Showing posts with label விமர்சனம். Show all posts
Showing posts with label விமர்சனம். Show all posts

April 19, 2023

.மா.அரங்கநாதன் படைப்புகள் : விமரசனம் -அஜயன்பாலா

மொத்தம் 90 சிறுகதைகள் இரண்டு நாவல்கள் 47 கட்டுரைகள் என ம. அரங்கநாதன் அவர்களின் படைப்புலகம் முழுவதும் ஒரே புத்தகமாய் வாசித்து முடிக்கையில் அது இருண்ட மலைக்குகையின் ரயில் பயணம் போல மிகவும் புதிர்த்தன்மையும் வினோத அனுபவத்தையும் தரக்கூடியதாக இருக்கிறது. நாவல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் காட்டிலும் சிறுகதைகளில் அவர் சற்று பலம் கூடியவராகவும் கலையம்சம் கூடிவரப்பெற்றவராகவும் காணப்படுகிறார். ஒருவேளை சிறுகதைகள் மட்டுமே மொத்தமாக தனித்தொகுப்பாக கொண்டுவந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றுகிறது.என்றபோதும் ஒட்டுமொத்தமாக ஒரு எழுத்தாளனின் தார தம்மியம் எத்தகையது என மதிப்பிட பிற்பாடு ஆய்வாளர்களுக்கு வசதியான வகையில் இப்படி ஒரு தொகுப்பு நூலை கொண்டு வந்த நற்றிணை பதிப்பகத்துக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. புத்தகத்தை முழுவதுமாக வாசித்து முடிக்கும்போது என்னையே நான் உற்றுப் பார்ப்பதை போல உணர்கிறேன். என் மனக்கிணற்றில் யாரோ எட்டிப் பார்ப்பது போல, காரணம் சில சமயங்களில் அவரை என் தந்தையாக உணர்ந்திருக்கிறேன். சென்னைக்கு வந்த புதிதில் கிட்டதட்ட மூன்று நான்கு ஆண்டுகள் தினசரி ம.அரங்கநாதனை சந்தித்து உரையாடியிருக்கிறேன். அந்த ஞாபகங்களை பகிராமல் புத்தகம் குறித்து மட்டுமே விமர்சனம் எழுத என்னால் முடியவில்லை. இத்தனைக்கும் இதற்கு முன்பே அவர் இறந்தவுடன் அவருக்காக நான் எழுதிய அஞ்சலிக் கட்டுரையில் எனக்கும் அவருக்குமான உறவு குறித்து எழுதியிருந்தாலும் இந்த கட்டுரையிலும் அந்த உணர்வு என்னை மீறி எழுத வைக்கிறது. . மாம்பலம் ரயில் நிலையம் அருகில் சாந்தி காம்ப்ளக்ஸ். இப்போது அது ஜெயச்சந்திரன் துணிக்கடையாக மாறியிருக்கிறது என நினைக்கிறேன். அதன் மூன்றாவது மாடியில்தான் முன்றில் புத்தக கடை இருந்தது. அக்காலங்களில் தினமும் என் பத்திரிக்கை வேலை முடிந்து மாலை அவர் முன்றில் புத்தகக் கடைக்கு வருவதும் உரையாடுவதும் வழக்கம். அவர் வீடும் என் அறையும் அப்போது பழவந்தாங்கலில் அடுத்தடுத்த தெருவிலிருந்த காரணத்தால் இரவு எட்டு எட்டரைக்குமேல் கடையடைத்து விட்டு மாம்பலம் ரயில் நிலையம் வந்து பழவந்தாங்கல் வரை ஒன்றாக ரயிலில் பயணிப்போம்.அப்போது அவர் தொடர்ந்து சிகரட் பிடிப்பார். சார்மினார் சிகரட். வயது வித்தியாசம் பாராமல் எனக்கும் ஒரு சிகரட்டை நீட்டுவார். நான் பல சமயங்களில் மறுத்துவிடுவேன். கடையில் விட்ட உரையாடல் ரயில் பயணத்திலும் தொடரும். உலக இலக்கியம், சினிமா, இலக்கிய அரசியல்கள் என அனைத்தும் பேசுவார். அவரது ஆங்கில இலக்கிய பரிச்சயம் மற்றும் பழைய ஹாலிவுட் சினிமாக்கள் குறித்த துல்லியமான அறிவு எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது. மார்லன் பிராண்டோ, கிரேட்டா கார்போ, பிரெட் ஆஸ்டர், ஜிஞ்சர் ரோஜர்ஸ் என பலரையும் அறிமுகப்படுத்தி அவர்களின் படங்களைப் பற்றி தான் பார்த்த அனுபவங்களையும் சொல்லுவார். எரோல் பிளின், ஜேம்ஸ் டீன் ஆகியோர் பற்றி அடிக்கடி குறிப்பிடுவார். இந்த மொத்த தொகுப்பின் பல கதைகள் அந்த காலத்தில் அவர் எழுதியவை பஃறுளியாற்று மாந்தர்கள் நாவலும் கூட அக்காலத்தில் எழுதப்பட்டதே. நாவல் வெளியாகும் முன்பே எனக்கு ஒரு பிரதி தந்து அதை படித்து அபிப்ராயம் சொல்லுமாறு கொடுத்தார். நான் அப்போதுதான் கல்லூரி படிப்பு முடிந்து சென்னை வாழ்க்கைக்குள் நுழைந்த காலம். ஆனாலும் அவர் என்னையும் என் எழுத்தின் மீதான ஆர்வத்தையும் மதித்து அவர் ஒவ்வொரு கதை எழுதிய பின்னும் கையெழுத்து பிரதியிலும் அச்சு பிரதியிலுமாக கொடுத்து படிக்க சொல்லி கருத்து கேட்பார். எனக்கு அவருடைய கதைகளில் அப்போது சில விமர்சனங்கள் இருந்தன. முதலாவதாக அவருடைய கதைகளில் முத்துக்கறுப்பன் என்ற ஒரே பாத்திரமே திரும்ப திரும்ப வருவது எனக்கு பிடிக்கவில்லை. அதை அவரிடம் நேரிடையாகவே சொன்னேன். இதர கதைகளின் நம்பகத்தன்மை, வாசக ஈர்ப்பு போய் முத்துக்கறுப்பன் எப்போது வருவான் என்ற எதிர்பார்ப்பும் அந்த பாத்திரத்தின் மீதான ஈர்ப்புமாக மட்டுமே கதை முடிந்து போய்விடுகிறது என்றும் கதையின் உள்ளடக்கத்தை அது பெரிதும் பாதிக்கிறது என்றும் சொல்வேன். அந்த வயதில் அவர் எனக்கு முழு சுதந்திரத்தையும் தந்தார் . ஆனால் மொத்தமாக படிக்கும் போது என் அக்கால அபிப்ராயம் தவறு என்றே எண்ணத்தோன்றுகிறது. இப்போது மொத்த கதைகளையும் வாசித்தபின் முத்துக்கறுப்பன் என்கிற பாத்திரம் நம் மனதில் ஒரு நிழலுருவமாக அழுத்தமாக பதிவதை உணர முடிகிறது. கதைகளில் எங்கும் முத்துக்கறுப்பன் தோற்றம் குறித்து விவரணைகளில்லை. ஒரு கதையில் திருமணம் செய்யப்போகும் இளைஞனாகவும் இன்னொரு கதையில் கிழவனாகவும் மற்ற கதையில் நடுத்தர வயதுடையவராகவும் வருகிறாரே தவிர்த்து எங்கேயும் விவரணைகளில்லை. மாறாக ஒரு குணச்சித்திரம் நமக்குள் அருவமாக பதிகிறது. கதைக்குள் அந்த அருவத்தின் நிழல் உண்டாக்கும் சலனங்கள்தான் அவருடைய ஒட்டுமொத்த கதைகளின் புதிர்த்தன்மைக்கு ஆதாரம். தமிழ் நவீன இலக்கிய சூழலில் மிகவும் தனித்தன்மை மிகுந்த கதையுலகம் ம.