Showing posts with label பிறர் விமர்சனம். Show all posts
Showing posts with label பிறர் விமர்சனம். Show all posts

May 15, 2016

புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - - _ அசதா

 புனைவுலகின் பிரத்யேக வாசனையும் அஜயன்பாலா வின் கதைகளும் - அசதா

    
    இலக்கியத்துக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டு தந்த கொடையான சிறுகதை, இலக்கிய வடிவங்களுள் மிகுந்த சவால்மிக்க வடிவமாக இரண்டரை நூற்றாண்டுகள் கடந்து இன்றும் நீடிக்கிறது. ஒரு கோணத்தில் பார்க்க மாப்பஸானையும், செக்காவையும், புதுமைப்பித்தனையும் நமக்குத் தந்தவை சிறுகதைகள் என்றுகூடச் சொல்லலாம். அடக்கம், வடிவம், மொழி இவற்றில் தொடர்ந்து தன்னைப் புதுப்பித்தபடி வந்திருக்கும் சிறுகதை மேற்சொன்னவற்றில் எண்ணற்ற சாத்தியப்பாடுகளையும் கண்டிருக்கிறது. சிறுகதை வாசகத் துய்ப்புக்கு அல்லது நுகர்வுக்கு உகந்ததொரு அளவில் (பக்க எண்ணிக்கை) இருந்தது அதன் பிரபல்யத்துக்கு மட்டுமல்லாமல் அதில் பல்வேறு சாத்தியங்களை, புதுமைகளை நிகழ்த்தவும் ஏதுவாயிருந்திருக்க வேண்டும். ஆனாலும் சுந்தர ராமசாமியின் உவமை ஒன்றைக் கடன்பெற்றுச் சொல்வதாயிருந்தால் சிறுகதை எழுதுவது திமிங்கிலத்தை நீச்சல் குளத்தில் நீச்சலடிக்கச் செய்வது போல. இதனாலேயே சிறுகதை சவாலான விஷயமாக இருக்கிறது.

     எனினும் மனித உணர்வுச் சிக்கல்களை, அரிதான அகதரிசனங்களை, மாபெரும் ஆனந்தமாகவும் துக்கமாகவும் அபத்தமாகவும் நிகழும் மானுட வாழ்வினை- பல நேரம் அவ்வாழ்வின் ஒரு விள்ளலை அல்லது ஒரு குறுக்குவெட்டுத் தோற்றத்தை- தமக்குள் நிகழ்த்தி பெரும் வெற்றி கண்டவை சிறுகதைகள். தமிழ்ச் சிறுகதை தனக்கான பாரம்பரியத்தைக் கொண்டிருந்தபோதும் மேலைச் சிறுகதைகளிலிருந்தும் அது கடன் பெற்றிருக்கிறது, அல்லது உலகின் ஏனைய மொழி இலக்கியங்களில் போல மேலைச் சிறுகதைப் போக்குகளை அவதானித்து  தனக்கான சிறுகதையை அது உருவாக்கிக் கொண்டது என்றும் சொல்லலாம். தமிழ்ச் சிறுகதையின் நெடிய வரலாற்றைப் பேசாமல் தொண்ணூறுகளின் தமிழ்ச் சிறுகதைப் போக்குகளிலிருந்து தொடங்கலாம்.

          தொண்ணூறுகளில் யதார்த்த சிறுகதை வழக்கொழிந்துவிட்டதென்ற களிகூடிய ஒரு ரகசியப் பெருமிதம் பல தீவிர தமிழ்ச் சிறுபத்திரிக்கையாளர்களிடையே சுற்றி வந்தது. புதிய நூற்றாண்டு தொடங்கிய சில காலத்தில் யதார்த்த சிறுகதையைப் புதைத்த இடத்தில் புல் முளைத்துவிடும் என்றும் நம்பப்பட்டது. ‘யதார்த்த சிறுகதை மரணித்துவிட்டது என்ற ஒரு பிரகடனம் மட்டுமே குறையாயிருந்தது. அதேநேரம் எண்பதுகளும் தொண்னூறுகளும் தமிழ்ச்சிறுகதையில் மிகத் தீவிரமான ஆண்டுகளைக் கொண்டிருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது. மேலைச் சிறுகதைகளிலிருந்து விலகி லத்தீனமெரிக்க இலக்கியங்களின் பக்கம் நம் கவனம் குவிந்திருந்த காலகட்டம் அது. அப்போதுதான் தமிழில் மிகு புனைவுக் கதைகள் தீவிரமாக எழுதப்பட்டன. அவருக்கும் முன்பும் பிறகுமாக பல்வேறு ஆளுமைகள் இந்த மிகுபுனைவு காலகட்டத்தில் இயங்கினாலும் எஸ். ராமகிருஷ்ணனையும் அவரது ‘தாவரங்களின் உரையாடல் கதைத்தொகுப்பையும் இக்காலகட்டத்தின் துலக்கமான ஒரு அடையாளமாகக் காண விரும்புகிறேன். மிகு புனைவுக் கதைகளின் கதவுகளைத் திறந்து விட்டதில் இக்கதைத் தொகுப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது.

            பிறகு வந்த வருடங்களில் யதார்த்த சிறுகதையின் பிடரியைப் பற்றி அதன்மேலேறி நின்ற மிகுபுனைவுக் கதை மெல்லக் கீழிறங்கி ஒதுங்கி நின்றது. ‘கிளர்ச்சியுற்ற சிறுவர்கள் என ஜெயமோகன் லத்தீனமெரிக்க புனைகதையாளர்களைக் குறிப்பிட்டது நிஜம்தானோவென்ற ஐயம் ஏற்பட்டது. கு.ப.ரா, புதுமைப் பித்தன், வண்ணநிலவன் கதைகளெல்லாம் ஏன் வசீகரம் மாறாமல் இன்னும் அப்படியே இருக்கின்றன என்ற கேள்வி வந்தது. மிகுபுனைவுக் கதைகள் பரீட்சார்த்தமானவை மட்டுமே என்பதான பிம்பம்  வலுவூன்றி இருந்தாலும்  இந்தக் காலகட்டத்தில் மிகுபுனைவுக் கதைகள் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் ஒருவிதமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டுவிட்டன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் மிகுபுனைவு சிறுகதைகள் பரீட்சார்த்த எல்லையைத் தாண்டியவை என வாசகத் தளத்தில் நிரூபிக்க இன்னமும்  பிரயத்தனம் நடந்தபடிதான் இருக்கிறது.  மிகுபுனைவுக் கதைகள் மீதான இந்த அவநம்பிக்கையை மிகுபுனைவு எழுதுபவர்கள்தான் போக்க முடியும்.  

