Showing posts with label பொது. Show all posts
Showing posts with label பொது. Show all posts

June 3, 2021

கொரோனாவுக்கு முந்திய கொள்ளை நோய்கள்- அஜயன்பாலா

 




வரலாற்றில் கொள்ளை நோய்களால்  உலகம் பலமுறை பெரும் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறது, குறிப்பாக ப்ளேக் காலரா போன்றவைகள் சீசனுக்கு சீசன் உலகத்தோடு சேத்து செத்து விளையாடும் கோடூர வியாதிகள் .அதிலும் ப்ளேக் பற்றி சொல்லவே வேணாம் . செத்த எலிகள் மூலம் உருவாகும் இந்த கொடூர நோய்  கிமு ஆறாம் நூற்றாண்டில் எகிப்தில் தாக்கத்துவங்கி குறிப்பிட்ட இடைவெளியில் பலமுறை உலகம் முழுக்க பெரும்  தாக்குதலை உண்டாக்கி பல உயிர்களை பலி வாங்கியிருக்கிறது

குறிப்பாக 17 ,18ம் நூற்ராண்டில் இந்த கொள்ளை நோய் உருவாக்கிய அழிவின் பெரும்  பாய்ச்சலுக்கு  பல இலட்சம் மக்கள் ஐரோப்பா முழுக்க பலியாகியிருக்கின்றனர். 19ம் நூற்ராண்டின் துவக்கத்தில்  இந்தியாவிலும் நுழைந்த  பிளேக் குஜாராத்தில் நுழைந்து இமயமலை துவங்கி ராஜஸ்தான் வழியாக வட இந்தியாவில் பல்லாயிரக்கணக்கில் கொன்று வெறித்தனம் காட்டி  . 19ம் நூற்றாண்டின் இறுதியில் மும்பை கல்கத்தா என பரவி அப்படியே சில்க் ரூட் பிடித்து  ஹாங்காங் சீனா தாய்லாந்து என பரவி  பத்து லட்சத்துக்கும் அதிகமான  உயிர்களை பலி வாங்கியிருக்கிறது.

ஆனால் இந்த பிளேக் நோய் வரலாற்றில் பலமுறை உண்டாக்கிய பேரழிவைக் காட்டிலும்  ஒரே வருடத்தில்  பத்துமடங்கு அதிகமாக ஊழிக்கூத்தாடியதுதான் ஸ்பானிஷ் ப்ளூ எனும் கொடிய நோய் .

மற்ற நோய்களுக்காவது நோய் தாக்கி கொஞ்ச நாள்  சிகிச்சைக்கு அவகாசமிருக்கும்  ஆனால் ஸ்பானிஷ் ப்ளூ  தாக்கினால் 24 மணி நேரம் தான்  இம்மிடியட் பாஸ் போர்ட் .

1918ம் ஆண்டு ஸ்பானிஷ் ப்ளூ எனும்  கொடும் கொள்ளை நோய் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்  உண்டாக்கிய பேரழிவு வரலாற்றில் இன்று வரை பெரும்  துயர நிகழ்வாக கருதப்படுகிறது

இதன் மருத்துவ பெயர் 1918 H1N1 . உலகம் முழுக்க கிட்டத்தட்ட ஐந்து கோடி மக்களை ஒரு நோய் பலி வாங்கியிருக்கிறது என்றால் அதுவும் ஆறு மாத கால இடைவெளியில் என்றால் இந்த நோயின் கொடூரத்தையும் ஊழித்தாண்டவத்தையும் நினைத்துப் பாருங்கள்  

இதைவிட வேடிக்கை என்னவென்றால் நோய் உருவாக காரணமான முதலாம் உலகப்போரில் இறந்தவர்களின்  ஒட்டுமொத்த எண்ணிக்கையை விட இந்த நோயால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் . இது ஏதோ உலக்ப்போருக்கும் நோய்க்கும் ஈகோ சண்டை போல இருப்பது துயர வியத்தம்

சரி இந்நோய் எப்படி உருவானது ?

வழக்கமாக ஒவ்வொரு போரின் பிறகும் பெரும் கொள்ளை நோய் ஐரோப்பாவை தாக்குவது வரலாற்று வாடிக்கை . காரணம்  போரில் செத்துப்போகும் காயம்பட்ட உடலை சரியாக  அடக்கம் செய்யாமல் ஆங்காங்கே விழுந்துகிடக்கும் போது அதில் உண்டாகும்  நுண்ணுயிரிகள் காரணமாக பெரும் நோய்த்தொற்று உருவாகும் .

முதலாம் உலகப்போர் முடிந்து ஐரோப்பாவிலிருந்து தாயகம் திரும்பிய அமெரிக்கர்கள் சிலர்   முகாம்களில் மர்மமாக இறந்து கிடந்ததை மருத்துவர்கள் ஆராய்ச்சி செய்தபோது சட்டென கண்டுபிடிக்க முடியவில்லை   துப்பாககி முனையின் சொருகப்பட்ட கத்தியின் வழியாக என்றும்  அல்லது எலியின்  மூலமாக  இந்த நோய் துவங்கியிருக்கும்  எனவும் பிற்பாடு இரு வேறு ஆய்வுகளை நோயின் துவக்கப்புள்ளியாக வெளியிட்டனர்.

1918 மார்ச் மாதம் வெறும் இரண்டு ராணுவ வீரர்களின் இறப்பில் துவங்கி பிற்பாடு கொஞ்சம் கொஞ்சமாக  பரவி அடுத்த மாதம் 46 அடுத்து 1000ம் என அதிகரித்து அக்டோபர் மாதம் மிகப்பெரிய அளவில் பரவி அமெரிக்காவில் மட்டும் ஆறு லட்சம் பேரை மொத்தமாக பலிவாங்கி பிரம்மாண்டமாக உருவெடுத்தது

ஸ்பெயின் பிரான்சு ஜெர்மனி என ஐரோப்பிய நாடுகளுக்கு ராணுவ வீரர்களை ஏற்றிக்கொண்டு நாடு திரும்பிய கப்பலில் யாரோ இரு புண்ணியவான்களுக்கு தொற்றிய இந்த ப்ளூ அனைவருக்கும் பரவி அப்படியே அவர்கள் மூலமாக பரவி ஒவ்வொரு நாட்டுக்கும் அதன் பங்கிறகு  லட்சக்கணக்கில் காவு வாங்கியது வரலாறு   ஒட்டுமொத்தமாக பார்த்தால் அன்றைய உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு இந்நோயால் பாதிக்கப்பட்டனர்.  பாதிக்கப் பட்டவர்களில் மூன்றிலிருந்து ஆறு சதவீத்தினர்  நோய்க்கு பலியாகினர்

     . இச்சமயத்தில் இந்த நோய் பற்றின தகவலை வெளிவிடாமல் அரசாங்கம் அச்சு ஊடகங்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டாலும்  முதல்முறையாக ஸ்பானிஷ் பத்ரிக்கை ஒன்றுதான் இந்நோய் பற்றியும் பேரழிவுகள் பற்றியும் வெளிக்கொணர அதன்  காரணமாக இதற்கு பெயரும் ஸ்பானிஷ் ப்ளூ என்றே சூட்டப்பட்டு வரலாற்ரில் நிலைத்துவிட்டது

இன்று உலகமே அமெரிக்க கலாச்சராம் எனச் சொல்லி வரும் பாப் கலாச்சாராம் தோன்றியதே இந்த ஸ்பானிஷ் ப்ளூ  பேரிழப்புக்குப் பின்தான். . காரணம் இந்த நோய் அமெரிக்காவில் பல குடும்பங்களை அனாதையாக்கியது .இது வயதனாவர்களை விட  35 வயதுமுதல் 45 வயதுக்குட்பட்ட இளைஞர்களாக  வேட்டையாடிக்கொன்றது . பல குடும்பங்களில் வயதானவர்களும் குழ்ந்தைகளும் மட்டூமே எஞ்சினர் ..அமெரிக்காவில் மட்டும் கிட்டத்தட்ட ஒருலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் ஒரே மாதத்தில் அனாதைகளாயினர் .  ஒரு குடும்பத்தில் குறைந்தது மூன்று பேர் கண்முன் அடுத்தடுத்து பிணமாகிக்கொண்டிருந்தனர்..மொத்தமாக ஆறு மாதங்களில் 6 லட்சத்து 75ஆயிரம் பேர் அமெரிக்காவில் மட்டும் இந்த கொள்ளை நோய்க்கு பலியாகியிருக்கின்றனர்

இதுதான் அம்மக்களிடையே  வாழ்க்கையின் மீது தீராத கசப்பை  உருவாக்கியது .அன்பு பாசம் நீதி நியாயம் எல்லாவற்றையும் வெறுக்க வைத்தது.  இந்த நோயின் விளைவால் உண்டான மனச்சிதைவுதான்  அடுத்த  தலைமுறையை அர்த்தமற்று  கூச்சலிடும் ராக் இசை  நோக்கி ஐம்பதுகளில் உந்தித்தள்ளியது . பணத்தை சேர்த்துவைப்பது அர்த்தமில்லை  வாழும் வரை வாழ்க்கை எனும் புதிய வாழ்க்கையை புது கலாச்சாரத்தை நோக்கி இழுத்துச்சென்றது . புதுப் புது மாஃபியாக்கள் உருவாகினர் .1000ம் துப்பககி ஏந்திய குண்டர்களுடன் அமெரிக்காவையே கண்ணில் விரல் விட்டு ஆட்டிய அல்கொப்போன் எனும் பெரும் மாபியா இக்காலத்தில்தான் உருவானான்.

இப்படிப்பட்ட கொடூர ஸ்பானிஷ் ப்ளூ காலத்தில் இல்லாமல் நாம் சாதாரண கொரானா காலத்தில் வாழ்வதை எண்ணி கொஞ்சம்  ரிலாக்சாக  இருக்கலாமே பிரண்ட்ஸ்  

 

 

March 5, 2017

அரசியல் மேடையாகிப்போன 89வது ஆஸ்கார் விருது விழா


இது தமிழ் படங்களில் வழக்கமாக நடக்கும் விஷயம்.. அதுவரை வில்லனுக்கு அடியாளாக சேவகம் செய்தவன் இறுதிக்காட்சியில்   திடீரென நாயகன் பக்கம் சேர்ந்து பார்வையாளர்களுக்கு சர்ப்ரைஸ் ஷாக்  கொடுப்பான்.. கெட்டவன் நல்லவனாக மாறி  அதுவரை வில்லன் செய்த அட்டூழியங்களை பட்டியலிட்டு மனசாட்சியை திறந்து நாயகன் பக்கம்  அவன் பேசும்போது அரங்கில் கைதட்டல் உணர்ச்சிப் பெருக்கில் அதிரும்
இம்முறை லாஸ்ஏஞ்சல்ஸ் டால்பி அரங்கில்  89 வது ஆஸ்கார் விருது நிகழ்வை நேரடியாகவும் நேரலையாகவும் பார்த்த பலகோடி இதயங்களும் அத்தகைய உணர்வு நெகிழ்ச்சியில் தான் கைதட்டினர்
ஆஸ்கார் என்றாலே அது அமெரிக்க அரசின் கலாச்சரா ஊதுகுழல் எனுமளவிற்கு கடந்த காலத்தில் தன் எஜமான விசுவாசத்தை வருடா வருடம் காட்டி வந்துள்ளது.அமெரிக்க ராணுவத்தை துதிபாடி எடுத்தாலே அந்த வருடம் ஆஸ்கார் நிச்சயம் என்பது எழுதப் படாத விதி.  அமெரிக்கன் ஸ்னைப்பர் (American snipper)ஆர்கோ(Argo) ஜீரோ டார்க் தெர்டி (zero dark thirty) என இப்படி வரிசையாக அடுக்கிக்கொண்டே போகலாம் .

