September 11, 2024
சகலகலாவல்லி டி.பி.. ராஜலட்சுமி (1911 - 1964)
தென்னிந்தியாவின் முதல் நாயகி மற்றும் முதல் பெண் இயக்குனர்
திருவையாறு பஞ்சோபகேச சாஸ்திரி ராஜலட்சுமி என்பதுதான், டி.பி.ராஜலட்சுமியின் முழுப்பெயர்..
தென்னிந்தியாவின் முதல் திரைப்பட கதாநாயாகி மற்றும் கனவுக்கன்னி என்னும் பெயர் கொண்ட இவர்தான் தென்னிந்தியாவின் முதல் பெண் இயக்குனர் , முதல் பெண் பாடலாசிரியர் மற்றும் முதல் பெண் தயாரிப்பாளர் என்ற பல பெருமைகளுக்கும் சொந்தக்காரர்
அன்று நடிகைகள் யாரும் நடிக்க முன்வரவில்லை. அவர்களுக்கு அது அச்சமூட்டுவதாக இருந்தது. இந்தியாவின் முதல் படமான ராஜா ஹரிச்சந்திராவில், அத ன் இயக்குனர் தாதா சாகேப் பால்கேவுடன் படத்தில் நடிக்க ஹரிச்சந்திரன் மனைவி பாத்திரத்திற்கு அலையோ அலை என அலைந்து பார்த்தார். யாரும் கிடைக்கவில்லை
. இறுதியில், ஒரு உணவு விடுதியில் சர்வராகப் பணிபுரிந்து வந்த 16 வயதுப் பையனின் முகம் ஓரளவு பொருந்தி வரவே அவரையே நாயகியாக மாற்றி, மேக்கப் போட்டு, ஒப்பேத்தி நடிக்க வைத்தார். வடஇந்தியாவிலேயே இப்படி என்றால் நம்மூருக்குச் சொல்லவும் வேண்டுமா?
அன்று சினிமா நாடகம் என்றாலே நம் பேண்கள் பலரும் அச்சப்பட்டு ஒதுங்கி நிற்க இரண்டு காரணங்கள் . ஒன்று . சினிமாவில் நடித்தால் ஆயுசு குறையும் என்ற பயம். இன்னொன்று அன்றையை சூழலில் சமூகத்தில் நிலவி வந்த பெண்னடிமைத்தனம் .. இத்தகைய சூழலில் இந்த தடைகளை உடைத்து நாயகியாக நான் நடிக்கிறேன் என துணிந்து வந்ததோடு அல்லாமல் நடிக்க வந்த ஒரு சில ஆண்டுகளிலேயே ஒரு ப்டத்தை தயாரித்து தானே அதை இயக்கவும் அதில் வரும் பாடல்களை தானே எழுதவும் செய்தார் என்றால் அது வரலாற்றுச் சாத்னை தானே.
அதிலும் இன்றும் கூட பெண்கள் திரைப்படத் துறையில் இயக்குனர் ஆவது மிகச்சவாலான காரியம் . உலக அளவில் கூட சதவித அடிப்படையில் மிக மிகக் குறைவு . காரணம் இயக்கம் என்பது அதிக உடல் உழைப்பு கோரும் பணி என்பதால் மட்டும் அல்ல அது நிர்வாகச் சிக்கல்கள் கொண்ட மன நெருக்கடி மிகுந்த பணி. அதனாலேயே இப்பொழுதும் பெண்கள் இத்துறைக்குள் அடியெடுத்து வைக்கத் தயங்குவர் இச் சூழலில் சினிமா தொடங்கிய காலத்திலேயே இதையும் சாதித்துக்காட்டியவர் என்பதுதான் டி. பி. ராஜலட்சுமி என்ற பெயர் தென்னிந்திய சினிமாவில் அழுத்தமான தடம் பதிக்க முக்கிய காரணம் .
