December 18, 2015

மலைவீட்டின் பாதை
மலைவீட்டின் பாதை

நகரும் பேருந்தின் கண்ணாடி ஜன்னல் வழியே, வேகமாகப் பின் சரியும் மரங்களைப் பார்தான் ஸ்டீபன். அது இருண்ட கானகமாக நெடுகி வளர்ந்திருந்தது. உயரமான மரங்கள் அவனுக்குள் மருட்சியை ஏற்படுத்தின. முக்கி முனகி உறுமும் இன்ஜின் சப்த்ததின் பின்னணியில் இந்தக் காட்சியை வேடிக்கை பார்ப்பது விநோதமாக இருந்தது.
சாலையோரம் வேகத்துக்கு வழிவிட்டு ஒதுங்கி நின்றனர். பள்ளிச் சிறுவர்கள் மழைக்குத் தலையில் உரச் சாக்கினைக் கவிழ்ந்திருந்தனர். முகம் முழுக்க பவுடர் அப்பி, நெற்றியில் விபூதி இட்டிருந்தனர். குழந்தைகள் கையசைத்தபோது இவனும் பதிலுக்குக் கையசைக்க விரும்பினான். ஆனால், முடியவில்லை. மனசு மிகவும் பாரமாகிக் கனத்து இருந்தது. மரணம் தன்னோடு சக பயணியாக அடுத்த இருக்கையில் அமர்ந்திருப்பதாக உணர்ந்தான்.
இதுவரை அவன் குமுளிக்கு வந்ததில்லை. குமுளியில் அவன் தேடிச் செல்லும் சேது, கல்லூரியில் ஜுனியராகப் படித்தவன். ஹாஸ்டலில் ஒரே அறையில் தங்கியிருநதவன். அது கல்லூரித் தலைவனாக ஸ்டீபன் நெஞ்ச நிமிர்த்தி நடந்த காலங்கள். வாழ்க்கை அப்போது ஒரு முரட்டுத்தனத்தையும், துணிச்சலையும் பரிசாகத் தந்திருந்தது. தலைமைப் பண்பும் அலட்சியமும் சக நண்பர்கள் மத்தியில் அவனுக்கென ஒரு விநோதமான வசீகரத்தை உண்டு பண்ணியிருந்தது. கல்லூரிப் படிப்பு முடிந்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு தான், உண்மையில்தான் எந்த வேலைக்கும் பொருத்தமற்றவன் என்பதை உணர்ந்து கொண்டான்.
வாழ்க்கைக்கும் கல்லூரிக்குமான இடைவெளியை அவன் மிகவும் தாமதமாக உணர்ந்தான். வேலை அற்றவனின் பகல் பொழுதுகள் நீண்டு இருந்தன. அங்கே கை குலுக்கல்கள் இல்லை. உபசரணைகள் இல்லை. சிகரெட் புகை தனக்கு மேல் உயர்ந்து செல்வதை  விரக்தியுடன் வேடிக்கை பார்ப்பதில்  பெரும்பாண்மையான நேரங்களைக் கழித்தான். அவனது குடும்பம் இரண்டு ஆசிரியப் பெருந்தகைகளைக் கொண்டது.
உடன் படித்த நண்பர்கள் ஒவ்வொருவராக அடுத்தடுத்து வேலையிலும் சொந்த தொழிலிலும் தீவிரமாகப் பயணம் பெற்றுவிட, அவனுக்கு அவனது அப்பா சிபாரிசு செய்த வேலைகள் அனைத்திலும் ஏதாவது ஒரு குறை சொல்லி நிராகரித்தான். அதற்கான காரணம் ஏதும் அவனிடம் இல்லை. ஊர் ஊராகப் பயணிக்கும் விற்பனை பிரதிநிதி வேலைதான் தனக்கு உருப்படியானது என நம்பினான். அதற்காக இவனும் பலமுறை செங்கல்பட்டில் இருந்து சென்னைக்குப் படையெடுத்து தான் மிச்சம். அது போன்ற வேலை கிடைப்பதாகத் தெரியவில்லை. சரளமான ஆங்கிலம் இவனது நாக்குக்குப் பழக்கப் படாதது அதற்கு முக்கியக் காரணமாக இருந்தது.
                நிராகப்பிலும், தனிமையிலும், கழி விரக்கத்திலுமாகக் கழிந்த பொழுதில், தான் ஒளிந்துகொள்ள, தன்னை முற்றாகப் புதைத்துக் கொள்ள அப்போது அவனுக்கு ஓர் இடம் தேவைப்பட்டது. நூலகங்களுக்குச் சென்று, வெகு நேரம் வெறுமையைப் புரட்டிக் கொண்டு இருந்தான். இந்தக் காலகட்டத்தில்தான் நண்பன் ஒருவன் மூலமாக, புதுயுகம்  எனும் இலக்கியச் சிற்றிதழ் கிடைத்தது. அதில் வெளியான (பாதசாரி என்பவர் எழுதியிருந்த) காசி எனும் கதையின் நாயகன் இவனை வசீகரிந்திருந்தான். இவனும் தன்னை ஒரு காசியாக உருவகம் செய்து கொண்டான். ஸ்டீபனிடமிருந்த முரட்டுத்தனம் விலகி, மிகவும் மசமசவென, அதே சமயம் நுண்மையானதாக மாறிக்கொண்டு இருந்தான். நவீன  இலக்கியவாதிகளின் பெயர்கள் ஒரு பரவசத்தை ஏற்படுத்தின.
     இவனது இந்த மனநிலைக்கு நேர் எதிராக, வீடு, உறவுகள் மத்தியில் இவனது நடத்தை ஒரு வருத்தத்தை ஏற்படுத்தியது. அவர்களின் உலகம் முழுக்க முழுக்க இவனுக்கு எதிரானது மட்டுமல்ல, தலைகீழானது. இதன் காரணமாக, இவனுக்கு வீட்டில் உள்ளவர்கள் மேல் எப்போதும் ஒரு வன்மம் சுழன்றது. அனைவரையும் வெறுத்தான். தன்னையும் தன் நுட்பமான உலகையும் அவர்களால் ஒருபோதும் புரிந்துகொள்ள முடியாது என இவன் திடமாக நம்பினான். இன்றில்லா விட்டாலும் பினினொரு நாளில் மகத்தான காரியங்களைத் தன்னால் ஆற்ற முடியும் என அவன் திடமாக நம்பினான். அதற்காக அவன் வீட்டில் பெரும் அவமானங்களைப் பரிசாகப் பெற நேர்ந்தது. குறிப்பாக, உணவுப் பொழுதின்போது வெளிவரும் வார்த்தைகள் அவனைப் பெரிதும் சமன்குலைத்தன. இந்தச் சமயங்களில் சிகரெட் அவனுக்கு உற்ற நண்பனாக ஆறுதல் அளித்தது. புகைப்பதற்கு பல சமயங்களில் மிகுந்த பிரயாசை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அதிலும் வீட்டின் அருகே இருந்த தேநீர்க் கடையைக் கடந்து போகும் தருணத்தில், அவன் முதுகில் பாரமாகப் படியும் ஒரு குற்ற உணர்ச்சி... அதனை அவன் எப்படி விளக்க முடியும்! எப்போதேனும் அரிதாகச் சொற்ப பணம் கிடைத்து, பாக்கியின் பாதியைக் கொடுக்க முடிகிறபோது அவனுக்குள் ஊற்று போல் பெருகும் உணர்ச்சி இருக்கிறதே, பாருங்க.. நான் எத்தனை நல்லவனாக இருக்கிறேன். நீங்கள் என்னைக் கணித்திருந்தது போல நான் உங்களை ஏமாற்றுபவன் இல்லை, நேர்மையானவன், நீதிமான்!என்பது போல ஒரு பரிசுத்தமான உணர்வு உடல்முழுக்க வியாபிக்கும் அளவுக்கு அவமானகரமான சூழலில் பிடிக்கப்பட்டு இருந்தான். மாலை நேரங்களில் நீரற்ற ஏரி மைதானத்தின் புல்வெளியில் அமர்வான். சுற்றி இருந்தவர்களெல்லாம் விலகிச் சென்ற பின் மெள்ள இருள் தன் மேல் கவியும் சந்தர்ப்பத்தில், புல் தரையில் படுத்தபடி மேலே உள்ள நட்சத்திரங்களையும் பால் வழி மணடலங்களையும் குறித்து தன்னைப் போல எத்தனை இடங்களில் நட்சத்திரங்களைப் பற்றி யோசிப்பார்கள் எனவும், மற்றும் தான் கேள்விப்பட்ட ஊர்களின் பெயர்களையும் வாசித்த நாவல்களில் நிலப் பகுதிகளையும கற்பனையில் கொண்டுவந்து அங்கே தானும் சஞ்சாரம் செய்வதாகவும் கற்பனை செய்து பார்ப்பான். இது போன்ற சமயங்களில் சிகரெட் ஒரு காதலியைப் போல மிகவும் இணக்கமாக இருப்பதை உணர்ந்தான்.

