(வாசகசாலை அமைப்பின் அசோக்நகர் நூலக வாசகர் வட்ட நிகழ்வுக்காக
14/03/2017 அன்று ஆற்றிய உரை )
தமிழின் சிறந்த
நாவல்கள் குறித்து போதிய விமர்சனங்கள் இல்லாவிட்டாலும் 1986 வரையிலான நாவல்கள் குறித்து புதுயுகம் எனும் இதழில் சி.மோகன் ஒரு அருமையான கட்டுரை
எழுதி அதில் தன் ரசனைக்கு முப்பது நாவல்கள் கொண்ட ஒரு பட்டியலை வெளியிட்டார். எனக்கு
தெரிந்து தமிழ் நாவல்கள் குறித்த உருப்படியான கட்டுரை அது ஒன்று மட்டுமே . அந்த பட்டியலில்
தமிழின் மிகச்சிறந்த நாவல் எதுவுமில்லை என்றும் சிறந்த நாவல் என மோகமுள்ளையும்,.ஜே.ஜே சிலகுறிப்புகள்
, மற்றும் புளியமரத்தின் தோணி மூன்றையும் குறிப்பிட்டு அதற்குப் பின் ஒரு முப்பது சிறந்த
நாவல்களை பட்டியலிட்டிருப்பார். உண்மையில்
உருப்படியான தேர்வு அது. இது போன்ற நூலகங்களில்
அந்த நாவல்கள் அனைத்தும் கிடைக்கும். என் பதின் பருவத்தில் என் ஊர் செங்கல்பட்டு நூலகத்தில் அப்போது கிட்டத்தட்ட
அனைத்து நூல்களும் கிடைத்தன. மூன்று மாதங்களுக்குள் அனைத்தையும் முடித்துவிடலாம்.
அதில் ஒன்றாக அவர் குறிப்பிட்டிருக்கும் நாவல் வாடி வாசல்.
வாடிவாசல் ஜல்லிக்கட்டை
பின்புலமாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கிறது. வாடி வாசல் என்றால் என்ன என்று தெரியாதவர்களுக்கு
கூட கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசியல் நிகழ்வுகள் மூலமாக தெரிந்திருக்கும். மனிதனுக்கும் மிருகத்துக்குமான சண்டைதான் நாவலின்
மையம். இங்கு அமர்ந்திருக்கும்
பலர் அந்நாவல் பற்றி அறியாதவர்களாக இருக்கக்கூடும் எனவே உங்கள் வசதிக்காக முதலில் அதன் கதையை சுருக்கமாக உங்களுக்கு கூறிவிடுகிறேன்.
அன்று சல்லிக்கட்டு
நாள். இன்னும் சற்று நேரத்தில் அந்த செல்லாயி சாட்டு கிராமமே அல்லோகலப்பட போகிறது.
நாவலின் பிராதான பாத்திரமான பிச்சியும் அவனது மைத்துனன் மருதனும் அந்த கிராமத்துக்கு
வருவதிலிருந்து துவங்குகிறது கதை .அவர்கள் யாரென தெரியாமல் தங்கள் ஜமீன் காளைகளின் பெருமையையும் துள்ளிதிரியும் யாருமே பிடிக்க முடியாத
அதன் வீரத்தையும் வம்படியாக பேசித்திரிகிறான் அசலூர்க்கார கிழவன் ஒருவன் . அவரது வம்படியான்
பேச்சுக்கு பதிலடி போட்டு பேசுகிறான் பிச்சி. துவக்கத்தில் அவன் யாரெனத் தெரியாமல்
கிழவனும் தன் ஜமீன் காளைகளின் பெருமைக்கு மீசை முறுக்கி பேசுகிறான் . பிற்பாடு பிச்சி வேறுயாருமல்ல மாடு அணைவதில் வல்லவன் என பேரெடுத்த
அம்புலித்தேவனின் மகன் தான் என அறிந்ததும் அவன் மேல் வாஞ்சையும் நெகிழ்ச்சியையும் கொள்கிறான்..
