Showing posts with label தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label தமிழ் சினிமா. Show all posts

September 11, 2024

தமிழ் ஆவணப் படங்களின் போக்கு

ajayanbala@gmail.com . இன்று அனைத்து மொழிகளிலும் ஆவணப்படம் பெரும் இயக்கமாக வளர்ந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் ஆவணப்படங்களுக்கு கலை சினிமாக்களுக்கு இணையான இடத்தில் வைத்து போற்றப்படுகின்றன. மேலும் இன்று. ஒடிடி (OTT எனும் ஒற்றை சட்டகம் வழியாக கலாச்சார பரிமாற்றங்கள் துரிதமாக நடைபெறுகின்றன. ஹாட்ஸ்டாரில் ரஷ்யாவில் ஏற்பட்ட செர்னோபில் (CERNOBYL) அணு உலை விபத்து குறித்த ஆவணப்படம் நம்மை நடுங்க வைக்கிறது. . அது போல நெட்பிலிக்ஸில் ஹவுஸ் ஆப் சீக்ரெட்ஸ் (HOUSE OF SECRETS) அமோசானில் ஐயாம் நாட் யுவர் நீக்ரோ (IAM NOT YOUR NEGRO) போன்ற டாக்குமண்டரி எனும் ஆவணப்படங்கள் கதை படங்களைக்காட்டிலும் விறுவிறுப்பாகவும் அதே சமயம் உண்மைகளை போட்டு உடைத்தும் நமக்கு அதிர்ச்சியூட்டுகின்றன. இப்படி உலகம் முழுக்க ஆவணபடங்களுக்கு வரவேற்பு இருந்து வரும் நிலையில் நம் தமிழகத்தில் ஆவணப்படங்களின் போக்கு என்னவாக இருக்கிறது எனும்போது இத்துறையில் நாம் இன்னும் எவ்வளவு பின் தங்கியிருக்கிறோம் என்பது வெட்ட வெளிச்சமாகிறது. ஒருபக்கம் வருத்தம் என்றாலும் ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த நிலைதான் ஆனந்த் பட்வர்த்தன் போன்ற ஒருசிலர் மட்டுமே இத்துறையில் ஓரளவு ஊடகங்களால் கொண்டாடபடுகின்றவர்களாக முக்கியத்துவம் பெற்றுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் மக்களிடையே இருக்கும் வணிக சினிமா மோகம் ஒரு முக்கிய காரணம் ஆவணப்படங்கள் என்றாலே வேப்பங்காய் போல ஒரு புறக்கணிப்பு மக்கள் மன நிலையில் இருக்கிறது பொதுவாக தமிழ் நாட்டில் ஆவணப்படம் என்றாலே பொதுப் புத்தியில் அது திரையரங்குகளில் வணிக சினிமாவுக்கு முன் திரையிடப்படும் அரசாங்கத்தின் செய்திப் படங்கள் என்பதகாவே ஒரு அபிராயம் நம் சூழலில் இருந்து வந்தது .2000க்குப்பின் டிஜிட்டல் கேமராக்கலின் வருகை மற்றும் ஊடக வளர்ச்சிக்கு பின்பு தான் மக்களிடையே ஆவணப்படம் குறித்த விழிப்புணர்வு ஓரளவுக்கு வரத்துவங்கியது. ..இச்சூழலில் ஆவணப்படங்கள் இருப்பதில் அதில் போக்கு என தனியாக எதுவும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து இயங்குவதே இங்கு பெரிய சாதனையாக கருதப்படுகிரது . இச்சுழலில் தமிழகத்தில் குறிபிட்ட சிலரே இத்துறையில் போதிய அங்கீகாரமோ அல்லது வணிக சந்தையோ இல்லாமல் தொடர்ந்து இத்துறையில் அர்ப்பணிப்புடன் இயங்கி வருகின்றனர் அவ்வகையில் தமிழ்ஆவணப்படங்களின் வரலாற்றில் சில முக்கியதடம் பதித்த அந்த இயக்குனர்களையும் அவர்களது படங்களையும் சுருக்கமாக இக்கட்டுரையில் பார்ப்போம் அ. கருப்பன் எனும். ஏ.கே செட்டியார் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிறந்த ஏ.கே செட்டியாரின் முழுப்பெயர் கருப்பன் செட்டியார் சினிமாமீது கொண்ட ஆர்வத்தில் நியூயார்க் சென்று படித்துவிட்டு திரும்பிய போது காந்தி இந்தியாவின் மிகப்பெரிய பேசு பொருளாக இருந்தார். அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுக்கும் எண்ணம் தோன்ற உடனே களமிறங்கினார் அவரது வாழ்க்கையை நூல்கள் மூலம் முழுமையாக உள்வாங்கிக்கொண்ட அவர் அதன்பின் காந்தி குறித்த ஊடகப் பதிவுகள் எத்தனை நாடுகளில் உள்ளதோ அத்தனையும் சேகரிக்க முடிவுசெய்து களமிறங்கினார். போக்குவரத்து வசதியில்லாத அக்காலத்திலேயே பத்தாயிரம் மைல்கள் மூன்று ஆண்டுகள் பயணம் செய்து பல நாடுகளில் சேகரித்து வைக்கப்படிருந்த காந்தி பற்றிய பிலிம் சுருள்களை உரியவர்களிடம் அனுமதி பெற்று சேகரித்து அதன் மூலம் ஐம்பதாயிரம் அடி நீளத்துக்கு ஆவணப்படத்தை உருவாக்கினார். ஹாலிவுட்டில் சிறந்த படத்தொகுப்பாளர் மூலமாக அதை பன்னிரண்டாயிரம் அடியாக சுருக்கி பின் இருநூறுக்கும் மேற்பட்ட நூல்களைப் படித்து விவரணம் எழுதி ஆங்கில எழுத்துக்களாக படத்தில் சேர்த்துக்கொண்டார் இவ்ஆவணப்படத்தை அப்போதைய பிரித்தானிய அரசுக்கு அஞ்சி திரையரங்குகள் திரையிட முன்வரவில்லை இப்படம் பின்னர் 1948 