         பொதுவாவே சமகாலத் தமிழ்ச் சிறுகதை வெளி சோபையற்றுப் போய் புனைவெழுத்து என்பது நாவல்கள் மட்டுமே என்றாகியிருக்கிறது. இரண்டு சிறுகதைகள் எழுதிய எழுத்தாளரையும் நீங்கள் ஏன் நாவல் எழுதக் கூடாது என பதிப்பாளர்கள் கேட்கையில் சிறுகதைக்கான சந்தை மதிப்பை நாம் அறிய முடிகிறது. போனால் போகிறதென்று இடையிடையே சிறுகதைகளும் எழுதும் நாவலாசிரியர்களாலும் சந்தைமதிப்பு போன்றவற்றின் மீது நம்பிக்கை வைக்காத சிறுகதை எழுத்தாளர்களாலும்  சிறுகதைகள் வழக்கற்றுப் போகாமல் இருந்து வருகின்றன. மிகுபுனைவைப் பொருத்தவரை இன்று சிறுகதைகள் குறைவாகவே எழுதும் தீவிர புனைவெழுத்தாளரான கோணங்கி, மிகுபுனைவு நுட்பங்களை கைக்கொண்டு கதைகளைப் படைக்கும் சுரேஷ்குமார இந்திரஜித், மாய யதார்த்த கூறுகளைத் திறம்படத் தன் கதைகளில் கையாளும் பா.வெங்கடேசன் எனச் சிலரே அதனை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றனர்.

     தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் மிகுபுனைவுக் கதைகள் பெற்றிருக்கும் இடத்தினை மனதிற்கொண்டு அதிகமும் மிகுபுனைவு வகையைச் சார்ந்த கதைகளை உடைய ‘அஜயன்பாலா கதைகள் சிறுகதைத் தொகுப்பை நாம் அணுகலாம். பத்து  கதைகள் கொண்ட இத்தொகுப்பில் சில கதைகள் மட்டுமே யதார்த்த வகையைச் சேர்ந்தவை. மீதமிருக்கும் கதைகளில் மிகுபுனைவு தரும் கட்டற்ற சுதந்திரத்தை பயன்படுத்திக் கொள்ளும் அஜயன்பாலா அனேக கதைகளைத் தம்மளவில் வடிவநிறைவு கொண்ட, தேர்ச்சிமிக்க  மொழியுடன்கூடிய, வாசிப்பு சுவாரஸ்யம் குன்றாத கதைகளாகத் தந்துள்ளார் என்பதை இத்தொகுப்பின் பலமாகக் கூறவேண்டும். கதை வடிவமும் கூறுமுறையும் இக்கதைகளில் சிறப்பாக வெளிப்பட்டுள்ளன. வாழ்வின் நெருக்கடிகள் உந்தித் தள்ள விளிம்பை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் இளைஞனொருவன், சுயபச்சாதாபம் கொண்டு தனிமையில் உழல்பவன், காதலியிடம் காதலைச் சொல்ல இயலாதவன் என்பதான ஒரு பாத்திரம் இக்கதைகளில் தூலமாகத் தோன்றுகிறது. இந்த எதிர்மறைகள் சூழ வாழும்போதும் இயற்கையோடு தன்னை அடையாளம் காண்பவனாகவும், கடந்துபோகையில் வசீகரிக்கும் ஒரு யுவதியின் முகத்தை ரசிக்கத் தயங்காதவனாகவும் அவன் இருக்கிறான்.

     தன் காதலியின் பிறந்தநாளுக்காக நண்பன் வாங்கிய கைக்குட்டை ஓர் இரவு இவனிடம் தங்கிவிடுகிறது, மறுநாள் பூங்காவில் சூழ்நிலை கருதி நண்பனின் காதலிக்கு இவன் காதலனாக சற்று நேரம் நடிக்கிறான். இறுதியில் நண்பன் வந்துவிட, இவனை விட்டு அவர்கள் அந்த தினத்தைக் கொண்டாடக் கிளம்புகிறார்கள். இவன் தன் மழைக்கோட்டோடு அங்கு நிற்கிறான். அது மழைபொழியும் வேளையாக இருந்தும் அந்த மூவரில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்திருக்கிறான். சொல்லப்போனால் அன்று இந்த உலகில் அவன் மட்டுமே மழைக்கோட்டு அணிந்தவனாக இருக்கிறான். ‘அந்த நிமிடமும் என் உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாமல் மழைக் கோட்டிற்குள் நின்றுகொண்டிருந்தேன் எனும்போது மழைக்கோட்டு மனதின் முக்காடாக மாறுகிறது, அவனை விடவும் மழைக்கோட்டு அங்கு முக்கியமானதாகிறது. கதையின் இறுதியில் அவன் கொள்ளும் துக்கம் அல்லது ஏமாற்றத்தை அது பரிபூரணமாக்குகிறது. ஒருவன் வாங்கும் மழைக்கோட்டு உலகியல் பயன்பாட்டில் மழையினூடாக அவனது தடையற்ற இயக்கத்தை சாத்தியமாக்குவது, ஆனால் சூக்குமமான ஒரு அகநோக்கில் அது மழை என்ற அற்புதத்தையும் மனிதனையும் பிரித்து வைப்பது. இந்த அடிப்படை புரியும்போது ‘மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’ கதை இன்னொரு பரிமாணத்தை அடைகிறது.

    ‘முருகேசன்  இத்தொகுப்பின் முக்கியமான கதை. சமகால சமூக-அரசியல் இயங்கு நிலைகளில் நுட்பமான உபாயங்கள் மற்றும் தந்திரங்கள்வழி வெகுமக்கள் மனதில் கருத்துக்களை கட்டமைத்து அவர்தம் சிந்தனையை புறவயமாகக் கட்டுப்படுத்தும் நுண் அரசியலை பகடியுடன் விவரிக்கிறது கதை. உதாரணமாக ஊரில் பித்தளைப் பாத்திரம் காணாமல் போனால் அது நல்ல சகுனமாகப் பார்க்கப்படுவது.  பெரும் மூடர் கூட்டத்தில் நுண்ணுர்வும், சுய சிந்தனையும் கொண்டவன் தனித்து ஒதுக்கப்படும் அவலமும் இத்தகு சமூக-அரசியல் கட்டமைப்பில் எதிர்ப்பு என்பதுகூட முறைப்படுத்தப்பட்ட ஒரு ஏமாற்றுத் தந்திரமாக இருப்பதும் இக்கதையில் பதிவு செய்யப்படுகிறது. யுவான் ருல்ஃபோவின் அனாக்ளீட்டோ மோரோனஸ் கதையை வாசித்தவர்கள்  ‘முருகேசன் கதையை இன்னும் சிறப்பாக உள்வாங்கமுடியும்.