அது போல விருது நிகழ்ச்சியில் அத்தி பூத்தார் போல  யாராவது அமெரிக்க ஜனாதிபதியை விமர்சித்தால் போதும் அடுத்த நொடியே  மைக்கில் ஆஜராகி அது அவர்களின் தனிப்பட்ட சொந்த கருத்து அதற்கும் ஆஸ்கார் கமிட்டிக்கும் சம்பந்தமே இல்லை என பதட்டத்துடன் அறிவித்துவிடுவார்கள்.  1975ல் சிறந்த ஆவணப்படத்துக்கான விருதைப் பெற்ற பெர்ட் ஷிண்டர் வியட்நாமுக்கு எதிரான அமெரிக்காவின் வல்லாதிக்க போருக்கு கண்டனம் செய்து அரங்கை விட்டு வெளியேறியவுடன் அறிவிப்பாளராக இருந்த ப்ராங்க் சினட்ரா மைக் முன் பதறியடித்து ஓடிவந்து ஆஸ்கார் விருது கமிட்டிக்கும் இதற்கும் துளியும்  தொடர்பில்லை என  துண்டறிக்கை வாசித்தார்.

இப்படி காலம் காலமாக அமெரிக்காவின் கைப்பாவையாக செயல்பட்டு வந்த ஆஸ்கார் கமிட்டி இந்த வருட விழாவில் அமெரிக்க  அரசாங்கத்திற்கு எதிராக ஜல்லிக்கட்டாக துள்ளித் திமிறி அனைவரையும் ஆச்சரயப்படுத்தியது. விருது வாங்குபவர்கள் பலரும்  தங்களது உரையில் ட்ரம்புக்கு எதிராக  தங்கள் கருத்துரிமையை அரங்கில் நிலைநாட்ட  அதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அரங்கில் பலத்த கரவொலி.

பதவியேற்ற எட்டாம் நாளிலேயே ட்ரம்ப் குறிப்பிட்ட ஏழு வளைகுடா  நாடுகளுக்கு குடியெற்ற தடைச்சட்டம் விதித்தையொட்டி  அமெரிக்கா முழுக்க  எழுந்து வரும் எதிர்ப்பலையின்  எதிரொலிதான் அந்த கரவொலி என்பது உலகமே அறிந்த ஒன்று.

அவர் இந்த தடையை அறிவிப்பதற்கு முன்பே ஆஸ்கார் அறிவித்த இந்த வருடத்திற்கான  விருதுத் தேர்வு பட்டியலில் சிறந்த வெளிநாட்டு பட பிரிவில்    ஈரானின் சேல்ஸ் மேன் படமும் அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால்   ட்ரம்பின் இந்த வளைகுடா நாடுகளுக்கான தடைச்சட்ட அறிவிப்பு வெளியான உடன் தனது நாட்டை அவமதிக்கும் அமரிக்காவின் இந்த அங்கீகாரம்  தனக்கு தேவையில்லை  விழாவை  நிராகரிக்கிறேன் என உடனடியாக படத்தின் இயக்குனர் அஸ்கார் பர்காடி அறிவித்தார்.  இதனால் விழாவில் சிறந்த வெளிநாட்டுப் படமாக சேல்ஸ் மேன் தேர்வு செய்யப்பட மாட்டாது என அனைவரும் எதிர்பார்த்து கிடந்த நிலையில்   சேல்ஸ் மேன் சிறந்த படமாக அறிவிக்கப் பட்டது அனைவரையுமே ஆச்ச்ரயப்படுத்தியது.

அது போல விழாவில் அறிவிக்கப்பட்ட  சிறந்த துணைநடிகருக்கான முதல் விருதே மூன் லைட்  படத்தில் நடித்த  மகேர்ஷலா  அலி ஒரு இஸ்லாமியருக்கு என்பதும் இதில் கவனிக்கதக்கது.

இந்த  எதிர்ப்பு அலையின் மூலவித்து இதற்கு முன் நிகழ்ந்த பாப்டா விருது விழாவிலேயே  துவங்கிவிட்டிருந்தது.  அவ்விழாவில் விருது பெற மேடையேறிய  புகழ்பெற்ற நடிகை மெரீல்ஸ்ட்ரீப்  ட்ரம்ப்பின் மீதும் அவரது  குடியேற்ற தடை ச்சட்டத்தின் மீதும்  நேரடியாக  தாக்கி பேசி கலைஞர்களின் கருத்துரிமையை நிலைநாட்டினார்.  அவர் பேசியைதையொட்டி ட்ரம்பும் பதிலுக்கு  மெரீல் ஸ்ட்ரீப் தகுதிக்கு மீறி புகழ்பெற்றுவிட்ட நடிகை அதனால்  அவர் பேசியதை நான்  பொருட்படுத்தவில்லை என  ட்விட்
செய்ய ஒட்டுமொத்த ஹாலிவுட்டும் ட்ரம்பின்  இந்த ட்விட்டை  எதிர்க்க துவங்கியது.

காரணம் மெரில் ச்ரீப்பின் தகுதி அப்படி. க்ராம்ர் வெர்சஸ் க்ராமர் படத்தில் அவர் நடிப்பை கண்டு வியாக்காதவன் சினிமா ரசிகனாகவே  இருக்க முடியாது .சிறந்த நடிகைக்காக   மூன்று முறை ஆஸ்கார் விருதை பெற்ற மெரீல்ஸ்ட்ரீப்  இதுவரை அதிக முறை  ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கபட்டவர்கள் பட்டியலில் முதலாவதாக இடம்பெற்றுவருகிறார் என்பதுதான்  ஹைலைட். மொத்தம் 19 முறை . உலகின் எந்த நடிகருக்கும் நடிகைக்கும் இல்லாத இந்த சிறப்புமிக்க நடிகையை பார்த்து ட்ரம்ப் அவர் தகுதிக்கு மீறி புகழப்பட்ட்டவர்  என பழித்துக்கூறியதுதான்  பலரையும் உசுப்பிவிட்டது.

விருதுகமிட்டி இதற்காகவே மெரீல் ஸ்ட்ரீப்பை அழைத்து இந்த வருட விழாவில் முதல் வரிசையில் அமரவைத்து கவுரப்படுத்தியதோடு மட்டுமல்லாமல்  அவருக்கு சிறப்பு செய்யும் வகையில் அரங்கத்தையே எழுந்து நின்று ஒரு நிமிடம் கைதட்ட வைத்து கவுரப்படுத்தியது .
 விழாவின் ஹைலைட்டே நிகழ்ச்சி தொகுப்பாளரான ஜிம்மி கிம்மல் தான் அமெரிக்காவின் புகழ்பெற்ற முன்னாள் ரேடியோ ஜாக்கியும் நகைச்சுவை நடிகருமான ஜிம்மி  அசராமல் நாசூக்காக சந்தர்பம் கிடைத்த போதெல்லாம் ட்ரம்பை நாகரீகமாக போட்டுததள்ளினார்.

தன்னை பற்றிய விமர்சனங்களுக்கு உடனடியாக ரிட்விட் கொடுக்கும் ட்ரம்ப் நிகழ்ச்சி துவங்கி இவ்வளவு நேரமாகியும் இதுவரை ஒரு ட்வீட்டும் போடவில்லையே அவர் இப்ப என்ன செய்கிறார். நிகழ்ச்சியை பார்க்கிறாரா இல்லையா என மேடையிலே கலாய்த்த  ஜிம்மி கிம்மல்  அங்கேயே செல்போனில் ட்ரம்புக்கு என்ன செய்யறீங்க ட்ரம்ப் என ட்வீட்செய்து அதை ஸ்க்ரீனில் அனைவருக்கும் லைவ்வாக காண்பித்தது ஹைலைட்.. ஒருவகையில் கிம்மல் செய்தது கொஞ்சம் கூடுதலாக தெரிந்தாலும் இதுதான் இன்றைய இணைய உலகம் தனி மனிதனுக்கு வழங்கியிருக்கும் உச்சபட்ச சுதந்திரம் என்பதையும் மறுப்பதற்கில்லை. விழாவில் ரெட் கார்பட்டிலேயே  அனைவரையும் அசத்தியவர் நம்மூர் ப்ரியங்கா சோப்ரா தான். வெள்ளியாக ஜிலுஜிலுத்த அவரது வித்தியாசமான கவுன் அனைவரையும் எட்டி பார்க்கும்படி ஈர்த்தது.

சிறந்த நாயகனுக்கான விருதை மான்செஸ்டர்  பை தி சீ படத்தில்  நடித்தமைக்காக பெற்ற   கேசீ அப்ளக்  கின் குட்டி குடுமி விழாவில் அனைவரையும் கவர்ந்தது. நிகழ்ச்சி அறிவிப்பாளர் ஜிம்மி கிம்மல் அந்த கவர்ச்சியான குடுமி பற்றி மெடையில் விவரிக்க பின்னால் அமர்ந்திருந்த மேட் டாமன் அதை கையால் அசைத்து காண்பித்தது கூடுதல் அழகு.
சிறந்த படத்தை வென்ற மூன்லைட் கறுப்பின மக்களின் வாழ்க்கையின் அவலத்தை சொல்லும் படம் சிறுவன்,

மாணவன், இளைஞன் என  அன்புக்காக ஏங்கும் நாயகனது மூன்று பருவ வாழ்க்கையை சித்தரிக்கிறது.  சிறந்த படத்தோடு சிறந்த  திரைக்கதை, சிறந்த துணை நடிகர் ( மகேஷாலா அலி) என மேலும் இரண்டு விருதுகளை க்குவித்த இப்படம்   ஒரு பாலுறவை மையமாக கொண்டு  எழுதப்பட்டிருப்பதும் அரசியல் ரீதியாக கவனிக்கப்படவேண்டியது.
இதே  போல கறுப்பின மக்களின் வாழ்வை சொன்ன பென்சஸ்  படத்தில் நடித்தமைக்காக  சிறந்த துணை நடிகைக்கான விருதை வயோலா டேவிஸ் பெற்றார்.

ஒரே சமயத்தில் சிறந்த துணை  நடிகர் நடிகை இரண்டு விருதுகளும் கறுப்பின கலைஞர்கள் பெறுவதும் இதுவே முதல் முறை .
இந்த வருட விழாவின் சூப்பர் படம்  லா லேண்ட்  . சிறந்த இயக்கம் சிறந்த நடிகை, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை ,சிறந்த பாடல் மற்றும் சிறந்த தயாரிப்பு வடிவமைப்பு  என மொத்தம்  ஆறு விருதுகளை பெற்று  அசத்தியது.