ஒரு நாள், மிகுந்த நெருக்கடியின் காரணமாக சமையலறையில் கடுகு டப்பாவில் அவன் கை வைக்கப்போக அது பெரும் பிரச்சனையாகி வெடிக்கத் துவங்கியது. இதன் உச்சகட்டமாக டைரியில் இவன் எழுதிவைத்திருந்த கவிதைகளை, தங்கை எடுத்து வந்து அப்பாவிடம் காண்பித்தாள். அவன் அம்மாவோ, மகன் மிகக் கீழ்த்தரமான நடவடிக்கையில் இறங்கிவிட்டதாகக் கூச்சல் இட்டாள். மகன் ஏதோ ஒரு பெண்ணைக் காதலிப்பதாகவும், அதன் பொருட்டே இப்படி எழுதிக் கொண்டு இருப்பதாகவும் அந்த இடைநிலை ஆசிரியத் தம்பதியர் கருதினர். உண்மையில், தான் இல்லாதபோது தனது டைரியும் தனது கவிதைகளும் பிறரால் வாசிக்க நேர்ந்ததையே ஸ்டீபனால் தாங்க முடியவில்லை. தங்கைக்கு ஒரு அறைவிட்டான். தந்தை தடுக்க வர, அவரைப் பிடித்துத் தள்ளினான். அம்மா ஓடி வந்து இவன் முதுகில் அடிக்க, அடுத்த சில நொடிகளில் மூவரும் சரமாரியாக ஸ்டீபனை ஒரு பைத்தியக்காரனைப் போல அடிக்கத் துவங்கினர். இந்த நெருக்கடியான சூழலில் கூட ஜே.கிருஷணமூர்த்தி இந்த சூழலை என்னவாக எதிர் கொள்வார். ஆதவன் இதனை எப்படி விவரிப்பார் என்றெல்லாம் அவன் மனம் கேள்விகளை எழுப்பியது. அவனது முதுகில் ரயில் தடதடத்து ஓடியது. அவன் தலைகுப்புற ஒரு ஆற்றில் விழுந்தான்.
அவமானத்துடன் அன்று இரவு முழுக்க எங்கெங்கோ அலைந்து திரிந்தான். இதனை ஒரு கதையாக எழுத வேண்டும் என்ற எண்ணம் கூட அந்த இரவில் உதித்தது. உள்ளூர பயத்துடன் மறுநாள் விடியற் காலை வீட்டினுள் நுழைந்து, தனது துணிமணிகளை ஒரு லெதர்பேக்கில் திணித்துக் கொண்டு வெளியேறினான். மதுரை வந்து நண்பனைச் சந்தித்து, பகல் முழுக்க மீனாட்சி கோயில் மற்றும் மலையாளப் படம் எனச் சுற்றித் திரிந்து, இரவில் நண்பனுடன் பீர் குடித்துவிட்டு, பின் அவனது ஏற்றுமதி நிறுவனத்திலேயே தங்கினான். காலையில் வாட்ச்மேனிடம், நண்பனிடம் சொல்லிவிடுமாறு கூறிவிட்டு மதுரை பேருந்து நிறுத்தத்துக்கு மழையினூடே நடந்து வந்து, எங்கே போவது எனத் தெரியாமல் சுற்றிக் கொண்டு இருந்த போதுதான், குமுளியில் இருந்த சேதுவின் ஞாபகம் வந்தது.  
பேருந்து குமுளியை அடைந்திருந்தது.
ஸ்டீபன் லெதர் பேக்கை எடுத்துக் கொண்டு கடைசி ஆளாகப் பேருந்திலிருந்து இறங்கினான். சாலையோரம் பேருந்து சற்றுச் சாய்வாகச் சரிந்திருந்தது. இரண்டு புறமும் அடர்த்தியான செறிவான மரங்கள் நிறைந்த வனம் அது. குமுளி பேருந்து ஒரு செக்போஸ்ட்டுக்கு இந்தப்புறம் நிறுத்தப்பட்டு இருந்தது. தமிழக எல்லை முடிந்த கேரள எல்லை இங்கிருந்து துவங்குகிறது என்ற அறிவிப்புப் பலகையைப் பார்த்தான்.
சற்று முன் மழை பெய்திருந்ததால், அந்தச் சிறிய கடைத்தெரு முழுக்க பகல் பொழுதிலும் ஒருவித மூட்டத்தோடு காட்சியளித்தது. ஒருபுறம் அடர்ந்த கானகத்துடன் கூடிய மலைச்சரிவும், இன்னொருபுறம் வரிசையாக ஓடு வேய்ந்த சிறிய கட்டடங்கள் கொண்ட கடைகளுமாக தார்ச் சாலை நீண்டிருந்தது. சிறிய சிறிய தள்ளுவண்டிகளில் கண்ணாடிப் பெட்டிகளுடன் தேநீர்க் கடைகள் வழி நெடுகக் காணப்பட்டன. தலைப்பாகையும் வாயில் பீடியுமாக, மலையாளிகளுக்கே உரித்தான கலர் கலரான கைலியை மடித்துவிட்டபடி நடமாடிக் கொண்டு இருந்தனர். பழ வியாபாரிகள், கூலிகள், மீன் வாங்கக் கையில் கூடையுடன் முண்டு அணிந்தபடி அலையும் நடுத்தர வயதுப் பெண்கள் என சில பிரத்யேக மலையாள அடையாளங்களுடன் அந்தப் பகுதி ஸ்டீபனை வசீகரித்தது. தமிழ்ப் பையனும் மலையாளப் பெண்ணும் கைகோத்து நிற்பதுபோல பல இடங்களில் கடைகளின் முகப்புப் பலகைகளில் இரண்டு மொழியிலும் எழுதப்பட்டு இருந்தன. சேதுவின் முகவரியைக் காண்பித்து வழி கேட்டபடியே, நீண்டு சென்ற தார்ச் சாலையில் நடந்து சென்றான். வரிசையான கடைகள் கடந்த வலப் பக்கமாகத் திரும்பி நடந்தான். தேயிலைத் தோட்டங்கள் பசேலென விரிந்து கிடந்தன. கறுத்த பாம்பின் தோலாய் நீண்டிருந்த சாலையின் ஓரங்களில் மரங்கள் உயர்ந்து மேகங்களோடு அசைந்தன. குளிச்சியான காற்று உடலைத் தழுவ, மூச்சை இழுத்து வெளியே விட்டவாறு மலைப்பாதையில் நடந்து சென்றான். காலையில் மதுரையிலிருந்து அவன் புறப்படும்போது இருந்த மனோநிலையிலிருந்து இந்தப் புதிய சூழல் அவனை முற்றாகப் பிடுங்கி எறிந்திருந்த்து.
கடந்த இரண்டு நாட்களாக தான் எதிர்கொள்ள நேர்ந்த பல்வேறான சம்பவங்கள் குறித்தும், இப்போது தான் புதிதாகச் செல்லவிருக்கும் சேதுவின் வீடு குறித்தும் மனதுக்குள் கேள்விகளை உருவாக்கியபடி நடந்து கொண்டு இருந்தபோது, சேதுவின் வீடு நெருங்கி வந்தது.
மலைச் சரிவின் ஒருபக்கமாக மண் படிக்கட்டுகள் வழியே ஏறி, சற்று உயரமான தளத்தில் கட்டப்பட்ட அந்த ஓட்டு வீட்டு முன் நின்றான்.
இதுதான் சேதுவின் வீடா?
படலைத் திறந்து சேதுவின் வீட்டுக்குள் நுழைந்தான் ஸ்டீபன். எதிரே சற்றுக் கீழே, தார்ச்சாலையில் ஒரு பேருந்து கடந்து சென்றது. அப்பால் சரிவாக பச்சையாக விரிந்துகிடந்த தேயிலைத் தோட்டம், மலை முடிச்சுகள், நீல வானம், நகரும் மேகங்கள் என அந்த இடமே முற்றிலம் வேறொரு உலகத்துக்குள் தான் வந்திருப்பது போன்ற பிரமையை அவனுக்குள் உண்டுபண்ணியது.
ஒலிப்பானை அழுத்தியதும் கிணற்றடியிலிருந்து பின்வாசல் வழியாக ஒரு சிறு பெண்ணின் முகம் வெளிப்பட்டது. கைகளில் சோப்பு நுரையோடு, ஒரு கையால தலைமுடியை ஒதுக்கியபடி எட்டிப்பார்த்தாள். ஹாலில் இருந்து ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அது சேதுவின் அம்மாவாக இருக்க வேண்டும், வெளியே வந்தாள். ஸ்டீபன் தன்னைப் பற்றிய விவரங்களைக் கூறியதும், சட்டென ஏதோ தவறு செய்துவிட்டவளைப் போன்ற பதற்றத்துடன் கதவைத் திறந்தவளின் முகத்தில் அத்தனை பூரிப்பு. கண்களின் ஒளி ஸ்டீபனுக்கு உடன் சட்டெனக் குளிர்ந்துவிட்டது. இதுவரை அப்படி ஒரு கரிசனத்தை எந்த முகத்திலும் கண்டதில்லை.
பின் கட்டிலிருந்து வெளிப்பட்டவள், தன் கைகளின் ஈரத்தைப் பாவாடையில் துடைத்தபடி, ஸ்டீபனை வரவேற்கும் விதமாக உடலைக் குறுக்கி, நாணத்துடன் தலைகுனிந்தாள். மகளின் பெயரை சிந்து என அறிமுகப்படுத்தினாள் சேதுவின் அம்மா.  +2 முடித்துவிட்டு பி.காம், கரஸில் படித்து வருவதாகக் கூறினாள். சட்டென அப்பெண் மீண்டும் பின்கட்டுப் பக்கம் விரைந்து சென்றாள்.
ஒருவகையான அமைதி அந்த வீட்டில் குடி கொண்டு இருந்த்து. அது தன் வீட்டைப் போல இறுக்கமாக இல்லை. ரசிப்புத்தன்மை மிகுந்த சிறு பெண் அந்த வீட்டில் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிந்தன. துணியில் சிறு எம்ப்ராய்டரி செய்யப்ட்ட வாயில் தோரணங்கள், பழைய, பெரிய ரேடியோவின் மேல் வைக்கப்பட்டு இருந்த பூ ஜாடி, மற்றும் அதன் மேல் மணியால் கோக்கப்ட்ட பொம்மைகள் என எல்லாம் ஏதோ ஒரு விதத்தில் தனக்குள் ஒரு நெருக்கத்தை உண்டு பண்ணுவதை உணர்ந்தான்.
கொதிக்கக் கொதிக்க சுடுநீரை குளியறையில் ஊற்றிக் கொண்டபோது எனக் கூற கதற வேண்டும் போலிருந்தது. அத்தனை சுகம் இந்த உடம்புக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. இரண்டு நாட்களாகப் பன்றியைவிடக் கேவலமாக உழன்றவன், இந்த குளியல் மூலம் அரசனாக மாறிவிட்டதாக்க் கருதினான்.
குளித்து உடை மாற்றிக் கொண்டு வந்தவனுக்கு, சேதுவின் அம்மா இட்லிகளைப் பரிமாறினாள். படுப்பதற்காக ஒதுக்கப்பட்ட அறை மிகவும் குறுகலாகவும் அடக்கமாகவும் இருந்தது. ஒரு மெத்தை தரையோடு விரிக்கப் பட்டு இருந்தது. ஆழ்ந்த உறக்கம். கனவில் என்னென்னவோ வந்தது. இடையிடையே வெளியே வராந்தாவில் கொலுசுச் சத்தம் கடந்தது. பகல் நேரத்துத் தமிழ்த் தொலைக்காட்சி சீரியல் வசனம் கேட்டது. கனவில் யார் யாரோ அவனது அப்பாவை துக்கம் விசாரித்தார்கள். பேருந்தின் அடுத்த இருக்கையிலிருந்து ஒரு பெண்மணி ஸ்டீபனிடம், மடியில் படுத்துக் கொள்ளட்டுமா?என்றாள். தலை நிறையப் பூவுடன் மடியில் சரிந்தாள்.
சட்டென விழிப்பு தட்டிய போது, ஸ்டீபனின் தலைமாட்டில் ரகசியமாக இரண்டு பெண் குரல்கள், சேதுவின் தங்கையான சிந்துவினுடையதும் அவளுடைய தோழியினுடையதும் என்பதை அறிந்து கொண்டான். இவனை எழுப்பிவிடக் கூடாது என்கிற ஜாக்கிரதை உணர்வு அவர்களின் பேச்சினூடே தெரிந்தது. புத்தக அலமாரியில் ஏதோ ஒரு நோட்டைத் தேடிக் கொண்டு இருந்தனர். சிந்துவின் பாவாடை விளிம்பு இவனது முழங்கையில் உரசுவதை உணர்ந்தான். உண்மையில் அவனுக்கு அதனால்தான் விழிப்பு தட்டியது.

