May 6, 2017

அணில் அகன்ற முன்றில் - மா அரங்கநாதன் அஞ்சலி :



                                      -அஜயன் பாலா
1
எனது துவக்க கால சென்னை வாழ்க்கையின் தவிர்க்க முடியாத ஒரு ஆளுமை மா. அரங்கநாதன் அவர்கள்.  தமிழின் குறிப்பிடத்தக்க தனித்துவமான சிறுகதை எழுத்தாளர் .தமிழர் மரபு தொன்மம் பண்பாடு குறித்து தொடர்ந்து சிந்தித்தும் எழுதியும் வந்தவர். அவர் நடத்தி வந்த முன்றில் சிறு பத்ரிக்கை நவீன இலக்கியத்திற்கான சிறந்த பங்களிப்பு.
அவரது மறைவு செய்தி முகநூல் வழியாக அறிய வந்தபோது ரயிலில் மகராஷ்ட்டிரா மாநிலத்தின்   சோலப்பூரை கடந்துகொண்டிருந்தேன்.  கல்லூரி வாழ்க்கை முடிந்து வாழ்க்கை குறித்த மிகபெரிய கேள்வியுடன் நகரம் எனும் பிரம்மாண்டத்தின் முன் பலஹீனமாய் நான் நின்றுகொண்டிருந்த காலத்தில் எனக்கு அறிமுகமானவர் மா. அரங்கநாதன்  சென்னையில் வாழ்க்கையை துவக்கிய முதல் மூன்று ஆண்டுகளில் கிட்டத்தட்ட  தினமும் மாலை பொழுதுகளில் அவரை சந்தித்து கவிதை இலக்கியம் சினிமா என பலவற்றையும் குறித்து உரையாடி வளர்ந்திருக்கிறேன் .அவர் அப்போதுதான் தன் மாநகராட்சி பணியிலிருந்து ஓய்வு பெற்று முழு இலக்கியவாதியாக தன்னை மாற்றிக்கொண்டிருந்தார். நானோ அப்போதுதான் வாழ்வின் துவக்க காலத்திலிருந்தேன்..தலையின் நரை போல பழுத்த அனுபவம் அவரிடமிருந்தது . எங்களது உரையாடல் வழி அந்த அனுபவத்தை நான் சிறுவனாக அவரிடமிருந்து திருடிக்கொண்டிருந்தேன். அவருக்கும் எனக்குமான உறவின் ஆரம்ப புள்ளியை தேடி  கடந்த காலங்களில்  மனம் பயணிக்க துவங்கியது. .


2
அப்போது நான் செங்கல்பட்டில் வசித்துக்கொண்டிருந்தேன். என் திருக்கழுக்குன்றம் இலக்கிய நண்பர்கள் மூலமாக தீவிர வாசிப்புக்கு தயாராகியிருந்தேன். என் அறிவுப்புலம் முழுக்க பட்டாம்பூச்சிகள் லட்சகணக்கில் சிறகடித்துக்கொண்டிருந்த காலம்.   .சாலையில் நடக்கும் போது எதிர்படும் மனிதர்கள் அனைவரையும் விட  ஒருபடி உயர்ந்தவனாக ஒரு கர்வம் . அவர்களுக்கு தெரியாத நகுலன் புதுமைப்பித்தன் தி,ஜானகிராமன்  அவர்களுக்கு தெரியாத ஜே ஜே . ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி எனக்குத்தெரியும்  என்பது போன்ற கர்வம். அப்படியான காலத்தில்தான்  .தேரோடும் வீதி படித்துவிட்டு திருவனந்தபுரம் போய் நீல பத்மனாபனை அவரது மின் வாரிய அலுவலகத்தில் சந்திக்க சென்றேன் . .உரையாடலின் நடுவே  முன்றில் எனும் பத்ரிக்கையை காட்டி  மா. அரங்கநாதன் பேரை முதன் முதலாக சொல்லி சென்னையிலிருந்து வருகிறது என்று கூறி அதன் ஒரு பிரதியையும் கையில் கொடுத்தார் .பக்கம் தானே  முடிந்தால் அவரை சந்தியுங்கள் என்றும் அறிவுறுத்தினார். சிவப்பு நிற அட்டையில் கோணல் மாணலாக முன்றில் என வித்தியாசமாக எழுதப்பட்டிருந்தது.
3
இரண்டு மாதம் கழித்து எதேச்சையாக எங்கள் குடியிருப்பின் வளாகத்தில் எங்கள் வீட்டின் எதிர்வீட்டுக்கு  புதிதாக குடிவந்த ஒரு இளைஞன் அதே சிவப்பு நிற அட்டையுடனான முன்றில்  சிறு பத்ரிக்கையை வைத்துக்கொண்டு வாசிக்க எனக்கோ அதிர்ச்சி ,அவசரமாக நான் வீட்டினுள் சென்று நீல பத்மநாபன் கொடுத்த முன்றீலைத் தேடினேன். என் பிரதி வீட்டில் இருந்தது. அதுவரை இந்த செங்கல்பட்டிலேயே நாம் ஒருவர்தான் அறிவாளி என்ற  மிதப்பில் இருந்த என் நிலைப்பில்  முதன்முறையாய் மண். எத்தனையோ தெருக்கள்  எத்த்னையோ வீடுகள் கொண்ட செங்கல்பட்டில்  சரியாக என் காம்பவுண்டுக்குள் என் வீட்டின் எதிரேயே ஒரு அறிவுஜீவியா. என்னால் இந்த அதிர்ச்சியை தாங்கவே முடியவில்லை.  நானும் அவனுக்கு போட்டியாக கையிலிருந்த முன்றில் புத்த்கத்தை எடுத்துக்கொண்டு வாசலில் சென்று அமர்ந்தேன்.  கையோடு அவன் இந்த முன்றிலை பார்த்து அதிர்ச்சியடைய போகும் கணத்தை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்த்படி . ஆனால் அவன் அதை பார்த்தும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் உள்ளே சென்றதும் எனக்கு இன்னொரு அதிர்ச்சி .
பிற்பாடு அடுத்த சில நாட்களீல், பேசி பழக ஆரம்பித்தபிறகு  பேர் வாசு என்றார். அந்த பெயர பிற்பாடு அகநாழிகை  பொன் வாசுதேவன் என்றானது அப்போது அவன் சென்னையில் படித்துக்கொண்டிருந்த காரணத்தால் இலக்கிய உல்கம் அவனுக்கு பரிச்சயம்  அடிக்கடி தான் பார்த்த எழுத்த்காளர்களை பற்றி சொல்வான். ஒருநாள் அவந்தான் முன்றில் சிறுபத்ரிக்கை மூன்று நாள் இலக்கிய கருத்தரங்கு நடத்த போகிறார்கள் அங்கு சென்றால் பல எழுத்தாளர்களை நேரில் சந்தித்து பேசலாம் எனக்கூறினான். மூன்று நாள் சென்னையில் போய்வர செலவாகுமே என யோசித்த போது அதில் வாலண்டியராக பணிசெய்ய விருப்பமுள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்திருகிறார்கள் .அவர்களுக்கான கூட்டம் மாம்பலத்தில் நடக்கிறது. வா இருவரும் அதில் சேர்ந்துவிட்டால் மூன்றுநாளும் அங்கேயே அவர்களுடன் தங்கிக்கொள்ளல்லாம், என்றான் .
4,
பத்து பேர் வந்த கூட்டத்தை அரங்கநாதன் மகன் மகாதேவன்( இப்போது நீதியரசராக பொறுப்பிலிருப்பவர். ) உடன் ராம்ஜி என்ற நண்பர் ( இப்போது என்ன செய்கிறார் என தெரியவில்லை . தீவிரமான இலக்கிய ஆர்வலர் கவிதை எழுதுபுவர்) இருவரும் நிகழ்ச்சி  நடக்கும்போது வாலண்டியர்கள் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்னென்ன பணிகள் செய்யவேண்டும் என பேசினர். ஏறக்குறைய தமிழின் முக்கிய எழுத்த்காளர்கள அனைவருமே பங்கேற்கபோகும் செய்தி எனக்கு பெரும் மகிழ்ச்சியையும் ஒரு வித சாகச உணர்வையும் கொடுத்து. நிகழ்ச்சியின் போது  தேநீர் உபசரிக்கும் பணி எனக்கு வழங்கப் ப்ட்டது. கூடுதலாக எழுத்தாளர்களை விடுதியிலிருந்து நிகழ்ச்சி நடக்கும் காதி பவனுக்கு ஆட்டோவில் அழைத்து வரும் பணியும் இரவில் எழுத்தாளர்கள் தங்கியிருக்கும் ஐகஃப் விடுதியில் அவர்களுக்கான உணவு இத்யாதிகளை கவனிக்கும் உப பொறுப்பும்
முன்றில் முகாமில் எழுத்தாளர்களை நேரில் சந்தித்தும் அவர்களுக்கு தேநீர்  உபசாரனை செய்ததிலும் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி  பிற்கால வாழ்க்கையின் மாற்றங்களுக்கு காரணமான பலர் எனக்கு அங்குதான் அறிமுகமானார்கள் அதுவரை எழுத்தாளர்கள் என்றாலே கடவுளுக்கு அடுத்த நிலையில் அவர்களை உயர்த்தி வைத்திருந்த என் பிம்பங்களூம் அங்கு சரிந்து நொறுங்கின. அனைவரும் எல்லா உணர்ச்சிகலுக்கும் கட்டுப்பட்ட சாதாரண மனிதர்கள் தான். என்பதையும் உணர்ந்துகொண்டேன்
முகாம் வாசலில் ஒருமுறை சைக்கிளில் வெள்ளை வேட்டி சட்டை சகிதம் நின்றுகொண்டிருந்தவரை காட்டி யாரோ இவர்தான் மா அரங்கநாதன்  என்றார்கள் . அவ்வளவுதான்.
5
அதன். பிறகு அடுதத மாதமே சென்னைக்கு அதிலும் அரங்கநாதன் குடியிருந்த பழவந்தாங்கலில்  அதே கல்லூரி வீதியில் அறைவாசியாகும் சந்தர்ப்பத்தை  காலம் எனக்கு நல்கியது ஒரு ஆச்சரயமான ஜியோமிதி தான்.  சென்னை  மீனம்பாக்கம் எதிரே  டிசி எம் டயோட்டா கமபெனியில்  சேல்ஸ்மேன் வேலை. அநத வேலையில் சக பணியாளனான பாஸ்கர்தான் தன் அறையில் தங்கிக்கொள்ள அழைப்புவிடுக்க  அப்படியாகத்தான் பழவந்தாங்கல் வாழ்க்கை எனக்கு சித்தித்தது.   ஒரு ஞாயிற்று கிழ்மை அரங்கநாதனை வீட்டில் சந்திக்க போகலாம் என திட்டமிட்டிருந்த போதுதான் வாசு முன்றில் புத்தகக் கடை தி நகரில் ரங்கநாதன் தெருவில் சாந்தி கம்ப்ளக்சில் துவக்கியிருக்கிறார்கள்  நேரடியாக அங்கு போகலாம் என்றாதோடு கையோடு கூட்டிசென்றன்.
இப்படியாக ரங்கநாதன் தெருவில் ஒரு மா அரங்கநாதனை அக நாழிகை வாசுதேவன்  மூலம் ஒரு பகல் பொழுதில் சந்தித்தேன்
கடை அப்போதுதான் திறக்கப்பட்டிருந்தது அரங்கநாதனுக்கு  நான் நீல பத்மனாபனை சென்று சந்தித்தது குறித்து ஆச்சர்யம் மகிழ்ச்சி அப்படியா பரவாயில்லையே தம்பி ரொம்ப ஆர்வமா இருக்கீங்களே என தட்டிக்கொடுத்தார்.   அதன்பிறகு  நேரம் கிடைக்கு  போதெல்லாம் சென்று சந்திப்பேன். வெகு சுலபமாக ஓரிரு சந்திப்புகளில் நெருங்கிவிட்டோம் . இலக்கியத்தின் மீதான எனது ஆர்வம் தொடர்ந்து அவரை நோக்கி  பல கேள்விகளை கேட்க வைக்க அதுபோல அவரும் சளைக்காமல்  பதில் சொல் வார். அப்படி சொல்வதில் அவருக்கு அத்தனை ஆர்வம்
வயது வித்யாசம் இல்லாமல் சிகரட் பிடிக்க சொல்வார் .அப்போது அவர் சார்மினார் சிக்ரட் பிடிப்பார் . செயின் ஸ்மொக்கர் போல பிடித்துக்கொண்டிருந்தார். 50 வயதுக்கு பிறகுதான் சிகரட் பிடிக்கும் பழக்கம் தொற்றியது ஆனால் விட முடியவில்லை என்பார்
சிகரட் பிடிக்க வாகாக கடைக்கு வெளியில் வந்தால் குட்டி மொட்டை மாடி அதன் சுவர் பக்கம் வந்து . அங்கிருந்து கீழே பார்த்தால் ரங்கநாதன் தெருவின் ஜனத்திரள் அடர்த்தியாக தெரியும் . ஒரு பக்கம் கடைக்கு ஆளே வராத முன்றில் புத்தகக் கடை  இன்னொருபக்கம் தமிழ் நாட்டின் மிக முக்கிய வணீக மையமும் அதிகமாய் மக்கள் கடக்கும் வீதி .  .  இந்த இரண்டு எதிரெதிர் துருவங்களும்  பார்வைக்கு எதிரேயே வைத்து பார்த்துக்கொண்டு சிகர்ட் பிடிப்பது  அப்போது எனக்கு மிகவும் பிடித்த வித்தியாசமான  சுவாரசியமான பொழுது போக்கு .
ஒரு முறை என் கையில் ஒரு கட்டுரையில்  சிறந்த ஆங்கில நாவல்கள் குறித்த பட்டியல் ஒன்றை வைத்து இனி அவ்வளவுதான் இதை மட்டும்தான் தேடி படிக்க போகிறேன் எனக்கூற அவர் அதை கண்டித்தார். அது குறுக்கு வழி குறுக்கு வழியில போறவன் ஒருநாளும் உருப்பட்டதா சரித்திரமில்ல என கிண்டலாக கண்டித்தோடு வாசிப்பு என்பது ஏற்கனவே ஒருவனுடைய ரசனை தொடர்ந்து செல்வது அல்ல உன் அனுபவத்தின் வழியாக நீயாக தேடி கண்டடைவதுதான். அதுதான் உன் உடம்பில் உப்பாக கலக்கும் என அறிவுறுத்தினார்.  மேலும் நாவல்களை போலவே நான் பிக்‌ஷன் படி அதுதான் உனக்கு பல விஷய்ங்களை கற்றுதரும் என அறிவுறுத்தினார்.
அன்றே வீட்டுக்கு செல்லும் வழியில் அந்த பட்டியலை நான் கிழித்து குப்பையில் போட்டேன். பிற்பாடு என் தேடலில் நான் கண்டடைந்தது பிரபலமாகத புத்தகங்கள். அப்படியாகத்தான் ரோமன் எனும் பொலான்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்று நூலை கன்னிமாராவில் கண்டெடுத்தேன் பிற்பாடு நான்  விகடனில் நாயகன் தொடர் எழுத அந்த பொலான்ஸ்கியின் வாழ்க்கை வரலாற்றில் கற்ற எழுத்து சார்ந்த தொழில் நுட்பங்களே வெகு ஜன வாசகர்களிடம் கொண்டு செல்ல பெரிதும் உதவின. தி நகர்  .  எலூர் லெண்டிங் லைப்ரரியில் மால்கம் எக்ஸ் பயோகிராபி ,  சாப்ளின் ஆட்டொ  பயோகிராபி ,  வான்காவின் வாழ்க்கை வரலாறான லஸ்ட் பார் லைஃப் என  பெரும்பாலான நான் பிக்‌ஷன் நூல்களை தேடி பிடித்து படிக்க துவங்கினேன் இவை யனைத்துமே இன்று என் வாழ்க்கையின் உயரத்திற்கு வழி வகுத்துள்ளன பிற்பாடு  சாப்ளின்  வான்கா பற்றி எழுத  இவையே எனக்கு உந்து சக்தியாக அமைந்தன..