லா லாலேண்டின் கதையில் அப்படி ஒன்றும் விசேஷம் எதுவும் இல்லை  இயக்குனர் விக்ரமனின்   பூவே உனக்காக,  உன்னிடத்தில் என்னைகொடுத்தேன் கதைகளின் உல்டாதான் .டத்தின் டைட்டிலும் இயக்குனர் விக்ரமன் பிராண்ட்  பின்னணி  இசையான லா லாலா வே வைத்திருப்பது  ஒரு ஆச்சர்யமான  ஒற்றுமை .

தன் திறமையை மறைத்து நாயகன்  தன் காதலியின் திறமையை வெளிகொணர்ந்து அவளை சினிமாநட்சத்திரமாக்குகிறான் .சில வருடங்களுக்குபின்   அவள்  இன்னொரு கோடீஸ்வர காதல் கணவனோடு கைகோர்த்தபடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில்  இவன் கூலிக்கு இசையமைக்கும்போது அவளை பார்க்கிறான் . அவள் கண்டுகொள்லாமல்  கடக்கிறாள் . இதுதான் கதை . நாயகி ரியான் கோஸ்டல்கிங்கின்  போதையூட்டும் கண்கள் ஆஸ்காருக்கும் மேல்.சிறந்த நடிகைக்காக இன்னொரு ஆஸ்காரும் தந்திருக்கலாம்

ம்யூசிக்கல் பட பாணியில் பாடல்களுடன்  முதல் பாதியும் இரண்டாம் பாதியில் அழுத்தமான காட்சிகளுமாக நகரும்  படத்தின்  திரைக்கதை  அப்படி ஒன்றும் பெரிய விசேஷம் இல்லை . இதற்கு முன் 14 நாமினேஷன் பெற்ற டைட்டானிக்   படத்தோடு ஒப்பிட்டு பார்த்தால் லா லா  வெறும் லோ லோ தான் .

 இப்படியிருக்க சிறந்த படத்துக்கும் லா லா லேண்டே தேர்வு செய்யப்பட்டுள்ளதாக  அதனை அறிவிக்க வந்த நடிகரும் இயக்குனருமான  வாரன்பெட்டி கூற  அரங்கமே ஆச்சர்யப்பட்டது . லால லாலேண்ட் குழுவினரும் தங்கள் மேல் கொட்டும் இந்த திடீர் அதிர்ஷ்ட மழையை நம்ப முடியாமல் வியப்புடன் மேடைக்கு வந்துவிட  சினிமாக்ளைமாக்ஸ் போல இல்லை இல்லை தவறாக வாசித்துவிட்டேன் சிறந்த படம் மூன்லைட் தான் என வயதான வார்ன்பெட்டி திருத்திகூற லா லா லேண்ட் குழுவினர் அதிர்ச்சியில் உறைந்து நிற்க திடீர் மகிழ்ச்சியால் திக்குமுக்காடிபோய் மூன்லைட் குழுவினர் மெடையேறி சிறந்த படத்துக்கான பரிசை பெற்றனர்.
இவ்வளவுபெரிய நிகழ்ச்சியில் இப்படியான தவறுகள் குழப்பங்கள் நடக்க  வாய்ப்பே இல்லை .

 நம்மூர் தொலைகாட்சி நிகழ்ச்சிகல் டி ஆர்பிக்காக நடத்தும்  திட்டமிட்ட திரைக்கதைகள் ஆஸ்கார் விழாவிலும் நடக்கும் . இவை நிகழ்ச்சியின் சுவார்சியத்துக்காக  திட்டமிட்டு நடத்தப்படும் குழ்ப்பங்கள் என பலரும் கூறுகின்றனர்.  இதையே  இந்திய இயக்குனரும் முன்னாள் ஆச்கார் விருதாளாருமான  இயக்குனர் மனோஜ் நைட் ஷியாமலன் போன்றவர்கள் டிவிட்டரில் பதிவு செய்திருக்கின்ற்னர்.
அஜயன் பாலா



October 21, 2016

விகடனும் நானும்

விகடன் 90. நானும் விகடனும்



விகடன் பொன்விழா ஆண்டையொட்டி சிறுகதைபோட்டியை பிரம்மாண்டமாக அறிவித்தார்கள். அப்போது செங்கல்பட்டில் முருகேசன் என்ற நண்பர் வாசகர்வட்ட கதைகளில் மாலன் பாலகுமாரன் சுப்ரமண்யராஜூ ஆகியோரோடு அவரது கதையும் வந்திருக்கிறது. அவரதான் அப்போதைக்கு காட்பாதர் அதைப்படி இதைப்படி என எடுத்துக்கொடுப்பார்..அவர் தான் பதட்டத்தோடு விகடன் போட்டி அறிவிப்பை காண்பித்து இதில கலந்துகொள் முதல் பரிசு கிடைத்தால் ஏஸ் சர்வீசில் பாப்புலர் ஆகலாம் என பிர்கா போட்டார். கூடவே உன் டைப் சீரிஸ் இலக்கியம் செட் ஆகாது கொஞ்சம் மூற்போக்காக முடிக்கவேண்டும் என அறிவுறுத்த அப்போதே இது நமக்கு வராது சார் என மறுத்துவிட்டேன். ஆனாலும் கிராத்து சிறுவன் நோய்வாய்பட்ட அம்மா மதிய உணவை வாங்கிவரும்போது பைத்தியம் தட்டிவிட்டது ரேஞ்சுக்கு ஓரு கதை எழுதி வைத்துக்கொண்டேன் அனுப்பவில்லை. ஆனாலும் அன்று துவங்கி விகடன் படிக்க ஆரம்பித்தேன். விகடனை விட குமுதம் அப்போது அறிவுபூர்வமான துணுக்குகள் அரசு கேள்வி பதில்கள் என அசத்தும். பிற்பாடு சென்னையில் வந்து போலீஸ் செய்தி போன்ற பல்ப் பத்திரிக்கைகளில் கற்பழிப்பு கொலை கட்டுரை வர்ணித்து எழுதும் போது கூட விகடனில் என் நடையை படித்துவிட்டு வேலைக்கு கூப்பிடுவார்கள் போய் விடக்கூடாது என நினைத்திருந்தேன். 
90
களின் இறுதி பகுதியில் ஆசிரியகுழுவில் உண்டான சில அதிரடி மாற்றங்கள் காரணமாக விகடன் ஈர்க்க துவங்கியது. எளிமையான மளிதர்களின் வாழ்க்கை சித்திரங்கள்.. வசீகரமான எழுத்துநடை வித்யாசமான பேட்டிகள் புதுமையான புகைப்படங்கள் என கலந்து கட்டியது..ரமேஷ் வைத்யா, சி.முருகேஷ்பாபு பாஸ்கர் சக்தி. க சீ சிவக்குமார் பிற்பாடு அருள் எழிலன் என பலரும் விகடனை வசீகரிக்க வைத்தனர். இவர்களில் அருள் எழிலன் செய்திகள் எளிய மனிதர்களை பறறிய வாழ்க்கை சித்திரங்கள் விகடனை மரியாதையுடன் கவனிக்க வைத்தன. இவர்களுக்கெல்லாம் முலவராக இருந்து விகடனின் தோற்றத்தை தலைகீழாக மாற்றியபெருமை அதன் அப்போதைய ஆசிரியர்களான ரா கண்ணன் மற்றும் அசோகன் ஆகியோரையே சாரும். 
குறிப்பாக ரா கண்ணன் முழு பொறுப்புக்கு வந்தபின் பல புதுமையான விகடன் வழக்கில் இல்லாத விஷயங்கள் இடம் பெற்றன
நவீன இலக்கியம் உலக சினிமா என அதன் எல்லைகள் விரிந்தன. தமிழ் மொழி சார்ந்த அடையாளங்களுக்கு முக்கியத்துவம் கிடைத்தது.
என் முதல் புத்தகம் பை சைக்கிள் தீவ்ஸ் வந்தபோது அந்நிகழ்ச்சிக்கு வந்த அப்போதைய விகடன் ஊழியர் பாஸ்கர் சக்தி புத்தகம் கொடுங்கள் விகடனில் செய்திவரவைக்கிறேன் என்றார் ஆனால் எனக்கோ நம்பிக்கை இல்லை. விகடனில் இப்போது கண்ணன் என்பவர் எடிட்டோரியலில் இருக்கிறார் அவர் இதுபோன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் எனக்கூறினார் அது போலவே அடுத்த இதழிலேயே புத்தகம் பற்றி செய்தியும் வந்தது. அது நிமித்தம் நேராக அலுவலகம் சென்று கண்ணனை சந்தித்து நன்றியும் சொன்னேன். ஓரு பத்ரிக்கையாளர் என்பதை தாண்டிய ஓரு ரசிகனாக துடிப்புடன் புத்தகம் குறித்து பாராட்டினார் நான் நன்றி சொன்னபோது இப்படி ஓரு புத்தகம் எழுதியதற்கு நாங்கள்தான் நன்றிசொல்லவேண்டும் என்றார். பின் விகடன் பற்றியும் சணீப மாற்றங்கள் பற்றியும் தெரிவித்தேன் தொடர்ந்து விகடன் தரம் பற்றி சந்திக்கும் போது எடுத்து சொல்வேன். ஆனாலும் அந்த விகடனிலேயே நான் ஓரு தொடர் எழுதுவேன் என கனவிலும் நினைத்து பார்க்கலில்லை.. என் வாழ்க்கையை முழுமையாக புரட்டி போட்ட அந்த தொடர் நான் எழுத நேர்ந்ததற்குபின் மிகப்பெரிய மன போராட்டம்.
அப்போது பள்ளிக்கூடம் படத்தில் இணை இயக்குனராக பணி செய்து படம் ஓரளவுக்கு வெற்றியும் எனக்கு ஓரு நல்ல அடையாளமும் உருவாகியிருந்த காலம்.
இதைவிட்டால் படம் இயக்க வேறு அருமையான சூழல் அமையாது.. அதற்காக முதல் படத்துக்கான கதை எழுதி அதற்கான திரைக்கதை பணிக்காக கொடைக்கனலில் நண்பரது ரிஸார்டிற்கு உதவியாளர்களுடன் சென்றேன் அந்த ரிஸாட்டின் உரிமையாளர் வேறு யாருமல்ல தேசியவிருதுபெற்ற நடிகர் பாபி சிம்ஹா தான். நண்பர் மீரா கதிரவன் மூலம் அறிமுகம். நான் கொடைக்கானல் போகிறேன் என தெரிந்தவுடன் நட்புகரம் நீட்டியவர் 
அவருடைய ரிஸார்டில்5நாள் தங்கி ஓரளவு கையிருபபு கரைந்ததும் நண்பர் ஓருவர் அழைப்பின் பேரில் உடுமலை பேட்டை அமராவதி டேம் அருகிலிருந்த அவர் வீட்டில் அமர்ந்து திரைக்கதைக்கு க்ளைமாக்ஸ் யோசித்துக்கொண்டிருந்தபோது. .அந்த அழைப்பு.. விகடன் அலுவலகத்திலிருந்து..
நண்பர் அருள் எழிலன் பேசினார்
நண்பா விகடனில் புகழ் பெற்ற தலைவர்கள் பற்றி ஓரு தொடர் சேகுவேரா விலிருந்து துவக்கறோம் டைட்டில் நாயகன் கண்ணன் சார் நீங்க எழுதினா நல்லாஇருக்கும்னு பிரியப்படுறார்
இது அரசியல் தொடர்.. நான் எப்படி.?
உங்க மார்லன் பிராண்டோ படிச்சிருக்கார் நீங்க எழுதினா நல்லா வரும்னு பிரியப்பட்றார்
அது ஓரு புக்லருந்து எழுதினது சொந்த சரக்கு எதுவுமில்ல .. வேற நம்க்கு உலக சினிமா அது இதுன்னா ஓகே அரசியல் எழுதி அனுபவம் இல்ல பாஸ். சட்டென லைனில கண்ணனே வந்தார் பாஸ் உக்களால முடியும் நீங்கதான் எழுதறீங்க.. பிராண்டோ படிச்சேன் அதுக்கப்புறம்தான் முடிவு செஞ்சேன் உஙகளால இந்த தொடரை எழுதமுடியும் டைமில்ல ஆகஸ்ட் 15 துவக்கறோம் இப்பமுடிவு செஞ்சாதான் எல்லாம் நடக்கும் . திங்க கிழமை பர்ஸ்ட் சேப்டர் தரணும்
அவர் ஓரு பக்கம் மள மளவென பேச நானோ குழப்பத்தில் பாஸ் கொஞ்சம் பத்து நிமிஷம் டைம் கொடுங்க சொல்றேன் என பர்மிஷன் வாங்கிக்கொண்டு அமராவதி கரையில் அமர்ந்நேன்..
எதிரே அமராவதி.. அணையிலிரருந்து பெருகிசுழித்து ஓடும் வெள்ளம்
இந்த திரைக்கதை நிச்சயம். ஜெயிக்கும் அதற்கு டைவர்ஷன் இருக்ககூடாது.. குறைந்தது 6 மாசமாவது ஏறி இறங்கனும். தனுஷ்க்கு செட் ஆகும்.. 