நோட்டை எடுத்துக் கொண்ட சிந்து தன் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் தோழியிடம் ஸ்டீபனைப் பற்றித் தான் கூறிக் கொண்டு இருந்தாள் சென்னையிலிருந்து ( அவள் அதனை மதராஸ் என்றாள்) வந்திருப்பதாகவும், அங்கே மிகப்பெரிய ஆள் என்றும் கதை விட்டாள். தோழி, இந்த ஆளை நான் ஒரு உதை விடட்டுமா?என்று சிரித்துக் கொண்டே கேட்க சிந்து அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டாள். தன் பிறந்த நாளுக்கு ஸ்டீபன் ஒரு ஜாமென்ட்ரி பாக்ஸ் பரிசளித்ததாகவும், அதை இன்னும் பத்திரமாக வைத்திருப்பதாகவும் சிந்து சொன்னாள்.
ஸ்டீபனுக்கு அதிர்ச்சியாக இருந்த்து. அப்போது தான் அவனுக்கு அது ஞாபகமும் வந்தது. சேது தன்னுடன் அறியல் தங்கியிருந்த சமயத்தில், அவன் ஒருமுறை ஊருக்குப் புறப்பட, வழியனுப்பச் சென்றபோது நடந்தது அது. ஒரு எதேச்சையான நிகழ்வு. சேது அதனை தன் வீட்டில் நண்பன் பரிசளித்ததாகச் சொல்லிப் பெருமையுடன் நீட்டியிருக்க வேண்டும். ஒருவேளை, அன்று அது அவளுடைய பிறந்த நாளாகவும் இருந்திருக்க்கூடும். பெண்ணின் மனது எத்தனை நுட்பமாகச் செயலாற்றுகிறது என ஸ்டீபன் ஆச்சர்யப்பட்டான்.
கண் விழித்த போது மூன்றரை ஆகியிருந்தது. முகம் கழுவிக் கொண்டு வெளியே வந்தபோது சேதுவின் அம்மா, சாப்பிடச் சொன்னார்கள். வயிறு சரியில்லை எனச் சொல்லி மறுத்தவன், லுங்கியும் சட்டையும் அணிந்தபடி வெளியே வந்தான். மாலை நேரமாக இருந்த்தால் தொலைவில் தெரிந்த தேயிலை தோட்டங்களில் பனி மூட்டம் இறங்கியிருந்தது. ஈரமான மண் படிக்கட்டுகளில் இறங்கி, தார்ச் சாலைக்கு வந்தான். மனம் போன போக்கில் நடக்கலானான்.
சட்டென சிந்துவின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. எத்தனை கனிவான பெண்! ஒரு வேளை நான் விழித்திருப்பேன் எனத் தெரிந்தே, பரிசுப் பொருளுக்காக நன்றியைத் தெரிவிக்கும் விதமாக அதனைத் தன் தோழியிடத்தில் கூறியிருக்கலாம். முற்றிலுமாகச் சிதறுண்டு கிடந்த அவனது இருப்பு, அந்தச் சிறு பெண்ணின் கொலுசுச் சத்தத்தினால்  மீண்டும் தனக்குள் ஒன்று சேர்வதை உணர்ந்தான்.
ஸ்டீபன் வீடு திரும்பியபோது, முற்றத்தில் ஒரு சைக்கிள் இருந்தது. சேது இவனைப் பார்த்த்தும் அளவற்ற மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டான். ஒரு லெட்டர் போட்டிருந்தால் விடுமுறை எடுத்திருப்பேனே என்று வருத்தப்பட்டான். சில நிமிடத்தில் இருவரும் பேருந்து நிறுத்தத்தின் அருகிலிருந்த சிறிய கடைக்குச் சென்றபோது இருட்டியிருந்தது. பகலில் பார்த்ததை விட இப்போது சந்தடி அதிகரித்திருந்தது. சாலைகளில் தள்ளுவண்டிகள் முளைத்திருந்தன. வண்டிகளின் மேலிருந்த கண்ணாடிப் பெட்டிகளின் வழியாக மஞ்சள் வெளிச்சம்.
     ஏற்கனவெ அங்கெ நாலைந்து நண்பர்கள் இருந்தனர். அனைவரும் வேட்டி சட்டை அணிந்திருந்தனர். நண்பர்களிடம்  சேது இவனைப் பெருமையுடன் அறிமுகம் செய்து வைத்தான். அவர்கள் நண்பனொருவன் காதல் கைகூடியது குறித்தும், சினிமா நடிகர்கள் பற்றியும் பேசிக் கொண்டனர். ஒருவரிடமும் தீவிரத் தன்மை இல்லாதது இவனுக்கு வருத்தமாக இருந்தது. இவன் பெரும்பாலும் அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தான். சேது அவர்களுடன் பேசுவதில் மிகவும் ஆர்வம் காட்டினான். அடிக்கொரு முறை இவனிடம் போரடிக்கிறதா எனக் கேட்டுக் கொண்டான்.
     ஒன்பது மணிக்கு மேல் அருகில் இருந்த சந்தில் பீர் குடித்தனர். மீன் வறுவலை இன்னொரு நண்பன் ஒரு இலையில் வைத்துக் கொண்டு வந்தான். இவனுக்கு வீடு திரும்புவது சங்கடமாக இருந்தது. சேதுவின் அம்மா கண்டுபிடித்துவிடுவாரோ.. உள்ளூர ஒரு பயம். அதுபற்றி வீட்டில் கவலையில்லை எனக் கூறினான் சேது. ஆச்சர்யமாக இருந்தது.
அவன் சொன்னது போலவே வீட்டில் இவர்கள் சென்றபோது அனைவரும் உறங்கியிருந்தார்கள். சேதுவின் தந்தைதான் கதவைத் திறந்தார். அவர் இவனிடம் எதுவும் பேசாமல் உள்ளே போய் படுத்துக் கொள்ள, இருவரும் தங்களாகவெ சாப்பாடு எடுத்துக் போட்டுச் சாப்பிட்டு, படுக்கையை ஹாலில் விரித்துப் படுத்துக் கொண்டனர். சேது உடனே உறங்கிவிட்டிருந்தான். மேலே ஃபேன் காற்று சுழன்றது.
     சற்று நிமிடத்தில் சடசடவென மழை பெய்யும் சத்தம். ஸ்டீபன் கண்களை மூடிக் கொண்டான். மறுநாள் காலை இங்கிருந்து புறப்பட்டு எங்கே  போவது என யோசித்தான். வீட்டுக்கு உடனே திரும்பி செல்ல முடியாது என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்த்து. மழை கனத்துப் பெய்யத் துவங்கியது.
     மறுநாள் காலை, சேதுவின் வீடு சுறுசுறுப்பாக இருந்தது. அனைவரும் இவன் எழுவதற்கு முன் குளித்துவிட்டு எங்கோ புறப்பட்டனர். இவன் ஊருக்குப் புறப்படும் தகவலைச் சொன்னதும், சேது மறுத்தான். அனைவரும் அருகில் ஒரு கோயிலுக்கு உறவினர் திருமணத்துக்குச் செல்வதாகவும் கண்டிப்பாக உடன் வந்தே தீர வேண்டும், திங்கள்கிழமை காலை புறப்படும் பயத்திலிருந்து தப்பிக்க முடிந்த சந்தோஷத்தை சேதுவுக்கு அது உள்ளுர உருவாக்கித் தந்தது.
அனைவரும் புறப்பட்டு வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு பேருந்து நிறத்தத்துக்கு வந்தனர். சிந்து மிகவும் புத்துணர்ச்சியுடன் இருந்தாள். தலை குளித்து, நேர் வகிடெடுத்து காதோர முடிகளை எடுத்துப் பின்னால் முடிச்சிட்டிருந்தாள். பாவாடை, சட்டைதான் என்றாலும், அவளுடைய தோற்றம் பளிச்சென்று இருந்தது. அருகில் நிறுத்தத்துக்கு வந்து நின்ற சுடிதார் பெண்ணைப் பார்த்ததும் இவள் சந்தோஷத்துடன் அருகில் சென்று அவளின் கைகளைப் பிடித்துக் கொண்டாள். பள்ளித் தோழியாக இருக்காலாம். பேருந்தில் ஏறியதும் சிந்துதான் முதல் ஆளாக ஏறி ஸ்டீபனுக்கு முன் ஸீட்டில் இடம் பிடித்து தந்தாள். பின் ஸீட்டில்  தன் தோழியுடன் அவள் அமர்ந்து கொண்டாள். பயணத்தின் போது ஒரு நறுமண வாசனை, அது சிந்துவிடமிருந்தா அல்லது தோழியிடமிருந்தா. தெரியவில்லை. முகத்தில் காற்று சடசடத்து, உடல் முழுக்க ஊடுருவியது. தன் தலைக்கு மேல் வாழ்க்கை சில புக்களை விழச் செய்து தன்னைச் சாந்தப்படுத்தி இருப்பதாக எண்ணிக்கொண்டான்.
அத்தனை எளிமையான திருமணத்தை அவன் பார்த்தில்லை. மலையை ஒட்டிய ஒரு சமதளத்தில் மூன்று சிறிய கட்டடங்களாக கோயில பிரிந்து கிடந்தது. மூலஸ்தானத்துக்கு எதிரே ஒரு சிறிய மரத்தாலான கொடிக்கம்பம். கோயில் புறத்தில் தாழம்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்த்து தவிர, கல்யாணம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை. மொத்தமாக 30 பேர்தான் இருப்பார்கள். நேற்று பார்த்த சேதுவின் நண்பர்கள் சிலரும் அங்கு வந்திருந்தனர். அதில் ஒருவன் சிந்துவை அடிக்கடி வம்புகிழுத்தான். சிந்துவும் பதிலுக்கு அவனைக் கிண்டலடித்தாள். பின் அனைவருக்கும் அவளே எலுமிச்சம் சாறு நிரப்பபட்ட எவர்சில்வர் டம்ளர்களைக் கொண்டுவந்து கொடுத்தாள்.