6
பிற்பாடு தளபதி போலீஸ் செய்தி என வெவ்வேறு பத்ரிக்கைகளில் வேலை மாறிய போதும்என்  தினசரி மாலைப்பொழுதுபோக்கு  முன்றில் புத்தகடையாகதான் இருந்தது.  தினசரி கடை முடிந்தவுடன் அவரும் நானும் வெளியே வந்து மாம்பலம் ரயில் நிலையத்தில் ஏறி பழவந்தாங்களில் இறங்கி வீட்டிற்கு நடந்து ஒரு புள்ளியில் நான் என் வீட்டிற்கு பிரிந்து செல்வேன்.வழி முழுக்கவும் பேசிக்கொண்டே செல்வோம்
சிறிது நாட்களீல் அதே சாந்தி காம்ப்ளக்ஸ் மூன்றாவது  தளத்தில் முன்றில் கடை எதிரேயே கோபிகிருஷ்ணன் , சஃபி, லதா ராமகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து நடத்திய ஆத்மன் மன நல ஆலோசனை மையம் ஒன்றும் துவக்க் ப்பட்டது.. தினசரி பத்து எழுத்தாளராவ்து அங்கு பார்க்க முடியும். கோணங்கி எஸ் ராமகிருஷ்ணன் சாரு நிவேதிதா, நாகார்ஜுனன், பன்னீர்செல்வம் ,சி.மோகன் ருத்ரன் ஆகியோருடன் பல ஆரம்ப எழுத்தாளர்களும் அங்கு மாலை , கூட ஆரம்பித்தனர் .ஒரு நாள் தாடி வைத்த இளைஞரை அரங்கநாதன் அறிமுகம் செய்தார் அவர்தான் யூமாவாசுகி. இவரும் நம்ம ஊர் பழவந்தாங்கல்தான் அறை எடுத்திருக்கிறார் என்றார். அப்போது அவரது முதல் கவிதை தொகுப்பு வெளியாகி அதன் முன்னுரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அங்கு தினசரி வருபவர்களில் கோணங்கி மிகவும் பிடித்துபோனார் .ஒருநாள் கோணங்கி எஸ் ராமகிருஷ்ணன் இருவரும் முன்றில் கடையில் சந்தித்து அப்படியே என்னுடன் பழவந்தாங்கல் வந்து என் அறையில் வந்து தங்கினர். நான் எழுதிவைத்த கதைகளை எல்லாம் படித்துவிட்டு உற்சாகப்படுத்தினர். பின் அப்படியே யூமாவசுகி அறைக்கு போய் பேசிக்கொண்டிருந்தோம்.  பின் அங்கிருந்து மா அரங்கநாதன்  வீட்டிற்கு போய் அவரது வீட்டின் மொட்டை மாடியில் இலக்கியவாதிகளுகென ஒதுககப்ப்ட்ட பிரத்யோக அறையில் இரவு தங்கினோம்
அந்த் அறை அரங்கநாதன் மகன் மகாதேவன் அலுவலகமாகவும் இலக்கியவதிகளுக்கன தங்கும் விடுதியாகவும் இருந்தது. அங்கு தங்கி தான் என் வாழ்வின் முதல் கட்டுரை எழுதினேன் . இலக்கியச்சிந்த்னை மாதாந்திர கதை தேர்வு செய்யும் பணீயை மேற்கொண்டிருந்த நான் அஅந்த் அறையிலேயே கொடுக்கப்ட்ட அந்த மாத இழகள் அனைத்தையும் படித்து சிறந்த ஏஸ் சங்கரநாராயணனின் கவாஸ்கர் கதையை தேர்வு செய்து ஏன் அதை தேர்வு செய்தேன் என கட்டுரையும் ஆந்த அறையில் எழுதினேன் . ஒரு எழுத்தாளனை பிரசவித்த் அறை அது. பிற்பாடு யூமா அங்கு சிலகாலம் தங்கியிருந்தார்.