(
நேற்றைய பதிவின் தொடர்ச்சி..)
ரா. கண்ணன் அழைப்பை தட்டமுடியவில்லை. அதே சமயம் இது என் வாழ்க்கையின் முக்கியமான கட்டம் இதற்கு முன் லவ்டுடேயில் பணிபுரிந்தபின் இரண்டுவருட தீவிரமுயற்சியில் விக்ரம் சூர்யா இளையராஜா என பலரிடமும் கதை சொல்லி ஓகே வாகி அடுத்தகட்ட நகர்வில் உண்டான சிக்கலால் தள்ளிப்போய் வெறுத்துபோனபின்தான் பைசைக்கிள் தீவ்ஸ் எழுதி எழுத்தாளனாகி திவிர இலக்கியவாதியாக மாறி மன அரிப்பை தீர்த்துக்கொண்டோம் ..இது இரண்டாம் முறை மீண்டும் எழுத்தின்பக்கம் போனால் இயக்கம் தள்ளிபோகும்.. அதே சமயம் விகடன் போன்ற வாய்ப்பையும் தள்ளிவிட விருப்பமில்லை.
என்னை நம்பி உதவி இயக்குனராகும் கனவுடன் அப்போது என்னுடன் வந்த சில உதவியாளரடம் இப்படி ஓரு வாய்ப்பு வந்திருக்கிறது என குழப்பத்துடன் சொல்ல நான் எதிர்பார்க்காத விதமாக அவர்கள் உற்சாகடடுத்தினர். செல்வம் அமுத சுரபி இருவரும் சார் சினிமாவை விட விகடன் வாய்ப்பு பெரிய விஷயம் சார் எத்தனையோ பேர் ஏங்கிக்கிட்ருக்காங்க உங்களுக்கு வாய்ப்பு தானாவருது விட்றாதீங்க எனக்கூற தங்களைப்பற்றி கவலைப்படாமல் என்னைப்பற்றிய அக்கறையுடனான அவர்கள் வார்த்தைதான் என் மனதை மாற்றியது.
வாரம் ஓரு தலைவர் 13 வாரம் தான சார் சட்டுனு போயிடும். அதைவச்சே நீங்க ப்ரொட்யுசர ஈசியா மீட் பண்ணலாம் கெத்தா இருக்கும் என உற்சாகபடுத்த நானும் குழப்பம் விலகி முடிவுக்கு வந்தேன் எழிலனுக்கு போன் செய்து கண்ணனிடம் சொல்லசொல்லி சொன்னது போல திங்களன்று கட்டுரையுடன் வருவதாக உறுதியுடன் கூறினேன்.
இந்த முடிவை நான் எடுப்பதற்கு பின்னிருந்தள்ளிய இன்னோரு விஷயம் இந்த சமுகத்தின் மீது எனக்கிருந்த அளவற்ற காதல். கடுகளவேனும் என் கை நீரை சமுகத்தின் இதயத்துக்குள் இடம்மாற்றகிடைத்த ஓரு அரிய சந்தர்ப்பம்.
எனக்குள் விரிந்துகிடந்த மானுடம் அளப்பரிய வானத்திலிருந்து சிற்றளவு இன்னொருவருக்கு விண்டுகொடுக்க ஓரு வாய்ப்பு.உற்சாகம் பற்றிக்கொள்ள கையாடு அப்போதே புறப்பட்டு சென்னைக்கு மறு நாள் வந்து சேர்ந்தோம் .
வெறும் 13 வாரம் என துவங்கிய அத்தொடர் பிற்பாடு இரண்டுவருடங்கள் என் வாழ்க்கையை முழுவதுமாக எடுத்துக்கொள்ளும் என நான் எதிர்பார்க்கவகல்ஸை.
அருள் எழிலன் சில நூல்களை பரிந்துரைத்தது போக சில ஆங்கிலநூல்களலயும் வாங்கி அசுரவேகத்தில் படித்து எழுத துவங்கினேன். மணிக்கு 100 பக்கம் என்பது எனது ஆவரேஜ் வேகம் 150ஆக மாறியது.
சேகுவேரா இறுதிகாட்சி எழுதிக்கொண்டிருந்தபோது கண்ணீர்பொலபொலவெனகொட்டி பேப்பரைநனைத்து விட்டது..
நான் அழுவதை பார்த்து என் தாயாருக்கு அதிர்ச்சி கண்ணை துடைத்துக்கொண்டு வெளிபே வந்தேன் மாடியில் நீல வானம் .. வாழ்க்கையின் சிறந்த தருணமாக உணர்ந்தேன்.. சினிமாவைகாட்டிலும் எழுத்தும் சமூகமூம் உயர்ந்தது
நாம் செய்வது உன்னத பணி என்பதை முழுமையாக உணர்ந்தேன்.
ஓரு வாரத்திற்காக எழுதிய சேகுவேரா பக்க மிகுதியால் இரண்டு வாரமாக பிரிக்கப்பட்டது.. கண்ணன் எளிமையாக எழுத உதவிசெம்தார்..
முதல்வாரத்திற்கு கிடைத்தவரவேற்பு நான்கு வாரமாக மாறி அடுத்ததாக சார்லி சாப்ளின்எட்டாக மாறி பெரியார் அமபேத்கார் 13 வ்ரங்களாக விரியத்துவங்கியது.
நாயகன் தொடரின் முழுமையான வெற்றி பெரியாரும் அம்பேத்காரும்தான்.
பல பிராமணகுடும்பங்களின் உயர் சாதி வீடுகளுக்குள் அவர்களை நுழையவைத்ததும்அவர்களை வாசிக்கவைத்ததும் அத்தொடரின் மகத்தான சாதனை. சமுக மாற்றத்தில் அத்தொடருக்கும் சிறுபங்கிருப்பதை
இந்த சாதனையில் நான் ஓரு கருவியே..நான் அத்தொடரை எழுத காரணமாக இருந்த பதிப்பாளர் சீனிவாசன் ஆசிரியர். ரா .கண்ணன் மற்றும் நிருபர் அருள் எழிலன் மற்றும் பிழைதிருத்துவோர் வடிலமைப்பாளர்கள் விகடனின் ஒவ்வொரு ஊழியருக்கும் பங்கிருக்கிறது.. அனைவருக்கும் என் நன்றி.
ஓருவேளை இத்தொடரை எழுத மறுத்து அடுத்த சில மாதங்களில் இயக்குனராகி படமும் வெற்றி பெற்று நான் ஓரு நட்சத்திர இயக்குனராகவும் ஆகியிருக்கலாம்.
ஆனால இந்த மன நிறைவான வாழ்க்கை வாய்த்திருக்குமா என்பது சந்தேகமே..
ஓரு மனிதனின் வாழ்க்கையை அவன் மட்டுமே தீர்மானிக்க முடிந்தால் அது உண்மையில் போலியான உணர்ச்சிகளை கொண்டதாக இருக்கும் . அதே வாம்க்கை சமூகத்தால் தீர்மானிக்க படும் போது அது கொடுந்தணலில் வெந்துருகுவதானதாக இருந்தாலும் தேனாய் தித்திக்கும்..
அந்த இன்பம் எல்லையற்ற மனித நேயத்தால் மட்டுமே சாத்தியமாகும்

என்னை போல பலருக்கும் அந்த வாழ்க்கையை பரிசளித்து வரும் தமிழகத்தின் மனசாட்சியான விகடனுக்கு 100ம் ஆண்டு வாழ்த்துக்கள்

March 6, 2016

உலக திரையிசை பிதாமகன் எனியோ மரிக்கோன்

   
                     



உலகம் முழுக்க ரசிகர்களை கொண்ட திரைப்பட நடிகர்கள்,  ஆர்னால்ட், சில்வர்ஸ்டர் ஸ்டோலன், போல இயக்குனர்களில் ஹிட்ச்காக் ஸ்பீல்பெர்க் போல  திரைப்பட இசையமைப் பாளர்களில்  ஒருவர் இருக்கிறாரா எனக்கேட்டால் உண்டு . அவர் பெயர் எனியோ மரிக்கோன் .
அது கலிபோர்னியவாக இருந்தாலும்  கல்லுபட்டியாக இருந்தாலும் கௌபாய் படங்கள் என்றாலே தியேட்டர்களில் கூட்டம் அலைமோதும். வெஸ்டர்ன்  என்று  அழைக்கப்படும் இவ்வகைப் படங்கள் எடுத்து  தனக்கென தனி முத்திரை பதித்தவர்  இத்தாலிய  இயக்குனர்  சர்ஜியோ லியோன்.