உணவு சற்று மோசமாகத்தான் இருந்தது. ஆனால், அதை அனைவரும் ருசித்துச் சாப்பிட்டது இவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. வெளியே வெற்றிலைப் பாக்கு வைக்கப்பட்டு இருந்த இடத்தில் சிகரெட்டுகளும் இருந்தன. நண்பர்களுடன் மறைவிடம் சென்று, கோயில் சுவரில் அமர்ந்தபடி சிகரெட் பிடித்தான். சட்டென அங்கே ஓடி வந்து சிந்து, ஸ்டீபனின் விரலிலிருந்த சிகரெட்டைப் பிடுங்கித் தூர எறிந்தாள். அருகிலிருந்த நண்பன் ஒருவனிடம் மலையாளத்தில் கோபித்துக் கொண்டாள். சேதுவின் நண்பர்களைக் காண்பித்து, இவர்களுடன் சேர வேண்டாம் என விளையாட்டாக்க் கூறுவதைப் போல போலியான கோபத்துடன் கூறி ஓடி மறைந்தாள். நண்பர்கள் மற்றொரு சிகரெட்டை இவனிடம் நீட்டிய போது, ஸ்டீபன் ஏனோ அதனை மறுத்தான். அந்தத் திருமணம் பல விஷயங்களில் ஸ்டீபனுக்குப் புதிய அனுபவமாக இருந்தது. 
இரவு வீடு திரும்பிய பின்பு, சேது தன் எதிர்கால வாழ்க்கை குறித்தும், தான் திருமணம் செய்யப்போகும் உறவுக்காரப் பெண் குறித்தும் எதை எதையோ கூறிக் கொண்டு இருந்தான். இவனால் அவற்றை முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அன்று இரவு முழுக்க இவனுக்கு உறக்கம் வரவில்லை. மறுநாள்  காலை புறப்பட்டாக வேண்டும். ஏதோ ஒருவித பயம் அவன் மனதைக் கவ்வியது.
மறுநாள் காலை, சேது வழக்கம் போல புறப்படும் அவசரத்தில் அவன் அம்மா இல்லாத நேரமாகப் பார்த்து, ஸ்டீபனிடம் 500 ரூபாய் நோட்டைக் கொடுத்தான். ஸ்டீபனால் அதை மறுக்க முடியவில்லை. அது அவனுக்கு அவசியமாக இருந்தது. ஆனால், சேது ஏன் நம்மை இன்னும் இரண்டு நாட்கள் தங்கச் சொல்லவில்லை. ஒருவேளை அது குறித்து அவனுக்குப் பெரிய அபிப்பிராயம் ஏதும் இல்லாமல் இருக்கலாம். மேலும் தான் எந்த சூழலில் புறப்பட்டு வந்துள்ளோம் என்றும் அவனுக்குத் தெரியாதே எனத் தனக்குத்தானே சமாதானம் செய்து கொண்டான்.
காலையில் தேநீர் அருந்தும்போது தான் சேதுவின் அப்பா இவனிடம் பேசினார். அதிகமில்லை. ஒன்றிரண்டு வார்த்தைகள். எந்த ஊர், என்ன வேலை என்பது மாதிரி. இவன் பெரிய நிறுவனத்தில் பணிபுரிவதாகவும், மதுரைக்கு ஒரு வேலை நிமித்தம் வந்ததாகவும், அப்படியெ நண்பனைப் பார்த்துப் போக வந்ததாகவும், அப்படியே நண்பனைப் பார்த்துப் போக வந்த்தாகவும் பொய் சொல்லியிருந்தான். சேதுவிடம் கூட உண்மையை வெளிப்படுத்த விரும்ப வில்லை. ஆனால் எப்படியோ அதை சேது ஊகித்திருந்தான். தன் முகம், காட்டிக் கொடுத்திருக்கக்கூடும் என்று நினைத்தான் ஸ்டீபன்.
புறப்படும்போது, எப்போது வேண்டுமானாலும் தன் வீட்டுக்கு வரும்படியும் பணியிடத்தில் நிறைய வேலை இருப்பதால் உடனடியாக தான் போயாக வேண்டிய அவசியம் இருப்பதாகவும் சொன்னான் சேது. அடுத்த முறை வரும்போது மூணாறு செல்லலாம் என்றவன், ஸ்டீபனை பேருந்தில் ஏற்ற வர முடியாமை குறித்து வருத்தப்பட்டான்.
ஸ்டீபன் குளித்து முடித்து, பத்து மணிவாக்கில் புறப்படத் தயாரானான். டிபன் சாப்பிடும்போதுதான், அது உறுத்தியது. சிந்துவைப் பார்வைகளால் தேடினான். இரண்டு நாட்களாகத் தொடர்ந்து ஒலித்த கொலுசுச் சத்தம் இல்லாமல் வீடு ஒருவிதமான மௌனத்துடன் இருந்த்து. அம்மாவிடம் கேட்கலாமா என நினைத்து, அப்படியே தள்ளிப் போட்டான். அவளிடம் சொல்லாமல் போவது என்னவோ போலருந்த்து ஸ்டீபனுக்கு. அவள் கிணற்றடியில் இருக்கிறாள் என்பதை மட்டும் அறிந்து  கொண்டான். ஒருவித பாரம் மனதை அழுத்தியது. இந்த இரண்டு நாட்க்கிளல் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும்தான்  சிந்துவிடம் பேசியிருப்பான். என்றாலும், அந்தச் சிறு பெண்ணிடம் சொல்லாமல் போவதை ஒரு பெரிய இழப்பாக தனக்குள் அழுத்துவதை ஸ்டீபன் உணர முடிந்த்து. கால்கள் கனத்தன. மீண்டும் ஒரு முறை பின்கட்டு நோக்கிப் பார்த்தான். வெறிச்சோடிக்கிடந்த்து. அம்மாவிடம் சொல்லிக் கண்டு புறப்பட்டான்.
உண்மையில் அவனுக்கு அழ வேண்டும் போலிருந்த்து. வாழ்நாளில் அதுவரை அவன் மோசமாக நடந்து கொண்ட அத்தனை தருணங்களும் அந்தக் கணத்தில் அவன் மணக்கண்ணில் நிழலாடின வலதர் பேக்குடன் சாலையில் நடந்தான். தொலைவில் மலைகளின் நடுவே பேருந்து நிலையம் தெரிந்தது. அவனுக்கு ஏனோ உள்ளூர ஒரு பயத்தை அது உருவாக்கியது. இனி என்ன செய்வது, எங்கெ செல்வது என எந்தத் திட்டமும் இல்லாமல் நடந்தான்.
     சிந்து ஏன் வெளியே வரவில்லை? ஒருவேளை வேண்டுமென்றே, செயற்கையாக ஒரு மௌனத்தை ஏற்படுத்த அப்படிச் செய்திருப்பாளா? அப்படியானால் அதன் மூலம் அவள் பெறப்போவது என்ன ? தன் கொலுசுச் சத்தத்துக்கு இத்தனை வலிமை இருக்கிறது என்பதை அவள் எப்படி முன்கூட்டி அறிந்தாள்?
அப்போதுதான் சட்டென ஸ்டீபனுக்குப் பொறி தட்டியது. புறப்படும்போது மேஜையின் மேல் துருப்பிடித்த கேம்லின் ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்த்து. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸைப் பார்த்தது நினைவுக்கு வந்தது. அநேகமாக அது அவள் நேற்று தோழியிடம் கூறிய ஜாமென்ட்ரி பாக்ஸாக இருக்க வேண்டும். எதற்காக அவள் அதை மேஜை மேல் வைக்க வேண்டும்? அது ஒருவிதமான நன்றி உணர்ச்சியாக்க் கூட இருக்கலாம்.
இரண்டு நாட்களாக, தனக்கு உயிரூட்டம் தந்த ஒளியானது அணைந்துவிட்டதைப் போன்ற வெறுமையை உணர்ந்தான். எதைக்கொண்டு இதனை ஈடேற்றுவது?  எப்போதேனும் வரும் மின்மனிப்புச்சி போன்ற உறவுகள் கூட, தன் மனதில் ஏன் இத்தனை வலுவாக இடம்பிடித்து விடுகின்றன? கேள்விகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன. எத்தனையோ பிரயத்தனப்பட்டும் தன்னைச் சுற்றிச் சுழலும் கழிவிரக்கத்தை அவனால் விரட்ட முடியவில்லை. கண்களில் நீர் கட்டியது.
அருகே கால்வாயில் மழை காரணமாக நீர் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டு இருந்த்தைப் பார்த்து அருகில் சென்றான்.  நொடிப் பொழுதுதான் தோளிலிருந்த லெதர் பேக்கைக் கழற்றி ஓடும் நீரில் வீசி எறிந்தான். அதுவரை தன்னை அழுத்திக் கொண்டு இருந்த பாரம் விலகி மனசு லேசாவதை  உணர்ந்தான். தொலைவில் , நீரில் அவனது லெதர் பேக் மிதந்து ஓடிக் கொண்டு இருந்தது!

August 12, 2015

ஜூடித் டென்ச் : எட்டு நிமிட அதிசயம்

டாம் க்ரூசின் மிஷன் இம்பாஸிபில் தேசத்தின் ரவுடியை தியேட்டரில் பார்த்துக்கொண்டிருந்தபோது சட்டென ஜூடித் டென்ச்சின் (கீழே புகைப்படம்)முகம் மனதில் வந்து போனது . ஜேம்ஸ் பாண்ட் படங்களை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இந்த முகம் பரிச்சய்ப்பட்டிருக்கும் . ஜேம்ஸ் பாண்டுக்கே பாஸ் . அதிகார தோரணையை பார்வையிலேயே காண்பிக்கும் ஷேக்ஸ்பியர் பாணியின் மிகச்சிறந்த நடிகை .. முதன் முதலாக ஷேக்ஸ்பியர் இன் லவ் படத்தில்தான் இவரது நடிப்பை கண்டு வியந்தேன் எலிசபத் ராணியாக வெறும் எட்டே நிமிடத்தில்தான் திரையில் தோன்றுவார் . சிறந்த துணை நடிகைக்கான அந்த வருடத்தின் ஆஸ்கார் மற்றும் பாப்டா விருது பெற்றார். திரையில் வெறும் எட்டே நிமிடத்தில் . தோன்றிய காட்சிக்காக இப்படியான் உயரிய மதிப்பை பெற்ற்வர் இவர் ஒருவராக மட்டுமே இருக்க முடியும் . அதிலும் கூட முக்கியமான ஒரு ஷாட் .. மகாராணீயாக அவர் நாடக கொட்டகை விட்டு வெளியே வருவார் படை பரிவாரத்துடன் அவருக்கான் வாகனம் தயராக இருக்கும் வாகனத்துக்கும் இவருக்கும் இடையில் சிறு சகதி .. மகராணி என்ன செய்யப்போகிறாரோ என சுற்றியிருப்பவர்கள் அனைவரும் நடுங்கியபடி பார்த்திருக்க சட்டென இரு பக்கமும் குடைபோல கவிழ்ந்த பாவாடையை இரு கைகளாலும் சட்டென தூக்கி பிடித்து ஒரே தவ்வு தவ்வி வாகனத்தில் ஏறுவார் . தியேட்டரே அந்த ஒரு காட்சியில் சிரிப்பலையால் அதிரும். இது எழுதுவதற்கோ வாசிப்பிற்கோ சாத்ராணமாய் தோன்றும் இடம் ஆனால் நடிப்பிற்கு மிகவும் சிரமமான காட்சி . ஒரு மகாராணி அனாயசமாக சிறுபெண் போல் தாவி குதிப்பத்ற்கு பின் உள்ள வினயத்தை நன்கு உள்வாங்கி தோரணை குலையாமல் வெளிப்படுத்துவதில் நடிப்பு சார்ந்த பல தொழிநுட்ப சிக்கல்கள் உண்டு .சுற்றியிருப்பவர்களின் மரியாதையும் விலகக்கூடாது அதே சமயத்தில் கோபத்தையும் வெளிப்படுத்த கூடாது அதே சமயம் வண்டியிலும் ஏற வேண்டும் இது பாத்திரத்தின் உளவியல் ..காட்சிப்படி அதில் ஒரு ரசிகர்களின் கைதட்டலுக்கான் தேவையையும் நடிகையாக அவர் திருப்திபடுத்த வேண்டும் .. இதில் இயக்குனருக்கான பணி பாதி இருந்தாலும் அதை முழுமையாக நடித்து கொடுக்க ஒரு தெர்ந்த நடிகையால மட்டுமே முடியும் .. எட்டே நிமிடமானாலும் அவருக்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் விருது இந்த மிகச்சிற்ந்த நடிப்பின் பொருட்டுதான் ...இந்த மிகச்சிறந்த நடிகை20 வயதில் நடிக்க வந்தார் பாரட்டும் பரிசும் முதல் படத்துக்கே கிடைத்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை பிற்பாடு 50 வயதுக்கு பின் தான் மீண்டும் திரையுலகில் நடிக்க வாய்ப்புகள் வந்தன. திறமைக்கு வயது தடையல்ல என இன்றும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திவரும் 80 வய்தான ஜூடித் டென்ச்சுக்கு இந்த முகநூல் மூலம் சிறு கைகுலுக்கல் செய்வதில் வயது/ பால் கடந்து பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்