     இத்தொகுப்பில் எனக்கு மிகவும் உவப்பான கதையாக ‘சின்ன முதலாளி வர்றார் ஒளிஞ்சுக்கோ...கதையைச் சொல்வேன். சின்ன முதலாளி, உயரமான சார் ஒருவர், ஒல்லி வாத்தியார் என வழக்கமாக நாம் காணும் பொதுக் குறியீட்டுப் பெயர்களைக் கொண்டவர்கள் இதில் வருகிறார்கள். இப்பெயர்கள் இந்தக் கதையை குறிப்பிட்ட விசேஷங்கள் ஏதுமற்ற கதையாகக் காட்டுகின்றன ஆனால் உண்மையில் அது அப்படியல்ல ஒரு கார்ட்டூன் கதை போல முயல்வேட்டைக்கு வரும் சின்ன முதலாளியுடன் தொடங்கும் இக்கதை பச்சை நிலவைப் பள்ளிக்கூடப் பையில் வைத்து சிறுவன் பள்ளிக்குச் செல்வதாகத் தொடர்கிறது. பிரகாசமாகத் தெரியும் பந்தைப் பார்த்து  அது நிலாவைத் தொட்டுவிடாதே எனச் சின்ன முதலாளி கேட்குமிடம் கவனிக்கத் தக்கது. இறுதியில் சிறுவன் ஏமாற்றத்துடன் நிற்க நிலவு வானுக்கே சென்றுவிடுகிறது. முள்ளங்கித் தோட்டத்துக்குக் கடல் வந்து போயிருந்தது போன்ற வரிகளைக் கொண்டு பெரும் புனைவாக விரியும் இக்கதையில்பசிக்குது என வயிற்றைத் தடவிக் காண்பிக்கும் சிறுமி வரும் வரி வாசகனை விழுத்தாட்டி விடுவது. அர்த்தங்கள் மற்றும் குறியீடுகளுக்கப்பால்  நிற்கும் இக்கதை வியப்பையும் மனவிகசிப்பையும் ஒருங்கே தோற்றுவிக்கும் பாங்கில் ஒரு நவீன தேவதைக் கதையாகவும் இருக்கிறது.

     தமிழ் நவீன இலக்கியவாதிகள் கூட்டமாக சந்தித்து அளவளாவும் பொழுதுகள் எப்படிப்பட்டவை என அறிய விரும்பும் ஒரு வெளியாளுக்கு சில சுவாரஸ்யமான தகவல்களை வழங்குவது கடவுளர் சபை. கடவுளர் சபை என்ற தலைப்பின் மரியாதை நிஜமானதா அல்லது பகடியின்பாற்பட்டதா என்பது இக்கதையை வாசிக்கும் எழுத்தாளர்களின் சுயஅனுபவம் சார்ந்த ஊகத்துக்கு விடப்படுகிறது.

      ரயிலின் முகமான எஞ்சினைக்கூடப் பார்க்கமுடியாத கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டியில் கார்டாகப் பணிபுரியும் ஒருவன், தனிமையும் கழிவிரக்கமும் கொண்டவனாக துருவேறிய இரும்பாலான அந்தக் கடைசிப் பெட்டியின் ஒரு அங்கமாகவே மாறிவிடுகிறான். பச்சை போர்த்திய வயல்கள் ஜன்னல் வழியே தெரியும்போது மனம் விகசிப்பவன். ஆடுமேய்க்கும் பெண்ணிடம் அவன் கொடுக்க முடியாத அந்த ரொட்டித் துண்டு தனிமையாலும் இறுக்கத்தாலும் அவன் ஆழ்மனதில் இறுகிக் கிடக்கும் விண்டு தரமுடியாத அன்புதான் என நாம் அறிகிறோம். கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி என்பது இதுவரையான தமிழ்ச் சிறுகதைகளில் பயன்படுத்தப்பட்ட குறியீடுகளில் அலாதியான ஒரு குறியீடு என்பதை நான் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.
       தார்கோவெஸ்கியின்சேக்ரிஃபைஸ்படத்தின் நாயகன் போரின் அழிவிலிருந்து இந்த உலகைக் காப்பாற்றிவிட்டால் என் வீட்டை எரித்துவிடுகிறேன் என பிரதிக்ஞை கொள்வது போல ‘இரண்டாம் வெளிகதையில் அபத்தமான இந்த உலகியல் சூழலில் இருந்து தப்பிக்க ஏதாவது ஒரு அபத்தமான செயலைச் செய்ய வேண்டுமென முடிவெடுக்கிறார்கள் நாயகனும் அவனது நண்பர் ஒருவரும்.ஆனால் நாயகனின் இந்த முடிவுக்குப் பின்னால் இருப்பது  ஒரு சுயநலமே என்பதை நாம் அறிகிறோம். ஒரு பழம் நினைவை மீட்டெடுக்க முனையும் அவனது பயணம் வெறுமையை எதிர்கொள்வதில் முடிகிறது. இக்கதையில் பின்னோக்கிச் சொல்லப்படும் கதை ஈர்ப்பற்ற தன்மையாலும் முடிவின் செயற்கைத்தன்மையாலும் வசீகரம் குன்றிவிடுகிறது. வழக்கமாக ஈயடிக்கும் மியூசிக் அகாடமியில் செவ்வியல் இசைகேட்க கைகளில் பாப்கார்னும் ஐஸ்கிரீமுமாக முண்டியடிக்கும் கூட்டத்தைப் பாரத்துவிட்டு நண்பர்கள் மேற்சொன்ன அபத்த செயலுக்கான முடிவையெடுக்கும் இடம் ரசிப்புக்குரியது. 

        மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்’கதையில் போல ஈடேறாக் காதல்களே தொகுப்பின் பிற காதல் கதைகளிலும் காணக்கிடைக்கின்றன. ‘மூன்றாவது அறை நண்பனின் காதல் கதையில் காதலில் நிராகரிக்கப்பட்டவன் தன் உயிரைவிட்ட பின்னரே தான் விரும்பிய பெண் காதலிக்கத் துவங்கியிருப்பதை அறிகிறான். ‘ரோஸ்லின் மனசில் காதல் இல்லாத தோட்டம் கதையிலும் சூசையை அதுவரை உதாசீனம் செய்துவந்த ரோஸ்லின் அவன் தற்கொலை செய்துகொண்டபின்பே அவன்மீதான காதலால் துக்கித்து அழுகிறாள். ‘மலை வீட்டின் பாதை, கதையில் பெண்களால் கதைநாயகனுக்குள் காதல் போன்ற ஒன்று உருவாகி அது ருசுப்படும் முன்பே தீர்மானமாக அழிக்கவும்படுகிறது. ஆகவே காதலின் பாலையிலேயே தன் கதை மாந்தர்களை திரிய வைக்கிறார் ஆசிரியர்.