திருவையாறு பஞ்சோபகேச ராஜலஷ்மி . இதுதன் சுருக்கமாக டி.பி.ராஜலட்சுமி என்ற பெயராக நிலைத்து நின்றது . தஞ்சை திருவையாறில், 1911 ஆம் ஆண்டு பிறந்த ராஜலட்சுமியின் தந்தையார் கணக்கு ப்பிள்ளையாக பணியாற்றி வந்தவர். அம்மா பெயர் மீனாட்சி அம்மாள்,. ஐந்தாம் வயதிலேயே ராஜலட்சுமியிடம் யாராவது பாட்டுப் பாடினால் அதை அப்படியே பாடும் திறமை இருந்தது.
ஏழாம் வயதில், அவருக்கு முத்துமணி என்பவருடன் நிகழ்ந்த பால்ய திருமணம் ஒரு வருடத்திலேயே முடிவுக்கு வந்தது.. திருமணம் என்றால் என்னவென்றே தெரியாத வயதில், வாழாவெட்டி என்ற பட்டமும் அவரைச் சூழ்ந்தது. அப்பா, அம்மாவோடு பிறந்தகம் வந்து சேர்ந்தார். அடுத்த வருடமே தந்தையும் மரணம்.
இப்படி, சட்டென எதிர்பாராமல் திரும்பிய வாழ்வால் தடுமாறிப்போன ராஜலட்சுமி, அம்மா மீனாட்சியோடு திருச்சி மலைக்கோட்டைக்கு குடி பெயர்ந்தார்.
திருச்சியில், அப்போது சி.எஸ்.சாமண்னா என்பவர், சொந்தமாக ஒரு நாடகக் குழு வைத்திருந்தார். இயற்கையில் இசையில் ஆர்வம் மிகுந்த ராஜலட்சுமி, சி.எஸ்.சாமண்னா வீட்டிற்கு அம்மாவுடன் சென்று நாடகத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு வாய்ப்பு கேட்டுச் சென்றார்.
அதிகம் பையன்கள் பயிலும் இடத்தில், பெண் குழந்தைகளை வைத்துச் சமாளிப்பது சரிவராது என உணர்ந்த சாமண்ணா, இங்கு வாய்ப்பில்லை, அதனால் புறப்படுமாறு கூறி மறுதலித்துக் கொண்டிருந்த சமயத்தில்தான் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்ந்தது. மாடியிலிருந்து ஒருவர் அப்போது இறங்கி வந்துகொண்டிருந்தார்.
சிலர் அதிர்ஷ்டம் என்பார்கள், சிலர் அதை நேரம் என்பார்கள், சிலரோ கடவுளின் கருணை என்பார்கள், சிலரோ திறமைகள் சந்திக்கும் தருணம் என்பார்கள்,
அப்படி ஒன்றான தருணம்தான் ராஜலட்சுமியின் வாழ்க்கையில் அந்தக் கணம்.
படியில் இறங்கிவந்தவர் வேறு யாருமில்லை. தவத்திரு. சங்கரதாஸ் சுவாமிகள்தான். தமிழ் நாடக உலகின் பிதாவான சங்கரதாஸ் சுவாமிகள், ராஜலட்சுமியின் பாடும் திறனைப் பார்த்து வியந்து, ” இந்தப் பெண் பிற்காலத்தில் பெரிய நிலைக்கு வருவார். ஆர்வத்தைப் பார்த்தால் அப்படித்தான் தோணுகிறது. அதனால் இந்தப் பெண்ணை குழுவில் சேர்த்துக்கொள் ” என சுவாமிகள், சி.எஸ்.சாமண்ணாவிடம் பரிந்துரைக்க சாமண்ணாவும் உடனே ராஜலட்சுமியை மறுபேச்சில்லாமல் சேர்த்துக்கொண்டார்.