                                                         
பொதுவாக வெஸ்டர்ன் படங்கள் என்றாலே அமெரிக்க நிலப்பரப்பில் மட்டுமே சாத்தியம் என்றிருந்த வரலாற்றை  இத்தாலிய நிலப்பரப்பில்  மாற்றி ஞஅமெரிக்க  நடிகரான் CLINT EAST WOOD ஐ நாயகனாக போட்டு இவர் இயக்கிய படங்கள் ஹாலிவுட்டையே அதிரவைத்தன. பிற்பாடு உலகம் முழுக்கவும்  கொண்டாடப்பட்டன. டாலர் சீரிஸ் எனப்படும் For a few dollors more, Good bad ugly, Fist full of dollors  என இப்போதும் இவர் படங்கள் டோரண்டில் ஹிட் சீரிஸ் . இந்த படங்களின் வெற்றிக்கு மூலகாராணமாக இருந்தது எனியொ மரிக்கோனின் மயக்கும் இசை. இப்போதும் எந்த மொழி படமானாலும் அதில் தொப்பி துப்பாக்கி சகிதம் நாயகன் குதிரையில் பாய்ந்து வந்தால் பின்னணியில் இசைக்கப்படும் அந்த மயக்கும் கிதாரின் இசைக்கு ஒரிஜினல் சொந்தக்காரர். எனியோ மரிக்கோன். கடந்த வாரம் எனியோ மரிக்கொன் பெயர் அனைத்து பத்ரிக்கைகளிலும் பரபரப்பாக பேசப்பட்டது காரணம் ஆஸ்கார்.


இந்த வருடத்திற்கான் ஆஸ்கார் விருதுவிழாவில் யாரும் செய்ய முடியாத அதிசய சாதனை செய்துள்ளார் இவர். வழக்கமாக கவுரவ ஆஸ்கார் விருது என்பது ஒருவரது பணிக்காலம் முழுவதும் முடிந்தபின் வீட்டில் பழைய  நினைவுகளை அசைபோட்டுக்கொண்டு மிச்சமிருக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கும் போது வழங்கப்படும். அவர்களும் நாலு பேர் தோளை கெட்டியாக் பிடித்துக்கொள்ள நடுங்கும் கரங்களால் அதைபெற்று அடுத்த ஒரு சில  வருடத்திலேயே  முக்தியடைவதும் வழக்கம்.   2006ம் ஆண்டு இவருக்கு இந்த விருது வழங்கப்பட்டபோது எனியோ மரிக்கோன்   சாதனை இத்தோடு முடிந்தது என்று தான் அனைவரும் நினைத்திருப்பார்கள் ஆனால் 9 வருடங்கள் கழித்து 2016ம் ஆண்டு மீண்டும் அவர் இசையமைத்த குவாண்டின் டொராண்டினோ இயக்த்தில் வெளியான Hate ful eight  படம் போட்டியில் நாமினேட் ஆகி ஆஸ்காரையும் வென்றிருப்பது ஆஸ்கார் வரலாற்றிலேயே முக்கியமான் சாதனையாக கருதப்படுகிறது . கலைக்கு வயதில்லை என்பதுபோல் சாத்னைக்கும் வயதில்லை என்பதையே எனியோ மரிகோன் நமக்கு உணர்த்துகிறார். 

                                                                            
இத்தாலியின் ரோம் நகரில் 1928 நவம்பரில் பிறந்த எனியோ மரிக்கோனின் தந்தை ஒரு ட்ரம்பட் வாசிப்பவர். தன் குழந்தைக்கு இருக்கும் ஆர்வத்தைகண்டு சிறுவயதிலேயே இசையை கற்றுத்தர தன் ஆறாவது வயதிலேயே இசைக்கோர்வையை எழுத தொடங்கியவர் என்பது இவரது மேதமைக்கு சான்று . நம் ஊர் பாரதிராஜா, இளையராஜா போல இவர் புகழை உலகத்திற்கு   கொண்டுவந்த இயக்குனரான சர்ஜியோ லியோனும் இவரும் இத்தாலியில் ஒரே ஊரைச்சேர்ந்த  பள்ளிக்காலத் தோழர்கள் .
 
எனியோ மரிக்கோனுடைய இசையின் தனிச்சிறப்பே அது வேறு எந்த வகை   இசையையும் சாராமல் தனித்து நிற்ககூடியதுதான்.  புறக்கட்டுமானங்களை நிர்மானிக்கும் ஜாஸ் இசையின் பெருத்தோற்றத்துடனும் மனதின் துள்ளலை விஸ்தரித்துசெல்லும்  மெலோடியாகவும் இரண்டு உணர்வுகளையும் ஒரு சேர உருவாக்கும் அதிசயம் அவரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டிருக்கிறது.  
அவரது படங்களின் டைட்டில் இசைக்கு என தனி முக்கியத்துவம் உண்டு. அதுவும் பிஸ்ட் புல் ஆப் டாலரின் டைட்டிலில் கறுப்புத்திரையில் அனிமேஷனில் சிவப்புக்குதிரைகள் துள்ளி வரும் பின் புலத்தில் புல்லாங்குழ்ல் இசையின் அதீத கவர்ச்சிக்கு மயங்காதவர்களே இல்லை எனலாம்  பிற்பாடு பேஸ் கிதாரின் அதிர்வோடும் ஒற்றை பெல் இசையின் குறிப்பிட்ட இடைவெளியிலான முழ்க்கத்தோடும் இடையிடையே துப்பாக்கிசத்தம் வெடிக்க சன்னமாக துவங்கும் இசையானது தொடர்ந்து ஒரு உய்ரத்துக்குள் நம்மை அழைத்துசென்று  பெரும் வெளிக்குள் நம்மை சஞ்சரிக்க வைத்து அதிசயித்தில் ஆழ்த்தும் .    

அதே போல அவருடைய புகழுகெல்லாம் உச்ச ஒளியாக் திகழும் குட் பேட் அக்லியின் இசைக்கோர்வையில் மயங்காதவர்களே இருக்க முடியாது எனலாம். இது வரை வெளியான் திரைப்பட பாடல்களில் இரண்டாவது மிகச்சிறந்த இசைக்கோர்வை   என்ற பெருமையை இப்படத்தின் பாடல் வாக்கெடுப்பில் தேர்வானதாக ஒரு ஆய்வு சொல்கிறது. தமிழில் காதலன் பட்த்தில் வரும் முக்கப்பலா பாடலின் துவக்கத்தில் வரும் இசை மின்னலே படத்தில் வில் ஏ..அழகிய தீயே பாடல் என இவரது இசையின் தாக்கத்தில் உருவான் தமிழ் பாடல்கள் என தனி பட்டியலே போடலாம் .


தங்களது படங்களுக்கான ட்யூன்களை தேர்ந்தெடுக்க இயக்குனர்கள் தடுமாறும் போது தன் மனைவி அதை சிறப்பாக செய்வதைகூறி மகிழும் எனியோ மரிக்கோன் அவரது இசை ரசனை மூல்மாக தான் அரிய பாடல்களை தந்திருப்பதாகவும் கூறுகிறார்.  .ஹாலிவுட்டின் பண்பாட்டுக்கு விரோதமாக 87 வயது வரை ஒரே மனைவி மற்றும் அவர் மூலமாக பிறந்த நான்கு வாரிசுகளுடனான் இப்பவும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார் என்பதுதான் அவரது இசையை விட பலரும் அவரை பார்த்து   ஆச்சர்யபடும் முக்கியமான விஷயம் 

March 4, 2016

அஞசலி: ராஜேஷ் பிள்ளை (டிராபிக்: மலையாள திரைப்பட இயக்குனர்)


கேரளத் திரைப்பட உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருகிறது ‘டிராஃபிக்’ பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம். மிதமிஞ்சிய குடியும் சிகரட்டும்தான் அவரது மரணத்துக்குக் காரணம் எனப் பலரும் தவறுதலாகப் புரிந்துகொண்டனர். ஆனால் உண்மையில் அவரது மரணத்துக்குக் காரணம் பிரபல குளிர்பானமும் ஜங்க் புட்ஸ் எனப்படும் உணவு வகைகளும்தான்.
அவரது நெருங்கிய நண்பர் சுப்ரணியன் சுகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பின்புதான் அனைவருக்கும் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. அவரது முதல் படமான ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ (2005) படப்பிடிப்பின்போது அவருக்குப் பிடித்தமான அந்தப் பிரபல குளிர்பான டின்களை ஒரேநாளில் 30வரைக் தொடர்ந்து குடித்துவந்ததால் உண்டான விளைவுதான் அவரது கல்லீரலைப் பாதித்து இழை நார் வளர்ச்சி எனும் நோய்க்கு அவரை ஆளாக்கி இம்சித்துவந்திருக்கிறது.
மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு தொடர்ந்து கூறிவந்தும் தொடர் பணி காரணமாக அவர் அதைத் தள்ளிபோட்டுக்கொண்டேவந்தார். மரணம் அவரைத் திடுமெனப் பிடுங்கிக்கொண்டது.
‘ட்ராஃபிக்’கின் தமிழ் வடிவமான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்திற்காகக் கொச்சியில் தங்கியிருந்தபோது ராஜேஷ் பிள்ளையோடு எனகேற்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை. ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தைத் தயாரித்த ராடன் பிக்சர்ஸ் நிறுவனம் முதலில் ராஜேஷ் பிள்ளையையே அதற்கும் இயக்குநராக ஒப்பந்தம் செய்தது. அதன் தமிழ் வடிவத்தை எழுத என்னை அழைத்தது. நானும் சில மாற்றங்களுடன் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். அது தொடர்பாகக் கொச்சிக்குப் போய் ராஜேஷ் பிள்ளையைச் சந்திக்க வேண்டியிருந்தது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இரு மாநிலங்களும் கொதித்துக்கொண்டிருந்த நேரம் அது. நான் அங்குப் போன நாளில் முழுக் கடையடைப்பு. ஈ, காக்கைகூட வெளியே தலை காட்டவில்லை. ஒரு கடை கண்ணி இல்லை. ராஜேஷ் பிள்ளை மாலை 6 மணிக்கு என்னைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டார். பகல் முழுக்க கொலைப் பட்டினி. ராஜேஷ் பிள்ளையிடம் போனில் சொல்லியிருந்தால் சாப்பிட எதையாவது கொண்டு வந்திருப்பார். நமக்கோ கவுரவப் பிரச்சினை. தமிழ் கெத்தை விட்டுவிடக் கூடாது என மல்லுக்கட்டி மாலைவரை காத்திருந்தேன். சரியாக 6.30 மணிக்கு ராஜேஷ் வந்தார் நல்ல குண்டான தோற்றம் கர கர குரல். திரைக்கதையின் அச்சுப் பிரதியைக் கோவையிலேயே எடுத்து வைத்திருந்ததால் நான் நேரடியாகத் திரைக்கதைக்குள் இறங்கினேன்.
முதல் ஐந்து காட்சிகளை வாசிப்பதற்குள் எனக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டது. நான் செய்த திருத்தங்கள் அவருக்கு உடன்பாடில்லை. உதாரணத்துக்கு மலையாளத்தில் ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்குவதை நேரடியாகக் காண்பித்திருப்பார். நான் அதை ஆளும் கட்சி கவுன்சிலராக மாற்றி, பணத்தைக் கதவின் பின் இருக்கும் மனைவியிடம் கொடுக்குமாறு சாடை செய்வதாக எழுதியிருந்தேன்.
“நீ கம்யூனிஸ்ட், அதனால் என் காட்சியை மாற்றுகிறாய்” என்றார். தொடர்ந்து வாசித்தேன். பெயர் மாற்றங்களைக்கூட அவரால் ஏற்க முடியவில்லை. நான் தமிழ்ப் பெயர்கள்தான் நம்பகத்தன்மை கொடுக்கும் என்றேன். “என் ஸ்கிரிப்டை மாற்ற நீ யார்?” என்று கேட்டார். நானும் ‘பொறுத்தது போதும்’ எனப் பட்டினி போட்ட கோபத்தைச் சொல்லிக் கோபப்பட, அதிர்ந்து வாயடைத்துப்போனார் ராஜேஷ்.
“இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?” என வருத்தப்பட்டார். “வாங்க முதலில் போய் சாப்பிட்டுவிட்டு சண்டை போடலாம்” என்று கூறி, நகரின் பிரபலமான உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்டு முடித்து அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். மலையாளத்தில் இருப்பதை அப்படியே எழுதச் சொன்னார். நான் சென்னை திரும்பி, ராடனில் தகவலைச் சொல்லி முடிவை அவர்களிடம் விட்டுவிட்டேன். அதன்பின் என்ன காரணத்தாலோ அவருக்குப் பதில் அவரது உதவியாளர் ஷகீத் காதரை வைத்து இயக்க வேண்டியதாயிற்று.
படம் வெளியான பின் அதே கொச்சியில் இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் கல்யாண சங்கீத் நிகழ்ச்சியில் ராஜேஷ் பிள்ளையைச் சந்தித்தபோது கட்டித் தழுவிக்கொண்டார். அருகிலிருந்த நண்பரிடம், “ இவன்தான் தமிழ் டிராஃபிக் ரைட்டர். பெரிய சண்டைக்காரன்” எனக் கூறி மகிழ்ந்தார். திரைக்கதை எழுதுவதிலும் நடிகர்களிடமிருந்து பாத்திரங்களைச் செதுக்கி வெளிக்கொணர்வதிலும் அவருக்கு அபாரமான திறமை இருந்தது. குழந்தைத்தனமான மகிழ்ச்சியும் நியாயமான கோபமும் சுள்ளெனத் தெறிக்கும். உணர்ச்சியின் கொதிநிலையில் சதா சஞ்சரிக்கும் அவரது இயல்பு அவருடைய தனித்துவம்.
அவர் முதலில் இயக்கிய ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ 2005-ல் வெளியாகிப் படுதோல்வி அடைந்தது. வீட்டுக்குப் போக முகமில்லாமல் காரிலேயே படுத்துரங்கி, பொதுக் கழிவறையில் குளித்து உடைமாற்றி, பின் போராடி ‘ட்ராஃபிக்’ மூலம் ஜெயித்ததை முதல் சந்திப்பில் காரில் போகும்போது பகிர்ந்துகொண்டார். ‘டிராஃபிக்’ அவருக்கு மட்டுமல்ல, மலையாளத் திரைப்பட உலகிற்கே திருப்புமுனைப் படமாகப் பெருவெற்றி பெற்றது. அதுவரை நேர்கோட்டுத் திரைக்கதைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த மலையாளத் திரைப்பட உலகில் பன்முகப் பார்வைக்கும் கவித்துவமான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்குமான புதிய காற்றை அந்தப் படம் வரவழைத்தது. ‘சாப்பா குறிசு’, ‘உஸ்தாத் ஓட்டல்’, ‘1983’, ‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம் ’ எனப் புதிய படைப்புகளின் வரவுக்குக் காரணமாக இருந்தது.
ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் நான்கு வீராங்கனைகளைப் பற்றிய ‘கோல்ட்’ என்னும் கதை ஒன்றை என்னிடம் சொல்லியிருந்தார். ‘சக் தே இந்தியா’ சாயல் இருந்ததால் அத்திரைக்கதை பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. அந்தப் படம் தள்ளிப்போய், அமலா பால் நிவின் பாலி நடிக்க ‘மிலி’ என்ற படமே இரண்டு வருடங்களுக்குப் பின் அவரது அடுத்த படமாக வெளியானது. ‘ட்ராஃபிக்’ இந்தியில் வெளிவரத் தயாராக இருந்தது. அவரது நான்காவது படமான ‘வேட்ட’ கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகிப் பரவலாக வரவேற்பைப் பெற்றுவருகிறது. படம் வெளியான அடுத்த நாளே அவர் இறந்திருப்பது கேரளத் திரைப்படச் சூழலில் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
- நன்றி 
தி ஹிந்து  தமிழ் 
04/03/2016