   தாண்டவராயன்கதையிலும் இருள் ஒரு குறியீட்டுப் பின்புலமாக இருக்கிறது. தாண்டவராயன் தெருவில் மட்டும் சூரியன் உதிக்காத நிகழ்வு அத்தெருவாசிகளை பீதிக்குள்ளாக்குகிறது. இந்த இருளும் அறியாமையாகத்தான் இருக்கிறது. இக்கதையின் நிரந்தர இருள் என்ற அதீதம் தரும் புனைவு சாத்தியங்கள் சரியாக கைக்கொள்ளப்படவில்லையோ என்ற எண்ணம் ஏற்படும்படிக்கு கதை செயற்கையான ஒரு முடிவை நோக்கிச் செல்கிறது. இருளைப் போக்கும் மின்சாரத்தை விசையை இயக்கி அளிப்பவனான பண்டாரத்திடம் சட்டென்று அதிகாரம் வந்துவிடுகிறது. அவனைப் பயந்து மரியாதையுடன் அனைவரும் தள்ளி நிற்க ஒருவன் மட்டும் அருகில் செல்கிறான், அது பண்டாரத்தின் பொருத்தாமல் விட்ட சட்டைப் பித்தான்களைப் பொருத்திவிடத்தான் எனும்போது தேவைகளை முன்வைத்த மனிதரின் நைச்சியமான நடத்தை குறித்த காட்சி அங்கு கிடைக்கிறது.

      அஜயன்பாலாவின் கதைகளில் வரும் பெண்களைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். மூன்றாவது அறை நண்பனின் காதலியாக வரும் பெண் ‘என் முன் மண்டியிட்ட தூய ஆன்மாவை அதன் கம்பீரமிழந்த தன்மை காரணமாகவே மறுதலிக்க வேண்டியதாகிப்போனதுஎனும்போது தூய ஆன்மாவை விடவும் கம்பீரத்தை விரும்புகிற பெண்ணாக இருக்கிறாள்.  தனது அக்காவின் கணவனுடன் கனவில் சல்லாபிப்பது பற்றிய குற்றவுணர்வற்றவளாக இருக்கும் ரோஸலின் அதைக் கனவளவிலேயே நிறுத்திக் கொண்டவளாய் கனவில் அந்த இடத்தை நிரப்பக்கூடிய வேறொருவனைத் தேடவும் செய்கிறாள். இவ்வாறு இருவருமே தமது தெரிவுகள் பற்றிய தெளிவு கொண்ட நவீன யுகத்துப் பெண்களாக இருக்கிறார்கள்

       தேர்ந்த கதைசொல்லிக்குரிய லாவகமான மொழியும் காட்சிகளை நுட்பத்துடன் விவரிக்கும் பாங்கும் அஜயன்பாலாவை வசீகரமானதொரு கதை சொல்லியாக்கியிருக்கின்றன. புனைவு தரும் சவால்களை அவர் அதற்கான தளத்திலிருந்து எதிர்கொண்டு வெற்றிகண்டிருக்கிறார் என்பதற்கு இக் கதைத்தொகுதி சான்று. புனைவின் சுவாரஸ்யம் மட்டும் இலக்காக அன்றி மானுட வாழ்வைப் பேசும் பிரதிகளாகவும் தன் கதைகளை படைக்க முயன்றிருக்கிறார். கதைகளில் வரும் கதாபாத்திரங்களின் அகத்தோற்றத்தை, அவர்தம் உளச்சார்புகளை, சம்சயங்களை மொழியில் லாவகமாக வெளிப்படுத்துகிறார். பல கதைகள் குறியீடுகளாகவும் குறியீடுகளை தமக்குள் கொண்டனவாகவும் நிகழ்கின்றன. சில கதைகள் போகிற போக்கில் மாய யதார்த்தக் கூறுகளைத் தொட்டுச் செல்கின்றன.

     சம்பவங்களை புறவயமாகச் சித்தரித்து நின்றுவிடும் கதைகளிலும்கூட நுட்பமான அங்கதத்துடன் சமூக விமர்சனம் ஒளிந்திருப்பதைக் காண முடிகிறது. நுண்ணிய காட்சி விவரணைகள் கதைகளுக்கு வலுசேர்ப்பனவாக இருக்கின்றன. அதீதங்களைப் பேசும் கதைகளில் இத்தகு நுட்ப அவதானிப்புகள் அக்கதைக்குள்ளான நம்பகத்தன்மையை சாத்தியமாக்குகின்றன.

‘        ஜீன்ஸ் அணிந்த பறவைகள் கதையில் வெற்றிலை போட்டு மென்றபடியிருக்கும் ஒரு பாலியல் தொழிலாளியிடம் குடும்பத்துப் பெண் ஒருவர் தன் குறைகளைக் கூறி அழும் இடத்தினை, பாலியில் தொழிலாளியான மக்தலேனாவை கல்லடியிலிருந்து இயேசு காப்பாற்றும் சம்பவத்தின் மாற்று-எதிர் நிகழ்வாக ஒருவர் பார்க்க முடியும். தம் போக்கிலான இதுபோன்ற அற்புதங்கள் அஜயன்பாலாவின் ப் பத்துக் கதைகளுக்குள்ளும் ஆங்காங்கே காணக் கிடைக்கின்றன. மொத்தமாகக் இக்கதைகளை வாசிப்பது அஜயன்பாலாவின் புனைவுலகின் பிரத்யேக வாசனையும் ருசியும் நமக்குத் தரும் அனுபவமும் ஒரு மொழியில் விரியும் அதிபுனைவின் அற்புதத்துக்கு அருகில் நம்மை அழைத்துச் செல்லக்கூடியது.

      1. முத்துக்கள் பத்து’ என்ற தொகுப்பில் இந்தப் பத்துக்  கதைகளை வெளியிடும் அம்ருதா பதிப்பகத்துக்கும்  அஜயன் பாலாவுக்கும் வாழ்த்துக்கள்.

-அசதா. 

May 14, 2011

மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்




மயில்வாகனன் மற்றும் கதைகள்- சிறுகதைதொகுப்பு விமர்சனம்
எழுதியவர்- உமாசக்தி

ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.


நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.


'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்கச் செய்து நம்மைப் பித்தாக்கிவிடுவார். அஜயன் பாலா இவை எல்லாவற்றின் கலவையாக இக்கதையின் வாயிலாக நம் கண்முன் நிற்கிறார்.


அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.


'மருதா' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசிரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்களகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.


'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது.

May 3, 2011

நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்



நடிப்பின் கோட்பாடு மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
- காலபைரவன்


நூல்: மார்லன் பிராண்டோ : தன் சரிதம்
ஆசிரியர்: அஜயன் பாலா


போதாமைகளினால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கும் நமது தமிழ்ச் சூழ்லில் எப்போதாவது,யார் மூலமேனும் கலை இலக்கியம் குறித்த வெளிச்சத்தின் திறப்பைக் காலம் தொடர்ந்து நிகழ்த்தியபடியே இருக்கிறது.கலை இலக்கியம் குறித்த பார்வை உலகம் முழுக்க தொடர்ந்து மாறிக்கொண்டேயிருந்தாலும்கூட,அது எந்த வகையிலும் நமது பொது புத்தி சார்ந்த உலகை எதுவுமே செய்து விடுவதில்லை.அதற்காக நமது ஊடகக்காரர்கள் ஒரு சிறு முன்னெடுப்பைக்கூட எடுத்து வைக்க விரும்புவதில்லை.