முதல் நாடகம் பவளக்கொடி. பாத்திரம் புலேந்திரன். சம்பளம் மாதம் 50 ரூபாய். தொடர்ந்து செல்லப்பா கம்பெனி, கே.பி.மொய்தீன் நாடகக் குழு, தசாவதாரம் கண்ணையா நாடகக் குழு எனப் பல குழுக்களில் பயணித்தார். கண்ணையா குழுவில் எஸ்.ஜி.கிட்டப்பா ராமர் வேஷம்போட அவருக்கு ஜோடியாக சீதையாக நடித்தார். தொடர்ந்து பல ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார். நாடக உலகில் புகழ் நாட்டியிருந்த எம்.கே.டி.தியாகராஜ பாகவதருடன் பவளக்கொடி நாடகத்தில் ஜோடியாக நடிக்க புகழ் பரவியது. இவரது நடிப்பாற்றல் திறமை ஸ்திரீபார்ட் மட்டுமல்லாமல், ராஜபார்ட்டிலும் பல நாடகங்களில் நடிக்கவைத்தது.
ஆண்களை, பெண் வேடம் போடவைத்து நடிக்கவைத்த காலத்தில், பல ஆண்கள் இருக்கும்போதே அவர்களைத் தவிர்த்துவிட்டு ஆண் வேடம் இவருக்குத் தரப்பட்டதென்றால், அவரது திறமையை அளந்து கொள்ளுங்கள். மட்டுமல்லாமல், சில நாடகங்களில் ஆண், பெண் இரு வேடத்திலும் தோன்றி பிரமிக்கவைத்தார்.
அப்போது மௌனப் படங்கள் வெளிவரத் துவங்கின, நாடகத்தைப் போலவே சினிமாவிலும் புகழ்பெற முடியும் என நம்பினார்.
அதற்கேற்றார்போல, சிவகங்கை நாராயணன் அவர்களின் ஜென்ரல் பிலிம் கார்ப்பரேஷன் கம்பெனியில் நடிக்க வாய்ப்பு வந்தது.
1929இல் கோவலன், அவர் நடித்த முதல் ஊமைப்படம். தொடர்ந்து, அசோஷியேட் பிலிம் கம்பெனியின் உஷாசுந்தரி, ராஜேஸ்வரி ஆகிய படங்களில் நடித்தார்.
1931ஆம் ஆண்டு, இந்தியாவின் முதல் பேசும் படமான ’ஆலம் ஆரா’ படத்தை அர்தேஷ் இராணி இயக்கினார்.
அப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, பிராந்திய மொழிகளிலும் படம் எடுக்க விரும்பிய இராணி, தமிழின் முதல் பேசும்படத்தை எடுக்கத் திட்டமிட்டார். காளிதாஸ் எனும் அந்தப் படத்தில் நடிக்க, நாயகியாக டி.பி.ராஜலட்சுமியைத் தேர்வுசெய்தார். படத்தின் நாயகன் தெலுங்கில் பேச, இன்னும் சிலர் இந்தியில் பேச, இவர் மட்டும் தமிழ் பேசி நடித்தார். அவ்வகையில், திரையுலகில் தமிழ் பேசிய முதல் கலைஞர் என்ற பெருமையும் டி.பி. ராஜலஷ்மிக்கு உண்டு.
காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் உச்சத்தில் இருந்த காலம் அது. `காளிதாஸ்’ படத்தில், `காந்தியின் கைராட்டினமே’ என்ற நாட்டுப்பற்று பாடலைப் பாடி, ஆடி நடித்தார் ராஜலட்சுமி. படத்துக்கும் பாடலுக்கும் சம்பந்தமே இல்லை எனினும், நாட்டுப்பற்று பாடலை ரசித்தனர் மக்கள்.