May 3, 2015

பெரியார் சாக்ரடீஸ் நினைவு விருது 2015

                                                     

திராவிடர் கழக  தூண்களில் ஒருவரான என்.ஆர் சாமி அவர்களின் பேரனும் சாமி திராவிட மணி மற்றும் ஜெயா அம்மையார் ஆகியோரின் மகனுமான பெரியார் சாக்ரடீஸ் அவர்கள் கடந்த 2014 ம் ஆண்டு மே 12 ம் நாள்  சாலை விபத்தின் காரணமாக 44ம் வயதில் உயிர் நீத்தார்.

பெரியார் திடல் மற்றும் விடுதலை நாளேட்டின் மக்கள் தொடர்பாளராகவும் பத்திரிக்கையாளராகவும் பணியாற்றிய தோழர் பெரியார் சாக்ரடீஸ் பிற்பாடு தமிழக அரசு இதழிலும் செய்தியாளராக  அரசுப் பணி செய்து வந்தார்.

சீரிய பண்பும் சிறந்த நுண்ணறிவும் பெரியார் கொள்கையை முன்னெடுத்துச் செல்வதில அளப்பரிய நேசமும், மனித நேயத்தின் பால் மாறாத பற்றும் கொண்ட சாக்ரடீஸ் அவர்கள் பெரியார் கொள்கையின் குணக் குன்றாகவே  வாழ்ந்து காட்டியவர் .

2011ம் ஆண்டு செம்மொழி மாநாட்டையொட்டி 100 தமிழ் அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்னாள் அமைச்சர் திரு. பரிதி இளம் வழுதி, ஆய்வாளர் டாக்டர் திரு,நாச்சி முத்து எழுத்தாளர் திரு. அஜயன் பாலா ஆகியரோடு இதழாளர் திரு பெரியார் சாக்ரடீஸ் அவர்களும் இணைந்து செம்மொழி சிற்பிகள் எனும் அரிய நூலை உருவாக்கி தந்து தமிழுக்கு தன் அரிய சேவையை செய்துள்ளார்.

இந்நூலை உருவாக்க் அவர் மேற்கொண்ட முயற்சிகளும் காட்டிய தீவிரமும் பட்டியலை உருவாக்குவதில் அவர் காட்டிய முனைப்பும் அவரது தமிழ்த் தொண்டுக்கும் தமிழ் அறிவுக்கும் சிறந்த சான்று. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே மகளுக்கு தமிழ் ஈழம் என பெயர் வைத்து அழகு பார்த்தவர்.

அவரது எண்ணமும் உணர்வும் தொடர்ந்து நம்மோடு இயக்கம் கொள்ள வருடா வருடம் சீரிய தொண்டாற்றி வரும் ஊடகம் மற்றும் இதழியல் பணியாளர்களில் ஒருவருக்கு அவர் பெயரில் ஒரு விருதை வழங்க உத்தேசித்துள்ளோம் .

அதன் படி அவரது முதல் நினைவு நாளாக எதிர்வரும் மே 12ம் தேதியன்று டிஸ்கவரி புக் பேலசில் ( முனுசாமி சாலை, கே கே நகர் சென்னை-78 ) மாலை 5.30  மணிக்கு நடைபெற விருக்கும் விழாவில் மேற்கொண்ட துறைகளில் சீரிய பணியாற்றிய இளைஞர் ஒருவரை  உங்களது பரிந்துரைகளின் பேரில் பரிசீலித்து விருதுக் குழுவின் மூலம் இறுதி முடிவு செய்ய இருக்கிறோம்.

கடவுள் மறுப்பு , சாதி ஒழிப்பு , சமூக முன்னேற்றம், பெண்ணியம் , பெரியார் தொண்டு,  இந்த கொள்கைகளை முன்னெடுத்துச் செல்லும் ஊடகத்துறை ( திரைப்படம் , தொலைக்காட்சி, பத்திரிக்கை , எழுத்து  குறும்படம் ஆவணப்படம்)  சார்ந்த ஆண் அல்லது பெண் யாரேனும் ஒருவரை  இந்த விருதுக்காக பரிந்துரை செய்யலாம்

ஒருவரே எத்தனை நபரையும் பரிந்துரை செய்யலாம்.

ஆனால் ஒருவரை ஒருமுறை மட்டுமே பரிந்துரை செய்யலாம்.

விருதுக்குரிய நபர்களின் தெளிவான புகைப்படம் அவர்களது துறையில் ஆற்றிய தொண்டுகளைக் குறித்த செய்திகள் அல்லது புகைப்படங்கள் காணொளித் துணுக்குகள் ஆகியற்றின் இணைப்புடன் ஒரு பக்க கடிதம் மூலம் தெரிவிக்கலாம் .

பரிந்துரைகளை  இணைய முகவரி மூலமாக மட்டுமே அனுப்ப வேண்டும்

தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி :

பரிந்துரைக்க வேண்டிய இறுதி நாள் :   10 05  2015 மாலை 6 மணி
                  இப்படிக்கு
                                                     பெரியார் சாக்ரடீஸ் விருதுக் குழு

நாதன் பதிப்பகம், 16/10,பாஸ்கர் தெரு, நேரு நகர் தசரதபுரம்,சென்னை 93, 044-45542637.

April 24, 2015

தமிழ் ஆலமரம் – ஜெயகாந்தன்

(கடந்த ஏப்ரல் 21 ம் தேதியன்று பனுவல் அரங்கத்தில் நடைபெற்ற ஜெகாந்தன் புகழஞ்சலிக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கட்டுரை – திருத்தப்பட்டது)


                 உலக வரலாற்றின் போக்கினை திசை திருப்பிய ஒரு சில மகத்தான புத்தகங்களுள்  மார்க்ஸின் மூலதனத்துக்கும் அடுத்தபடியாக போற்றப்படும் புத்தகம் சார்லஸ் டார்வின் அவர்கள் எழுதிய உயிரினங்களின் தோற்றமும் பரிணாம வளர்ச்சியும் எனும்  நூல்.
இருபதாம் நூற்றாண்டின்  உயிரியல்   கண்டுபிடிப்புகளுக்கெல்லாம் அடிப்படையாக விளங்கிய அந்நூlல் ஆதாம் ஏவாள் கதைகளை மறுத்து கடவுளின் இருப்பையே கேள்விக்குரியதாக்கியது.
ஆனால் அப்படிப்பட்ட நூலை எழுதியவரே   மத நம்பிக்கைகளுக்கு கட்டுப்பட்டவராக பயந்து வாழ்ந்தார். கடைசி வரை அவர் தன்னை ஒரு நாத்திகன் என அறிவித்துக்கொள்ள பயந்தார். . இன்னும் சொல்லப்போனால் கார்ல் மார்க்ஸ் அவர்கள் தன் மூலதனம் நூலுக்கு அவரைத்தான் முன்னுரை எழுதி தருமாறு கேட்டுக்கொண்டார் அப்போது அதற்கு அவசரமாக மறுப்பு தெரிவித்து ஏற்கனவே மதரீதியாக பல எதிர்ப்புகளை  நானும் என் குடும்பமும் சந்தித்து வருகிறோம் . இப்போதைக்கு இந்த புத்தகத்தின் முன்னுரை மூலம் மத சம்பந்தபட்ட ப்ரச்னைகளுக்குள் மேலும் தான் சிக்க விரும்பவில்லை மன்னித்து விடுங்கள் என எழுதியிருக்கிறார்..
டார்வின் கதையே இப்படியெனும் போது ஜெயகாந்தன் போன்ற எழுத்தாளர்கள் இறுதிக்காலத்தில்  ஹர ஹர சங்கர எழுதியதைக்குறித்தோ எனக்கு சாதிகள் மீது நம்பிக்கை இருக்கிறது என ரவி சுப்ரமணியன் எடுத்த ஆவணப்படத்தில் வாக்குமூலம் கொடுத்திருப்பதையோ நாம் பெரிதாக எடுத்து விவாதிக்க வேண்டிய அவசியமில்லை.
காரணம்  மனிதன் என்பவனே முரண்பாடுகளின் மூட்டை தான்
குறைகளுடன் கூடிய மனிதனே முழுமையானவன் ஆகிறான்
ஒரு மனிதனின் வாழ்நாள் முழுவதையும் மதிப்பீடு செய்யும் போது ஆப்பிளின் அழுகிய பாகங்களை கத்தியால் நறுக்கிவிடுவது போல  அவனது முரண்களை வெட்டி த்தள்ளிவிடவேண்டும். கையில் என்னமிஞ்சுகிறதோ அதுதான் அவன்

வாழ்க்கை முழுக்க ஒரே கருத்தை நம்பினால் அவன் எழுத்தாளன் இல்லை.அவன் அந்த கருத்தின் அடிமை .
காலம் தோறும் தன்னை சுற்றி நிகழும் சம்பவங்களுக்கேற்ப அவன் மாற வேண்டிய நிர்பந்தங்கள் அவனுக்குள் நிகழ்கிறது. அதன் தர்க்கங்கள் அவன் மட்டுமே அறிந்தவை .
ஒருவனது கருத்தை வேண்டுமானால் அவன் தீர்மானிக்கலாம்
பொது வாழ்வின் அரசியல் முகத்தை அவனுக்கு நேரும் சாதக பாதக அமசங்களும் மான அவமானங்களுமே தீர்மானிக்கின்றன.
பொதுவாழ்வில் அவரைப்பற்றி அறிந்த நாம் அவர் தனி வாழ்வில் என்ன மாதிரியான மனப் பிரச்னைகளை எதிர்கொண்டார்  அவருடைய கோபம் என்ன? அவமானங்கள் என்ன? தோல்விகள் என்ன? வருத்தங்கள் என்ன? கண்ணீர் என்ன? என்பது பற்றியெல்லாம் தேடப்போனால் ஒருவேளை இந்த முரண்களுக்கெல்லாம் விடை கிடைக்கலாம்.