அரங்கநாதனுடையது. அவருடைய கதைகள் எளிமையானவை. மொழி இலகுவானது. வாசகனோடு நேரடியாக உரையாடக்கூடிய தன்மை கொண்ட கதைகள் . என்றபோதும் அவருடைய கதைகள் எளிதில் வசப்படாத அருவத்தன்மையும் கொண்டவை. வழக்கமான வடிவ பரிசோதனைக்கதைகள் மட்டுமே இத்தகைய அரூப உள்ளடக்கத்தை கைக்கொண்டிருக்கும். ஆனால் ம.அரங்கநாதன் கதைகள் தெளிவான எளிமையான 60,70 களின் பாணியில் கதையை சொல்லி அருவமான அல்லது நம்மை மிகவும் யோசனையில் ஆழ்த்தக்கூடிய முடிவைக் கொண்டிருப்பவை. பெரும்பாலும் அவர் எந்த கதையையும் நேரடியாக சொல்பவரில்லை, கதையை குறிப்பால் உணர்த்துகிறார். எது கதை என்பதை நீங்கள் படித்து முடிக்கும் போது ஒரு தெளிவற்ற நிலைக்குள் தள்ளப்படுவீர்கள் அதுதான் அவர் பயன்படுத்தும் உத்தி. தன்னுடைய சிறுகதைகளில் வாசகன் கதையை இதுதான் என கண்டுவிடக்கூடாது என்பதில் முழு கவனத்துடன் அவர் ஈடுபடுவதுதான் அவருடைய தனித்தன்மை. பொதுவாகவே சிறுகதைகளின் வடிவம் என்பது அதன் இறுதிவரிகளால் தீர்மானிக்கப்படுகிறது. இறுதியில் சொல்லி சொல்லாமல் நிறுத்துவது எழுத்தில் ஒரு சாகசம். சில பண்பட்ட எழுத்தாளர்களுக்கே அது சாத்தியப்படும். ஒரு வெற்றிடத்தை முடிவில் விட்டுச்செல்லும் கதைகள் நம் மனதில் ஆழத்தேங்கி விடுகின்றன. கதை அதுகாறும் எதைச்சொல்ல வருகிறதோ அதை இறுதியில் ஒன்றுமில்லமால் செய்வது அல்லது அதை கடந்து வேறொன்றைச்சொல்லி நம்மை யோசிக்க வைப்பது அல்லது அதை குறிப்பால் உணர்த்தி வாசகனுக்குள் புதிர்த்தன்மையை உருவாக்குவது அல்லது சற்றும் எதிர்பாராத அதிர்ச்சிக்குள் வாசகனை ஆழ்த்துவது போன்ற முடிவுகளை தமிழின் பெரும்பாலான நல்ல கதைகள் கைக்கொண்டு வருகின்றன. இதை சரியாக செய்பவை மட்டுமே சிறந்த கதைகள். முடிவை திறமையாக கையாள்வதில் ஓ ஹென்றி, காப்கா, சதாத ஹசன் மாண்டோ மூவருமே அதி மேதைகள். இதனாலயே சிறுகதை உலகின் முடிசூடா மன்னர்கள் என்ற பெயரையும் வரித்துக்கொண்டவர்கள். ஓ ஹென்றியின் கிப்ட் ஆப் மேகி, லாஸ்ட் லீஃப் மற்றும் க்ரீன் ரூம் போன்ற கதைகளும் காப்கா வின் பாதர் உள்ளிட்ட கதைகளும் மாண்டோவின் ஒட்டு மொத்த கதைகளையுமே சொல்ல முடியும் மூன்றும் வெவ்வேறு பாணியிலானவை. தமிழில் இவர்களைப் போல முடிவில் செறிவான தொழில் நுட்பத்தை கைக்கொள்ளும் சிறுகதை எழுத்தாளர் என்றால் அசோகமித்ரனை சொல்லமுடியும். வெறும் கதையாக இல்லாமல் செய் நேர்த்தியாக செதுக்கி வாசகனை ஓரிடத்தில் நிற்கச்செய்து விட்டு காணாமல் போகக்கூடிய எழுத்து அவருடைய பாணி. அசோகமித்ரனுக்குப் பிறகு அந்த லாவகம் முழுமையாக கைகூடப்பட்ட எழுத்து ம.அரங்கநாதனுடையது. தமிழ் சிறுகதையில் புதுமைப்பித்தன், கு.பா.ரா, மௌனி ஆகியோருக்குப் பின் ஆதவன், வண்ணநிலவன் வண்ணதாசன், கி.ராஜநாராயணன், பிரபஞ்சன் ஆகியோரிடம் சிறந்த நுணுக்கமான விவரணைகள், உள்ளுணர்வுகள், காட்சி பதிவுகள் அழுத்தமான பாத்திரங்கள், தனித்த வாழ்வனுபவங்கள் ஆகியவை சிறப்பாக கொண்டிருந்தாலும் சிறுகதையின் இறுதியில் ஒரு வெற்றிடத்தை உருவாக்கி மீண்டும் கதையை முதலிலிருந்து வாசிக்க தூண்டும் வடிவம் ம.அரங்கநாதனுக்கு மட்டுமே வாய்க்கப்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அவருடைய புகழ்பெற்ற கதையான சித்தியை எடுத்துக்கொள்வோம். எதேச்சையாக ஒரு மைதானத்தில் ஓட்ட பயிற்சிக்கு வருகிறான் ஒரு இளைஞன். அங்கு காவலர் மூலமாக பெரியவர் ஒருவர் அறிமுகமாகிறார். அவர் முன்னாள் விளையாட்டு வீரர். நாடே அறிந்தவர் விளையாட்டுக்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்.தேசத்தின்மேல் மிகுந்த பற்று வேறு. அவருக்கு இவனை கண்டதும் பிடித்துப்போகிறது. அவர் அவனுக்கு பல உத்திகள் பல பயிற்சிகள் கற்றுக்கொடுத்து மிகப்பெரிய வீரனாக உருவாக்குகிறார். அவனும் பல போட்டிகளில் கலந்து வெற்றிவாகை சூடுகிறான். நாடே அவனை திரும்பி பார்க்கிறது. கடைசியில் ஒலிம்பிக் போட்டியில் அவன் பெயர் அறிவிக்கபோவதற்கு முந்தின நாள் பத்திரிக்கையாளர்கள் அவனை சுற்றி பேட்டி எடுக்கின்றனர். அவர்கள் அவன் இந்த இடத்தை அடைய அவன் பட்ட சிரமங்களைப் பற்றி சுவாரசியமான பதில்கள் அல்லது நம்பிக்கையூட்டும் அனுபவங்கள் வரும் என எதிர்பார்க்க, அவனோ எனக்கு எதுவும் தெரியாது ஓடத்தெரியும் ஓடினேன்… ஓடிக்கொண்டிருந்தேன் என்ற தினியிலேயே பதில் சொல்கிறான். இறுதியாக ஒலிம்பிக்கில் நம் தேசத்தின் எதிர்காலம் எப்படி என்பதுபோல் கேட்க பதிலுக்கு அவனோ எனக்கு தெரியாது என்னால் சொல்ல முடியாது எனக்கு