கலை வடிவங்களில் ஆழ்ந்து புரிதல் இல்லாதவர்கள் உற்பத்தி செய்துகொண்டிருக்கும் படைப்பாக்கங்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய நிர்பந்தம் வேறு. திரைப்படம் ஓர் ஊடகமாக வலுப்பெற்று ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட பின்பும், நாம் அடையாளம் காணக்கூடிய மொன்னையான சூழலில்தான் ”மார்லன் பிராண்டோ”வின் தன் சரிதக் கட்டுரைகள் அஜயன் பாலாவின் பெருமுயற்சியால் தமிழ் வடிவ்ம் பெற்று வெளிவந்திருக்கிறது.

அலைகளையே கடல்கள் என்று நம்பும் நமது மனம்,நடிக்கிற எல்லோரும் நடிகர்கள் தான் என்று கற்பிதம் செய்து கொள்கிறது.அவ்வாறான சிந்தனையில் உள்ள குறைபாட்டையும் நமது பார்வையின் தெளிவின்மையையும் பிராண்டோவின் கட்டுரைகள் கேலி செய்கின்றன.ஒரு நடிகன் என்ற அளவிலேயே நின்றுவிட்ட பிராண்டோவின் பிம்பம்,இந்நூலின் மூலம் தகர்த்தெறியப்பட்டு சமூகம் குறித்தா ஆழ்ந்த அக்கறையும் புரிதலுங்கொண்ட ஒரு கலைஞன் என்ற பிம்பத்தை தமிழ்ச் சூழலில் கட்டமைக்கிறது.

தேடலை முன்வைத்து தொடர்ந்து நகர்ந்து கொண்டிருப்பவனே கலைஞன்.ஒழுக்கவாதிகள் கலாச்சாரத்தின் பேரால் கட்டமைக்கும் அடக்குமுறைகளை தீவிரத்துடன் எதிர்த்து இயங்க வேண்டிய கூடுதலான் பொறுப்பும் கலைஞனுக்கு இருக்கிறது. அவ்வாறு வாழ நேரிடும் ஒரு கலைஞன் சமூகத்தால் எப்படிப் புரிந்துகொள்ளப்படுகிறான் என்பதையும் இப்படித்தான் வாயிலாக உணரமுடிகிறது.தன்சரிதக்கட்டுரைகள் அதீத கவனத்துடன் ஒழுங்கு செய்யப்பட்டு தொகுக்கப்படும் இக்காலகட்டத்தில்,பிராண்டோவின் எழுத்து வெளிப்படையான நிகழ்வுகள் மூலம் தமிழ் எழுத்துப் பரப்பில் கவத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டமைக்கப்படுள்ளது குறிப்பிடபட வேண்டிய ஒன்று.
இந்நூலில் வெற்றியென கருதுவது,திரைத்துறையினர் மட்டுமல்லாது,அனைவராலும் வாசிக்க முடிகிற அளவில், புத்தகம் பல தளங்களில் நின்று செயல்படுவதைத்தான் “நான் மரபுகளை மீறுபவன்;அது என் தனிப்பட்டகுணம்” என்று கூறும் பிராண்டோவால்,உண்மையான அன்பும், நல்லுணர்வும், பரிவும்,நற்காரியங்களும் இவ்வுலகில் சமூக அநீதிக்கும் வன்கொலைகளுக்கும் ஏதேச்சாதிகாரங்களுக்கும் இன்ன பிற அழிவு சக்திகளுக்கும் எதிராகச் செயல்படும் என நம்புகிறேன் என்று கூறமுடிக்கிறது. மேலும் ஒரு தனிப்பட்ட நபரின் ஆளுமையைத் தாண்டி அவ்வாளுமையோடு தொடர்புடைய பன்முகத்தன்மை கொண்ட போராட்டங்கள்,கலகங்கள் ஆகியவற்றை வாசிக்க நேர்கையில் ,நமது நடிகர்களின் இயங்குதளம் பற்றிக் கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை.

இரண்டு மூன்று படங்கள் வெளியாகி வெற்றி பெற்றவுடனேயே தான் தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்று வலம் வரும் நம் தமிழ் மெகா நடிகர்களை ஒப்பிடும்போது பிராண்டோவின் செயல்பாடும் அயராத உழைப்பும் மெச்சத் தகுந்ததாக இருக்கிறது. ஏசுவே எதற்க்காக நான் இந்த நகரத்திற்கு வரவேண்டும் என்று தன் பாராட்டு விழாவில் ரசிகர்களுக்கு மத்தியில் சிக்கிக்கொண்ட பிராண்டோவால் கேட்க முடிகிறது.”எது அவர்களை இப்படி ஒரு விபரீதமான மனநிலைக்குத் தள்ளுகிறது? ,என்று அவர்கள் குறித்து ஆக்கப்பூர்வமாக யோசிக்கவும் முடிகிறது. ஐந்தடி தூரத்தில் மார்ட்டின் லூதர் கிங்கை பின்தொடர முடிகிறது. பூர்வகுடி இந்தியர்களுக்காக தனக்களிக்கப்பட்ட விருதை நிராகரிக்க முடிக்கிறது. இந்தியாவின் சாதியமைப்புகள்,ஏழ்மை நிலை குறித்து எடுத்த விவரணப் படத்தை கடைசி வரை போராடியும் அவாரால் வெளியிட முடியாமல் போகிறது.

ஒரு வேளை நான் ஒரு கறுப்பினத்தவனாக பிறந்திருந்தால் என நினைத்துப் பார்க்கிறேன்.என்னை ஒருவன் விலைக்கு வாங்கியிருக்க முடியும் என்ற எண்ணத்தையே என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்று கறுப்பினத்தவர்கள் மீதான தனது அக்கறையை வெளிப்படுத்தவும் முடிகிறது.பத்திரிக்கை சுதந்திரம்,தனிமனித சுதந்திரத்தை பாழ்படுத்தாத வரையில் போற்றத்தக்கதே என்று திட்டவட்டமாக நம்பும் பிராண்டோ,டைம் இங்க் பத்திரிக்கையை தனியாளாய் நின்று பணியவைக்கிறார்.