இல் சுதந்திர தினத்தன்று புது டில்லியில் 1948ல் அந்த ஆவணப்படத்தை வெளியிட்டார் . ஆனால் இந்த பெருமைமிக்க காரியத்துக்குபின் தமிழில் ஆவணப்படங்களே பெரிதாக எடுக்கப்படவில்லை குட்டி ஜப்பானின் குழந்தைகள் பல வருடங்கள் இடைவெளிக்குப்பின் 1989ல் சிவகாசி தீப்பெட்டி தொழிற்சாலைகளில் பணி செய்யும் குழந்தை தொழிலாளர்களை மையமாக வைத்து குட்டி ஜப்பானின் குழந்தைகள் வெளியாகி பரவலான கவனம் பெற்றது. பல விருதுகளையும் வென்றது என்றாலும் இதை இயக்கியவர் சலம் பொன்னுரக்கர் கேரளாவைச் சேர்ந்தவர் பின் இந்த படம் உருவாக்கிய தாக்கம் ஆவணப்படம் குறித்த உணர்வை தமிழ் சூழலில் சிறு சலனத்தை உண்டாக்கிவிட்டது என்றாலும் உடனடியாக எதுவும் நடந்துவிடவில்லை . தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்காக சில தனியார் நிறுவனங்கள் எடுத்த சில படங்கள் தவிர வேறெந்த முயற்சியும் இல்லை . காரணம் அன்றுசினிமா எடுப்பது என்பது பெரும் முதலீடு சார்ந்த விடயம் அப்படியே எடுத்தாலும் அதற்கு வர்த்தக சூழலும் இல்லை. இயக்குனர் எடிட்டர் லெனின் அவர்கள் இயக்கிய நாக் அவுட் குறும்படம் தேசுய விருது பெற்றதை ஒட்டி மாற்று சினிமா குறித்த விழிப்புணர்வு தமிழ் ச் சூழலில் உருவாகத்துவங்கியது . இயக்குனர் சொர்ண வேல் ஈஸ்வரன் 1996ல் சொர்ண வேல் ஈஸ்வரன் தங்கம் என்ற பெயரில் எடுத்த ஆவணப்படம் ஒன்று பரவலான கவனத்தை உண்டாக்கியது . அவரே ஐ என் ஏ : இந்திய தேசிய ராணுவம் (1997) என்ற பெயரில் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவம் குறித்த ஆவணபடத்தையும் எடுத்தார் . தொடர்ந்து வில்லு (1997) கருகத்திருவுளமோ (1999) ,தொடர்ந்து Migrations of Islam (2013 ) nagappattinam (2016) கட்டு மரம் போன்ற படங்களை எடுத்து வருகிறார் இயக்குனர் அம்ஷன் குமார் பாரதியைபற்றிய துல்லியமான ஆய்வுகளுடன் அம்ஷன் குமார் எடுத்த சுப்ரமணிய பாரதி எனும் ஆவணப்படம் தான் தொடர்ந்து தமிழில் எடுக்கப்பட்ட பலவாழ்க்கை வரலாற்று படங்களுக்கு முன்னோடி, குறிப்பாக பாரதி , பெரியார் காமராஜர் ஆகியோர்குறித்த வணிக சினிமாக்கள் உருவாக்கம் பெற அம்ஷன் குமாரின் பாரதி படமே முன்னோடியாக அமைந்தது அம்ஷன்குமார் தொடர்ந்து அசோகமித்திரன் சி.வி.ராமன், உ.வெ. சாமிநாத ஐயர், ஆகிய ஆவணப்படங்களை எடுத்துள்ளார். . சதுப்பு நிலக்காடுகள் பற்றி இவர் எடுத்த சுற்றுச்சூழல் குறித்த படமும் கவனிக்கத் தகுந்தது . இதுவரை 25 க்கும் அதிகமான ஆவணப் படங்களை எடுத்து தமிழ் ஆவணப் பட உலகுக்கு பெருமை சேர்த்துள்ளார் 2015ல் இவர் எடுத்த யாழ்பாணம் தட்சினாமூர்த்தி பற்றிய படம் மூலம் முதன்முதலாக தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குனர் என்ற பெருமையும் இவருக்குண்டு ஆர்.ஆர்.சீனிவாசன் ஒரு ஆவணப்பட இயக்குனரை தமிழக போலீஸ் வலை வீசி தேடிய சம்பவமும், தமிழ் ஆவணப்பட உலகில் நிகழ்ந்துள்ளது . 1997ல் ஆர் ஆர் சீனிவாசன் எடுத்த நதியின் மரணம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனை என்றும் கூட சொல்லலாம்.. அன்று அனைத்து நாளேடுகளிலும் ஆர் ஆர். சீனிவாசன் புகைப்படமும் குறிப்பிட்ட ஆவணப்படத்தின் பெயரும் பரபரப்பாக பத்திரிக்கைகளில் அச்சாகின. ஒரு வகையில் பார்த்தால் சாதாராண பாமர மக்கள் கூட தினத்தந்தியில் வந்த இந்த செய்தி மூலம் ஆவணப்படம் என்ற ஒன்று இருப்பதை அரிந்துகொண்டனர் . கூலி உயர்வு கேட்டு மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்கள் தாமிரபரணி ஆற்றங்கரையில் ஊர்வலம் சென்ற போது காவல் துரை அவர்களை ஆற்றில் ஓட ஓட விரட்டி அடித்ததை அப்படியே நேரடியாக பதிவு செய்யபட்ட காட்சிகளுடன் இத்திரைப்படம் உருவாக்கப் பட்டது. சென்னையில் பொது அரங்கம் ஒன்றில் இப்படம் திரையிடப்பட்டதால் தமிழகஅரசு இதற்கு தடையானை பிறப்பித்தது . பின் இப்படத்தை இயக்கிய சீனிவாசன் மீது வழக்கு பதிவு செய்து தேடப்படும் குற்றவாளியாக அறிவித்ததும் இனி ஆவணப்படங்களும் சென்சார் செய்த பின்பே பொது இடங்கலில் திரையிடப்படவேண்டும் எனும் புதிய சட்ட திருத்தம் கொண்டு வந்ததும் இப்படம் உருவாக்கிய மிகபெரிய சாதனை ஆர்,ஆர் .