ஓடமட்டுமே தெரியும் என்பது போல சொல்ல அதுவரை உற்சாகத்துடன் அருகில் நின்ற பெரியவர் கோபத்துடன் கதவை அடைத்துவிட்டு காரில் ஏறி செல்கிறார். அதோடு கதையும் முடிகிறது. யோசித்து பாருங்கள்... இந்த கதையில் யார் நாயகன். அந்த இளைஞனா பெரியவரா... கதை இளைஞனுடையதாக இருந்தாலும் கதையை முடிப்பது பெரியவரின் செயலே… இந்த கதை மூலம் அவர் சொல்ல வருவது என்ன ? இது வாசகனுக்கு விடும் சவால். வெறுமனே இந்த கதையை பரிசோதனை முயற்சி என சொல்லிவிட்டு தப்பிக்க முடியாது. கதையின் இறுதியில் அந்த முதியவர் பாத்திரம் எதனால் அப்படி கோபப்பட வேண்டும் என்பதை யோசிக்கும் வழியில் உங்களுக்கான கதையின் இறுதி முடிச்சு உள் முகமாக சுருட்டப்பட்டு மறைந்து கிடக்கிறது. காப்காவின் ஜட்ஜ்மண்ட் கதையின் இறுதிபோல ரஷ்யாவில் வசிக்கும் நண்பனுக்கு தன் காதல் திருமண நிச்சயத்தை கடிதம் மூலமாக தெரிவிக்க போகும் முன் அப்பாவோடு உரையாடுகிறான். அப்பா அவனுக்கு தகவல் சொல்லக்கூடாது என்கிறார். இறுதியில் அவன் ஒரு பாலத்திலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொள்கிறான் இறுதியில் அவன் தற்கொலை போலத்தான் சித்தி கதையில் முதியவர் கோபத்துடன் காரில் ஏறிச்செல்வதும் கதை அங்கு முடியவில்லை. ஆனால் இரண்டிலும் இறுதி சம்பவம் உண்டாக்கும் அதிர்ச்சி கதையை மீண்டும் வாசிக்க கோருகிறது. காப்கா கதையில் அப்பாவும் மகனும் எந்த இடத்தில் முரண்படுகிறார்கள் என வார்த்தையில் தேடினால் கிடைக்காது. அது போலத்தான் சித்தி கதையிலும் இளைஞனுக்கும் முதியவருக்குமான முரணுக்கு என்ன காரணம் என யோசிக்க வைக்கிறார். சித்தி கதையில் இரண்டு பார்வை கோணங்கள் ஒளிந்திருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால், அந்த இளைஞன் தன் காரியத்தை கடமையை சரியாக செய்தாலே பலன் அதுவாக கிட்டும் என நினைப்பவன். அவனிடம் முஸ்தீபுகள் இல்லை, பெரிய இலட்சியங்கள் இல்லை… பார்ஸ்ட் கம்ப் பட நாயகனை போல ஓடிக்கொண்டேயிருக்கிறான், வெற்றி அவன் பின்னால் இயல்பாக வருகிறது. வாழ்வின் முழு பக்கத்தையும் அறிந்த ஒருவனுக்கு மட்டுமே இத்தகைய ஞானம் சாத்தியம். கடைசியில் அவன் பேட்டியில் பேசும்போது பெரியவர் இத்தனைக்கும் காரணமான தன்னை அவன் குறிப்பிடவில்லையே என கோபித்துக்கொண்டு போவதாக எடுத்துக்கொள்ளலாம். அதே சமயம் அவன் சுயநலம் கொண்டவனாக, பெரியவரால் தனக்கு உயர்வில்லை தன் உழைப்பு மட்டுமே தன் வெற்றிக்கு காரணம் என சொல்வதாக எடுத்துக்கொள்ளலாம். இது எல்லாமே நம்முடைய தேர்வு… வழக்கமாக வரும் முத்துக்கறுப்பன் இல்லாமல் இக்கதை எழுதியதும் இந்த இரட்டை தன்மைக்கு காரணம். ஒருவேளை முத்துகறுப்பன் பேர் யாருக்கு வருகிறதோ அவன் பக்கம் நியாயமாக இருக்கும். காரணம் அவர் பெரும்பாலான படைப்பாளிகளைப் போல தன்னிலையை உயர்வாக எண்ணி எழுதக்கூடியவர். பெரும்பாலும் உறவுச்சிக்கல்களை அல்லது தனிமனித ஆன்ம அனுபவங்களை சார்ந்திருக்கும் இவரது கதைகளில் கோஷங்களோ பிரச்சாரங்களோ சமூக அவலங்களோ காணப்படுவதில்லை. சொல்லப்போனால் கதைகளில் பெரிய சிக்கல்களையும் அவர் சொல்வதில் பல கதைகள் துண்டு துண்டான சம்பவங்கள் அதை நாம்தான் கோர்த்து புரிந்துகொள்ளவேண்டும். வெறுமனே அதை அப்படியே கடந்து செல்ல முடியாது. இரண்டாவது முறை கதையை மீண்டும் படிக்க வேண்டும் உதாரணத்துக்கு காடன் மலை எனும் கதை .. அதில் வரும் முத்துகறுப்பன் போளுர் வரை வந்து காணாமல் போகிறான். மலை திருவண்ணாமலை தான் என்பதை யூகித்து அறியமுடியும் அல்லது பரவத மலையாகவும் இருக்கலாம். திருவண்ணாமலை என ஏன் நான் சொல்கிறேன் என்றால் ம.அரங்கநாதன் அடிக்கடி ரமணர் பற்றி சொல்வார். திண்டிவனம் வரை வந்து அவர் திடீரென காணாமல் போய்விட்டார் என புதிர்த்தன்மையோடு கதைகளில் சொல்வது போல விவரிப்பார் ... காணாமல் போவது, தோன்றுவது, தோன்றி மறைவது போன்றவை அவர் கதைகளில் பல இடங்களில் காணக்கிடப்பவை.தென்னகம் என்றாலே அனைவரும் தெற்கு திசை தென் திசை என்றுதானே நாம் நினைத்திருப்போம் ஆனால் அவர் ஒரு கதையில் தென் என்றால் தென்படுதல் தோன்றி மறைதல்,அவன் தோன்றி மறைந்த இடம், காட்சியளித்த இடம் அதனால் தென்னகம் என புது விளக்கம் தருகிறார். இந்த மொத்த தொகுப்பில் என்னை மேற்சொன்ன இரு கதைகள் தவிர்த்து சிறிய புஷ்பத்தின் நாணம், வீடுபேறு பனை, (இதிலும் முத்துகறுப்பன் இல்லை)அஞ்சலி, போன்ற கதைகள் வடிவரீதியாகவும் உள்ளடக்கரீதியகாவும் என்னை பெரிதும் ஈர்த்தன. குறிப்பாக அஞ்சலி எனும் கதையில் இரண்டு கட்டுரைகள் மட்டுமே. அவை ஒரு விமர்சன எழுத்தாளன் இறப்பதற்கு முன்னும் பின்னுமான இரண்டு கட்டுரைகள். இரண்டிற்குமான வித்தியாசம்தான் கதை. நல்ல வேளை நான் எழுதிய இரண்டு கட்டுரைகளும் அவர் இறப்பிற்கு பின்தான்… முன்பாக எழுதியிருந்தாலும் இப்படித்தான் எழுதியிருப்பேன் .. என்ன செய்ய முத்துகறுப்பன் என்னை எழுத அனுமதிக்கவில்லை. நன்றி.. ந்ற்றிணை காலண்டிதழ் 2018