தமிழகத்தின் முதல் பெண் நட்சத்திரமாக உருவெடுத்தார் ராஜலட்சுமி. அதன்பின், 1932இல் அவர் நடித்த ராமாயணம் படத்தில் சீதை, சூர்ப்பனகை என இரண்டு மாறுபட்ட பாத்திரங்களில் நடித்து இரசிகர்களைக் கவர்ந்தார். அப்படியாக, முதல் இரட்டை வேட நடிகை என்ற பெருமையும் இவருக்குண்டு. இக்காலகட்டத்திலேயே இவருக்கு ” சினிமா இராணி ” என்ற பட்டமும் வழங்கப்பட்டது.
வரிசையாக சம்பூர்ண அரிச்சந்திரா, சாவித்திரி சத்தியவான், கோவலன், வள்ளி திருமணம், திரௌபதி வஸ்திராபரணம், பக்த குசேலா, குலேபகாவலி என நிறைய படங்களில் நடித்தார்.
1933ஆம் ஆண்டு, வள்ளிதிருமணம் என்ற பெயரில் சாமிக்கண்னு வின்சென்ட் தயாரித்த படத்தில், சி.எம்.துரைசாமி நாயகனாக நடிக்க, வள்ளியாக நடித்தவர் டி.பி.ராஜலட்சுமி. அப்படத்தில் நாரதராக நடித்த டி.வி.சுந்தரம் என்பவருடன் காதல் வயப்பட்ட ராஜலட்சுமி, பட வேலைகள் முழுவதுமாய் முடிந்தவுடன் அவரையே திருமணம் செய்துகொண்டார். வள்ளி திருமணம் ரிலீசாகி பெரிய வெற்றிபெற்றது.
பின், அதே ஆண்டில் சத்தியாவன் சாவித்திரி என்ற சொந்தப் படத்தை தயாரித்து, நடித்து வெளியிட, அதுவும் மூன்று வாரங்கள் ஓடி வெற்றிப்படமாக பெயர்பெற்றது.
படங்களில் நடித்துக்கொண்டே, 1931ஆம் ஆண்டு ‘கமலவல்லி’ என்ற சமூக நாவல் ஒன்றையும் எழுதினார் ராஜலட்சுமி. அந்த நாவலுக்கு, சமூகத்தில் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனால் ராஜலட்சுமி அஞ்சவில்லை. மகளுக்கு அதன் நினைவாக கமலா என்றே பெயர்வைத்தார்.
1936ஆம் ஆண்டு, ஸ்ரீ ராஜம் டாக்கீஸ் என்ற பட நிறுவனத்தைத் தொடங்கிய ராஜலட்சுமி, தான் எழுதிய கமலவல்லியை தன் முதல் படமாக மகளின் பெயரிலேயே ‘மிஸ் கமலா’ எனத் தலைப்பு வைத்து, அதில் தானே நாயகியாக நடித்து இயக்கவும் தயாரிக்கவும் செய்து, தமிழ் சினிமாவின் முதல் தலைமுறையிலேயே அசாத்திய சாதனையைச் செய்தார். தொடர்ந்து, மதுரை வீரன் (1938) படத்தை இயக்கினார்.
இவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்துக்கும் இவரது சகோதரர் டி.பி.ராஜகோபால் இசையமைத்திருந்தார். திரைப்படக் கம்பனியை மற்றொரு சகோதரர் டி.பி.ராஜசேகரன் கவனித்து வந்தார்.