சீனிவாசன் தொடர்ந்து என் பெயர் பாலாறு போன்ற சுற்றுசூழல் குறித்த முக்கிய ஆவணப்படங்களும், எழுத்தாளரும் கதை சொல்லியுமான பவா செல்லத்துரை பற்றிய பவா என்றொரு கதை சொல்லி மற்றும் புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் காருக்குறிச்சி அருணாசலம் பற்றிய ஆவணப்படங்களும் இயக்கி இத்துறையில் தொடர்ந்து இயங்கி வருபவர் இயக்குனர் ஆர்.வி ரமணி . இந்த வரிசையில் இத்துறைக்காக தன்வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணித்துள்ள இயக்குனர் ஆர்.வி ரமணி . முப்பது வருடங்களுக்கும் மேலாக தொடர்ந்து இத்துறையில் இயங்கிவரும் ரமணி இவரது படங்கள் இந்திய அளவில் பல முக்கிய திரைப்பட விழாக்களில் பங்கேற்று சிறப்பு செய்திருப்பவர். இவர் இயக்கத்தில் மறைந்து வரும் அரிய கலையான தோல்பாவைக் கூத்து ( 2003 )கலைஞர்கள் பற்றிய 150 நிமிட ஆவணப்படம் தமிழ் ஆவணப்பட வரலாற்றில் ஒரு அரிய முயற்சி. தமிழ் நாடு முழுக்க பல்வேறுபட்ட கலைஞர்களை நேரடியாக கள ஆய்வு செய்த இப்படம் தமிழ் ஆவணப்பட உலகின் இன்னுமொரு மைல் கல் எனலாம் பிற்பாடு 1999ல் ஓவியர் ஆதிமூலம் பற்றி லைன்ஸ் ஆப் காந்தி, மற்றும் 2005ல் எழுத்தாளர் சுந்தரராமசாமி பற்றிய நீ யார், போன்ற படங்கள் இவர் இயக்கத்தில் வெளியான குறிப்பிடத்தக்க படங்கள் ரமணியின் படங்கள் தனிமனிதமும் அக விசாரணையும் கவித்துவமும் கூடி வேறு திசையில் பயணித்து புதிய அனுபவங்களுக்குள் இழுத்துச் செல்பவை . இந்த பாணியின் உச்சமாக 2019 ல் இவர் இயக்கிய ஓ தட்ஸ் பானு எனும் ஆவணப்படம் அந்த ஆண்டில் இந்தியாவின் சிறந்த ஆவணப்படத்துக்கான தேசிய விருதை பெற்றது குறிப்பிடதக்கது. இயக்குனர் ஆர்.பி.அமுதன் ஒரு ஆவணப்பட இயக்குனரின் உச்ச பட்ச பொறுப்புகளை தமிழ் சூழலில் உணர்த்திய கலைஞன் ராமலிங்கம் புஷ்பலிங்கம் அமுதன் எனும் ஆர்.பி அமுதன்... மதுரையைச் சேர்ந்தவர். மதுரையில் கொல்லப்பட்ட கம்யூனிஸ்ட் தோழர் லீலாவதி மற்றும் தீவிரவாதிகள் போன்ற ஆவணப்படங்கள் மூலம் 1999ல் தன் பயணத்தைத்துவக்கிய அமுதன், மதுரையில் ஒரு குறிப்பிட்ட தெருவில் மலக்கழிவுகளை சுத்தம் செய்யும் மாரியம்மாள் எனும் தலித் துப்புரவு தொழிலாளியின் ஒருநாள் வாழ்க்கையைச் சோலும் பீ (2003 )எனும் இவரது ஆவணப்படம் தமிழில் மனித உரிமைகள் சார்ந்து மிகபெரிய விழிப்புணர்வை உண்டாக்கியது . தமிழ்நட்டில் நிலவும் சாதிய ஒடுக்குதல்கலின் அவலத்தை இப்படத்தில் வெட்ட வெளிச்சமாக்கினார் . தொடர்ந்து இத்துறைகாக தன் முழு வாழ்வையும் அர்ப்பணித்துவரும் அமுதனின் இயக்கத்தில் உருவான செருப்பு தைக்கும் தொழிலை செய்துவருபவர்கள் பற்றிய செருப்பு (2006) (மற்றும் அணு உலைக்கு எதிரான ரேடியேஷன் ஸ்டோரீஸ் (2008) ஆகியவையும்பரவலான கவனத்தை பெற்றவை . தொடர்ந்து 15க்கும் மேற்பட்ட ஆவணப்படங்கலை இயக்கியுள்ள இவரது படங்கள் இந்திய முழுக்க பல்வேறு நகரங்களில் திரையிடப்பட்டு வரவேற்பை பெற்றுள்ளன மட்டுமல்லாமல் மறுபக்கம் என்ற பெயரில் தொடந்து மதுரையிலும் சென்னையிலும் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் ஒரு ஆவணப்படத்துகென திரைப்பட விழாவை நடத்தி வருகிறார். இயக்குனர். லீனா மணிமேகலை அடிப்படையில் எழுத்தாளரும் கவிஞருமான லீனா மணிமேகலை கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக ஆவணபட இயக்கத்தில் ஈடுபட்டு வருபவர் சமூகத்தில் பெண் ஒடுக்குதல் குறித்த பார்வையை முன்வைக்கும் படங்களை அதிகம் இயக்கிய லீனா 2002ல் மாத்தம்மா தமிழின் முதல் இன வரைவியல் சார்ந்த ஆவணப்படம் எனலாம் தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவான மூன்று மூன்று அடித்தட்டு உழைக்கும் பெண்கள் பற்றிய ஆவணப்படம் தேவதைகள் தமிழில் விளிம்புநிலை பெண்களின் வாழ்வையும் அவர்கள் மனத்திடத்தையும் சமூக நெருக்கடிகளையும் தோலுரித்துக் காட்டியது பெண்னாடி ,பலி பீடம் பறை white van stories போன்ற குறிப்பிடத் தகுந்த படங்களை இயக்கியுள்ள இவர் தற்போது முழு நீள கதைப்படங்களை இயக்கி வருகிறார் அவ்வகையில் இவர் இயக்கிய மாடத்தி உலக முழுக்க பல திரைப்பட விழாக்களில்,பங்கேற்று விருதுகளை பெற்று வருகிறது இயக்குனர். ரவி சுப்ரமணியன் கவிஞர் எழுத்தாளர் பாடகர் என பன்முகங்கொண்ட கலைஞரான ரவி சுப்பிரமணியம் கும்பகோணத்தைச் சேர்ந்தவர். தொலைக்காட்சி தயாரிப்பாக நூற்றுக்கும்மேற்பட்ட ஆவணப்படங்களை இயக்கியவர் எழுத்தாளர் ஜெயகாந்தன் குறித்த இவரது ஆவணப்படம் அம்ஷன் குமாரின் பாரதிக்கு பிறகு அதிகம் பாரட்டைபெற்ற குறிப்பிடத்தக்க ஆவணப்படமாக கருதப்படுகிறது. தொடர்ந்து இத்துறையில் இயங்கி வரும் இவர் இந்திராபார்த்தசாரதி ,மா,.