July 18, 2016

ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது -திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை

கண்டராதித்தனின் “ திருச்சாழல் கவிதை தொகுப்பு விமர்சன கட்டுரை
 -அஜயன் பாலா

தமிழ் கவிதைகள்  இன்று  ஒரு  மிகப்பெரிய வெற்றிடத்துக்குள் வந்து மூச்சு முட்டி நிற்கின்றன .இந்த வெற்றிடம்  தற்காலிகமானதுதான் . சிறுகதை போலோ, நாவல் போலோ, கவிதைக்கு மிகப்பெரிய இடைவெளிகள் தமிழ் இலக்கிய சூழலில் எப்போதுமே உண்டானதில்லை.மேலும் அரைகவிகள் , காசு கவிகள், துதிபாடிகள் கவிஞர் என்ற பேரில் எல்லா காலத்திலும் தமிழகத்தில்  நிறைந்து காணப்படுகின்றனர். தமிழகத்தின் அதிகமாக விற்பனையாகும் இதழ் முதல், கடைக்கோடி  இதழ் வரை கவிதை இல்லாமல் பிரசுரமாவதை அச்சு இயந்திரமே  விரும்புவதில்லை . அந்த அளவுக்கு   கவிதைகள்  அதிகமாக எழுதப்படுகின்றன . மற்ற மொழிகளில் இது போல கவிதைகள் எழுதப்படுகின்றனவா என்று  தெரியவில்லை.

இப்படியான சூழலில் சிறந்த கவிதைகள் எனும் ஒரு இடத்தை ஒரு தொகுப்பு  பெறுவது சவாலான  விஷயமே. திருச்சாழல் தொகுப்பு  வெளியாகி கிட்டத்தட்ட ஒரு வருடம்  ஆகப்போகும் சூழலில்  இது போன்ற  விமர்சன கூட்டங்கள் கவிதைக்கும் கவிஞனுக்கும்  பெருமை சேர்க்கின்றன. இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த  தென் திசை இலக்கிய வட்ட அமைப்பிற்கும்  அமைப்பாளர்களுக்கும் ,நண்பர்  அதீதன் சுரேன் மற்றும் தேவிமகன் ஆகியோருக்கும் என் அன்பார்ந்த நன்றிகள்.