கம்யூனிஸ்டாக இருந்து காங்கிரஸ்காரனாக மாறுவதும்
நாத்திகத்துக்காக இதிகாசங்களை படிக்க போய் அர்த்தமுள்ள இந்துமதம் எழுதுவதும்  எழுத்தாளன் திட்டமிட்டு நிகழ்த்துவதல்ல
ஒரு முறை அவரது தர்க்க முரண்கள் குறித்த கேள்விக்கு ஜெயகாந்தன் பதில் சொல்லும்போது
ஆமாம் அப்போது அப்படி நினைத்தேன் அப்படி எழுதினேன் .. இப்போது இப்படி நினைக்கிறேன் இப்படியாக எழுதுகிறேன்.
நான் யாரையும் போய் சட்டையை பிடித்து இழுத்து நான் சொல்வதை போல நட என உத்தரவிட்டதில்லை .. அப்படி நடக்கச்சொல்லி வற்புறுத்தியதும் இல்லை நான் நானாக இருக்கிறேன் நீங்கள் நீங்களாக இருங்கள்
என தன் நிலையை உறுதியாக தெரிவித்தார்.
இதுதான் ஜெயகாந்தன் . அவர் கடவுள் அல்ல அவரும் சாதாரண மனிதர்தான் . ஆனால் அவரைபற்றி பேசும்போது பலர் அவரை கடவுளாக ஆக்கிவிட்டார்கள் . அவருக்கிருந்த ப்ரச்னையே அவரை கடவுளாக பார்க்கும் அவரது நெருங்கிய வட்டம்தான். .

அந்த வட்டம் அவருக்கு தேவையாக இருந்தது.
அவர்கள் தான் அவரது திமிரின் ஊற்று ..
அந்த திமிர்தான் அவரது படைப்புகளின் ஊற்று

இதனால் அவர் தான் ஒரு எழுத்து கடவுள் என்பதை முழுமையாக நம்பினார்.விமர்சனங்களை அவர் ஏற்கமுடியாமல் போனதற்கும் இதுவே  காரணம்.

மனித வாழ்க்கை எப்படி அற்புதமானது .. அதை நாம் எப்படி அற்ப காரணங்களுகாக வீணாக்குகிறோம் என்பதை எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்

எழுத்து கொடுத்த திமிரில் எல்லா அதிகாரங்களையும் எதிர்த்து நின்றவர்
எதற்கும் வளைந்து கொடுக்காதவர் என பெயர் பெற்றவர்
இரும்பு வளையும் ஜெயகாந்தன் வளையமாட்டான் எனும் சொல்லுக்கேற்ப வாழ்ந்து காட்டியவர் .

இந்த தனித்த குணம்தான் ஜெயகாந்தன்.

அப்படிப்பட்ட நம்மை விட்டுசென்ற ஒரு மகத்தான் எழுத்தாளனை குறித்த நினைவுகூறல் நிமித்தமாக ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும் இந்த கூட்டம் பெருமை மிக்கது.

இந்த பெருமை மிக்க காரியத்தை நிகழ்த்தும் பனுவல் அரங்கத்திற்க்கு ஒரு எழுத்தாளனாக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

அதே சமயம் என்னையும் பெருமக்களோடு சக எழுத்தாளனாக பேச அழைத்தமைக்கு என் பணிவும் வணக்கங்களும்.

இங்கு வந்திருக்கும் அய்யா நெடுமாறன் அவர்களும், பேராசிரியர் வீ அரசு  தோழர் சிகரம்  செந்தில் நாதன்   அவர்களும் என்னிலும் வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர்கள் . அவர்கள் மட்டுமே கூட இக்கூட்டத்தின் நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் .,
என்றாலும் என் தலைமுறை சார்பாகவும் இக்கால எழுத்து சார் சூழலின் பிரதிநிதித்துவமாகவும் நான் பேசுவது சரியென்றே உணருகிறேன்
ஜெயகாந்தன் என்ற பெயர் என் கல்லூரி காலத்தில் மிகவும் என்னை கோபப்படுத்தியது.

அதற்கு இரண்டு காரணங்கள்

இலங்கைத் தமிழர் ப்ரசனை கொழுந்து விட்டு எரிந்துகொண்டிருந்த சமயத்தில் கல்லூரி மாணவர்களான நாங்கள் தீவிர போராட்ட களத்தில் இருந்தபோது அவர் ஐ பி கே எப் புக்கு ஆதரவாக சோ வுடன் இணைந்து ஊர் ஊராக கூட்டம் போடு பேசியபடி கடைசியில் எங்கள் ஊரான செங்கல்பட்டுக்கும் வந்திருந்தார்.
இது ஒரு காரணம்  

அதற்கும் முன்னதாக இன்னொரு காரணம் ஒரு பெண் தொடர்பானது . உண்மையில் அந்த பெண் அந்த கேள்வியை கேட்காவிட்டால் இன்று நான் எழுத்தாளனாகவே இருந்திருக்க முடியாது

கல்லூரியில் அப்போது என் தோழியாக இருந்த பெண் . அவளோடு நான் பேச வெகுநாட்கள் முயற்சித்து கடைசியில் ஒரு  சனிக்கிழ்மை மதியம் அவள் எனக்கு பேச சம்மதித்து காத்திருந்தாள். மிகவும் பதட்டமான அந்த சந்திப்பில் அவள் கேட்ட முதல் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாமல் திணறிவிட்டேன்., ஜெயகாந்தன் கதைகளை பற்றி என்ன நினைக்கிறீர்கள் . அவருடைய கதைகளில் என்ன என்ன படித்திருக்கிறீர்கள்.  எனக்கு இந்த கேள்வி கொஞ்சம் அதிர்ச்சியளிக்க கூடியதாக இருந்தது. கல்லூரி இலக்கிய போட்டிகளில் நான் அடிக்கடி கலந்து கொண்டதால அவள் அந்த கேள்வியை கேட்டிருக்கவேண்டும். ஆனால் அப்போது பாலகுமாரன் இரும்புக்குதிரைகள் புகழ்பெற்ற சமயம் . சுஜாதா பட்டுக்கோட்டை பிரபாகர் ,ராஜேஷ்குமார் இவர்களை மட்டுமே படித்து வைத்திருந்த எனக்கு ஜெயகாந்தன் பெயர் அறிமுகமாயிருந்ததே தவிர எதையும் வாசிக்க நேரவில்லை. என் அம்மா மட்டும் அடிக்கடி அவரது புத்தகங்களை வாசிப்பதை பார்த்திருக்கிறேன். மேலும் அக்காலத்தில் ஊடகங்களில் அவர் பரபரப்புகள் முடிந்து சுஜாதா பால்குமாரன் பற்றிய பேச்சே அதிகமாக இருந்த நேரம்.

அதன் காரணமாகவொ என்னவோ நான் ஜெயகாந்த்னை படிப்பதற்கான சூழல் நேரவில்லை. அதன் பிறகு  அந்த சந்திப்பு முழுமையாக தொடரவில்லை. முதல் கேள்விக்கே ஒழுங்காக பதில் சொல்லாமல் பேச்சை மென்று முழுங்கிவிட்டதால் அந்த நட்பூ வலுவானதாக அமையவில்லை.
ஜெயகாந்தன் என்ற பெயரை யாராவது சொன்னால் நெடுநாட்களுக்கு அந்த பெண் என்னிடம் கேட்டதும் அவளுக்காக நான் கல்லூரியில் வகுப்புக்கே செல்லாமல் காத்திருந்த காலங்களுமே ஞாபகத்துக்கு வரும்
அதன் பிறகு ஜெயகாந்தனை நான் நூலகங்களில் தேடப்போக கூடவே ஜானகிராமன் புதுமைப்பித்தன் செல்லப்பா மவுனி மற்றும் சுந்தர்ராமாசாமி வண்ணதாசன் வண்ண நிலவன் என புதிய உல்கமே திறக்க துவங்கியது. பிற்பாடு இதுவே என் வாழ்க்கையின் திசையை தீர்மானித்து எழுத்தாளனாகும் கனவை எனக்குள் விதைத்து,

ஒருவகையில் இன்று  எழுத்தாளன் என்ற பெயர் எனக்குள் ஒட்டிக்கொண்டிருக்குமானாள் அதற்கு ஜே கே எனும் ஆளுமையும் ஒரு முழு முதற்காரணம. அவ்வகையில் இகூட்டத்தை அந்த மிகப்பெரிய ஆளுமைக்கு நான் நன்றி தெரிவிக்கும் வாய்ப்பாக பயன்படுத்த விழைகிறேன்.
துவக்க காலத்தில் அவருடைய சிறுகதைகள் எனக்கு ஈர்க்கவில்லை. நான் மட்டுமல்ல என் சார்ந்த இன்றைய தலைமுறைகள் பலருக்கு ஒரு புதுமைப்பித்தன் குபாரா போல ஜே கே வின் சிறுகதைகளில் வசீகரமில்லை என்பதே உண்மை.

ஆனால் என்னை மிகவும் ஈர்த்த புத்த்கம் ஒரு இலக்கிய வாதியின் அரசியல் அனுபவங்கள்  தொடர்ந்து அவருடைய இஅல்க்கியவாதியின் சினிமா அனுபவங்கள் நூலையும் வாசித்தேன்.

தமிழக வரலாற்றை முழுமையாக ஒருவன் புரிந்துகொள்ள வேண்டுமானால் கண்ணதாசன் எழுதிய வனவாசம் ஜே கே அவர்களின் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் இரண்டையும் வாசித்தால்தான் அவனுடைய புரிதல் முழுமையடையும் . அந்த அளவிற்கு ஜே.கே அந்த புத்த்கத்தில் என் அரசியல் புரித்லைவளர்த்தெடுத்தார்.

தொடர்ந்து அவர் பற்றிய தகவல்கள் அவர் பேசிய பேச்சுக்களின் உரைகள் ஆகியவற்றை வாசிக்க வாசிக்க அந்த பிரம்மாண ஆளுமை என்னை வசீகரித்துக்கொண்டேயிருந்தது. பிற்பாடு அவர் ஆசிரியராக பணி புரிந்த ஞான ரதம் சிற்றிதழ் தொகுப்பு வாசிக்க கிடைத்தபின்  அதில் வந்த பல கடிதங்கள் அவரது நாவல்களை விமர்சித்து எழுதப்பட்டிருக்க அத்ன் பின் தொடர்ந்து அக்னி பிரவேசம் சில நேரங்களில் சில மனிதர்கள் கங்கை எங்கே போகிறாள் என தொடர்ந்து வாசிக்க துவங்கினேன் . அவரது சிறுகதைகள் என்னை இப்போது ஈர்க்க துவங்கின .