அரங்கநாதன் திருலோக சீதாராம் போன்ற அரிய இலக்கிய ஆளுமைகள் குறித்தும் இயக்குனர் பாலச்சந்தர் குறித்தும் தொடர்ந்து ஆவணப்படங்கள் எடுத்து வருகிறார் இயக்குனர். சோமிதரன் இலங்கைத் தமிழரான சோமிதரன் 2004 முதல் சென்னையில் இயங்கி வரும் ஆவணப்பட இயக்குனர் . 2005ல் போபால் பேரழிவு குறித்து தன்முதல் ஆவணப் படத்தை இயக்கி அறிமுகமானார். இலங்கையில் யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது பற்றிய எரியும் நினைவுகள் (2008 ) மிகச் சிறந்த போர் எதிர்ப்பு ஆவணமாகவும் தமிழர் பண்பாட்டு பதிவாகவும் கருதப்படுகிறது . தொடந்து இலங்கையில் நடக்கும் இனப்படுகொலை குறித்த முல்லைத்தீவுசாகா எனும் படமும் போரினால் தமிழர்கள் படும் துன்பங்களையும் அவலங்களையும் பதிவு செய்த குறிபிடதக்க ஆவணமாக கருதப்படுகிறது , தற்போது சென்னையில் முழுநீளகதை படங்களில் பணிபுரிந்து வருகிறார். இயக்குனர் .திவ்ய பாரதி மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் திவ்ய பாரதி 2017ல் வெளியான இவரது கக்கூஸ் ஆவணப்படம் மூலம் முழுமையான ஆவணப்பட இயக்குனராக தன்னை வரித்துக்கொண்டவர். கக்கூஸ் ஆவணப்படம் வெளியான மறுநாளே போலீசாரல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார் . மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலத்துக்கு எதிராக எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் குறிப்பிட்ட சாதியை இழிவுபடுத்துவதாக பலத்த எதிர்ப்புகள் வர போலிசார் இவர்மீதுவழக்கு பதிவு செய்து தேடத்துவங்கினர் அடுத்து இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீனவர் பிரச்சனை குறித்து எடுத்த ஒருத்தரும் வரலே என்ற படத்தின்மீதும் பட வெளிவருவற்கு முன்பே போலீசார் தேடும் அளவுக்கு இவரது ஆவணபட செயல்பாடுகள் காத்திரமானவை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது முழு நீள படம் எடுக்கும் முயற்சியில் இருந்து வருகிறார் மேற்சொன்ன அனைவரும் தொடர்ந்து இத்துறைக்காக தங்கள் வாழ்வை முழுமையாகவோ அல்லது கணிசமாகவோ அர்ப்பனித்து செயல்படுபவர் . இவர்களின் செயல்பாடுகளால் மட்டுமே தொடர்ந்து தமிழ் ஆவணபடத்துறை இன்று தமிழில் ஓரளவு தடம் பதித்து வளர்ந்துள்ளது இவர்களைத்தவிர தங்களது அரிய முயற்சிகளின் மூலம் சிலர் இயக்கத்தில் உருவாகி வரும் ஆவணப்படங்கள் இத்துறைக்கு தொடர்ச்சியையும் வளர்ச்சியையும் கொடுத்துள்ளன அவர்களுள் பால கைலாசம் இயக்கிய வாஸ்து மரபு, கோம்பை அன்வர் இயக்கிய யாதும் ஊரே .கீதா இளங்கோவனின் மாதவிடாய் , அருள் எழிலனின் பெருங்கடல் வேட்டத்து, பாரதி கிருஷ்ணகுமார் இயக்கத்தில் கீழ்வெண்மனி பற்றிய ராமய்யாவின் குடிசை, செந்தமிழன் இயக்கிய பேசாமொழி ,கோவி லெனின் இயக்கத்தில் அண்ணா ,ப்ரேமா ரேவதியின் உங்களில் ஒருத்தி, பாலமுருகன் இயக்கிய நொய்யல், இரா.முருகவேள் மற்றும் ஒடியன் லட்சுமணன் இயக்கிய நாளி, தவமுதல்வன் இயக்கத்தில் உருவான பச்சை ரத்தம் போன்றவை தம்மளவில் சிறப்பான் ஆக்கமும் வெளியான போது சூழலில் பலரது கவனத்தை ஈர்த்து தமிழ் ஆவணப்பட உலகுக்கு பெருமையும் மதிப்பும் கூட்டிய ஆவணப் படங்கள் வணிக சினிமாக்களுக்கு கிடைக்கும் கவனத்தில் ஒரு துளியளவு கவனத்தை ஊடகங்களும் அரசாங்கமும் கொடுத்தால் இத்துறயில் இன்னும் கூடுதலாக பலர் இயங்கி சமூகத்துக்கும் பண்பாட்டு வளர்ச்சிக்கும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தக்கூடும் பாலு மகேந்திரா நூலகம் சார்பாக இத்துறைக்கு ஒரு இணைய தளம் உருவாக்கி தமிழ் ஆவணப்படங்கள் குறித்தஆவணகப்பகம் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. தொடர்ந்து ஆவணப்படம் எடுப்பவர்களுக்கு இதன்மூலம் வழி வகை செய்யவிருக்கிறது என்பதை இக்கட்டுரை மூலம் தெரிவித்துக்கொள்வதில் உவகைகொள்கிறேன் -அஜயன்பாலா பாலுமகேந்திரா நூலகம்