நடிகர் என்ற வகையில் அவர் ஒரு சிறந்த உழைப்பாளி.உணர்ச்சிகளை வரவழைக்க உயர்ந்த இசையையும், தரமான கவிதைகளையும் நேசிக்கின்ற ஒரு நடிகனாகவும்,நடிப்பு சிறக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தொடர்ந்து பயிற்சி மேற்கொள்ளும் ஒரு நடிகனாக இயங்குகிறார்.நடிப்பின் கோட்பாடுகளை உள்வாங்கியதோடு நின்று விடாமல் அதைப் பரிசீலிக்கவும் செய்கிறார்.ஆதனால்தான் ஸ்டெல்லா ஆட்லரையும் நுட்பமாகப் பின் தொடர முடிக்கிறது.அமெரிக்கா,பிரிட்டன் நாடக ஆக்கங்களைப் பற்றியும்,அவற்றின் போக்கில் உள்ள வேறுபாடுகள் குறித்தும் தனித்தன்மைகள் குறித்தும் பேசமுடிக்கிறது.இசை,புத்தகங்கள் மீதான இவரின் ஆழ்ந்த ஈடுபாடு இவருக்கு வேறொரு ரூபத்தைக் கொடுக்கின்றன.

சுயசரிதை என்ற வகையில் இயங்கும் ஒரு நூலின் பிராதான அம்சம் அதன் வெளிப்படைத் தன்மையே.அவ்வகையில் பிராண்டோ ஒளிவும் மறைவுமின்றி தன்னை வெளிப்படுத்தியுள்ளார் என்பதை வாசிக்கும்போது உணரமுடிக்கிறது.காதலிகள் மனைவிகள்,அதிகாரப்பூர்வமற்ற பிள்ளைகள்,தான் நேசித்த,தன்னை நேசித்த பெண்கள் பற்றிய விவரங்களை எல்லாம் எந்தவித பூடகமுமின்றி அவரால் எழுதமுடிக்கிறது. சாப்ளினை எப்படி மேதையாக உணருகிறாரோ அதைப்போன்று அவரை விமர்சிக்கவும் செய்கிறார்.சாப்ளின் குறித்து இவ்வாறு எழுதுகிறார்:சாப்ளின் ஒரு மேதை என்பதை நான் ஒருபோதும் மறுக்கவில்லை.என்றாலும்,மற்ற எல்லோரையும்போல எல்லா கீழ்த்தரமான குணங்களையும் கொண்ட மிகச்சாதாரண மனிதர்களுள் ஒருவர்தான் அவர்.தன்னைப் பற்றிய சுயதெளிவும்,சமூகம் குறித்த ஒரு விமர்சனப் பார்வையும் கொண்ட ஒருவரால்தான் இவ்வாறு ஒருவரை மிகத் திட்டவட்டமாக மதிப்பீடு செய்யமுடியும் எனத் தோன்றுகிறது.

”என் வாழ்க்கையின் அடுத்த புள்ளி என்ன என்பது குறித்து எனக்கும் எதுவுமே தெரியாது.வெற்றி என்பது என் வாழ்வில் அசந்தர்ப்பமாக நேர்ந்தது” எனப் பேசும் பிராண்டோ,நான் மட்டும் சரிவர நேசிக்கப்பட்டிருந்தால் என் வாழ்க்கைப் பாதை வேறெப்படியாகவோ திசை திரும்பியிருக்ககூடும்”என்று ஆதங்கப்படவும் செய்கிறார்.முடிவின்மையை நோக்கி தொடர்ந்து பயணிக்க ஆகப்பெரிய கலைஞர்களால்தான் முடியும் என்பதை நூலின் வாயிலாக அறிய முடிகிறது.

ஒர் அசாத்திய உழைப்பை அஜயன்பாலா, தமிழ்ப்படுத்து வதற்காகச் செலுத்தியிருக்கிறார் என்பதை ஒவ்வொரு பக்கத்தைப் புரட்டும்போதும் உணரமுடிக்கிறது. அதோடு மட்டுமின்றி நெருடல்களற்ற வாசிப்பிற்காக அவர் அதிக அக்கறை எடுத்துக்கொண்டதையும் அறியமுடிகிறது.

- கால பைரவன்.. புதிய்பார்வை



- நூல் தலைப்பு: மார்லன் பிராண்டோ தன் சரிதம்
பதிப்பகம்: எதிர் வெளியீடு பொள்ளச்சி
- தொலைபேசி: +91 9865005084
- +914259226012
-