துவக்கத்தில் என்னை வசீகரிக்காத அதே ஜெயகாந்தன் பின் துரத்திசென்று படிக்குமளவிற்கு வசீகரிக்க துவங்கினார்.  இப்போது பார்க்கும் போது அவர் கடந்தநூற்றாண்டு தமிழ் கலாச்சார வரலாற்றை தாங்கிகொண்டு நிற்கும் பிரம்மாணட துணாக  தெரிகிறார்.

ஒரு எழுத்தாளன் இருப்பு என்னது எத்தனை உயர்நத்து என தன் வாழ்க்கை மூலம் நிரூபித்துக்கட்டியவர்.

அவர் அளவுக்கு தன் மானத்துடன் வாழ்ந்த எழுத்தாளன் தமிழ் நாட்டில் எவரும் இல்லை என உரத்து சொல்ல முடியும்.

அதே போல அவர் அளவுக்கு  வாழ்க்கையை அணு அணுவாக ரசித்து தன் போக்கில் சுதந்திரமாக வாழ்ந்தவர் எவரும் இல்லை.

பணம் கொழித்துகிடக்கும் அம்பானிகள் கூட அவரைபோல அத்தனை ரசித்து வாழ்ந்திட முடியாது .

அவரது வாழ்க்கை பூரணமான வெற்றி என்பதற்கு இதுவே சான்று
மறைந்த சின்னகுத்தூசி அய்யா அவர்களை  அவர் அப்போது வசித்த திருவல்லிகேணி மேன்ஷன் அறையில் ஒரு கட்டுரைக்காக சந்திக்க நேர்ந்த்து.. அவரோடு முதல் சந்திப்பாக இருந்த காரணத்தால் புது எழுத்தாளர்கள் பற்றி பேச்சு துவங்கி சட்டென இப்பல்லாம் எவனையாவது எழுத்தாளர்னு சொல்லமுடியுமா என சொல்லி ஜெயகாந்தனை பற்றி பேசத் துவங்கினார்.

அப் போது ஜெயகாந்தன் பழகிய பயணம் செய்த அனுபவங்களை விலாவரியாக கூறிக்கொண்டிருந்தார். கிட்டதட்ட மூன்று மணிநேரம்  ஒரு பெரு மழை போல அவரோடு சந்தித்த தருணங்கள் பயணம் துவங்க காரணம் என ஒவ்வொரு நொடியையும் தன் ஞாபகத்திலிருந்து எங்கே இறங்கினார்கள் எங்கே குளித்தார்கள் எப்படி சாப்பிட்டார்கள் .. அவர் எப்படி பாடினார் யார் யாரிடம் எப்படி பேசினார் என விலாவாரியாக் கூறினார் . ஒரு காதலன் தன் காதலியைகூட அப்படி வர்ணிக்க மாட்டான். நான் கூட இவர் கொஞ்சம் ஓவராக பில்டப் கொடுக்கிறாரோ என அப்போது நினைத்தேன் . ஆனால் பிற்பாடு அதே போன்ற அனுபவத்தை பலரும் சொல்லகேட்டேன் . 

தற்போது தமிழ் இந்து வில் அது குறித்து அவரது ரசிகர் ஒருவர் அதே போல ஒரு தொடரையே எழுதியதை வாரா வாராம் படிக்கிற போது அன்று மேன்ஷன் அறையில் அவர்  சொல்லியது தான் என் ஞாபகத்துக்கு வருகிறது.இதை போன்ற ஒரு வசீகரம் தமிழில் எந்த எழுத்தாளருக்கும் கிடையாது.

புதுமைப்பித்தனை சொல்வார்கள் ஆனால் வாழ்க்கை முழுக்க நொந்து நூலானவர் . வெறும் கறுப்பு ஹாஸ்யம் அவருடைய வாழ்க்கை  அடுத்து ரசிக மணி டிகேசி யை குறிப்பிடுவார்கள். ஆனால் அவர்களும் கூட ஜெயகாந்தன் போல தன்னை சுற்றியிருப்பவர்களை காந்தமாக சுற்றி சுழலச்செய்திருப்பாரா என்பது சந்தேகமே.

அதே போல ஜெயகாந்தன் என்ற படைப்பாளீயின் தாக்கம் பற்றி நினைக்கும் போது இருபதாம் நூற்றாண்டை தாங்கி நிற்கும் விழுதுகள் பல நிறைந்த பிரம்மாண்ட ஆல்மரம் என்ற படிமமே வருகிறது
அவரது  பின்னால் தொங்கும் பிடறி மயிர்கள் மயிர்கள் அல்ல ஆலம் விழுதுகள். ஒரு ஐம்பது வருட தமிழ் கலாச்சார நினைவோட்டமே அந்த முடிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல.

நான் சமீபத்தில் ஹைதராபாத் சென்ற போது அங்கிருந்த பல உதவி இயக்குனர்களையும் ஓவிய கலைஞர்களையும் சந்தித்து அளவளாவினேன்
அவர்கள் அனைவருமே தங்களது சமூகத்தில் சிந்தனை மரபே இல்லை வரலாறு குறித்த பிரக்ஞை இல்லை.. இலக்கியம் குறித்த ஓர்மை இல்லை என வருத்தப்பட்டனர்.

அவர்களோடு ஒப்பிடும் போது தமிழ்ர்கள் அனைவரும் இன்று பல்வேறு குழுக்களாக பிரிந்திருந்தாலும் ஒருஒரு நெடிய சிந்த்னை மரபின் தொடர்ச்சியாகவே தெரிகின்றனர்.

பாரதிக்கு பிறகான தமிழ் இலக்கிய மரபு  பாரதி தாசன் வழியிலான மரபிலக்கியமாகவும், வாரா மணிக்கொடி நவீன இலக்கியமாகவும்  இரண்டு விதமாக பிரிந்து இயங்க துவங்கிய போது முன்றாவது பிரிவாக பொதுவுடமை சார் இலக்கிய மரபாக ஜீவா, தமிழ் ஒளி ,விந்தன் என ஜெயகாந்தன் மரபாக பிரிந்து செழித்து வளர்ந்தது.

ஜெயகாந்தனின் புகழுக்கு காரணம் என்ன என்பதை ஒற்றை வரியில் சொல்வதாக இருந்தால்  எளியமக்கள் மீதான் கரிசனம்
நேரு உருவாக்கிய ஐந்தாண்டு திட்டங்களின் காரணமாக் வேளான் சமூகம் தொழில் சார்ந்த நகரங்களை உருவாக்கிய  காலத்தில் பல கிராமங்கள் நகரத்தை நோக்கி ஒன்றுசேர நகரத்தில் வேலைக்காரிகள் ரிக்‌ஷாக்கார்ர்கள் லட்டிட்தொழிலாளார்கள் ,

 உழைப்பாளிகள் பார வண்டி சுமப்பவர்கள் என புதிய உயிரினக்கள் தோன்றலாயினர் . சென்னை நகரமுமிது போன்ற உயிரின்ங்களை அதிகமாக உற்பத்தி செய்ய துவங்கியது .இவர்கள் மனிதர்களாக்வே மதிக்கப்படாத ஒரு காலத்தில் ஜெயாகந்தன் எழுத்து அவர்களை நாயகானகாகவும் நாயகையாகவுமாக்கி அவர்களது ப்ரச்னைகளை பாடுகளை பேசி இந்த சமூகத்க்தை சிந்திக்க வைத்த்து .

ஜெயகாந்தனது சிறுகதைகளின் சிறப்பு என்றால் இதுதான்

இன்று பார்க்க போனால் அவரது கதைகள் ஒற்றை பரிணாமத்தில் மட்டுமே இருப்பதாக இலக்கிய விமர்சங்கள் குறை கூறக்கூடும் \
ஆனால் இந்த ஒட்டு ,ஒத்த சமூகத்தின் மனப்போக்கை திசை திருப்பும் பணியை அவர் தன் சிறுகதைகள் மூலம் மேற்கொண்ட காரணத்தால் அவர் இலக்கியபணீ என்பதைகாட்டிலும் மக்கள் பணியாகவும் சமூகபணியாகவும் தன் கதை எழுதும் பணியை தோளில் ஏற்றிக்கொண்டார் .

இன்று தான் திருநங்கைகளின்  மேல் கொஞ்சமாவது கரிசனம்  கொள்கிது இந்த சமூகம் . ஆனால் அவர் அப்போதெ பவுனு என்ற கதையின் மூலம் தன் கரிசனத்தை  வெளிப்படுத்தினார். தற்கு அப்போது எதிர்ப்புகள் கிளம்பியபோது நான் கறுப்புத்துணிக்குள் வைரத்தை வைத்திருக்கிறேன் பலருக்கு வெறும் கறுப்புதுணி மட்டும் தெரிந்தால் அதற்கு நான் பொறுப்பில்லை எனகூறினார்.

அவர் போல எதிர்ப்பை சந்தித்த எழுத்து எவருடைய்தும் இல்லை
ரிஷி மூலம் நாவல் வெளியான போது அதை வெளியிட்ட வார இதழ் இனி இது போன்ற கதைகள் வராது என வாசகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்ட்தாக வரலாறுகள் கூறுகின்றன.

அக்னி பிரவேசம் என்ற கதை ஆயிரம் ப்ரச்னைகளை கொண்ட்து \
இன்று ஒருபெண்ணிய நோக்கில் பார்க்க போனால் அது ஆணாதிக்க கதையாக கூற அதில் பல கூறுகள் உண்டு.

குற்றம் செய்த ஒருவனை பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் குற்த்திற்கு ஆளாக்கப்பட்ட பெண்ணை பற்றிய அந்த கதை ஒருவகையில் பார்க்கப் போனால் ஒருதலை பட்சமானது. வெறும் காமுகன் என்ற ஒற்றைச்சொல்லோடு சந்தர்ப்பத்தை குற்றவாளியாக்கிவிட்டு ஜெயகாந்தன் பெண்னின் வீட்டுக்கு வந்த அவளது அம்மாவையும் அவர்களது அண்டைவிட்டையும் குற்றபடுத்துகிறார்.

உண்மையில் கதையின் நாயகி பாதிக்கப்பட்ட பெண்னான கங்காவின் அம்மாதான் . அவள்தான் மகளை குளிப்பாட்டி அக்னி பிரவேசம் செய்கிரார்
ஆனால் இக்கதையின் தொடர்ச்சியாக அவர் எழுதிய சில நேரங்களில் சில மனிதர்கள் கதையில். அதே மகளான கங்கா அன்று மட்டும் நீ கூச்சல் போடாவிட்டால் இன்று என் வாழ்க்கை பிரசனையே இல்லாமல் போயிருக்கும் எனக்கூறி அந்த தாயை களங்கபடுத்துகிறார்.