ழ கவிதை களுக்குபிறகு நீண்ட இடைவெளியுடன் கவிதயுலகம் விரக் விட்டு எண்ணக்கூடிய கவினர்களால் மட்டுமே இயங்கி வந்த நிலையில்
2000க்குப்பின் கவிதை உலகம் பெண் கவிஞர்கள் மூலமாக மிகப்பெரிய உடைப்பை உண்டாக்கியது. இத்னை   தொடர்ந்து 2004க்குப்பின் புதிய அலையாக ஆண்கவிஞர்களும் புற்றீசல் போல படையெடுத்தனர். புது எழுத்து காலம் என்று கூட சொல்லுமளவிற்கு அந்த காலத்தின் கவிஞர்களுக்கு முழுவதுமாக மேடை கொடுத்து, அந்த பாய்ச்சலுக்கு வழி வகை செய்தார் மனோன் மணி.அந்த புது எழுத்து காலத்தில் ஸ்ரீநேசன், ராணி திலக், பழனி வேல் ஆகியோருடன் அறிமுகமானவர் கண்டராதித்தன்.

இந்த அலையில் இவர்களுக்கு சற்று முன்னதாக லஷ்மி மணிவண்ணன் யவனிகாஸ்ரீராம் சங்கர ராம சுப்ரமணியன் . ஆகியோர் வந்திருந்தாலும்,

அதே போல இந்த அலையின் பிந்திய ஆளாக பிரன்சிஸ் கிருபா, அய்யப்ப மாதவன் ஆகியோர் இணைந்திருந்தாலும்,

இவர்கள் அனைவருமே இக்காலத்தின் சிறந்த கவிகளாக அவரவர் தொகுப்பு வரும் வெவ்வேறு காலங்களில்  கால இடைவெளிகளில் அறியப்பட்டனர்.

இவர்களை தொடர்ந்து இசை இளங்கோ கிருஷ்ணன், செல்மா பிரியதர்ஷன்,  லிபி ஆரண்யா,  சபரி நாதன் ,வெயில் ரியாஸ் குரானா,  நரன் ,கதிர்பாரதி  ,  போகன் சங்கர் போன்ற கவிஞர்கள் இச்சரடை தொடர்ந்து இன்றுவரை எழுதி வந்தாலும்,    .            
இவர்களுள் கண்டராதித்தன்  கவிதைகள் இன்று வரை மிகுந்த தனித்தன்மை  கொண்டவையாக  இருக்கின்றன என்பது அதன் சிறப்பு.

குறிப்பாகவே அவரது முந்தைய இரு தொகுப்புகளான 2001ல் வெளியான கண்டராதித்தன் கவிதைகள் மற்றும் 2007ல் வெளியான சீதமண்டலம், இவை இரண்டின் மூலமாக மட்டுமே அவருக்கு இந்த பெயர் கிட்டியிருப்பதை மொழிசார் கவியுலகு நன்கறியும்.  இதன் மூலம் கண்டராதித்தன்  மட்டுமே சிறந்த கவி என்பதான அர்த்தம் இல்லை, அவரைக்காட்டிலும்  வேறு  சிலருக்கும் காலத்தின்  அரிய சிம்மாசனங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. ஆனால் இக்கட்டுரை கண்டராதித்தன் கவிதைகளின் ஈரப்பசையை மட்டுமே அளவெடுக்கவிருப்பதால் அவருடைய அந்த சிம்மாசனத்துக்கும் மூன்றாவது தொகுப்பான திருச்சாழலுக்கும்   பொருத்தம் உள்ளதா, இல்லை சிம்மாசனத்துக்கு  முட்டுகிட்டு கொடுக்கவேணுமா,  இல்லை சிம்மாசனத்தையே அப்புறப்படுத்திவிடலாமா, என்பதை பரிசோதித்து பார்ப்பதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கம்.

 அவருடைய முந்தைய இரு தொகுப்பின் கவிதையாக்கத்தை லேசாக ஒரு எட்டு பார்த்துவிட்டு இன்றைய கவிதைகளில் என்னவாக உருமாற்றம் அடைந்துள்ளார் என்பதை பார்க்கலாம் என நினைக்கிறேன்.

2000ல் வெளியான முதல் தொகுப்பான கண்டராதித்தன் கவிதையில் அவரிடம்  கவித்துவமாய் சொல்வதற்கு பாடு பொருட்கள் அல்லது இறைச்சி நிறையவே இருந்தது. கீழ் காணும் பூ பற்றிய கவிதையில் ஒரு பூ நம்மை வந்தடையும் விதத்தை பட்டியலிடுவதை  பார்ப்போம்.


கவிதை

           //ஒரு நீதியை நமக்கு சொல்வது போல்
பூக்கள் பூக்கின்றன

ஒரேயொரு பூக்கூந்தல் இந்த வீதி
முழுவதையும் அழகாக்கிவிடுகிறது

பூக்களின் வழி பெண்கள் மேலும்
சுந்தரமாகிறார்கள்

உற்சவ மூர்த்தி  தண்டை மாலைகளுடன்
அருள் பாலித்துக்கொண்டிருக்கிறார்

பூப்பல்லக்கில் அசைந்து போகிறது
அண்ணாரது பூத உடல்
நமக்கென  நீதிகளை
பூக்கின்றன செடிகள்  அதனால்
நமக்கு கிடைக்கிறது ஒன்றிரண்டு
பூக்கள்
            
பூ வெவ்வேறு விதமாக நம்மை வந்தடைவதை இக்கவிதை  காட்சி படுத்துதலின் மூலம் முழுமையான கவிதையாக  நம்மை வந்தடைகிறது 
இந்த குணம் அவரது அடுத்த தொகுப்பான சீத மண்டலத்தில் பெரும்பாய்ச்சலை சந்திக்கிறது. கவிதை என்பது இறைச்சி பொருளை தாண்டி மொழியின் சாத்தியத்தை அல்லது கவிதையிலிருந்து கவிதையை லாவகமாக வெளியேற்றும் தன்மையுடையதாக மாற்றிக்கொள்கிறார்.  சீத மண்டலத்தின் எந்த  கவிதைக்கும் சாவி இல்லை. இறுக்கமான சொற்களை தைத்து அதை விந்தையான வடிவத்தில் தைத்து இறைச்சியை கண்டடைய முடியமல் வாசகனை திணறவைத்து  வெளியேற்றும் அந்த வித்தையை, மிக தேர்ந்த தொழில் நுட்பத்துடன்  செய்திருந்தார்.  அவரது சமகாலத்தில் வேறு யாருக்கும் இத்தகைய வசீகர இறுக்கம் வாய்க்கவில்லை, இவரது சம காலத்தவர்களான ஸ்ரீநேசன் , ஷங்கர் யவனிக்கா ஆகியோர் வாசிப்பின் பேரின்பத்தை முன்வைத்த கவிதைகளை எழுதிக் கொண்டிருந்தபோது முற்றிலும் புதிர்த்தன்மையான  சொற்கட்டுமானத்தின் மூலம் ஒரு வசீகரத்தை தக்கவைத்துக்கொண்ட கவிதைகளாக  காணப்பட்டது   சீதமண்டலத்தின்  சிறப்பு .