February 14, 2016

முதல் காதல் - டெய்சி எனும் தேவ மலர்

காதலர் தினத்தை யொட்டி ஒரு வார  இதழுக்காக எழுத ஆரம்பித்த போது மனம் எனும் ஸ்கேனர் தானாய் நினைவு குளத்தில் கண்டெடுத்தவள் அந்த தேவ மலர்
தேவதைகளின் மலர்

பிறக்கும்போதே அன்னைதெரஸாவாய் பிறந்துவிட்டவள்
அவள் முழு பெயர்  டெய்சி தமிழ்ச்செல்வி
நான் எட்டாவது  படிக்கும் போது வகுப்பில் வந்து சேர்ந்தவள்.
துறு துறு கண் , கறுப்பி ஆனாலும் பேச்சிலும் சுபாவத்திலும் அத்தனை  கவர்ச்சி . எல்லோருக்கும் ஓடி ஓடி உதவி செய்பவள் .கிறிஸ்தவ பெண்களுக்கே உரிய கீச்கீச்  குரல் .
பின்னாளில் யார் யார் என்னவாகபோகிறீர்கள் என ஒரு நாள் ஆசிரியர் எல்லோரையும் எழுப்பி கேட்க  அவள் தான் ப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் போல சமூக சேவை செய்யப்போவதாக  கூறியபோது பால்ராஜ் வாத்தியார் ஆச்ச்ர்யத்துடன் பாராட்டினார் .அனைவரையும் அவளுக்காக கைதட்டச்சொன்னார். நானும் உற்சாகமாக கைதட்டினேன். அன்று  அவள் அப்பழுக்கில்லாத ஒரு தேவ மலராக காட்சியளித்தாள் .அது முதல் டெய்சியை பார்க்கும் போதெல்லாம் மனசுக்குள் ஒரு வெட்க புன்னகை தானாய் மலரும் .
ஒரு மழை நாளில் வகுப்பே சோ வென இரைந்து கொண்டிருக்க டீச்சர் அனைவரையும் அமைதிப்படுத்தி டெய்சி யை எழுப்பி ஒரு பாட்டு பாடச்சொல்ல வகுப்பே  அமைதியாகிப்போனது.  ,  ராஜ நாகம் படத்தில் வரும் தேவன் கோவிலில் என்ற பாடலை   அன்று டெய்சி பாட மழையில் சிணுங்கின ஜன்னல் கதவின் கொக்கி அதற்கேற்ற  தாளமாக இசைத்தது.. ஜன்னல் கம்பிக்கப்பால் வெளியே பள்ளியை ஒட்டிய தோட்ட்த்தில் மழை கொட்டிக்கொண்டிருக்க டெய்சியின் குரல்  கருங்கல் தரையில் சர்ப்பம் போல  எனக்குள் நுழைந்து இதயத்துள் சுருண்டது.. அன்று இரவே ஒரு கனவு . யாருமற்ற குளக்கரை படிக்கட்டுகளில் டெய்சி மட்டும் பட்டு சட்டை பாவாடையுடன் பாடிக்கொண்டிருக்க ஈரத்துண்டை இடுப்பில் கட்டியிருக்கும் நான் ஒரு தூண்  மறைவில் ஒதுங்கி நின்று அவளை ரசிக்கிறேன் என்  கையில் சோப்புபெட்டி தேங்காய் நார். ஒரு வேப்பங்குச்சி
மற்றும் முறுக்கி பிழிந்த ஈரத்துணிகள். மறு நாள் காலையிலிருந்தே என்ன வெனத்தெரியாத ஜுரம் .
ஒரு நாள் பகல் வேளையில் வகுப்பில் அமர்ந்திருக்க தலையில் இளம் சூடு.உணர கைவைத்து  தடவி திரும்பி மேலே பார்க்க மேற்கூரையின் ஓடுகளின் வழியாக இரண்டு  வெளிச்ச குழல் வகுப்பில் விழுந்துகொண்டிருந்தது.  ஒன்று என் தலை மேல். விழுந்திருக்க இன்னொன்று அவள் தோளில்.. வகுப்பில் அத்த்னை பேர் அமர்ந்திருக்க எங்கள் இருவர் மீது மட்டும் விழுந்த வெளிச்ச குழல்கள் என்னை பரவசப்படுத்தியது. வெளிச்சகுழலினூடெ கைவிரல்களை குறுக்காக நீட்ட மாசு படலங்கள் என் விரல்களில் விளையாடின . யாரிடமாவது இதை சொல்ல மனசு ஏங்கியது. யாரிடம் சொல்ல . .. அவளிடமே சொன்னால் என்ன ?
அன்று அப்போது கணக்கு பாடம் கிருஷ்ணன் வாத்தியார் பலகையில் ஏதோ மும்ம\ரமாக எழுதிக்கொண்டிருக்க நான் டெய்சியை நோக்கி திரும்பினேன்
டெய்சி.. டெய்சி.. குரல் வயிற்ருக்குள்ளேயே
அவள் மும்மரமாய் எழுதிக்கொண்டிருந்தாள்
அவள் எப்போது நிமிர்வாள் என்னை பார்ப்பாள் என காத்திருந்தேன்
அவள்  மீது அதுவரையில் விழுந்த வெளிச்சகுழல் இப்போது மெல்ல அவளை விட்டிறங்கி தரைக்கு விழ துவங்கியது
அவள் நிமிரந்த ஒரு கணத்தில் நான் சைகையால்  கூரையின் வெளிச்சத்தை காண்பிக்க அவளும் நிமிர்ந்து பார்த்தாள் அதே போல் எனக்கருகேயும் வெளிச்சம் வட்டமிட்டிருப்பதை காண்பிப்பதற்குள் அது அருகிலிருந்த கேசவன் தலைக்கு நகர்ந்து விட்டிருந்தது.
அவளிடம் அசடு வழிந்த்தோடு அந்த பகல் இருளை நோக்கி நகர்ந்த்து.
அந்த நாளுக்கு பிறகு கூரையிலிருந்து கசியும் ஒளிக்குழல் எனக்கும் அவளுக்கும் ஒரு சேர விழவே இல்லை
அதன்பிறகு ஒரு நாள் பள்ளி விட்டு வரும் போது வழியிலிருந்த தீர்த்த குளத்தில் மீன் அதிகமிருப்பதாக கூறீய பள்ளி நண்பர்களுடன்  அதை பார்க்க செல்ல யாரோ என்னை முதுகில் கைவைத்து தள்ளிவிட குளத்தில் விழுந்து விட்டேன் . உடல் முழுக்க நனைந்த படி ஈரம் சொட்ட சொட்ட பயத்தில் அழுதபடி கரையில் நான் நிற்க சுற்றியிருந்த நண்பர்கள் கேலி செய்ய அந்த நேரம் பார்த்தா அங்கு டெய்சி வரவேண்டும் ..
டெய்சி என்னருகே வந்து ஏதாவது உதவி செய்யட்டுமா என கூறி வருத்தப்பட  எனக்கு அழுகை அதிகமாகியதே தவிர நிற்கவில்லை
அதன் பிறகு தாழ்வு மனப்பான்மை காரணமாகவோ என்னவோ டெய்சியிடமிருந்து வெகுதூரம் விலகிவிட்டேன்.
ஆண்டுகள் கடந்தன எட்டாம் வகுப்பிற்கு பின் அந்த பள்ளியை விட்டு அனைவரும் வெவ்வேறு பள்ளிகளுக்கு இடம் பெயர்ந்தோம் பத்தாவதில் அவள் படித்த பெண்கள் பள்ளியில் டெய்சி முதல் மாணவி என்ற செய்தி என்னை பெரிதாக ஆச்சர்யப்படுத்தவில்லை
அவ்வப்போது தியேட்டர் , கடைவீதி மற்றும் பொது இடங்களில் அவள் அப்பாவோடு அல்லது அண்ணனோடு அவளை பார்ப்பது வழக்கம் . பெரிய பெண்ணாக ஆன பிறகும் அவள் யாரோடும் வெடுக்வெடுக்கென பேசுவதை நிறுத்தவில்லை. என்னை பார்க்கும் போதும் அவள் சிரிக்க முயல நான் அவளை ஞாபகமில்லாதவனாக காட்டிக்கொள்ள முயற்சித்து விலகி நடந்தேன்.
பெரிய பெண்ணாக மாறிய பிறகு அவள் முன்னை விட மிகவும் அழகாக மாறிவிட்டிருந்ததும் ..நம்மைவிட பல மடங்கு அழகான ஒருவனை அவள் இந்நேரம் தேர்ந்தெடுத்து விட்டிருக்ககூடும் என்ற தாழ்மையுணர்வும்தான் அதற்கு காரணம் 
ப்ளஸ் டூ படிக்கும்போதே நான் நினைத்தது போலவே  அவளுக்கு காதல் கல்யாணம் என்ற செய்தியும் வந்தது.
அந்த துக்க செய்தியை வகுப்பு தோழன் சொல்லியதிலிருந்து அவள் மேல் ஏனோ ஒருவித கோபமும் வெறுப்பும் தான் அதிகமாய் வந்தது..
படிக்கும்போதே காதல்.. சே என்ன பெண் .. நல்ல வேளை தப்பிச்சோம் என சமாதான்ங்கள் சொல்லி ஆற்றாமையை தீர்க்க முயன்றேன்
ஒரு நாள் மாலைக்காட்சிக்கு தியேட்டருக்கு போனவனுக்கு அதிர்ச்சி
தியேட்டர் வாசலில் டெய்சி பூரிப்புடன் புதுப்பெண்னாய் நின்று கொண்டிருந்தாள்
சே இவளை போய் பார்க்க நேர்ந்துவிட்டதே என உள்ளுக்குள் குமைந்தபடி திரும்பியபோதுதான் அவள் கணவனை பார்த்தேன் .ஒரு கால் ஊனமான நிலையில் கால் தாங்கி கால்தாங்கி நடந்து வந்தான் .
எனக்கோ அதிர்ச்சி . அவள் மீதான் காதல் மீண்டும் துளிர்க்க துவங்கியது
அவள் உண்மையில் ஒரு தேவ மலர்தான் என நெஞ்சு உரக்க கூவியது
என்னுடன் வந்த வகுப்புத்தோழன் டெய்சியின் பக்கத்துவீட்டு வங்கியில் வேலை செய்பவன் .அவன் என்றும் வங்கி வேலை ஊனத்தை மறைத்து காதலை உண்டாக்கி விட்டது என்றும் இகழ்வாக கூறியபடி தியேட்டருக்குள் என்னை அழைத்து சென்றான்.
டெய்சி தமிழ்ச்செல்வி ஒரு கையால் கணவனைத்தாங்கி தியேட்டருக்குள்  அழைத்துசென்றபடி என்னையும் பார்த்து வழக்கம் போல சிரித்தாள்

