கேரளத் திரைப்பட உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருகிறது ‘டிராஃபிக்’ பட இயக்குநர் ராஜேஷ் பிள்ளையின் திடீர் மரணம். மிதமிஞ்சிய குடியும் சிகரட்டும்தான் அவரது மரணத்துக்குக் காரணம் எனப் பலரும் தவறுதலாகப் புரிந்துகொண்டனர். ஆனால் உண்மையில் அவரது மரணத்துக்குக் காரணம் பிரபல குளிர்பானமும் ஜங்க் புட்ஸ் எனப்படும் உணவு வகைகளும்தான்.
அவரது நெருங்கிய நண்பர் சுப்ரணியன் சுகுமாரன் தனது முகநூல் பக்கத்தில் எழுதிய பின்புதான் அனைவருக்கும் இந்த உண்மை தெரியவந்திருக்கிறது. அவரது முதல் படமான ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ (2005) படப்பிடிப்பின்போது அவருக்குப் பிடித்தமான அந்தப் பிரபல குளிர்பான டின்களை ஒரேநாளில் 30வரைக் தொடர்ந்து குடித்துவந்ததால் உண்டான விளைவுதான் அவரது கல்லீரலைப் பாதித்து இழை நார் வளர்ச்சி எனும் நோய்க்கு அவரை ஆளாக்கி இம்சித்துவந்திருக்கிறது.
மருத்துவர்கள் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்ளுமாறு தொடர்ந்து கூறிவந்தும் தொடர் பணி காரணமாக அவர் அதைத் தள்ளிபோட்டுக்கொண்டேவந்தார். மரணம் அவரைத் திடுமெனப் பிடுங்கிக்கொண்டது.
‘ட்ராஃபிக்’கின் தமிழ் வடிவமான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்திற்காகக் கொச்சியில் தங்கியிருந்தபோது ராஜேஷ் பிள்ளையோடு எனகேற்பட்ட அனுபவங்கள் வித்தியாசமானவை. ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தைத் தயாரித்த ராடன் பிக்சர்ஸ் நிறுவனம் முதலில் ராஜேஷ் பிள்ளையையே அதற்கும் இயக்குநராக ஒப்பந்தம் செய்தது. அதன் தமிழ் வடிவத்தை எழுத என்னை அழைத்தது. நானும் சில மாற்றங்களுடன் திரைக்கதையை எழுதி முடித்துவிட்டேன். அது தொடர்பாகக் கொச்சிக்குப் போய் ராஜேஷ் பிள்ளையைச் சந்திக்க வேண்டியிருந்தது.
முல்லைப் பெரியாறு பிரச்சினையில் இரு மாநிலங்களும் கொதித்துக்கொண்டிருந்த நேரம் அது. நான் அங்குப் போன நாளில் முழுக் கடையடைப்பு. ஈ, காக்கைகூட வெளியே தலை காட்டவில்லை. ஒரு கடை கண்ணி இல்லை. ராஜேஷ் பிள்ளை மாலை 6 மணிக்கு என்னைச் சந்திப்பதாகச் சொல்லிவிட்டார். பகல் முழுக்க கொலைப் பட்டினி. ராஜேஷ் பிள்ளையிடம் போனில் சொல்லியிருந்தால் சாப்பிட எதையாவது கொண்டு வந்திருப்பார். நமக்கோ கவுரவப் பிரச்சினை. தமிழ் கெத்தை விட்டுவிடக் கூடாது என மல்லுக்கட்டி மாலைவரை காத்திருந்தேன். சரியாக 6.30 மணிக்கு ராஜேஷ் வந்தார் நல்ல குண்டான தோற்றம் கர கர குரல். திரைக்கதையின் அச்சுப் பிரதியைக் கோவையிலேயே எடுத்து வைத்திருந்ததால் நான் நேரடியாகத் திரைக்கதைக்குள் இறங்கினேன்.
முதல் ஐந்து காட்சிகளை வாசிப்பதற்குள் எனக்கும் அவருக்கும் முட்டிக்கொண்டது. நான் செய்த திருத்தங்கள் அவருக்கு உடன்பாடில்லை. உதாரணத்துக்கு மலையாளத்தில் ஆளும் கட்சி கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. லஞ்சம் வாங்குவதை நேரடியாகக் காண்பித்திருப்பார். நான் அதை ஆளும் கட்சி கவுன்சிலராக மாற்றி, பணத்தைக் கதவின் பின் இருக்கும் மனைவியிடம் கொடுக்குமாறு சாடை செய்வதாக எழுதியிருந்தேன்.
“நீ கம்யூனிஸ்ட், அதனால் என் காட்சியை மாற்றுகிறாய்” என்றார். தொடர்ந்து வாசித்தேன். பெயர் மாற்றங்களைக்கூட அவரால் ஏற்க முடியவில்லை. நான் தமிழ்ப் பெயர்கள்தான் நம்பகத்தன்மை கொடுக்கும் என்றேன். “என் ஸ்கிரிப்டை மாற்ற நீ யார்?” என்று கேட்டார். நானும் ‘பொறுத்தது போதும்’ எனப் பட்டினி போட்ட கோபத்தைச் சொல்லிக் கோபப்பட, அதிர்ந்து வாயடைத்துப்போனார் ராஜேஷ்.