பல வருடங்களுக்கு முன் ஜமீன் காளைகளிலேயே பிரசித்தி
பெற்றதுமான காரியெனும் காளையினால், குத்துப்பட்டு இறந்தவன் தான் அம்புலித்தேவன். தந்தையைக்
கொன்ற காளையை அடக்கி அவரது எண்ணத்தை ஈடேற்றவே
இந்த சல்லிகட்டில் பிச்சி கலந்துகொள்ள வந்திருக்கிறான் என்பதை அறிந்து ”எப்பேர்ப்பட்ட
வீரனின் மகனாடா நீ” என கிழவன் உச்சி முகர்ந்து பிச்சிக்கு ஆசிகளை வழங்குகிறான். சல்லிக்கட்டு துவங்குகிறது, வாடி வாசலில் காளைகள்
சீறிப்பாய்கின்றன, எப்ப சப்பை காளைகளை மற்றவர் பிடிக்க விட்ட பிச்சியும் மருதனும் யாரலும்
பிடிக்கவே முடியாது என அறிவிக்கப்பட்ட அடங்கா காளைகளான பில்லை,
கொராலு ஆகியவற்றை மருதனின் துணையோடு
அடக்கி ஜமீன்தாரையும் அவரது சகாக்களையும் வாயடைக்க வைக்கிறான். இதற்கு சல்லிகட்டில்
பழுத்த அனுபவம் கொண்ட கிழவன் தரும் ஆலோசனைகளும் குறிப்புகளும் ஒத்துழைக்கின்றன.. இப்போது
பார்வையாளர்களும் ஜமீனும் பிச்சியின் துணிச்சலான விளையாட்டை பார்த்து வியக்கின்றனர்.
இறுதியாக வருகிறது அவனது தந்தை அம்புலித்தேவனை கொன்ற காரி. கூரான் கொம்பும் மதர்த்த
திமிலுமாக வாடிவாசலிலிருந்து துள்ளிகுதித்துவரும் காரியை பார்த்து பிச்சி தயாராகிறான்
. துவங்குகிறது மனிதனுக்கும் மிருகத்துக்குமான சண்டை இதில் ஒரு கட்டத்தில் பிச்சி தோற்று
விழ, இனி அப்பனைப் போல இவனும் தொலைந்தான் என அனைவரும் அதிர்ச்சியுடன் பார்க்கும் வேளையில்
சட்டென யாரும் எதிர்பாராத வேளையில் காரியின் கொம்புக்கு தப்பி, அதன் கொம்புக்கிடையில்
கட்டப்பட்ட பரிசு முடிச்சை கையால் எடுத்து வாயில் கவ்வி வெற்றி பெறுகிறான் பிச்சி.
அப்படியும் காளை அவனது தொடையை பதம் பார்த்து விட ரத்தம் கொட்டுகிறது. ஜமீன் பதட்டத்துடன்
அங்கு வர அவரிடம் பிச்சி இந்தக் காளையை அடக்குவதற்கு நான் வரவில்லை. என் அப்பனின் இறுதி
எண்ணத்தை பூர்த்திசெய்யும் ஒரு மகனாகவே இங்கு வந்தேன் எனக்கூறுவதுடன் நாவல் முற்று
பெறுகிறது.
தமிழில் இதைவிட சிறிய நாவல் எனக்கு தெரிந்து எதுவும் இல்லை. அப்படி
இருந்தால் அது ஒருவேளை வண்ண நிவனின் ரெய்னீஸ்
அய்யர் தெரு நாவலாக வேண்டுமானால் இருக்க முடியும் என நினைக்கிறேன். இந்த நாவலின் சிறப்பே கச்சிதமான மண் வாசம், குன்றாத அதன் எழுத்து நடைதான்.
ஒரு சொல் கூட கூடுதலாக இல்லாமல் நறுவிசாக செதுக்கினார் போல வாக்கிய அமைப்புகள் .பிரம்மாண்ட
சல்லிக்கட்டு அரங்கை வெகு சுருக்கமான வார்த்தைகளில் நம் மனதுக்குள் சுழலவிடுகிறார்.
பிச்சி, மருதன் கிழவன், முருகு ஜமீன்தார், மற்றும் அமபுலிதேவன் என ஐந்தே மனிதர்களும் பில்லை
,கொராலு, காரி என பிரதான காளைகளும் தான் கதையை
நகர்த்தும் முக்கிய பாத்திரங்கள். கதை முழுக்க
பெண் பாத்திரங்களே இல்லை. பெண் பாத்திரமே இல்லாமல் எழுதப்பட்ட ஒரே நாவல் என்றும் கூட
வாடி வாசலை அடையாளப்படுத்த முடியும்.
ஹெமிங்வேவின் கடலும்
கிழவனும் நாவலோடு பல விதங்களில் இந்நாவல் பொருத்தப்பாடுகொண்டிருப்பது மிக ஆச்சர்யமான
ஒன்று. இரண்டுமே கடுகு எனத்தக்க அளவில் சிறியதும் வீரியத்தில் மிகுந்தும் காணப்படும்
நாவல்.
கடலும் கிழவனும்
கதை இதுதான். 85 வயதாகும் அந்த கிழ மீனவனுக்கு 85 நாட்களாக கடலில் மீனே சிக்கவில்லை.
அந்த வெறியுடன் இன்று எப்படியும் மீனை பிடித்தே ஆகவேண்டும் என தூண்டிலுடன் கடலுக்கு
செல்லும் சாண்டியாகோ கடலில் மூன்றுநாள் மீனுடன் நிகழ்த்தும் போராட்டமே கதை.
