Showing posts with label பாரதிதாசன். Show all posts
Showing posts with label பாரதிதாசன். Show all posts

April 29, 2026

பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி

பாரதிதாசன் : ஒரு பின் நவீனத்துவ முன்னோடி தமிழ் ஒரு அழகான இளம் பெண்ணாக பூமியில் தோன்றி, அவர் முன் வரிசையாக தமிழ் கவிஞர்களை எல்லாம் நிறுத்தி, அதில் ஒருவரைத் தனது காதலனாகத் தேர்வு செய்யச் சொன்னால், அவர் நிச்சயம் தாவிச் சென்று கட்டியணைப்பாள் என்றால், அது பாரதிதாசனாகத்தான் இருக்கும். வள்ளுவன், கம்பன், இளங்கோ, பாரதி கூட இதில் தோற்றுப்போவார்கள். இவர்களிடம் அறம், பொருள், இன்பம் எல்லாம் இருந்தது. ஆனால் இவர்களைக் காட்டிலும் ஒரு மிளகு கூடுதலாக, அதன் அழகை, தேனூறும் சொற்சுவையை, பிற மொழிக் கலப்பில்லாத அதன் தனித்தன்மையை, தன் பாடல்களில் எளிமையாக பாமரருக்கும் கொண்டு சென்றவர் பாரதிதாசன். அவரிடம் பூடகம் இல்லை; புனைவு இல்லை; உருவகம், திருவகம் போன்ற மிகை அலங்காரம் எதுவும் இல்லை. இன்றைய நவீனக் கவிதை வந்து சேர்ந்திருக்கும் இடமும் இப்படியாகத்தான் இருக்கிறது. ஆனாலும், அவரது கவிதைகளில் தமிழ் தெளிந்த நீரோடையாக அள்ளித் தெளித்து, வாசிப்போர் நெஞ்சில் அருட்சுவை கூட்டியது என்றால் மிகையில்லை. அனைவரும் அறிந்த பின்னாளில் திரைப்பாடல்களாக உருவான “சங்கே முழங்கு”, “சித்திரச் சோலைகளே” போன்ற பாடல்களை கேட்டாலே போதும்; களிப்பும் உவகையும் இதயத்தில், எண்ணத்தில் பொங்கி பிரவகிப்பதை உணர முடியும். இதே சமயம், “பாரதிதாசன்” என்றாலே சில நவீனக் கவிஞர்களின் முகம் பாகற்காய் கடித்தாற்போல் ஆகிவிடுவதையும் நாம் அடிக்கடி பார்க்க முடியும். ஒருபக்கம் பாரதிதாசனை மரபிலக்கியவாதிகளும், திராவிட மற்றும் முற்போக்கு இலக்கிய முகாம்களும் கொண்டாடினாலும், நவீன இலக்கியக் கவிதை வரிசையில் பாரதிக்குப் பிறகு அப்படியே பிச்சமூர்த்தி, பிரமிள் என ஜம்ப் கட்டில் தாவிச்செல்லும் “கசடதபற” காலத்து இலக்கிய அளவுகோல்கள் இன்று காலாவதியாகிவிட்டன. ஆனால் கறார் விமர்சகர் க.நா.சு பாரதிதாசனை கொண்டாடியவர் என்பது பலரும் அறியாதது. மேலும், அவர் பலருக்கும் பரிந்துரைத்த “இருண்ட வீடு” எனும் கவிதை, இன்றைய நேரடிக் கவிதைகளுக்கு சற்றும் குறைவில்லாத வகையில் எழுதப்பட்ட நெடுங்கவிதை. ஒரு கேமராவைக் கொண்டு காட்சிப்படுத்துவதைப்போல, ஒரு வீட்டின் நிகழ்வுகளை இக் கவிதையில் அவர் அடுக்கிச் செல்லும் லாவகம் அபாரம். இன்றைய பின்-நவீனத்துவ உலகில், பாரதியாரை விடவும் பாரதிதாசனே அதி முக்கியத்துவம் கொண்ட கவிஞராகக் காணப்படுகிறார். அதனால்தான், நூற்றாண்டு கடந்தும் இன்றும் அவரது பாடல் ஏ.ஆர். ரகுமான் இசையில் “அவளும் நானும்” ஆக நம்மை ஈர்க்கிறது. வெறுமனே மொழிச்சுவையைத் தாண்டி, உலகளாவிய பிரச்சினைகளைப் பேசும் கவிதைகளாகவும் இன்றும் நமக்கு கிளர்ச்சியூட்டுகிறது. “புதியதோர் உலகம் செய்வோம், கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்” எனும் வரிகள், இன்றைய உலக அரசியல் வன்முறைகளுக்கும் பொருந்துகின்றன. “வலியோர் சிலர் எளியோர் தமை வதையே புரிகுவதா?” எனும் வரியில் பொதுஉடைமை கருத்துகளையும், “கொலை வாளினை எட்டா மிகு கொடியோர் செயல் அறவே” எனும் வரிகளில் சமூக