இம்முறை வெட்கமில்லாமல் மேலும் காதல் பொங்க அவளை பார்த்து பதிலுக்கு சிரித்தேன்

July 7, 2011

அரங்கம் அறுத்த நிகழ்த்து கலையும் நாடகக்காரன் முருகபூபதியும்



முருகபூபதி : ஒரு அதீத கலைஞனின் சமூக உடல்



சத்யஜித்ரேவின் அபு சன்ஸாரில் ஒரு காட்சி. அனேகமாக உலகசினிமாவின் அற்புத காட்சிகளூள் ஒன்றாகக்கூட அது இருக்கக்கூடும் . கல்கத்தாவில் தனியறையில் சாப்பாட்டுக்கு வழியில்லாத நிலையில் வசிக்கும் ஆரம்ப எழுத்தாளன் அபுவை நண்பன் ஒருவன் தேடி வருவான் .ஒருமாதத்துக்கு பிறகு அவன் புண்ணியத்தில் அபுவுக்கு வயிறுமுட்ட சாப்பாடு.. நண்பர்கள் இருவரும் இரவு சாப்பிட்டுவிட்டு வீடு திரும்பும்போது இருட்டில் இரயில்பாதையில் பேசிக்கொண்டு வருவர் . அப்போது அபு மகிழ்ச்சியால் திளைத்தபடி என்றாவது ஒருநாள் தான் மிகபெரிய எழுத்தாளனாகி கலகத்தாவில் வசதியான வீட்டில் அம்மாவுடன் வந்து வசிக்க போவதாக கைகளை விரித்து மகிழ்ச்சியுடன் தன் கனவை பேசிச்செல்வான் . அவன் பேசிக்கொண்டிருப்பதை நடைமுறை தெரிந்த நண்பன் அப்பாவியாக பார்ப்பான் . ஒரு எழுத்தாளனுக்கு இந்தக் கனவு சாத்தியப்படுமா என்பது போன்ற பார்வை அது.

உண்மையில் அபுவை போலத்தான் சென்னைக்கு வந்த புதிதில் நானும் இருந்தேன். அதே போல ரயில் பாதையோரம் பழவந்தாங்கலில் ஒரு அறையில் வசித்துவந்தேன். பொருள் பற்றி எந்த கவலையுமில்லாமல்.

கனவுகள் பெரிய பெரிய கனவுகள் . கையில் காலணா தங்காது ஆனாலும் கைகளை வீசினால் உலகமே எனக்குச் சொந்தம் என்ற மகிழ்ச்சியுடன் காலால் பூமியை அளப்பேன்.அப்படி அளந்து கொண்டிருந்த ஒருநாள்
மாலையில் என் அறைக்கு நான் இப்பவும் மதிக்கும் எழுத்தாளர் கோணங்கி வந்திருந்தார். கோணங்கி என்னைத்தேடி அறைக்கு வருவது பிரபலமான திரை நட்சத்திரம் ஒரு ரசிகனின் வீட்டுக்கு வருவதுபோல எனக்கு அப்படி ஒரு பரவசத்தை தரக்கூடியது .

அன்று அவருடன் அவரை போலவே இன்னொருவரும் வந்தார்.. பாலா இவன் என் தம்பி முருக பூபதி சீக்கிரம் தஞ்சாவூர்ல நாடகம் படிக்கப் போறான் .நாடகம்தான் அவன் உலகம் பாத்துக்க “ அதே போல் பூபதியிடம் திரும்பி ”டேய் பூபதி பாலா நம்மளைப் போல பாத்துக்க . நீ எப்ப வந்தாலும் ஃப்ரியா இங்க தங்கலாம் எனக்கூறி என் சிறிய அறையை மேலும் பெரிதாக்கினார் . அதுமுதல் பூபதி எனக்கு இன்னொருநண்பன்.

கோவில்பட்டியில் கோணங்கியின் வீட்டுக்குப் போகும் சமயங்களில் பூபதியும் நானும் நல்ல இணை. கோவில்பட்டியில் அவர்களது இந்திராநகர் வீட்டை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதுவே ஒரு புதிர்த்தன்மை. அந்த வீட்டை தனியாக ஒருவன் தேடி கண்டுபிடித்தாலே அவன் தமிழின் புதிர்க்கதைகள் எழுதத் தகுதியானவன். அங்கு சென்று திரும்பாத நவீன படைப்பாளிகளை விரல் விட்டு எண்ணலாம் . இலக்கிய உலகு அந்த வீட்டுக்கு பெரும் கடன்பட்டுள்ளது. நவீன இலக்கியத்தின் தெற்கு முகவரி என்று கூட அந்த வீட்டை சுருக்கமாக அடையாளப்படுத்தலாம்.

அந்த வீட்டிற்குச் செல்லும் சமயங்களில் சிலசம்பவங்கள் எனக்குள் ஆழமான பாதிப்பை உண்டாக்கியுள்ளன. அதில் ஒன்று கோணங்கி. ஊரிலுள்ள சில முக்கிய இடங்களை நமக்கு அறிமுகப்படுத்தும் பாங்கு .. அதிலும் ஒரு கிணறு .. அதைப் பற்றிச் சொல்லவேண்டும். நான் கோணங்கி முருகபூபதி காலைக்கடன் கழிக்க வெகுதூரம் பொட்டல்காட்டில் நடந்து செல்வோம் . வழியில் ஓரு தூர்ந்த கிணற்றை காண்பிப்பார் கோணங்கி.. அந்த இடமே பூதத்தின் காலடியால் மிதிபட்டது போல தூர்ந்து போய் ஒரு அமானுஷ்யத்தை உண்டாக்கும். இந்த கிணற்றில்தான் ஒரு பெண் விழுந்து தற்கொலை செய்துகொண்டாள் என்பார் .அது உண்மையா பொய்யா தெரியாது ஆனால் ஒரு மர்மம் அங்கு முடிச்சவிழ்ந்து நம்முடன் பயணிக்கத் துவங்கும்.

ஒருமுறை நான் சென்ற போது கோணங்கியின் அம்மா மரண படுக்கையில் இருந்தார். கோணங்கி என்னை அவரிடம் அறிமுகபடுத்த அவர் அந்த முடியாத நேரத்திலும் படுக்கையில் இருந்துகொண்டே என்னை அருகழைத்து நெற்றியில் விபூதி பூசினார்.