அவரது மொழியில், திராவிட திரைப்பட பணியிலான ஒரு சப்த ஒழுங்கையும் இக்கவிதைகளில் காணமுடியும். ஒருபுறம் சப்தரீதியான அற்றொழுக்காத மொழி ஒழுங்கும் உள்ளிடாக அர்த்தச்சிதைவுமாக இக்கவிதைகளின் வசீகரம்  மிகுந்த தனித்தன்மை கொண்டதாக அமைந்திருந்தது.

உதாரணத்துக்கு சீதமண்டலத்தில் அவரது கவிதை
  தலைப்பு : நீ எழுது

//கள்வர்கள் கபட தாரிகள் பாவிகள்
திரியும்  இருண்ட தெருக்களில்
உனக்கொரு மேசை தயாரிக்கப்பட்டது//

என துவங்கி

//ஆள் அம்பு அரிவாளென ஆயுதங்கள் வடிக்கும்
உலைக்களத்தின் ஓசையை கேட்டோம்
கேடு மிகுந்ததால்
அலறும் பட்சிகளின்
 சப்தத்தை கேட்டோம்
பெண்டிரும் சிசுவும் கதறும்
ஓலத்தையும் கேட்டோம்
அன்பையோ சமாதானத்தையோ
காதலையோ துயரத்தையோ
உன்மூலம் அறிந்து
ஆகாயத்திலிருந்து  எவனும் வந்து
தழுவத்தேவையில்லை தேவடியா மகனே //
( சீத மண்டலம் )

என முடியும் கவிதையின் கேட்டோம் டோம் டோம் என சப்த ஒழுங்கினூடே, கட்டுண்டோம் பொறுத்திருந்தோம் என திராவிட பாரம்பரியத்தின் மொழி ஒழுங்கினூடே, இறுதியில் தேவடியா மகனே என அதிரும் கடைசி வரியின்  முரண் தான் கண்டராதித்தனின் கவிதைகளின் பலம்.

அவரது இந்த மொழி அடுக்குகளின் திராவிட இயக்க வசனங்களின் சாயல்  எனக்கு குறையாக படவில்லை, மாறாக அது அவரது உத்தியாக கவிதைக்குள் தான் உருவாக்க முனையும் சட்டகத்துள்  வரலாற்றினுள்  வாசகனை கழுத்தை பிடித்து அழுத்த உதவும் உபாயமாக அறியமுடிகிறது.மேலும் வரிகளுக்குள்  ஒளிந்திருக்கும் அந்தகாரம் காலத்தின் இருண்ட மடிப்புகளக இருப்பதால் நவீன கவிதையின் சாத்தியத்தை இக்கவிதைகள் ,முழுமையாக வரித்துக்கொள்கின்றன,
கண்டராதித்தனின் கவிதைகளின் சிறப்பே இந்த வரிகளுக்கிடையிலான அந்த காரம் தான்.இந்த காரத்தினுள் நுழைந்து அர்த்தங்களை தேடும் வாசகன், சோழ கோயில்களின் வவ்வால் மண்டிய   குகையில் புதையுண்டவனாகிவிடுவான். இப்படியாக ஒருபுறம் தமிழ் புரணிகத்தை கட்டியெழுப்பும்  வரிகள் இன்னொருபுறம்  தேவடியா மகன் இந்த இரண்டும் சேர்ந்த அவரது குரல் ஒருவகையில் நிலவுடமை சமூகத்தின் மரபை இழக்காத குரல்களாக இருந்தாலும், இன்னொரு புறம் அவற்றின் கட்டுகளிலிருந்து வெளியேற தவிக்கும் நவ கவிஞனின் குரலாகவும் இரண்டு வேறுபட்ட தவனியில் இயக்கம் கொள்கின்றன. சீதமண்டலம் மூலமாக கண்டராதித்தன் பெற்ற இந்த தனித்த அடையாளம் அவரது மூன்றாவது தொகுப்பான திருச்சாழலில் சற்று நீர்த்த வடிவிலேயே காணப்படுகிறது.

 இடைப்பட்ட காலத்தின் புதியகவிகள் மற்றும் முந்தைய தொகுப்பின் மீதான விமர்சனங்கள் அவரையும் வசன கவிதைகள் என அழைக்கப்படும் ப்ளேய்ன் பொயட்ரிக்குள் விழத்தட்டியிருக்கூடும்

 திருச்சாழல் தொகுப்பின் இரண்டாவது கவிதையான  “கடவுள் முட்டாள்களிடம் அனபாயிருக்கிறார் எனும் கவிதையில் இதுவரையில்லாத  புதிய கண்டாராதித்தனை  எளிமையான வசனங்களினூடே பார்க்க முடிகிறது.  இன்று வெறும் துண்டுதுண்டாக மொழி பிடிமானம் இல்லாத நடைமுறை வாழ்க்கையின் சில்லுகளை வார்த்தையாக கோர்ப்பதை கவிதையாக்கத்தின் புதிய தொழில்நுட்பமாக பார்க்கமுடிகிறது. கிட்டத்தட்ட இந்த பாணி எரிசலூட்டும் வகையில் அதன் அழிவை எய்து விட்ட நிலையில்    கண்டராதித்தன் எனக்கும் தவில் வாசிக்க வரும் என நிரூபிக்க முயல்வதை  வெறும் பரிசோதனையாக மட்டும் எடுத்துக்கொள்ளமுடியாது.