சகலகலாவல்லி டி.பி.. ராஜலட்சுமி (1911 - 1964)

தென்னிந்தியாவின் முதல் நாயகி மற்றும் முதல் பெண் இயக்குனர் திருவையாறு பஞ்சோபகேச சாஸ்திரி ராஜலட்சுமி என்பதுதான், டி.பி.ராஜலட்சுமியின் முழுப்பெயர்.. தென்னிந்தியாவின் முதல் திரைப்பட கதாநாயாகி மற்றும் கனவுக்கன்னி என்னும் பெயர் கொண்ட இவர்தான் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனர் , முதல் பெண் பாடலாசிரியர் மற்றும் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பல பெருமைகளுக்கும் சொந்தக்காரர் அன்று நடிகைகள் யாரும் நடிக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அது அச்சமூட்டுவதாக இருந்தது. இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திராவில், அத ன் இயக்குனர் தாதா சாகேப் பால்கேவுடன் படத்தில் நடிக்க ஹரிச்சந்திரன் மனைவி பாத்திரத்திற்கு அலையோ அலை என அலைந்து பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை . இறுதியில், ஒரு உணவு விடுதியில் சர்வராகப் பணிபுரிந்து வந்த 16 வயதுப் பையனின் முகம் ஓரளவு பொருந்தி வரவே அவரையே நாயகியாக மாற்றி, மேக்கப் போட்டு, ஒப்பேத்தி நடிக்க வைத்தார். வடஇந்தியாவிலேயே இப்படி என்றால் நம்மூருக்குச் சொல்லவும் வேண்டுமா? அன்று சினிமா நாடகம் என்றாலே நம் பேண்கள் பலரும் அச்சப்பட்டு ஒதுங்கி நிற்க இரண்டு காரணங்கள் . ஒன்று . சினிமாவில் நடித்தால் ஆயுசு குறையும் என்ற பயம். இன்னொன்று அன்றையை சூழலில் சமூகத்தில் நிலவி வந்த பெண்னடிமைத்தனம் .. இத்தகைய சூழலில் இந்த தடைகளை உடைத்து நாயகியாக நான் நடிக்கிறேன் என துணிந்து வந்ததோடு அல்லாமல் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஒரு ப்டத்தை தயாரித்து தானே அதை இயக்கவும் அதில் வரும் பாடல்களை தானே எழுதவும் செய்தார் என்றால் அது வரலாற்றுச் சாத்னை தானே. அதிலும் இன்றும் கூட பெண்கள் திரைப்படத் துறையில் இயக்குனர் ஆவது மிகச்சவாலான காரியம் . உலக அளவில் கூட சதவித அடிப்படையில் மிக மிகக் குறைவு . காரணம் இயக்கம் என்பது அதிக உடல் உழைப்பு கோரும் பணி என்பதால் மட்டும் அல்ல அது நிர்வாகச் சிக்கல்கள் கொண்ட மன நெருக்கடி மிகுந்த பணி. அதனாலேயே இப்பொழுதும் பெண்கள் இத்துறைக்குள் அடியெடுத்து வைக்கத் தயங்குவர் இச் சூழலில் சினிமா தொடங்கிய காலத்திலேயே இதையும் சாதித்துக்காட்டியவர் என்பதுதான் டி. பி. ராஜலட்சுமி என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்க முக்கிய காரணம் . திருவையாறு பஞ்சோபகேச ராஜலஷ்மி . இதுதன் சுருக்கமாக டி.பி.ராஜலட்சுமி என்ற பெயராக நிலைத்து நின்றது . தஞ்சை திருவையாறில், 1911 ஆம் ஆண்டு பிறந்த ராஜலட்சுமியின் தந்தையார் கணக்கு ப்பிள்ளையாக பணியாற்றி வந்தவர். அம்மா பெயர் மீனாட்சி அம்மாள்,. ஐந்தாம் வயதிலேயே ராஜலட்சுமியிடம் யாராவது பாட்டுப் பாடினால் அதை அப்படியே பாடும் திறமை இருந்தது. ஏழாம் வயதில், அவருக்கு முத்துமணி என்பவருடன் நிகழ்ந்த பால்ய திருமணம் ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது.. திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில், வாழாவெட்டி என்ற பட்டமும் அவரைச் சூழ்ந்தது. அப்பா, அம்மாவோடு பிறந்தகம் வந்து சேர்ந்தார். அடுத்த வருடமே தந்தையும் மரணம். இப்படி, சட்டென எதிர்பாராமல் திரும்பிய வாழ்வால் தடுமாறிப்போன ராஜலட்சுமி, அம்மா மீனாட்சியோடு திருச்சி மலைக்கோட்டைக்கு குடி பெயர்ந்தார். திருச்சியில், அப்போது சி.எஸ்.சாமண்னா என்பவர், சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்தார். இயற்கையில் இசையில் ஆர்வம் மிகுந்த ராஜலட்சுமி, சி.எஸ்.சாமண்னா வீட்டிற்கு அம்மாவுடன் சென்று நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு வாய்ப்பு கேட்டுச் சென்றார். அதிகம் பையன்கள் பயிலும் இடத்தில், பெண் குழந்தைகளை வைத்துச் சமாளிப்பது சரிவராது என உணர்ந்த சாமண்ணா, இங்கு வாய்ப்பில்லை, அதனால் புறப்படுமாறு கூறி மறுதலித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாடியிலிருந்து ஒருவர் அப்போது இறங்கி வந்துகொண்டிருந்தார். சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள், சிலர் அதை நேரம் என்பார்கள், சிலரோ கடவுளின் கருணை என்பார்கள், சிலரோ திறமைகள் சந்திக்கும் தருணம் என்பார்கள், அப்படி ஒன்றான தருணம்தான் ராஜலட்சுமியின் வாழ்க்கையில் அந்தக் கணம். படியில் இறங்கிவந்தவர் வேறு யாருமில்லை. தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்தான். தமிழ் நாடக உலகின் பிதாவான சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியின் பாடும் திறனைப் பார்த்து வியந்து, ” இந்தப் பெண் பிற்காலத்தில் பெரிய நிலைக்கு வருவார். ஆர்வத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது. அதனால் இந்தப் பெண்ணை குழுவில் சேர்த்துக்கொள் ” என சுவாமிகள், சி.எஸ்.சாமண்ணாவிடம் பரிந்துரைக்க சாமண்ணாவும் உடனே ராஜலட்சுமியை மறுபேச்சில்லாமல் சேர்த்துக்கொண்டார். முதல் நாடகம் பவளக்கொடி. பாத்திரம் புலேந்திரன். சம்பளம் மாதம் 50 ரூபாய். தொடர்ந்து செல்லப்பா கம்பெனி, கே.பி.மொய்தீன் நாடகக் குழு, தசாவதாரம் கண்ணையா நாடகக் குழு எனப் பல குழுக்களில் பயணித்தார். கண்ணையா குழுவில் எஸ்.ஜி.கிட்டப்பா ராமர் வேஷம்போட அவருக்கு ஜோடியாக சீதையாக நடித்தார். தொடர்ந்து பல ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் புகழ் நாட்டியிருந்த எம்.கே.டி.தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி நாடகத்தில் ஜோடியாக நடிக்க புகழ் பரவியது. இவரது நடிப்பாற்றல் திறமை ஸ்திரீபார்ட் மட்டுமல்லாமல், ராஜபார்ட்டிலும் பல நாடகங்களில் நடிக்கவைத்தது. ஆண்களை, பெண் வேடம் போடவைத்து நடிக்கவைத்த காலத்தில், பல ஆண்கள் இருக்கும்போதே அவர்களைத் தவிர்த்துவிட்டு ஆண் வேடம் இவருக்குத் தரப்பட்டதென்றால், அவரது திறமையை அளந்து கொள்ளுங்கள். மட்டுமல்லாமல், சில நாடகங்களில் ஆண், பெண் இரு வேடத்திலும் தோன்றி பிரமிக்கவைத்தார். அப்போது மௌனப் படங்கள் வெளிவரத் துவங்கின, நாடகத்தைப் போலவே சினிமாவிலும் புகழ்பெற முடியும் என நம்பினார். அதற்கேற்றார்போல, சிவகங்கை நாராயணன் அவர்களின் ஜென்ரல் பிலிம் கார்ப்பரேஷன் கம்பெனியில் நடிக்க வாய்ப்பு வந்தது. 