March 3, 2009

'மயில்வாகனன் மற்றும் கதைகள்' அஜயன் பாலா

ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழையை குறிப்பெடுத்துக் கொண்டிருக்கும் எழுத்தாளருக்கும் மழையில் நனைந்து கொண்டே வாசிக்கும் ரசிகைக்குமிடையேயான கதைகள் இவை.நல்ல சிறுகதைகள் அருகிப் போன இக்காலகட்டத்தில் கையில் எடுத்த புத்தகத்தை கீழே வைக்கமுடியாத வகையில் வெகு நாள் கழித்து என்னை தொடர் வாசிப்புக்குள்ளாக்கிய தொகுப்பு அஜயன் பாலாவின் 'மயில்வாகனன் மற்றும் கதைகள்' .இத்தொகுதியின் தலைப்பைப் போலவே ஒவ்வொரு கதையின் தலைப்பும் வித்யாசமாசமானவை. பதினைந்து கதைகள் அடங்கிய தொகுதியில் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளுமே முக்கியமானவை, வாசிக்கும் போது மனதிற்கு நெருக்கமாகிவிட்டவை.'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்', விநோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு', டினோசர்-94 ஒரு வரலாற்றுக்கதை, 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள்', 'கடவுளர் சபை - இது ஒரு இரவைப் பற்றிய கதை', 'முருகேசன்', 'ஜீன்ஸ் அணிந்த பறவைகள்', 'மயில்வாகனன் மற்றும் கதைகள்', 'கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி',ஆகிய கதைகளை நான் வெகுவாக ரசித்தேன். மாய எதார்த்தவாதக் கதைகளை உள்வாங்குவது சில சமயம் சிரமமாக இருக்கும், எனக்குத் தெரிந்தவரையில் இரா.முருகன் கதையின் பாதையில் நம்மை கட்டிப்போட்டு தரதரவென்று இழுத்துச் சென்றுவிடுவார். மிலன் குந்தேரா எது புனைவு எது நிஜம் என்றே பகுக்க முடியாத அளவிற்கு வித்தை காட்டி நம்மை மாயாலோகத்திற்கே அழைத்துச் சென்றுவிடுவார். பா.வெங்கடேசன் நாம் கனவில் கூட எதிர்ப்பார்த்திராத உலகினுள் நம்மை அதி சுதந்திரத்துடன் நடமாட வைத்து ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்து மகிழ்வார். கோணங்கி நாம் மதிப்பீடாக கொண்ட எல்லாவற்றையும் போட்டுத்தள்ளிவிட்டு கனவுக்குள் வந்து கொண்டிருக்கும் கனவுக்குள் தோன்றி மறையும் காட்சிகளை அந்தகாரத்தை விலக்கி வார்த்தைகளினூடே மின்னல் தெறிக்க வைத்துவிடுவார்.அஜயன் பாலா சிருஷ்டி செய்திருக்கும் இவ்வுலகின் கதைபாத்திரங்கள் கண்ணாடியில் பார்த்தால் தெள்ளந்தெளிவாய் தெரிவார்கள். நம்மிடம் உள்ள குணங்கள், குறைகள், சுய எள்ளல், பச்சாதாபம், ஆற்றாமை, உணர்ச்சிகளின் அதீதங்கள் எல்லாம் பாலாவின் பேனாவினூடே கதைகளாக வழிந்தோடுகிறது. எல்லாக் கதைகளிலும் எல்லாரும் இருக்கிறோம், அவர் நம் கரம்பிடித்து அழைத்துச் செல்லும் உலகினுள் விசித்திரமான சம்பவங்கள், கற்பனைக்கெட்டாத சம்பாஷனைகள் இடம்பெறுகின்றன. ஆனால் அவர் பத்திரமாக நம்மை இறக்கிவிடும் இடம் மிகப் பாதுகாப்பானது, நம்மை ஆசுவாசப்படுத்தி, முதுகைத் தட்டி சரி சரி போ என்று அனுப்பி வைக்கிறது. நிறைந்த வாசிப்பானுபாவத்தை அள்ளக் குறையாமல் கொடுத்தன இக்கதைகள்.'மருதம்' வெளியீடான இத்தொகுப்பில் குறை என்று சொல்ல ஒரு விதயம் மட்டுமே உள்ளது. அது அச்சுப்பிழை. ஆங்காங்கே கண்ணை உறுத்தும் அளவிற்கு வாசிப்பை எரிச்சலாகும் விதத்தில் 'ர' வை 'ற'வாகவும் இன்னும் சில மன்னிக்க முடியாத வார்த்தை பிழைகளும் தொகுப்பினுள் இருக்கிறது. மறுபதிப்பு செய்யும்போதாவது பிழை நீக்கம் செய்யப்படவேண்டும். கதாசரியர் சில விதயங்களை கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் புகுத்தியுள்ளார், அவை மஞ்சள் நிறத்தின் மீது அவருக்கு அதீத ப்ரேமை போலும், மஞ்சள் வானம், மஞ்சள் கைக்குட்டை, மஞ்சள் வெயில் என்று மங்கலகரமாக மஞ்சளைத் தெளித்துள்ளார். அதோடு கதை நாயகர்கள் பெரும்பாலும் பதட்டத்துடனே காணப்படுகிறார்கள். சிலருக்கு மனப் பிறழ்வோ என்று ஐயப்படும் அளவிற்கு அவர்களின் செயல்பாடுகள் நம்மை பீதியில் ஆழ்த்துகின்றன. ஆனாலும் இவை பெரிய குறைகளன்று, கதையின் வரிகள் மிகுந்த கவித்துவத்துடனும், மொழி நம்மை மகிழ்ச்சியிலும் கதாசிரியரின் அகவுணர்வும் துல்லியமான உணர்வெழுச்சிகளும் வாசிப்பவனை முடிவில்லா அகதரிசனத்திற்குள் ஆட்படுத்துக்கின்றன. இக்கதைகள் இங்குதான் வெற்றி பெறுகின்றன.'மழைக்கால கோட்டும் மஞ்சள் கைக்குட்டையும்'' என்னும் கதையிலிருந்து எனக்குப் பிடித்த வரிகள் " 'என் உள்ளொளிக்கும் கயமைக்கும் இடையேயான தொலைவை அளவீடு செய்யும் பார்வை. அதுநாள் வரை விழுமியங்களின் மேல் நின்று கொண்டிருந்த என் வாழ்வையே கேள்விக்குள்ளாக்குவதாக இருந்தது." 'முருகேசன்' எனும் தலைப்பிட்ட கதையின் எல்லா வரிகளும் அற்புதமானவை, 'நினைப்புக்கும் நிகழ்வுக்கும் இடையில் இருப்பதெல்லாம் வெற்று மறதிதான்' உண்மைதான் இவ்வரிகளை என்னால் மறக்க இயலாது

January 20, 2009

அஜயன் பாலாவின் படைப்புலகம் - ஒரு அறிமுகம்-லதா ராமகிருஷ்ணன்


'கார்ட்டூனில் ஒரு சூரியனை வரைந்து அடிக்கோடிடும் போதே அது கடலாக மாறும் அதிசயத்தை நோக்கி எழுதிக் கொண்டிருக்கிறேன், அறைக்குள் வெள்ளம் நிறைந்திருக்கிறது, என் காலை முட்டும் காகிதக் கப்பல்கள் ஒன்றிலிருந்து ஒரு இளவரசி என் தொடையைக் கிள்ளுகிறாள், கடல் என் நண்பனானதால் ஜன்னலுக்கு வெளியே பெய்யும் மழை பற்றியும் குறிப்பெடுக்க முடிகிறது.

சமீபத்தில் 'மருதா ' பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள 'மயில்வாகனன் ' மற்றும் கதைகள் என்ற சிறுகதை தொகுதியின் ஆசிரியர் உரையிலிருந்து ஒரு பத்தியே மேலே தரப்பட்டுள்ளது, எழுத்தாளர் அஜயன்பாலாவின் சிறுகதைகள் 15 இடம் பெற்றுள்ள இந்தத் தொகுப்பில் நம்மைப் பிரதானமாக ஈர்ப்பது கதைகளின் மொழியும். தொனியும், 'மாஜிக்கல் ரியலிஸம் ' என்று வகைப்படுத்தப்படும் பாணியில் அமைந்துள்ள கதைகள் வாசிப்பனுபவம் தருவதாகவும். நிகழ்கால சமூக அரசியல் போக்குகளை சுட்டுவதாகவும். 'நையாண்டி செய்வதாகவும் உள்ளன, கூட்ஸ் வண்டியின் கடைசிப் பெட்டி '. 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு '. 'டினோசர் - 94 '. 'ஒரு வரலாற்றுக் கதை '. 'பூப்போட்ட ஜட்டியணிந்த குழந்தைகள் '. என தொகுப்பின் பெரும்பாலான கதைகள் நிறைவான வாசிப்பனுபவம் தருகின்றன,

'துரோகத்தின் நிழல் '. 'மூன்றாவது அறை நண்பனின் காதல் கதை ' முதலிய ஒன்றிரண்டு கதைகள் எனது வாசிப்பில் அத்தனை நிறைவை தரவில்லை,
நிலவும் தமிழ்ச் சூழலில் சில புத்தகங்களுக்கும். படைப்பாளிகளுக்கும் தேவைக்கு அதிகமான கவனம் கிடைத்து விடுவதும். வேறு சில தகுதிவாய்ந்த படைப்பாளிகளுக்குப் போதுமான கவனம் கிடைக்காமலிப்பதும் வாடிக்கையாக இருந்து வருகிறது, இந்த இலக்கிய எதிர் போக்கிற்கு மாற்றாய் சில 'இலக்கிய அமைப்புகள் தொடர்ந்து இயங்கி வருவதும் குறிப்பிடத் தக்கது, அப்படியான அமைப்புகளில் ஒன்றான 'வெளி 'யின் சார்பில் சமீபத்தில் 'அஜயன்பாலாவின் ' கதைத் தொகுப்பிற்கான விமர்சனக் கூட்டம் நடந்தேறியது, வெளி ரங்கராஜன். சங்கரராமசுப்பிரமணியன். ஆசதா. பால்நிலவன். யூமா வாசுகி. 'மருதா ' பாலகுருசாமி. நான் மற்றும் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டம் உண்மையிலேயே அரங்கு நிரம்பிய கூட்டமாக விளங்கியது நிறைவைத் தந்தது, அதை ஒரு புகைப்படம் கூட எடுக்கவில்லையே என்று வருத்தமாக இருந்தது,