7
அரங்கநாதனின் விசேஷ குணம் அவரது மௌனம்
அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது சட்டென மௌனமாகி சிறிது நேரம்  அண்ணாந்து பார்ப்பார்.  உண்மையிலேயே மவுனமா இல்லை நடிக்கிறாரா என்று கூட எண்ணத்தோன்றும்  அப்படி ஒரு பாவம் அது . அந்த மவுனம் கலைய குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும் . அந்த இரண்டு நிமிடத்திய நிச்சலனம் நமக்குள் ஊடுருவி பெரும் அனுபவத்துள் ஆழ்த்திவிடும்.
 தன் சிற்றிதழுக்கு முன்றில் எனும் பெயர் காரணம் குறித்து கேட்கும் போது

காதல ருழைய ராகப் பெரிதுவந்து 
சாறுகொ ளூரிற் புகல்வேன் மன்ற  
அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்  
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்  
புலப்பில் போலப் புல்லென் 
றலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே
என்ற குறுந்தொகை பாடலைகூறி   அதில் வரும் அணீலாடும் முன்றில் என்பது அக்காலத்து  தமிழ்ர்வீட்டின் முற்றம் .  சதுர வடிவில் ஒரு வெளி அந்த வெளியில் முன்றில் வந்து ஆடுவதில் இடையீடாக உண்டாக்கும் அமைதியையும் அகாயவெளியில் அது உண்டாக்கும் காட்சியினூடான  ஒரு மாயத்தோற்றத்தையும் விளக்கி ஒரு கணம் அந்த பேரனுபவத்துள் நம்மை அழைத்துசென்றுவிடுவார் .
அவரது எல்லா சிறுகதைகளிலும் இந்த மவுனத்தின் வழியான ஒரு வெளியை உணர முடியும். இதை அவர் அமைதி என குறிப்பிடுவார் . கதையின் முடிவில் ஒரு அமைதி வேண்டும் எதையும் சொல்லக்கூடாது ., வாசக்னாக அதை உள் வாங்க இடம் கொடுக்க வேண்டும் என்பார்
அரங்கநாதனுக்கு சிறுகதையில் போர்ஹே பிடிக்கும் அடிக்கடி போர்ஹேவின் கதை ஏதாவது ஒன்றை கூறுவார் . அதிகமாக எழுத தேவையில்லை குறைவாக எழுதினாலே போதுமானது என்பார். எப்பேர்பட்ட எழுத்தாளனையும் அவன் இவன் என தான் செல்லமாக கூப்பிடுவார் உனக்கு ஜே ,டி. சாலிங்க்ரை தெரியுமா ஒரே ஒரு நாவல்தான் எழுதியிருக்கான்  உலகமே அவனை சாகறவரை கொண்டாடுச்சி என்பார் .
நான் அவரோடு பழகிய நாட்களில் அவரது பஃறுளியாற்று மாந்தர்கள் நாவல் எழுதியிருந்தார். நாவலின் அச்சு பிரதியை என்னிடம் படிக்க தந்தார். படித்துவிட்டு சில திருத்தங்களை சொன்ன போது . இன்னும் நீ ஒழுங்கா படிக்கவே ஆரம்பிக்கல உங்கிட்ட கொடுத்தம்பாரு என திட்டினார்
என்னை பலர் முன்னிலையில் உரிமையுடன் கிண்டலடிப்பார் அந்த நாட்களில் ரயில் மற்றும் பேருந்து பயணக்களில் படிக்க வசதியாக இருக்கும்படி  எப்போதும் என் கையில் ஏதாவது ஒரு புத்த்கம் இருக்கும்  பெரும்பாலும் அது ஆங்கில புத்த்கங்களாகத்தான் இருக்கும் . முன்றில் கடைக்குள் நான் உள்ளே நுழையும் போது யாராவது  அருகே அமர்ந்திருந்தால்  என்னை காண்பித்து பாத்தீங்களா சரியா போச்சா என சொல்லி அந்த நண்பருடன் சிரிப்பார் . பிறகுதான் அவர் அவர்களிடம் என்னை பற்றி கூறி போட்ருக்க ட்ரஸுக்கு மேச்சா புக் ஒன்னூ கையில வச்சிகிட்டு வருவான் பாருங்க என கூறியிருப்பார். நானும் கையில் புத்தகத்துடன் நுழைய அவரிடம் காட்டி சிரிப்பார். சொன்னா மாதிரியே வந்துட்டான் பாருங்க என கூறி மகிழ்வார். அவர் என்மீது எடுத்துக்கொண்ட அந்த உரிமை பிடித்திருந்தது.
சினிமா பாரடைஸோ வில் வரும்  ஆப்ரெட்டருக்கும் சிறுவனுக்குமான உறவைப்போன்றது அது .நானும்விடாமல் அவரை வெறுபேற்றும் விதமாக கேள்விகள் கேட்பேன்.
மா அரங்கநாதனோடு தனிப்பட்ட முறையில் உறையாடிவர்களுக்கு மட்டுமே தெரியும் அவர் நவீன இலக்கியத்தை விடம் தமிழ் பண்பாடு தொன்மம் வரலாறு ஆகியவற்றில் தீவிரமான  ஈடுபாடுகொண்டவர். குமரிக்கண்டம் கபாடபுரம் ஆகிவற்றைகுறித்தும் தமிழர்கள் மூத்தகுடிகள் என்பதிலும் அவருக்கு நம்பிக்கையும் தீவிர ஆரய்ச்சிமனமும் இருந்துவந்துள்ளது.
பிறகு நான் திரைப்ப்டத்துறையில் சேர்ந்தபின் அவரை அடிக்கடி  சந்திப்பது குறைந்துவிட்டதென்றாலும் எப்போதாவது சென்று பார்ப்பேன்  ஹாலிவுட் படங்கள் பற்றி சொல்வார்  சென்னையில் முதன் முதலாக வேலைகிடைத்து பேச்சிலராக வந்து தங்க ஆரம்பித்த நாட்களில் தான் ஓடி ஓடிபார்த்த ஹாலிவுட் படங்களையும்  அந்த அனுபவத்தையும் அடிக்கடி கூறுவார். அப்போது வந்த ஹாலிவுட்  சினிமா  பத்ரிக்கைகளை எல்லாம் அவர் சேகரித்து வைத்திருந்தார். ஜேம்ஸ் டீனோட ரிபல் வித் அவுட் காஸ் பாத்ருக்கியா .. மூனே படத்துல சூப்பர்ஸ்டாராகி உச்சத்துல இருக்கும்போதே செத்துபோனான் 
அதே முன்றில் கடையில்தான் எனக்கு பிரமிளும் அறிமுகம் அவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்த பிரமிளும் அரங்கநாதனும் சண்டை வந்து இருவரும் கட்டுரைகளில் தாக்கிக்கொண்டது எனக்கு பெரும் அதிர்ச்சி . இருவருக்கிடையிலும் நான் மாட்டிக்கொண்டு  கடைசியில் பிரமிளால் வெறுக்கப்ப்ட்டதை பற்றி பிரமிள் பற்றிய கட்டுரையில் விளக்க்மாக எழுதியிருக்கிறேன்
என் முதல் சிறுகதை தாண்டவராயன் எழுதி முடித்துவிட்டு அவரிடம் கொடுத்தபோது வழக்கமாக கிண்டலடித்து வெறுபேற்றுவார் என நினைத்தேன். ஆனால் அவர் வெகுநேரம் அமைதியாக அமர்ந்துவிட்டு . இந்த கதையை நான் ஒரு முறை எழுதி பாக்கனும்னு தொணுது அதுதான் இந்த கதையோட வெற்றி . தொடர்ந்து எழுது என ஆசீர்வதித்தார். அவரது ஆசி வீண் போகவில்லை அவர் சொன்னது போலவே குறைவான படைபுகளையே  எழுதவே விரும்புகிறேன் 
பிற்பாடு பாண்டிச்சேரியில் அவர் சென்றபின் நானும் வாசுவும் ஒருமுறை நேரில் பார்த்து அக நாழைகைக்காக ஒரு பேட்டி எடுத்தோம் அக நாழிகை வராமல் போனதால் பேட்டியும் அச்சாகவில்லை
அச்சமயத்தில் நான் எழுத்தளனாக் ஒரு அடையாளம் பெற்றிருந்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியளித்தது. காணாமபோயிடுவேன்லா நெனச்சிடுந்தேன் பொழைச்சிகிட்டியே என பெருமிததோடு புன்ன்கைத்தார்
ஒரு தந்தையின் புன்னகை அது
மறக்க முடியாத மவுனத்துடன் அந்த புன்னகையும் இன்று சேர்ந்துகொண்டது

அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் 

thanks : amrudha  magazine may 2017

May 4, 2017

தி கிட் (1921) சார்லி சாப்ளின் சிறுவர் சினிமா

  குழந்தை கதை கூறல் 2



1
ஒரு அம்மா ஆஸ்பத்திரியிலருந்து கைக்குழந்தையோட வெளிய வர்றாங்க  அவங்களுக்கு எஙக போறதுன்னு தெரியலை. அந்த குழந்தையோட அப்பாவுக்கோ இன்னொரு கலயாணம் ஆயிடுச்சி. இனி இந்த குழந்தைய வெச்சிருந்தா நமக்கு அவமானம்னு அந்த அம்மா நெனக்கிறாங்க. அப்ப வழியில ஒரு ஜீப் நிக்குது.. அது பணக்கார வண்டி அவங்க மனசு கேக்கலை ஆனாலும் வேற வழி தெரியலை .  பணக்கார வீட்டுல வளரட்டும்னு  தன்னோட  குழந்தைய அந்த வண்டி பின்னாடி சீட்டுல போட்டுட்டு திரும்பி பாக்காம  போயிடறாங்க .  
2
ஆனா நடக்கறதோ வேற. அந்த வழியா வர்ற ரெண்டு திருடங்க வண்டி அனாதையா நிக்குறதை பார்த்து வண்டியை திருடிக்கிட்டு  ஓட்டிகிட்டு போறாங்க . அவங்களுக்கு குழந்தை இருக்குறது தெரியலை. . வண்டியை ஓரு இடத்துல நிறுத்தனப்பறம்தான்  குழந்தை அழுவுற  சத்தம் கேக்குது .அப்படியே குழந்தைய எடுத்து ஒரு குப்பை தொட்டியில போட்டுட்டு வண்டியை மட்டும் அம்போன்னு விட்டுட்டு போயிடறாங்க.
3.
.அப்பதான் ஒரு அழுக்கு டிரெஸ்சோட ஒரு கண்னாடி ரிப்பேர் பண்றவர் அங்க வர்றாரு. அவரு வேற யாருமில்லை நம்ம சார்லி சாப்ளின்தான்.அவரே ஒரு அனாதை அவருக்குன்னு யாருமில்லை. அதனால இன்னொரு அனாதையா அந்த குழந்தை மாறிடகூடாதுன்னு அந்த குழந்தைய கையோட எடுத்துக்கிட்டு அவரு வீட்டுக்கு வந்துடறாரு.
 4
சிறு அறை அதில் கொஞ்சம் பொருட்கள் இவ்வளவுதான் சாப்ளின் வீடு  ஆனாலும் குழந்தைய நல்லா வளக்கிறாரு .. நல்லா துறுதுறுன்னு குழந்தை வளறுது. குழந்தைக்கு அஞ்சு வயசாவுது. குழந்தையா இருந்தவன் இப்ப குட்டிபையனாயிட்டான். வெளியில அடிக்கடி அடிதடி தகராறு. யாரையாவது  அடிச்சுட்டு ஒன்னும் தெரியாம வீட்டுக்க்கு வந்து ஒளிஞ்சுக்குவான் .வீட்டுமுன்னாடி அடிவாங்குன பையன் அவங்க அப்பாவோட வந்து நிப்பான்.  அப்புறம் சாப்ளினும் பையனுக்காக அவங்க அப்பா கூட சாப்ளின் சண்டைக்கு போவாரு
5
அந்த குட்டிபயனுக்கு வேலையே காலையில எழுந்ததும் அப்பா கிட்ட இன்னைக்கு எந்த தெருன்னு கேப்பான் . சாப்ளினும் அவனுக்கு ஒரு தெருவை சொல்வார் . அவன் வீட்டை விட்டு வெளிய வந்து அஞ்சாறு கல்லுங்களை கையில எடுத்து பாக்கெட்ல போட்டுக்குவான். அப்பா சென்ன தெருவுல எந்த வீட்டுல கண்னாடி பளபளன்னு இருக்குதோ அந்த கண்னாடியை குறிபாத்து கல்லால அடிச்சுட்டு ஓடியாந்துடுவான் ,வீட்டுகாரங்க வெளியில வந்து பாத்துட்டு அய்யய்யோ கண்னாடி போச்சே ன்னு வருத்தப்படுவாங்க .அந்த நேரம் பாத்து சாப்ளின் கண்னாடி ரிப்பேர் காரனா அங்க போவார் . சரியான நேரத்துல வந்தன்னு சொல்லி புது கண்ணாடிய மாட்ட சொல்வாங்க .. இவரும் மாட்டிட்டு காசு வாங்கிட்டு வருவார் . இப்படிதான் தினசரி அவங்க சம்பாதிச்சு பொழுதை ஒட்டினாங்க
6
ஒருநாள் ஒரு போலீசுக்கு இது தெரிஞ்சுது. நம்ம குட்டிபையன் ஒரு வீட்டு கண்ணடியை கல்லால அடிக்கபோறதை பாத்து  கையும் களவுமா புடிக்கிறாரு. ஆனா நம்ம குட்டிபயன்  அவர் கையில மாட்டினாத்தான . ஓரெ ஓட்டமா ஓடியாரான். குட்டிபயனை பிடிக்க போலீசும் துரத்தராரு. ஆனாலும் பையனை பிடிக்க முடியலை.. பையனுக்கு ஒண்ணுன்னா சாப்ளின் துடிச்சிடுவாரு. அவனுக்காக ஒரு ரவுடிக்கிட்ட சண்டைய போடறாரு. அதே மாதிரி சாப்ளினுக்கு உடம்பு சரியில்லன்னா குட்டிபையனே  அவருக்கு ரொட்டியெல்லாம் சுட்டுத் தரான் . வெண்ணி வச்சு குடுக்கறான் இப்படி அந்த குட்டிபையனும் சாப்ளினும் ஒருத்தருக்கொருத்தர் பாசத்தோட மகிழ்ச்சியா சந்தோஷமா வாழறாங்க
7
இதுக்கிடையில அந்த குழந்தையோட  அம்மா இப்ப பெரிய சினிமா நடிகை பணக்கார பொண்னா  ஆயிடறாங்க. ஆனாலும் அவங்களால நிம்மதியா இருக்க முடியலை.  குழந்தைய தேடறாங்க. குழந்தைய  கண்டுபிடிச்சித் தரச் சொல்லி போலீஸ்ல கம்ப்ளைண்ட் தர்றாங்க.குட்டி பையனை போலீஸ் தேடுது .பேப்பர்ல அறிவிப்பு கொடுக்கறாங்ககுட்டிபையனுக்கு ஒருநாள் உடம்பு சரியில்லாம போயிடறது.வீட்டுக்கு வந்து சிகிச்சை பாக்கற  டாக்டருக்கு குட்டி பையன் சாப்ளினோட பையன் இல்லைன்னு தெரிஞ்சு போலிசுக்கு சொல்லிடறாரு.
இதனால அரசு அதிகாரிங்க சாப்ளீன் வீட்டுக்கு தேடி வர்றாங்க . யார் இந்த பையன் . இவனுக்கு நீ அப்பா இல்லையே. பின்ன எங்கிருந்து திருடுனன்னு மிரட்டறாங்க. குட்டிபையனை கொடு நாங்க கூட்டிட்டு போறோம்னு கேக்கறாங்க. சாப்ளின் அவங்க கூட சண்டை போடறாரு பையனை கொடுக்க மாட்டேங்கிறரு. ஆனா போலீஸ் சாப்ளீன்கிட்ட இருந்து  குழ்ந்தைய பிடுங்கறங்க . பையன் அப்பா அப்பான்னு அழறான். போலீஸ் கிட்டருந்து பையனை காப்பாத்த சாப்ளின் போராடாறாரு .முடியலை. போலீஸ் வேன்ல ஏத்திகிட்டு அவங்க குழந்தையோட போக சாப்ளின் பின்னாலயே துரத்துகிட்டு ஓடுறாரு. லாரியிலருந்து பையன் அப்பா அப்பான்னு கைநீட்டி அழறான்
8
பையனோட அம்மாவான அந்த  நடிகைக்கு போலீஸ் தகவல் சொல்றாங்க  அந்த நடிகையும் ஸ்டேஷனுக்கு வந்து பையனை பாக்குறாங்க. இவந்தன் என் பையன்னு கட்டி புடிச்சு  அழறாங்க . பையனை தன்னோட பணக்கார வீட்டுக்கு கூட்டிட்டு போயிடறாங்க. சாப்ளின் திரும்பவும் அனாதை ஆயிடறாரு. வீட்டுல தனியா இருக்குற சாப்ளினை தேடி ஒரு போலீஸ் வேன் வருது. போலீஸ் சாப்ளின்கிட்ட பேசறாங்க. சாப்ளீனை வேன்ல ஏத்தி  ஒரு பணக்கார வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க . அங்க சாப்ளின் கதவை திறந்தா குட்டிபையன் ஓடியாந்து சாப்ளினை கட்டிபுடிச்சுக்கிறான் . சாப்ளினும் அதுக்கப்புறம் அவங்களோடயே நடிகையோட பணக்கார வீட்ல சந்தோஷமா வாழறாரு.

கதை உங்களுக்கு புடிச்சுதா

இன்னொரு கதை அப்புறமா சொல்றேன்   

May 3, 2017

சிறுவர் சினிமா- தி சில்ட்ரன் ஆப் ஹெவன் ..குழந்தைகளுக்கான கதைச்சுருக்கம்




தி சில்ட்ரன் ஆப் ஹெவன் .. ஈரான் 
சொர்க்கத்தின் குழந்தைகள் -  
 அஜயன் பாலா 


ஈரானில் ஒரு ஏழைகுடும்பம் அந்த வீட்டுல ஒரு குட்டி பையன் . அவன்   பெயர் அலி. ஒருநாள் உருளைகிழங்கு வாங்க மார்க்கட்டுக்கு போகுறான். அப்ப கையோட ரிப்பேர்செய்ய தங்கை சாரா வோட ஷூவையும் கையில எடுத்து போறான். வழியில ஒரு கடையில  இவன் தங்கச்சி ஷூவை ஒரு குப்பை பொறுக்கிறவர் எடுத்துக்கிட்டு போயிடறார். ஆனா இவனுக்கு தெரியாது வெளிய வந்து பாத்தா தங்கச்சி ஷூ காணோம் அப்புறம் அங்க தேடி தேடி பார்க்கிறான் ஷூஇல்லை. அலி பயத்துடன் வீடுதிரும்புறான் இனி இன்னொரு புது ஷூவை வாங்க முடியாது.காரணம் அவங்க குடுக்ம்பம்  அவ்வளவு ஏழை. ஆறுமாசம் வீட்டு வாடகைபணமே பாக்கி. அம்மாவுக்கு வேற உடம்பு சரியில்லை.தோட்ட வேலைக்கு போற அப்பாவுக்கு சரியாக வேலையும் கிடைக்கலை. இந்த நேரத்தில்  ஷூவை தொலைத்த கதை வீட்டுக்கு தெரிந்தால் அவ்வளவுதான். அதனால் வீட்டுக்குவந்ததும் ரகசியமாக தங்கை சாராவுக்கு மட்டும் விஷயத்தை சொல்கிறான். 


1.
1.











சாரா ஒரு குட்டிபெண். ஆனாலும் அறிவு அதிகம். அண்ணன் தன்னோட ஷூ வை தொலைச்சிட்டது  அவளுக்கு அதிர்ச்சி. அழுகையாக வருகிறது அண்ணனை கோபமாக பார்க்கிறாள். அலி தங்கையிடம் கெஞ்சுவதைபோல பார்க்கிறான். அழறான் .அப்பாவிடம் சொல்லாதே என சைகைசெய்கிறான். சாராவால் அதை  தாங்கிக்கொள்ள முடியவில்லை . ஆனாலும் இதை இப்போது வீட்டில் சொன்னால் அண்ணனுக்கு அடிவிழும்... அதனால் அண்ணனிடம் நான் இனி எப்படி ஸ்கூலுக்கு போவேன் என நோட்டிலேயே எழுதி கேட்கிறாள். அவன் நான் சீக்கிரம் கண்டுபிடித்து விடுகிறேன் அதுவரை நீ என் ஷூவை போட்டுக்கொண்டு பள்ளிக்கு செல். நீ பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பும் போது  வழியில் நான் உன்னிடம் வாங்கிக்கொள்கிறேன்.  என பதிலுக்கு நோட்டில் எழுதி காண்பிக்கிறான். சாராவும் அதற்கு ஒத்துக்கொள்கிறாள் .



ஈரானில் பெண்குழந்தைகளுக்கு காலையிலும் ஆண்குழந்தைகளுக்கு மாலையிலும் வகுப்புகள் நடக்கும் .அதனால காலையில் சாரா அண்ணன் ஷூவை போட்டுக்கொண்டு ஓடுகிறாள். மதியம் அவள் திரும்பும் வழியில் ஒரு கழிவு நீர்சந்தில் புத்தக பையுடன் அலி காத்திருக்கிறான். பள்ளிவிட்டதும் சாரா ஓடிவர அவள் கால்களிடமிருந்து அவசரமாக தன் காலுக்கு ஷூவை மாற்றிக்கொண்டு அலி ஓடுகிறான்.