இரண்டுமே மனிதனுக்கும்
மிருகத்துக்குமான போரை அடிப்படையாக கொண்டிருக்கிறது. ஒன்று தொழில், இன்னொன்று விளையாட்டு
கடலும் கிழவனும்
ராட்சத மீனுக்கும் மனிதனுக்கும் கடலில் நடக்கும் போர் என்றால் வாடிவாசல் காளைக்கும்
மனிதனுக்கும் நிலத்தில் நடக்கும் போர். கடலும்
கிழவனும் நாவலில் நாயகன் கிழவன்(சாண்டியாகோ),
துணைப்பாத்திரம் சிறுவன். வாடிவாசலில் நாயகன் இளைஞன்(பிச்சி), துணைப்பாத்திரம் கிழவன்.
இரண்டிலுமே அனுபவம்
முக்கியத்துவம் பெறுகிறது. கடலும் கிழவனும் நாவலின் நாயகன் சாண்டியாகோ. முதுமையும் மீன் பிடிப்பதில் அவனுக்கிருக்கும் பழுத்த
அனுபவமும் அதன்பாலான ஈகோவும் நாவலை வழி நடத்துகிறது.வாடிவாசலில் அந்த
நாயக பாத்திரம் இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. ஒன்று இளைஞன், உடல் வலிமிக்க நாயகன் பிச்சி. இரண்டாவது அனுபவம் வாய்ந்த கிழவன்.
இரண்டும் சேர்ந்துதான் பிச்சியை வெற்றிபெறச் செய்கிறது.
ஹெமிங்வேவின் தனிச்சிறப்பே
தான் மெற்கொள்ளும் களத்தை முழுமையாக உள்வாங்கி அந்த இடத்துக்கே நம்மை அழைத்துசெல்லும்
துல்லியமான விவரிப்பு பாணிதான். அது போர்க்களமாகட்டும் காளைச்சண்டையாகட்டும் ஆழ்கடல்
மீன்பிடிப்பாகட்டும் நிகழ்விடத்தைப் பற்றிய துல்லியமான விவரிப்பு அவருடைய பாணி.
இதே விவரிப்பு
பாணி தான் வாடிவாசலின் தனித்தன்மை . வழக்கமாக தமிழ் நாவலில் கதைத்தன்மையும் பாத்திரச்சிறப்புகளும்
காட்சியமைப்புகளும்தான் தான் நாவலின் சிறப்புக்கு காரணமாக அமையும். மொழி என்பது இரண்டாம்
நிலையில்தான். மொழி மற்றும் விவரணைக்கு சிறப்பாக சொல்லப்படும் ஜே.ஜே.சிலகுறிப்புகள், புயலிலே ஒரு தோணி ஆகியவற்றில்
கூட பாத்திரச்சித்தரிப்பு , காட்சியமைப்பு
கதையம்சம் முக்கியத்துவம் பெற்றிருக்கும். ஆனால் வாடிவாசலில் கதை என்ற அம்சமே இல்லை. நிகழ்வுதான்.
முழுக்க முழுக்க விவரணை உரையாடல் என மொழியால் மட்டுமே செதுக்கப்பட்ட ஒரே தமிழ் நாவல்
வாடிவாசலாக மட்டுமே இருக்க முடியும். .
அதுபோல ஹெமிங்வேவின்
கடலும் கிழவனில் ஒரு ராட்சத சுறாமீன் பிரதான பாத்திரமாக இருந்தாலும் பின் நான்கைந்து சுறாக்களும் வேட்டையாட வேண்டிய நிர்பந்தம் ஏற்படுவது போல, வாடி
வாசலிலும் முதன்மை காளையான காரி யோடு மோதி
ஜெயிப்பதற்கு முன், பில்லை, கொராலு ஆகிய காளைகளை
இவன் எதிர்கொள்கிறான்.
ஹெமிங்வே வின்
கடலும் கிழவனும் நாவல் 1951ம் ஆண்டு வெளியாகி 52ல் புலிட்சர் விருதும், 53ல் நோபல்
பரிசும் பெற்று உலகப்புகழை எட்டியிருக்கிறது. இதற்கு முன்னோடியாக இருக்கும் நாவல் மோபிடிக்.
சரியாக 100 ஆண்டுகளுக்கு முன் திமிங்கல வேட்டை பற்றி எழுதப்பட்டுள்ளது..
செல்லப்பாவின்
வாடிவாசல் 1959ல் பதிக்கப்பட்டு அவரது எழுத்து, பத்திரிக்கையுடன் இலவசமாக அனைவருக்கும்
அனுப்பப்படுகிறது. இதற்கு முன்னோடி நாவலாக
கமலாம்பாள் சரித்திரம் இருந்துள்ளது.