'வெளி ' இலக்கிய அமைப்பின் நிறுவனர் 'வெளி ரங்கராஜன் ' நூலிலுள்ள கதைகளைப் பற்றிய தனது கருத்துக்களை எடுத்துரைத்தார், கதை முடிவில் என்ன சொல்கிறது என்பதைக் காட்டிலும் 'ஒன்றிற்கு மேற்பட்ட வாசகப் பிரதிகளுக்கான சாத்தியத்தைத் தனக்குள் உள்ளடக்கி இருக்கிறது என்பதே தனக்கு முக்கியமாகப் படுவதாகக் குறிப்பிட்ட அவர் இத்தகைய இலக்கிய முயற்சிகளை பரவலாக அறியச் செய்வதே 'வெளி 'யின் நோக்கம் என்றார், மொழிபெயர்ப்பு. விமர்சனம். சிறுகதைகள் என நவீன இலக்கியத்தின் ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் குறிப்பிடத்தக்க அளவு தொடர்ந்து இயங்கி வரும் திரு, அசதா. 'மாய யதார்த்தம் ' வகையான கதைகளை எழுதுவதில் அளப்பறிய சுதந்திரம் இருப்பதோடு அதே அளவுக்கு பொறுப்புடைமையும் இருக்கிறது என்பதை நாம் மறந்து விடலாகாது, அதற்கென்று ஒரு 'ஆன்மா ' உள்ளது, அது இல்லாத போது இத்தகைய எழுத்துக்கள் 'வெற்று வார்த்தை ஜாலமாகப் போய்விடும் அபாயமுண்டு ' என்றார், இதே கருத்தையே தமிழின் குறிப்பிடத்தக்க இளங்கவிஞர்களுள் ஒருவரான சங்கரராம சுப்பிரமணியனும் முன்வைத்தார், இதன் தொடர்பாக அவர் கூறிய 'குட்டி டினோசார் ' கதை எல்லோர் கவனத்தையும் கவர்ந்தது, அவர் பத்திரிகையாளராகவும் இயங்கியவர் என்பதால் தன்னால் அஜயன்பாலாவின் 'வினோத செய்தியாளனின் ஞாபகக் குறிப்பு ' போன்ற கதைகளை கூடுதலாகவே உள்வாங்கிக் கொள்ள முடிவதாகக் குறிப்பிட்டார், யதார்த்த வகை கதைகள் எழுதுகையில் மொழி நடையை மாற்றிக் கொள்ள தேவையில்லை என்றும் அப்படியில்லாமல் அஜயன்பாலா கையாண்டிருக்கும் வகை கதைகளுக்கு. அவை வெற்றியடைய கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது எனவும் குறிப்பிபட்ட எழுத்தாளர் 'பால்நிலவன் ' அஜயன்பாலாவின் ஒவ்வொரு கதையும். ஒன்றிலிருந்து ஒன்று மாறுப்பட்ட நடையிலும். தளத்திலும் இயங்குவதாக குறிப்பிட்டார், கூட்டத்திற்கு வந்திருந்த வேறு பலரும் அஜயன்பாலாவின் சிறுகதைகளில் தாங்கள் உணரக் கிடைக்கும் கவித்துவத்தையும். அந்நியப்பட்ட மனதையும் மற்ற நுட்பங்களையும் குறித்துப் பேசினார்கள், அஜயன்பாலா. தனது ஏற்புரையில் 'திடமென்று நாம் நம்பியிருக்கும் எதுவும் திடமானது அல்ல, சமீபத்திய சுனாமி இதற்கொரு அப்பட்டமான உதாரணம் ', இந்த அறிதலும். அலைக்கழிப்புமே தனது கதைகளின் இயக்குவிசைகளாகின்றன என்றார், கோணங்கி. எஸ், ராமகிருஷ்ணன் போன்ற படைப்பாளிகள் தனக்குள் அதிகத் தாக்கம் ஏற்படுத்தியவர்கள் என்றார், தனது தோழர்களான சங்கரராமசுப்பிரமணியன். மருதா பாலகுருசாமி. தளவாய் சுந்தரம் முதலியவர்களின் அன்பும். தோழமையும் தன் படைப்பாற்றலுக்கு உந்துசக்திகளாகின்றன என்று நெகிழ்வோடு குறிப்பிட்டார்,

Review: Ulaga Cinema Varalaaru -BIG FM 92.7


BIG FM 92.7
Book: Ulaga Cinema Varalaaru — Mouna Yugam (Silent Period)
Author: Ajayan Bala
CHENNAI: A Welcome publication in Tamil, most likely the first of its kind, narrating the interesting history of world cinema during the period December 1895 to October 1927 being the silent age when many purists and diehard conservatives sincerely felt that the medium would not last long. Ajayan Bala who is involved in many a capacity in cinema has narrated interestingly the fascinating true story of the founding, growth and development of silent film around the world, including India.
Today there is great awareness about film history in this part of the country and this book will go a long way in filling the virtual vacuum that exists.
A Welcome publication in Tamil, most likely the first of its kind, narrating the interesting history of world cinema during the period December 1895 to October 1927 being the silent age when many purists and diehard conservatives sincerely felt that the medium would not last long. Ajayan Bala who is involved in many a capacity in cinema has narrated interestingly the fascinating true story of the founding, growth and development of silent film around the world, including India. Today there is great awareness about film history in this part of the country and this book will go a long way in filling the virtual vacuum that exists.
The book is well illustrated with thumbnail photographs, which adds to its attraction and utility.
The author is currently working on more volumes to continue his in-depth study and writing of the later exciting periods of world cinema. Economically priced, this book is a must read for Tamil readers who wish to know the fascinating tale of international cinema. The publishers also deserve to be congratulated besides the author for planning and publishing such a book.

இருபது வயதுக்குள் மகா கவி - ஆர்தர் ரைம்போ - உலக இலக்கியச் சாளரம்

பிரெஞ்சு இலக்கிய வரலாற்றில் ஒளிமண்டலமாகத் திகழும் கவிஞர் ஆர்தர் ரைம்போ (1854–1891) பற்றி மிக அசாதாரணமான உண்மை ஒன்று உள்ளது:அவர் எழுதிய அ...