4.
ஒவ்வொருநாளும் அலி  லேட்டாக பள்ளிக்கு அவசரமாக ஓடிவருவதை பார்த்துவிடும் தலைமை ஆசிரியர் .அவனை எச்சரிக்கிறார். இப்போது அலிக்கு ப்ரசனை ..தங்கையிடம் பள்ளிவிட்டதும் சீக்கிரம் ஓடிவருமாறு கூறுகிறான். மறுநாள்  சாரா அண்ணனுக்காக  சீக்கிரமாக ஓடிவரும்போது ஷூ தவறி சாலையின்  நடுவில் ஓடும் கால்வாய் நீரில் விழுந்துவிடுகிறது. பதட்டத்துடன்  சாரா  நீரை துரத்தியபடி ஷூவை எடுக்க ஓடுகிறாள்.
இதுக்கு நடுவில  தங்கைக்காக காத்திருக்கும் அலி நேரமாவதால்  தங்கையின் மேல் கோபத்தில் இருக்கிறான். கடைசியில் சாரா போராடி அதனை எடுத்துக்கொண்டு அண்ணனை நோக்கி அவசரமாக ஓடிவருகிறாள். அவளை திட்டியபடி அவசரமாக ஷூவை மாற்றிக்கொண்டு அலி பள்ளிக்கு ஓடுகிறான்.ஆனால் இன்றும் அலி லேட்டாக வருவதை பார்த்துவிடும் தலைமை ஆசிரியர் இனி உன் அப்பாவை அழைத்துவா அப்போதுதான் மீண்டும் சேர்ப்பேன் என கூறிவிடுகிறார்.ஆனால் அலியின் ஆசிரியர் அவன் நன்றாக படிக்கும் மாணவன் என எடுத்துக்கூறி அவனை காப்பாற்றுகிறார்.


5
என்னதான் லேட்டாக வந்தாலும் அலி தேர்வில் முதன் மதிப்பெண் வாங்குகிறான்.இதனால் அவனுக்கு பேனா பரிசாக கிடைக்க அத்னை தங்கைக்கு பரிசளிக்கிறான். ஒருநாள் சார வகுப்பில் இன்னொரு பெண்காலில் தன் ஷூ இருப்பதை பார்த்துவிடுகிறாள்.பள்ளிவிட்டதும் அண்ணனும் தங்கையும்  அந்த குட்டி பெண்ணை பின் தொடர்து செல்கின்றனர். அப்போது அந்த குட்டிபெண் குடும்பம் தங்களைவிட மிகவும் ஏழை என்பதை அறிகின்றனர். இதனால் அவளிடம் ஷூவை திருப்பிக்கேட்கும் திட்டத்தை கைவிடுகின்றனர்.
6
இதனைடையே ஒருநாள் அலிதந்தையுடன் நகரத்துக்குசெல்கிறான். தோட்டாவெலைகேட்டு அப்பா ஒவ்வொரு வீடாக படியேறுவதை பார்க்கிறான்.பணத்துக்காக அவர் படும் சிரமங்களை உணர்கிறான்.ஷூ ப்ரசனைதீர இனி என்னதான் வழி என அவன் யோசிக்கிறபோதுதான் பள்ளியில் அந்த மகிழ்ச்சியான அறிவிப்பு வருகிறது .
7
அது அனைத்து பள்ளிகளுக்கான ஓட்டபந்தய  போட்டி..அவனது மகிழ்ச்சிக்கு காரணம் அதில் மூன்றாவது பரிசு ஆம் மூன்றாவதுபரிசாக  ஷூ அறிவிக்கப்பட்டிருக்கிறது அலி மகிழ்ச்சியுடன் போட்டியில் கலந்துகொண்டு அந்த மூன்றாவது பரிசான ஷூவை பெற்று தங்கைக்கு கொடுக்கவேண்டும் என நினைக்கிறான்.. போட்டிகான நாளும் வந்தது.
ஆயிரக்கண்க்கில் மாணவர்கள் அந்த மராத்தான் ஓட்ட பந்தயத்தில் கலந்துகொள்கின்றனர்.போட்டி துவங்குகிறது. எப்படியாவது மூன்றாவது பரிசு வாங்கிவிடவேண்டும் என ஓடிய அலி யாரும் எதிர்பாராவிதமாக முதல்மாணவனாக ஓடிவந்து முதல்பரிசை பெறுகிறான். கைதட்டல் ஆராவாரம். கேமாரக்கள் அவனை மொய்க்கின்றன.
8
அனைவரும் அலியை பாராட்டுறாங்க .. நடுவர்கள் அவனை சுற்றி கைகுலுக்க கூடுறாங்க .ஆனால் அலியொ தனக்கு மூணாம பரிசு கிடைக்காமல் போய்விட்டதே ன்னு கவலைப்படுறான் முதல் பரிசு  கோப்பை அவனுக்கு கொடுக்குறாங்க  .அவனை புகைப்படம் எடுக்க பத்திரிக்கையாளர் தலைநிமிரசொல்கிறார்  ஆனால் ஷூகிடைகாத சோகத்தில் அலியின் கண்கள் கலங்கி அழறான் .

மறுநாள் அவன் அப்பா இருவருக்கும்  புது ஷூ வாங்கி வருகிறார்.  அலியும்.. சாராவும் மீண்டும் மகிழ்ச்சியுடன் பள்ளிக்குசெல்கின்றனர்.

நன்றி  தினமணிக்கதிர்




April 26, 2017

பாடலாசிரியர் அண்ணாமலை - அஞ்சலி



-[ அஜயன் உங்க படத்துல எனக்கு ஒரு பாட்டு

இல்லை அண்ணாமலை, முத்துக்குமார் எனக்கு  ரொம்ப க்ளோஸ் அவந்தான் எல்லா பாட்டும் எழுதுவான்.  வாக்கு குடுத்துட்டேன்,பைசாவே வாங்காம எழுதி தரேன்னு  வேற சொல்லியிருக்கான்.

அப்ப எனக்கும் பைசா வேணாம், அவன் நாலு பாட்டு எழுதட்டும். நான் ஒரே ஒரு பாட்டு எழுதறேன்.

அண்ணாமலை அவனை சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம், தப்பா நெனச்சிக்காதீங்க...

மேற்படியான உரையாடல் எனக்கும் அண்ணமலைக்கும் சுமார் பத்து பதினைந்து தடவையாவது நடந்திருக்கும்.  விகடன் வாசலில் பொது நிகழ்ச்சிகளில், எனது நாதன் பதிப்பக வாசலில் என ஒவ்வொரு முறையும்  இறுதியில்
ஆமாம்... ஆமாம்... எனக்கும் தெரியும்,  இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாருங்க 
என கேட்பதோடு முடியும் .

காலம் இருவரையும் ஒருசேர ஒரு மாத இடைவெளியில் கவ்விக்கொண்டது பெரும் துயரம்
தமிழுக்கு தமிழ் திரைப்படத்துறைக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு .

போட்டிகள் நிறைந்த பாடல் எழுதும் துறையில் மற்றவர்களை போல  முட்டி மோதாமல் தனக்கான பாதையில்   கிடைக்கும் பாடலில் முழு திறமையும் வெளிப்படுத்தி நிதானமாக நடந்து செல்லும் சுபாவம்தான் அண்ணாலையின் இயல்பு  .  பழகுவதற்கு தண்ணீரைவிட  சுலபமான மனிதர் . அத்தனை  இலகு, அத்தனை  எளிமை. அதிகரமில்லாத குழைவான அவரது உடலே அதற்கு சாட்சி. மளிகை கடையில்  சோப் பணியனுடன் அடுத்து என்ன வேண்டும் என ஆர்வமாக கேட்கும் சிறுவனைபோல  அவர் உடலில் அத்தனை  பணிவு.
 பத்தாண்டுகளாக தொடர்ந்து பார்த்து வந்ததில் யாரையும் தவறாகவோ, புண்படுத்தும் விதமாகவோ  அவர் பேசி பார்த்ததில்லை.





பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்  மவுண் ரோட் ஆனந்தவிகடன் அலுவலக வாசலில் வைத்துதான் யாரோ முதன் முதலாக   அறிமுகப்படுத்தினார்கள் .
 அவரைப் பார்ப்பதற்கு முன்பே அந்த பெயரை என் மனம் அறிந்திருந்தது.  ” யாரோ அண்ணாமலையாம்,  ’ஜீவி’யில் வேலைசெய்பவராம். அவர் தான் அந்த சீரியல் பாட்டு எழுதினாராம் ”  காற்றுவாக்கில் அவரைப்பற்றி நண்பன் ஒருவன் சொன்னது, முதல் சந்திப்பின் போது மனதில் ஸ்க்ரோலிங்காக ஓடியது.  ஏதோ ஒரு காரியமாக விகடன் அலுவலகம் சென்று விட்டு   வந்து கொண்டிருந்தபோது   டீக்கடை வாசலில் தான் யாரோ அறிமுகப்படுத்தினார்கள். இவர்தான் அண்ணாமலை, பாடல் ஆசிரியர். சீரியல்களுக்கெல்லாம்  பாட்டு எழுதிகிட்டு வர்றார். சினிமாவுலயும் ட்ரை பண்ணிகிட்ருக்கார் . ஒல்லியான தேகம் மழலைச் சிரிப்பு. கொட்டோவியம் குலுங்குவது போல உடலசைவு . காற்று போல இருக்கிறாரே என முதல் சந்திப்பிலேயே அவரை மிகவும் பிடித்துப் போனது.

அதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து  நாயகன் தொடர் நிமித்தம் வாரவாரம்  விகடன் அலுவலகம் (அப்போது அலுவலகம் கிறீம்ஸ் ரோடில் இருந்தது.)  செல்லும் போதெல்லாம் அண்ணாமலையை பார்க்க முடிந்தது.

 சாப்ளின்  தொடர் எழுதும்போதுதான் தேடி வந்து கட்டிபிடித்துக்கொண்டார் .  பிரமாதமா எழுத்திட்டீங்க அஜயன்  அந்த கைகளின் இறுக்கம் அவரைப்பற்றியும் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை உண்டாக்கியது .
 இலங்கையை பூர்வீகமாக கொண்ட அண்ணாமலை யின் குடும்பத்தினர் அவர் பிறப்பதற்கு முன்பே தமிழ் நாட்டுக்கு வந்து  விழுப்புரம் அருகே செட்டிலாகியிருந்திருக்கின்றனர்.  இயற்பெயர் சுரேசன் .  பச்சையப்பன் கல்லூரி மாணவரான அவர் எழுத்தின் மீதான ஆர்வம் காரணமாக   வைரமுத்துவோடு நெருங்கி பழகும் வாய்ப்பை பெற்றார்.  அவரைப்போல  பாடலாசிரியராக  ஆகவேண்டும் என்ற உந்துதல் பெற்றாலும்  குடும்ப சூழல் காரண்மாக விகடனில் இணைந்து  பத்திரிக்கையாளராகி விட்டவர் .