1929இல் கோவலன், அவர் நடித்த முதல் ஊமைப்படம். தொடர்ந்து, அசோஷியேட் பிலிம் கம்பெனியின் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் நடித்தார். 1931ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பேசும் படமான ’ஆலம் ஆரா’ படத்தை அர்தேஷ் இராணி இயக்கினார். அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிராந்திய மொழிகளிலும் படம் எடுக்க விரும்பிய இராணி, தமிழின் முதல் பேசும்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். காளிதாஸ் எனும் அந்தப் படத்தில் நடிக்க, நாயகியாக டி.பி.ராஜலட்சுமியைத் தேர்வுசெய்தார். படத்தின் நாயகன் தெலுங்கில் பேச, இன்னும் சிலர் இந்தியில் பேச, இவர் மட்டும் தமிழ் பேசி நடித்தார். அவ்வகையில், திரையுலகில் தமிழ் பேசிய முதல் கலைஞர் என்ற பெருமையும் டி.பி. ராஜலஷ்மிக்கு உண்டு. காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. `காளிதாஸ்’ படத்தில், `காந்தியின் கைராட்டினமே’ என்ற நாட்டுப்பற்று பாடலைப் பாடி, ஆடி நடித்தார் ராஜலட்சுமி. படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை எனினும், நாட்டுப்பற்று பாடலை ரசித்தனர் மக்கள். தமிழகத்தின் முதல் பெண் நட்சத்திரமாக உருவெடுத்தார் ராஜலட்சுமி. அதன்பின், 1932இல் அவர் நடித்த ராமாயணம் படத்தில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். அப்படியாக, முதல் இரட்டை வேட நடிகை என்ற பெருமையும் இவருக்குண்டு. இக்காலகட்டத்திலேயே இவருக்கு ” சினிமா இராணி ” என்ற பட்டமும் வழங்கப்பட்டது. வரிசையாக சம்பூர்ண அரிச்சந்திரா, சாவித்திரி சத்தியவான், கோவலன், வள்ளி திருமணம், திரௌபதி வஸ்திராபரணம், பக்த குசேலா, குலேபகாவலி என நிறைய படங்களில் நடித்தார். 1933ஆம் ஆண்டு, வள்ளிதிருமணம் என்ற பெயரில் சாமிக்கண்னு வின்சென்ட் தயாரித்த படத்தில், சி.எம்.துரைசாமி நாயகனாக நடிக்க, வள்ளியாக நடித்தவர் டி.பி.ராஜலட்சுமி. அப்படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரம் என்பவருடன் காதல் வயப்பட்ட ராஜலட்சுமி, பட வேலைகள் முழுவதுமாய் முடிந்தவுடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். வள்ளி திருமணம் ரிலீசாகி பெரிய வெற்றிபெற்றது. பின், அதே ஆண்டில் சத்தியாவன் சாவித்திரி என்ற சொந்தப் படத்தை தயாரித்து, நடித்து வெளியிட, அதுவும் மூன்று வாரங்கள் ஓடி வெற்றிப்படமாக பெயர்பெற்றது. படங்களில் நடித்துக்கொண்டே, 1931ஆம் ஆண்டு ‘கமலவல்லி’ என்ற சமூக நாவல் ஒன்றையும் எழுதினார் ராஜலட்சுமி. அந்த நாவலுக்கு, சமூகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் ராஜலட்சுமி அஞ்சவில்லை. மகளுக்கு அதன் நினைவாக கமலா என்றே பெயர்வைத்தார். 1936ஆம் ஆண்டு, ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய ராஜலட்சுமி, தான் எழுதிய கமலவல்லியை தன் முதல் படமாக மகளின் பெயரிலேயே ‘மிஸ் கமலா’ எனத் தலைப்பு வைத்து, அதில் தானே நாயகியாக நடித்து இயக்கவும் தயாரிக்கவும் செய்து, தமிழ் சினிமாவின் முதல் தலைமுறையிலேயே அசாத்திய சாதனையைச் செய்தார். தொடர்ந்து, மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார். இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி.பி.ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி.பி.ராஜசேகரன் கவனித்து வந்தார். எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய `சீமந்தினி’ படத்தில் நடித்தார். அவரே தன் சுயசரிதையில், `ராஜலட்சுமி ஓர் அருமையான நடிகை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டங்கன். 1938இல் கிருஷ்ண லீலை கதையை ‘நந்தகுமார்’ எனும் படமாக எடுத்தார், மராத்திய இயக்குநர் கேஷவ் ராவ் தைபார். அப்படத்தின் மராத்திய மொழி வடிவத்தில், மராத்திய நடிகை துர்கா கோட்டே கச்சை அணிந்து நடிக்கும் காட்சியில் எந்தச் சலனமும் இல்லாமல் நடித்துமுடித்தார்,. தமிழ்மொழிக் காட்சிகளில் நடிக்கவேண்டிய ராஜலட்சுமி, அரைகுறையான கச்சை அணிந்து நடிக்க மறுத்து, வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார். இறுதியில், 1930களில் ஃபேஷனாக இருந்த உடலை முழுக்க மூடிய பூனா ‘ஜம்பர்’ பிளவுஸ் அணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார் ராஜலட்சுமி. சென்னை கீழ்ப்பாக்கத்தில், சொகுசு பங்களாவில் வசித்த ராஜலட்சுமி குடும்பம் சிறிது சிறிதாக நொடித்துப்போகத் தொடங்கியது. இதன்பிறகு ராஜா சாண்டோ இயக்கிய `வசந்த சேனா’ என்ற படத்தைத் தயாரித்தார். `விமலா' என்ற இன்னொரு நாவலையும் எழுதினார். 1950இல், `இதயத் தாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அத்துடன் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்றுபோயின. ஒருகட்டத்தில், சொத்துகள் கைவிட்டுச் செல்வதை அறியாத ராஜலட்சுமியை பக்கவாத நோயும் தாக்கியது. கிட்டத்தட்ட, ஒரு தெருவையே சொந்தமாக வைத்திருந்த குடும்பம், படிப்படியாக அனைத்தையும் விற்று வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தது. 1961இல், இவருக்குக் கிடைத்த கலைமாமணி விருதின் தங்கத்தை உருக்கி, பேரனுக்கு முதல் பிறந்த நாள் பரிசாக மோதிரம் போடும் நிலை வரை அவரது வாழ்க்கை இறக்கம் கண்டது. ஒரு காலத்தில், அவரை சினிமா ராணி எனக் கொண்டாடிய திரையுலகம், அவர் தோல் சுருங்கி, வீட்டில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. ஆனாலும் ஒரு பெண்ணாக இருந்து அவர் செய்த சாதனைகளை இன்று வரை தமிழ் சினிமா மட்டுமல்ல; இந்திய சினிமாவிலேயே யாரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. 1964இல், அந்த சினிமா ராணி, தன் பெருமைக்குரிய வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