கோணங்கியை காட்டிலும் பேச்சுதுணைக்கு பூபதியும் நானும் நல்ல இணை .அவரது சமீபத்திய நாடகம் பற்றித்தான் எங்களது பேச்சு துவங்கும். ஆனாலும் அதன் பின் எங்களது பேச்சு தீவிர இலக்கியம் , ஓவியம் ,சென்னை நாடகச் சூழல் இவற்றைத்தாண்டி பல மீ பொருண்மை வெளிகளில் அலையும். அவர்களது மொட்டைமாடி அறையில் வினோத படங்கள் இருக்கும் .. சிறு பொம்மைகள் எங்களோடு உரையாடத்துவங்கும். செல்லரித்த பழைய புகைப்படங்களில் காணப்படும் நாடகக்காரர்கள் இரவில் தூங்கும்போது தாண்டிச்செல்வர்.... விபரீதங்களும் மர்மங்களும் நிறைந்த கோணங்கியின் மொட்டை மாடி அறையில் மார்கவெஸ் , சல்வடார் டாலி, புதுமைபித்தன், மொசார்ட் .ஜோதி விநாயகம், தஸ்தாயெவெஸ்கி என இறந்துபட்ட மனிதர்களும் அண்டரண்டா பட்சிகள், விசித்திர குள்ளர்கள் .. விக்ரமாதித்யன் பதுமைகள் , சேகுவேரா வின் கை., கர்னல் கிட்டுவின் ஷூ என இரவுகளீல் எதுவும் நம் கண்முன் வர வாய்ப்புள்ளது .அவர்கள் அனைவருக்குமான உலகம் அங்கு சித்தித்திருந்தது. பழைய ஏடுகிழிந்த புத்தகங்கள் நிறைந்த அலமாரிகளில் அவர்கள் ஒளிந்து கொண்டிருப்பதை போன்ற பிரமை எனக்குள் எப்போதுமிருக்கும் இதற்கும் பகுத்தறிவுக்கும் முடிச்சு போட்டால் பதில் இல்லை . ஆனால் இந்த தீவிர சமிக்ஞைகளை புரிந்துகொள்வதன்முலம் நாம் இன்னொரு அனுபவத்துக்கு தயாராக முடியும் மட்டுமல்லமல் பூபதியின் நாடக உடைகள் புராதன பழங்குடி இசைக்கருவிகள் முகமூடிகள் வினோதபுகைப்படங்கள் ஆகியவை அந்த மர்ம அறையில் இருந்தபடி இப்போதும் என்னோடு உரையாடிக்கொண்டிருப்பவையாக இருந்துள்ளன.


பூபதியின் அக உலகம் கோணங்கியின் அக உலகத்தோடு எளிதில் பொருந்தகூடியது ஆனாலும் கோணங்கி வெவ்வேறு உலகங்களூக்குள் சட்டென தாவிவிடுவார் .. பாய்வதிலும் கடந்து செல்வதிலும் தான் அவருக்கு விருப்பம். ஆனால் பூபதியின் உலகம் அப்படிப்பட்டதல்ல .. அது குறிப்பிட்ட ஒரு உலகத்துள் நுழைந்தால் அதன் ஆழத்தில் முங்கி இன்னொரு எல்லையை நோக்கி நீந்துபவை ..கோணங்கி பேச்சுக்கு திரும்பி விடுவார் ஆனால் பூபதி மௌனத்தோடு உரையாடுபவர் . அதனால்தான் அவரது நாடகங்களில் அழுத்தம் அதிகம். ..

பூபதியின் நாடகங்கள் பெரும்பாலும் தொன்ம சடங்குகளை அடிப்படையாகக் கொண்டவை. சடங்குகள் நம் பழங்குடி மரபு. இதில் பல சடங்குகளைத்தேடி பூபதி பல மாதங்கள் காட்டில் அலைந்து திரிந்து கண்டுபிடித்துள்ளார். இப்படியான் ஆராய்சியில் சில மாதங்கள் அவர் மூழ்கி விட்டு வீடு திரும்பியபோது நானும் அப்போது கோவில்பட்டிக்கு சென்றிருந்தேன்.
ஆளே வித்தியாசமாக இருந்தார். தேனீ கூட்டத்தில் மாட்டிக்கொண்டு வெளிவந்தவர் போல, பார்ப்பது பேசுவது எல்லாம் வித்தியாசமாக இருந்தது .. ஏதோ பெர்க்மன் படத்துக்குள் இருக்கிறார் போல ஒரு பிரமை தோன்றும் அதன் பிறகுஅவர் நாடகங்களில் வசனங்கள் மெல்ல பின் வாங்க துவங்கி உடல் அசைவுகள் அதிகம் முக்கியத்துவம் பெறத்துவங்கின .

ஒருமுறை அவரது முக்கியமான நாடகம் நடந்து முடிந்த சமயம். ஆனந்த விகடனில் அந்த நாடகம் பற்றி ஒருகட்டுரை வெளியாகியிருந்தது. வழக்கமாக பூபதியும் அவரது நண்பர்களும் மீடியாக்கலிலிருந்து விலகியிருப்பவர்கள் கோணங்கியை போல.காரணம் மீடியாக்கள் காரணமாக கலைத்த்ன்மை சாரம் இழக்கும் அபாயம் இருப்பதாக அவர்கள் நம்பினர் .ஆனால் அந்தமுறை அப்போது விகடனில் நிருபராக இருந்த அருள் எழிலனின் விருப்பத்தின்பேரில் அக்கட்டுரை வெளியாகியிருந்தது. விகடன் வெளியான சிலநாட்களில் பூபதிக்கு சக நாடகக்காரன் ஒருவனிடமிருந்து ஒரு அநாமதேய கடிதம். பூபதி மீடியாக்காரனாக மாறிவிட்டதாகவும் இனி நாடகத்தை விட்டு சினிமாவுக்கு நுழையபோவதையே இது காண்பிக்கிறது என்பதாகவும் நக்கல் செய்து எழுதப்படிருந்தது அக்கடிதம். அதை படித்த பூபதி மிகவும் விசனப்பட்டுகிடந்த நேரத்தில் அவர்கள் வீட்டுக்குச்சென்றிருந்தேன்.தகவலைகேள்விப்பட்டதும் இலக்கியம் மட்டுமல்லாமல் எல்லாத்துறையிலும் இது போன்ற ஏழரை ஆட்கள் எட்டரை வேலைகளில் ஈடுபவடுதை அறிந்து வருத்தம் கொண்டேன் . அவருக்கு ஆறுதல் எப்படிச் சொல்லலாம் என யோசித்தேன். அவரை மன அழுத்ததிலிருந்து முழுவதுமாக விடுவிக்க அவரது பாணியை கையாள்வதென முடிவு செய்தேன் .

பின் அவரிடம் நாடகம் நடத்துன நிலத்துக்கு நீ என்ன செஞ்சே எனக் கேட்டேன் ?அந்த இடம் ஒரு தேரி காடு நல்ல செக்கசெவேலென சிவந்துகிடக்கும் வளமான செம்மண் பூமி . அதில் பல பூச்சிகள் உயிரினங்கள் தாவரங்கள் செழித்த நிலம் ..அந்த இடத்தில் வெறுமனே பூமியை பயன்படுத்திவிட்டு வரலாமா அதன் சமன் குலைந்திருக்குமல்லா.. எனகேட்டேன் .உடனே ஒரு கெடா வெட்டி பொங்கல் போடு எல்லாம் சரியாகும் என்றேன். அடுத்த சில நாட்களில் அங்கு தன் குழுவினருடன் சென்று பூபதி பொங்கலிட்டு மொட்டை போட்டுக்கொண்டு திரும்பினதாக போனில் தகவல் சொன்னார் . அந்த குரலில் மகிழ்ச்சி தெறித்தது.

இது ஒரு சைக்கலாஜி அவ்வளவுதான் .அப்போதைக்கு அவரை பீடித்திருக்கும் மன அழுத்த்திலிருந்து விடுவிக்க எனக்கு தெரிந்த ஒரே மருந்து அவரை இன்னொரு கொண்ட்டாட்டத்துக்கு தயார்படுத்துவது அவ்வளவே.

இந்த விடயத்தை நான் இங்கே பகிர்வதற்கு காரணம் பூபதி தன் கலையை உணர்வு பூர்வமாகவும் சடங்காகவும் வழிபட்டு அதை எப்படி தனக்கான கலாச்சராமாக மாற்றிக்கொண்டார் என்பதுவே ஆகும். இத்தனைக்கும் அவருக்கு கடிதம் எழுதியவர் மேல் அவருக்கு சிறிதும் கோபமில்லை . ஆனால் அவருக்கிருந்த மன உளைச்சல் எல்லாம் இப்படி ஒரு எதிர்வினை வருமளவுக்கு தன் செயல் இருந்துவிட்டதோ எனும் அச்சம் காரணமாகத்தான். ஆனால் அது தேவையற்றது என்பதை நான் உணர்ந்தேன் ஆனால் சொல்லவில்லை. மாற்று வழியை காண்பித்தேன் அவ்வளவுதான்.

இந்த சம்பவத்தை நான் குறிப்பிடக் காரணம் ஒரு கலைஞனாக அவரிடம் நான் கண்ட பரிபூரண முழுமைதன்மையை உங்களுக்கு விளக்கத்தான். இத்தனை சுயநேர்மையுடன் நாடகத்துறையில் அர்ப்பணிப்புடன் செயல்படுபவர் இன்று தமிழ்சூழலில் ஒருவரும் இல்லை .

அவர் வெறும் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு ஆய்வாளராக பல கிராமங்களுக்கு சென்று பல நாடக நடிகர்கள் மற்றும் நடிகைகளின் புகைப்படங்களை சேகரித்து ஒரு கண்காட்சியும் நிகழ்த்தியுள்ளார். இது ஒரு அரிய பணி .உண்மையில் இது ஒரு அரசாங்கத்தின் பணி .தனி மனிதனாக தன் ஆர்வத்தின் பேரில் மட்டுமே இதை செய்திருக்கிறார். இந்தபணிக்கு அவர் எந்த அங்கீகாரத்தையும் எதிர் இன்று வரை எதிர்பார்த்தவரில்லை. அரசாங்கம் விருது கொடுத்தால்கூட அது அவரை கொச்சைபடுத்துவது போலத்தான். நானும் கூட ஒரு பதிவுக்காகத்தான் இங்கே குறிப்பிடுகிறேன் .

இன்று கிட்டதட்ட நாடகம் என்ற துறையே அழிந்துவிட்டது . எல்லா பட்டறைகளும் கோடம்பாக்க குடியிருப்புகளாக சினிமாவை செழுமைபடுத்த வந்துவிட்ட சூழலில் நம் கண்முன் ஒற்றை ஆளாய் இன்னமும் உறுமிக்கொண்டிருக்கும் உடல் பூபதியினுடையது என்பதில் ஐயமில்லை . அவரது நாடகங்கள் நமக்கு நெருக்கமானதோ இல்லையோ நமது உடல்களுக்கு மிகவும் நெருக்கமானவை. அவரது உடல் அசைவுகள் நாம் மிருகமாக காட்டில் உலவிய காலங்களை மீண்டும் நமக்குள் உணர்த்துபவை. நாடகம் என்பதை தீர்மானிக்கும் சதுரவடிவ அரங்கத்தன்மையை அறுத்து நமக்குள்ளிருக்கும் வெளிகளை மேடையாக்கும் சாத்தியம் கொண்டவை . அப்படியான் ஒரு தமிழ் நாடகக்காரனின் அந்த உடல் நம் முன் மீண்டும் சென்னையில் தோன்ற உள்ளது . வரும் ஜூலை பத்தாம் தேதி பூபதியின் புதிய நாடகம் சூர்ப்பணங்கு ஸ்பெசஸ் எண்: 1, எலியட்ஸ் க்டற்கரை. பெசண்ட் நகரில் நடைபெற உள்ளது. ஒரு புதிய அனுபவத்துக்காக காத்திருப்பவர்கள் அவசியம் தவறவிடகூடாத தருணம் இது..

தென்கிழக்குச் சீமையிலே': பாரதிராஜா கலையும் வாழ்வும்

 நூல். ஆசிரியர் : அஜயன்பாலா ,   அழகிய படங்களுடன்  கெட்டி அட்டை  ராயல் சைஸ்  பக்கம் 400  விலை  750 ரூ.   நூலைப் பெற தொடர்புக்கு |: 9884060274...