நான் கூட அவரிடம் சினிமாவில் பாடல் எழுதுவதுதான் லட்சியம் என்றால்  வேலையை விட்டு முழுதாக களம் இறங்கலாமே என கேட்டபோது தான்  கிட்டத்தட்ட எட்டு லட்சத்திற்கு கடனாளியாக இருப்பதகாவும் முழுவதும் அடைக்கும் வரை, விகடன் வேலையை விடமுடியாது  என்றும் தன்னை சுற்றிப் பின்னிக்கிடக்கும்  மாய வலையைசொன்னார்.  அந்த நேரத்தில் எனக்கு அது பெரும் அதிர்ச்சி. ஆயிரம் ரூபாய் கடனிருந்தாலே பதட்டமாகி வாழ்க்கை பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாகிவிடும்போது, லட்சக்கணக்கில் அவர் பின்னால் இருந்த கடன் சுமை என்னை அதிர வைத்துவிட்டது. இவ்வளவு கடன் சுமையுடன் எப்படி இவரால சிரிக்கவும் பேசவும் முடிகிறது, என ஆச்சர்யப்பட்டேன்.

ஒருநாள்  அதே போல, மதிய நேரத்தில்  சாப்பிட்டு முடிந்து அலுவலகத்தினுள் நுழைந்து கொண்டிருந்த போது, பின்பக்கமாக  வந்து தோளை தொட்டவர்,  ”தான் புதியதாக ஒரு  பாடல் எழுதிக்கொண்டிருப்பதாகவும் அதை கேட்டு எப்படியிருக்கிறது என சொல்லமுடியுமா” என்றும்  ஆசையுடன் கேட்டார்.  அவரே என் காதில் கெட்போனை  காதில் மாட்டிவிட்டு  வாக்மேனை தட்டிவிட்டார் .  அது வெறும் ட்யூன்தான், நல்ல குத்துப்பாட்டுக்கான இசையாக அது இருந்தது.  அதற்கு தான் எழுதியிருக்கும் வரிகளை பாடிக்காண்பித்தார் . ”என் உச்சி மண்டையில் சுர்ருங்குது”  என துவங்கும் அப்பாடல்  அவர் அபிநயத்துடன் பாடிக்காண்பிக்க   பாடலை நான் வெகுவாகப் பாராட்டினேன் .
பிற்பாடு அந்த பாடல் வேட்டைகாரன் படத்தில் வெளியாகி பெரும் வெற்றிப் பெற்று அவருக்கு மிகப்பெரிய புகழையும் அடையாளத்தையும் பெற்று தந்தது.

பிற்பாடு சந்திக்கும் போதெல்லாம்  கட்டுரையின் துவக்கத்தில் இடம்பெற்ற உரையாடல் தவிர்க்கமுடியாமல் வந்து போகும்.

விகடன் தொடர் முடிந்த பின் நான் சாலிக்கிராமம் காவேரி தெருவில் பதிப்பக வேலைகளுக்காக ஒரு சிறு அலுவலகம் துவங்கியிருந்தேன் . அண்ணாமலை கிட்டத்தட்ட வாரத்தில் இருமுறையாவது உதவியாளருடன் அங்கு வருவார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி அலுவலகம் அருகிலிருந்த படியால்  அடிக்கடி அவர் கொடுக்கும் ட்யூனை   இங்குதான் டைப் செய்வார் . பல கவிஞர்கள் பாடல் எழுத  சிங்கப்பூர், பாங்காக், மலேசியா போன்ற இடங்களுக்கும்,சிலர் ஈ.சீ.ஆர்  ரிசார்ட்டுகளுக்கும், சிலர்  பூங்கா, கடற்கரை  என வெவ்வேறு இடங்களுக்குசெல்வதைப் பார்த்திருக்கிறேன், முத்துக்குமார் கூட  பாட்டு எழுத காரில் நீண்டதூர பயணம் செய்தபடி எழுதுவான், நானும் உடன் பயணித்துமிருக்கிறேன். அவன் சொல்ல, சொல்ல எழுதியுமிருக்கிறேன் . ஆனால் அண்ணாமாலை பத்துக்கு பத்து அடியில் மூணு கம்ப்யூட்டரும், ஜெராக்ஸ் மிஷினும் இருக்கும் அலுவலகத்தில் சாலையோர இரைச்சலுடன் ஆட்கள் நடமாட்டமும்  மிகுந்த அந்த சிறு அலுவலகத்தில் அமர்ந்து, காதில்  ஹெட்போனை  பொருத்தியபடி பாட்டுக் கேட்டுக்கொண்டே டைப் செய்வது, ஆச்சர்யமாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். .ஆனால் அப்படி எழுதிய பாடல்கள் வெற்றி பெற்று அவருக்கும் பெயரையும் புகழையும் உருவாக்கின.

வெறும் பாடல்கள் மட்டுமல்லாமல், அவர் பல பணிகளை மேற்கொண்டார் . விந்தன் அறக்கட்டளை  சார்பாக  ஆண்டுதோறும் விழா நடத்தி வந்தது. அந்த விழாவை நடத்தி தரும் பொறுப்பை முழுதாக அவரே ஏற்று நடத்தி வந்தார். அதற்காக   வருடம் ஒருமுறை மிக நீண்ட கட்டுரை ஒன்றை என் அலுவலகத்தில் வைத்தே எழுதுவார் .
பல சமயங்களில்  ஞாயிற்றுக்கிழமை அலுவலக விடுமுறை தினங்களில் அழைப்பார் . ஒரு அவசரமான பணி உடனே எழுத வேண்டும், கொஞ்சம் வரமுடியுமா?  எனக் கூப்பிடுவார்.
நானே  ஒருமுறை என்ன அண்ணாமலை!  லேப் டாப் வாங்கி வீட்டில் நிம்மதியாக டைப் செய்யலாமே. அட நீங்க வேற, வீட்ல இருந்தா அந்த பிரச்சனை, இந்த பிரச்சனைனு எல்லா பிரச்சனையும் மண்டையில ஓடிகிட்டு இருக்கும், இதுல பாட்டு எங்கருந்து வரும்  அதனாலதான் இங்க வரேன்.  உங்க அலுவலகம் தான் எனக்கு ஊட்டி, கொடைக்கானல் என்பார் .

ஒருநாள் அலுவலகம் வந்தவர்,  இன்விடேஷன்  நீட்டினார். குழந்தைக்கு  பர்ஸ்ட் ஆனிவர்சரி பர்த்டே வச்சிருக்கேன், அவசியம் வந்துடுங்க என்றார்.  அப்ப உங்களுக்கு இப்பதான் கல்யாணம் ஆச்ச  என கேட்க , இல்லீங்க பதினேழு வருஷம் ஆச்சு, இப்பதான் பாக்கியம் கிடைச்சுது என்றார்.

என்ன அஜயன் முத்துக்குமார் இப்படி பண்ணிட்டானே,  என  துக்கத்துடன் வந்தவர் அவனுக்கான அஞ்சலி கட்டுரை எழுதத்தான் வந்துருக்கேன் என்றார். கட்டுரை எழுதும் போது முத்துகுமாரின் குணங்களை வியந்து, புகழ்ந்து  என்னிடம் பேசியபடி, இப்படி போயிட்டானே என்றார்.

என் அலுவலகத்தின் உதவியாளரான ஜேம்ஸுக்கு அண்ணாமலையை மிகவும் பிடிக்கும்  என்ன சார், இவ்ளோ பெரிய பாடலாசிரியர், இவ்ளோ சிம்பிளாக இருக்கிறார் என ஆச்சர்யப்படுவான்.

கடைசியாக பார்த்து ஒரு வாரம் இருக்கும் இச்சூழலில் தான் அவரது மரணசெய்தி என்னை அடித்து நொறுக்கியது.

முத்துமாரின் அதிர்ச்சியிலிருந்து முழுதாய் விலகிவருவத்ற்கு முன்பே இன்னொரு அதிர்ச்சி கொஞ்ச காலத்துக்கு முன் வாசன் .

 பாடல் எழுத வருபவர்கள் என்று மட்டுமல்ல எழுத்து சார்ந்து இத்துறைக்கு வருபவர்கள் எல்லோருமே மன நெருக்கடிக்கும் மன அழுத்ததுக்கும் ஆளாகுவது புதுமைப்பித்தன் காலத்திலிருந்தே தொடர்கிறது .

வெளிவரும் ஒவ்வொரு சினிமாக்களின் கடைக்காலிலும் ஒரு எழுத்தாளனின் அவலக்குரல்  புதைக்கப்பட்டிருக்கிறது.

எழுத்தில்லாமல் சினிமா இல்லை .  எழுத்திலிருந்து தான் உதிக்கிறது. அது பாடலாகட்டும் படமாகட்டும்.  ஆனால் அதே சமயம் ஒரு எழுத்தாளனுக்கு பாடலாசிரியனுக்கும் சினிமாவில் கிடைக்கும் கவுரவமும்  மதிப்பீடும் மிக மிக அவமனகரமான் விஷயம்

ஒரு நடிகருக்கோ அல்லது இதர தொழில்நுட்பகலைஞர்களுக்கோ கொடுப்பதுபோல உழைப்புக்கான கூலி எழுத்து சார்ந்தவர்களுக்கு மரியாதையாக உடனடியாக கொடுப்பதில்லை

இதில் பல விதி விலக்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும்  உண்டு

ஆனால் எண்பது சதவிதம்  பேர் அவனை அலைக்கழித்து அவமானப்படுத்தி  அவனாக பலமுறை கேட்டு வறுபுறுத்தியபிந்தான்  ஓரளவு இளகுகிறார்கள். பல சமயங்களில்  வறட்டு பிடிவாதம் காரணமாகவொ  தொடர்ந்த வாய்ப்பு காரணமாகவோ பணம் கேட்க முடியாமல் உள்ளுக்குள்ளேயே குமைந்து மன அழுத்தமடைகிறார்கள்

போராட்ட காலத்தில் மட்டுமல்ல போராடி வளர்ந்து நிலையான இடத்தை பிடித்த பிறகும்  இதே நிலைதான்

படைப்புகளுக்காக உண்டாகும் மன நெருக்கடி போக இது  போன்ற சூழலில் நடக்கும் அவமானங்களினால் உண்டாகும் மன அழுத்தங்களும் சேர்ந்துகொள்வதே  எழுத்து சார்ந்த படைப்புத்துறையில் உள்ளவர்கள் அதிலிருந்து தப்பிக்க வழி தேடி  வேறு சில   பாதைகளில் அலைவதும் பிற்பாடு சடுதியில் ஒரு நாள்  மனைவி குழ்நதைகளை நிர்க்கதியாக்கிவிட்டு உலக வாழ்க்கைதுறப்பதற்கும் காரணம் 

அண்ணாமலையும் இப்படியான மன நெருக்கடிகளுக்கு பலியானவர்தான்.