December 2, 2021

காம்ரேட் தமிழனுக்கு ஒரு லால் சலாம்

    -அஜயன் பாலா 

 


இயற்கை  ஒரு கம்யூனிஸ்ட் .

 

தன்  சமூக நீதியை  அது மரணத்தின் மூலம் ஒவ்வொரு மனிதனுக்கும் சொல்லித் தந்துகொண்டேயிருக்கிறது

இதை அறிந்துதான்  ஜனா சார் தன் முதல் படத்துக்கு இயற்கை என பெயர் சூட்டினாரோ என்னவோ

 

என்ற போதும் அது  சிலருக்கு மட்டும் தன் விதிகளையு,ம் மீறி பாரபட்சம் காட்டத்தன செய்கிறது  தனக்கு பிடித்தமான  அவர்களது உடல்களை மட்டும் மண்ணில் புதைக்கவிடாமல்  காலத்தில் புதைத்து விதைகளாக மாற்ரிக்கொள்கிறது

 

ஜனா சார் என நான் அன்புடன் அழைக்கும் எஸ்பி ஜனநாதன் சாரும் அத்தகையை இயறகையின் பெறுமதி பெற்ற பெருந்தைகயாளர் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை

 

ஜனா சார் இயக்கி வெளிவரவிருக்கும் லாபம் படத்துக்காக 2017ல் கும்பகோணத்தில் கதைவிவாதத்தில் கலந்துகொண்டது அவரை முழுமையாக பல் வேறு பரிணாமங்களுடன் புரிந்து கொள்ள உதவியது. முன்னதாக முதன் முதலாக என்னுடைய நாயகன் மார்க்ஸ் நூலைப்படித்துவிட்டு பார்க்கவேண்டும் என அழைத்த போதுதான் அறிமுகம்

 

 அவர் நடத்திவந்த உலகாயுதா  சினிமா கண்காட்சிக்கு ஒரு நூலை தொகுக்கும் பொருட்டு அந்த சந்திப்பு நிகழ்ந்தது. பிற்பாடு சங்க நடவடிக்கைகளின் நிமித்தம் அவரை அடிக்கடி சந்திக்க நேர்ந்தாலும் அவரது உதவியாளர் கல்யாண எடுக்கவிருக்கும் இரண்டவது ப்டத்துக்ககான கதை விவாதம் அவரது ராயப்பேட்டை இருப்பிடத்தில் நடந்த போதுதான் நெருக்கமாக பழக முடிந்தது. இதனைத் தொடர்ந்து தான் திருவண்ணாமலையில் ஒரு சில நாட்களும் கும்பகோணத்தில் இருபது நாட்களுமாக லாபம் படத்தின் கதை விவாததில்  கலந்துகொண்டேன் ,

 

இந்த நாட்களில் அவரை அணுகி பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அவரது அனுபவங்களை இங்கு தொகுத்து தருவது இந்நாளில் அவரை கூடுதலாக புரிந்து கொள்ள உதவக்கூடும் வழக்கமாக ஜனாசாரை அனைவருக்கும் ஒரு மார்க்சிய சித்தாந்த வாதியாக மட்டுமே தெரியும். ஆனால் அவரிடம் தமிழர் வரலாறு தொன்மம் ,கலை பண்பாடு குறித்த அறிவியல் பூர்வமான தேடலும் நுண்ணறீவும் ஒரு டாக்டர் பட்டம் பெற தகுதியான புத்தகம் எழுதும் அளவுக்கு தகவல்களு,ம் இருந்தது பலருக்கும் தெரியாத விடயம்

.