எல்லீஸ் ஆர் டங்கன் இயக்கிய `சீமந்தினி’ படத்தில் நடித்தார். அவரே தன் சுயசரிதையில், `ராஜலட்சுமி ஓர் அருமையான நடிகை’ என்று குறிப்பிட்டிருக்கிறார் டங்கன். 1938இல் கிருஷ்ண லீலை கதையை ‘நந்தகுமார்’ எனும் படமாக எடுத்தார், மராத்திய இயக்குநர் கேஷவ் ராவ் தைபார். அப்படத்தின் மராத்திய மொழி வடிவத்தில், மராத்திய நடிகை துர்கா கோட்டே கச்சை அணிந்து நடிக்கும் காட்சியில் எந்தச் சலனமும் இல்லாமல் நடித்துமுடித்தார்,. தமிழ்மொழிக் காட்சிகளில் நடிக்கவேண்டிய ராஜலட்சுமி, அரைகுறையான கச்சை அணிந்து நடிக்க மறுத்து, வெளிநடப்பு செய்வதாகத் தெரிவித்தார். இறுதியில், 1930களில் ஃபேஷனாக இருந்த உடலை முழுக்க மூடிய பூனா ‘ஜம்பர்’ பிளவுஸ் அணிந்து நடிக்க ஒப்புக்கொண்டார் ராஜலட்சுமி.
சென்னை கீழ்ப்பாக்கத்தில், சொகுசு பங்களாவில் வசித்த ராஜலட்சுமி குடும்பம் சிறிது சிறிதாக நொடித்துப்போகத் தொடங்கியது. இதன்பிறகு ராஜா சாண்டோ இயக்கிய `வசந்த சேனா’ என்ற படத்தைத் தயாரித்தார். `விமலா' என்ற இன்னொரு நாவலையும் எழுதினார். 1950இல், `இதயத் தாய்’ என்ற திரைப்படத்தில் கதாநாயகிக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. படம் பெரிதாக வெற்றி பெறவில்லை. அத்துடன் பட வாய்ப்புகள் முற்றிலும் நின்றுபோயின.
ஒருகட்டத்தில், சொத்துகள் கைவிட்டுச் செல்வதை அறியாத ராஜலட்சுமியை பக்கவாத நோயும் தாக்கியது. கிட்டத்தட்ட, ஒரு தெருவையே சொந்தமாக வைத்திருந்த குடும்பம், படிப்படியாக அனைத்தையும் விற்று வாடகை வீட்டுக்குக் குடிபெயர்ந்தது.
1961இல், இவருக்குக் கிடைத்த கலைமாமணி விருதின் தங்கத்தை உருக்கி, பேரனுக்கு முதல் பிறந்த நாள் பரிசாக மோதிரம் போடும் நிலை வரை அவரது வாழ்க்கை இறக்கம் கண்டது.
ஒரு காலத்தில், அவரை சினிமா ராணி எனக் கொண்டாடிய திரையுலகம், அவர் தோல் சுருங்கி, வீட்டில் நோய்வாய்ப்பட்டிருந்தபோது ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை.
ஆனாலும் ஒரு பெண்ணாக இருந்து அவர் செய்த சாதனைகளை இன்று வரை தமிழ் சினிமா மட்டுமல்ல; இந்திய சினிமாவிலேயே யாரும் செய்திருப்பார்களா என்பது சந்தேகமே. 1964இல், அந்த சினிமா ராணி, தன் பெருமைக்குரிய வாழ்விலிருந்து விடைபெற்றுக்கொண்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
உலகம் ஒளிர்கிறது கவிதை,
கவிதை, பத்மா நகர் சாலையில் சென்றுகொண்டிருந்த போது பூச்செண்டு ஒன்றைப் பார்த்தேன் அவள் வீட்டு வாசலில் ந்ன்று யாருடனோ பேசிக்கொண்டிருந்தாள் ...
-
ஒரு எதிர்வினை கடிதம் ஜெயமோகன் எனும் எழுத்தாளர் மேதமை சால் பெருந்தகைக்கு..! நீங்கள் அரசியல் ஆய்வாளர் என பலர் சொல்ல கேட்டுள்ளேன் ஆனால் உண்மையி...
-
செம்மொழி செம்மல்கள் வ.சுப. மாணிக்கனார் . இது வாசுப மாணிக்கனார் நூற்றாண்டு அவரது தமிழ் பணிக்கு என் சிறுவணக்கம் திருக்குறள் மற்...
No comments:
Post a Comment