April 7, 2017

நண்பா! ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு

 நண்பா!   ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு













அதோ லாரி பக்கமாக
சுவற்றோரம் சிற்றிடைவெளி
நீ இறுக்கிக்கட்ட வாகான இடம்
கால்சராய்க்குள்ளாக நீ அணிந்திருக்கும்
லங்கோடு பற்றி எனக்கு தெரிந்த
வரலாற்றை ஆராயாதே
நீ லங்கோட்டை இழுத்து
கட்டும்போது ஓரு தெரு நாய்
உன்னை வேடிக்கை பார்க்கிறது
பயந்து நீ அதை எட்டி உதைக்கிறாய்
அந்த நாயோ சட்டென
பழைய ஹாலிவுட் நடிகையாகி ரோட்டை கிராஸ் செய்து ஓடுகிறாள்
நீயோ குரைக்காமல்
மனிதர்களை அண்ணாந்தபடி
விளக்கு தூணை தேடுகிறாய்
நன்றி நண்பா
ப்ளீஸ் டைட் யுவர் லங்கோடு
_அஜயன் பாலா

April 6, 2017

சி.சு.செல்லப்பாவின் வாடிவாசலும் , ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் - சில பொருத்தப்பாடுகள்


(வாசகசாலை அமைப்பின் அசோக்நகர் நூலக வாசகர் வட்ட நிகழ்வுக்காக 14/03/2017 அன்று ஆற்றிய உரை )



 வாசக சாலை அழைப்பின் பேரில் சி.சு.செல்லப்பாவின் வாடி வாசல் நாவல் குறித்து  நான் ஆற்றவுள்ள இந்த சிற்றுரையை கேட்க வந்திருக்கும்  அசோக் நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றி .வேத நாயகம் பிள்ளை எழுதிய பிரதாபமுதலியார் சரித்திரம்  எனும் முதல் நாவல் துவங்கி ,ராஜமய்யர் , வைமு கோதைநாயகியம்மாள் வடுவூர் துரைசாமி அய்யங்கார் என தொடர்ந்து இன்று சரவண சந்திரன், லக்ஷ்மி சரவணகுமார், அபிலாஷ் சந்திரன், விநாயக முருகன் என இன்றைய தலைமுறை வரை ஆயிரத்துக்கும் அதிகமான நாவல்கள் எழுதப்பட்டு வந்தாலும் இவற்றுள் இலக்கிய தன்மையோடு எழுதப்பட்ட தரமான நாவல்கள் என பெயர் பெற்ற நாவல்களை ஐம்பதுக்குள் சுருக்கிவிடலாம்.  
தமிழின் சிறந்த நாவல்கள் குறித்து போதிய விமர்சனங்கள் இல்லாவிட்டாலும்  1986 வரையிலான நாவல்கள் குறித்து  புதுயுகம் எனும் இதழில் சி.மோகன் ஒரு அருமையான கட்டுரை எழுதி அதில் தன் ரசனைக்கு முப்பது நாவல்கள் கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டார். எனக்கு தெரிந்து தமிழ் நாவல்கள் குறித்த உருப்படியான கட்டுரை அது ஒன்று மட்டுமே . அந்த பட்டியலில் தமிழின் மிகச்சிறந்த நாவல் எதுவுமில்லை என்றும் சிறந்த நாவல் என மோகமுள்ளையும்,.ஜே.ஜே சிலகுறிப்புகள் , மற்றும் புளியமரத்தின் தோணி  மூன்றையும் குறிப்பிட்டு அதற்குப் பின் ஒரு முப்பது சிறந்த நாவல்களை பட்டியலிட்டிருப்பார்.  உண்மையில் உருப்படியான தேர்வு அது.  இது போன்ற நூலகங்களில் அந்த நாவல்கள் அனைத்தும் கிடைக்கும். என் பதின் பருவத்தில் என்  ஊர் செங்கல்பட்டு நூலகத்தில் அப்போது கிட்டத்தட்ட அனைத்து நூல்களும் கிடைத்தன. மூன்று மாதங்களுக்குள் அனைத்தையும் முடித்துவிடலாம்.  
அதில் ஒன்றாக அவர் குறிப்பிட்டிருக்கும் நாவல் வாடி வாசல்.
வாடிவாசல் ஜல்லிக்கட்டை பின்புலமாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வாடி வாசல் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு கூட கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசியல் நிகழ்வுகள் மூலமாக  தெரிந்திருக்கும்.   மனிதனுக்கும் மிருகத்துக்குமான சண்டைதான் நாவலின் மையம். இங்கு அமர்ந்திருக்கும் பலர் அந்நாவல் பற்றி அறியாதவர்களாக இருக்கக்கூடும் எனவே உங்கள் வசதிக்காக முதலில் அதன்  கதையை சுருக்கமாக உங்களுக்கு கூறிவிடுகிறேன்.

அன்று சல்லிக்கட்டு நாள். இன்னும் சற்று நேரத்தில் அந்த செல்லாயி சாட்டு கிராமமே அல்லோகலப்பட போகிறது. நாவலின் பிராதான பாத்திரமான பிச்சியும் அவனது மைத்துனன் மருதனும் அந்த கிராமத்துக்கு வருவதிலிருந்து துவங்குகிறது கதை .அவர்கள் யாரென தெரியாமல் தங்கள் ஜமீன் காளைகளின்  பெருமையையும் துள்ளிதிரியும் யாருமே பிடிக்க முடியாத அதன் வீரத்தையும் வம்படியாக பேசித்திரிகிறான் அசலூர்க்கார கிழவன் ஒருவன் . அவரது வம்படியான் பேச்சுக்கு பதிலடி போட்டு பேசுகிறான் பிச்சி. துவக்கத்தில் அவன் யாரெனத் தெரியாமல் கிழவனும் தன் ஜமீன் காளைகளின் பெருமைக்கு மீசை முறுக்கி பேசுகிறான் . பிற்பாடு  பிச்சி வேறுயாருமல்ல மாடு அணைவதில் வல்லவன் என பேரெடுத்த அம்புலித்தேவனின் மகன் தான் என அறிந்ததும் அவன் மேல் வாஞ்சையும் நெகிழ்ச்சியையும் கொள்கிறான்..



 பல வருடங்களுக்கு முன் ஜமீன் காளைகளிலேயே பிரசித்தி பெற்றதுமான காரியெனும் காளையினால், குத்துப்பட்டு இறந்தவன் தான் அம்புலித்தேவன். தந்தையைக் கொன்ற  காளையை அடக்கி அவரது எண்ணத்தை ஈடேற்றவே இந்த சல்லிகட்டில் பிச்சி கலந்துகொள்ள வந்திருக்கிறான் என்பதை அறிந்து ”எப்பேர்ப்பட்ட வீரனின் மகனாடா நீ” என கிழவன்  உச்சி முகர்ந்து  பிச்சிக்கு ஆசிகளை வழங்குகிறான்.  சல்லிக்கட்டு துவங்குகிறது, வாடி வாசலில் காளைகள் சீறிப்பாய்கின்றன, எப்ப சப்பை காளைகளை மற்றவர் பிடிக்க விட்ட பிச்சியும் மருதனும் யாரலும் பிடிக்கவே முடியாது என அறிவிக்கப்பட்ட அடங்கா காளைகளான  பில்லை,  கொராலு  ஆகியவற்றை மருதனின் துணையோடு அடக்கி ஜமீன்தாரையும் அவரது சகாக்களையும் வாயடைக்க வைக்கிறான். இதற்கு சல்லிகட்டில் பழுத்த அனுபவம் கொண்ட கிழவன் தரும் ஆலோசனைகளும் குறிப்புகளும் ஒத்துழைக்கின்றன.. இப்போது பார்வையாளர்களும் ஜமீனும் பிச்சியின் துணிச்சலான விளையாட்டை பார்த்து வியக்கின்றனர். இறுதியாக வருகிறது அவனது தந்தை அம்புலித்தேவனை கொன்ற காரி. கூரான் கொம்பும் மதர்த்த திமிலுமாக வாடிவாசலிலிருந்து துள்ளிகுதித்துவரும் காரியை பார்த்து பிச்சி தயாராகிறான்


 . துவங்குகிறது மனிதனுக்கும் மிருகத்துக்குமான சண்டை இதில் ஒரு கட்டத்தில் பிச்சி தோற்று விழ, இனி அப்பனைப் போல இவனும் தொலைந்தான் என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கும் வேளையில் சட்டென யாரும் எதிர்பாராத வேளையில் காரியின் கொம்புக்கு தப்பி, அதன் கொம்புக்கிடையில் கட்டப்பட்ட பரிசு முடிச்சை கையால் எடுத்து வாயில் கவ்வி வெற்றி பெறுகிறான் பிச்சி. அப்படியும் காளை அவனது தொடையை பதம் பார்த்து விட ரத்தம் கொட்டுகிறது. ஜமீன் பதட்டத்துடன் அங்கு வர அவரிடம் பிச்சி இந்தக் காளையை அடக்குவதற்கு நான் வரவில்லை. என் அப்பனின் இறுதி எண்ணத்தை பூர்த்திசெய்யும் ஒரு மகனாகவே இங்கு வந்தேன் எனக்கூறுவதுடன் நாவல் முற்று பெறுகிறது.


தமிழில் இதைவிட  சிறிய நாவல் எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. அப்படி இருந்தால் அது ஒருவேளை  வண்ண நிவனின் ரெய்னீஸ் அய்யர் தெரு நாவலாக வேண்டுமானால் இருக்க முடியும் என நினைக்கிறேன். இந்த நாவலின் சிறப்பே  கச்சிதமான மண் வாசம், குன்றாத அதன் எழுத்து நடைதான். ஒரு சொல் கூட கூடுதலாக இல்லாமல் நறுவிசாக செதுக்கினார் போல வாக்கிய அமைப்புகள் .பிரம்மாண்ட சல்லிக்கட்டு அரங்கை வெகு சுருக்கமான வார்த்தைகளில் நம் மனதுக்குள் சுழலவிடுகிறார். பிச்சி, மருதன் கிழவன், முருகு  ஜமீன்தார்,  மற்றும் அமபுலிதேவன் என ஐந்தே மனிதர்களும் பில்லை ,கொராலு, காரி என  பிரதான காளைகளும் தான் கதையை நகர்த்தும்  முக்கிய பாத்திரங்கள். கதை முழுக்க பெண் பாத்திரங்களே இல்லை. பெண் பாத்திரமே இல்லாமல் எழுதப்பட்ட ஒரே நாவல் என்றும் கூட வாடி வாசலை அடையாளப்படுத்த முடியும்.

