியேனும் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் தங்கள் பதிவைக் கூர்ந்து படித்தேன். தங்களோடும் அவரோடும் நடைபயின்ற அனுபவம் கிடைத்தது.
எழுத்துக்கள் உள்ளவரை எழுத்தாளன் சாவதில்லை. திருக்குறள் வாழ்கிறதே. வள்ளுவனோடு.

ஆனாலும் தீவிரச் சிந்தனாவாதிகளும் இந்த உலக வாழ்வின் இன்பங்களைத் துய்த்தாக வேண்டும் என்பது எனது கோரிக்கை. செல்வம் முதற்கண் அவனுக்குத்தான் பகிரப்படவேண்டும். சுயநலவாதிகளுக்கு அச்செல்வம் இரண்டாவதாகத்தான் போய்ச் சேரவேண்டும் என்பது என் தாழ்மையான கோரிக்கை. சேர்ந்தே இருப்பது வறுமையும்பு லமையும் என்று கூறலாம். வறுமை வறுமைதான்.ஆனால் புலமை செல்வத்திலும் சிறந்ததன்றோ?

Anonymous said...

அடியேனும் ஒரு எழுத்தாளன் என்ற முறையில் தங்கள் பதிவைக் கூர்ந்து படித்தேன். தங்களோடும் அவரோடும் நடைபயின்ற அனுபவம் கிடைத்தது.
எழுத்துக்கள் உள்ளவரை எழுத்தாளன் சாவதில்லை. திருக்குறள் வாழ்கிறதே. வள்ளுவனோடு.

ஆனாலும் தீவிரச் சிந்தனாவாதிகளும் இந்த உலக வாழ்வின் இன்பங்களைத் துய்த்தாக வேண்டும் என்பது எனது கோரிக்கை. செல்வம் முதற்கண் அவனுக்குத்தான் பகிரப்படவேண்டும். சுயநலவாதிகளுக்கு அச்செல்வம் இரண்டாவதாகத்தான் போய்ச் சேரவேண்டும் என்பது என் தாழ்மையான கோரிக்கை. சேர்ந்தே இருப்பது வறுமையும்பு லமையும் என்று கூறலாம். வறுமை வறுமைதான்.ஆனால் புலமை செல்வத்திலும் சிறந்ததன்றோ?

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...