ஒருவேளை அக்கதை நான் சொல்வது போல குற்றவாளியின் பக்கமாக திரும்பி அவனுக்கு பிற்பாடுதான் தெரியவருகிறது தன்னால் மழை இரவில் உறவுக்குட்படுத்தப்பட்ட பெண்  எப்போதோ பிரிந்து போன தன் தம்பியின் பெண் என தெரிய வந்து அவன் பைத்தியமாகி திரிந்து சாவது போல முடித்திருக்கலாம்.

ஆனால் இப்படியாக முடித்திருந்தால் இக்கதை இவ்வளவு பேசப்பட்டு இவ்வளவு வாசிக்கப்பட்டிருக்குமா தெரியவில்லை
கதை கோரும் எந்த முடிவுகளையும் முன் வைத்து அவர் கதைகளை நகர்த்துவதில்லை.

இன்னும் சொல்லப்போனால் எதற்கும் அடங்காத அவரது திமிர் கதைகளின் வரையறைக்கும் அடங்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்
அதனால்தான் பல கதைகள் தன்போக்கில் சென்று தனாக கதையை தீர்மானித்துக்கொள்வதாக அமைந்திருக்கின்றன.

அக்கதைகள் இலக்கிய மதீப்பிட்டை காட்டிலும் சமூகத்தில் புரையோடிக்கிடந்த பல அழுக்குகளை அடித்து துவைப்பதில் காரணமும் கவனமும்  கொண்டிருந்தன.அதனாலேயே அக்கதைகளில் பெரும் அதிர்ச்சியூட்டும் வெடி மருந்துகள் திணிக்கப்பட்டிருந்த்ன
ஒவ்வொரு வாரமும் அக்காலத்தில் அவரது கதைகளை  படித்த தமிழன் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகினான்.

ஒரு சிறுகதை எழுத்தாளனாக இருந்து இவ்வளவுதூரம் ஒரு சமூகத்தை தன் வசப்படுத்திய பெருமை இந்திய மொழிகளில் வேறு யாருக்குமே இல்லை என்பது உறுதி. 

இந்திய எழுத்தாளர்களில் தங்களது கதைகள் மூலம் அழியாப்புகழைபெற்ற பிரேம் சந்த , யூ ஆர் அனந்த மூர்த்தி பஷீர், மற்றும் மகாஸ்வேதா தேவி ஆகியோருக்கு இணையாக வைத்து போற்றப்படவேண்டியவர் .  . ஜெயகாந்தனுக்கும் இவர்கள் நால்வருக்குமான ஒற்றுமை  அனைவருமே ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை கதைகளாக எழுதி புகழ்பெற்றவர்கள
ஆனால் அவர்களும் கூட ஜெயகாந்தனைபோல ஒரு சிங்கத்தை போன்ற துணைச்சலான வாழ்வையும் சமூகத்தின் இத்தகைய பெருமதியையும் பெற்றிருப்பார்களா என்பது சந்தேகமே .

பொதுவாக ஒரு எழுத்தாளனுக்கு அவன் இறந்தபின் மட்டுமே கிடைக்க்கூடிய அத்தனை பரிவாரங்களும் பரிவட்டங்களும் வாழும் போதெ பெற்ற ஒரே தமிழ் எழுத்தாளன் ஜெயகாந்தன் ஒருவராக மட்டுமே இருக்க முடியும் .
ஜெயகாந்தன் என்ற எழுத்தாளன் தமிழகத்தின் அனைத்து எழுத்தாளருக்கும் ஒரு சிவப்பு கம்பளத்தை உருவாக்கி கொடுத்தார். 

ஆனால் அதை எத்தனை பேர் பயன்படுத்த வாய்ப்பிருக்கிறது என தெரியவில்லை எழுத்தாளன் எப்படி இருக்கவேண்டும் என்பதான் ஒரு மாய தோற்றத்தை சித்திரமாக வரையத்துவங்கினால் அந்த சித்திரம் முடியும் போது அது காட்டும் உருவம் ஜெயகாந்தன் என்ற மகத்தான் மனிதரின் உருவமாக மட்டுமே இருக்க முடியும் .

ஜெயகாந்தன் என்ற பெயரை நான் வியக்க காரணம் எல்லாம் மனதிற்கு பட்ட்தை பட்டவர்த்த்னமாக உடைத்துசொல்லும் அந்த தைரியம்

இத்தனைக்கும் நான் பெரியாரை என் உயிரினும் மேலாக மதிப்பவன்.
திருவள்ளுவருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் நான் போற்றும் மகத்தான மனிதர்.

அன்றைய சூழலில் தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருந்த அபிமானத்திற்கு அளவே இல்லை ,

 அவரையே ஒரு கூட்டத்தில் அவரது கருத்தை மறுத்து பேசி ஒரு எழுத்தாளனின் கட்டற்ற கருத்து சுதந்திரத்தை நிலைநாட்டிய பெருமை ஜெயகாந்தனுக்கு உண்டு. அவர் பேசியதில் நமக்கு மாற்று கருத்து இருக்கலாம் . . இன்னும் சொல்லப்போனால் மாற்று கருத்தாளர்களை ஜெய்காந்தன் கூட மதிப்பாரா தெரியாது ஆனால் பெரியார் மதிக்க கூடியவர்.
ஆனாலும்  ஒரு எழுத்தாளனாக தன் கருத்தை நிலையூன்றச்செய்ததில் ஜெயகாந்தன் தனித்துவமிக்கராக மிளிர்ந்தார்.


அதே போல அண்ணாவின் மறைவின் போது கண்ணதாசனின் வறுபுறுத்தலுக்கிணங்க அஞ்சலிகூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசிய பேச்சு  தமிழகத்தின்  குறிப்பிடத்தக்க மேடைபேச்சுக்களில் ஒன்றாக இன்றும் கூறப்படுகிறது. 

இப்படியெல்லாம் ஜெயகாந்தன் மறுத்து பேசிவிட்டதால் பெரியாரும் அண்ணாவும் சிறுமைப்பட்டதாக அர்த்தமில்லை.

அது அவர்கள் மேல் வெறுப்பை கொண்டவர்களுக்கு வேண்டுமானல் திருப்தியுறச்செய்யலாம் . 

ஆனால் நான் அப்படியாக பார்க்கவில்லை
ஒரு எழுத்தாளனின் கலைஞனின் மனோதர்மத்தையே அதில் பார்க்கிறேன் .

ஒருவர் இறந்துவிட்டதால் அதற்காக நேற்றுவரை நான் அவர்கள் மீது கொண்ட அபிப்ராயத்தை  ஒரே இரவில் மாற்றிக்கொள்ள முடியாது எனக்கூறும் அவரது மனோதர்மம் தான் இதில் நாம் வியக்கதக்க அம்சம்
மனித சமூகமே அண்டிபிழைப்பதிலும் இச்சி பிழைப்பதிலும் ஓடிக்கொண்டிருக்கும்போது பெரியார் கற்றுத்தந்த சுயமரியாதையும் கருத்துசுதந்திரமும் முழுமையாக பயன்படுத்திய ஒரு எழுத்தாளனின் துணிச்சலாகத்தான் அதைக்கண்டு வியக்கிறேன் .

இத்தனைக்கும் அண்ணாவின் மரணத்துக்கு கூடிய கூட்டம் கின்னஸ் சாத்னை . வரலாறு காணாத மக்கள் வெள்ளம்

அப்படியான சூழ்லில் அவரைக்குறித்து மறுத்துபேச ஜெயகாந்தனுக்கிருந்த துணிச்சல்தான் இன்று எழுத்தாளர்கள் அனைவரும் கருத்திலேற்கவேண்டியது 

ஈவு இரக்கமே இல்லாமால் கருத்துகளுக்காகவே வாழ்ந்த துணிச்சல் மிக்க இமயம் ஒத்த மகத்தான எழுத்தாளன் என ஜெயகாந்தனை நினைத்து இறுமாந்து வியக்க தோன்றுகிறது.

இப்படிபட்ட மகத்தான் எழுத்தாளனுக்கு செய்யப்படும் மரியாதை வெறும் இது போன்ற கூட்டங்கள் மட்டுமே அல்ல. மாறாக அவருக்கு இந்த மாநிலமே வியக்கும் மகத்தான் ஒரு சிலை நிறுவுவதல் வேண்டும்.

இந்த சமூகத்தில் இப்படி ஒரு எழுத்தாளன் இருந்தான் வாழ்ந்தான் இறந்தான் என்பதை மக்களுக்கு வலியுறுத்தும் வகையில் அந்த சிலை இருக்கவேண்டும்
சென்னையில் அடிமைபட்டுத்திய பல ஆங்கிலேயர்களின் சிலை இருக்கிறது
அந்த சிலைகள் எல்லாம் நாம் இன்னமும் அவர்களின் அடிமை என்பதை உணர்த்துகிறதே தவிர அதனால் ஒரு காரியமும் இல்லை.

அதில் ஏதாவது ஒன்றை தூக்கிவிட்டு அந்த இட்த்தில் ஜெயகாந்தனுக்கோர்  சிலை வைப்பதால் தமிழகத்தின் நிலை உயருமே தவிர தாழ்ந்துவிடாது

இந்த சமூகத்துக்கு சிவற்றை இப்படித்தான் உணர்த்த வேண்டியதாக இருக்கிறது காரணம் இது சுரணை கெட்ட சமூகம்.

எழுத்தார்களையும் கலைஞர்களையும் மதிக்க தெரியாத சமூகம்
அப்படி மதிக்க படவேண்டுமானால் அவன் சினிமாக்காரனாக இருக்கவேண்டும் என எதிர் பார்க்கும் சமூகம்.

 ஜெயகாந்தன் மறைவுக்கு சென்ற போது  பெசண்ட நகர் மயானத்திற்கு வந்திருந்தவர்கள் வெறும் 100 பேர் மட்டுமே.

காலம் முழுக்க அவரது தன்னிச்சையான கருத்துக்கு இந்த சமூகம் கொடுத்த பரிசு இந்த நூறு பேர் மட்டுமே.

காலத்தின் புகழ்பெற்ற  எழுத்தாளனுக்கு சமூகம் கொடுக்கும் பரிசு 100 பேர்

நல்ல வேளையாக எழுத்தாளனுக்கு அவர் எழுதியது போல சமூகம் என்பது 4 பேராக இல்லாமல் 100 பேராக இருப்பது வரை மகிழச்சிதான் .

பகல் மீன்கள் - பாகம்; 1

பகல் மீன்கள் அஜயன் பாலா தேன் மொழிக்கு   கோபம் சட்டென பொத்துக்கொண்டது . ’ இல்லை நீங்க என்னை சட்டுனு இப்படி தொட்டது தப்பு...