இது போன்ற கவி சவால்கள் உயர்ந்த கவிஞனின் கால  தடுமாற்றங்களாகத்தான் கணக்கில் எடுக்க முடியும். இன்னபிற கவிதைகளில் இந்த நேரடி வசன தன்மையில்லாவிட்டாலும்  முந்தைய தொகுப்பின் அடர்த்தியான மொழி திரவ நிலைக்கு இறங்கியுள்ளதாகவே புரிந்து கொள்ள முடிகிறது. காலத்தோடு   தன்னை புதுப்பித்துக்கொள்ள முனையும் போது கவிஞன் தன் அடையாளங்களையும் காப்பற்றிக்கொள்ளவேண்டியது  அவசியம். முந்தைய தொகுப்பின் ஒரே சொல்முறை அல்லது பாடுபொருளில்லிருந்து விலகி இத்தொகுப்பில் பல்வேறு முயற்சிகளை கவிஞர் முன்னெடுத்துள்ளார் .  பொதுவாக கண்டரின் கவிதைகளின் தனித்த  பாணி  வியக்கப்பட்ட அளவிற்கு தனியாக சிறந்த கவிதை என எந்த கவிதையும் அடையாளப்படவில்லை . உதாரணத்துக்கு யவனிக்காவின் குறைந்த கூலிக்கு முந்திரிகொட்டை உடைப்பவன். ஸ்ரீநேசனின் நள்ளிரவில் ஏசுகிறிஸ்து . ஷங்கரின்  சிங்கத்துக்கு பல் துலக்குபவன் போன்ற அடையாளமான கவிதைகள் என எதையும்  இவரிடம் சொல்ல முடியாது . ஆனால் இத்தொகுப்பில் பல சிறந்த கவிதைகள் பாணியிலிந்து விலகி எழுதப்பட்டிருக்கின்றன .   சிறந்த கவிதைகள் அடையாளமான கவிதைகள் அவர் எழுதியுள்ளார். குறிப்பாக  ஞானப்பூங்கோதைக்கு  வயது 40, மகளின்  கண்ணீர் , நோய்ப்பிண்டம் , நீண்டகால எதிரிகள் என சிலவற்றை பிரித்து எடுத்து கூற முடியும்
 அவ்வகையில் இந்த போராட்டத்தில்   ஒரு  கவிஞனாக கண்டராதித்தன் வெற்றி பெற்றவராகவே கருதமுடியும்.

தொகுப்பின் சிறந்த கவிதைகளுள் ஒன்றாக நோய்ப்பிண்டம் எனும் கவிதை அவரது முந்தைய தொகுப்பின்  பாய்ச்சல்களை பன் மடங்கு கடந்துவிட்டதை உணர முடிகிறது. வழக்காமான பாணியிலிருந்து விலகிய இக்கவிதையின் பாடுபொருள் கவிஞனின் தீவிர அகவுலகம் பற்றி பேசுகிறது. கண்டராதித்தனின் கவிதைகளில் பொதுவாக சுயம் சார்ந்த கவனங்கள்   இருப்பதில்லை .  மனதின் முன் விழும் சாயைகளை பற்றியே அவரது கவிதைகளில் கவலை மிகுந்திருக்கும் அது காதலியாகவோ, நண்பனாகவோ, எதிரியாகவோ அல்லது வழிப்போக்கனாகவோ இருக்கக்கூடும்.  தன் துயரம் துன்பம் எதையும் கவிதைக்குள் இறக்கிவைக்காத கண்டராதித்தனின் இந்த நோய்பிண்டம்  கவிதை மிக மிக நுட்பமான கவிதை எழுதுபவனின் உளவியல் சிக்கலை பாடு பொருளாக்கி கவிதையாகவும் வடிவமைத்திருக்கிறது அதன்முதல் வரியே இவ்விதம் துவங்குகிறது.

//தானொரு மன நோயாளி என்பதையறிந்த கவிஞன்
அதனை முழுமுற்றாக ஏற்கிறான் ,பெருமிதப்படுகிறான் //

எனத்துவங்கி தீவிரமான மன அவஸ்தைகளை கவிதையாக்கி எழுதி செல்கிறது.
இது போல  நண்பனாகிய எனக்கும் வேத புரீஸ்வரனுக்கும் சமர்ப்பணம் செய்திருக்கும் . திருக்கோலம்  என தலைப்பிட்ட கவிதை பின் சோமன் சாதரணம், மகளின் கண்ணீர் , சஞ்சாரம் சீபத்த ஆகிய கவிதைகளில் கண்டராதித்தனின் சீத மண்டலத்தின் தனித்த அடையாளத்தை அதன் கெட்டித்தன்மையை உணரமுடிந்தது.

மகளின் கண்ணீர் கவிதையில் வழக்கத்துக்கு மாறாக கவிஞர் ஒரு காட்சியை விவரிக்க துவங்குகிறார். தேர்ந்த சினிமா காட்சியைப் போல விரியும் அக்கவிதையில்  இருசக்கர வாகனங்களில் வந்த இருவர் மோதிக்கொண்டதை தொடர்ந்து, அதில் ஒருவரான கவிஞனின் முகத்தில் எதிர்பட்டவன் ஓங்கி குத்து விடுகிறான் , இதனால் முகத்தில் ரத்தம் வழிய கவிஞன் நிற்பதை முன்னாள் அமர்ந்திருக்கும் மூன்றுவயது மகள் பார்க்கிறாள். அவன் எதிர்பார்த்தார் போல அவள் அழவில்லை . மகள் அழாத காரணத்தை யோசித்தப்படியே கவிஞன் செல்ல சட்டென மகளின் பிஞ்சு விரல்கள் அவன் காயத்தை தடவுகின்றன . பின் அவள் கண்ணீர் இதயத்தை நனைக்க,
இறுதியாக  என் தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது இது என முடிக்கிறார்.