அநீதிக்கெதிரான உரத்த குரலையும் பதிவு செய்கிறார். அதே சமயம், அவரது “குடும்ப விளக்கு” போன்ற பாடல்கள் இன்றைய பெண்ணியக் கருத்துக்களுக்கு எதிராக இருந்தாலும், “கைம்மைப் பழி” எனும் கவிதையில், பாரதி கூட பேசாத பெண்களின் காமத்துக்கு மதிப்பும் மரியாதையும் கூட்டுவதாகப் பேசியிருக்கிறார். இப்படியாக இக்காலத்தின் தவிர்க்க முடியாத கவிஞராகவும், காலத்தின் தேவைக்கேற்ற முன்னுணர்வுடன் பாடியவராகவும் பாரதிதாசன், பாரதியைக் காட்டிலும் இக்காலத்தில் அதி முக்கியத்துவம் பெறுகிறார். பாரதியின் தமிழில் ஒட்டிக்கிடந்த வடமொழியை, பாம்பு தோலை உரிப்பது போல உரித்து, கவிதைத் துறையில் அழகுணர்ச்சிமிக்க வரிகளால் தமிழுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவர் பாரதிதாசன் என்பதை யாரும் மறுக்க முடியாது. 1934-ம் ஆண்டிலேயே பெரியாரின் சுயமரியாதைக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு திராவிட இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். அக்காலத்தில் வெளிவந்தவை பெரும்பாலும் பக்தித் திரைப்படங்கள். ஆனால் பாரதிதாசனோ திராவிட இயக்கத்தைச் சேர்ந்தவர் என்றபோதும், சினிமாவில் எப்படியாவது நுழைந்து மக்கள் மனதில் இடம்பிடித்து அதன் பின் தன் கொள்கைகளை பரப்ப வேண்டும் என போராடினார். “பால்மணி” என்ற படத்தில் 1935-ம் ஆண்டு பாடல்கள் எழுதினார். தொடர்ந்து “ராமானுஜம்” எனும் பக்திப் படத்திற்கும் எழுதினார். இந்தப் போராட்டக் காலத்தில்தான் அவர் எழுதிய “இரணியன் அல்லது இணையற்ற வீரன்” என்ற முதல் நாடகம், சென்னை விக்டோரியா மஹாலில் அரங்கேறியது. இந்திய விடுதலைக்குப் பிறகு, 1948-ம் ஆண்டு அன்றைய அரசு இந்த நாடகத்தைத் தடைசெய்தது. தடையை மீறி நாடகம் நடந்தது. அதனால் நடித்த கலைஞர்கள் அனைவரும் சிறையில் அடைக்கப்பட்டனர். மூன்று மாதம் மூன்று வார சிறைவாசத்திற்குப் பிறகு, விடுதலையாகி வெளியே வந்த அவர்களை முதலில் செய்யாற்றில் வரவேற்றவர் பெரியார். அங்கிருந்து ஊர்வலமாக வந்த கலைஞர்களை காஞ்சிபுரத்தில் வரவேற்றவர் அண்ணா. அவர் எழுதிய மொத்த நாடகங்கள் நாற்பத்தெட்டு. அவற்றில் “பிசிராந்தையார்” சாகித்திய அகாதமி பரிசு பெற்ற நாடகமாக குறிப்பிடத்தக்கது. 1944-ஆம் ஆண்டு அவரே “இன்ப இரவு” என்ற பெயரில் ஒரு நாடகக் குழுவைத் தொடங்கினார். அதன் மூலம் நாடகமும், சினிமாவும், கவிதையும் ஒன்றாக இணைந்த ஒரு பெரிய பண்பாட்டு இயக்கத்தை அவர் உருவாக்கினார். 1942-ம் ஆண்டு சி. என்.அண்ணா துரை ‘திராவிட நாடு’ பத்திரிகையைத் தொடங்கியபோது, “தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” என்ற கவிதை வரிகளை அதன் முகப்பு வரியாகப் போட்டார். தமிழ் சினிமாவில் திராவிட இயக்க எழுச்சி அலையின் போது, முன்னாள் முதல்வர்கள் அண்ணா, கலைஞர் ஆகியோருக்குப் பின் எழுத்தாளராக தன்னையும் “பொன்முடி” படம் மூலம் கைகோர்த்துக் கொண்டார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன். அஜயன் பாலா ajayanbala@gmail.com

தென்கிழக்குச் சீமையிலே': பாரதிராஜா கலையும் வாழ்வும்

 நூல். ஆசிரியர் : அஜயன்பாலா ,   அழகிய படங்களுடன்  கெட்டி அட்டை  ராயல் சைஸ்  பக்கம் 400  விலை  750 ரூ.   நூலைப் பெற தொடர்புக்கு |: 9884060274...