ராஜ ராஜ சோழன் குறித்த திரைப்படம் ஒன்றுக்காக அவர் தஞ்சை பெரிய கோயில் குறித்து மேற்கொண்ட ஆய்வுகளின் போது தமிழர் கட்டிடக்கலையில் இருந்த வியக்க வைக்கும் மேதமையும் ஆற்றலும் அவரை சிலிர்க்க வைத்துள்ளது . தொடர்ந்து அவர் தமிழ் நாடு முழுக்க பயணப்பட்டு இத்துறை சார்ந்த பல அறிஞர்களை சந்தித்து அவர்களுடன் அவர் கருத்து விவாதம் செய்து தெரிந்துகொண்ட தகவல்களை அவ்வப்போது என்னுடன் பகிரும் போது எனக்கு அது புதிய ஜன்னல்களை திறந்து வைத்தது. வெறுமனே தகவல்களாக இல்லாமல் எந்த துறையாக இருந்தாலும் அதன் எண் தசம விகித கணித இலக்கணங்களுடன் உரிய வார்த்தைகளுடன் துல்லியமாக நமக்கு விளக்க முனைவது அவருடைய உரையடாலில் எனக்கு ஆச்சர்யமளித்த விடயம் .

இவ்வளவு தகவல் தெரிந்து வைத்திருந்தாலும் ஒரு புதிய சிறிய வய்து இளைஞன் அவருக்கு தெரியாத புதிய தகவல்களையோ அல்லது புத்தகத்தையோ சினிமவையோ சொல்ல ஆரம்பித்தால் ஒரு குழ்ந்தை போல அவனை வியந்தோதி என்னாபா பயமுறுத்துறியே என குழந்தையாக மாறிவிடுவார் .

 

அவருக்கு பலமே அவருடைய உதவியாளர்கள் தான் . ஒவ்வொருவரும் இருபது வருடம் இருபத்தைந்து வருடம் அவருடன் பயணிப்பவர்கள் . எனக்கு தெரிந்து தமிழ் சினிமாவில் இவ்வளவு காலம் ஒரே இயக்குனருடன் பயணிக்கும் உதவி இயக்குனர்கள் அவரிடம் மட்டும் தான் . காரணம் அவரிடம் இருக்கும் கம்யூன் வாழ்க்கை. அவருடைய இருப்பிடமே ஒரு கூட்டுப்பண்ணை வாழ்க்கைதான் . சீமான் அண்ணனுக்கு பிறகு ஒரே சமயத்தில் அனைவரும் வட்டமாக அமர்ந்து சமைத்த உணவை பகிர்ந்து சாப்பிடும் அழகை அவரிடம் மட்டுமே பார்த்து நெகிழ்ந்தேன் .

 

சிலர் முதல் ப்டத்தின் போது இப்படி ஒரு வாழ்க்கையில் துவங்கினாலும் பேரும் புகழும் பெற்றபின் உதவி இயக்குனர்களோடு பழகுவதில் ஒரு இடைவெளி வெற்றியின் அளவைபோல அதிகரித்துக்கொண்டே இருக்கும் . இந்த சூழலில் வைத்து பார்க்கும் போதுதான் ஜனாசார் தோற்றம் எவ்வளவு உயரம் என தெரிய வரும் . அது போல அவரிடம் எனக்கு ஆச்சர்யமளிக்கும் இன்னொரு விடயம் என்னதான் அவர் ருஷய் இலக்கியங்களின் காதலராக இருந்தாலும் அவரை இயக்குவது என்னமோ தமிழ் சினிமாவின் எம் ஜி ஆர் தான் . ஒரு பககம் தொழில் நுட்பத்தில் அபாரமன அறிவும் நவீன அணுகுமுறையும் அவர் படங்களில் இருந்தாலும் அதே அளவுக்கு எம் ஜி ஆரையும் அவரது திரைப்படங்களையும் உள்வாங்கியிருந்தார் . சார் எனக்கு சினிமாவில் குரு எம் ஜி ஆர்தான் நீங்க சீன் சொன்னா எம் ஜி ஆர் படத்துல இந்த மாதிரி சீன் வந்துருக்கா அவர் எப்படி இந்த சீனை பண்ணியிருக்கார்னு பாத்துதான் புரிஞ்சுக்குவேன் .. ஏன்னா அவரை விட இந்த மக்களை புரிஞ்சுகிட்டவங்க வேறு யாருமில்ல என்பார் . இயற்கை .. பேராண்மை போன்ற படங்களின் வெற்றிக்கும் எம் ஜி ஆர் படங்களுக்கும் இருக்கும் கணித பொருத்தப்பாடுகளை என் சினிமா அறிவை வைத்து எப்படியெல்லாமோ ஆய்வு செய்து பார்க்கிறேன் . அதுதான் ஜனாசாரின் வெற்றி .. இல்லாவிட்டால் பெரிய அறிஞர்களே விளக்க முடியாமல் தடுமாறும் மார்க்சிய தத்துவத்தை பேராண்மை படத்தில் ஜெயம் ரவி மூலம் வகுப்பறை காட்சியில் அத்துணை தெளிவாக பல கோடி மனிதர்களுக்கு கொண்டு சென்றிருக்கிறார் . தமிழ் சினிமாவின் சிறந்த காட்சிகளுள் ஒன்றாக அக்காட்சி இன்றும் பரிணிமித்து வருகிறது . அது போலத்தான் கொரோனாகாலத்துக்கு முன்பே படத்தின் மூலம் பயோவார் குறித்த தகவலை மிக எளிமையாக எடுத்துச்சொல்லியிருந்தார் .

இந்த சமூக அக்கறையும் எளிய மனிதர்களுக்கான வெளிப்பாடும் தான் ஜனாசார்

சென்று வாருங்கள் ஜனா சார் இந்த சமூகம் குறித்தும் மக்களைகுறித்தும் உங்கள் ஏக்கம் கனவுகள் அப்படியே தொஅட்ர்கின்றன . உங்களது உதவியாளர்கள் அதை ஈடுசெய்வார்கள் என நம்புகிறேன் ;

தனிப்பட்ட முறையிலும் பாலுமகேந்திரா நூலகம் சார்பாகவும் என் இதய அஞ்சலிகள்

லால் சலாம் காம்ரேட்

தென்கிழக்குச் சீமையிலே': பாரதிராஜா கலையும் வாழ்வும்

 நூல். ஆசிரியர் : அஜயன்பாலா ,   அழகிய படங்களுடன்  கெட்டி அட்டை  ராயல் சைஸ்  பக்கம் 400  விலை  750 ரூ.   நூலைப் பெற தொடர்புக்கு |: 9884060274...