இது போன்ற சம்பவ விவரிப்பு கவிதைகள் அல்லது கதை சொல்லும் கவிதைகள் அவரிடம் வேறு எதுவுமே இல்லை. இதை வாசிக்கும் போது ஸ்ரீநேசனின் இன்னொரு கவிதை ஞாபகத்தில் வருகிறது. தலைப்பு தெரியவில்லை . அதன் சாரமான சம்பவம்  இப்படியாக துவங்குகிறது.  ரயில் பெட்டியில் பழம் விற்கும் ஒரு பெண்ணை காவலாளி கண்மூடித்தனமாக தாக்குகிறான் . அந்த காட்சியை நமக்கு விவரித்துசெல்லும் கவிஞன் ஸ்டேஷனில் அதை கண்டு பலரும் வேடிக்கை பார்ப்பதை சொல்லி  எல்லோரும் அந்த பெண்ணுக்காக வருத்தப்பட கவிஞன் மட்டும்  தாய் அடிபடும் இந்த காட்சியை பார்க்க நேரும் அவளது மகனின் நிலைப்பற்றி யோசிப்பார். ஒரு கவிதையாக வாசிப்பவனை உலுக்கிவிடக்கூடிய கவிதை இது  ஒப்பீட்டளவில் இரண்டும் சிறந்த கவிதைகளே.  நேசனின் கவிதையில் ஒரு அதிர்ச்சி இருக்கும் ஆனால் அதைக்கடந்து  கண்டரின் கவிதையின் இறுதி வரியான “ தாளாத குமிழொன்று தளும்பிக்கொண்டே வீடு போகிறது  எனும் வரியில் ஒரு காவியத்தன்மையான உணர்ச்சியை கவிஞரால் நம் மனதில் சித்திரமாக உருவாக்க முடிவது, இக்கவிதையின் சிறப்பு . பிக்‌ஷ்னை  தாண்டி  இந்த வரிக்கவிதையாக  தன்னை   நிறுவிக்கொள்ள  உதவுகிறது.

தொகுப்பின் மற்றுமொரு சிறந்த கவிதை  ஞானப்பூங்கோதைக்கு வயது நாற்பது
இக்கவிதையும்  ஒரு அனுபவ விவரிப்பு கவிதைதானென்றாலும் கவிதையின் அடியோட்டமான  ஒரு புனைவு  இதன் கவித்தன்மையை சாத்தியப்படுத்திவிடுகிறது,
தன்னைப்போல ஒரு பெண்ணை உணர்வது  என்பது ஒரு வித்தியாசமான அனுபவம். எனக்கு தெரிந்து உலக சினிமாக்கள் அல்லது கதைகளில் கூட இடம்பெறாத புதிய கற்பனை .

அதே போல சின்ன சின்ன கவிதைகளும் சட்டென  ஈர்த்து விடுகின்றன

//சமயத்தில் பெரும்
அவமானத்தை
ஏற்பதற்கு
குற்றத்தை நீ செய்திருக்க
வேண்டிய   அவசியமில்லை //

எனும் நான்கு வரி கவிதையில் பெரும் வலியும் வேதனையும் உள்ளடங்கியிருக்கின்றன , என் வாழ்க்கையில் நடைபெற்ற நிகழ்வே அத்ற்கு சாட்சி . ஒரு பெரிய அவமானத்தை குற்றமே செய்யாமல் தலை குனிந்து ஏற்க வேண்டிய சந்தர்ப்பம்  எனக்கு ஒருமுறை உருவானது.

சென்னையில் நான் குடியேறிய ஆரம்ப காலத்தில் என் அறை நண்பனாக தங்கியிருந்தவன் .. நள்ளிரவில் அடுத்த வீட்டின்  காம்பவுண்ட் ஏறி படுக்கை அறையை ஆர்வம் மிகுதியில்  எட்டிப்பார்த்துவிட . அவர்கள் அதை பார்த்தவுடன் ஓடிவந்து அறையில் படுத்துக்கொண்டான் . பின் அவர்கள் கூட்டமாக வந்து கதவைத்தட்ட என்ன விவரம் என தெரியாமல் எழுந்து கதவை திறந்த எனக்கு அடியும் உதையும் கிடைத்தது. பிறகு விவரம் தெரியவந்தபின் என் அறை நண்பனை காட்டிகொடுக்காமல் நானே பழியை ஏற்றுக்கொண்டேன்.

கண்டராதித்தனின் இக்கவிதை சட்டென என் வாழ்வின் பக்கத்தை அறுத்து என் முன் காண்பிப்பதாக இருந்தது.

தொகுப்பில் கவிதையாக சேர்க்க முடியாத அல்லது ,முழுமையாகத  சொத்தை கவிதைகளும் இருக்கின்றன.  குறிப்பாக சங்கரலிங்கனாரின்  லீனியர் குடி
சாவை தள்ளும் சிறுமி போன்றவை  இக்கவிதை தொகுப்பில் தவிர்த்திருக்க வேண்டியவை.

பொதுவாக கண்டராதித்தன் கவிதைகளை வாசிப்பவர்கள் கவிஞர் எந்த காலத்தில் வாழ்கிறார் என்ற  ஐயமேற்படக்கூடும் ..இன்று கவுரவக்கொலைகளும்  நவீன மயமாக்களின் பாதிப்புகளல்லாமாக கழியும்  ஒரு காலத்தில் கண்டராதித்தனை இவை எதுவுமே தாக்கவில்லையா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. 

கண்டரின் கவிதைகளின் உச்சமான கவிதைகளில் சீத மண்டலம் எனக்கு இப்போதும் முதன்மையாக இருக்கிறது.

என்ற போதிலும் தனித்துவம் குறையாத அவனது கவிமொழி இன்னமும் தொடர மேலும் வளர நண்பனாகவும் ஒரு மொழியின் உபாசகனாகவும் அவன்மேல் கொள்ளைபிரியமே

யவனிகா ஸ்ரீராம் , கண்டராதித்தன் , ஸ்ரீநேசன், ஷங்கர்ராம சுப்ரமணியன் ஆகியோரும் இதர தனித்தன்மை மிக்கவர்களாக  இருந்தாலும்  கவிதைக்குள் செயல்படும் நிலப்பரப்பு மற்றும் சொல் முறை மொழி ஆகியவற்றில் தனித்தன்மையை அவர் தக்கவைத்துக்கொள்கிறார்.  2010க்குப் பிறகான கவிஞர்களில் மற்ற மூவருக்கும் வாரிசுளை நம்மால் கணடெடுக்க முடியும்,
ஆனால் கண்டராதித்தனின்  கவிதா செய்முறை என்பது வாரிசுகளை அண்டவிடாமல் தனித்து நிற்கிறது.



தென்கிழக்குச் சீமையிலே': பாரதிராஜா கலையும் வாழ்வும்

 நூல். ஆசிரியர் : அஜயன்பாலா ,   அழகிய படங்களுடன்  கெட்டி அட்டை  ராயல் சைஸ்  பக்கம் 400  விலை  750 ரூ.   நூலைப் பெற தொடர்புக்கு |: 9884060274...