ஹெமிங்வேவின் கடலும் கிழவனும் நாவலோடு பல விதங்களில் இந்நாவல் பொருத்தப்பாடுகொண்டிருப்பது மிக ஆச்சர்யமான ஒன்று. இரண்டுமே கடுகு எனத்தக்க அளவில் சிறியதும் வீரியத்தில் மிகுந்தும் காணப்படும் நாவல்.
கடலும் கிழவனும் கதை இதுதான். 85 வயதாகும் அந்த கிழ மீனவனுக்கு 85 நாட்களாக கடலில் மீனே சிக்கவில்லை. அந்த வெறியுடன் இன்று எப்படியும் மீனை பிடித்தே ஆகவேண்டும் என தூண்டிலுடன் கடலுக்கு செல்லும் சாண்டியாகோ கடலில் மூன்றுநாள் மீனுடன் நிகழ்த்தும் போராட்டமே கதை.

இரண்டுமே மனிதனுக்கும் மிருகத்துக்குமான போரை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஒன்று தொழில், இன்னொன்று விளையாட்டு
கடலும் கிழவனும் ராட்சத மீனுக்கும் மனிதனுக்கும் கடலில் நடக்கும் போர் என்றால் வாடிவாசல் காளைக்கும் மனிதனுக்கும் நிலத்தில் நடக்கும் போர்.  கடலும் கிழவனும் நாவலில்  நாயகன் கிழவன்(சாண்டியாகோ), துணைப்பாத்திரம் சிறுவன்.  வாடிவாசலில்  நாயகன் இளைஞன்(பிச்சி), துணைப்பாத்திரம் கிழவன்.

இரண்டிலுமே அனுபவம் முக்கியத்துவம் பெறுகிறது. கடலும் கிழவனும் நாவலின் நாயகன் சாண்டியாகோ.  முதுமையும் மீன் பிடிப்பதில் அவனுக்கிருக்கும் பழுத்த அனுபவமும் அதன்பாலான ஈகோவும் நாவலை வழி நடத்துகிறது.வாடிவாசலில் அந்த நாயக பாத்திரம் இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. ஒன்று இளைஞன், உடல் வலிமிக்க  நாயகன் பிச்சி. இரண்டாவது அனுபவம் வாய்ந்த கிழவன். இரண்டும் சேர்ந்துதான் பிச்சியை வெற்றிபெறச் செய்கிறது.

ஹெமிங்வேவின் தனிச்சிறப்பே தான் மெற்கொள்ளும் களத்தை முழுமையாக உள்வாங்கி அந்த இடத்துக்கே நம்மை அழைத்துசெல்லும் துல்லியமான விவரிப்பு பாணிதான். அது போர்க்களமாகட்டும் காளைச்சண்டையாகட்டும் ஆழ்கடல் மீன்பிடிப்பாகட்டும் நிகழ்விடத்தைப் பற்றிய துல்லியமான விவரிப்பு அவருடைய பாணி.
இதே விவரிப்பு பாணி தான் வாடிவாசலின் தனித்தன்மை . வழக்கமாக தமிழ் நாவலில் கதைத்தன்மையும் பாத்திரச்சிறப்புகளும் காட்சியமைப்புகளும்தான் தான் நாவலின் சிறப்புக்கு காரணமாக அமையும். மொழி என்பது இரண்டாம் நிலையில்தான். மொழி மற்றும் விவரணைக்கு சிறப்பாக சொல்லப்படும்   ஜே.ஜே.சிலகுறிப்புகள், புயலிலே ஒரு தோணி ஆகியவற்றில் கூட பாத்திரச்சித்தரிப்பு , காட்சியமைப்பு  கதையம்சம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆனால்   வாடிவாசலில் கதை என்ற அம்சமே இல்லை. நிகழ்வுதான். முழுக்க முழுக்க விவரணை உரையாடல் என மொழியால் மட்டுமே செதுக்கப்பட்ட ஒரே தமிழ் நாவல் வாடிவாசலாக மட்டுமே இருக்க முடியும்.  .

அதுபோல ஹெமிங்வேவின் கடலும் கிழவனில் ஒரு ராட்சத சுறாமீன் பிரதான பாத்திரமாக இருந்தாலும்  பின் நான்கைந்து சுறாக்களும்  வேட்டையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவது போல, வாடி வாசலிலும்  முதன்மை காளையான காரி யோடு மோதி ஜெயிப்பதற்கு முன்,  பில்லை, கொராலு ஆகிய காளைகளை இவன் எதிர்கொள்கிறான்.
ஹெமிங்வே வின் கடலும் கிழவனும் நாவல் 1951ம் ஆண்டு வெளியாகி 52ல் புலிட்சர் விருதும், 53ல் நோபல் பரிசும் பெற்று உலகப்புகழை எட்டியிருக்கிறது. இதற்கு முன்னோடியாக இருக்கும் நாவல் மோபிடிக். சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் திமிங்கல வேட்டை பற்றி எழுதப்பட்டுள்ளது..

செல்லப்பாவின் வாடிவாசல் 1959ல் பதிக்கப்பட்டு அவரது எழுத்து, பத்திரிக்கையுடன் இலவசமாக அனைவருக்கும் அனுப்பப்படுகிறது. இதற்கு முன்னோடி நாவலாக  கமலாம்பாள்  சரித்திரம் இருந்துள்ளது. சல்லிக்கட்டை பற்றி முழவதுமாக இல்லாவிட்டாலும், அந்நாவலுக்குள் ஒருபகுதி வருகிறது.

இவையெல்லாம் இரண்டிற்குமான பொருத்தப்பாடுகள் அவ்வளவே. . ஒருவகையில் ஆச்சர்யமூட்டக் கூடிய பொருத்தப்பாடுகள் .
ஒரு வேளை கடலும் கிழவனும்கூட . செல்லப்பாவுக்கு வாடிவாசலை எழுத உந்தித்தள்ளியிருக்ககூடும் . எப்படியிருந்தாலும் தமிழுக்கு வாடிவாசல் ஒரு பெரும் கொடை.
சல்லிக்கட்டுக்கு துளியும் தொடர்பற்ற ஒரு பிராமண வீட்டின் அனுபவத்தோடு வளர்ந்த சி.சு.செல்லப்பா  அவருக்கு அன்னியமான மறவர்குல பின்புலத்தில் குறிப்பிட்ட நிலப்பரப்பின் வழக்காறு மொழியுடன் உரையாடலில் நயமும் இலக்கியமும் குழைத்து கொஞ்சமும் பிசிறடிக்காமல் மிக துல்லியமாக செதுக்கினார் போல் எழுதியிருப்பது, அவரது அசாத்திய எழுத்துவன்மைக்கு சான்று.
இயல்பில் புகைப்படக்கலையில் ஆர்வமிகுந்தவராக செல்லப்பா இருந்த காரணத்தாலோ என்னவோ, நாவலை முழுவதுமாக திரைப்படக்காட்சியாக நம்முன் நிகழ்த்துகிறார்.

காளையை பிச்சி அடக்கும் தருணங்களில் மொழியும் காட்சி புலமையும் இணைந்து கொள்கிறது. மாட்டுக்கும் பிச்சிக்கும் பின்னாலிருந்து காமிராவை மேலும் கீழுமாக சண்டைக்கு இணையான கோணத்தில் வைத்து காமிராவை திருப்பும் ஒரு இயக்குனரின் லாவாகம்  தேர்ந்த மொழியால் சாத்தியப்பட்டிருப்பது ஆச்சர்யமான நிகழ்வு.
கீழே வரும் ஒரு பாராவை படியுங்கள்

”காளையின் மடிந்த பின் கால்கள் பிச்சி நின்ற இடத்துக்கு நேராக இருந்தன. பாயப்போகிறவன் மாதிரி காலை எடுத்துவைத்தவன், தடாலென நெடுச்சாண்கிடையாக கீழே படுத்தான்.அவனது வலது கை காளையின் வலதுகால் பிடிக்கு வசமாக நெருங்கிவந்தது. கையை வீசி குளம்புக்கு மேலே அடிகணுக் காலைப்பிடித்து மறு கையை தரையில் பதித்து உந்தி எழுந்து காளையின் காலைப் பிடித்து இழுத்தான் 
“
ஒருவேளை வாடிவாசலை ஒரு இயக்குனர் திரைப்படமாக எடுக்க  முன் வருவாரானால் அவருக்கு  இருக்கும் மிகப்பெரிய சவாலே ஏற்கனவே எழுத்தில் செல்லப்பா சாத்தியப்படுத்தியிருக்கும் காட்சிகோணங்கள் தான்.
மேலும் பிச்சி காரியை முதன் முதலாக பார்க்கும் போது அதன் கொம்பில் தன் தந்தையின் ரத்தம் வழிவதைப் பார்க்கிறான். பல்லாண்டுகளுக்கு முன் சிறுவனாக இருந்தபோது அவன் மூளையில் பதிந்த சம்பவம் கணத்தில் வந்து போகும் இக்காட்சிகள் திரைப்பட தொழில்நுட்பத்தில் இண்டர் கட் எனப்படும் இடைவெட்டு காட்சியாகும் 
.
இதன் வழியாக செல்லப்பாவுக்குள் அசாத்தியமான சினிமா ஈடுபாடும் இருந்திருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது. அவரோடு நன்கு பழகியவர்கள், அவரது சினிமா மீதான பார்வை குறித்து எழுதினால் அவரை புரிந்துகொள்ள மேலும் ஏதுவாக இருக்கும்

இப்படியான தமிழின் சிறந்த நாவலொன்றை குறித்து பேச வாய்ப்பை உண்டாக்கி தந்த வாசக சாலை நண்பர்களுக்கும் அசோக்நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும் , நூலக பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி


 நன்றி:  பேசும் புதிய சக்தி  ஏப்ரல் 2017


பாப்லோ நெருடா வாழ்வும் கவிதைகளும்

காதல் இயற்கை புரட்சி மற்றும் வெங்காயம்                                               - அஜயன் பாலா பாப்லோ நெரூடா ( Pablo Neruda, 1904–1...