“இதை ஏன் முதலிலேயே சொல்லவில்லை?” என வருத்தப்பட்டார். “வாங்க முதலில் போய் சாப்பிட்டுவிட்டு சண்டை போடலாம்” என்று கூறி, நகரின் பிரபலமான உணவு விடுதிக்கு அழைத்துச் சென்றார். சாப்பிட்டு முடித்து அவர் தங்கியிருந்த விடுதிக்குச் சென்றோம். மலையாளத்தில் இருப்பதை அப்படியே எழுதச் சொன்னார். நான் சென்னை திரும்பி, ராடனில் தகவலைச் சொல்லி முடிவை அவர்களிடம் விட்டுவிட்டேன். அதன்பின் என்ன காரணத்தாலோ அவருக்குப் பதில் அவரது உதவியாளர் ஷகீத் காதரை வைத்து இயக்க வேண்டியதாயிற்று.
படம் வெளியான பின் அதே கொச்சியில் இயக்குநர் ஏ.எல். விஜய், அமலா பால் கல்யாண சங்கீத் நிகழ்ச்சியில் ராஜேஷ் பிள்ளையைச் சந்தித்தபோது கட்டித் தழுவிக்கொண்டார். அருகிலிருந்த நண்பரிடம், “ இவன்தான் தமிழ் டிராஃபிக் ரைட்டர். பெரிய சண்டைக்காரன்” எனக் கூறி மகிழ்ந்தார். திரைக்கதை எழுதுவதிலும் நடிகர்களிடமிருந்து பாத்திரங்களைச் செதுக்கி வெளிக்கொணர்வதிலும் அவருக்கு அபாரமான திறமை இருந்தது. குழந்தைத்தனமான மகிழ்ச்சியும் நியாயமான கோபமும் சுள்ளெனத் தெறிக்கும். உணர்ச்சியின் கொதிநிலையில் சதா சஞ்சரிக்கும் அவரது இயல்பு அவருடைய தனித்துவம்.
அவர் முதலில் இயக்கிய ‘ஹிருதயத்தை சூஷிக்கான்’ 2005-ல் வெளியாகிப் படுதோல்வி அடைந்தது. வீட்டுக்குப் போக முகமில்லாமல் காரிலேயே படுத்துரங்கி, பொதுக் கழிவறையில் குளித்து உடைமாற்றி, பின் போராடி ‘ட்ராஃபிக்’ மூலம் ஜெயித்ததை முதல் சந்திப்பில் காரில் போகும்போது பகிர்ந்துகொண்டார். ‘டிராஃபிக்’ அவருக்கு மட்டுமல்ல, மலையாளத் திரைப்பட உலகிற்கே திருப்புமுனைப் படமாகப் பெருவெற்றி பெற்றது. அதுவரை நேர்கோட்டுத் திரைக்கதைகளை மட்டுமே நம்பிக்கொண்டிருந்த மலையாளத் திரைப்பட உலகில் பன்முகப் பார்வைக்கும் கவித்துவமான தொழில்நுட்பப் பயன்பாட்டுக்குமான புதிய காற்றை அந்தப் படம் வரவழைத்தது. ‘சாப்பா குறிசு’, ‘உஸ்தாத் ஓட்டல்’, ‘1983’, ‘பெங்களூர் டேஸ்’, ‘பிரேமம் ’ எனப் புதிய படைப்புகளின் வரவுக்குக் காரணமாக இருந்தது.
ஓட்டப் பந்தயத்தில் ஈடுபடும் நான்கு வீராங்கனைகளைப் பற்றிய ‘கோல்ட்’ என்னும் கதை ஒன்றை என்னிடம் சொல்லியிருந்தார். ‘சக் தே இந்தியா’ சாயல் இருந்ததால் அத்திரைக்கதை பெரிதாக என்னை ஈர்க்கவில்லை. அந்தப் படம் தள்ளிப்போய், அமலா பால் நிவின் பாலி நடிக்க ‘மிலி’ என்ற படமே இரண்டு வருடங்களுக்குப் பின் அவரது அடுத்த படமாக வெளியானது. ‘ட்ராஃபிக்’ இந்தியில் வெளிவரத் தயாராக இருந்தது. அவரது நான்காவது படமான ‘வேட்ட’ கடந்த வாரம் வெள்ளியன்று வெளியாகிப் பரவலாக வரவேற்பைப் பெற்றுவருகிறது. படம் வெளியான அடுத்த நாளே அவர் இறந்திருப்பது கேரளத் திரைப்படச் சூழலில் அனைவரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.
- நன்றி
தி ஹிந்து தமிழ்
04/03/2016
No comments:
Post a Comment