சல்லிக்கட்டை பற்றி முழவதுமாக இல்லாவிட்டாலும், அந்நாவலுக்குள் ஒருபகுதி வருகிறது.
இவையெல்லாம் இரண்டிற்குமான
பொருத்தப்பாடுகள் அவ்வளவே. . ஒருவகையில் ஆச்சர்யமூட்டக் கூடிய பொருத்தப்பாடுகள் .
ஒரு வேளை கடலும்
கிழவனும்கூட . செல்லப்பாவுக்கு வாடிவாசலை எழுத உந்தித்தள்ளியிருக்ககூடும் . எப்படியிருந்தாலும்
தமிழுக்கு வாடிவாசல் ஒரு பெரும் கொடை.
சல்லிக்கட்டுக்கு
துளியும் தொடர்பற்ற ஒரு பிராமண வீட்டின் அனுபவத்தோடு வளர்ந்த சி.சு.செல்லப்பா அவருக்கு அன்னியமான மறவர்குல பின்புலத்தில் குறிப்பிட்ட
நிலப்பரப்பின் வழக்காறு மொழியுடன் உரையாடலில் நயமும் இலக்கியமும் குழைத்து கொஞ்சமும்
பிசிறடிக்காமல் மிக துல்லியமாக செதுக்கினார் போல் எழுதியிருப்பது, அவரது அசாத்திய எழுத்துவன்மைக்கு
சான்று.
இயல்பில் புகைப்படக்கலையில்
ஆர்வமிகுந்தவராக செல்லப்பா இருந்த காரணத்தாலோ என்னவோ, நாவலை முழுவதுமாக திரைப்படக்காட்சியாக
நம்முன் நிகழ்த்துகிறார்.
காளையை பிச்சி
அடக்கும் தருணங்களில் மொழியும் காட்சி புலமையும் இணைந்து கொள்கிறது. மாட்டுக்கும் பிச்சிக்கும்
பின்னாலிருந்து காமிராவை மேலும் கீழுமாக சண்டைக்கு இணையான கோணத்தில் வைத்து காமிராவை
திருப்பும் ஒரு இயக்குனரின் லாவாகம் தேர்ந்த
மொழியால் சாத்தியப்பட்டிருப்பது ஆச்சர்யமான நிகழ்வு.
கீழே வரும் ஒரு
பாராவை படியுங்கள்
”காளையின் மடிந்த
பின் கால்கள் பிச்சி நின்ற இடத்துக்கு நேராக இருந்தன. பாயப்போகிறவன் மாதிரி காலை எடுத்துவைத்தவன்,
தடாலென நெடுச்சாண்கிடையாக கீழே படுத்தான்.அவனது வலது கை காளையின் வலதுகால் பிடிக்கு
வசமாக நெருங்கிவந்தது. கையை வீசி குளம்புக்கு மேலே அடிகணுக் காலைப்பிடித்து மறு கையை
தரையில் பதித்து உந்தி எழுந்து காளையின் காலைப் பிடித்து இழுத்தான்
“
ஒருவேளை வாடிவாசலை
ஒரு இயக்குனர் திரைப்படமாக எடுக்க முன் வருவாரானால்
அவருக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே ஏற்கனவே
எழுத்தில் செல்லப்பா சாத்தியப்படுத்தியிருக்கும் காட்சிகோணங்கள் தான்.
மேலும் பிச்சி
காரியை முதன் முதலாக பார்க்கும் போது அதன் கொம்பில் தன் தந்தையின் ரத்தம் வழிவதைப்
பார்க்கிறான். பல்லாண்டுகளுக்கு முன் சிறுவனாக இருந்தபோது அவன் மூளையில் பதிந்த சம்பவம்
கணத்தில் வந்து போகும் இக்காட்சிகள் திரைப்பட தொழில்நுட்பத்தில் இண்டர் கட் எனப்படும்
இடைவெட்டு காட்சியாகும்
.
இதன் வழியாக செல்லப்பாவுக்குள்
அசாத்தியமான சினிமா ஈடுபாடும் இருந்திருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது. அவரோடு நன்கு
பழகியவர்கள், அவரது சினிமா மீதான பார்வை குறித்து எழுதினால் அவரை புரிந்துகொள்ள மேலும்
ஏதுவாக இருக்கும்
இப்படியான தமிழின்
சிறந்த நாவலொன்றை குறித்து பேச வாய்ப்பை உண்டாக்கி தந்த வாசக சாலை நண்பர்களுக்கும்
அசோக்நகர் நூலக வாசகர் வட்ட உறுப்பினர்களுக்கும் , நூலக பணியாளர்களுக்கும் என் மனமார்ந்த
நன்றி
நன்றி: பேசும் புதிய சக்தி ஏப்ரல் 2017
No comments:
Post a Comment